வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, April 1, 2009

மாறுவது மனம்

"நான் செய்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அதை தொடர வேண்டும் என்று தான் மனம் சொல்கிறது. அவளிடம் பேசும் போதெல்லாம் எனக்கு கிடைக்கும் சந்தோஷம் வேறு யாருக்கும் கிடைத்திருக்காது. அவள் மீது எனக்கு வந்த காதலை என் நண்பனிடம் கூறிய போது கடுமையான வார்த்தைகளில் என்னை திட்டினான். அவன் பேசியதிலும் ஒரு நியாயம் இருக்க தான் செய்கிறது. ஆனால், என்னை மாற்றிக் கொள்ளமுடியவில்லை.

சிரமப்படாமல் காதலி வேண்டும் என்றால் உறவில் இருக்கும் பெண்ணை காதலிக்க வேண்டும் என்பார்கள். நானும் அதை தான் செய்தேன். ஆனால், அவளிடம் என் காதலை கூறினால் இந்த உலகமே என்னை எதிரியாக பார்க்கும். காரணம், என் காதலுக்கு எதிரியே எங்கள் உறவு முறை தான். அவள் எனக்கு 'சகோதரி' முறை.

அவள் பெயர் மஞ்சுளா. என் எதிர் வீட்டில் தான் இருக்கிறாள். அவளை விட நான் இரண்டு வயது மூத்தவன். என்னை விட மூத்தவளை கூட திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், சகோதரி முறை இருப்பவளை எப்படி... நினைத்து கூட பார்க்கமுடியவில்லை. ஆனால், என் மனம் அது நடக்க வேண்டும் என்று தான் விரும்புகிறது. என் தந்தையும், அவள் தந்தையும் ஒன்று விட்ட சகோதரர்கள். எங்கள் தாத்தா இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள். இரண்டு தலைமுறைக்கு முன்பு ஏற்ப்பட்ட இந்த உறவு முடிச்சு என் காதலுக்கு சுறுக்கு கயிறாக இருந்தது.

நாங்கள் இருவரும் சிறுவயதில் இருந்தே ஒரே பள்ளியில் தான் படித்தோம், ஒன்றாக தான் விளையாடினோம். அவள் என்னை ஒரு முறை கூட 'அண்ணா' என்று அழைத்ததில்லை. அதனாலோ என்னவோ அவளை சகோதரியாக நினைக்க தோன்றவில்லை. ஒரு முறை அவளுக்காக ஆசையாய் ஒரு பாவாடை சட்டை வாங்கி வந்தேன். அவள் மெல்லிய இடையில் பாவாடை நிற்க்க மறுத்தது. நான் என் பெல்ட்டை அவள் பாவாடைக்கு அணிவித்து பதினைந்து வருடத்திற்கு முன்பே புரட்சி செய்தேன். இன்று என் காதலிலும் புரட்சியை செய்துள்ளேன்."

- இப்படி மகேஷ் தன் டைரியை எழுதிக் கொண்டு இருக்கும் போது...

" மகேஷ்... மகேஷ்... " என்று அம்மாவின் குரல் கேட்டது. மாடியில் இருந்து கீழே வந்தேன். மஞ்சுளா என் வீட்டுக்கு வந்திருந்தாள்.

" டேய்.. மஞ்சுளாவுக்கு அக்கவுன்ட்ஸ்ல ஒரு சந்தேகமா... அவளுக்கு சொல்லிக் கொடு.." என்று என் அம்மா கூறினாள். பல முறை அவளுக்கு சொல்லி தர விளையாட்டாக மறுத்திருக்கிறேன். அதனாலே என்னவோ என் அம்மா சிபாரிசுடன் சந்தேகம் கேட்டாள்.

" நீ மாடிக்கு போ மஞ்சுளா.... நா என் சட்டை போட்டுட்டு வரேன்..." என்றேன்.

அவளும் மாடிக்கு சென்றாள். பல முறை நானும், அவளும் மொட்டை மாடியில் அரட்டை அடித்திருக்கிறோம். அப்போது இல்லாத பயம் என் காதலை உணர்ந்த பிறகு எனக்கு என் மீதே நம்பிக்கை இல்லை. கீழ் அறையில் இருந்த என் அக்கவுன்ட்ஸ் புத்தகத்தை எடுத்துக் கொண்டு மாடி அறைக்கு சென்றேன்.

"எதுல டவுட் உனக்கு..." என்றேன்.

" இல்ல... உன் கிட்ட தனியா பேசனும். அதுக்கு தான் பொய் சொன்னேன் " - என்றாள்.

நான் ஒன்றும் புரியாமல் விழித்தேன்.

" நான் சொல்ல போறது தப்பானு தெரியல்ல. இருந்தாலும் உன் கிட்ட சொல்லுறதுக்கு எனக்கு பயமில்ல. அதனால தைரியமா சொல்ல வந்தேன்"

" விசு மாதிரி ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்லாம விஷயத்த சொல்லு..."

" உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. கல்யாணம் பண்ணிகிட்டா உன்ன தான் பண்ணிப்பேன். ஐ லவ் யூ.."

நான் ஒரு கனத்தில் சந்தோஷப்படுவதா கோபப்படுவதா என்று தெரியாம்மல் தவித்தேன். அவள் என்ன நினைப்பாளோ என்று நினைத்து இது வரை காதலை மறைத்து வந்தேன். ஆனால், இப்போது என் கண் முன் சமூகம் எதிரியாக நிற்கிறது. அவள் காதலை மறுக்கிறேன்... இல்லை மறுக்க முயற்சிக்கிறேன்.

" உனக்கு என்ன பைத்தியமா... நா உனக்கு அண்ண முறை வேணும். இத நாலு பேரு கேட்டா என்ன நினைப்பாங்க..."

" மத்தவங்கள பத்தி எனக்கு கவல இல்ல... உன் மனசுல நான் இருக்கேன். உண்மைய ஒத்துக்கோ..."

" அப்படி எல்லாம் ஒன்னுமில்ல..." என் உதடுகள் மட்டுமே இந்த வார்த்தைகள் பேசின.

" பொய் சொல்லாத. உன் டைரிய படிச்சதுக்கு அப்புறம் தான். எனக்கு காதல சொல்ல தைரியம் வந்திச்சி..."

என் குரல் திக்கின. நான் டைரி எழுதி எடுத்து வைக்க மறந்தது அப்போது தான் நியாபகம் வந்தது. இருவரும் காதலிக்க தொடங்கினால் சகோதர, சகோதரி உறவை கலங்கப்படுத்துகிறமோ என்ற அச்சம் என் உள்ளுணர்வு உருத்தி கொண்டு இருந்தது.

"லூசாட்டம் பேசாத... உன் வீட்டுக்கு போ.." என்றேன்

பேசி பலன் அளிக்காததால் மஞ்சுளா என்னை கட்டி பிடித்துக் கொண்டாள். அவளை அடித்து தள்ள எனக்கு மனம் வரவில்லை. என் காதலும் வெளிவர தொடங்கியது. நானும் அவளை அணைத்துக் கொண்டேன். அப்போது, ஒரு குரல் ஒலித்தது. அது என் அம்மாவின் குரல்.

" டேய்.. என்னடா பண்ணுற...? "

நாங்கள் இருவரும் திடுக்கிட்டு நின்றோம்.

***

ரங்கசாமியின் கண்கள் சிவந்தன. குமார் கையை உடைக்க வேண்டும் என்று தோன்றியது. அவனை போன் போட்டு நேரில் வர சொன்னார். இயக்குநர் வாய்ப்பு தேடும் குமார் ரங்கசாமியை பார்க்க வந்தான்.

" உனக்கு டாரைக்ட் பண்ண வாய்ப்பு கொடுக்குறேன்." என்றார் தயாரிப்பாளர் ரங்கசாமி.

குமார் முகத்தில் சந்தோஷம் நிரம்பி வளிந்தது.

"ஆனா இந்த கதைக்கு இல்ல... வேற ஒரு நல்ல கதை கொண்டு வா..." - என்று ஒரு குண்டையும் சேர்த்து ரங்கசாமி போட்டார்.

"சார்... நான் ரொம்ப வருஷமா.. கஷ்டப்பட்டு யோசிச்ச கத... இது உங்களுக்கு பிடிக்கலையா...!" - ஏக்கத்துடன் கேட்டான் குமார்.

உரத்த குரலில், " முதல் படத்த எல்லாரும் பேசனும்னு... அண்ணி புருஷனின் தம்பி மேல ஆசப்படுறது, தம்பி பொண்ணாட்டிய படுக்க கூப்புடுறது, சின்ன பொண்ண கற்பழிக்கிறது மாதிரி படம் எடுங்க... அத என்ன மாதிரி ஏமாந்த தயாரிப்பாளர் தயாரிக்கனும்... சமுதாய அக்கர இல்லாம ஏன்டா சினிமாவுக்கு வருறீங்க..?”- கோபமாக ரங்கசாமி பேசினார்.

"என் கதைய பத்தி தப்பா சொல்லாதீங்க..." - ஒரு படைப்பாளனுக்கு வர கூடைய நியாயமான கோபம் குமாருக்கு வந்தது.

" இதெல்லாம் ஒரு கதனு வேற சொல்லுறியா... இது படமா வந்தா... நாளைக்கே அண்ண தங்கச்சி தனியா போனா தப்பா பேச மாட்டாங்க... உன் கிட்ட பேசி நேரத்த வீணாக்க விரும்பல.. உனக்கு இரண்டே முடிவு தரேன். இந்த கதை காப்பி ரைட்ஸ் எனக்கு கொடுத்திட்டு, ஒரு நல்ல கதையோட வா உனக்காக பணம் போட்டு படம் பண்ணுறேன். இல்ல அந்த கதைய வச்சி கோடம்பாக்கம் பக்கம் சுத்துரதா கேள்விப்பட்டேன். உன்ன சினிமா பக்கமே வர விடமா பண்ணிடுவேன் ஜாக்கிரதை…” - அதிகம் பேசி தன் நேரத்தை வீணாக்காமல் முடிவை தெளிவாக ரங்கசாமி கூறினார்.

சினிமா வாய்ப்பு கிடைப்பதையே குதிரை கொம்பாக இருக்கும் காலம். தான் துணை இயக்குனராக இருக்கும் போது தன்னுடைய இயக்குனர் நடிகர், நடிகைகளுக்காக கதையை மாற்றியிருப்பதை குமார் நினைவுக்கு வந்தது. வாய்ப்புக்காக கதையை மாற்றுவது தவறில்லை என்பது கோடம்பாக்கத்தின் சித்தாந்தம். அதை தான் குமாரும் உணர்ந்தான்.

“வேற கதையோட வரேன். ஆனா..ஒரு சின்ன சந்தேகம். புடிக்காத கதைக்கு ஏன் காப்பி ரைட்ஸ் கேக்குறீங்க.." - நியாயமான சந்தேகம் குமாருக்கு வந்தது.

" நாளைக்கு படம் பண்ணி பெரிய ஆளா வந்துட்டா... இந்த கதைய வச்சு படம் பண்ணமாட்டேனு என்ன நிச்சயம் ? நீ காப்பி ரைட்ஸ் கொடுத்தது அப்புறம், இத குப்பையில தான் போட போறேன். எனக்கு சமுதாய அக்கர இருக்கு.. முதல்ல போய் நல்ல கதையோட வா...!

"ஸரி ஸார் !... வேற கதையோட உங்கள பார்க்க வரேன்..." -என்று சொல்லி குமார் வெளியே செல்ல , தயரிப்பாளர் ரங்கசாமி “மாறுவது மனம்” கதையை கோபமாக கிலித்து குப்பையில் போட்டார்.

7 comments:

கும்மாச்சி said...

குகன் கதையின் நடை அபாரம். நிறைய எழுதுங்கள்

நிகழ்காலத்தில்... said...

நடையும், யதார்த்தமும் வெகு இயல்பாய் வந்திருக்கிறது.

தொடர்ந்து எழுதுங்கள்..

நிச்சயம் எழுத்துலகில், திரையுலகில்
நல்ல இடம் உண்டு

குகன் said...

// கும்மாச்சி said...
குகன் கதையின் நடை அபாரம். நிறைய எழுதுங்கள் //

நன்றி கும்மாச்சி :)

குகன் said...

// அறிவே தெய்வம் said...
நடையும், யதார்த்தமும் வெகு இயல்பாய் வந்திருக்கிறது.

தொடர்ந்து எழுதுங்கள்..

நிச்சயம் எழுத்துலகில், திரையுலகில்
நல்ல இடம் உண்டு //

அறிவு தெய்வமே !

உங்கள் பாராட்டுக்கு நன்றி :)

குகன் said...

// உலவு.காம் (ulavu.com) said...
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்
//

இணைத்துவிட்டேன்

"உழவன்" "Uzhavan" said...

//" டேய்.. என்னடா பண்ணுற...? "

நாங்கள் இருவரும் திடுக்கிட்டு நின்றோம்//

பாக்யராஜ் சார் படம் பார்த்த ஒரு பீலிங் இருந்தது.. குட். :-)

//கதையை கோபமாக கிலித்து குப்பையில் போட்டார்.//

இன்றைய கோடம்பாக்கத்து பல தயாரிப்பாளர்களுக்குத் தேவையான பாடம்.

குகன் said...

//

" உழவன் " " Uzhavan " said...
//" டேய்.. என்னடா பண்ணுற...? "

நாங்கள் இருவரும் திடுக்கிட்டு நின்றோம்//

பாக்யராஜ் சார் படம் பார்த்த ஒரு பீலிங் இருந்தது.. குட். :-) //

சத்தியமா இது சீரியஸான கதைங்க... காமெடி இல்ல.. :(


//
இன்றைய கோடம்பாக்கத்து பல தயாரிப்பாளர்களுக்குத் தேவையான பாடம். //

இப்போது தயாரிப்பாளர் யார் கதை கேட்கிறார். கதாநாயகி துணியின் அளவை மட்டும் எவ்வளவு குறைக்க வேண்டும் என்பது அவர்களது கவலை.

LinkWithin

Related Posts with Thumbnails