வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, January 29, 2013

கவிதை : இல்லாதவன்

கிருஷ்ணன் –
ஆண்ணின் காமத்தின்
மொத்த உருவம்

அல்லா –
முகமது நபியின்
கற்பனை பாத்திரம்

ஏசு –
கடவுளாக்கப்பட்ட
சராசரி மனிதன்

மொத்தத்தில் கடவுள் -
மனிதன் பயத்தின்
உருவம் !

* *


கடவுளைப் பற்றி
நிறைய இதிகாசகங்கள் உண்டு
வரலாறு இல்லை !

மனிதனின்
வன்முறை வரலாற்றை
கடவுள் தடுத்ததில்லை !

தடுக்க 'அவன்' இருந்தால்
இத்தனை பிரச்சனையில்லை.

இத்தனை
'இல்லை'களுக்கு நடுவில்
என் கேள்வி...

இல்லாத ஒன்றுக்காக
மனிதன்
ஏன் மனிதனாக
வாழ்வதில்லை ?

Friday, January 25, 2013

என்றென்றும் நன்றியுடன் கே.எஸ்.ரவிகுமார் - விமர்சனம்

இந்த வாரம் குமுதத்தில் வெளியான "என்றென்றும் நன்றியுடன் கே.எஸ்.ரவிகுமார்" நூலின் விமர்சனம்.

  Thursday, January 24, 2013

சென்னை புத்தகக் கண்காட்சி – தோல்வியில் சில அனுபவங்கள்

36வது சென்னை புத்தகக் கண்காட்சி ஒரு வழியாக முடிந்தது. இன்னும் பத்து நாளைக்கு வாங்கிய புத்தகங்கள் படிக்க தோன்றும். அதன் பின் பிறகு படிக்கலாம் என்ற எண்ணமே வரும். இந்த முறை வாசகர்களை பெரிதாக ஈர்க்கக் கூடிய புத்தகம் எதுவும் இல்லை என்று தோன்றுகிறது. ஒரு புத்தகக் கண்காட்சி கோபிநாத்தின் முதல் புத்தம் சக்கைப் போடு போட்டது. இரண்டு வருடம் முன்பு ஈழ புத்தகங்கள் யார் எழுதினாலும் விற்றது. அப்படி, இந்த வருடம் சொல்லும் அளவிற்கு எந்த புத்தகம் வரவில்லை என்று நினைக்கிறேன்.

சென்னை புத்தகக் கண்காட்சியின் தோல்விக்கான காரங்கள் சில....

தொலைவு - பஸ் ஸ்டாண்டில் இருந்து இரண்டு கி.மீ நடந்து கண்காட்சிக்கு வர வேண்டும். வாங்கிய புத்தகங்களை சுமந்து மீண்டும் நடக்க வேண்டும். ஒரு முறை வருகை தந்த வாசகர்கள் மீண்டும் வர தடையாக இருந்தது தொலைவு மிக முக்கிய காரணம்.


தேதி - எப்போதும் ஜனவரி முதல் வாரத்தில் வைத்து பொங்கல் முடிந்து இரண்டு நாளில் கண்காட்சி முடியும். மாத சம்பளக்காரங்கள் வாங்க நினைத்த புத்தகங்கள் முதல் வாரத்திலே வாங்கிவிடுவார்கள். முதல் வாரத்தில் வாங்க நினைக்கும் எண்ணம் இரண்டாவது, மூன்றாவது வாரத்தில் குறைந்துவிடும்.

அரங்குக்கு ஒரு புத்தகம் வாங்கினால் போதும் என்ற மனநிலையில் பல வாசகர்கள் இருந்ததற்கு தேதி முக்கிய காரணம். பொங்கல் விடுமுறை என்ற தங்க முட்டையை தேதியின் காரணமாக இந்த புத்தகக் கண்காட்சியில் சரியாக பயன்படுத்த முடியவில்லை.

அரங்க அமைப்பு - எப்போதும் புத்தகக் கண்காட்சி நுழைந்ததும் இடதுப்புறத்தில் இருந்து அரங்கம் தொடங்கும். ஆனால், இந்த முறை இரண்டு பக்கமும் பாதை அமைத்திருந்தார்கள். முதல் பத்து நபரில் அரங்கம் கிடைப்பவர்கள் பாக்கியசாலியாக இருந்த புத்தகக் கண்காட்சி, இந்த முறை பாவப்படவர்களாக அரங்க அமைப்பு மாற்றியிருக்கிறது.

கலைஞர் - சென்ற புத்தக கண்காட்சியும் சரி... இந்த புத்தகக் கண்காட்சியும் சரி, கலைஞர் தொடங்கி வைக்காதது மிக பெரிய குறையே !! சரியாக சொல்வதென்றால்... முதல்வர் தொடங்கி வைக்காதது !!

முதல்வர் ஒரு நிகழ்ச்சி தொடங்கி வைக்கும் போது அந்த நிகழ்வும், இடத்திற்கும் பெரிய விளம்பரம் கிடைக்கும். கடந்த இரண்டு புத்தகக் கண்காட்சியில் சபா நாயகர், மேயர் போன்றவர்கள் கலந்து கொண்டாலும், முதல்வருக்கு கிடைக்கும் விளம்பரம் கிடைக்கவில்லை.

வெளி அரங்கம் - முன்பெல்லாம் வெளி அரங்கத்தை கடந்து தான் கண்காட்சிக்கு செல்வதுப் போல் இருக்கும். இந்த முறை, வெளியிட்டு விழா அரங்கத்திற்கும், கண்காட்சிக்கு சம்பந்தமே இல்லாததுப் போல் இருந்தது. வெளியிட்டு விழா நடத்திய பதிப்பாளர்களுக்கு நஷ்டம் என்பது சந்தேகமில்லை.

அரங்க வாடகை - சென்ற வருடம் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு ரூ.17000 இருந்த அரங்கம்... இந்த வருடம் ரூ.25000 !!!!! வாடகை ரேக், வேலை ஆள் சம்பளம், புத்தகங்கள் கொண்டு வரும் கூலி எல்லாம் சேர்த்து ரூ.35000 - 40000 வரை வரும். புத்தக விற்பனையாளர்கள் 25 - 30% கழிவில் வாங்கி விற்பனை செய்பவர்கள் இரண்டு லட்சம் மேல் விற்பனை செய்தால் தான் போட்ட காசு எடுக்க முடியும் என்ற நிலையில் தள்ளப்பட்டதற்கு இன்னொரு காரணம்.

சென்ற சனி, ஞாயிறு (19, 20 ஜனவரி) ஓரளவு நல்ல விற்பனை என்றாலும், பதிப்பாளர்களுக்கு கிடைத்த லாபம் விற்பனையாளர்களுக்கு இல்லை.

புத்தக விற்பனையாளர்கள் சொர்ப்பமாக இருக்கும் தமிழ் நாட்டில் மேலும் அவர்களை நஷ்டப்படுத்த வைப்பது புத்தகத்துறை வளர்ச்சிக்கு சரியாக இல்லை.

புத்தகக் கண்காட்சி தவிர்த்து, மற்ற நாட்கள் இவர்களை நம்பி தான் பதிப்பகம் நடத்துகிறோம் என்ற எண்ணம் இல்லாமல் பல பதிப்பகங்கள் செயல்படுகிறார்கள் என்பது இன்னொரு காரணம். வாசகர்களை உருவாக்கும் திறமை பதிப்பாளர்களை விட விற்பனையாளர்களுக்கு தான் அதிக பங்கு உண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 

கழிப்பறை, நடைபாதை எப்போதும் போல மோசமாக இருந்ததால் அதைப் பற்றி ஒன்றும் குறிப்பிட விரும்பவில்லை.

ஒரே ஒரு நல்ல விஷயம் கண்ணில் பட்டது... இந்த முறை நான்கு ஸ்டால்களுக்கு பதிலாக மூன்று ஸ்டால்கள் சேர்த்து அரங்கம் அமைத்து, பல புதிய ஆட்களுக்கு வாய்ப்பளித்துள்ளார்கள். (ஒரு வேலை நஷ்டம் வரும் என்று முன்பே கனித்துவிட்டார்களோ !!)

Tuesday, January 15, 2013

சென்னை புத்தகக் கண்காட்சி - நாள் 4

நேற்று பொங்கல், சக்கரை பொங்கல், வடை என்று ஒரு பெரிய கட்டு கட்டிவிட்டு மாலை 4 மணிக்கு புத்தகக் கண்காட்சிக்கு சென்றேன்.

என்.சொக்கன் எழுதிய "சி.ஐ.ஏ : அடாவடிக் கோட்டை" புத்தகம் தவிர எதுவும் வாங்கவில்லை. பதிவர் நண்பர்கள் அனைவரும் டிஸ்கவரி புக் பேலஸ் சங்கமிக்க, நானும் அவர்களுடன் சேர்ந்துக் கொண்டேன். அங்கிருந்து கொடி நடையாக நடந்து.... ஜூஸ் குடித்தோம்.

புத்தகக் கண்காட்சியில் மாட்டப்பட்ட விளம்பர பேனர்களைப் பற்றி பேசிக்கொண்டே அஜயன் பாலாவின் நாதன் பதிப்பகம் (ஸ்டால். 559) சென்றோம். சினிமா தீவிரமாக இயங்கி கொண்டு, பல புத்தகங்களை இந்த புத்தகக் கண்காட்சிக்கு கொண்டு வந்திருக்கிறார். இவரின் உலக சினிமா வரலாறு பாகம் 1 & 2 அங்கு நன்றாக விற்பனையாகிறது.

நண்பர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி இருவாட்சி இலக்கிய துறைமுகத்தில் (ஸ்டால். 554) நிஜந்தனின் "பேரலை" நூல் வேளியிட்டுக்கு சரியாக காலதாமதமாக சென்றோம். சல்மா நூலை வெளியிட்டு சென்று விட்டார்.

இந்த நான்கு நாளில் வாசகர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடிய புத்தகம் எதுவும் கண்ணில் படவில்லை. வாசகர் பலர் ஸ்டாலுக்கு ஒரு புத்தகம் என்று கணக்காக வாங்குகிறார்கள். பெரிய பில் எதுவும் எந்த ஸ்டாலுக்கு வந்ததாக தெரியவில்லை. அதிக புத்தகம் வாங்கினால், கண்காட்சியில் இருந்து 2 கி.மீ நடக்க வேண்டும் என்ற மனநிலைக் கூட இருக்கலாம்.

வரும் நாளில் இந்த நிலைமை மாறுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Monday, January 14, 2013

சோட்டா பீம்மிடம் மாட்டிய கைப்புள்ள – செ.பு.க நாள் 3

நேற்று புத்தகக் கண்காட்சி குடும்பத்துடன் சென்றிருந்தேன்.

என் மகன் தாரகேஷ் சாவிக்கு ஆடியதில் முக்கால்வாசி நேரம் குழந்தைகள் ஸ்டாலில் தான் அதிக நேரம் செலவிட முடிந்தது. அதுவும், ஆப்பில் ட்ரீ ஸ்டாலில் "சோட்டா பீம்" மின் சிலை அருகே வித விதமாக போட்டோ எடுக்க வேண்டும் என்ற கட்டளை வேறு. இந்த புத்தகக் கண்காட்சியில் குழந்தைகளுக்கு பேவரிட் ‘சோட்டா பீம்’ சிலையாக தான் இருக்கும். உள்ளே, சோட்டா பீம் புத்தகங்கள், சீ.டிக்களோடு சோட்டா பீம் குழுவினர்களின் பொம்மைகளும் விற்பனைக்கு இருந்தது. ரூ.50 மேல் மதிப்பு இருக்காது. அதன் விலை ஒவ்வொருன்று ரூ.299/- ஒன்லி…!!!அங்கிருந்து என்ன பேசியும் வெளியே கொண்டு வர முடியவில்லை. இறுதியாக, சோட்டா பீம் இரண்டு சீ.டியும், மைட்டி ராஜூ ஒரு சீ.டியோடு வெளியே வந்தோம். குழந்தையை அழைத்து செல்பவர்கள் இதற்கு எல்லாம் தயாராக செல்லவும்.

அடுத்து, இன்னொரு ஸ்டாலில் கலரிங் புக் வேண்டும் என்றான். அப்பாடா… ! இப்போதாவது புத்தகம் வேண்டும் என்று கேட்டானே என்று நினைக்க, அந்த கலரிங் புத்தகத்திலும் “சோட்டா பீம்” இருந்தான். கூடுதலாக “அங்கிரி பேட்ஸ்” ஸ்டிக்கர்ஸ் வேறு.

படிப்பு சம்மந்தமான பஸர்ஸ், பெப்பில்ஸ் சீ.டிக்களை எடுத்துக்காட்டினால் “வேண்டாம்” என்ற பதிலே வந்தது. படிப்புக்கு உதவியாக இருக்கும் என்று எடுத்து சொன்னால், "உங்களுக்கு வேணும்னா வாங்கிக்கோங்"க என்ற பதில் தான். உனக்கு இது தேவையா கைப்புள்ள என்று நினைத்துக் கொண்டேன்.

எதோ எங்களுக்காக டிக் சாப்ட் ஸ்டாலில் ஸ்போக்கன் இங்கீலிஷ் சீ.டி வாங்க சம்மதித்தான்.

எனக்காக என் மகன் கொடுத்த ஐந்து நிமிடத்தில் குமுதம் ஸ்டாலில் “இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்” புத்தகம் வாங்கினேன். ( இதுப் போன்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று நான் நினைத்துக் கொண்டு இருந்தேன். அதற்குள் புத்தகம் வந்துவிட்டது ).

புத்தகக் கண்காட்சியில் நடந்த இரண்டு மணி நேரத்தில் எனக்கு கால் வலிக்குது, வீட்டுக்கு போலாம் என்று சொல்ல... சென்ற வருடத்தை விட குறைவான செலவு வைத்த சந்தோஷத்தில் வெளியே வந்தோம்.

வண்டியில் ஏறியதும் ஏதாவது மாலுக்கு போய்ட்டு, ஓட்டலுக்கு போலாம் என்றான். இன்னும் நீ தப்பிக்கலடா கைப்புள்ள....!!

Sunday, January 13, 2013

மாவோயிஸ்ட் எழுத்தாளருடன் நடைப்பயணம் – செ.பு.க நாள் 2

 சுமக்க முடியாத புத்தக சுமைகளோடு நேற்றைய புத்தகக் கண்காட்சிக்கு சென்றேன். முதல் வேலையாக இருவாட்சி இலக்கிய துறைமுகத்தில் (ஸ்டால். 554), எனது நாகரத்னா பதிப்பகத்தின் புத்தகங்களை கொடுத்தேன். அடுத்து, பாலவசந்தா (ஸ்டால் 138), விழிகள் பதிப்பகம் (ஸ்டால் 495), புத்தக பூங்கா (ஸ்டால். 137) என்று அடுத்த அடுத்த ஸ்டால்களுக்கு எங்கள் பதிப்பக நூல்களை கொடுத்தேன். காமதேனு ( ஸ்டால் 89), டிஸ்கவரி புக் பேலஸ் (43-44), கௌதம் பதிப்பகம் (ஸ்டால் 283) போன்ற நாகரத்னா பதிப்பகத்தின் விளம்பர பேனர்களை கொடுத்தேன். ஒரு வழியாக விற்பனைக்கு என்னால் முடிந்த அளவுக்கு என் பதிப்பகத்தின் நூல்களை எல்லா ஸ்டால்களில் சேர்த்துள்ளேன். இதற்கு மேல் சேர்த்தால், கடைசி நாளில் கணக்கு பார்த்து புத்தகம் எடுத்து வர சிரமமாக இருக்கும்.

கொஞ்ச நேரம் கலைப்பரலாம் என்று டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டாலில் நுழைந்தேன். அப்போது, தூக்கு தண்டனையில் இருந்து நிஜம் நூல் ஆசிரியர் திருச்சி வேலுச்சாமி வந்திருந்தார். இராஜூவ் படுகொலைக்கும் விடுதலை புலிக்கும் சம்மந்தம் இல்லை உரத்த குரலில் அனைவரிடமும் சொல்லிக் கொண்டே இருப்பவர் இவர் மட்டும் தான். அவரிடம் உரையாடும் போது அவர் சொன்ன பல தகவல் அதிர்ச்சியானதாகவும், சி.பி.ஐ விசாரனையைக் அவர் கேள்வி கேட்க்கும் படியாக இருந்தது. அவர் புலிகள் எதிர்ப்பாளர்களை விட, புலிகளின் ஆதரவாளர்கள் இராஜீவ் கொலைக்கு ஆதரவு தெரிவித்து மேலும் புலிகளை சம்மந்தப்படுத்தினர் என்று கூறினார். இன்னும், சில தகவல்கள் வெளியே சொல்ல முடியாததாகவே இருந்தது.பிறகு, திருவண்ணாமலையில் இருந்து வந்த புத்தக விற்பனையாளர் தமிழன்பாபு அவர்களை சந்தித்தேன். மதியம் ஒய்.எம்.சி.ஏ அருகில் இருக்கும் ஜனதா உணவு விடுதியில் சாப்பிட்டு விட்டு, ஒரு வாசகனாக புத்தகங்கள் வாங்க சென்றேன்.

காவிரி நாடன் அவர்கள் தொகுத்து எழுதிய “தந்தை பெரியாரின் இறுதி நாள்களும், இதழ்களும்”, “லார்ட் க்ளைவ் சரித்திரம்” புத்தகம் வாங்கினேன். அடையாளம் ஸ்டாலில், திருநங்கை ரேவதி அவர்கள் எழுதிய “வெள்ளை மொழி”, எஸ்.வி.ராஜதுரை எழுதிய “யூத்த பூமி லெபனான்” புத்தங்கள் வாங்கிவிட்டு வரும் போது எனக்காக ஒரு பஞ்சாயத்து காத்திருந்தது.

முத்து காமிக்ஸ் (ஸ்டால் 343) யில் 10% கழிவு இல்லாமல் வாசகர்களுக்கு புத்தகம் தருவதாக ஒரு நண்பர் கூறினார். ‘கேட்டால் கிடைக்கும்’ உறுப்பினர் ஆயிற்றே ! சும்மா எப்படி விடுவது ? பில்லையும், வாங்கிய புத்தகத்தோடு பபாஸி அலுவலகத்தில் புகார் செய்து, கழிவு தொகையை வாங்கினேன். பஞ்சாயத்து முடித்து முத்து காமிக்ஸ் ஸ்டாலில் இருந்து வெளியே வரும் போது என் மானசீக குருவை சந்தித்தேன்.

அவர் முன்னாள் கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியரும், இன்னாள் சின்னத்திரையின் வசனக்கர்த்தாவான பா.ராகவன் அவர்கள். அவரைப் பார்த்ததும் காலையில் புத்தகம் சுமந்த வலியெல்லாம் போய்விட்டது. பிறகு, அவருடன் ஒவ்வொரு புத்தகக் கடைக்கும் சென்றேன். அவருடன் பேசிக் கொண்டு இருந்ததில், முத்து காமிக்ஸ் புத்தகத்திற்காக காத்திருந்த நண்பரை மறந்தேன். நல்ல வேளை அவராகவே தொலைப்பேசியில் அழைத்தார். அவரிடம் புத்தகம் கொடுத்துவிட்டு, மீண்டும் பா.ரா அவர்களுடன் நடைப்பயணத்தை தொடர்ந்தேன்.இருவரும் மதி நிலையத்தில் (ஸ்டால் 33 – 34) கொஞ்சம் அமர்ந்தோம். அப்போது, பா.ராகவன் எழுதிய புது புத்தகம் “அன்சைஸ்” வாங்கி அவரிடம் கையெழுத்து வாங்கினேன். இந்த வருடம் நான் போடும் முதல் கையெழுத்து என்றார். (2010ல் அவர் எழுதிய ‘மாவோயிஸ்ட்’ புத்தகத்திற்கு அவர் போட்ட முதல் கையெழுத்தும் எனக்கு தான்.)இதற்கிடையில் கௌதம் பதிப்பகத்தில் (ஸ்டால். 283) நான் எழுதிய “உலக சினிமா – ஓர் பார்வை” வந்திருப்பதை அலைப்பேசியில் செய்தி வர, அங்கு சென்று ஐந்து பிரதியை வாங்கி வந்தேன். முதல் பிரதியை பா.ராகவனுக்கு தான் கொடுத்தேன். இரண்டாவது பிரதி பேஸ்புக் நண்பரும், மதி நிலையத்தில் பணியாற்றும் கமலி தாசனுக்கு கொடுத்தேன். கமலிதாசனின் உண்மையான பெயர் ரவிக்குமார். ஏன் 'கமலிதாசன்' என்று பெயர் வைத்தார் என்ற காரணத்தை கேட்டதற்கு, அவர் கூறிய கதை மிகவும் ஸ்வாரஸ்யமாக இருந்தது. திருமணத்துக்கு முன் அவர் பெயரை மாற்றிக் கொண்டால் அவருக்கு நல்லது. கமலிதாசன்… ச்சே ரவிகுமார், அவர் எழுதிய “Instant இங்லீஷ்” ( Jolly பீட்டர் விடுங்க) புத்தகம் கொடுத்தார். ஆங்கில இலக்கணத்தை வைத்து மிரட்டாமல், பீட்டர் விடும் அளவிற்கு ஆங்கில வாக்கியங்களை எங்கு, எப்படி பயன் படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.எங்கள் பதிப்பக எழுத்தாளருமான, திரைப்பட வசனக்கர்த்தா (இப்படி எல்லாம் சொல்லி டிஸ்கவரி புக் பேலஸ்யில் ஒரு பேனர் இருக்கு) கேபிள் சங்கர் டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டாலில் இருந்து அழைத்திருந்தார். அங்கு, வலைப்பதிவர் ரோஸ்விக், கே.ஆர்.பி.செந்தில், அப்துல்லா அண்ணன் எல்லாரும் இருந்தார்கள். அங்கையே, “உலக சினிமா – ஓர் பார்வை அறிவிக்கப்படாத நூல் வெளியிட்டு நடந்தது.

கொஞ்சம் நேரம் ஊர் கதைகள் பேசிவிட்டு நானும், பா.ரா அவர்களும் புத்தகக் கண்காட்சியை விட்டு வெளியே வந்தோம்.

இன்று என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். ஒரு நாள் முழுவதும், நான் நானாக இருந்தேன். எனக்கு பிடித்ததை மட்டும் செய்தேன் என்று சொல்ல வேண்டும். என்னைப் போன்ற அலுவலக கைதியாக இருப்பவர்களுக்கு புத்தகக் கண்காட்சி தான் சுதந்திரத்தை ஸ்வாசிக்க வைக்கும் பூங்கா. அந்த பூங்காவின் அரங்கத்தை இன்னும் சிறப்பாக அமைத்தால் நன்றாக இருக்கும்.

Saturday, January 12, 2013

36வது சென்னை புத்தகக் கண்காட்சி – நாள் 1

சென்னை புத்தகக் கண்காட்சி இனிதே நேற்று (11.1.13) தொடங்கியது.

புது இடம். புது அரங்க அமைப்பு. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ விளையாட்டு மைதானத்தில் புத்தகக் கண்காட்சி நடப்பதால், விளையாட்டு வீரர்கள் செல்லும் வழியில் நுழைந்து விட்டேன். ஒய்.எம்.சி.ஏ வுக்குள் நுழைந்து ஒரு கி.மீ. வரை தொலைவில் அரங்கம் உள்ளது. இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் பாக்கியசாலி. காரில் வருபவர்கள் பார்க்கிங் சிரமம் இருக்குமோ தோன்றுகிறது. குறிப்பாக சனி, ஞாயிறு நாட்களில் விளையாட வருபவர்கள் அதிகம். அதனால், பார்க்கிங் பிரச்சனை, வண்டி நுழைவதும், வெளியே வருவது கொஞ்சம் சிரமமாக இருக்கலாம். புது இடம் என்பதால் எங்கு எப்படி என்பது சிரமங்கள் இருக்கும். இரண்டு மூன்று நாட்களில் பழகிவிடும்.

அரங்கிற்குள் நுழைந்ததும் நேராக டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டாலில் (43-44) நாகரத்னா பதிப்பகத்தின் அனைத்து வெளியீட்டு புத்தகங்களை கொடுத்தேன். வேடியப்பனிடம் பேச முடியாத அளவிற்கு புத்தக ஆர்வாளர்கள் அவரை சூழ்ந்து இருந்ததால், அரங்கம் சுற்றிப் பார்க்க சென்றுவிட்டேன். அப்போது, காமதேனு பதிப்பக (ஸ்டால். 89) அரங்கம் கண்ணில் பட்டது. கலைமாமணி விக்கரமனின் மகன் கண்ணன் விக்கரமனும், திரிசக்தி குழுமத்தில் வெளியே வந்த சில நண்பர்களும் சேர்ந்து காமதேனு பதிப்பகம் தொடங்கியிருக்கிறார்க்ள். அவரை முன்பே தெரியும் என்பதால் அவர் அப்பாவைப் பற்றி விசாரித்தேன். மிக உரிமையுடன் எங்கள் பதிப்பக புத்தகங்களை கேட்டார். என் கையில் இருக்கும் கொஞ்சம் புத்தகங்களை கொடுத்து விட்டு, நாளை எடுத்து வருவதாக கூறினேன். அவர் கடையில் “பெரியாவா” புத்தகம் அருமையாக சக்கைப் போடு போடுகிறது.

அடுத்து, இருவாட்சி இலக்கிய துறைமுக அரங்கத்திற்கு (554) சென்றேன். வெறும் கையோடு வந்த என்னை, ‘புத்தகம் எங்கே ?’ என்று நண்பர் உதயகண்ணன் கேட்டார். சுமக்க முடியாமல் புத்தகங்களை சுமந்து வந்து, இரண்டு அரங்கத்திலே எல்லா புத்தகங்களை கொடுக்க வேண்டியதாக இருந்தது என்பதை கூறினேன். மேலும், விழிகள் பதிப்பகம், நிவேதிதா புத்தக பூங்கா அரங்கில் மணி எழிலன், புதுகை தென்றல் அரங்கில் இளையபாரதி, தோழமை அரங்கில் காதர் பாய் என்று எனக்கு தெரிந்த பலர் ஏதாவது புத்தக கடையில் பார்க்க முடிந்தது.

பாலவசந்தா பதிப்பகத்தின் (ஸ்டால்.138) உரிமையாளர் பாலசங்கரன் அவர்கள் கொஞ்சத் தொலைவில் பேசிக் கொண்டு என்னுடன் நடந்து வந்தார். அவருக்கும் என்னால் புத்தகம் கொடுக்க முடியவில்லை. இந்த முறை பலர் நாகரத்னா பதிப்பகத்தின் புத்தகத்தை கேட்டுகும் எல்லா கடைகளுக்கு கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை.

 கையில் இருக்கும் புத்தக சுமை குறைந்ததால் புத்தகங்கள் வாங்க ஒவ்வொரு அரங்காக நோட்டம் விட்டேன். அப்போது, எங்கோ வலைப்பதிவில் பார்த்த முகம் மாதிரி இருந்தது. அவர் நர்சிம் தான். வலைபதிவுக்கு வந்து இரண்டு வருடங்கள் மேல் இருக்கும். அவர் எழுதிய இரண்டு புத்தகங்கள் நா.முத்துகுமாரின் பட்டாம்பூச்சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நர்சிம் எழுதிய ஒரு வெயில் நேரம்” (சிறுகதை) நூலோடு புத்தகக் கண்காட்சி புத்தகம் வாங்க தொடங்கினேன்.

பிறகு, வலைப்பதிவு நண்பர்கள் அப்துல்லா அண்ணன், மணிஜி, பொன்.வாசுதேவன், வேளாண்மை சங்கர் சந்தித்து பேசிவிட்டு காலச்சுவடு அரங்குக்கு சென்றேன்.அங்கு, wecanshopping.com விற்பனைக்காக “கூண்டு” மற்றும் “ஈழம் : சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்” புத்தகம் வாங்கினேன். அடுத்து, பொன்னி அரங்கில் (149) ‘லெனின் விருதுப் பெற்ற’ அம்ஷன் குமார் அவர்களை சந்தித்தேன். அவர் எழுதிய ‘சினிமா ரசனை’ புத்தக வாங்கி கையெழுத்தும் பெற்றுக் கொண்டேன். சினிமா ஆர்வாளர்கள் படிக்க வேண்டிய புத்தகம் என்று ஒரு முறை என் நண்பர் ஒருவர் கூறியிருந்தார். பல பழைய உலக திரைப்படங்களின் பார்வையோடு ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, எடிட்டிங், திரைக்கதை என்று விரிவான பதிப்பாக வந்திருக்கிறது. சினிமா ஆர்வாளர்கள் வாங்கலாம்.

வேடியப்பனுடன் பன்ஜாபி தாபாவில் இரவு உணவு முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். இன்றும், ஒரு பதிப்பாளராக பல அரங்குக்கு புத்தகம் கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. நாளையில் இருந்து தான் வாசகனாக புத்தகம் வாங்க வேண்டும்.

Friday, January 11, 2013

சென்னை 36வது புத்தகக் கண்காட்சிக்கு வாங்க !

நாகரத்னா பதிப்பக நூல்கள் கிடைக்குமிடம்.....

டிஸ்கவரி புக் பேலஸ் - எண். 43-44
இருவாட்சி இலக்கிய துறைமுகம் : எண். 554
மதி நிலையம் - எண் 34 - 35
கௌதம் பதிப்பகம் - எண் 283
பாலவசந்தா பதிப்பகம் - எண் 138

Friday, January 4, 2013

கேபிளின் கதை மற்றும் கே.எஸ்.ரவிகுமார் நூல் விமர்சனங்கள்

கேபிளின் கதை

பொதுவாக யாரும் அவர்கள் சார்ந்த துறையைப் பற்றி எழுத முன் வருவதில்லை. அந்த வகையில் கேபிள் சங்கர் தனது கேபிள் ஆப்ரேட்டர் அனுபவத்தை ஒளிவு மறைவு இல்லாமல் துணிந்து சொல்லியிருக்கிறார். கேபிளின் ரிஷிமூலத்திலிருந்து ஆரம்பித்து, கண்டிஷனல் ஆக்ஸஸ் சிஸ்டம், ட்ராய், அரசு கேபிள் என்று அதன் முழுக் கதையையும் வருங்காலத் தலைமுறைகளுக்குப் புரியும் படி சொல்லியிருக்கிறார்.

வெறும் அனுபவங்கள் என்ற அளவில் நிற்காமல் கேபிள் டி.வி தொழில் நுட்பத்தில் ஊடுருவியிருக்கும் அரசியலையும் சொல்லியிருப்பது தான் நூலின் வெற்றி. அரசு மற்றும் தொலைக்காட்சி நிறுவங்கள் எப்படி வருமானத்தை இழந்து வருகின்றன என்பதைக் கூறியதோடு, எப்படி லாபம் சம்பாதிக்கலாம் என்ற யோசனையையும் முன் வைக்கிறார்.இணையத்தில் நூல் வாங்க...

நன்றி : குமுதம் ( 9.1.13)

என்றென்றும் நன்றியுடன் கே.எஸ்.ரவிகுமார் 

பிரபல டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் பற்றி அவருடைய துணை டைரக்டர் ஜே.டி.ஜீவா எழுதிய புத்தகம்,. ரவிகுமாரின் சிறப்புக்களைப் பற்றி எழுதியிருப்பதுடன் பட உலகம் எப்படி செயல்படுகிறது என்பதையும் விளக்கியிருக்கிறார். சினிமா டைரக்டர்களின் பொறுப்புகள் என்ன, படம் தயாரிப்பது என்றால் அதில் எவ்வளவு சிரமங்கள் இருக்கின்றன என்பதை எல்லாம் இந்நூல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. ரவிகுமார் திட்டமிட்டு செயல்படுவதாலும், குறிப்பிட்ட காலத்தில் படத்தை முடிப்பதாலும் அவரால் நஷ்டம் அடைந்த பட அதிபர்கள் எவரும் இல்லை என்றும் கூறுகிறார் ஜீவா. படிப்பதற்கு சுவையான புத்தகம்.


இணையத்தில் நூல் வாங்க...

நன்றி : தினத்தந்தி (26.12.12)

Thursday, January 3, 2013

உலக சினிமா : Khamosh Pani

சாதத் ஹசன் மாண்டோவின் சிறுகதை அடிப்படையாக கொண்ட குறும்படங்களின் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள், "காமோஷ் பாணி" படம் என்னை மேலும் பாதித்தது. குழந்தைகள் பிறப்பது பெற்றோர்களுக்கு சந்தோஷமாக இருக்கலாம். ஆனால், ஒரு நாடு பிறக்கும் போது பல மக்கள் மனதில் வேதனைகளையும், வலியையும் கொடுத்து தான் பிறக்கிறது. அப்படி வலிகளும், வேதனையோடு மட்டுமல்லாமல் கலவரத்தில் பிறந்த தேசம் இந்தியா - பாகிஸ்தான். அதன் பின்னனியில் கதைக்களம் இல்லை என்றாலும், அதன் வேதனையில் உருவாக பெண்ணின் கதை தான் "காமோஷ் பாணி".

1979ல் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் சர்கி கிராமத்தின் நடக்கும் கதை. அம்மா ஆயிஷாவின் அன்பு, புல்லாங்குழல் இசை, சுபைதா என்ற பெண்ணின் காதல், நண்பர்கள் என்று எல்லோரைப் போலவே சந்தோஷமான இளைஞனாக இருக்கிறான் சலீம். ஆனால், அவனது அம்மா ஆயிஷாவுக்கு கிணற்றை நோக்கி நினைவுகள் செல்லும். அமைதியான கிணற்று நீர் இரண்டு நாடு பிரிந்ததற்கு சாட்சியாக இருக்கிறது.

சலீம் தனது நண்பனின் தூண்டுதலால் அரசியல் ஆர்வம் கொண்டு, அரசியல் கூட்டத்திற்கு செல்கிறான். அப்போது, அவனது நண்பன் காதல் நம் கலாச்சாரத்திற்கு எதிரானது, அவர்கள் நம்மை மதிக்க மாட்டார்கள் என்கிறான். அரசியல் ஆர்வம் சலீம்மை அம்மாவிடம் பொய் சொல்ல வைக்கிறது. காதலி சுபைதாவை உதாசினப்படுத்த வைக்கிறது.இதற்கிடையில் இந்தியா – பாகிஸ்தான் அமைதி உடன்படிக்கையில் சீக்கியர்கள் பாகிஸ்தானில் உள்ள புனித தளங்களுக்கு வரலாம் என்று கையெழுத்திடுகிறார்கள். இதனால், இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஒரு சீக்கிய குழுக்கள் வருகிறது. சர்கி கிராமத்தில் தனது சகோதரியை தேடி வருகிறார் ஒரு சீக்கியர். அவர் ஆயிஷாவை பார்த்து தனது சகோதரி ‘வீரோ’ என்கிறார். அந்த சமயத்தில் சலீம் வர, வந்த சீக்கியரிடம் ‘இங்கு இஸ்லாம் குடும்பம் மட்டுமே வசிக்கிறது’ என்று சொல்லி கதவை முடுகிறாள். அவளது சீக்கிய சகோதரன் தனது தந்தை சாக கிடப்பதாக சொல்லியும், அவள் மௌனமாக வீட்டுக்குள் செல்கிறாள்.

கண்ணீர் நிரம்ப தனது சீக்கிய ஆடை எடுக்க, மௌனமான கிணற்றை நோக்கி நினைவுகள் செல்கிறது. இந்திய – பாகிஸ்தான் பிரிவினை போது பாகிஸ்தான் கலவரக்காரர்களிடம் தப்பிக்க, தங்கள் கற்பை காப்பாற்றிக் கொள்ள பல பெண்கள் அந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக் கொண்டார்கள். வீரோவின் தந்தையே அவளை கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக் கொள்ள சொல்ல, உயிருக்கு பயந்து அங்கு இருந்து தப்பி ஓடுகிறாள். ஆனால், பாகிஸ்தான் கலவரக்காரர்களால் கற்பழிக்கப்பட்டு, சிறைக்கைதியைப் போல் அடைக்கப்படுகிறாள். பிறகு, ஒருவன் தன் தவறுக்கு மனம் வருந்தி அவளை திருமணம் செய்துக் கொள்ள விருப்பம் தெரிவிக்கிறான். கற்பழிக்கப்பட்டு இஸ்லாமியல்லாத பெண்ணாக இருப்பதைவிட, அவனை ஏற்றுக் கொண்டு திருமணத்துக்கு சம்மதிக்கிறாள். ‘வீரோ’ என்ற பெயரை ‘ஆயிஷா’ என்று மாற்றிக் கொண்டு புது வாழ்க்கை தொடங்குகிறாள்.

தனது அம்மா சீக்கியர் என்று தெரிந்தும் தனது மதவாதத்தில் இருந்து மாறாமல் இருக்கிறான் சலீம். அதுமட்டுமில்லாமல் பிராத்தனைக்கு வந்த சீக்கியர்களை விரட்டி அடிக்கும் கூட்டத்தில் செல்கிறான்.

இந்த உண்மை தனது சகாக்களிடம் சொல்கிறான் சலீம். அவன் நண்பர்கள் அவன் தந்தை ‘பாகிஸ்தானி’ என்பதால் அவனை தவறாக நினைக்கவில்லை. ஆனால், அவன் அம்மா முழுமையாக இஸ்லாமியத்தை ஏற்றுக் கொண்டைதை அறிவிக்க வேண்டும் என்கிறார்கள். இதை சலீம் ஆயிஷாவிடம் சொல்லியும் அவள் மறுக்கிறாள். தன் மகன் மதவாதத்தால் அவளை உதாசினப்படுத்துகிறாள். அவளை சுற்றி இருக்கும் தோழிகளும், நண்பர்களும் உதாசினப்படுத்துகிறார்கள். ஆயிஷாவுக்கு சலீமின் முன்னாள் காதலி சுபைதா மட்டும் ஆதரவாக இருக்கிறாள். ஆயிஷாவால் இஸ்லாத்தை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியாமல் வாழ்ந்ததை தனது சகோதரனிடம் சொல்லி அழுதுகிறாள்.

மகனின் புரக்கனிப்பும், சகோதரனுடன் செல்ல முடியாமல் தவிக்கும் ஆயிஷா, பிரிவினையின் போது அஞ்சி ஓடிய கிணற்றில் தற்கொலை செய்துக் கொள்கிறாள். அவனது மகன் சலீம் அவளது பொருட்களை ஆற்றில் போட்டு, செயின்னை மட்டும் தன் முன்னாள் காதலி சுபைதாவுக்கு கொடுத்துவிட்டு செல்கிறான். “வீரோ இறக்க, ஆயிஷாவின் பிணம் மட்டும் இங்கு இருக்கிறது” என்ற சுபைதா குரலில் படம் 2002ல் நகர்கிறது. திருமணமாகாத சுபைதா நடைபாதையில் செல்லும் போது சலீமின் அரசியல் பேச்சை தொலைக்காட்சியில் பார்த்து புன்னகைத்தப்படி செல்கிறாள்.

ஒரு தாயின் மறு ஜென்மம் ஒரு குழந்தையின் பிறப்பில் உருவாகிறது. ஆனால், நாடுகள் பிறப்பதில் மட்டும் ஏன் மனித உயிர்கள், உணர்வுகள் மேல் நடக்கிறது ? பிரிந்து வந்த பிறகு இரண்டு நாடுகளும் நண்பர்களாக இருக்க வேண்டாம், குறைந்த பட்சம் அடுத்தவர்கள் சுதந்திரத்தில் தலையீடாமல் இருந்தாலாவது பல பிரச்சனைகள் தடுக்கப்பட்டிருக்கும். தங்கள் நாட்டின் வளர்ச்சியை விட சகோதர நாட்டில் வீழ்ச்சியை பார்க்கும் அரசியலை யாரால் உருவானது ? எப்படி மாற்றப் போகிறோம் ?

இந்திய - பாகிஸ்தான் பிரிவினையை வரலாறு புத்தகங்கள் நினைவு படுத்தினாலும், அதன் வலி, வேதனையை இது போன்ற படைப்புகள் தான் நமக்கு ஞாபகப்படுத்துகிறது.

LinkWithin

Related Posts with Thumbnails