வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, September 18, 2014

பிரமாண்டமல்ல.... பணத்திமிர் !!

ஏன் சங்கர் மீது உங்களுக்கு இவ்வளவு கோபம் என்று ஒரு நண்பர் கேட்கிறார் ?தயாரிப்பாளராக சங்கரை நான் மதிக்கிறேன். குறைந்த செலவில் ஒரளவு தரமான படங்களை தயாரித்திருக்கிறார். ஆனால், இயக்குனர் சங்கரை ஒரு காலும் என்னால் மன்னிக்க முடியாது.

இந்த பிரமாண்ட இசை வெளியீட்டு விழாவெல்லாம் அதிக விலைக்கு விநியோகஸ்தர்களிடம் விற்பதற்கான வியாபார தந்திரம். சாட்டிலைட் உரிமையை இன்னும் அதிக விலைக்கு விற்க சூட்சமம். தயாரிப்பாளரும், இயக்குனருக்கு லாபம் கிடைக்கலாம். படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு லாபம் கிடைத்தால் தான் உண்மையான வெற்றியே !! அந்த அளவில் முந்தைய சங்கரின் எந்திரன், நண்பன் தோல்வி படமே !!

இசை வெளியீட்டு விழாவுக்கு அவர் செய்த செலவில் ஐந்து ஜிகர்தண்டா படங்களை தயாரிக்கலாம். (அர்னால்ட்டுடன் போட்டோ எடுக்க வேண்டும் என்றால் அமெரிக்காவுக்கு சென்று போட்டோ எடுக்க வேண்டியது தானே !!)இது ஆஸ்கர் ரவிசந்திரன் பணம். அவருக்கு இல்லாத கவலை. உனக்கு எதுக்கு என்று நீங்கள் கேட்கலாம். ஒரு படத்தின் வெற்றி மூலம் தயாரிப்பாளருக்கு லாபம் தருமானால், அவனுக்கு அடுத்த இரண்டு படம் தயாரிக்க நம்பிக்கை பிறக்கிறது. இன்னும் இரண்டு படங்கள் இயக்க இயக்குனருக்கு, அதில் வேலை செய்யும் தொழிற்நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அப்படி நடந்தால் சினிமாவுக்கு நல்லது.

அதற்கு மாறாக ஒரு படம் தோல்வி அடையும் போது அந்த படத்தின் தயாரிப்பாளர் திரைப்படத் துறையில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறார். எத்தனையோ தயாரிப்பார்கள் முதல் படத்தோல்வியால் திரையுலகில் இருந்து ஒதுங்கியிருக்கிறார்கள்.

இதேப் போன்று தான் விநியோகஸ்தர்களும். அவர்கள் வாங்கும் படம் வெற்றிப் பெற்றால் தொடர்ந்து தொழிலில் இருக்க முடியும். இல்லையென்றால் அவர்களும் ஒதுங்க வேண்டியது தான். 

தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் தேவை பணம் தான். அதை மறுப்பதற்கில்லை. அவர்களுக்கு சினிமாப் பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால், சினிமா உருவாக இவர்கள் தேவை. (நடிகைகளுக்காக அவர்கள் செய்யும் செலவு இங்கு விவாதிக்க வேண்டாம்.)

படைப்பாளியே மக்களிடம் படத்தை கொண்டு செல்லும் வேலையை செய்ய முடியாது. அப்படி செய்தால் அவனால் அடுத்த படைப்பை சரியாக கொடுக்க முடியாது. திரைத்துறையில் எல்லா இயக்குநர்களும் சசிக்குமாரை போல் சொந்தப்பணத்தை முதலீடு செய்து தங்கள் திறமையை நிருபிக்க முடியாது.

இன்னும் கண்ணுக்கு தெரியாத பாலுமகேந்திராக்கள், மணிரத்னங்கள் திரையுலகில் இருக்கிறார்கள். அவர்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைக்காமல் இருக்கிறார்கள். சங்கர் போன்ற இயக்குனர்கள் ஒரு தயாரிப்பாளர் பணத்தை இரண்டு வருடத்திற்கு குத்தகை எடுத்துக் கொள்வது எப்படி மன்னிக்க முடியும்.நாளை விக்ரமுக்கு இன்னொரு தேசிய விருது கிடைக்கலாம். படம் தோல்வி அடைந்தாலும், சங்கர் அடுத்த படத்தை இயக்க சென்றுவிடுவார்.

ஆஸ்கர் ரவிசந்திரனிடம் கோடிக்கணக்கில் பணம் இருந்தாலும், படம் தோல்வி அடைந்தால் கண்டிப்பாக அடுத்தப்படத்தின் வேலையில் இறங்க ஆறு மாதாவாது ஆகும். இதனால், ஒரு இயக்குனருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு பரிப்போகிறது. ஒரு படம் உருவாகாமல் போகிறது.

ஐ பாடல் வெளியீட்டு... பிரமாண்டமல்ல. ஆஸ்கர் ரவிச்சந்திரன், சங்கர் இருவரிகளின் பணத்திமிர்.

பின்குறிப்பு : பணத்தை வீணாக்குவதில் சங்கர் மிகப்பெரிய குற்றவாளி. அவரைப் போல் புது இயக்குனர் தொடங்கி முன்னனி இயக்குனர் வரை அவரவர் தகுதிக்கு தகுந்தாற்போல் பணத்தை வீணாக்கிக் கொண்டு தான் இருக்கிறார். 

இயக்குனராக ஒருவன் செய்யும் தண்டச் செலவு இன்னொரு இயக்குனரின் எதிர்காலத்தை கேள்விக்குரியாக்கிறது. 

Wednesday, September 17, 2014

சினிமா 1913 -2013 : 9. குணச் சித்திர நடிகர்கள் !

சினிமாவில் கதாநாயகிகள் அதிகப்பட்சமாக ஐந்தாண்டுகள் நடிக்கலாம். அதன்பின் அக்கா, அன்னி, அம்மா பாத்திரங்களுக்கு நடிக்க வந்துவிட வேண்டியதாக இருக்கும். நாயகர்கள் அவர்களை விட கொஞ்சம் அதிகம். ஆனால், அவர்களுக்கு ஒரு காலக்கட்டத்தில் அண்ணன், அப்பா பாத்திரங்களுக்கு மாற வேண்டியது இருக்கும் என்பது தான் சினிமாவின் விதி. (எம்.ஜி.ஆர், ரஜினி, கமல் போன்ற விதி விளக்குகளும் சினிமாவில் உண்டு.)

1930, 40 களில் புகழ் பெற்ற நாயகர்களாக கொடிக் கட்டி பறந்து, பின்பு ஐம்பது சினிமாவில் குணச் சித்திர பாத்திரங்களில் பிரபலமானாவர்கள் பலர் இருக்கிறார்கள்.எம்.ஆர்.ராதா 

1954ல் வெளியான “ரத்தக்கண்ணீர்” படத்தின் மூலம் வித்தியாசமான நடிப்புக்கு வித்திட்ட நடிகர். இன்று வில்லன நடிகர்கள் தங்கள் நடிப்பில் நகைச்சுவை கலந்து செய்கிறார்கள் என்றால் அதற்கு முன்னோடியாக இருப்பவர் எம்.ஆர்.ராதா அவர்கள் தான்.

எம்.ஆர்.ராதா அவர்கள், தமிழில் சினிமா 1937ல் “ராஜசேகரன்” என்ற படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் நடிக்கும் போது குதிரை மீது குதிக்கும் காட்சியில் அவருக்கு கால் முறிவு ஏற்ப்பட்டது. அதன் பிறகு, “பம்பாய் மெயில்” என்ற படத்திலும் நடித்தார். என்ன காரணத்திற்காகவோ அதன்பின் சினிமாவை விட்டு ஒதுங்கி நாடகத்தில் மட்டுமே நடித்து வந்தார்.

”ரத்தக் கண்ணீர்” வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். ஆனால், அவருக்கு பொருத்தமான பாத்திரம் கொடுக்க முடிக்க முடியுமா என்று அஞ்சியே யாரும் அவரை அனுகவில்லை. தயாரிப்பு ஒத்துழைப்பு தரமாட்டார் என்ற பேச்சு அப்போது அவர் மேல் இருந்தது.

மூன்று வருடம் கலித்து ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் “நல்ல இடத்து சம்பந்தம்” படத்தில் நடித்தார். இந்தப் படம் வெளிவந்த பிறகு தயாரிப்பாளர் எம்.ஆர்.ராதா அவர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார் என்ற நம்பிக்கை வந்தது. மாறுப்பட்ட வேடங்களில் ராதா அண்ணன் நடிக்க முடியும் பலரது நம்பிக்கைப் பெற்ற குணச்சித்திர நடிகராக உயர்ந்தார்.

டி.ஆர். மகாலிங்கம். 

தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா போன்ற இரண்டு சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் மூன்றாவது சூப்பர் ஸ்டாராக மின்னியவர் டி.ஆர்.மகாலிங்கம். சிறு வயதில் இருந்தே பாடும் திறமைக் கொண்டவர். 1938ல் ஏவி.எம்மின் படமான “நந்தகுமார்” படத்தின் மூலம் அறிமுகாமானார். அப்போது அவருக்கு வயது 14 !!

தனது முதல் படத்திலேயே பலரது கவனத்தை ஈர்த்த டி.ஆர். மகாலிங்கம் பரசுராமர், பூலோக ரம்பை போன்ற படங்களில் நடித்தார். அதன் பின் வெளியான “ஸ்ரீ வள்ளி” படம் டி.ஆர்.மகாலிங்கத்தை முக்கிய நடிகராக மாற்றியது. அதை தொடர்ந்து வந்த “நாம் இருவர்” படமும் டி.ஆர்.மகாலிங்கத்தை பெரிய நட்சத்திரமாக உயர்த்தியது. அடுத்து ஐந்து ஆண்டுகளில் வேதாள உலகம், ஞானசவுந்தரி, மாயாவதி, பவளக்கொடி என்று பல படங்களில் நடித்தார்.

புகழ் உச்சியில் இருக்கும் போது தனது மகனின் பெயரில் “சுகுமார் புரொடக்ஷனஸ்” என்ற கம்பெனி சொந்தமான படம் தயாரிக்கத் தொடங்கினார். மச்சரேகை, மோகசுந்தரம், சின்னத்துரை, விளையாட்டு பொம்மை போன்ற படங்களை தயாரித்தார். இதில், ’சின்னத்துரை’ படத்தின் டைரக்ஷன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இதில் எந்த படங்களும் வெற்றிப் பெறவில்லை. அது வரை அவர் சம்பாதித்த பணத்தை எல்லாம் இழக்க வேண்டியதாக இருந்தது. கடன்காரர்களை சமாளிக்க முடியாமல் தன் சொத்துக்களை அனைத்தையும் இழந்தார்.

கண்ணதாசன் இவருக்கு உதவுவதற்காக “மாலையிட்ட மங்கை” என்ற படத்தை தயாரித்தார். படம் வெற்றிப் பெற்றாலும், இவரால் மீண்டும் ‘நாயகன்’ அந்தஸ்தில் நடிக்க முடியவில்லை. குணச்சித்திர பாத்திரங்களில் நடிக்க வேண்டியதாக இருந்தது. திருவிளையாடல், அகத்தியர், ராஜராஜ சோழன் போன்ற படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்தார். 1978ல் உடல் நலக்குறைவால் இறந்தார்.

ரஞ்சன் 

’நாயகன்’ என்றால் நல்லவனாக இருக்க வேண்டும், நான்கு பேருக்கு உதவ வேண்டும், வில்லனோடு சண்டைப் போட வேண்டும் என்று இருந்த காலக்கட்டத்திலே ரஞ்சன் அவர்கள் வில்லன் தன்மைப் பொருந்திய நாயகனாக நடித்தவர். இவர் நடித்த ‘சந்திரலேகா’ இன்று வரை காலத்தால் மறக்க முடியாத காவியப்படமாக இருக்கிறது.

”ரிஷ்யசிருங்கர்” என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் நடித்த “மங்கம்மா சபதம்” மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இதில், அப்பா – மகன் என்று இரட்டை வேடத்தில் நடித்தாலும், அப்பா பாத்திரத்தில் இவர் நடித்த வில்லன் பாத்திரம் தான் அதிகம் பேசப்பட்டது.

“சந்திரலேகா” படத்தில் எம்.கே.ராதா தான் நாயகன் என்றாலும், நாயகனுக்கு இணையாக ரஞ்சனின் வில்லன் பாத்திரப்படைப்பு இருந்தது. இறுதிக் காட்சியில் இவர்களின் கத்திச் சண்டை பிரமாதமாக அமைந்தது. எம்.கே.ராதா நடித்த “அபூர்வ சகோதர்கள்” படத்தை இந்தி பதிப்பான “நிஷான்” படத்தில் நாயகனாக நடித்தார்.

வி.நாகையா

தெலுங்கு பட உலகில் கொடிக்கட்டி பறந்தவர் வி.நாகையா. 1938ல் கண்ணம்மாவோடு “கிரகலட்சுமி” என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர், சுமங்கலி, தேவதா போன்ற பல படங்கள் நடித்தார். 1950ல் தமிழில் இவர் நடித்த “ஏழை படும் பாடு” மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.

”என் வீடு” (1953) என்ற படத்தை தமிழ், தெலுங்கில் தயாரித்ததோடு இல்லாமல் டைரக்ஷ்ன், இசை இவரே ஏற்றுக் கொண்டார். எம்.ஜி.ஆரின் “சர்வாதிகாரி”, சிவாஜியின் “தெனாலிராமன்”, மீரா, பாவமன்னிப்பு என்ற பல படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்தார். நடிப்புக்காக மத்திய அரசின் “பத்மஸ்ரீ” விருது பெற்றவர், தனது கடைசிக் காலத்தில் பொருளாதாரத்தால் சிரமப்பட்டு இறந்தார்.

எஸ்.வி.சகஸ்ரநாமம்

நாடகத்துறை மட்டுமில்லாமல் திரைப்படத்துறையிலும் பல சாதனைப் புரிந்தவர் எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்கள்.

டி.கே. சண்முகம் அவர்கள் “சண்முகானந்தா சபா” நாடகக் குழுவில் பணியாற்றியவர், 1935ல் “மேனகா” படத்தில் முதன் முதலாக நடித்தார். இந்தப் படத்தில் அறிமுகமான இன்னொரு நடிகர் என்.எஸ்.கே !!

”என்.எஸ்.கே நாடக சபை” யின் முக்கிய நடிகராக விளங்கியதோடு இல்லாமல் அந்த நாடகக் குழுவின் நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டார். லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் என்.எஸ்.கே சிறைச் சென்ற போது, அந்த காலக்கட்டத்தில் உருவான “பைத்தியக்காரன்” படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.

1949ல் ஏ.வி.எம் தயாரிப்பான “வாழ்க்கை” படத்தில் எதிர்மறை நாயகன் பாத்திரத்தை ஏற்றார். ”பராசக்தி” படத்தில் சிவாஜி அண்ணனாக நடித்தவர், பிறகு சிவாஜி நடித்த பல படங்களில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.

“போஸ்காரன் மகள்” படத்தில் இவர் ஏற்று நடித்த தந்தைப் பாத்திரம் மறக்க முடியாதவை.

எஸ்.வி. ரங்கா ராவ்

ராவணா, கடோத்கஜன், துரியோதனன், இரணியன் என்று புராணப் பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த கலைஞர் எஸ்.வி.ரங்கா ராவ் அவர்கள். 1946ல் ’வரோதினி’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர், இரு மொழியில் எடுக்கப்பட்ட “பாதாள பைரவி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.

ஒரு பக்கம் இராவணன், ஏமன் என்று புராணப் பாத்திரங்கள், இன்னொரு பக்கம் “பேசும் தெய்வம்”, “படிக்காத மேதை”, “முத்துக்கு முத்தாக” படங்களில் குடும்பத் தலைவன் பாத்திரம், மாயஜாலப் படங்களில் வில்லன் பாத்திரம் என்று சகலமும் ஏற்று நடிக்கக் கூடிய வல்லவர்.

”பக்த பிரகலாதா” படத்தில் கிட்டதட்ட பதினைந்து கிலோ எடையுள்ள ஆபரணங்களை அணிந்து நடித்தார்.

“விஸ்வ நாடக சக்கரவர்த்தி” என்று புகழ்ப் பெற்ற இவர் தனது 56வது வயதில் இறந்தார்.

அடுத்த இதழில் மறக்க முடியாத நகைச்சுவை நடிகர்கள் !!!!

நன்றி : நம் உரத்தசிந்தனை, செப்டம்பர், இதழ், 2014

Monday, September 15, 2014

லூசியா (எனக்குள் ஒருவன்)

முதன் முதலாக நான் முழுமையாகவும், மிகவும் ரசித்து பார்த்த கன்னடப்படம்.

இதற்கு முன் கிரவுட் பண்ட்டில் பல படங்கள் வந்திருந்தாலும், பெரியளவில் வெற்றிப் பெற்ற படம் என்றால் ”லூசியா” தான்.

கனவுக்கும், நிஜத்திற்கும் இடையே மாட்டிதவக்கும் சராசரி மனிதனின் கதை தான். நிஜத்தில் சந்தித்த மனிதர்கள் தான் கனவிலும் வருகிறார்கள். நிஜத்தில் எப்படியெல்லாம் அவர்கள் தன்னுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தானோ, கனவில் அப்படி நடந்துக் கொள்கிறார்கள்.ஒரு கட்டத்தில் கனவு நிஜத்தை வெல்லும் போது, இயல்பு வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் கனவிலே வாழ்ந்துவிடலாம் என்று முடிவெடுக்கிறான் நாயகன். அதில் இருந்து மீண்டு வந்தானா இல்லையா என்பது தான் கதை.

இரண்டு கதையிலும் நாயகன் ஒருவன் என்றாலும், இரண்டு பேரின் வாழ்க்கையும் நேர் எதிர்.

எல்லோருக்கும் வாழ விரும்பிய வாழ்க்கை ஒன்று இருக்கும். அதில் வாழ்ந்து பார்க்க வேண்டும் ஆசை இருக்கும். ஆனால், இயல்பு வாழ்க்கையை மாற்றிக் கொண்டு பிடித்தது போல் மாற்றி அமைத்துக் கொள்ளத் எல்லோராலும் முடிவதில்லை.

நம்முடைய சராசரி வாழ்க்கை அடுத்தவனுக்கு மிகப் பெரியதாக இருக்கும். அந்த சராசரி வாழ்க்கையை நமக்கு கீழ் இருப்பவன் மட்டுமல்ல, நமக்கு மேல் வசதியாக இருப்பவனும் விரும்புகிறான் என்பதை இந்தப் படம் உணர்த்துகிறது.

தமிழில் சித்தார்த் இரண்டு பாத்திரத்தில் நடிக்க தன்னை அதிகம் மாற்றிக் கொண்டு இருக்கிறார் என்பது புகைப்படத்தில் தெரிகிறது. இயக்குனர் அத்தோடு நிறுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும்.

கொஞ்சம் மாற்றினாலும் குழம்பிவிடக் கூடிய திரைக்கதை அது. மிக நேர்த்தியாக கன்னடத்தில் கையாண்டு இருப்பார்கள். தமிழில் அப்படியே இருந்தால் போதும். கன்னடப் படத்தில் இருக்கும் திரைக்கதை தமிழுக்கு மாற்ற வேண்டும் என்று நினைத்து அதி புத்திசாலித்தனத்தை காட்டக் கூடாது. (நாம சொன்னா கேக்கவா போறாங்க).

கன்னடத்தில் அதிகம் என்னை கவர்ந்ததால் “எனக்குள் ஒருவன்” படத்தை தமிழில் மிகவும் எதிர்ப்பார்க்கிறேன். வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

Thursday, September 11, 2014

மருத்துவரும், மெக்கானிக்கும் !

என் இரு சக்கர வாகனத்தை சரி செய்ய மெக்கானிக்கிடம் கொடுக்கிறேன். புது இன்ஜின் மாற்ற வேண்டும் என்று நான்காயிரம் கேட்கிறான். நானும் பணம் கொடுக்கிறேன். புது இன்ஜின் பொருத்திய பிறகு வண்டி ஓடவில்லை.

“சார் ! வண்டியை எடைக்கும் போட வேண்டும். எதுக்கும் பயன்படாது” என்கிறான்.

அதன் பிறகு, புது இன்ஜினை அவன் திரும்பக் கொடுக்க வேண்டும். அல்லது நான் கொடுத்தப் பணத்தை திரும்ப தர வேண்டும். அது தான் நியாயம்.

இன்ஜின் தராமல், பணத்தையும் தராமல் உனக்காக வேலை செய்ததற்கு எனக்கு கூலி என்று சொல்லி பணம் தராமல் இருப்பது எப்படி சரியாகும் ?

இதே சூழ்நிலை தான் மருத்துவமனையில் நடக்கிறது.

உடல்நலம் பெற்று சரியான அவர்களிடம் பணத்தை பெருவதில் நியாயம் இருக்கிறது. குணப்படுத்த முடியாமல் ஒரு நோயாளி இறந்துவிட்டால், அவர்களிடம் பணத்தை பெற்றது எப்படி சரியாகும் ?

இரு சக்கர வாகனும், மனிதனும் ஒன்றா என்ற கேள்விகள் இங்கு வேண்டாம். மருத்துவரும், மெக்கானிக்கும் கொடுக்கும் சேவை ஒன்று தான்.

ஓடாத வண்டியை மெக்கானிக் ஓட வைக்கிறார். நோயுள்ள உடலை மருத்துவர் குணப்படுத்துகிறார்.

நாம் ஒரு வேலை செய்து முடிக்கிறேன் என்று சொல்லி பணத்தை வாங்கிய பிறகு, அந்த வேலை முடிக்க முடியவில்லை என்றால் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்கிறோம். இது தான் அடிப்படை நேர்மை. பெரும்பாலும் எல்லா தொழிலும் அது தான் நடக்கிறது. ( மருத்துவம் தொழிலல்ல... சேவை என்று சொல்ல வேண்டாம்.)

ஆனால், மருத்துவத்துறையில் மட்டும் ஏன் இப்படி நடப்பதில்லை.
( வழக்கறிஞர்களும் அப்படி தான் நடந்துக் கொள்கிறார்கள். இவர்களைப் பற்றி தனியாக விவாதிக்கலாம்.)

”நோயாளி இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன். ”

இந்த பழமொழி மருத்துவத்துறையில் சரியா ? மாற்றுவதில் எதாவது பிழையா ? சராசரி மனிதனாக எனக்கு இருக்கும் சந்தேகம் .

மருத்துவர்கள் சமூகத்தில் முக்கியமான அங்கத்தினர். அவர்களை சேவையை நாம் மறுக்க முடியாது. நாளைக்கே ‘நீயா நானா’ கோபிக்கோ, ஆண்டனிகோ அல்லது இந்த கேள்விகள் கேட்டும் எனக்கோ உடல் சரியில்லை என்றால் மருத்துவர்களிடம் தான் செல்ல வேண்டும்.

குணப்படுத்திவிட்டு பணம் வாங்குவது வேறு. குணப்படுத்த முடியாமல் பணம் வாங்குவது என்பது வேறு. என் அடிப்படை கேள்வி இது தான்.

Tuesday, September 9, 2014

வெள்ளை மொழி - ரேவதி

இன்றைய இணையப் புரட்சியில் ஹார்மோன்களைப் பற்றியும், உடலில் வரும் மாற்றங்களைக் குறித்தும், அதன் பாதிப்பு குறித்தும் தெரிந்துக் கொள்ளவோ, புரிந்துக் கொள்ளவோ முடிகிறது. ஆனால், 80களில் இதைப் பற்றி தெரிந்துக் கொள்ள வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட காலக்கட்டத்தில் தான் பெண் என்று உணர்ந்து பெற்றோர்களால், சகோதரர்களால் புறக்கனிக்கப்பட்டு தனக்கான அங்கிகாரத்தை தேடி அளைந்த திருநங்கை ரேவதி அம்மாவின் சுயவரலாறு தான் “வெள்ளை மொழி”.


திருநங்கைக் குறித்து வந்த “நான் வித்யா”, சு.சமுத்திரத்தின் “வாடா மல்லி” போன்ற புத்தகங்களில் தன்னை பெண் என்று உணர்ந்த தருணம் முதல் பெண்ணாக மாறும் வரை அதற்காக அவர்கள் சந்தித்த போராட்டம் நீண்டதாக இருக்கும். அதில் திருநங்கையினர் பெண்ணாக மாறிய பிறகு சந்தித்த சவால்களை அந்த இரண்டு நூல்களில் அலசப்பட்டதைவிட “வெள்ளை மொழி” யில் மிக நீண்டதாகவே கூறப்பட்டிருக்கிறது.

பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டு வட நாட்டுக்கு சென்று தனக்கு நிர்வாண ஆப்ரேஷன் செய்து கொண்டதில் இருந்து, பாலியல் தொழில், பிச்சை எடுப்பது, பெங்களூரில் வேலை, திருமணம், பெற்றோர்களுடன் சொத்துரிமை, டிரைவிங் லைசன்ஸ் பெறுவது என்று நித்தம் ஒவ்வொரு நாளும் தன் வாழ்க்கையை சந்தித்த சவால்களை ரேவதி அம்மா பதிவு செய்திருக்கிறார்.

திருநங்கையராக மாறிய பல திருநங்களுக்கு ரேவதி அம்மா வாழ்க்கை ஒரு முன் உதாரணம். அதன் பதிவே இந்த புத்தகம்.

புறக்கனிப்பு தவிர மிகப் பெரிய தண்டனை ஒரு மனிதனுக்க்கு மரணத்தால் கூட கொடுக்க முடியாது. அப்படி ஒரு தண்டனையை தங்கள் வாழ்நாள் முழுக்க திருநங்கையர்கள் அனுபவித்து வருகிறார்கள். எத்தனையோ அவமானங்களையும், கொடுமைகளையும் தாண்டி இன்று ஒரு சில திருநங்கையர்கள் மட்டுமே ஒரளவு சாதித்திருக்கிறார்கள். அவர்கள் சாதனை முழுமையடைய வேண்டும் என்றால் இன்னும் சமூகத்தில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கிகாரமும் வழங்க வேண்டும்.

ஒரு இடத்தில் வாடகைக்கு வீடு எடுப்பதில் இருந்து, இரு சக்கர வாகனத்திற்கு லைஸென்ஸ் வாங்குவது, சொத்துரிமை கேட்பது, திருமணத்திற்கு அங்கிகாரம், வேலை அங்கிகாரம் என்று எவ்வளவோ சவால்கள் அவர்களை சுற்றி இருக்கிறது. அத்தனை சவால்களை இந்த நூலில் ரேவதி அம்மா வாழ்க்கை மூலம் தெரிகிறது.

இந்த சமூகத்தில் ஒரு பெண் சந்திக்கும் பாலியல் கொடுமைகளை விட திருநங்கையர்கள் சந்திக்கும் பாலியல் கொடுமைகள் மிக அதிகம். பாலியல் தொழில் அல்லது பிச்சை எடுப்பது இந்த இரண்டு தொழிலை தவிர இந்த சமூக அவர்களுக்கு விட்டு வைக்கவில்லை.

பிச்சைப் போட்டு ஒதுங்கி செல்லும் மௌனமாக மக்கள் ஒரு புறம். இச்சைக்காக தேடி வரும் ஆண்கள் இன்னொரு புறம். இரண்டும் நடுவில் தங்களுக்கான வாழ்க்கையை தேட முடியாமல் தவிக்கின்றனர். 

முடிந்தளவில் பிச்சைப் போட்டு ஒதுங்கி செல்லும் மௌனமாக மக்கள் மனதில் இருக்கும் மனிதத்தை இதுப் போன்ற புத்தகங்கள் தட்டி எழுப்பும் நம்புவோம்.

**
வெள்ளை மொழி - ரேவதி 
அடையாளம் வெளியீடு
Rs.200 

Wednesday, September 3, 2014

சில முக்கிய புத்தகங்கள் !!

யார் தொடங்கினார் என்று தெரியவில்லை. பேஸ்புக்கில் அவரவர் பிடித்த பத்து நூல்கள் என்று பதிவிடுவதால் நானும் என் பங்கிற்கு பதிவிடுகிறேன். கண்டிப்பாக ஜான்பவான் நூல்கள் இருக்கக் கூடாது என்ற நோக்கத்துடன், நண்பர்களின் புத்தகத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று என் நினைவில் இருப்பதை குறிப்பிட்டுயிருக்கிறேன்.

 1. ஆட்டிசம் சில புரிதல்கள் - யெஸ். பாலபாரதி
எல்லா புத்தகங்களும் வாசிப்பதற்காக மட்டுமே எழுதப்பட்டதல்ல. எல்லா புத்தகங்களும் அறிவை வளர்த்துக் கொள்வதற்கு மட்டுமே தயாரிக்க பட்டதுமல்ல. அதையும் தாண்டி நம் சிந்தனையை தூண்டவும், மற்றவர் உணர்வுகளை புரிந்துக் கொள்ள உதவவும் புத்தகங்கள் வெளிவருகிறது. அந்த எண்ணத்தில் எழுதப்பட்டப் புத்தகம் தான் யெஸ்.பாலபாரதி எழுதிய "ஆட்டிசம் சில புரிதல்கள்".

மேலும் இந்த நூல் குறித்து நான் எழுதிய முந்தைய பதிவு.

2. வில்லாதி வில்லன் – பால ஜெயராம் 
நான் எழுதிய ‘உலகை உறையவைத்த இனப்படுகொலை’ நூலுக்கு இந்த நூல் தான் உத்வேகம். இரண்டு கட்டுரைகளுக்கு இந்த நூல் தான் உதவியது. மனிதர்களை கொன்று குவித்த வில்லாதி வில்லர்களின் மிருக வரலாறு நூல் என்று சொல்லலாம்.

3. கலைவாணி : ஒரு பாலியல் தொழிலாளியின் கதை
நளினி ஜமிலாவின் புத்தகத்திற்கு போட்டியாக கிழக்கு பதிப்பகம் இந்த புத்தகத்தை வெளியிட்டுயிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நளினி ஜமிலா நூல் ஏற்படுத்திய தாக்கத்தை இந்த நூல் ஏற்ப்படுத்தவில்லை என்றாலும், அவரை விட இவர் பல துயர்களை அனுபவித்திருக்கிறார். தனது திருமணத்திற்காக அக்காவின் கணவன் சம்மதம் பெருவதில் தொடங்கி தன் குழந்தைகளை காப்பாற்றும் வரை இந்த தொழிலில் இருந்து ஒரு பெண்ணால் மீண்டு வர முடியாத துயரமாக இருக்கிறது. ”தேவுடியா” என்ற வார்த்தையை யார் கெட்ட வார்த்தை என்று கூறினார்கள் என்ற கேள்வி இந்த புத்தகம் முடிக்கும் போது தோன்றியது.

4. நான் வித்யா - Living Smile Vidya 
திருநங்கை எழுதிய முதல் புத்தகம். தட்ஸ்தமிழில் இந்த நூலைப்பற்றிய அறிவிப்பு வந்ததுமே புத்தகக் கண்காட்சியில் முதல் சென்று வாங்கிய புத்தகம். ஆண் உடலில் வாழும் பெண்ணுக்கு ஏற்ப்படும் அவமானங்கள், சலனங்கள், போராட்டங்கள் என்று இந்தப் புத்தகம் உணர்த்துகிறது. சு.சமுத்திரத்தின் “வாடா மல்லி”, ரேவதி அம்மாவின் “வெள்ளை மொழி” நூல்களை விட திருநங்கைப் பற்றிய இந்த நூல் தான் என்னை அதிகம் ஈர்த்தது.

5. பணம் - கே.ஆர்.பி. செந்தில் 
வேலைக்காக போலி பாஸ்போர்ட்டில் வெளிநாட்டுக்கு செல்லும் இளைஞர்களை பற்றியும், அவர்கள் அங்கு படும் துயரத்தை பற்றிய புத்தகம். கட்டுரை நூல் தான். ஆனால், நாவலா ? ஆட்டோ பிக்ஷனா ? என்று பல சந்தேகத்தை இந்த நூல் கிளப்புகிறது. பணத்தை தேடிச் செலும் மனிதர்களை பற்றிய கட்டுரையாக எழுதுவதற்கு பதிலாக நாவலாக எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இந்த நூலைப் பற்றி முன்பு எழுதிய பதிவு. 

6. பிணம் தின்னும் தேசம் – சு.சண்முகசுந்தரம் 
2012ல் நாட்களாக கவிதை நூல் வாசிக்காமல் இருந்த என்னை மீண்டும் கவிதை பக்கம் இழுத்து வந்து, அந்த நூலை பதிப்பிக்கும் அளவிற்கு மாற்றிய கவிதை நூல் இது. ஈழத்தை வைத்து எத்தனையோ கவிதை நூல்கள் வந்திருக்கிறது. அதில், கண்டிப்பாக இந்த நூல் முக்கியமானது என்று சொல்லலாம்.

7. சினிமா ரசனை - Amshan Kumar
 சினிமா பிரியர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம். ஒவ்வொரு க்ளாசிக் உலக சினிமாவை விமர்சிப்பதோடு இல்லாமல் சினிமாவை எப்படி ரசிக்க வேண்டும் என்பதை இந்த புத்தகம் விளக்குகிறது.

8. அழிக்கப்பிறந்தவன் - Yuva Krishna 
பர்மா பஜாரில் நடக்கும் திருட்டு விசிடியை வைத்து மையமாக எழுதிய நாவல். லாஜிக் இடையூறு கொஞ்சம் இருந்தாலும், விறு விறுப்பான எழுத்து நடைக்காக வாசிக்கலாம். இந்த நாவலை எழுத்தாளர் அனுமதியின்றி ஒரு பாடலாசிரியர் திரைப்படமாக்கி வருகிறார் என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது.

9. 6174 - Sudhakar Kasturi
ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை விறு விறுப்பு. கடைசியில் ஆங்கிலப் பட பாணியில் இரண்டாம் பாகத்திற்கு ஒரு நாட் வைத்து முடித்திருப்பது க்ளாஸ்.

இந்த புத்தகத்தைப் பற்றி முன்பு நான் எழுதிய பதிவு. 

10. ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள் 
ஹிட்லரின் மரண முகாமில் மாட்டி தவித்த பதினான்கு வயது சிறுமியின் இரண்டு வருட அனுபவ குறிப்புகள். பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல். யூத இனப்படுகொலையின் போது பல உயிர்களோடு உணர்வுகளும் சேர்ந்து புதைக்கப்பட்டிருக்கிறது. அதில் இந்த சிறுமியின் உணர்வுகளும் ஒன்று.


கலைவாணி : ஒரு பாலியல் தொழிலாளியின் கதை, நான் வித்யா, பணம் - out of print
சினிமா ரசனை, 6174 - out of stcok

மேல் குறிப்பிட்ட மற்ற புத்தகங்களை www.wecanshopping.com வாங்கலாம்.

Monday, September 1, 2014

ஒரு சாமானியனின் நினைவுகள் - க.இராசாராம்

தமிழக அரசியல் பற்றி அறிந்து கொள்ள அரியதோர் புத்தகம்.

க.இராசாராம் சட்டசபை சபாநாயகராகவும், அமைச்சராகவும் இருந்தவர். தி.மு.க.வில் இருந்தாலும், அ.தி.மு.க.வில் இருந்தாலும் காங்கிரஸ் உள்பட எல்லா கட்சிகளிலும் அவருக்கு நண்பர்கள் உண்டு. இதை தான் தனது பல கட்டுரையில் வாசகர்களுக்கு உணர்த்த நினைக்கிறார். அதுவே புத்தகத்தின் மீது ஒன்ற முடியாமல் போகிறது.


ஒரு சில முக்கியமான அரசியல் நிகழ்ச்சிகளை வேறு ஒரு கண்ணோட்டத்தில் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் இருந்த போது அவருக்கு சீட்டு கொடுக்கக் கூடாது என்ற அதிமுக கட்சிக்குள் எழுந்த சர்ச்சை புதிதாக இருக்கிறது. அதை கூறியவர் ஆர்.எம்.வீரப்பன் என்று சொல்லுவது நம்பமுடியவில்லை.

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு கட்சிக்குள் நடந்த குழப்பங்களில் ஆர்.எம்.வீரப்பன் பங்கு இருப்பதாகக் கூறுகிறார். அதே சமயம் ஜெயலலிதாவையும் விமர்சிக்கிறார்.

பல இடங்களில் தனது சுயப்புராணத்தை சொல்லும் போது நினைவலைகள் என்று சொல்லுவதை விட நாட்குறிப்புகள் என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது.

தகவலுக்காக இந்த நூலை வாசிக்கலாம். !!

**
ஒரு சாமானியனின் நினைவுகள் 
நக்கீரன் வெளியீடு.
ரூ.250

LinkWithin

Related Posts with Thumbnails