வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, December 26, 2014

பிசாசு - விமர்சனம்

தமிழ் சினிமாவில் பேய்களை வைத்து பயமுறுத்தவும், சமிபக்காலமாக சிரிக்க வைக்கவும் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். மிஷ்கின் பேய்யை உணர்வு புர்வமாக காட்டியிருக்கிறார். 



பேய் முகத்தை முழுமையாக காட்டிவிடும் போல் இருக்கிறது. ஆனால், நாயகன் நாகா தன் முகத்தை தலைமூடியால் மறைத்து கொண்டு வருகிறார். தன் கண்முன் உயிருக்காக போராடும் பெண்ணை காப்பாற்ற முடியாமல் போகும் போது ஏற்படும் குற்றவுணர்வை பாதி முகத்தில் தெரிகிறது. 

ராதா ரவி சில காட்சிகளே வந்தாலும் ’நடிகவேள்’ வாரிசு என்பதை காட்டியிருக்கிறார். அவர் மகளை நினைத்து அழும் காட்சி கண் களங்காமல் இருக்க முடியாது. ஒரு தந்தையின் சோகத்தை கண் முன் கொண்டு வந்து காட்டியிருக்கிறார். 

முன்பின் தெரியாத சிறுவனுக்கு உதவுவது (நந்தலாலா), முன்பின் தெரியாதவன் உயிருக்காக போராடும் போது காப்பாற்றுவது (ஓநாயும் ஆட்டுக்குட்டியும்)... இந்த படத்தில் முன்பின் தெரியாத ஒரு பெண்ணின் மரணத்திற்காக வருந்துவது என்று இன்னும் மனிதத் தன்மை மண்ணில் இருப்பதை, மிஷ்கின் தனது படங்களில் காட்டிவருவது பாராட்டுக்குறியது. 

படத்தில் பேய் வரும் காட்சிகள் குறைவாக இருக்கலாம். மற்ற படங்களை போல் பயமுறுத்தாமல் இருக்கலாம். ஆனால், சமிபத்திய தமிழ் படங்களில் ‘பிசாசு’ முக்கியமானது என்பதை மறுக்க முடியாது. 

Dont miss to watch.

Monday, December 22, 2014

லிங்கா - சிறு விமர்சனம்

எல்லோரும் ரஜினிக்கு வயதாகிவிட்டதாக கூறுகிறார்கள். எனக்கு என்னவோ கே.எஸ்.ரவிகுமாருக்கும், ஏ.ஆர்.ரகுமானுக்கும் தான் வயதாகிவிட்டது என்று நினைக்கிறேன்.



கே.எஸ்.ரவிகுமார் தனது திரை வாழ்க்கையில் இவ்வளவு சோர்வான திரைக்கதை அமைத்திருக்கமாட்டார். ஏ.ஆர்.ரகுமானும் இவ்வளவு மோசமான இசையை எந்த படத்திலும் கொடுத்ததில்லை. ஒரு பாடல் கூட மனதில் பதியவில்லை. 

ரஜினியின் மோசமாக தோல்வியடைந்த கொடிப் பறக்குது, பாபா படத்தில் கூட நகைச்சுவை காட்சி ஒரளவுக்கு நன்றாக இருக்கும். இந்த படத்தில் அது கூட இல்லை. சந்தானம் ரஜினியை பார்த்து “நண்பேன்டா” கூட சொல்லக் முடியவில்லை. அவரை கலாய்க்கவும் யோசிக்கிறார். 

Better Luck next time for Rajini fans !!!

Friday, December 19, 2014

எம்.ஜி.ஆர் பேட்டிகள்

”உங்களை தாக்கி எழுதும் தமிழ்வாணனை பற்றி தங்கள் கருத்தென்ன ? வல்லவர், திறமையானவர், வியாபார ரகசியம் தெரிந்தவர் ! 

அரசியல் கேள்விகளுக்கு நகைச்சுவையாக பதில் கூறுவது கலைஞரின் சொத்தல்ல. திராவிடக் கழகத்தின் சொத்து என்பதை இந்த நூல் நிருபிக்கிறது. பல கேள்விகளுக்கு எம்.ஜி.ஆர் கூறியிருக்கும் பதில் மிக சிறப்பானது. 



தமிழக அரசியல் வரலாற்றிலும், சினிமாவிலும் மறக்க முடியாதவர் எம்.ஜி.ஆர் அவர்கள். இன்றைக்கு ஒரு படம் ஓடிவிட்டால், அரசியலில் சாதித்துவிடலாம் என்று பலருக்கு நம்பிக்கை வளர்த்தவர் எம்.ஜி.ஆர். எந்த வயதானாலும் மீண்டும் கதாநாயகன் வாய்ப்பு கிடைத்துவிட்டால் சினிமாவில் பெரிய இடத்துக்கு செல்லலாம் என்ற தன்னம்பிக்கை ஊட்டுவது எம்.ஜி.ஆரின் சினிமா வாழ்க்கை. 

தன்னம்பிக்கை என்பதன் பொருள் என்ன ?
தான் கையாலாகாதவன் என்று உணர்வது. 

முயற்சி இல்லாமல் கிடைப்பது எது ?
மரணம். 

கண்ணதாசன் பாணியில் தத்துவ நிறைந்த பதில்களை அளித்திருக்கிறார். 

அரசியலில் மாணவர்கள் ஈடுப்படக் கூடாது என்பதற்கு கூறும் விளக்கம், கலைஞரை நகைச்சுவையாக தாக்குவது, மத்திய அரசை ஆதரிப்பது, பச்சைக்குத்தி கொள்வதற்கு எம்.ஜி.ஆர் மீது சுமத்தப்பட்ட விமர்சனத்திற்கு கூறும் விளக்கம், ஜெயலலிதாவுடன் இருந்த நட்பு, சிவாஜியுடன் இருக்கும் போட்டி என்று தமிழக அரசியல் வரவாற்றில் எம்.ஜி.ஆரின் பதில் மிக முக்கியமானது. 

கேள்வி – பதில் இவ்வளவு ஸ்வரஸ்யமாக நான் படித்ததில்லை. சுஜாதாவின் “கற்றதும் பெற்றதும்” நூல் போல், இந்த கேள்வி – பதில் நூலும் ஸ்வரஸ்யமாக இருக்கிறது. ஆனால், ஒரே வித்தியாசம்,சுஜாதாவின் பதில்கள் அறிவு சார்ந்தது. எம்.ஜி.ஆர் பதில்கள் அரசியல் சார்ந்தது. 

முதல் இரண்டு பதிப்பை ஆழி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதற்கடுத்து மூன்று பதிப்புகளை தொகுப்பாசிரியரே வெளியிட்டிருக்கிறார். சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த புத்தக கண்ணில் பட்டால் அவசியம் வாங்குகள். 

** 
Manomani Pathippagam 
201 – P, S.S.K. Nagar, 5th Street, 
( near Railway Station) 
Kanchipuram – 631502 
Ph: 8754496134 / 9790576470

Wednesday, December 10, 2014

விவேகானந்தர்: இந்திய மறுமலர்ச்சி நாயகன்

இந்தியாவில் சாம்ராட் அசோகன், சத்திரபதி சிவாஜி, முகலாயர் மன்னர்கள் என்று நம்மை ஆண்ட மன்னர்களின் பட்டியல் எடுத்தால் நீண்டுக் கொண்டே போகும். அவர்களின் வீரமும், சாகசமும் உண்மையாகவும், சிலது கற்பனை கலந்து சொல்லப்படுகிறது. நாட்டை ஆண்டவர்கள் தான் சரித்திர நாயகர்களாக திகழந்து இருக்கிறார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டும் நாட்டை ஆளாமல் மக்கள் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். 

பல மகாராஜா போர், நிர்வாகம், அரசியல் திறன், நீதி என்று போன்ற பல விஷயங்களில் கவனம் செலுத்தி எடுத்த பெயரை அந்த ஒரு சிலர் தனிமனிதனாக எப்படி எடுக்க முடிந்தது என்ற பிரம்மிப்பதை எற்படுத்துகிறார்கள். மன்னர்களுக்கும், அந்த ஒரு சிலருக்கும் உள்ள ஒரே வித்தியாசம். மன்னர்கள் நாட்டை ஆண்டார்கள். அந்த ஒரு சிலர் தன்னை தானே ஆண்டார்கள். 

தனக்கென்ற ஒரு நீதி, ஒரு கொள்கை, ஒரு கட்டுப்பாடு வைத்துக் கொண்டு மன்னர்களுக்கு நிகராக பெயர் எடுத்திருக்கிறார்கள். அந்த கட்டுப்பாடு, நீதியை மற்றவர்களுக்கு சொல்லி ஏற்க வைத்திருக்கிறார்கள். தெனாலிராமன், பீர்பால் போன்ற புத்திக்கூர்மையாளர்கள், புத்தகர், மகாவீர் என்று மன்னர்கள் அல்லாதவர்கள் சரித்திர புருஷர்களாக இருந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் மிக முக்கியமானவர் ஒருவர் தான் விவேகாந்தர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராகவும் விளங்கினார். 



’நரேந்திரநாத் தத்தா’ என்ற இயற்பெயர் கொண்ட இவர் இராமகிருஷ்ண பரமஹம்சரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவரது சீடரானார். 1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும், இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். அவர்களின் விவேகானந்தர் முதல்மையாக திகழ்ந்தார். 

இவரின் ஆன்மீக கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வதாக அமைந்துள்ளன. இந்தியாவில் மட்டுமல்லாமல் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு, இவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது. 

1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். அன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் இன்று உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது. 

ஒரு முறை, மன்னர் ஒருவர் விவேகானந்தரிடம் எனக்கு உருவ வழிப்பாட்டில் நம்பிக்கையில்லை என்கிறார். கல்லையும், மண்ணையும், மரத்தையும் கடவுளாக எண்ணி வழிபட முடியாது என்கிறார். அப்போது, விவேகானந்தர் மன்னரின் திவானிடம் மன்னரின் புகைப்படத்தை பார்த்து துப்பச் சொல்கிறார். திவான் துப்ப யோசிக்க, விவேகானந்தர் மன்னரிடன் “திவான் அவர்கள் அந்த புகைப்படத்தில் மன்னர் முகம் பொருந்திய படமாக பார்க்கவில்லை. மன்னரை பார்க்கிறார். அதனால், அவர் துப்ப யோசிக்கிறார். நீங்கள் கல், மண் என்று சொல்லுவது மற்றவர்கள் அதில் கடவுள் இருப்பதாகப் பார்க்கிறார்கள்” என்று விளக்கமளித்தார். 

அதேப் போல் உலகின் மிக பெரிய பணக்காரரான ராக்பெல்லர் ஒரே ஒரு நன்கொடை வழங்கியிருக்கிறார். அது விவேகானந்தரின் உரைக் கேட்டப் பின்பு வழங்கியிருக்கிறார் !! 

விவேகானந்தர் பற்றிய வரலாறு, சொற்பொழிவு என்று அத்தனை குறிப்புகளும் நமக்கு எளிதாக கிடைக்கிறது. ஆனால், இந்த புத்தகத்தில் அதையும் தாண்டி ஒரு கூடுதல் சிறப்பு ஒன்று இருக்கிறது. இதில் அவரின் வரலாற்று மட்டுமல்லாமல், வெளிநாட்டில் சொற்பொழிவு மேற்கொள்ளும் போது கிறிஸ்துவ பாதரியார்களால் எதிர்க் கொண்ட எதிர்ப்புகளை சொல்கிறது. விவேகானந்தரை மதம் மாற்றம் செய்ய நடந்த முயற்சியையும் சொல்கிறது. 

இந்துக்கள் பெரும்பான்மை கொண்ட இந்தியாவில் இந்து மத கொள்கை, ஆன்மீக சொற்பொழிவு நடத்துவது போன்ற விஷயங்கள் பெரிய சவால் இல்லை. ஆனால், அந்நிய நாட்டில் மற்ற மதத்தினர் முன்பு இந்து மத சொற்பொழிவு ஆற்றுவது என்பது மிகப் பெரிய சவால். கோபப்படுத்துவதற்கும், பகடி செய்வதற்கும் பல கேள்விகள் கேட்கப்படும். அவர்களிடம் கோபப்படாமல் பொறுமையாக பதிலளிக்க வேண்டும். அளிக்கும் பதில் பிரமிப்பு ஏற்படுத்த வேண்டும். 

இன்று வணிக நோக்கத்துடன் எத்தனையோ பேர் வெளிநாடுகளில் சொற்பொழிவு செய்கிறார்கள். தங்களை வளர்த்துக் கொள்வதில் பிரதான நோக்கத்துடன் செயல் படுகிறார்கள். ஆனால், எந்த விதப் பிரதிபலன் பார்க்காமல், தனது மதக் கொள்கையை பரப்ப வேண்டும் என்று விவேகானந்தரை போல் யார் செய ல்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். 

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாசித்த கிழக்கு பதிப்பகத்தின் எழுத்து நடையும், இப்போது வரும் புத்தகத்தின் எழுத்து நடையும் பல வித்தியாசங்கள் தெரிகிறது. முன்பு கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களில் குறிப்பாக வாழ்க்கை வரலாறு நூல்கள் வாசிக்க மிக எளிமையாக இருக்கும். நாவல், கதை படிப்பது போன்ற உணர்வு இருக்கும். ஆனால், சமிபத்திய நூல்கள் வடிவமைப்பு பாடப்புத்தக படிப்பதை போன்ற சோர்வு ஏற்படுகிறது. இந்த நூலிலும் பார்க்க முடிகிறது. 

பல சமயம், காவியை வெளிப்படையாக விமர்சிக்கும் அளவிற்கு, நாம் வெள்ளை அங்கியை விமர்சிக்கவில்லை என்ற குற்றவுணர்வு இந்த நூல் படித்து முடிக்கும் போது ஏற்படுத்துகிறது.


***
விவேகானந்தர்: இந்திய மறுமலர்ச்சி நாயகன்
ரஞ்சனி நாராயணன்
கிழக்கு பதிப்பகம், ரூ 150

Monday, December 1, 2014

காவியத் தலைவன் (திரை விமர்சனம்)

வெள்ளையர் காலத்தில் மேடை நாடக கலைஞர்கள் பற்றிய கதை. ‘அங்காடி தெரு’ போல் மிக அற்புதமான கதைக் களன். 

நாடகக் கலைஞர்கள் சந்தித்த சவால், நாடகக் கலைஞர்களுக்கு கொடுக்கும் பயிற்சி, அவர்களின் நடிப்பு திறன், பயாஸ்கோப் (சினிமா) வரவால் அவர்களுக்கு ஏற்ப்பட்ட பாதிப்பு, பாலியல் தொல்லை என்று பல விஷயங்களில் எதை சொல்லப் போகிறார் என்று யோசித்துக் கொண்டு படம் பார்த்தால் மிகுந்த ஏமாற்றம் தான். வழக்கமான முக்கோண காதல் கதையும், இரண்டு பேர்களுக்குள் இருக்கும் ஈகோ பிரச்சனை தான் கதை. இந்த கதைக்கு எதற்கு அந்த காலத்து நாடக் குழு பின்னனியில் படம் எடுத்தார் என்று தான் புரியவில்லை. 

படத்தின் தயாரிப்பாளர் சித்தார்த் என்பதால் இவ்வளவு பலமான பாத்திரத்தை அவர் ஏற்று நடித்திருக்க வேண்டாம். தன்னுடைய அதிகப்பட்ச நடிப்பை அவர் வெளிப்படுத்திருக்கலாம். அந்த பாத்திரம் அதை விட அதிகமாக நடிக்க வேண்டும். சித்தார்த் நடிப்பில் இன்னும் பல மைல் தூரம் போக வேண்டியது இருக்கிறது என்பதை அவருக்கு யாராவது புரிய வைத்தால் நல்லது.

பிரித்விராஜ் நன்றாக நடித்திருந்தாலும், பல இடங்களில் மலையாள வாடை அடிப்பது அவரால் தவிர்க்க முடியவில்லை. 



வேதிகா பாத்திரம் கே.பி.சுந்தரம்மாள் பாதிப்பில் உருவானது என்று இணையத்தில் படிக்க செய்தி கிடைக்கிறது. கே.பி.சுந்தரம்மாள் கிட்டப்பாவுக்கு இரண்டாவது மனைவி, கிட்டப்பா அதிகம் மது அருந்துபவர் போன்ற தகவல் தவிர வேறு எந்த பாதிப்பும் இந்த படத்தில் தெரியவில்லை. 

அந்த காலத்தில் ஒரு பெண் ஷீரிப்பார்டை வேஷம் அணிவது என்பது மிகப் பெரிய விஷயம். அப்படி ஷீரிப்பார்ட்டை அணிந்து நடிக்கும் பெண்களை பல ஜமிந்தார்கள் தவறாக பார்த்தார்கள். தங்கள் இச்சைக்கு இணங்க வைக்க நாடகம் நடத்துபவர்களுக்கு தொல்லை கொடுத்தார்கள். (ஷீரிப்பார்ட்டை வேடம் அணியும் ஆண்களுக்கும் இந்த பிரச்சனை உண்டு). [ உபயம் – எம்.ஆர்.ராதாவின் சிறை சிந்தனைகள் நூல்] 

இதனாலையே பெண்ணை நடிக்க வைக்க பல நாடகக் குழு பெண்ணை சேர்த்துக் கொள்வதில் தயக்கம் காட்டினர். இதை எல்லாம் எதிர்த்து தான் ஒரு பெண் மேடையில் நடிக்க வேண்டியது இருக்கும். சர்வ சாதாரணமாக ஒரு பெண் ஷீரிப்பாட்டை ஏற்று நடிப்பதை காட்டியிருக்கிறார். புராண நாடகங்களின் வீழ்ச்சி சுதேசி நாடகம் மட்டுமல்ல, அன்றைய சினிமா ஆரம்பக் காலத்தில் புராண நாடகங்கள் பயஸ்கோப் படங்களாக சென்றுக் கொண்டு இருந்தது. அதனால், சமூகக் கதைகள் நாடகத்தை பார்க்க மக்கள் ஆர்வம் காட்டினர். 

மேடை நாடக பின்னனி கதை என்று இருக்கும் போது, அந்த காலத்தின் மேடைக் கலைஞர்களை பயன்படுத்தியிருக்கலாம். அல்லது ஆலோசனையாவது கேட்டு இருக்கலாம். வி.எஸ்.ராகவன், ஔவை நடராஜன், டி.கே. சண்முகத்தின் வாரிசான கலைவாணன், சகஸ்ரநாமமின் மகன் என்று அந்தக் கால மேடை நாடக கலைஞர்கள் பலர் இருக்கிறார்கள்.

நாசர் தவிர்த்து படத்தில் திறமையான நடிகர்களை வசந்த பாலன் சேர்க்காமல் விட்டுவிட்டார் என்று தான் தோன்றுகிறது. பிரகாஷ் ராஜ், ஜெய்பிரகாஷ் போன்ற நடிகர்களை இந்த கதைக்கு அருமையாக பயன்படுத்தியிருக்கலாம். 

எல்லாவற்றிருக்கும் மேலாக ஏ.ஆர்.ரகுமானின் மேற்கித்திய இசை. பாடல்கள் தனியாக கேட்கும் போது நன்றாக தான் இருக்கிறது. ஆனால், Period படம் என்கிற போது அந்த காலத்து தியாகராஜ பாகவதர் பாடல் பாணியில் இசை அமைத்திருக்க வேண்டும். அப்படி ஒரு பாடல்கள் கூட இல்லை. [‘இருவர்’ படத்திலேயே ஏ.ஆருக்கு பிரியர்ட் படம் வராது என்பது புரிந்திரிந்துவிட்டது. அந்த படத்தின் பாடலை வைரமுத்து ஒரளவுக்கு காப்பாற்றினார். இந்த படத்தை அப்படி காப்பாற்ற யாருமில்லை. ]

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் இயக்குனர்களின் வசந்த பாலன் பெயர் கண்டிப்பாக இருக்கும். அதற்காக அவர் மேற்கொண்ட இந்த முயற்சியை பாராட்டலாம். நல்ல கதை களனை தேர்வு செய்ததற்காக வாழ்த்தலாம். ஆனால், பழக்கப்பட்ட கதையை தேர்வு செய்ததில் சறுக்கலை சந்திக்கிறார். அதை விட மிகப் பெரிய சறுக்கல் ஏ.ஆர்.ரகுமான், சித்தார்த்தை தேர்வு செய்தது.

Wednesday, November 26, 2014

Mitr, My friend

49வது தேசிய விருது விழங்கும் விழாவில் சோபனாவுக்கு சிறந்த நடிகை விருதும், சிறந்த ஆங்கிலப்படத்திற்கான தேசிய விருதும் பெற்றப்படம்.

லஷ்மி பிரித்வியை மணந்துக் கொண்டு இந்தியாவில் இருந்து கலிப்போர்னியாவில் குடி புகுகிறாள். அவர்களுக்கு மகள் பிறக்கிறது. அங்கையே வளர்வதால், லஷ்மியின் பருவ வயதில் மகள் திவ்யா வெளிநாட்டு கலாச்சாரத்தில் இருக்கிறாள். அம்மா லஷ்மியால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. மகளுக்கும், அம்மாவுக்கும் நடக்கும் சண்டையில் அப்பா பிரித்வி புரிந்துக் கொண்டாலும், மனைவியின் உணர்வுக்கு அதிகம் மதிப்பு கொடுப்பதில்லை.


பல நாள் தனிமையில் இருக்கும் லஷ்மி இண்டர்நெட் சாட்டிங்யில் ஒருவரின் நட்பு கிடைக்கிறது. முகம் தெரியாத நபரோடு தனது மனக்கவலையை பகிர்கிறாள். பக்கத்து வீட்டில் குடிவந்திருக்கும் சிறுவனும், அவனது அண்ணன் ஸ்டிவ்வும் அவ்வப்போது பேசுகிறாள். ஒரு நாள் திவ்யா தனது ஆண் நண்பனை முத்தமிடுவதை பார்த்த லஷ்மி, அவளை அரைகிறாள். கோபத்தில் திவ்யா வீட்டை விட்டு செல்கிறாள். இதனால், பிரித்விக்கும், லஷ்மிக்கும் உள்ள இடைவேளை இன்னும் அதிகமாகிறது.

தனது தனிமையைப் போக்க இண்டர்நெட் நண்பன் சொன்னது போல் தனக்கு பிடித்த வேலையில் கனவம் செலுத்துகிறாள். மனைவி, அம்மா ஆனப் பிறகு தான் செய்ய மறந்ததையை எல்லாம் செய்து பார்க்கிறாள். தனது மனைவி மாற்றத்தை புரிந்துக் கொண்ட பிரித்வி அவளை சந்தேகப்படுகிறான். கோபத்தில் வேலை விஷயமாக வெளியூர் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு செல்கிறான்.

கணவன் வீட்டில் இல்லை. மகள் புரிந்துக் கொள்ளாமல் விட்டு சென்றுவிட்டாள். தனிமையில் வாடும் ஒரு நடுத்தர வயது பெண்ணின் சோகம், அதை எதிர்க்கொள்ளும் திறன் தான் படம்.

படம் வந்து பத்து வருடங்கள் மேலாகிறது. இன்றைய இணையப் புரட்சியில் ஏறக்குறைய கணவன் – மனைவி உறவு மட்டுமல்லாமல் பல உறவுகள் இணையத்தில் மட்டுமே வாழ்கிறது என்பதை இந்த படம் உணர்த்துகிறது. இணையத்தில் பிடித்தது கேட்கும் நாம் நேரில் பழகும் போது கேட்பதில்லை. விசாரிப்பதும் இல்லை. இணையம் / மோபைல் என்ற ‘Virtual’ உலகத்திற்கு நாம் பலகிவிட்டோம் என்பதை பல சம்பவங்கள் உணர்த்துகிறது.

கதையின் ஒரு வரி எடுத்துக் கொண்டால் English Vinglish படத்திற்கும் Mitr, my friend படத்திற்கும் எந்த வித்தியாசம் இல்லை. கணவன், மகளிடம் அங்கிகாரம் தேட நினைக்கும் குடும்பப் பெண்ணின் மனப் போராட்டம் தான் கதை. ஆனால், Mitr,My friend படத்தை இயக்கிய ரேவதி நேர்க்கோட்டில் கதையை சொல்லியிருக்கிறார். ஆனால், English Vinglish படத்தில் கமர்ஷியலாக ஆங்கிலம் பேச தெரியாத அம்மா பாத்திரத்தில் நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார்.

இந்தப்படத்தில் 'நடிகை 'ரேவதி இயக்குனர் அவதாரம் எடுத்தார். முதல் படத்திலேயே இரண்டு தேசிய விருது கிடைத்தது. ஆனால், அதன் பிறகு ரேவதி என்ற இயக்குனரை பார்க்க முடியவில்லை.

பெண் இயக்குனர்கள் சினிமாவில் தொடர்ந்து 'இயக்குனராக' ஏன் செயல்ப்பட முடியவில்லை என்ற கேள்வி எழுந்துக் கொண்டே இருக்கிறது.

Wednesday, November 19, 2014

சினிமா 1913 -2013 : 10. மறக்க முடியாத நகைச்சுவை கலைஞர்கள் (1930-50)

காலையில் ஒரு சிலர் பூங்காவில் வாய்விட்டு சிரித்து பயிற்சி எடுப்பதை பார்த்து வருகிறோம். பொருள் தேடும் வாழ்க்கையில் பலர் முகத்தில் சிரிப்பு எப்படி இருக்கும் என்பதை அவர்களே மறந்துவிட்டார்கள். உடம்பில் இருக்கும் அத்தனை உறுப்புகளும் இயல்பாய் இயங்க இப்போது செய்ற்கை சிரிப்பு தேவைப்படுகிறது.

சிரிப்பு. நமக்கும், மிருகத்துக்கும் உள்ள வேறு. 

என்.எஸ்.கிருஷ்ணன் 

’சிரிப்பு என்பது வியாதிகளை விரட்டும் மருந்து’ என்று மருத்துவர்கள் சொல்லும் முன்பே, மக்களுக்கு புரிய வைத்தவர் கலைவாணர் என்.எஸ்.கே அவர்கள். 

1935ல் மேனகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். 1936ல் ‘சதிலீலாவதி’, ‘வசந்தசேனா’ போன்ற படங்களில் நடிக்கும்போதே மதுரம் அம்மாவை திருமணம் செய்துக் கொண்டார். 

கலைவாணர் முற்போக்கு சிந்தனைகள் உடையவர். தனது படங்களிலும் தனது கருத்துக்களை நகைச்சுவையாக சொல்லி மக்களை சிரிக்க வைத்தவர். இன்று பல நகைச்சுவை நடிகர் கையாலும் கிண்டலும், கேலியும் கலைவாணர் வகுத்துக் கொடுத்த பாதையில் பயணம் செய்கிறார்கள்.

‘அம்பிகாபதி’ படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதருடன் முதன் முதலாக நடித்தார். அன்று தொடங்கிய அவர்களது நட்பு லட்சுமிகாந்தன் வழக்கு வரை தொடர்ந்தது. இந்த வழக்கு இரண்டு பெரும் கலைஞர்களை வாழ்க்கையிலும், நடிப்புலகத்திலும் புயலை வீசியது. 

வழக்கில் இருந்து மீண்டு வந்த கலைவாணர் நடிப்போடு படத் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார். 

1957ல் தனது 49 வயதில் இறந்தார். 



டி.ஏ.மதுரம் 

என்.எஸ்.கே – டி.கே.மதுரம் அவர்களைப் போன்ற கலை தம்பதிகள் என்று சொல்லுவதை விட எங்கும் காண முடியாத தம்பதிகள் என்று சொல்லலாம். கணவன் – மனைவி சேர்ந்து நூறுக்கு மேற்பட்ட படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். 

கணவரின் எல்லா சுகத் துக்கத்திலும் பங்கு கொண்டு இருக்கிறார். கலைவாணர் சிறையில் இருக்கும் போது அவரது நாடக சபாவை திறம்பட நிறுவாகம் செய்தார். கலைவாணர் சிறையில் இருக்கும் போது ‘பைத்தியக்காரன்’ படத்தை தயாரித்தார். 

பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட “சந்திரலேகா” படத்தில் என்.எஸ்.லே - டி.ஏ.மதுரம் நகைச்சுவை பிரமாதமாக அமைந்தது. கலைவாணர் மறைவுக்கு பிறகு ஒரு சிலப்படங்கள் நடித்தார். மே 23, 1974 காலாமானார். 

காளி என். ரத்தினம் 

கலைவாணர் காலத்தில் புகழ்ப் பெற்ற இன்னொரு நகைச்சுவை நடிகர் காளி என். ரத்தினம் அவர்கள். நடிப்பு, பேச்சு, பாட்டு பாடுவது என்று தனி திறமை வாய்ந்த அவரை ‘ரத்தின வாத்தியார்’ என்று பலராலும் அன்புடன் அழைக்கப்பட்டார். 

1936ல் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி உரிமையாளரான எஸ்.எம்.சச்சிதானந்தம் பிள்ளையின் மேற்பார்வையில் உருவான ‘பதிபக்தி’ படத்தின் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவருக்கு இரண்டு வேடங்கள் !!! 

அதைத் தொடர்ந்து சந்திரகாந்தா, ராஜமோஹன், பஞ்சாப் கேசரி, மாத்ருபூமி, போலி பஞ்சாலி, போன்ற பல படங்களில் நடித்தார். 

சந்திரகாந்தா படத்தில் “சுவாமிகளே ! யோகாப்பியாசம் செய்யலாமா?” என்று போலி சாமியார்களை சாடும்படி இரட்டை அர்த்த வசனங்களை பேசியிருக்கிறார். ஆனால், கலைவாணரைப் போல் பகுத்தறிவு, தீண்டாமை, அடிமைத் தனம் சமுக சிந்தனைகள் இவர் தனது நகைச்சுவையில் சேர்த்ததில்லை. தனது நகைச்சுவையில் கிராமிய பாணியை அதிகம் கலந்து நடித்திருக்கிறார்.


டி.ஆர்.ராமசந்திரன் 

 நாடகங்கள் நடித்தவாரே சினிமாவில் நடித்து புகழ்ப் பெற்ற நகைச்சுவை நடிகர் டி.ஆர்.ராமசந்திரன் அவர்கள். 

ஏவி.எம். செட்டியார் இயக்கிய முதல் படமான ’சபாபதி’ படத்தில் அறிமுகமானார். சபாபதியாக டி.ஆர்.ராமசந்திரனும், வேலைக்காரனாக காளி என்.ரத்தினமும் நடித்தக் காட்சிகள் அந்தக் காலத்தில் புகழ் பெற்றது. 

‘ஸ்ரீ வள்ளி’ போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். ‘வாழ்க்கை’ படம் இவரை நாயகன் அந்தஸ்த்தைப் பெற்று தந்தது. ஒரு பக்கம் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, வித்யாபதி போன்ற நாயகனாகவும், கள்வனின் காதலி, வண்ணக்கிளி போன்ற படங்களில் நகைச்சுவை பாத்திரங்களிலும் நடிப்பார். 

அஞ்சலி தேவி தயாரித்த ‘அடுத்த வீட்டு பெண்’ படத்தில் இவரும், தங்கவேலு செய்த நகைச்சுவை காட்சி இன்று எல்லா மொழிகளிலும் ரீமேக் வடிவத்தில் பலர் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

கே.சாரங்கபாணி 

அந்த காலத்தில் நகைச்சுவை கலந்த அப்பா பாத்திரத்தில் பொருந்தக் கூடிய நடிகர் கே.சாரங்கபாணி அவர்கள். எல்லா இயக்குனர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் மரியாதையுடன் பழகக் கூடிய நடிகர் என்று பெயர் எடுத்தவர்.

’வேதாள உலகம்’ படத்தில் தன்னை கொல்ல வந்த ராட்சர்களை வயிறு முழுக்க சாப்பிட வைப்பார். ’மிஸ்சியம்மா’ படத்தில் ஒவ்வொரு விஷயத்தை சொல்லுவதற்கு பணத்தை பெறுவதும் பல நகைச்சுவை நடிப்பில் பல பரிமானங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.

 துகாரம் படத்தில் தொடங்கி பந்துலுவின் ‘தங்கமலை ரகசியம்’, டி.ஆர்.மகாலிங்கத்தின் ‘மோகனசுந்தரம், சிவாஜியின் ‘தெய்வப்பிறவி’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

நன்றி : நம் உரத்தசிந்தனை, நவம்பர், இதழ், 2014

Thursday, November 13, 2014

உங்கள எப்படி கூப்பிடுறது ?

அஞ்சலிலியை எதுக்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் அழைத்து வந்தேன் என்று எனக்கு தெரியவில்லை. அவளுக்கு உதவி செய்கிறேனா, பிரச்சனை கொடுக்க போகிறேனா என்பது கூட புரியவில்லை. அவள் கேட்டாள் என்பதற்காக அவளுக்காக செய்கிறேன்.

"என்ன கல்யாணம் பண்ணிக்க தான் கூட்டிட்டு போறீங்களா ?"

இதை கேட்டதும் எனக்கு சிரிப்பு தான் வந்தது. இருந்தாலும் அவளின் உடல் அழகை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. பதினாறு, பதினெழு வயது தான். யாராக இருந்தாலும் அவளை திருமணம் செய்து கொள்ள ஆசை வரும்.

"எதுக்கு சிரிக்கிறீங்கனு தெரியது. நா கல்யாணத்த பத்தி ஆசப் படக்கூடாதா ?"

 "அப்படியில்ல. சும்மா தான் சிரிச்சேன்."

"நீங்க என்ன நினைக்கிறீங்கனு தெரியுது” என்று சொல்லி, கொஞ்ச நேரத்தில் “உங்கள எப்படி கூப்பிடுறது ?" என்றாள்.

என்னுடன் வந்ததில் இருந்து பல முறை இந்த கேள்வியை கேட்டு விட்டாள். அவளாகவே அதற்கு பதில் சொல்லிக் கொண்டாள். நான் எதுவும் பேசவில்லை. சொல்லவும் விருப்பமில்லை.

"உங்க பேரு சங்கர் தானே. சங்கர் கூப்பிடட்டா !! " நான் அவளை பார்த்து முறைத்தேன். எனக்கு இருபத்தியெட்டு வயதாகிறது. என்னைவிட சிறிய பெண் பெயர் சொல்லி அழைப்பதை என்னால் ரசிக்க முடியவில்லை.

"அண்ணானு கூப்பிட முடியாது. சார் சொன்னா உங்களுக்கும் மத்தவங்களுக்கும் வித்தியாசம் இருக்காது. எப்படி கூப்பிடட்டும் நீங்களே சொல்லுங்க ?"

"நீ எதுக்கு என்ன கூப்பிடனும். உன்ன பஸ் எத்திவிட்டுறேன். அதுக்கப்புறம் நீ யாரோ நா யாரோ"

"அப்போ எதுக்காக எனக்கு எச்.ஐ.வி டெஸ்ட் எல்லாம் எடுத்தீங்க...?" அஞ்சலி கேட்டாள்.

**

"சங்கர் ! ஃப்ரீயா இருக்கியாடா?" மதன் குரலில் ஓர் எதிர்பார்ப்பு கலந்து இருந்தது.

"ஃப்ரீயா தான்டா இருக்கேன் ! "

"சரஸக்கா வீட்டுல புதுசா ஒரு பொண்ணு வந்திருக்கு, சூப்பர்  கம்பேனி தரா. நானே ரெண்டு வாட்டி போனேன். நீ வரீயா."

"போடா ! நானே டென்ஷன்ல இருக்கேன்."

"என்னாச்சு ?"

"ரெண்டு வாரம் முன்னாடி பாண்டிக்கு போகும் பொது சூப்பர் பிகர் கம்பேனி கொடுத்தா. காண்டம் கட்டானது கூட தெரியாமா பண்ணியிருக்கேன். அப்போ தெரியல. இப்போ நினச்சா பயமா இருக்கு."

"ஒண்ணுமாகாது. இப்போ எல்லாம் நம்பல விட பொண்ணுங்க உஷார். டென்ஷனாகாத. சரஸக்கா வீட்டுல இருக்குற பொண்ண இரண்டு வாரத்துல சிங்கப்பூர் பேக்-அப் பண்ணுறாங்க. ஒரு வாட்டி ஜாலிய இருந்துட்டு வரலாம்."

சங்கர் மனசு சபலப்பட்டது. இரண்டு வாரம் முன்பு நடந்தை நினைத்து கிடைக்க வேண்டிய சந்தோஷத்தை விட மனமில்லை.

 "சரிடா போகலாம்."

 **

"அக்கா... அக்கா..."

"போடா தேவுடியா மகனே. இன்னொரு வாட்டி அந்த பொண்ண பத்தி பேசிட்டு இங்க வந்த உன்ன கொன்னுடுவேன்."

சரஸ்வதி அக்கா கோபமாக போனை வைத்தாள். 'அக்கா' அப்படி சொல்லி பழகிவிட்டது. அந்த வார்த்தைக்கு அவள் தகுதியற்றவள். மாமா வேலை செய்பவள். இருந்தாலும், என்னை போன்ற திருமணமாகாவதர்களின் உடல் பசியை தீர்த்து வைக்க பல பெண்களை வைத்திருக்கிறாள். அதற்காகவது அவளை 'அக்கா' என்று அழைக்க வேண்டியதாக இருக்கிறது.

அங்கு இருக்கும் எல்லா பெண்களை நிர்வாணமாக பார்த்திருக்கிறேன். ஆனால், அஞ்சலியிடம் நிர்வாணத்தை மீறி என்னை பாதித்திருக்கிறது. கண்டிப்பாக காதல் இல்லை. இப்போது, அதற்கு தகுதியானவன் நான் இல்லை. ஆனால், என்னால் அவள் பாதிக்கப்பட்டிருக்கிறாளா என்று தெரிந்துக் கொள்ள வேண்டும்.

 "இன்னொரு தபா அந்த சங்கர் பய வந்தா சேத்துகாதீங்க..." கோபமாக லோகுவிடம் சொல்லிவிடு சாரஸ்வதி தனது இரண்டு அடியாட்களோடு சிங்கப்பூர் பார்ட்டியை பார்க்க வெளியே சென்றாள்.

எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை. சரஸ்வதி அக்காவை சந்திக்க அவள் இடத்திற்கே சென்றுவிட்டேன்.

"டேய் ! உன்னதா அக்கா வர வேண்டாம் சொல்லிட்டாங்கள. அப்ப எதுக்கு மறுதாப வந்த..." லோகு என்னை வழி மறித்தான்

"இல்ல அண்ண. போன வாட்டி பணம் தரல. அந்த கோபம் தான் அக்காவுக்கு. இதோ பாருங்க போன வாட்டி வந்ததும் சேர்த்து இப்போ பணம் கொண்டு வந்திருக்கேன்."

 "சரி... சரி.. கொடு." என்று பணத்தை வாங்கி லோகு எண்ணி பார்த்தான்.

"எதுக்கு 5000 அதிகமா கொடுத்திருக்க."

 "அந்த அஞ்சலி பொண்ண ஒரு நாள் கூட்டிட்டு பொய் ஜாலிய இருக்கலாம் தான்."

"என்னது ஓவுட்டிங்க.. அப்போன 10000 ரூபாய் அச்சே."

"என்ன அண்ணே ! ரெகுலர் கஸ்டமர் அட்ஜஸ்ட் பண்ணமாட்டிங்களா..?"

"வேணும்னா இங்கையே இராத்திரி புல்லா இரு. வெளியே அனுப்ப முடியாது"

முடியாத காரியம். எப்படியாவது அஞ்சலியை இங்கிருந்து அழைத்துச் செல்ல வேண்டும். வேறு வழியில்லை அவன் கேட்கும் பணத்தை கொடுத்தேன். இது வரை செய்து வந்த பாவத்திற்கு அது பிராயிசித்தம்.

**




"என்ன சார் ஹோட்டல்லுக்கு போகலையா. இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க ?"

"ஒரு டெஸ்ட் எடுத்துட்டு போகலாம்..." என்றேன். அஞ்சலி உள் மனதில் சந்தோஷம்.

"அப்போ என்ன காப்பாத்த போறீங்களா...?"

"உனக்கு ப்ளட் டெஸ்ட் தான் கூட்டிட்டு வந்தேன். நீயா எதுவும் கற்பனை பண்ணிக்காத."

அஞ்சலி உள்ளுக்குள் நம்பிக்கையிருந்தது. எப்படியாது இந்த நரகத்தில் இருந்து விடுபடுவோம் என்று.

சங்கர் தன்னை காப்பாற்றுவான் என்று நம்பினாள். தன்னை திருமணம் செய்துக் கொண்டால் சரி. வைத்துக் கொண்டாலும் சரி. பிரச்சனையில்லை. வெளிநாட்டுக்கு செல்லக் கூடாது. அவ்வளவு தான்.

ஒரு வேளை சரஸ்வதி மாதிரி வேறு யாரிடமாவது தன்னை விற்றுவிட்டால் என்ன செய்வதென்று யோசித்தாள். அது பிரச்சனையாக இருக்க போவதில்லை. இப்போது வாழ்கிற வாழ்க்கையை இன்னொரு இடத்தில் வாழப்போகிறோம். ஆனால், சரஸ்வதி வீட்டில் இருந்தால் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும். தனது இளமையும், பணத்தை முழுவதுமாக அபகரிக்கப்படும். மீண்டும் இந்தியாவுக்கு வருவது, தனது அம்மாவை தம்பியை பார்ப்பது நடக்காத காரியம். அதனால், தன்னிடம் வரும் கஸ்டமர்களை ஒவ்வொரிடம் இங்கிருந்து அழைத்து செல்லும் படி கெஞ்சுவாள். அவர்கள் சொல்லுவதை எல்லாம் செய்வாள்.

ஆனால், அவளால் அங்கிருந்து செல்ல முடியவில்லை. சரஸ்வதிக்கு நெருக்கமானவர்கள் அவள் சொன்னதை போட்டுக் கொடுத்துவிடுவார்கள். ஒரு சிலர் அவள் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாமல் முடிந்தவரை அவளை அனுபவிப்பார்கள்.

இப்போதைக்கு அஞ்சலிக்கு ஒரே வழி சங்கர் நம்பித்தான் ஆக வேண்டும். ப்ளேட் டெஸ்ட் ரிஸல்ட் வந்தது. சங்கர் நிம்மதி பெருமூச்சு விட்டான். அஞ்சலியை தனது பைக்கில் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு சென்றான்.

**

"அறிவுக்கெட்ட முண்டோம். அந்த சங்கர இங்க சேக்காத சொன்னா. ஒக்காலி அவன் கூட அனுப்பி வச்சிருக்க..."

"இல்லக்கா ! அவ போன வாடி தர வேண்டிய பணத்த கொடுத்தான்."

 "ஓ....தா.. அவள சிங்கப்பூர் பார்ட்டிக்கு இரண்டு லட்சம் விலை பேசி வச்சிருக்கேன்"

"எங்கக்கா போகப் போறான். ஆச தீர்ந்ததும் இங்க வந்து விட்டாகனும்."

"மயிரு... அவன் ஆசப்பட்டு கூட்டிட்டு போகல. காப்பாத்தனும் கூட்டிட்டு போயிருக்கான். அவன் பிரண்ட் மதன் தெரியும்ல."

 "தெரியும்க்கா..."

 "அவன வச்சி அந்த பையன தேடுங்க.. பஸ் ஸ்டெண்ட், ரயில்வே ஸ்டேஷன் இருக்குற நம்ப ஆளுங்க கிட்ட சொல்லிவை. ஓடுகாலி சிறுக்கி இன்னைக்கு இராத்திரிக்குள்ள வந்தாகனும்"

**

"உங்கள என்ன கூப்பிடுறது?" அஞ்சலி கேள்விக்கு எப்படி சொல்வது.

'அண்ணா' என்று சொல்ல முடியாது. எங்கள் உறவு அப்படியில்லை. பண்ணிரண்டு வயது இடைவேளை உள்ள ஆண், பெணுக்கு அண்ணன், தங்கை தவிர வேறு நாகரிகமாக உறவு சமூகத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன். வண்டி கோயம்பேடு பஸ் ஸ்டேண்டில் வந்து நின்றது.

"என்ன கல்யாண பண்ணிக்க தான் கூட்டிட்டு போறீங்களா ?"

"எதுக்கு சிரிக்கீறீங்கனு தெரியது. நா கல்யாணத்த பத்தி ஆசப் படக்கூடாதா ?" 

"அப்படியில்ல. சும்மா தான் சிரித்தேன்."

 "நீங்க என்ன நினைக்கிறீங்கனு தெரியுது” என்று சொல்லி, கொஞ்ச நேரத்தில் “உங்கள எப்படி கூப்பிடுறது ?" என்றாள். 

"உங்க பேரு சங்கர் தானே. சங்கர் கூப்பிடட்டா" நான் அவளை பார்த்து முறைத்தேன். 

எனக்கு இருபத்தியெட்டு வயதாகிறது. என்னைவிட சிறிய பெண் வைத்து அழைப்பது என்னால் ரசிக்க முடியவில்லை. 

"அண்ணானு கூப்பிட முடியாது. சார் சொன்னா உங்களுக்கும் மத்தவங்களுக்கு வித்தியாசம் இருக்காது. எப்படி கூப்பிடட்டும் நீங்களே சொல்லுங்க ?" 

 "நீ எதுக்கு என்ன கூப்பிடனும். உன்ன பஸ் எத்திவிட்டுறேன். அதுக்கப்புறம் நீ யாரோ நா யாரோ" 

"அப்போ எதுக்காக எனக்கு எச்.ஐ.வி டெஸ்ட் எல்லாம் எடுத்தீங்க...?" 

அஞ்சலி கேட்டாள். என்னால் பதில் கூற முடியவில்லை. பதில் கூற நேரமும் இல்லை. சரஸ்வதி அக்காவுக்கு பஸ் ஸ்டெண்டிலும், ரயில் நிலையத்திலும் ஏஜெண்ட்டுகள் அதிகம். நிறைய கஸ்டமர்கள் இங்கிருந்து தான் பிடிப்பாள். நாங்கள் வந்திருபது கண்டிப்பாக இந்நேரம் அவளுக்கு தெரிந்திருக்கும். அதற்குள், அஞ்சலியை பாதுகாப்பாக ஒரு பஸ்ஸில் ஏற்றி விட வேண்டும்.

"நீ எந்த ஊருக்கு போக ஆசைப்படுற..."

"உங்க ஊருக்கு தான்."

"நா உன் கூட வரல. வரவும் முடியாது. இந்தா பணத்த வச்சிக்கோ.." என்று என் கையில் இருக்கும் ஐயாயிரத்தை தந்தேன்.

"இந்த தொழில விட்டு நல்ல படியா வேற வேலைய பாத்துக்கோ. சரஸ்வதி அக்கா மாதிரியான ஆளுங்க உன் வயசையும், உடம்பையும் எப்படி பணம் பண்ணலாம் தான் யோசிப்பாங்க..."

 "உங்களுக்கு என்கிட்ட இருந்து எதுவுமே வேண்டாம்னா. எதுக்கு என்ன காப்பாதுனீங்க..." அவள் தடுமாற்றம் தெரிந்தது. கொஞ்சம் காதல் கலந்திருப்பதாக தெரிந்தது. ஆனால், அதையெல்லாம் உணர்ந்து அவளிடம் அன்பாக பேச நேரமில்லை. சரஸ்வதி அக்காவின் ஆட்கள் வருவது போல் தெரிந்தது. அஞ்சலியை ஆந்திராவுக்கு போகும் பஸில் ஏற்றிவிட்டேன்.

அவளின் கண்கள் கலங்கி இருந்தது. அதை துடைக்கவோ, ஆறுதல் சொல்லவோ தோன்றவில்லை. அவள் பாதுகாப்பாக சென்றாள் போதும். சரஸ்ஸக்காவின் ஆட்கள் என்னை பார்த்துவிட்டார்கள். இங்கிருந்து நான் ஓட வேண்டும். அப்போது தான் என்னை துறத்திக் கொண்டு வருவார்கள். அஞ்சலிக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து ஓடத் தொடங்கினேன்.

சரஸ்வதியின் ஆட்களும் என்னை தொரத்தத் தொடங்கினர்.அவர்களை ஏமாற்றிவிட்டு என் வண்டியை எடுக்க சென்றேன். என் வாண்டியை அவர்கள் நோட்டம் விட்டிருப்பார்கள் என்பதை நான் யோசிக்கவில்லை. கழுத்தில் பலமாக ஒருவன் தாக்கினான். நான் மயக்கமானேன். அவர்களின் மாருதி வண்டியில் ஏற்றினான். அங்கிருந்த பயணிகளும், காவலர்களும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தண்ணியடித்தவனை தூக்கிக் கொண்டு செல்வது போல் சென்றனர்.

 சரஸ்வதி அக்கா அந்த வண்டியில் இருந்தாள். கோபமாக என்னை அறைந்தாள்.

"தேவிடியா மவனே... பத்து நிமிஷம் படுத்தானு அவள காப்பாதுறீயா. எங்கடா அவ."

 "சொல்ல முடியாது."

 மீண்டு அடிவிழுந்தது. நெற்றி போட்டில் லோகு துப்பாகி வைத்தான். அப்பவும் சொல்லவும் முடியாது என்றேன்.

"அவள விலை பேசிட்டேன். உனக்கு வேண்ணும்னா வேற பொண்ண எடுத்துக்க. வீணா லவ்வு கிவ்வு சொல்லி, அவளுக்காக அடி வாங்கி சாகதடா..."

எனக்கு சிரிப்பு தான் வந்தது.  ’காதல்’ அந்த வார்த்தைக்கு தகுதியற்றவன் நான்.

"இன்னும் கொஞ்ச நாள்ல எயிட்ஸால சாகப்போறேன். எனக்கு லவ்வா... போடி. தேவுடியா முண்டோம்" என்று அலட்சியமாக சொல்லி, என் தலையில் வைத்த லோகுவின் துப்பாக்கியை நானே அழுத்திக் கொண்டேன்.

வண்டியில் ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு பஸ் நிலையத்தில் இருந்த போலீஸ் அங்கு வந்தனர்.

'உங்கள எப்படி கூப்பிடுறது' என்ற அவளின் குரல் மட்டும் என் காதில் ஒளித்துக் கொண்டே இருக்கிறது. எனக்கும் அவளுக்கும் இருக்கும் உறவுக்கு நாகரிகமான பெயரை நீங்களாவது சொல்லுங்கள் !!!

Monday, November 3, 2014

தமிழ் சினிமா 100 - பூபால் சிங் எதிர்வினை

நம் உரத்தசிந்தனை மாத இதழில் ‘தமிழ் சினிமா 100’ பற்றிய வரலாறு தொடர் எழுதி வருகிறேன். செப்டம்பர் மாத இதழில் 1930-40 களில் அறிமுகமாகி 1950-60 குணச்சித்திர நடிகர்களாக (9வது தொடர்) மாறிய நடிகர்களை பற்றி எழுதியிருந்தேன். ( அந்த கட்டுரையை வாசிக்க... )

அதற்கு, ’பூபால் சிங்’ சென்ற வாசகர் எஸ்.வி.சுப்பையாவை எப்படி எழுதாமல் விடுப்பட்டது என்று எதிர்வினை புரிந்திருக்கிறார். 1950-70 பற்றிய குணச்சித்திர நடிகர்களைப் பற்றி குறிப்பிடும் போது எஸ்.வி.சுப்பையா, மேஜர் சுந்தரராஜன், எம்.ஆர்.வாசு (நகைச்சுவை + குணச்சித்திரம்) போன்ற நடிகர்களை குறிப்பிட வேண்டும் என்று வைத்திருந்தேன் என்கிற விளக்கத்தை தொலைப்பேசி மூலம் அவருக்கு தெரிவித்தேன்.


சென்ற ஆக்டோபர் மாத இதழில் சினிமாவைப் பற்றிய எனது கட்டுரைக்கு பதிலாக இவருடைய வாசகர் கடிதம் இடம் பெற்றுயிருக்கிறது.

உரத்த சிந்தனை போன்ற தன் நம்பிக்கையூட்டும் இதழில் சினிமாவுக்கும், இலக்கியத்திற்குமான பக்கங்கள் மிக அறிதாகவே கிடைக்கும். அதில் சினிமாவைப் பற்றிய தொடர் எழுத வாய்ப்பு கொடுத்து, வாசகர்களில் கவனத்தை பெறுகிறது என்றால் மிகப் பெரிய விஷயம். மாதம் 10-15 பேர் தொலைப்பேசியில் பாராட்டுகிறார்கள். இந்த தொடருக்காக இன்னும் உழைக்க வேண்டும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

பூபால் சிங் எதிர்வினையை விட, அதை பிரசுரம் செய்த உரத்த சிந்தனை இதழுக்கு தான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

Friday, October 31, 2014

THE GHOST WRITER (2010)

Roman Polanski யின் Carnage படத்தைப் பற்றி பதிவிடும் போது ’கோஸ்ட் ரைட்டர்’ படத்தை பற்றிய சில குறிப்புகள் சொல்லியிருந்தேன்.

ஒரு படத்தை விவாதிக்கும் போது அந்த படத்தின் கதையை முழுவதுமாக சொல்லக் கூடாது என்று நினைப்பவன் நான். அதுவும் மர்ம படங்கள் என்றால் முக்கியமான மர்ம முடிச்சை பற்றி வெளியே சொன்னால் ஸ்வாரஸ்யம் போய்விடும் என்று சொல்வதில்லை. ஆனால், ’கோஸ்ட் ரைட்டர்’ படத்தைப் பற்றி பேசும் போது கண்டிப்பாக இந்த இரண்டையும் சொல்லிதான் ஆக வேண்டும் என்று தோன்றுகிறது. காரணம், அந்த படத்தின் பின்னிருக்கும் அரசியல் களன்.


ஆரம்பக் காட்சியில், மர்மமான முறையில் ஒரு எழுத்தாளர் இறந்ததில் இருந்து படம் தொடங்குகிறது. அந்த எழுத்தாளர் பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் அடம் லாங்யின் வாழ்க்கை வரலாற்றை எழுத வந்தவன். அமெரிக்கத் தொடுத்த போரில் பிரிட்டன் பிரதமராக இவர் ஆதரித்திருக்கிறார். அதனால், ‘போர் குற்றவாளி’ என்று இவரது அமைச்சரவையில் இருந்தவர்களே விமர்த்தார்கள். தனது வாழ்க்கை வரலாறு நூல் மூலம் அனைத்து விமர்சனத்திற்கும் பதில் கூற வேண்டும் என்று நினைக்கிறார். அதனால், அடம் லாங் தனது வாழ்க்கை வரலாற்றை எழுத புது எழுத்தாளரை நியமிக்கிறார்.

முன்னாள் பிரதமர் வாழ்க்கை வரலாற்றை எழுத 'கோஸ்ட்' வருகிறார். அதாவது, பிரதமர் எழுதுவது போல் அவரின் வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டும். புத்தகத்தில் பிரதமரின் பெயர் இருக்கும். எழுதியவரின் பெயர் எங்கும் குறிப்பிடப்படாது. புது எழுத்தாளர் முன்னாள் பிரதம மந்திரி ஒய்வு விடுதியில் தங்க வைக்கப்படுகிறார். தனது ஓய்வு நாட்கள் முடிவதற்குள், புத்தகத்திற்கு தேவையான தகவலை பெற்று எழுத வேண்டும் என்று அடம் லாங் சொல்கிறார்.

முன்பு வந்த எழுத்தாளர் பாதிக்கு மேல் முடித்து வைத்திருந்ததார். இருந்தாலும் அது முழுமையானதாக இல்லை. ஆரம்பத்தில் இருந்து புதிதாக தொடங்க வேண்டும் என்கிறார். அங்கு இருந்து எந்த குறிப்புகள் வெளியே எடுத்தச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அந்த ஓய்வு விடுதியில் நடக்கும் சில விஷ்யங்கள் அவனுக்கு மர்மமாக இருக்கிறது.

இறந்துப் போன எழுத்தாளர் இறக்கும் முன் பிரதம மந்திரியோடு வாக்குவாதம் செய்திருக்கிறான். தன் மேல் சுமத்த பட்ட போர்க் குற்றத்திற்கு புத்தகத்தில் விளக்கம் சரியாக அளிக்கவில்லை என்று கோஸ்ட் நினைக்கிறான். இறந்த எழுத்தாளர் காரில் சாகும் போது ஹார்வட் பேராசிரியரை பார்த்துவிட்டு வந்திருக்கிறார். கோஸ்ட்டும் அந்த பேராசிரியரை சந்தித்து என்ன நடந்தது என்று விசாரிக்கிறான்.

இதற்கிடையில், முன்னாள் பிரதம மந்திரி அடம் லாங்யின் மனைவியோடு கோஸ்ட்டுக்கு நெருக்கம் ஏற்ப்படுகிறது. அவள் மூலம் சில தகவல்கள் கோஸ்ட் தெரிந்துக் கொள்கிறான்.

பல முக்கிய அரசியல் தகவல் தெரிந்துக் கொண்ட கோஸ்ட் முன்னாள் பிரதமர் அடம் லாங்கிடம் சொல்லலாம் என்று நினைக்கும் போது போருக்கு எதிராக போராட்டக்காரர்களிடம் இருந்த ஒருவன் அவரை சுட்டுக் கொண்டு விடுகிறான். காவலர்களும் சுட்டவனை கொன்று விடுகிறார்கள். முன்னாள் பிரதமர் மீது ‘போர் குற்றம்’ இருந்த நிலையில் அவர் இறந்தது பெரிய சர்ச்சையை கிளப்புகிறது.

அடம் லாங் இறப்பதகு முன் எழுதிய நூல் என்பதால், அவரது வாழ்க்கை வரலாறு விற்பனையில் சாதனை படைக்கிறது. இறந்த பழைய எழுத்தாளரின் சில குறிப்புகள் புத்தகத்தில் சேர்க்கப்பட்டாமல் இருந்தது. கோஸ்ட் அந்த இறந்த எழுத்தாளரின் குறிப்புகள் மீண்டும் ஒரு முறை பார்க்கும் போது ஒரு தகவல் கிடைக்கிறது. அதை கண்டதும் அதிர்க்கிறான்.

"முன்னாள் பிரதமரின் மனைவி சி.ஐ.ஏ ஏஜேன்ட். அவளை ஹார்வர்ட் பல்கலலைக்கழகத்தில் இருப்பவர் பயன்படுத்திக் கொண்டார்" என்று இருக்கிறது. அதாவது, பிரிட்டன் பிரதமரின் மனைவி உதவி மூலம் தங்கள் தேவைக்கு ஏற்றார் போல் அமெரிக்கா பயன்படுத்தி கொண்டது. அவரை போர் குற்றம் செய்ய வைத்திருக்கிறது. தனக்கு இந்த உண்மை தெரிந்துவிட்டது என்பதை ஒரு பேப்பரில் எழுதி பிரதமர் மனைவிக்கு கொடுக்கிறான்.

கோஸ்ட் வெளியே செல்லும் போது, விபத்து நடந்தது போல் சத்தம் கேட்கிறது. கோஸ்ட் கையில் இருந்த காகிதங்கள் பறக்க, நடைப்பாதையில் நடந்தவர்கள் அதிர்ச்சியுடன் காணப்படுகின்றனர்.

அரசியலில் எத்தனையோ மர்மங்கள் இருக்கிறது. அரசியல் கொலைகளில் அதைவிட மர்மங்கள் நிறைந்திருக்கிறது. மோகந்தாஸ் காந்தி படுகொலை, ஜென்னடி படுகொலை தொடங்கி இந்திரா காந்தி, ராஜூவ் காந்தி படுகொலை வரை இன்னும் எத்தனையோ படுகொலைகளில் தெரியப்படாத உண்மைகள் இருக்கின்றன. அதை அறிந்து கொள்ள ஸ்வரஸ்யம் இருக்கும். அதே சமயம் அதன்பின் ஆபத்தும் இருக்கிறது.

சில அரசியல் உண்மைகள் சாமான்யனுக்கு தெரியக் கூடாது. அதை தான் எல்லா அரசாங்கம் விரும்பும். அப்படி தெரிந்துக் கொண்டால் தற்கொலையும், விபத்துக்களும் இந்த படத்தில் முடிவில் வருவது போல் தான் நடக்கும்.

அமெரிக்காவை விமர்சனம் செய்வது போல் இருந்ததால் இந்த படம் ஆஸ்கருக்கு பரிசீலனை செய்யப்படவில்லை. ஆனால், மற்ற இடங்களில் பல விருதுகள் வாங்கி இருக்கிறது. 

இந்த படத்தை யாரும் இந்திய மொழியில் எடுக்க முடியாது. எடுத்தால் தடைவிதிக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரியும். ( இந்தப் படத்தின் கதையை முழுவதுமாக சொன்னதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு புரிந்திருக்கும்.)

Wednesday, October 29, 2014

பூஜை - விமர்சனம்

ஊரே ’கத்தி’ படத்தைப் பற்றி பேசிக் கொண்டு இருக்க... யாரும் பூஜைப் படத்தைப் பற்றி பேசாததால் ,அந்த படத்தை பற்றி விமர்சனம் எழுதுகிறேன். ’ரேஸ் குர்ரம்’ போன்ற தெலுங்கு படங்களில் ஸ்ருதி ஹாசனை ரசிக்கும் ஆந்திர ரசிகர்கள் நமக்கு தரிசனம் தராமல் போய்விடுவார் என்ற நல்ல எண்ணம் தான் காரணம்.

பூஜைப் போன்ற படங்களை ஆதரித்து வெற்றிப் பெற்றால் தான், ரேஸ் குர்ரத்தை மிஞ்சக் கூடிய நடிப்பை நாம் ஸ்ருதி ஹாசனிடம் இருந்து எதிர்பாக்கலாம்.



படத்தின் கதை. முந்தைய ஹரி படங்களில் வரும் அதே கதை. அதே திரைக்கதை. மசாலா படங்களில் நடிக்கும் அதே விஷால். படம் பார்க்கும் அதே ரசிகர்கள். ஆனால், ஸ்ருதி ஹாசன் மட்டும் கொஞ்சம் புதுசு.

“இவங்க அப்பா மாதிரி நடிக்கவே இல்லை” என்கிறார் ஒரு நண்பர்.

“எதுக்கு நடிக்கனும் ?” என்பது தான் என் கேள்வி.

இப்படி ரசனையே இல்லாமல் இருப்பதால் தான் ‘ஆகாடு’ போன்ற படங்களில் ஒரு பாட்டு நடனமாடும் ஸ்ருதி, நாயகியாக அழைத்தால் கூட தமிழ் சினிமா பக்கம் வருவதில்லை. ஸ்ருதி ஹாசன் முப்பது வயதுக்கு மேல் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டினால் போதும்.

ஸ்ருதி ஹாசன் தவிர இந்த படத்தில் வேறு ஒன்றுமில்லையா நீங்கள் கேட்பது புரிகிறது. ஒரு வேளை இருக்கலாம். என் கண்ணுக்கு ஸ்ருதி ஹாசன் எல்லாவற்றையும் மறைத்துவிடுகிறார். சாரி... மறக்கடித்து விடுகிறார்.

 (இது தான் உங்க விமர்சனமா என்று கேட்கும் மைட் வாய்ஸ் புரிகிறது.)

Tuesday, October 28, 2014

திரைக்கதை எழுதலாம் வாங்க ? - ’கருந்தேள்’ ராஜேஷ்

தமிழ் செய்யுளுக்கு உரை எழுது இருக்கிறார்கள். தமிழ் நூல் இன்னொரு மறுப்பு நூலாக தமிழில் வெளிவந்திருக்கிறது. அதிகப்பட்சம் ஆங்கில நூலை அப்படி தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். ஆனால், முதல் முறையாக ஆங்கிலத்தில் எழுதிய நூலுக்கு தமிழில் உரையை எழுதியதை பார்க்கிறேன். இதற்கு முன் இப்படி ஒரு முயற்சி மேற்க் கொள்ளப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. 

நூலில் இடம் பெற்றிருக்கும் 55 அத்தியாயங்களும் ஸிட் ஃபீல்டின் திரைக்கதை கோட்பாட்டை விளக்கியும், அந்த கோபாட்டு அடிப்படையாக கொண்ட தமிழ் சினிமா காட்சியை மேற்கோள் காட்டியிருக்கிறார். 



சினிமா அனுபவம் இல்லாத 'கருந்தேள்' ராஜேஷ் எழுதியிருப்பதால், ஸிட் ஃபீல்டின் கோட்பாட்டை சரியாக அப்படியே விளக்க முடிந்திருக்கிறது. சினிமா அனுபவஸ்தர்கள் யாராவது இதை செய்திருந்தால், "டைரக்டர் சங்கர் இந்த காட்சி அமைப்புக்கும் போது என்னை பாராட்டினார்" போன்ற சுய புராணமும், தங்கள் திரப்பட வாய்ப்புக்கு தேடும் முயற்சிக்கான புத்தகமாக அமைந்திருக்கும். ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஸிட் ஃபீல்ட்டின் தத்துவத்தை தான் முன் நிறுத்துகிறார்.

உண்மையில் திரைக்கதை அமைப்பதற்கான ஒரு கையேடு இந்த புத்தகம். இந்த புத்தகத்தை படித்துவிட்டால் திரைக்கதை 100% வடிவமத்துவிடலாம் என்பது எல்லாம் இல்லை. நமது கதைக்கு தேவையான வடிவத்தை தாயார் செய்வதில் நமது கையில் தான் இருக்கிறது. அதில் தவறு இருந்தால் நமது தேர்வில் தான் தவரே தவிர, கோட்பாட்டில் இல்லை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். 

முன்பு, சுஜாதா "திரைக்கதை எழுதுவது எப்படி ?" என்ற புத்தகம் எழுதியிருந்தார். இந்த புத்தகம் முதல் வகுப்பு சிலபஸ் என்றால், ராஜேஷின் புத்தகம் 1-3 க்ளாஸ்க்கான புத்தகம். நிறைய உதாரணங்கள் இந்த புத்தகத்தில் மேற்கோள் காட்டப்படுகிறது. 

45வது அத்தியாயத்தில் நாவலில் இருந்து திரைக்கதை என்று எழுதியிருக்கிறார். அந்த அத்தியாயத்தில் சிறு வருத்தம், சிறுகதையை சேர்த்து சொல்லியிருக்கலாம். தமிழ்செல்வனின் சிறுகதையை வைத்து தான் 'பூ" திரைப்படம் எடுக்கப்பட்டது. ஆனால், தமிழ் சினிமாவில் இது போன்ற முயற்சிகள் மிக அறிதாகவே இருக்கிறது. 

எதிர்காலத்தில் நாவலை சுருக்கி திரைப்படமாக எடுப்பதை விட, சிறுகதையில் காட்சிகளை சேர்த்து படமாக எடுக்கப்படுவது தான் அதிகம். (இப்போதும், சிறுகதையை படத்தில் பயன்படுத்துகிறார்கள். கதாசிரியர்களுக்கு க்ரேடிட் கொடுக்க தான் இயக்குனர்களுக்கு மனம் வரவில்லை.) 

அடுத்த பதிப்பில் நூலின் உள்ளடக்க விவரங்களை சேர்த்துக் கொள்வது நல்லது. 

’கருந்தேள்’ ராஜேஷ் வெற்றிப் பெற வாழ்த்துக்கள் !!! 

** 

இந்த புத்தகத்தை படித்து முடிக்கும் போது உதிர்த்த சிந்தனைகள்…. 

எந்த திரைக்கதை கோட்பாடு இல்லாமல் முந்தைய படங்களில் இருக்கும் காட்சிகளை உருவி எடுத்த வேலையில்லா பட்டதாரி, அரண்மனை போன்ற படங்கள் வெற்றி பெறுவதை பார்க்கிறோம். வித்தியாசமான திரைக்கதை வடிவத்தில் வந்த ஆரண்ய காண்டம் தோல்வியை பார்க்கிறோம். 

திரைக்கதை கோட்பாடு எல்லாம் வேறும் இலக்கணம் மட்டுமே. படத்தின் வெற்றி இலக்கை ரசிகர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். அவர்களின் நாடி துடிப்பை அறிந்துக் கொள்ள புத்தகமும் உதவுவதில்லை 

Call +91 90032 67399 - Cash on Delivery thro' VPP 
or

Tuesday, October 21, 2014

இலக்கியம் மாறுமா ? - அ.ஞா.பேரறிவாளன்

தூக்குத் தண்டைக்கும், அரசியலுக்கும் நடுவில் மாட்டி தவிக்கும் பேரறிவாளன் எழுதிய புத்தகம் “இலக்கியம் மாறுமா ?”

சங்கக் காலத்தில் நடந்த சிலப்பதிகாரத்தில் நடந்த அநீதியும், தற்காலத்தில் காவல் நிலையங்களில் நடக்கும் அநீதியையும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்.



தவறு செய்யாத கோவலன் மீது திருட்டு பழி சுமத்தி கொல்லப்படுவதையும், அதேப் போல் தற்காலத்தில் 'அழகர்சாமி' என்ற அப்பாவி மீது திருட்டு பழி சுமத்தி கோர்ட்டில் விசாரணை நடத்தப்படுவதையும் சரியான ஒப்பிட்டாக இருக்கிறது.

சிறுகதை வடிவில் இல்லாமல் நாடக வடிவத்தில் எழுதியிருக்கிறார். பொது நிகழ்ச்சியில் மேடை நாடகமாக போட விரும்புபவர்கள் இந்த நாடகத்தை முயற்சி செய்து பார்க்கலாம்.

கடைசியாக முடிக்கும் போது…

”ஆயிரம் ஆயிரம் 
  ஆண்டுகளின் பின்னும் 
  அநீதிகள் 
  தொடரவே செய்கின்றன. 
  ஆயினும் 
  அநீதிக்கான தீர்வுகள் மட்டும் 
  திசையறியாமல் திண்டாடுகிறது” 

- என்று சொல்லி முடிக்கிறார்.

பேரறிவாளன் - சிறை கம்மிகளுக்கு பின்னால் ஒரு எழுத்தாளனாக இருக்கிறார். அவரை தான் விடுதலை செய்ய முடியவில்லை. அவரது எழுத்துக்களையாவது விடுதலை செய்து, மக்களிடம் கொண்டு செல்வோம்.

**
இலக்கியம் மாறுமா ?
- அ.ஞா.பேரறிவாளன்
பக்கங்கள் : 60 விலை. ரூ.50

வெளியீடு :
திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம்
11, கே.கே. தங்கவேல் தெரு,
பெரியார் நகர்,
சோலையார் பேட்டை – 635851
அலைப்பேசி : 94430 58565

Tuesday, October 14, 2014

மெட்ராஸ் ( Madras )

நானும் வடசென்னை பகுதியை சேர்ந்தவன் என்பதால் இந்த படத்தை பற்றி சொல்லியாக வேண்டும். தினமும் இந்த பாதை வழியாக கடந்து செல்கிறேன்.

பெண்களின் சண்டை, எருமை மாடுகள் ரோட்டில் கடந்து செல்வது, குப்பை நாற்றம், மைதானத்தில் கிரிக்கெட் என்று பல வருடங்களாக பார்த்து பழக்கப்பட்ட விஷயம். திரைப்படமாக பார்க்கும் போது அதைப் பாதிக்கூட எடுக்கவில்லை என்று தான் எனக்கு தோன்றுகிறது. (எந்த படத்திலும் எந்த விஷயமும் முழுமையாக காட்ட முடியாது என்பது வேறு விஷயம்) ஆனால், இதுவரை இந்த பாதிக்கூட யாரும் எடுக்காமல் இருக்கும் போது இயக்குனர் ரஞ்சித் அதை செய்திருக்கிறார் என்பதை பாராட்டியாக வேண்டும்.

அரசியல் லாபத்திற்காக பழகியவனை கொலை செய்யும் புளித்துப்போன பழைய கதை தான். என் உயிர் தோழன் தொடங்கி சுப்பிரமணியப்புரம் வரை பார்த்தது தான். புதிய கதைக்களனும், அதற்கு துணை நிற்கும் துணை பாத்திரங்கள் படத்திற்கு வலு சேர்க்கிறது.



கார்த்தி தனது பாத்திரத்திற்கு பாதி தான் செய்திருக்கிறார். சகுனி, அலேக்ஸ் பாண்டியன் பாதிப்பில் இருந்து அவர் இன்னும் மீண்டு வரவில்லை என்று தான் தெரிகிறது. (கடைசி வரைக்கும் கார்த்தி என்ன வேலை செய்கிறார் என்று சொல்லவே இல்லை)

நாயகனிடம் இவ்வளவு பேசும் நாயகி, மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் அமைதியான பெண்ணாக காட்டிருப்பது கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. நாயகி உண்மையிலேயே அடக்கமானவரா அல்லது அராத்தா என்பதில் குழப்பம். படத்திற்கு நாயகி தேவையில்லை என்பதால் இவரின் குழப்பமான பாத்திரப்படைப்பு பெரிதாக பாதிக்கவில்லை. ( பிற்ப்படுத்தப்பட்டவர்களின் வாழ்வியல் எடுக்கும் போது கூட வட இந்தியப் பெண் தான் வேண்டுமா என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.)

நாயகன், நாயகி தவிர்த்து மற்ற பாத்திரங்கள் படு இயல்பு. குறிப்பாக அன்பு - மேரி காதல், ஜானி பேசிக் கொண்டே இருப்பது, கார்த்தியின் அம்மா பெண் பார்ப்பது, ரௌடிகள், கவுன்சிலர் என்று காஸ்ட்டிங் படு கச்சிதம். உண்மையில் படத்தின் பலமே இந்த துணை பாத்திரங்கள் தான்.

காதல் காட்சிகள், நாயகன், நாயகி காஸ்ட்டிங் தவிர்த்து பார்த்தால் RGVயின் படம் பார்த்தது போன்ற உணர்வு ஏற்ப்பட்டிருக்கும்.

இயக்குனர் நாயகன், தயாரிப்பாளருக்கு வளைந்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்பது புரிக்கிறது.

தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனர் தனது இரண்டாவது, மூன்றாவது படத்தை தான் முழு சுதந்திரத்தோடு இயக்க முடியும் என்ற விதியை யாரால் மாற்ற முடியும். தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக ரஞ்சித் வருவார் என்பதை தான் ‘மெட்ராஸ்’ படம் காட்டுகிறது.

அதே சமயம் அனைவரும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவிற்கு படம் இல்லை.

Thursday, October 9, 2014

Roman Polaski இயக்கிய Carnage (2011)

"சம்சாரம் ஒரு மின்சாரம்" படத்தை போல் ஏன் உங்களால் மீண்டும் ஒரு படத்தை இயக்க முடியவில்லை” என்று இயக்குனர் விசுவிடம் ஒரு நிருபர் கேட்டார்.

அதற்கு விசு, "அந்த படத்தை இயக்கும் போது விசு ஒரு சராசரி டைரக்டர். பஸுல தான் போவேன். நிறைய ஜனங்க கிட்ட பேசுவேன். அவங்க கஷ்டத்த பத்தி கேட்பேன். இப்போது இருக்கும் விசு பணக்காரன். கார்ல தான் போரான். பணக்காரங்க கிட்ட தான் அதிகம் பழக வேண்டியதாக இருக்குது. அதனால சராசரி குடும்ப பிரச்சனை இப்போ அவனால எடுக்க முடியல" என்றார்.

ஒவ்வொரு இயக்குனருக்கு இப்படி ஒரு "Saturation Point" இருக்கும். ஆனால், தமிழ் சினிமாவில் இந்த "Saturation Point" இருந்து இயக்குனர்கள் மீண்டு வந்திருக்கிறார்களா என்பது சந்தேகம். கே.பாலசந்தர், பாரதிராஜா, பாக்கிராஜ் போன்ற பெரிய இயக்குனர்கள் கூட அந்த “Saturation Point”ல் சரி செய்ய முடியாமல் சின்னத்திரைக்கு சென்றுவிட்டார்கள்.

ஆனால், ஒரு சில இயக்குனர்கள் ஆராம்பக் கால தோல்விகளில் இருந்து மீண்டு வந்து பெரிய இயக்குனர்களாக வந்திருக்கிறார்கள். அவர்களின் குறிப்பிட தகுந்தவர் ரோமன் போளாஸ்கி.

**


நான்கு பேர். ஒரு வீட்டில் படத்தை முடிக்க வேண்டும். உடனே பிட்டு படம் தான் எடுக்க வேண்டும் என்று கிண்டலாக நினைக்க தோன்றும். அதையும் தாண்டி இப்படி ஒரு படம் எடுக்க முடியுமா என்று யோசிக்க வைக்கிறார் ரோமன் போளாஸ்கி.

தலைப்பு போடும் போது ஒரு பூங்காவில் ஒரு சிறுவன் இன்னொரு சிறுவனை பேஸ்பால் பேட்டால் அடித்துவிடுகிறான்.

அடுத்த காட்சி, ஒரு பிளாட்டில் அடிவாங்கிய சிறுவனின் பெற்றோரிடம் சமரசம் செய்து, அவர்கள் மன்னித்துவிட்டதாக கடிதம் பெற அடித்தவனின் பெற்றோர்கள் வருகிறார்கள். ஆரம்பத்தில் இரண்டு பெற்றோர்களும் சமரசமாக பேச, பிறகு ஒரு வார்த்தை இரண்டு பெண்களுக்குள் சண்டை வருகிறது.

இரண்டு பெண்கள் போடும் சண்டையை கணவன்மார்கள் தடுத்து சமரசம் செய்கிறார்கள். கொஞ்ச நேரத்தில் ஒருவரின் வளர்ப்பை இன்னொருவர் குறை சொல்கிறார்கள். மீண்டும் சண்டை வருகிறது. இரண்டு பெற்றோர்களின் சண்டை ஒரு கட்டத்தில் தம்பதியர்களுள்ளே வாக்குவாதத்தை உருவாகிறது. இத்தனை நாள் தம்பதியர்களுக்குள் இருந்த விரக்தியும் வெளிப்படுகிறது. நடுவில் தொலைப்பேசி வந்து தொல்லைக் கொடுகிறது.

75 நிமிடங்கள் ஒரே ப்ளாட்டில் நான்கு பேருக்கும் நடக்கும் வாக்குவாதம் தான் படம். ஒவ்வொரு முறையும் பிரச்சனை தீர்ந்தது என்று நினைக்கும் போது, எதோ ஒரு வார்த்தை மீண்டும் பிரச்சனையை உருவாக்கிறது. கடைசியில் எப்படி சமரசமாக போகிறார்கள் என்று ஆர்வத்திலையே படத்தை முடித்திருக்கிறார்.

 பெரியவர்கள் பேசும் போது சிறுவர்கள் தலையிடக் கூடாது என்று எப்படி சொல்கிறோமோ, சிறுவர்களின் சண்டையில் பெரியவர்கள் தலையிடக் கூடாது. அதையும் மீறி தலையிட்டால் பெரியவர்கள் சண்டையாக மாறிவிடும் என்பதை இந்தப் படம் காட்டுகிறது. டைட்டானிக் கனவு தேவதை கேட் வின்செண்ட் ஒரு சிறுவனுக்கு அம்மாவாக பார்க்க வைத்தது சங்கடமாக இருந்தது. மற்ற மூன்று நடிகர்கள் தொலைக்காட்சி தொடரில், படங்களில் சிறு வேடத்தில் நடிப்பவர்கள்.

**

ரோமன் போளாஸ்கி ஆரம்பக் காலத்தில் ஹிட்ச்காக் போலவே பல மர்மப்படங்களை இயக்கினாலும் அவர் அளவுக்கு இவரால் புகழ் பெற முடியவில்லை. ‘சைனா டவுன்’ மட்டுமே அவருக்கு ஆஸ்கர் விருது பெற்று தந்தது. “ரோஸ்மேரி பேபி” பலரது பாராட்டுக்குறிய படமாக இருந்தது.

மூன்று ஆஸ்கர் விருது பெற்ற பியானிஸ்ட் (Pianist – 2002 ) படத்திற்கு பிறகு ரோமன் போலாஸ்கியின் படங்கள் அதிக கவனம் பெற தொடங்கின. அதன் பிறகு அவரது முந்தைய படங்களும் பலர் பேசப்பட்டது.

2010ல் இவர் இயக்கிய ‘கோஸ்ட் ரைட்டர்’ (Ghost Writer) படத்தை யாராவது இந்திய மொழியில் படம் எடுத்தால், கண்டிப்பாக தடைவிதிப்பார்கள். அதிபரின் வாழ்க்கை வரலாற்றை எழுத வரும் எழுத்தாளர், அந்த அதிபர் பின்னால் இருக்கும் மர்மத்தை கண்டுப்பிடிப்பது தான் படம். இந்திய அரசியல் சூழலை எடுத்துக் கொண்டால் ராஜிவ் காந்தி, சோனியா காந்தியை தான் நினைவுப்படுத்தும்.

இப்போது ரோமன் போலாஸ்கிக்கு 81 வயதாகிறது. ‘Carnage’ படம் எடுக்கும் போது அவருக்கு 78 வயது. இந்த வயதில் எப்படியெல்லாம் யோசிக்கிறார் வியக்காமல் இருக்க முடியாது. இன்னும் திரைத்துறையில் இருந்து ஓய்வு பெறாமல் இயக்கிக் கொண்டு இருக்கிறார்.

10, 20 லட்சத்தில் படம் எடுக்க விரும்பும் இயக்குனர்கள் சரியான வசனங்களுடன் ’Carnage’ படத்தை தமிழில் எடுக்க முயற்சிக்கலாம். அதேப் போல் Low Budget படம் எடுக்க விரும்பும் இயக்குனர்கள் ரோமன் போளாஸ்கியின் ஆரம்பக் கால மர்ம படங்களை பார்க்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பிலே பல படங்களை இயக்கியிருக்கிறார். 

பின் குறிப்பு : 
நீங்களே மற்ற படங்களை தமிழில் எடுக்கலாம் என்று ஏன் பரிந்துரை செய்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். 

நல்ல படங்களை பரிந்துரை செய்யாததால் தான் மோசமான படங்களை தமிழாக்கம் செய்து பார்வையாளாரான நம்மை கஷ்டப்படுத்துகிறார்கள். அதற்கு நாமலே நல்ல படங்களை இயக்குனர்கள் எடுத்து சொல்வோம்.

அது மட்டுமில்லாமல் இயக்குனர்கள் காப்பி அடித்து படம் எடுப்பதால் தான் நம்மால் பேஸ்புக், டிவிட்டரில் எழுத முடிகிறது. அதை நாம் மறந்திவிடக் கூடாது.

Monday, October 6, 2014

டிராபிக் நீதி !!



ஒரு முறை அவசரமாக செல்ல வேண்டிய நேரத்தில் டிராபிக்கில் மாட்டிக் கொண்டேன்.

Accordingly to Newton’s 5th law, “No Rules in Traffic” என்ற விதியை கடைப்பிடித்து இரண்டு வண்டிக்கு இடையில் புகுந்து புகுந்து சென்றேன். ஒரு இடத்தில் வலது பக்கம் ‘U’ அடிக்க வேண்டும். முன்னாடி கார் இருந்தது. வலது பக்கமாக முந்த முடியவில்லை. அதனால், இடது பக்கமாக சென்று, வலது பக்கத்தில் ‘U’ அடித்தேன்.

அந்த கார்காரன் சமஸ்கிரத வழி வந்தவன் என்பதால் ஆங்கிலத்தில் கண்ட மேனிக்கு திட்டத் தொடங்கினான். (நல்ல வேளை… ராயப்புரத்துக்காரர்களிடம் மாட்டவில்லை)

ஆனால், எனக்கு கோபம் துளிக்கூட வரவில்லை. (தமிழில் திட்டியிருந்தால் கோபம் வந்திருக்கலாம்). தவறு என்னுடைய என்பதற்காக அல்ல. என்னுடைய பதட்டத்தை அவனுக்கு கொடுத்துவிட்டேன் என்பதற்காக !!

நீதி: நாம் பதட்டமாக வண்டி ஓட்டு போது மற்றவர்களை சேர்த்து பதட்டமடைய வைக்கிறோம்.

Wednesday, October 1, 2014

வருத்தம் தரும் அம்மாவுக்கு எதிரான தீர்ப்பு !

நான் கலைஞரின் அபிமானி என்பதால், அம்மாவுக்கு கிடைத்த தண்டனையை நினைத்து சந்தோஷப்படுவதாக பலர் நினைக்கிறார்கள்.

உண்மையில் அ.தி.மு.க கட்சியினர்களை விட எனக்கு தான் அதிக வருத்தம். (எனக்கு கண்ணீர் வரவில்லை என்றால் சொல்வது நடிப்பு என்பதில்லை.) அதற்கு இரண்டு காரணம் இருக்கிறது.

முதல் காரணம்.

91-96, 2001-06 காலக்கட்டத்தில் அம்மா எவ்வளவோ தவறு செய்திருக்கிறார். ஆனால், இந்த மூன்று ஆண்டுகளில் பழி வாங்கும் அரசியல் நடவடிக்கை தவிர்த்து பார்த்தால் அம்மாவின் ஆட்சி சிறப்பாகவே இருந்தது. தவறு செய்த காலத்தில் கிடைக்க வேண்டிய தண்டனை, மனம் திருந்தி சிறப்பாக ஆட்சி செய்யும் போது அவருக்கு தண்டனை வழங்கியது வருத்தம் தான்.

தேசியளவில் தமிழகம் இப்படி ஒரு செய்தியை சந்திக்கும் போது என்னால் எப்படி சந்தோஷப்பட முடியும்.

2016 தேர்தலில் இது அனுதாப அலையாக மாறுமா அல்லது பாதகமாக மாறுமா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும். 



இரண்டாவது காரணம்.

பெங்களூர் தீர்ப்பு அ.தி.மு.க கட்சியின் எதிர்காலத்திற்கு பின்னடைவு என்பதை யாரும் மறுக்க முடியாது. அடுத்த மூன்று ஆண்டுகளில் எந்த வித கோஷ்டி புசல் வராமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு அம்மாவிடம் இப்போது அதிகமாக இருக்கிறது.

தி.மு.க கட்சியின் தற்போதைய நிலைமைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. தனக்கு பிறகு ஸ்டாலின் தான் என்பதை அவர்கள் கட்சியினரை உறுதியாக நம்ப வைக்கும் முயற்சியை கலைஞர் செய்ய வேண்டும். இன்னும் அவர் காலம் கடத்தி செல்வது எந்த பலனும் அளிக்காது. அது மட்டுமில்லாமல் முந்தைய ஆட்சியில் இருந்த அதிருப்தி இன்னும் மக்கள் மீளவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் தமிழகத்தில் எதிர்காலம் இருப்பதாக தெரியவில்லை. வைகோ, விஜயகாந்த் உட்பட மற்ற இதர கட்சிகள் பெரிய கட்சிகளோடு கூட்டணி வைத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள். இதனால், தமிழகத்தில் மூன்றாவது இடத்தை பலமாக்கிக் கொள்ள பா.ஜ.கவுக்கு அதிக தான் வாய்ப்பு இருக்கிறது !!

மத்தியில் பா.ஜ.க ஆட்சி. மோடி அலை. திராவிடத்தால் ஏமாற்றப்பட்டோம் என்ற பிரச்சாரம். இந்த மூன்றும் அஸ்திரமாக பயன்படுத்தி வருகிறார்கள். இவர்களின் அடுத்த அஸ்திரம் நடிகர்கள் !!!

ரஜினி, விஜய் போன்றவர்கள் தங்களது கட்சியில் சேர்க்கும் முயற்சியை பா.ஜ.க செய்துவருவதாக சில தகவல்கள் வெளியாகிவருகிறது. நடிகர்களுக்கு மக்கள் ஓட்டுப் போடுவதை நிறுத்தி நீண்ட நாட்கள் ஆகிறது. ஆனால், மக்கள் நடிகர்கள் மீது வைத்திருக்கும் கவர்ச்சியை நம்மால் மறுக்க முடியாது. (பெப்ஸி, கோக் ஒரு உதாரணம் !!)

முன்னனி நடிகர்கள் பா.ஜ.கவில் சேர்ந்தால், அந்த கவர்ச்சியாக செய்தியோடு மோடி அலையை சேர்த்து தங்கள் கட்சியை பலப்படுத்தலாம். இவ்வளவு ஏன் விஜயகாந்த் தனது கட்சியை கலைத்து விட்டு பா.ஜ.கவில் இணையலாம்.

நிச்சயமாக 2016 தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க பலமான மூன்றாவது அணியாக மாற இந்த தீர்ப்பு வழிவகுக்கும். ‘பெரியார் பூமியில்’ இன வாதம் வளரக்கூடாது என்றால் அ.தி.மு.க, தி.மு.க இரண்டுமே பலமான கட்சிகளாக இருக்க வேண்டும். தற்போதிய சூழ்நிலை அப்படி இல்லை என்பது தான் என் இரண்டாவது வருத்தம்.

2030 வரையிலான தமிழ்நாட்டின் அரசியலை 2016 தேர்தல் தான் தீர்மானிக்கப் போகிறது. பொருத்திருந்து பார்ப்போம் !!

அதலால், அம்மாவுக்கு எதிரான தீர்ப்பை நான் கொண்டாடுவதாக சொல்லி என்னை மேலும் வருத்தப்பட வைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Thursday, September 18, 2014

பிரமாண்டமல்ல.... பணத்திமிர் !!

ஏன் சங்கர் மீது உங்களுக்கு இவ்வளவு கோபம் என்று ஒரு நண்பர் கேட்கிறார் ?



தயாரிப்பாளராக சங்கரை நான் மதிக்கிறேன். குறைந்த செலவில் ஒரளவு தரமான படங்களை தயாரித்திருக்கிறார். ஆனால், இயக்குனர் சங்கரை ஒரு காலும் என்னால் மன்னிக்க முடியாது.

இந்த பிரமாண்ட இசை வெளியீட்டு விழாவெல்லாம் அதிக விலைக்கு விநியோகஸ்தர்களிடம் விற்பதற்கான வியாபார தந்திரம். சாட்டிலைட் உரிமையை இன்னும் அதிக விலைக்கு விற்க சூட்சமம். தயாரிப்பாளரும், இயக்குனருக்கு லாபம் கிடைக்கலாம். படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு லாபம் கிடைத்தால் தான் உண்மையான வெற்றியே !! அந்த அளவில் முந்தைய சங்கரின் எந்திரன், நண்பன் தோல்வி படமே !!

இசை வெளியீட்டு விழாவுக்கு அவர் செய்த செலவில் ஐந்து ஜிகர்தண்டா படங்களை தயாரிக்கலாம். (அர்னால்ட்டுடன் போட்டோ எடுக்க வேண்டும் என்றால் அமெரிக்காவுக்கு சென்று போட்டோ எடுக்க வேண்டியது தானே !!)



இது ஆஸ்கர் ரவிசந்திரன் பணம். அவருக்கு இல்லாத கவலை. உனக்கு எதுக்கு என்று நீங்கள் கேட்கலாம். ஒரு படத்தின் வெற்றி மூலம் தயாரிப்பாளருக்கு லாபம் தருமானால், அவனுக்கு அடுத்த இரண்டு படம் தயாரிக்க நம்பிக்கை பிறக்கிறது. இன்னும் இரண்டு படங்கள் இயக்க இயக்குனருக்கு, அதில் வேலை செய்யும் தொழிற்நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அப்படி நடந்தால் சினிமாவுக்கு நல்லது.

அதற்கு மாறாக ஒரு படம் தோல்வி அடையும் போது அந்த படத்தின் தயாரிப்பாளர் திரைப்படத் துறையில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறார். எத்தனையோ தயாரிப்பார்கள் முதல் படத்தோல்வியால் திரையுலகில் இருந்து ஒதுங்கியிருக்கிறார்கள்.

இதேப் போன்று தான் விநியோகஸ்தர்களும். அவர்கள் வாங்கும் படம் வெற்றிப் பெற்றால் தொடர்ந்து தொழிலில் இருக்க முடியும். இல்லையென்றால் அவர்களும் ஒதுங்க வேண்டியது தான். 

தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் தேவை பணம் தான். அதை மறுப்பதற்கில்லை. அவர்களுக்கு சினிமாப் பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால், சினிமா உருவாக இவர்கள் தேவை. (நடிகைகளுக்காக அவர்கள் செய்யும் செலவு இங்கு விவாதிக்க வேண்டாம்.)

படைப்பாளியே மக்களிடம் படத்தை கொண்டு செல்லும் வேலையை செய்ய முடியாது. அப்படி செய்தால் அவனால் அடுத்த படைப்பை சரியாக கொடுக்க முடியாது. திரைத்துறையில் எல்லா இயக்குநர்களும் சசிக்குமாரை போல் சொந்தப்பணத்தை முதலீடு செய்து தங்கள் திறமையை நிருபிக்க முடியாது.

இன்னும் கண்ணுக்கு தெரியாத பாலுமகேந்திராக்கள், மணிரத்னங்கள் திரையுலகில் இருக்கிறார்கள். அவர்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைக்காமல் இருக்கிறார்கள். சங்கர் போன்ற இயக்குனர்கள் ஒரு தயாரிப்பாளர் பணத்தை இரண்டு வருடத்திற்கு குத்தகை எடுத்துக் கொள்வது எப்படி மன்னிக்க முடியும்.



நாளை விக்ரமுக்கு இன்னொரு தேசிய விருது கிடைக்கலாம். படம் தோல்வி அடைந்தாலும், சங்கர் அடுத்த படத்தை இயக்க சென்றுவிடுவார்.

ஆஸ்கர் ரவிசந்திரனிடம் கோடிக்கணக்கில் பணம் இருந்தாலும், படம் தோல்வி அடைந்தால் கண்டிப்பாக அடுத்தப்படத்தின் வேலையில் இறங்க ஆறு மாதாவாது ஆகும். இதனால், ஒரு இயக்குனருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு பரிப்போகிறது. ஒரு படம் உருவாகாமல் போகிறது.

ஐ பாடல் வெளியீட்டு... பிரமாண்டமல்ல. ஆஸ்கர் ரவிச்சந்திரன், சங்கர் இருவரிகளின் பணத்திமிர்.

பின்குறிப்பு : பணத்தை வீணாக்குவதில் சங்கர் மிகப்பெரிய குற்றவாளி. அவரைப் போல் புது இயக்குனர் தொடங்கி முன்னனி இயக்குனர் வரை அவரவர் தகுதிக்கு தகுந்தாற்போல் பணத்தை வீணாக்கிக் கொண்டு தான் இருக்கிறார். 

இயக்குனராக ஒருவன் செய்யும் தண்டச் செலவு இன்னொரு இயக்குனரின் எதிர்காலத்தை கேள்விக்குரியாக்கிறது. 

Wednesday, September 17, 2014

சினிமா 1913 -2013 : 9. குணச் சித்திர நடிகர்கள் !

சினிமாவில் கதாநாயகிகள் அதிகப்பட்சமாக ஐந்தாண்டுகள் நடிக்கலாம். அதன்பின் அக்கா, அன்னி, அம்மா பாத்திரங்களுக்கு நடிக்க வந்துவிட வேண்டியதாக இருக்கும். நாயகர்கள் அவர்களை விட கொஞ்சம் அதிகம். ஆனால், அவர்களுக்கு ஒரு காலக்கட்டத்தில் அண்ணன், அப்பா பாத்திரங்களுக்கு மாற வேண்டியது இருக்கும் என்பது தான் சினிமாவின் விதி. (எம்.ஜி.ஆர், ரஜினி, கமல் போன்ற விதி விளக்குகளும் சினிமாவில் உண்டு.)

1930, 40 களில் புகழ் பெற்ற நாயகர்களாக கொடிக் கட்டி பறந்து, பின்பு ஐம்பது சினிமாவில் குணச் சித்திர பாத்திரங்களில் பிரபலமானாவர்கள் பலர் இருக்கிறார்கள்.



எம்.ஆர்.ராதா 

1954ல் வெளியான “ரத்தக்கண்ணீர்” படத்தின் மூலம் வித்தியாசமான நடிப்புக்கு வித்திட்ட நடிகர். இன்று வில்லன நடிகர்கள் தங்கள் நடிப்பில் நகைச்சுவை கலந்து செய்கிறார்கள் என்றால் அதற்கு முன்னோடியாக இருப்பவர் எம்.ஆர்.ராதா அவர்கள் தான்.

எம்.ஆர்.ராதா அவர்கள், தமிழில் சினிமா 1937ல் “ராஜசேகரன்” என்ற படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் நடிக்கும் போது குதிரை மீது குதிக்கும் காட்சியில் அவருக்கு கால் முறிவு ஏற்ப்பட்டது. அதன் பிறகு, “பம்பாய் மெயில்” என்ற படத்திலும் நடித்தார். என்ன காரணத்திற்காகவோ அதன்பின் சினிமாவை விட்டு ஒதுங்கி நாடகத்தில் மட்டுமே நடித்து வந்தார்.

”ரத்தக் கண்ணீர்” வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். ஆனால், அவருக்கு பொருத்தமான பாத்திரம் கொடுக்க முடிக்க முடியுமா என்று அஞ்சியே யாரும் அவரை அனுகவில்லை. தயாரிப்பு ஒத்துழைப்பு தரமாட்டார் என்ற பேச்சு அப்போது அவர் மேல் இருந்தது.

மூன்று வருடம் கலித்து ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் “நல்ல இடத்து சம்பந்தம்” படத்தில் நடித்தார். இந்தப் படம் வெளிவந்த பிறகு தயாரிப்பாளர் எம்.ஆர்.ராதா அவர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார் என்ற நம்பிக்கை வந்தது. மாறுப்பட்ட வேடங்களில் ராதா அண்ணன் நடிக்க முடியும் பலரது நம்பிக்கைப் பெற்ற குணச்சித்திர நடிகராக உயர்ந்தார்.

டி.ஆர். மகாலிங்கம். 

தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா போன்ற இரண்டு சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் மூன்றாவது சூப்பர் ஸ்டாராக மின்னியவர் டி.ஆர்.மகாலிங்கம். சிறு வயதில் இருந்தே பாடும் திறமைக் கொண்டவர். 1938ல் ஏவி.எம்மின் படமான “நந்தகுமார்” படத்தின் மூலம் அறிமுகாமானார். அப்போது அவருக்கு வயது 14 !!

தனது முதல் படத்திலேயே பலரது கவனத்தை ஈர்த்த டி.ஆர். மகாலிங்கம் பரசுராமர், பூலோக ரம்பை போன்ற படங்களில் நடித்தார். அதன் பின் வெளியான “ஸ்ரீ வள்ளி” படம் டி.ஆர்.மகாலிங்கத்தை முக்கிய நடிகராக மாற்றியது. அதை தொடர்ந்து வந்த “நாம் இருவர்” படமும் டி.ஆர்.மகாலிங்கத்தை பெரிய நட்சத்திரமாக உயர்த்தியது. அடுத்து ஐந்து ஆண்டுகளில் வேதாள உலகம், ஞானசவுந்தரி, மாயாவதி, பவளக்கொடி என்று பல படங்களில் நடித்தார்.

புகழ் உச்சியில் இருக்கும் போது தனது மகனின் பெயரில் “சுகுமார் புரொடக்ஷனஸ்” என்ற கம்பெனி சொந்தமான படம் தயாரிக்கத் தொடங்கினார். மச்சரேகை, மோகசுந்தரம், சின்னத்துரை, விளையாட்டு பொம்மை போன்ற படங்களை தயாரித்தார். இதில், ’சின்னத்துரை’ படத்தின் டைரக்ஷன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இதில் எந்த படங்களும் வெற்றிப் பெறவில்லை. அது வரை அவர் சம்பாதித்த பணத்தை எல்லாம் இழக்க வேண்டியதாக இருந்தது. கடன்காரர்களை சமாளிக்க முடியாமல் தன் சொத்துக்களை அனைத்தையும் இழந்தார்.

கண்ணதாசன் இவருக்கு உதவுவதற்காக “மாலையிட்ட மங்கை” என்ற படத்தை தயாரித்தார். படம் வெற்றிப் பெற்றாலும், இவரால் மீண்டும் ‘நாயகன்’ அந்தஸ்தில் நடிக்க முடியவில்லை. குணச்சித்திர பாத்திரங்களில் நடிக்க வேண்டியதாக இருந்தது. திருவிளையாடல், அகத்தியர், ராஜராஜ சோழன் போன்ற படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்தார். 1978ல் உடல் நலக்குறைவால் இறந்தார்.

ரஞ்சன் 

’நாயகன்’ என்றால் நல்லவனாக இருக்க வேண்டும், நான்கு பேருக்கு உதவ வேண்டும், வில்லனோடு சண்டைப் போட வேண்டும் என்று இருந்த காலக்கட்டத்திலே ரஞ்சன் அவர்கள் வில்லன் தன்மைப் பொருந்திய நாயகனாக நடித்தவர். இவர் நடித்த ‘சந்திரலேகா’ இன்று வரை காலத்தால் மறக்க முடியாத காவியப்படமாக இருக்கிறது.

”ரிஷ்யசிருங்கர்” என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் நடித்த “மங்கம்மா சபதம்” மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இதில், அப்பா – மகன் என்று இரட்டை வேடத்தில் நடித்தாலும், அப்பா பாத்திரத்தில் இவர் நடித்த வில்லன் பாத்திரம் தான் அதிகம் பேசப்பட்டது.

“சந்திரலேகா” படத்தில் எம்.கே.ராதா தான் நாயகன் என்றாலும், நாயகனுக்கு இணையாக ரஞ்சனின் வில்லன் பாத்திரப்படைப்பு இருந்தது. இறுதிக் காட்சியில் இவர்களின் கத்திச் சண்டை பிரமாதமாக அமைந்தது. எம்.கே.ராதா நடித்த “அபூர்வ சகோதர்கள்” படத்தை இந்தி பதிப்பான “நிஷான்” படத்தில் நாயகனாக நடித்தார்.

வி.நாகையா

தெலுங்கு பட உலகில் கொடிக்கட்டி பறந்தவர் வி.நாகையா. 1938ல் கண்ணம்மாவோடு “கிரகலட்சுமி” என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர், சுமங்கலி, தேவதா போன்ற பல படங்கள் நடித்தார். 1950ல் தமிழில் இவர் நடித்த “ஏழை படும் பாடு” மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.

”என் வீடு” (1953) என்ற படத்தை தமிழ், தெலுங்கில் தயாரித்ததோடு இல்லாமல் டைரக்ஷ்ன், இசை இவரே ஏற்றுக் கொண்டார். எம்.ஜி.ஆரின் “சர்வாதிகாரி”, சிவாஜியின் “தெனாலிராமன்”, மீரா, பாவமன்னிப்பு என்ற பல படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்தார். நடிப்புக்காக மத்திய அரசின் “பத்மஸ்ரீ” விருது பெற்றவர், தனது கடைசிக் காலத்தில் பொருளாதாரத்தால் சிரமப்பட்டு இறந்தார்.

எஸ்.வி.சகஸ்ரநாமம்

நாடகத்துறை மட்டுமில்லாமல் திரைப்படத்துறையிலும் பல சாதனைப் புரிந்தவர் எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்கள்.

டி.கே. சண்முகம் அவர்கள் “சண்முகானந்தா சபா” நாடகக் குழுவில் பணியாற்றியவர், 1935ல் “மேனகா” படத்தில் முதன் முதலாக நடித்தார். இந்தப் படத்தில் அறிமுகமான இன்னொரு நடிகர் என்.எஸ்.கே !!

”என்.எஸ்.கே நாடக சபை” யின் முக்கிய நடிகராக விளங்கியதோடு இல்லாமல் அந்த நாடகக் குழுவின் நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டார். லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் என்.எஸ்.கே சிறைச் சென்ற போது, அந்த காலக்கட்டத்தில் உருவான “பைத்தியக்காரன்” படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.

1949ல் ஏ.வி.எம் தயாரிப்பான “வாழ்க்கை” படத்தில் எதிர்மறை நாயகன் பாத்திரத்தை ஏற்றார். ”பராசக்தி” படத்தில் சிவாஜி அண்ணனாக நடித்தவர், பிறகு சிவாஜி நடித்த பல படங்களில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.

“போஸ்காரன் மகள்” படத்தில் இவர் ஏற்று நடித்த தந்தைப் பாத்திரம் மறக்க முடியாதவை.

எஸ்.வி. ரங்கா ராவ்

ராவணா, கடோத்கஜன், துரியோதனன், இரணியன் என்று புராணப் பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த கலைஞர் எஸ்.வி.ரங்கா ராவ் அவர்கள். 1946ல் ’வரோதினி’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர், இரு மொழியில் எடுக்கப்பட்ட “பாதாள பைரவி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.

ஒரு பக்கம் இராவணன், ஏமன் என்று புராணப் பாத்திரங்கள், இன்னொரு பக்கம் “பேசும் தெய்வம்”, “படிக்காத மேதை”, “முத்துக்கு முத்தாக” படங்களில் குடும்பத் தலைவன் பாத்திரம், மாயஜாலப் படங்களில் வில்லன் பாத்திரம் என்று சகலமும் ஏற்று நடிக்கக் கூடிய வல்லவர்.

”பக்த பிரகலாதா” படத்தில் கிட்டதட்ட பதினைந்து கிலோ எடையுள்ள ஆபரணங்களை அணிந்து நடித்தார்.

“விஸ்வ நாடக சக்கரவர்த்தி” என்று புகழ்ப் பெற்ற இவர் தனது 56வது வயதில் இறந்தார்.

அடுத்த இதழில் மறக்க முடியாத நகைச்சுவை நடிகர்கள் !!!!

நன்றி : நம் உரத்தசிந்தனை, செப்டம்பர், இதழ், 2014

Monday, September 15, 2014

லூசியா (எனக்குள் ஒருவன்)

முதன் முதலாக நான் முழுமையாகவும், மிகவும் ரசித்து பார்த்த கன்னடப்படம்.

இதற்கு முன் கிரவுட் பண்ட்டில் பல படங்கள் வந்திருந்தாலும், பெரியளவில் வெற்றிப் பெற்ற படம் என்றால் ”லூசியா” தான்.

கனவுக்கும், நிஜத்திற்கும் இடையே மாட்டிதவக்கும் சராசரி மனிதனின் கதை தான். நிஜத்தில் சந்தித்த மனிதர்கள் தான் கனவிலும் வருகிறார்கள். நிஜத்தில் எப்படியெல்லாம் அவர்கள் தன்னுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தானோ, கனவில் அப்படி நடந்துக் கொள்கிறார்கள்.



ஒரு கட்டத்தில் கனவு நிஜத்தை வெல்லும் போது, இயல்பு வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் கனவிலே வாழ்ந்துவிடலாம் என்று முடிவெடுக்கிறான் நாயகன். அதில் இருந்து மீண்டு வந்தானா இல்லையா என்பது தான் கதை.

இரண்டு கதையிலும் நாயகன் ஒருவன் என்றாலும், இரண்டு பேரின் வாழ்க்கையும் நேர் எதிர்.

எல்லோருக்கும் வாழ விரும்பிய வாழ்க்கை ஒன்று இருக்கும். அதில் வாழ்ந்து பார்க்க வேண்டும் ஆசை இருக்கும். ஆனால், இயல்பு வாழ்க்கையை மாற்றிக் கொண்டு பிடித்தது போல் மாற்றி அமைத்துக் கொள்ளத் எல்லோராலும் முடிவதில்லை.

நம்முடைய சராசரி வாழ்க்கை அடுத்தவனுக்கு மிகப் பெரியதாக இருக்கும். அந்த சராசரி வாழ்க்கையை நமக்கு கீழ் இருப்பவன் மட்டுமல்ல, நமக்கு மேல் வசதியாக இருப்பவனும் விரும்புகிறான் என்பதை இந்தப் படம் உணர்த்துகிறது.

தமிழில் சித்தார்த் இரண்டு பாத்திரத்தில் நடிக்க தன்னை அதிகம் மாற்றிக் கொண்டு இருக்கிறார் என்பது புகைப்படத்தில் தெரிகிறது. இயக்குனர் அத்தோடு நிறுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும்.

கொஞ்சம் மாற்றினாலும் குழம்பிவிடக் கூடிய திரைக்கதை அது. மிக நேர்த்தியாக கன்னடத்தில் கையாண்டு இருப்பார்கள். தமிழில் அப்படியே இருந்தால் போதும். கன்னடப் படத்தில் இருக்கும் திரைக்கதை தமிழுக்கு மாற்ற வேண்டும் என்று நினைத்து அதி புத்திசாலித்தனத்தை காட்டக் கூடாது. (நாம சொன்னா கேக்கவா போறாங்க).

கன்னடத்தில் அதிகம் என்னை கவர்ந்ததால் “எனக்குள் ஒருவன்” படத்தை தமிழில் மிகவும் எதிர்ப்பார்க்கிறேன். வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

Thursday, September 11, 2014

மருத்துவரும், மெக்கானிக்கும் !

என் இரு சக்கர வாகனத்தை சரி செய்ய மெக்கானிக்கிடம் கொடுக்கிறேன். புது இன்ஜின் மாற்ற வேண்டும் என்று நான்காயிரம் கேட்கிறான். நானும் பணம் கொடுக்கிறேன். புது இன்ஜின் பொருத்திய பிறகு வண்டி ஓடவில்லை.

“சார் ! வண்டியை எடைக்கும் போட வேண்டும். எதுக்கும் பயன்படாது” என்கிறான்.

அதன் பிறகு, புது இன்ஜினை அவன் திரும்பக் கொடுக்க வேண்டும். அல்லது நான் கொடுத்தப் பணத்தை திரும்ப தர வேண்டும். அது தான் நியாயம்.

இன்ஜின் தராமல், பணத்தையும் தராமல் உனக்காக வேலை செய்ததற்கு எனக்கு கூலி என்று சொல்லி பணம் தராமல் இருப்பது எப்படி சரியாகும் ?

இதே சூழ்நிலை தான் மருத்துவமனையில் நடக்கிறது.

உடல்நலம் பெற்று சரியான அவர்களிடம் பணத்தை பெருவதில் நியாயம் இருக்கிறது. குணப்படுத்த முடியாமல் ஒரு நோயாளி இறந்துவிட்டால், அவர்களிடம் பணத்தை பெற்றது எப்படி சரியாகும் ?

இரு சக்கர வாகனும், மனிதனும் ஒன்றா என்ற கேள்விகள் இங்கு வேண்டாம். மருத்துவரும், மெக்கானிக்கும் கொடுக்கும் சேவை ஒன்று தான்.

ஓடாத வண்டியை மெக்கானிக் ஓட வைக்கிறார். நோயுள்ள உடலை மருத்துவர் குணப்படுத்துகிறார்.

நாம் ஒரு வேலை செய்து முடிக்கிறேன் என்று சொல்லி பணத்தை வாங்கிய பிறகு, அந்த வேலை முடிக்க முடியவில்லை என்றால் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்கிறோம். இது தான் அடிப்படை நேர்மை. பெரும்பாலும் எல்லா தொழிலும் அது தான் நடக்கிறது. ( மருத்துவம் தொழிலல்ல... சேவை என்று சொல்ல வேண்டாம்.)

ஆனால், மருத்துவத்துறையில் மட்டும் ஏன் இப்படி நடப்பதில்லை.
( வழக்கறிஞர்களும் அப்படி தான் நடந்துக் கொள்கிறார்கள். இவர்களைப் பற்றி தனியாக விவாதிக்கலாம்.)

”நோயாளி இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன். ”

இந்த பழமொழி மருத்துவத்துறையில் சரியா ? மாற்றுவதில் எதாவது பிழையா ? சராசரி மனிதனாக எனக்கு இருக்கும் சந்தேகம் .

மருத்துவர்கள் சமூகத்தில் முக்கியமான அங்கத்தினர். அவர்களை சேவையை நாம் மறுக்க முடியாது. நாளைக்கே ‘நீயா நானா’ கோபிக்கோ, ஆண்டனிகோ அல்லது இந்த கேள்விகள் கேட்டும் எனக்கோ உடல் சரியில்லை என்றால் மருத்துவர்களிடம் தான் செல்ல வேண்டும்.

குணப்படுத்திவிட்டு பணம் வாங்குவது வேறு. குணப்படுத்த முடியாமல் பணம் வாங்குவது என்பது வேறு. என் அடிப்படை கேள்வி இது தான்.

Tuesday, September 9, 2014

வெள்ளை மொழி - ரேவதி

இன்றைய இணையப் புரட்சியில் ஹார்மோன்களைப் பற்றியும், உடலில் வரும் மாற்றங்களைக் குறித்தும், அதன் பாதிப்பு குறித்தும் தெரிந்துக் கொள்ளவோ, புரிந்துக் கொள்ளவோ முடிகிறது. ஆனால், 80களில் இதைப் பற்றி தெரிந்துக் கொள்ள வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட காலக்கட்டத்தில் தான் பெண் என்று உணர்ந்து பெற்றோர்களால், சகோதரர்களால் புறக்கனிக்கப்பட்டு தனக்கான அங்கிகாரத்தை தேடி அளைந்த திருநங்கை ரேவதி அம்மாவின் சுயவரலாறு தான் “வெள்ளை மொழி”.


திருநங்கைக் குறித்து வந்த “நான் வித்யா”, சு.சமுத்திரத்தின் “வாடா மல்லி” போன்ற புத்தகங்களில் தன்னை பெண் என்று உணர்ந்த தருணம் முதல் பெண்ணாக மாறும் வரை அதற்காக அவர்கள் சந்தித்த போராட்டம் நீண்டதாக இருக்கும். அதில் திருநங்கையினர் பெண்ணாக மாறிய பிறகு சந்தித்த சவால்களை அந்த இரண்டு நூல்களில் அலசப்பட்டதைவிட “வெள்ளை மொழி” யில் மிக நீண்டதாகவே கூறப்பட்டிருக்கிறது.

பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டு வட நாட்டுக்கு சென்று தனக்கு நிர்வாண ஆப்ரேஷன் செய்து கொண்டதில் இருந்து, பாலியல் தொழில், பிச்சை எடுப்பது, பெங்களூரில் வேலை, திருமணம், பெற்றோர்களுடன் சொத்துரிமை, டிரைவிங் லைசன்ஸ் பெறுவது என்று நித்தம் ஒவ்வொரு நாளும் தன் வாழ்க்கையை சந்தித்த சவால்களை ரேவதி அம்மா பதிவு செய்திருக்கிறார்.

திருநங்கையராக மாறிய பல திருநங்களுக்கு ரேவதி அம்மா வாழ்க்கை ஒரு முன் உதாரணம். அதன் பதிவே இந்த புத்தகம்.

புறக்கனிப்பு தவிர மிகப் பெரிய தண்டனை ஒரு மனிதனுக்க்கு மரணத்தால் கூட கொடுக்க முடியாது. அப்படி ஒரு தண்டனையை தங்கள் வாழ்நாள் முழுக்க திருநங்கையர்கள் அனுபவித்து வருகிறார்கள். எத்தனையோ அவமானங்களையும், கொடுமைகளையும் தாண்டி இன்று ஒரு சில திருநங்கையர்கள் மட்டுமே ஒரளவு சாதித்திருக்கிறார்கள். அவர்கள் சாதனை முழுமையடைய வேண்டும் என்றால் இன்னும் சமூகத்தில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கிகாரமும் வழங்க வேண்டும்.

ஒரு இடத்தில் வாடகைக்கு வீடு எடுப்பதில் இருந்து, இரு சக்கர வாகனத்திற்கு லைஸென்ஸ் வாங்குவது, சொத்துரிமை கேட்பது, திருமணத்திற்கு அங்கிகாரம், வேலை அங்கிகாரம் என்று எவ்வளவோ சவால்கள் அவர்களை சுற்றி இருக்கிறது. அத்தனை சவால்களை இந்த நூலில் ரேவதி அம்மா வாழ்க்கை மூலம் தெரிகிறது.

இந்த சமூகத்தில் ஒரு பெண் சந்திக்கும் பாலியல் கொடுமைகளை விட திருநங்கையர்கள் சந்திக்கும் பாலியல் கொடுமைகள் மிக அதிகம். பாலியல் தொழில் அல்லது பிச்சை எடுப்பது இந்த இரண்டு தொழிலை தவிர இந்த சமூக அவர்களுக்கு விட்டு வைக்கவில்லை.

பிச்சைப் போட்டு ஒதுங்கி செல்லும் மௌனமாக மக்கள் ஒரு புறம். இச்சைக்காக தேடி வரும் ஆண்கள் இன்னொரு புறம். இரண்டும் நடுவில் தங்களுக்கான வாழ்க்கையை தேட முடியாமல் தவிக்கின்றனர். 

முடிந்தளவில் பிச்சைப் போட்டு ஒதுங்கி செல்லும் மௌனமாக மக்கள் மனதில் இருக்கும் மனிதத்தை இதுப் போன்ற புத்தகங்கள் தட்டி எழுப்பும் நம்புவோம்.

**
வெள்ளை மொழி - ரேவதி 
அடையாளம் வெளியீடு
Rs.200 

Wednesday, September 3, 2014

சில முக்கிய புத்தகங்கள் !!

யார் தொடங்கினார் என்று தெரியவில்லை. பேஸ்புக்கில் அவரவர் பிடித்த பத்து நூல்கள் என்று பதிவிடுவதால் நானும் என் பங்கிற்கு பதிவிடுகிறேன். கண்டிப்பாக ஜான்பவான் நூல்கள் இருக்கக் கூடாது என்ற நோக்கத்துடன், நண்பர்களின் புத்தகத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று என் நினைவில் இருப்பதை குறிப்பிட்டுயிருக்கிறேன்.

 1. ஆட்டிசம் சில புரிதல்கள் - யெஸ். பாலபாரதி
எல்லா புத்தகங்களும் வாசிப்பதற்காக மட்டுமே எழுதப்பட்டதல்ல. எல்லா புத்தகங்களும் அறிவை வளர்த்துக் கொள்வதற்கு மட்டுமே தயாரிக்க பட்டதுமல்ல. அதையும் தாண்டி நம் சிந்தனையை தூண்டவும், மற்றவர் உணர்வுகளை புரிந்துக் கொள்ள உதவவும் புத்தகங்கள் வெளிவருகிறது. அந்த எண்ணத்தில் எழுதப்பட்டப் புத்தகம் தான் யெஸ்.பாலபாரதி எழுதிய "ஆட்டிசம் சில புரிதல்கள்".

மேலும் இந்த நூல் குறித்து நான் எழுதிய முந்தைய பதிவு.

2. வில்லாதி வில்லன் – பால ஜெயராம் 
நான் எழுதிய ‘உலகை உறையவைத்த இனப்படுகொலை’ நூலுக்கு இந்த நூல் தான் உத்வேகம். இரண்டு கட்டுரைகளுக்கு இந்த நூல் தான் உதவியது. மனிதர்களை கொன்று குவித்த வில்லாதி வில்லர்களின் மிருக வரலாறு நூல் என்று சொல்லலாம்.

3. கலைவாணி : ஒரு பாலியல் தொழிலாளியின் கதை
நளினி ஜமிலாவின் புத்தகத்திற்கு போட்டியாக கிழக்கு பதிப்பகம் இந்த புத்தகத்தை வெளியிட்டுயிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நளினி ஜமிலா நூல் ஏற்படுத்திய தாக்கத்தை இந்த நூல் ஏற்ப்படுத்தவில்லை என்றாலும், அவரை விட இவர் பல துயர்களை அனுபவித்திருக்கிறார். தனது திருமணத்திற்காக அக்காவின் கணவன் சம்மதம் பெருவதில் தொடங்கி தன் குழந்தைகளை காப்பாற்றும் வரை இந்த தொழிலில் இருந்து ஒரு பெண்ணால் மீண்டு வர முடியாத துயரமாக இருக்கிறது. ”தேவுடியா” என்ற வார்த்தையை யார் கெட்ட வார்த்தை என்று கூறினார்கள் என்ற கேள்வி இந்த புத்தகம் முடிக்கும் போது தோன்றியது.

4. நான் வித்யா - Living Smile Vidya 
திருநங்கை எழுதிய முதல் புத்தகம். தட்ஸ்தமிழில் இந்த நூலைப்பற்றிய அறிவிப்பு வந்ததுமே புத்தகக் கண்காட்சியில் முதல் சென்று வாங்கிய புத்தகம். ஆண் உடலில் வாழும் பெண்ணுக்கு ஏற்ப்படும் அவமானங்கள், சலனங்கள், போராட்டங்கள் என்று இந்தப் புத்தகம் உணர்த்துகிறது. சு.சமுத்திரத்தின் “வாடா மல்லி”, ரேவதி அம்மாவின் “வெள்ளை மொழி” நூல்களை விட திருநங்கைப் பற்றிய இந்த நூல் தான் என்னை அதிகம் ஈர்த்தது.

5. பணம் - கே.ஆர்.பி. செந்தில் 
வேலைக்காக போலி பாஸ்போர்ட்டில் வெளிநாட்டுக்கு செல்லும் இளைஞர்களை பற்றியும், அவர்கள் அங்கு படும் துயரத்தை பற்றிய புத்தகம். கட்டுரை நூல் தான். ஆனால், நாவலா ? ஆட்டோ பிக்ஷனா ? என்று பல சந்தேகத்தை இந்த நூல் கிளப்புகிறது. பணத்தை தேடிச் செலும் மனிதர்களை பற்றிய கட்டுரையாக எழுதுவதற்கு பதிலாக நாவலாக எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இந்த நூலைப் பற்றி முன்பு எழுதிய பதிவு. 

6. பிணம் தின்னும் தேசம் – சு.சண்முகசுந்தரம் 
2012ல் நாட்களாக கவிதை நூல் வாசிக்காமல் இருந்த என்னை மீண்டும் கவிதை பக்கம் இழுத்து வந்து, அந்த நூலை பதிப்பிக்கும் அளவிற்கு மாற்றிய கவிதை நூல் இது. ஈழத்தை வைத்து எத்தனையோ கவிதை நூல்கள் வந்திருக்கிறது. அதில், கண்டிப்பாக இந்த நூல் முக்கியமானது என்று சொல்லலாம்.

7. சினிமா ரசனை - Amshan Kumar
 சினிமா பிரியர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம். ஒவ்வொரு க்ளாசிக் உலக சினிமாவை விமர்சிப்பதோடு இல்லாமல் சினிமாவை எப்படி ரசிக்க வேண்டும் என்பதை இந்த புத்தகம் விளக்குகிறது.

8. அழிக்கப்பிறந்தவன் - Yuva Krishna 
பர்மா பஜாரில் நடக்கும் திருட்டு விசிடியை வைத்து மையமாக எழுதிய நாவல். லாஜிக் இடையூறு கொஞ்சம் இருந்தாலும், விறு விறுப்பான எழுத்து நடைக்காக வாசிக்கலாம். இந்த நாவலை எழுத்தாளர் அனுமதியின்றி ஒரு பாடலாசிரியர் திரைப்படமாக்கி வருகிறார் என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது.

9. 6174 - Sudhakar Kasturi
ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை விறு விறுப்பு. கடைசியில் ஆங்கிலப் பட பாணியில் இரண்டாம் பாகத்திற்கு ஒரு நாட் வைத்து முடித்திருப்பது க்ளாஸ்.

இந்த புத்தகத்தைப் பற்றி முன்பு நான் எழுதிய பதிவு. 

10. ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள் 
ஹிட்லரின் மரண முகாமில் மாட்டி தவித்த பதினான்கு வயது சிறுமியின் இரண்டு வருட அனுபவ குறிப்புகள். பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல். யூத இனப்படுகொலையின் போது பல உயிர்களோடு உணர்வுகளும் சேர்ந்து புதைக்கப்பட்டிருக்கிறது. அதில் இந்த சிறுமியின் உணர்வுகளும் ஒன்று.


கலைவாணி : ஒரு பாலியல் தொழிலாளியின் கதை, நான் வித்யா, பணம் - out of print
சினிமா ரசனை, 6174 - out of stcok

மேல் குறிப்பிட்ட மற்ற புத்தகங்களை www.wecanshopping.com வாங்கலாம்.

LinkWithin

Related Posts with Thumbnails