வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Sunday, August 27, 2017

விவேகம் - இணைய வன்மத்திற்கு ஒரு எதிர்விணை

படம் ரொம்ப ஸ்லோவா போகுதா ? இல்லைங்க. 

அஜீத் கேவலமா நடிச்சிருக்காரா ? இல்லைங்க. 

ரொம்ப அதிகமா உழைச்சிருக்காரு. பாட்டு நல்லா இல்லையா ? சூப்பர் சொல்ல முடியாது. ஒகே ரகம் தான். 

வேறு என்ன தான் பிரச்சனை. ஆரம்பக்காட்சியில் காஜல் அகர்வால் வரும் இரண்டு காட்சியை தவிர்த்து மற்ற எல்லாக் காட்சியில் யாராவது துப்பாக்கியால் சுட்டு கொண்டே இருக்கிறார்கள். கண்ணு வலிக்குது.

அப்படியா ! இது அக்ஷன் படம். உளவாளி படம் என்றால் அப்படிதான் இருக்கும். ஜெம்ஸ்பாண்ட் படங்கள் இப்படி தான். டூ பீஸ்ஸில் நடிகைகள் வராதது உங்களுக்கு வருத்தமாக இருக்கலாம். 

வேறு என்ன பிரச்சனை ? சண்டைக் காட்சியில் லாஜிக் இல்லை. அது எம்.ஜி.ஆர், ரஜினி படங்களில் இருந்து தொடரும் பிரச்சனை. ஒரு படத்தில் மாற்ற முடியாது… அடுத்தது என்ன ? 

யோவ் ! படம் மொக்க அவ்வளவு தான். விடுவியா ?? 

அடப்பாவிங்களா !!! மொக்கப்படம் சொல்லுறது ஒரு நியாயமான விஷயம் கூட சொல்ல முடியல. எப்படிடா மொக்கனு சொல்லுறீங்க…? அதுவும், படம் அஜீத் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்பது எல்லாம் ‘ரொம்ப ஓவர்’ மட்டுமல்ல. வன்மம். 100% அஜீத் ரசிகர்களுக்கு பிடிக்கும். 

**



படத்தில் கலாய்க்க இரண்டு விஷயம் தான் என் கண்ணில் பட்டது. ஒன்று அஜீத்தின் Introduction. தனி மனிதனாக தாக்குதல் நடத்திவிட்டு பல ஆயிர அடி நீர் வீழ்ச்சியில் குதித்து தப்பிப்பது. அதேப் போல் செர்பியா மாஃபியா கூட்டத்தின் நடுவில் தனிமனிதனாக தாக்குதல் நடத்துவது. 

இரண்டாவது, க்ளைமாக்ஸ் பாடல். தெலுங்கு பட பாணியில் நாயகன் – வில்லன் சண்டையின் போது நாயகி பாடுவது மிக பழைய ஸ்டைல். 

மற்ற லாஜிக் பிழைகள் எல்லாம் படத்தின் அக்ஷன் மெஜிக்கில் உங்களால் கவனிக்க முடியாது. 

திரைக்கதையில் ஏதாவது பிரச்சனையா என்று பார்த்தால் கண்டிப்பாக இல்லை. அடுத்தக் காட்சி என்னவென்று உங்களால் யூகிக்க முடிந்ததா? நாயகன், வில்லன் Cat & Mouse விளையாட்டு எவ்வளவோ வந்துவிட்டது. அந்தப்படங்களில் பல விஷயங்களை நீங்கள் யூகித்திருப்பீர்கள். இப்படி Technologyயை பயன்படுத்தி இதை செய்யப்போகிறான் என்று விவேகம் பார்க்கும் போது உங்களால் யூகிக்க முடிந்ததா ? 

ஒரு காட்சி முடிந்து என்ன நடந்தது என்று நாம் உணர்வதற்கு அடுத்தக் காட்சியின் வேகம் தொடங்கிவிடுகிறது. ’தம்’ அடிக்கக்கூட உங்களால் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வேகமாக செல்கிறது. 

** 

கபாலி போன்று ரூ.2000 டிக்கெட் விற்பனை செய்யவில்லை. சாதி அரசியலை பேசவில்லை. நடிகைகள் யாரும் அரைகுறை ஆடையில்லோ, ஐட்டம் பாடலோ இல்லை. 100% அக்ஷன் படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள். இருந்தும் விவேகம் எதிரான இணைய கருத்துகளை இரண்டு விதமாக நான் பார்க்கிறேன். 

ஒன்று. சிறுத்தை சிவா மீது மற்ற இயக்குனர்கள் / உதவி இயக்குனர்களின் பொறாமை. ‘Collection King’ அஜீத்தின் கால்ஷீட் Wholesaleஆக வாங்கி வைத்திருப்பதால் அவர் மீது பொறாமை இருப்பது இயல்பே !! இவர்கள் யாரும் அஜீத்தின் உழைப்பை கூறவில்லை. சிறுத்தை சிவாவை விட்டு வாருங்கள் அஜீத் என்று அட்வைஸ் தான் கொடுக்கிறார்கள். 

இரண்டாவது. படம் ஒரு சிலருக்கு புரியவில்லை. Hacking, Satellite, 900m Sniper, Morse code Communication, Secret Society என்று ஒன்றன்பின் ஒன்றாக திரைக்கதை அடுக்கிக்கொண்டே போகிறது. பக்கத்தில் இருப்பவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வதற்குள் அடுத்த காட்சியின் வேகம் எடுத்துகொள்கிறது. 

தொய்வில்லாத ஒரு திரைக்கதையை எப்படி ’மொக்கை’ என்று உங்களால் சொல்ல முடிகிறது? அஜீத் நடித்த ஆழ்வார், அஞ்சநேயா போன்ற மொக்கப்படங்களை பார்த்து வருத்தப்பட்டிருக்கிறேன். அவர் நடித்த பல கமர்ஷியல் படங்களை ரசித்திருக்கிறேன். பில்லா – 2 தவிர்த்து வேறு எந்த அஜீத் படத்தை குறித்தும் நான் எழுதியதில்லை. தேவை ஏற்பட்டதுமில்லை. இணைய வன்மத்திற்காக இந்தக்கட்டுரை எழுதுகிறேன். 

விவேக் ஒப்ராய், காஜல் அகர்வாஜ், அக்ஷரா போன்றவர்கள் நடித்திருப்பது மூலம் அஜீத் தனக்கான ஹிந்திப்பட மார்க்கெட் உருவாக்கி இருக்கிறார். அதற்காக பல காட்சிகள் உருவாக்கியிருப்பது புரிகிறது. இதுவும் ஒரு சிலருக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம். இது அஜீத்தின் பிழையல்ல... அடுத்தக்கட்ட முயற்சி செய்தாமல் வேடிக்கை பார்ப்பவர்களின் பிழை. 

’விவேகம்’ தமிழில் வந்த ஆங்கில அக்ஷன் படம். உங்கள் வன்மத்தை பலியாகும் படமல்ல.

Thursday, August 24, 2017

ஒரு கதை இரண்டு திரைக்கதை !!

A Hard Day ( 2014) - Directed by Kim Seong-hun
The Chronicles of Evil ( 2015) - Directed by Beak Woon-hak 

Produced by Jang Won-seok

Language : Korean

 Kim Seong-hun என்ற இயக்குனர் தயாரிப்பாளர் Jang Won-seokயை சந்திக்கிறார். “ஒரு காவல் அதிகாரி சந்தர்ப்பவசத்தால் ஒருவனை கொன்றுவிடுகிறான். தன்னை காப்பாற்றிக் கொள்ள இறந்தவனின் உடலை மறைக்கிறான். அடுத்த நாள், அவனை கண்டுப்பிடிக்கும் பொறுப்பு அந்த காவல் அதிகாரியிடம் வருகிறது.” என்று தனது கதையின் ஒன் லைன்னை சொல்கிறார். 

கதைப் பிடித்துப் போக ”A Hard Day” படத்தை தயாரிக்க Jang Won-seok ஒத்துக்கொள்கிறார். படம் வெளியாகி சக்கைப் போடு போடுகிறது. ஹாலிவுட் படங்களுக்கு நிகரான வசூலை கொடுக்கிறது. 

அடுத்த வருடம், இயக்குனர் Beak Woon-hak தயாரிப்பாளர் Jang Won-seok யிடம் தனது கதையை சொல்கிறார். “ஒரு காவல் அதிகாரி சந்தர்ப்பவசத்தால் ஒருவனை கொலை செய்கிறான். தன்னை காப்பாற்றிக் கொள்ள இறந்தவனின் உடலில் இருக்கும் தடயத்தை அழித்து அந்த இடத்தை விட்டு நகர்கிறான். அடுத்த நாள், இறந்தவனின் உடல் மக்கள் பொது வந்து செல்லும் இடத்தில் தொங்கவிட்டிருப்பதை பார்க்கிறார்கள். அந்த கொலையை கண்டுப்பிடிக்கும் பொறுப்பு அந்த காவல் அதிகாரியிடம் வருகிறது.” என்று தனது கதையை சொல்கிறார். 

நியாயமாக கதையை கேட்ட Jang Won-seokக்கு கோபம் வர வேண்டும். “நான் தயாரித்த படத்தின் கதையை மறுப்படியும் என் கிட்டையே சொல்றீயா ?” என்று அடித்து விரட்டியிருக்க வேண்டும். தனது Kim Seong-hun சொல்லி காப்புரிமை வழக்கு போட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி அவர் செய்யவில்லை. The Chronicles of Evil (2015) படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுக்கிறார். இந்தப்படமும் வசூலை அள்ளி குவித்தது. 



ஒரே கதையோடு வந்த இரண்டு இயக்குனருக்கும் வாய்ப்பு கொடுத்து, இரண்டையும் வெற்றிப்படமாக மாற்றினார் தயாரிப்பாளர் Jang Won-seok. இரண்டு படத்தின் ஒன் – லைன் ஒரே மாதிரியாக இருந்தாலும், அதன் திரைக்கதை கையாண்ட விதமும் வேறு விதமாக இருந்தது. 

இரண்டும் த்ரில்லர் படம் தான். நாயகனை மிரட்டும் வில்லன் பாத்திரமும் ஒரே மாதிரியான பொருப்பில் தான் இருக்கிறார்கள். பார்வையாளனுக்கு இரண்டும் ஒன்று போல் இல்லாத திரைக்கதை தான் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. 


A Hard Day கதை இது தான். 

நாயகன் நேர்மையற்ற காவல் அதிகாரி. தன் அம்மாவின் மரண செய்தி அறிந்து காரை வேகமாக ஓட்டிவருகின்றான். அந்தச் சமயத்தில் அவனது அலுவலகத்தில் லஞ்சம் வாங்கியதற்காக விசாரணை நடக்கிறது. அவனது மனைவி விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறாள். தனது வாழ்க்கையில் இன்று தான் ’கெட்ட நாள்’ என்று நினைத்து வேகமாக வண்டி ஓட்டும் போது ஒருவன் மீது இடித்துவிட, அவன் இறக்கிறான். 

ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனை. இப்போது, விபத்தில் ஒருவன் இறந்திருக்கிறான். மேலும் பிரச்சனையை தவிர்க்கவும், தன்னை காப்பாற்றிக் கொள்ளவும் இறந்த உடலை மறைக்கிறான். அம்மாவுக்கு இறுதி மரியாதை எல்லாம் செலுத்தி, மீண்டும் வேலைக்கு செல்கிறான். அப்போது, அவனது மேலாளர் ஒரு புகைப்படம் கொடுத்து “இவன் ஒரு சமூக விரோதி. அவனை நாம் கண்டுப்பிடிக்க வேண்டும்.” என்கிறார். அந்தப் புகைப்படத்தில் இருப்பது தனது காரில் அடிப்பட்டு இறந்தவன். 

அப்போது, அவனுக்கு அலைப்பேசி அழைப்பு வருகிறது. ”இறந்தவனை நீ தான் ஒழித்து வைத்திருக்கிறாய் என்று எனக்கு தெரியும். அவனை என் முன்னால் நிறுத்தினால். நீ பிழைத்தாய்” என்று மிரட்டுகிறது. அங்கிருந்து படம் வேகமாக பயணிக்கிறது. 

இறந்த உடலை எப்படி மறைத்தான் ? தன்னை மிரட்டுவது யார் ? இருட்டில் நடந்த விபத்து எப்படி காவலர்கள் கண்டிப்பிடிக்கிறார்கள் ? என்பது தான் திரைக்கதை. * 

The Chronicles of Evil கதை. 

காவல்துறையில் பெரிய பதவி அடையப் போகும் நாயகன். அதற்கான சிபாரிசு பட்டியலில் முதல் பெயராக அவன் பெயர் இருக்கிறது. அதுவரை பிரச்சனையிலும் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று மேலாளர் அறிவுரை கூறியிருக்கிறார். 

தன் வெற்றியை தனது டீம்மோடு பார்ட்டியை கொண்டாடிவிட்டு வீடு திரும்ப ஒரு டாக்ஸியில் ஏறுகிறான். அப்போது, அந்த டாக்ஸி டிரைவர் ஊருக்கு வெளியில் அவனை கொலை செய்ய முயற்சிக்க, தற்காப்புக்கு டாக்ஸி டிரைவரை கொன்றுவிடுகிறான். இதை வெளியே சொன்னால் தனது பதவி உயர்வுக்கு தடையாக இருக்குமோ என்று நினைக்கிறான். தடயத்தை அழித்துவிட்டு தனது வீட்டுக்கு வருகிறான். 

அடுத்த நாள், இறந்தவனின் உடல் பொது இடத்தில் க்ரேனில் தொங்கியிருப்பதை மக்கள் பார்த்து அலறுகிறார்கள். காவல்துறையினருக்கு பெருத்த அவமானமாக இருக்கிறது. காரணம், உடல் தொங்கிகொண்டிருப்பது தலைமை காவலர் அலுவலகத்தில் அருகில். கொலையை கண்டிப்பிடிக்க நாயகனிடமே ஒப்படைக்கப்படுகிறது. 

ஊர் வெளியில் இருந்த உடல் எப்படி பொது இடத்தில் தொங்கவிட்டனர் ? தன் பதவி உயர்வை காப்பாற்றிக் கொள்ள தனது குழு துப்பறிவதை எப்படி தடுக்கிறான்? அதற்கான சாட்சியை எப்படி அழிக்கறான் ? என்பது தான் திரைக்கதை. 

இரண்டும் கதை ஒன்றாக இருந்தாலும், A Hard Day படத்தில் நாயகன் அச்சத்தில் நடுங்குகிறான். The Chronicles of Evil படத்தில் நாயகன் குற்றவுணர்வில் தவிக்கிறான். 

இரண்டு படத்திலும் த்ரில்லருக்கு எந்த விதமாக குறையும் வைக்கவில்லை. இரண்டும் சீட் நுணியில் அமர வைக்கும். திரைக்கதையின் வேகம் உங்களை பார்க்க வைக்கும். பாராட்ட வைக்கும். நீங்கள் இயக்குனராக இருந்தால் தமிழிலுக்கு ஏற்றவாரு திரைக்கதை எழுதி இயக்க வைக்கும். 

Must Watch Movie !!!!!!!!

Friday, August 11, 2017

House of the Disappeared ( 2013 - Thriller / Korean )

Direction : Lim Dae-woong 
Language : Korean 
Year : 2013 

வாழ்க்கை முடிந்தப்பிறகும், தள்ளாத வயதிலும் நாம் பாசம் வைத்த மனிதர்களை மறப்பதில்லை. அவர்கள் மீது வைக்கப்பட்டிருக்கும் அன்பும் குறைவதில்லை. அப்படி நாம் அன்பு செலுத்திய ஒருவர் என்னவானார் தெரியாமல் இருக்கும் போது அவர்களின் நலன் குறித்தும், இருப்பை குறித்தும் தெரிந்துக் கொள்ள வேண்டும் அக்கரை இருக்கும். அதுவே, ஒரு தாய் மகன் மீது இருக்கும் அன்பென்றால் மற்றவர்களை விட பத்து மடங்கு அக்கரையும், பரிதவிப்பும் இருக்கும். அப்படி தன் கண்முன்னால் மறைந்த மகனை ஆபத்து நிறைந்த அமானுஷ்ய வீட்டில் ஒரு தாயின் தேடல் தான் படத்தின் கதை.

ஆரம்பக் காட்சியில் மயக்கநிலையில் இருந்து ஒரு பெண் விழிக்கிறாள். சிதரப்பட்ட கண்ணாடி துண்டை எடுத்துக்கொண்டு வீட்டின் கீழ் பகுதிக்கு அவள் செல்ல, அங்கு தன் கணவன் கொலையானதை பார்க்கிறாள். அஞ்சியப்படி அவளது மகன் கதவருகே நிற்க, கொஞ்ச நேரத்தில் ஒரு உருவம் அவளது மகனை இழுத்துச் சென்று கதவை மூடிக்கொள்கிறது. தன் மகனை காப்பாற்ற அவள் கதவை திறக்கும் போது அங்கு பாறை மட்டுமே இருக்கிறது. 



கணவனை கொலை செய்த காரணத்திற்காக அவள் கைது செய்யப்படுகிறாள். 25 வருடங்கள் கழித்து கூன் விழுந்த கிழவியாக மீண்டும் அதே வீட்டுக்கு வருகிறாள். அமானுஷ்யம் நிறைந்த அந்த வீட்டில் தனது மகன் இன்னும் உயிருடன் இருக்கிறான் என்று நம்புகிறாள். அப்போது அவளிடம் பேட்டிக்காண்பதற்காக ஒரு பாதரியார் வர, அவரிடம் நடந்ததை கூறுகிறாள். இரவு நேரத்தில் அந்த வீட்டில் இருக்கும் அமானுஷ்ய சக்திகள் அவளை வெளியே போகச் சொல்லியும் வெளியேறாமல் தனது மகனை தேடுகிறாள். 

அந்த வீட்டில் இருக்கும் அமானுஷ்ய விஷயங்களுக்கு காரணத்தை பாதரியார் கண்டுப்பிடிக்க, கடந்தகாலப் பாத்திரங்கள் நிகழ்காலப் பாத்திரங்கள் ஒன்று சேர்ந்து நம்மை குழப்பாமல் தெளிவான செண்டிமென்ட் காட்சியோடு படம் முடிகிறது. 

ஒரு வட்டத்தில் எது தொடக்கம், எது முடிவு என்று சொல்ல முடியாதோ அதுப்போலவே திரைக்கதை அமைந்திருக்கிறது. எந்த இடத்தில் எந்த பாத்திரங்கள் கொண்டு படம் தொடங்கியதோ அதே இடத்தில் படம் முடிகிறது. இது தான் படத்தின் தொடக்கக் காட்சி என்று காட்டப்பட்டாலும், கதையின் தொடக்கம் இது தான் என்று உங்களால் சொல்ல முடியாது. அப்படி அழகிய வட்டமான திரைக்கதை. 

பாதிப்படத்திற்கு மேல் வயதான பெண்மணி அந்த வீட்டில் தனது மகனை தேடுவதாக இருக்கிறது. எண்பது சதவீதம் ஒரே வீட்டை சுற்றி தான் படம் நகர்கிறது. பார்வையாளனுக்கு கொஞ்சம் கூட சலிப்பு தட்டவில்லை. ஒவ்வொரு காட்சியின் போது நமக்கு திகிலூட்டும் வகையிலாக அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. இப்படி திகிலூட்டும் காட்சிகளோடு ஒரு செண்டிமெண்ட் கலந்தப்படத்தை பார்த்ததில்லை. 

இந்தப்படத்தை குறித்து இன்னும் எழுதினால் படத்தின் ஸ்வரஸ்யம் குறைந்துவிடும். கண்டிப்பாக பார்க்க வேண்டியப் படம்.

Wednesday, August 9, 2017

Soredake (That's It) ( 2015 - Japanese movie )

2015 சிங்கப்பூர் திரைப்பட விழாவுக்கு தேர்வானப் படம் என்ற ஒற்றைக் காரணத்திற்காக இந்தப் படம் பார்த்தேன். மோசமான படம் என்று சொல்ல முடியாது. படம் முழுக்க கதாநாயகன் ஓடிக்கொண்டிருக்கிறார். கெமிரா நாயகனை விட வேகமாக ஓடுகிறது. 

நிஜ வாழ்க்கை / கனவு வாழ்க்கை என்று அவ்வப்போது காட்சிகள் மாறுகிறது. மரணத்திற்கு பிறகும் கனவு வாழ்கிறது போன்ற குழப்பமான பல விஷயங்கள் வந்து போகிறது. இறுதிக்காட்சி ஆக்ஷன் காட்சியும் வீடியோ கேம் பார்ப்பது போன்ற உணர்வே ஏற்படுத்துகிறது. எவ்வளவு தான் Sub-title உதவி இருந்தாலும் படத்தோடு ஒட்டமுடியாமல் இருந்தது. மொத்தத்தில் டெக்னிக்கலாக இந்தப்படம் பார்க்கும் போது கடுப்படிக்கக் கூடியப்படமாக தான் எனக்கு இருந்தது. 

அப்படியிருந்தும், இந்தப் படத்தை பற்றி குறிப்பிட முக்கியக் காரணம் இருக்கிறது. அதன் கதை. நமக்கு அந்நியமான தோன்றும் இந்தப்படத்தின் கதை, அக்டோபர் 1 பிறகு நமக்கு நெருக்கமான கதையாக மாறப்போகிறது. 



Underground Gangல் கொத்தடிமையாக நடத்தப்படுகிறான் நாயகன். அங்கிருந்து தப்பிக்க முடிந்தாலும் அவன் அதற்கான முயற்சி செய்யவில்லை. காரணம், தன் பிறப்பு சம்மந்தமான அனைத்து சான்றிதழும் அந்த கூட்டத்தின் தலைவனிடம் இருக்கிறது. அந்த சான்றிதழ் இல்லாமல் வெளியே போனால் அவனால் சராசரி வாழ்க்கை கூட வாழ முடியாது. தனது சான்றிதழை தேடும் முயற்சியில் அந்த கூட்டத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் தகவல் அடங்கிய ஹார்ட் டிஸ்க் கிடைக்கிறது. அப்போது, அந்த கூட்டத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் நட்பும் கிடைக்கிறது. அவர்களுக்குள் காதலும் மலர்கிறது. 

இருவரும் அந்தக் கூட்டத்தினர் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தில் அவர்களுக்கு தெரியாமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள். தன்னுடைய சான்றிதழ் மட்டும் கிடைத்துவிட்டால், தனக்கு கிடைத்த ஹார்ட் டிஸ்க் உதவியோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வேன் என்று தனது காதலியிடம் கூறுகிறான். ஆனால், இந்த சமயத்தில் இருவரும் கூட்டத்தின் தலைவனிடம் மாட்டிக் கொள்ள, அவர்களுக்கு ஏற்ப்படும் நிலையை torrent மூலம் காணுங்கள். 

இது என்ன பெரிய கதை என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால், அடுத்த வருடம் இந்தப்படத்தை பார்ப்பவர்கள் தமிழில் எடுப்பார் என்று சொல்லலாம். நாயகி இந்த இடத்தை விட்டு செல்லலாம் என்று சொல்லும் போது, “நம்முடைய பிறப்பு சான்றிதழ் இல்லாமல் வெளியே சென்றால் உயிர் இருந்தும் பிணம் போன்றவர்கள்” என்பான். அவளுடைய காதலை விட, தன்னுடைய உயிரை விட, தன் அடையாளமான சான்றிதழ் அவனுக்கு முக்கியமாக இருந்தது. தன்னுடைய அடையாளத்தை பெறாமல் ஆபத்தான இடத்தை விட்டு செல்லக் கூடாது என்பதில் நாயகன் உறுதியாக இருப்பான். 

படம் பார்க்கும் போது அபத்தமாக தெரிந்ததால் எனக்கு இந்தப்படம் ஈர்க்கவில்லை. ஆனால், மரண சான்றிதழ் பெறுவதற்கு ’ஆதார் எண்’ கட்டாயமாக்க பட்டதில் இதுப் போன்ற வாழ்க்கையை நாளை நாம் வாழப்போகிறோம் என்று எண்ணம் வந்ததில், இந்தப்படம் மிக முக்கியத்துவம் பெற்றது. 

வலிமைப்படைத்தவனிடம் சாமான்யனின் ஆதார்-கார்ட் மாட்டிக்கொண்டால், அந்த சாமான்யனால் இயல்பான வாழ்க்கை வாழ முடியாமல் போகும். வேலைக்கு செல்ல முடியாது. வங்கி கணக்கு தொடங்க முடியாது. இறந்தாலும் மயாணத்தில் அனுமதி கிடையாது. அப்படிப்பட்ட ஆதார் கார்ட்டை எதிரியிடம் கொடுத்துவிட்டு எங்கு சென்று நிம்மதியாக வாழ முடியும் ? 

ஒரு பிணத்தை அடக்கம் செய்யும் போது தவறுதலாகவோ / வேண்டுமென்றே உங்கள் ஆதார்-எண் கொடுத்து அடக்கம் செய்யப்பட்டால், நீங்கள் உயிருடன் இருந்தும் இறந்ததற்கு சமம். நீங்கள் உயிருடன் இருக்குறீர்கள் என்பதை எதை கொண்டு நிருபனம் செய்வீர்கள் ? 

ஆதார் கார்ட் மூலம் நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்று எதிர்ப்பு தெரிவிப்பது ஒரு புறம் இருக்கட்டும். நமது ஆதார் எண்ணை கலவாடி தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் நடக்கவிருப்பதை எப்படி தடுக்கப்போகிறார்கள்? ஒருவனின் ஆதார் எண்ணை தெரிந்து கொண்டு அவனுக்கு எதிரான பல சிக்கலில் மாட்டிவிடும் சம்பவங்கள் நடக்கலாம். உங்களுக்கு எதிரான குற்றத்தில் ஜோடனை செய்து மாட்டிவிடலாம். 

முன்பு ரேஷன் கார்ட்டை அடமானம் வைத்து பணம் பெறுவது போல், எதிர்காலத்தில் ஆதார் எண்ணை அடமானம் வைத்து பணம் பெறும் சம்பவம் நடக்கும். இதை எப்படி தடுப்பார்கள் ? 

இதற்கான சட்டங்களும், நடவடிக்கைகளும் நடக்கும் வரை ’That’s it’ படத்தில் வரும் நாயகன் போல் தனது அடையாளத்தை பரிகொடுத்து அதற்காக போராடும் கதை இந்தியாவில் நடக்கவிருப்பதை தடுக்க முடியாது. 

LinkWithin

Related Posts with Thumbnails