வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, December 24, 2013

ஹேராம் படமும், நாளைய தலைமுறையின் கேள்வியும்

நேற்று, கலைஞர் தொலைக்காட்சி "ஹே ராம்" ஓடியது.அதைப் பார்த்து, என் ஆறு வயது மகன் "எதுக்காக காந்திய சுட்டாங்க?" என்று கேட்டான்.

எவ்வளவு காலம் தான் பசங்களுக்கு காக்கா, நரி கதை சொல்லுவது. இந்திய வரலாற்றை சொல்லிக் கொடுப்போம் என்று இந்தியா - பாகிஸ்தான் வரைப்படத்தை வரைந்து விளக்க தொடங்கினேன்.

“சின்ன பசங்களுக்கு சொல்லுற கதையா” என்று என் மனைவி கேட்டாள்.

“இப்போவே இந்த கதைய தெரிஞ்சிக்கிட்டாதான் நாளை பசங்களுக்கு படிக்கும் போது புரியும்” என்றேன்.

அதுமட்டுமல்ல… நாளைய தலைமுறைகள் நமது சரித்திரம் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக, இந்தியா - பாகிஸ்தான் பிரிந்த கதை, ஹிந்து - முஸ்லிம் அடித்துக் கொண்டு இறந்தது என்று கூறியதோடு இல்லாமல், வரைப்படத்தில் இப்படி தான் பிடிக்கப்பட்டது என்று விளக்கினேன்.

" அதுக்கு ஏன் காந்திய சுட்டாங்க...?" என்று கேள்வி கேட்டான்.

"காந்தி, நேரு, ஜின்னா, மவுன்ட்பேட்டன் எல்லாம் சேர்ந்து தான் இந்தியா - பாகிஸ்தான் பிரிச்சாங்க. இந்து - முஸ்லிம் சண்டையில நிறைய பேரு செத்ததுக்கு காந்தி தான் காரணம் நினைச்சு சுட்டுட்டாங்க..." என்றேன்.

"அப்போ ! மத்தவங்களும் இதே மாதிரி சுட்டு தான் செத்துப்போனாங்களா ?" என்று கேள்வி கேட்டான்.

"இல்ல... எல்லாரும் வயசாகி தான் செத்துப் போனாங்க..." என்றேன். (1979ல் மவுன்ட்பேட்டன் (தனது 79 வயதில்) ஐரிஷ் போராளிகளால் கொல்லப்பட்டது இந்த இடத்தில் சொல்ல வேண்டாம் என்று தோன்றியது.)

"எல்லாரும் சேர்ந்து தானே தப்பு பண்ணாங்க... அப்போ எதுக்கு காந்திய மட்டும் சுட்டாங்க... பாவம் தானே அவரு..." என்றான்.

இதற்கு என்னால் பதில் கூற முடியவில்லை. சரித்திரப் பக்கத்திற்கு நாளைய தலைமுறை கேட்க போகும் கேள்விக்கு பதில் இல்லை.

Thursday, December 19, 2013

முசோலினி

இந்த வருடம் பதிப்பக வேலைகளுக்கு ஓய்வு கொடுத்ததில் என்னுடைய எழுத்துப்பணியில் அதிகம் கவனம் செலுத்த முடிந்தது. சென்னை 2014 புத்தகக் கண்காட்சிக்கு வரிசையாக என்னுடைய நூல் வர இருக்கிறது.

ஜனவரி 2013, உலக சினிமா ஓர் பார்வை வெளியானது. கௌதம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது, சென்ற சென்னை புத்தகக் கண்காட்சியிலே வெளியாகி, பதிப்பாளருக்கு நஷ்டமாகாமல் விற்பனையானது.

ஆக்டோபர் 2013, பெரியார் ரசிகன் நாவல் வெளியானது. உதயகண்ணன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இந்த வருடத்தில் என்னுடைய மூன்றாவது புத்தகமாக முசோலினி வெளியாகியுள்ளது. இதனை சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகத்தின் இன்னொரு பிரிவான வானவில் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
நூலைப் பற்றிய விபரம்:

இத்தாலியில் அரசியல் இருந்தது, அதிகாரம் இருந்தது, ஆட்சி இருந்தது.  ஆனால், எதிர்க்கட்சிகள் கிடையாது. பத்திரிகைகள் கிடையாது. தேர்தல்கள் கிடையாது. அத்தனைக்கும் காரணம் ஒற்றை மனிதர்,

அதிகார வெறியும் யுத்தப் பசியும் கொண்ட ஒரு மனிதன் எத்தனை உயரத்துக்கு வளர்வான், எத்தனை ஆழத்துக்கு வீழ்வான் என்பதற்கு இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியே முதன்மையான உதாரணம்.

பயந்துகொண்டு வியந்துகொண்டும் வாசிக்க வேண்டிய வாழ்க்கை !!

இணையத்தில் வாங்க...

மேலும் என்னுடைய மூன்று நூல் வர விருக்கிறது. அதைப் பற்றிய விபரங்களை பின்னர் அறிவிக்கிறேன்.

Tuesday, December 17, 2013

சினிமா 100 (1913 - 2013) - 2. நடராஜ முதலியார்

சென்ற தொடரில் இந்திய அளவில் மௌனப்படங்களுக்கு பங்கு அளித்த முக்கிய பிரமுகர்கள், படங்களைப் பற்றி பார்த்தோம். ஆனால், மொழிவாரியாக சினிமாவை கொண்டு செல்ல முடியவில்லை. எப்படி இந்திய சினிமாவின் தந்தை பால்கே என்று சொல்கிறோமோ, அதேப் போல் ஒவ்வொரு மொழியிலும் சினிமாவை வளர்த்த முக்கிய நபர்கள் இருக்கிறார்கள்.


தமிழ் சினிமாவின் தந்தையாக கருதப்படுபவர் ஆர்.நடராஜ முதலியார். தானுந்து (Automobile) வியாபாரியாக வாழ்க்கையை தொடங்கிய இவர், பால்கே எடுத்த படங்களால் ஈர்க்கப்பட்டார். தானும் தென்னகத்தில் சினிமா கலையை வளர்க்க வேண்டும் என்று அதற்கான முயற்சியில் இறங்கினார்.

சில நண்பர்களை மூலம் முதலீட்டை திரட்டி, புரசைவாக்கத்தில் உள்ள மில்லர்ஸ் ரோட்டில் திரைப்பட ஸ்டூடியோ ஒன்றை தொடங்கினார். தென்னகத்தில் முதல் திரைப்பட ஸ்டூடியோ இது தான். ஸ்டூடியோவோடு நின்றுவிடாமல் திரைப்படம் எடுக்கும் முயற்சியிலும் ஈடுப்பட்டார்.

1916ல், இவர் எடுத்த “கீச்சக வதம்" படம் தான் தென்னிந்தியாவின் முதல் படம் என்று சொல்லலாம். அன்றைய தேதியில் இந்த உருவாக்க ஆன மொத்த செலவு ரூ.35000 மட்டும் தான். அதன் வெற்றியை தொடர்ந்து லவக்குசா, ருக்மணி சத்யபாமா, மயில் ராவணா போன்ற பல மௌனப்படங்களை எடுத்திருக்கிறார் என்று பல படங்களை தயாரித்தார். பல புராணக் கதைகள் தென்னகத்தில் மக்கள் நடராஜ முதலியார் உதவியால் படமாக பார்த்தனர்.

மௌனம் படம் என்பதால் ஹிந்தியிலும் வெளியிடுவதில் சிரமமில்லை. தலைப்பு பலைகை மட்டும் ஹிந்தியில் எழுதி வெளியிட்டனர். நடராஜ முதலியார் படங்களுக்கு ஹிந்தி எழுத்து பலகை எழுதியவர் மகாத்மா காந்தியின் கடைசி மகனும், ராஜஜியின் மருமகனுமான தேவதாஸ் காந்தி அவர்கள். சினிமாவுக்காக உழைத்த நடராஜ முதலியார் தனது மகனை ஒரு தீ விபத்தில் இழந்தார். அதுவும் தன் ஸ்டூடியோவில் நடந்த தீ விபத்து. மகனை இழந்து, ஸ்டூடியோ பாதிக்கப்பட்டத்தில் மனதளவில் நடராஜ முதலியார் நோடிந்து போய்விட்டார். தன் ஸ்டூடியாவை முடிவிட்டு சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.

இவரது திரைப்படங்களால் பலர் ஈர்க்கப்பட்டுயிருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் ஜே.சி.டேனியல்.

 ஜே.சி.டேனியல் மலையாள திரையுலகில் தந்தையாக கருத்தப்படுபவர். மலையாளத்தின் முதல் படமான “விகதகுமரன்” எடுத்தவர். திருவனந்தப்புரம் நேஷ்னல் பிக்சார்ஸ் என்ற பெயரில் ஸ்டூடியோ தொடங்கியவர். அதுவரை புராண கதைகளே படமாக்கி வந்திருந்தனர். இவர் தான் முதன் முதலில் சொந்தக்கதை உருவாக்கி படமாக எடுத்தார்.

மலையாளத் திரையுலகத்தின் தந்தை என்று போற்றப்படும் ஜே.சி..டேனியல் “ஒரு தமிழர்” என்பது குறிப்பிடதக்கது. தமிழ் நாட்டில் தனக்கு வாய்ப்பு கிடைக்காததால், கேரளா சென்று படம் எடுத்தார். இன்று தென்னகத்தில் தரமான படங்கள் என்று சொன்னால் மலையாளப் படங்கள் என்று சொல்லும் அளவிற்கு மலையாள திரையுலகம் இருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் தெலுங்கு திரையுலகின் தந்தையான வெங்கையா நாயுடு பெயரில் தெலுங்கு திரையுலக வாழ்நாள் சாதனையாளருக்கு "நந்தினி வருது" நிகழ்ச்சியில் விருது வழங்கப்படுகிறது. அதேப் போல், ஜே.சி.டானியல் நினைவாக கேரள அரசு வாழ்நாள் சாதனை விருது முத்த கலைஞர்களுக்கு வழங்குகிறார்கள். ஆனால், அவர்களுக்கு முன்னோடியாக இருக்கும் நடராஜ முதலியார் பெயரில் ஒரு விருது வழங்கப்படவில்லை.

அதேப் போல், இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் பால்கேவின் வாழ்க்கை வரலாற்றை மராத்தியில் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். மலையாள சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் ஜெ.சி.டெனியல் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக வெளிவந்திருக்கிறது.
சினிமா நூற்றாண்டை அமோகமாக கொண்டாடிய நாம் தமிழ் சினிமாவின் தந்தையான நடராஜ முதலியாரின் வாழ்க்கை வரலாற்றை எப்போது திரைப்படமாக எடுக்கப் போகிறோம் ? குறைந்தப் பட்சம் தமிழ் சினிமாவில் பணியாற்று சினிமாத்துறையினர்களுக்காவது தமிழ் சினிமாவின் தந்தைப் பற்றி தெரிந்திருக்குமா ?

(நன்றி : நம் உரத்தசிந்தனை மாத இதழ், டிசம்பர் )

Monday, December 9, 2013

சரப்ஜித் சிங் : ரா உளவாளியின் கண்ணீர் கதை

சரப்ஜித் சிங் ஒரு விவசாயி. திருமணமானவன். அழகான இரண்டு பெண் குழந்தைகள். அன்பான சகோதரி. இந்தியா - பாகிஸ்தான் எல்லை பகுதியில் இருக்கும் தர்ன் தரன் மாவட்டத்தில் இருக்கும் பிகிவிந்த் என்ற இடத்தில் குடும்பத்தோடு வசித்து வந்தான். மல்யுத்தம் என்றால் அலாதி பிரியம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களோடு மல்யுத்தம் விளையாடுவது சரப்ஜித்துக்கு பிடிக்கும்.

குடும்பதோடு மகிழ்ச்சியாக வாழ்ந்த சரப்ஜித் சிங் ஒரு நாள் மாயமாய் மறைந்தார். குடும்பத்திறனர் ஒவ்வொருவரும் அவனை தேடாத இடமில்லை. விசாரிக்காத உறவினர்கள் இல்லை. எங்கு சென்றான். எப்படி சென்றான் என்று எந்த விபரமும் இல்லை. இரண்டு பெண் குழந்தையை சரப்ஜித் சிங் மனைவி செய்வதறியாமல் இருக்க அவர்களுக்கு துணையாக இருந்தது சரப்ஜித் சிங்கின் சகோதரி தல்பிர் சிங் தான்.


1991ல் ஒரு நாள் சரப்ஜித் சிங்யிடம் இருந்து கடிதம் வந்தது. அதில் தான் பாகிஸ்தான் இராணுவத்தால் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும், தன் பெயரை பாகிஸ்தான் சிறை பதிவு ஏட்டில் ”மன்ஜித் சிங்” என்ற பெயரில் இருப்பதாகவும் எழுதியிருந்தார். தன்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று தன் கண்ணீர் துளிகள் குறிப்பிட்டிருந்தான். அன்றில் இருந்து தன் சகோதரனின் விடுதலைக்காக தல்பீர் போராடினாள்.

 இந்திய அரசு, பாகிஸ்தான் அரசு, கருணை மனு, மக்கள் உதவி என்று ஒவ்வொருவராக கெஞ்சி தன் சகோதரனின் விடுதலைக்காக கேட்டு பார்த்தாள். ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல..... கிட்ட தட்ட இருபத்தி இரண்டு வருடங்கள் தன் சகோதரனின் விடுதலைக்காக போராடினாள்.

 பாகிஸ்தான் இராணுவம் பிடித்திருப்பது இந்திய ஏழை விவசாயி என்று தான் சரப்ஜித் சிங்கை முதலில் கைது செய்தனர். பின்னர் பாகிஸ்தான் அரசு சரப்ஜித் சிங்யை 'ரா உளவாளி' என்று கூறியது. அது மட்டுமில்லாமல் லாகூர், பைசிலாபாத் இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது குற்றத்திற்காக சரப்ஜித் சிங்க்கு மரண தண்டனை விதித்தது.

 சரப்ஜித் சிங் ரா உளவாளி அல்ல என்று இந்திய அரசு மறுத்தது. வெடிகுண்டு தாக்குதலுக்கும் அவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று அவர்கள் குடும்பம் மறுத்தனர். ஆனால், பாகிஸ்தான் சரஜித் சிங்யை விடுதலை செய்ய உதவவில்லை.

நாடெங்கும் சரப்ஜித் சிங் மரண தண்டனை எதிர்த்து போராட்டங்கள் வெடித்தது. சரப்ஜித் சிங்யின் மரண தண்டனை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடந்தது. பாலிவுட் நடிகர் சல்மான் கான் கூட சரப்ஜித் சிங் ஆதரவாக இணையத்தில் ஆதரவு கேட்டார். இந்திய அரசு சரப்ஜித் சிங் விடுதலை செய்ய கோரியது. ஆனால், பாகிஸ்தான் எதற்கும் செவி சாய்கவில்லை. தங்கள் நாட்டில் வெடிகுண்டு நிகத்திய சரப்ஜித்தை தண்டிக்காமல் விட மாட்டோம் என்று தான் சொன்னது.

இங்கிலாந்து வழக்கறிஞர் "freesarabjitsingh.com" என்ற இணைய்தளத்தை தொடங்கி சரப்ஜித் சிங் விஷயத்தை மனித உரிமை குழுவுக்கு கொண்டு சென்றார். உலகில் பல இடங்களில் இருந்து ஆதரவு கிடைத்தது. பாகிஸ்தான் வழக்கறிஞர் ஒருவர் கூட சரப்ஜித் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

 சரப்ஜித் கருணை இழுவையில் இருக்கும் சமயத்தில் 29 ஏப்ரல் 2013 அன்று பாகிஸ்தான் சிறைச்சாலையில் கைதிகளுக்குள் நடந்த சண்டையில் சரப்ஜித் சிங் பலமாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறிது நாட்களில் அவரது உயிர் பிரிந்தது.

இறந்த சரப்ஜித் சிங் உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் பெரிய பெரிய தலைவர்கள் கலந்துக் கொண்டனர். பெரிய தலைவர் இறந்தால் எவ்வளவு கூட்டம் கூடுமோ அந்த அளவுக்கு இறுதி ஊர்வலத்தில் கூடியது. பாகிஸ்தான் எதிரான கோஷங்கள் எழுப்பட்டது. இருபது வருடங்களுக்கு மேல் காத்திருந்த ஒரு குடும்பத்தின் கண்ணீர் துடைக்க அரசு என்ன செய்தாலும் சரப்ஜித் சிங் உயிருக்கு ஈடாகாது.

அவரது சகோதரி இது திட்டமிட்ட மிட்ட கொலை என்றார். அரசியல் பிரமுகர்கள் "அப்ஸல் குருவை தூக்கில் போட்டதற்காக பாகிஸ்தானின் பழி வாங்கும் நடவடிக்கை” என்றனர். பிரதமர் மன்மோகன் சிங் "துக்கக்கரமான செய்தி" என்று சரஜித் சிங் மரணத்திற்கு இறங்கல் தெரிவித்தார். இந்திய அரசு அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி உதவித்தொகை அளித்தது.

 மே 3, 2013 ஜம்மு சிறைச் சாலையில் இருக்கும் பாகிஸ்தான் கைதியான சனுல்லா ஹக் முன்னாள் இராணுவ வீரன் தாக்கப்பட்டு மருத்துவமனையில் இறந்தான். இதனால், இந்திய சிறையில் இருக்கும் பாகிஸ்தான் கைதிகள் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்து.

 சரப்ஜித் சிங்க்காக இத்தனை பேர் போராடினார்கள். ஆனால், நிஜமாகவே அவர் ரா உளவாளி தானா என்ற சந்தேகம் அவருக்காக போராடியவர் மனதில் இருந்துக் கொண்டு தான் இருந்தது. 1990ல் பாகிஸ்தானில் வெடித்த குண்டு வெடிப்புக்கு சரப்ஜித் சிங்க்கு சம்மந்தம் இருக்கிறதா இல்லையா என்ற உறுதியான தகவல் இல்லை. ஆனால், சரப்ஜித் சிங் இறந்த பிறகு அவர் ரா உளவாளி தான் என்ற உண்மையை ரா தலைமை அதிகாரி ஏற்றுக் கொண்டுள்ளார்.

முக்கியமான பணிக்காக பாகிஸ்தானுக்கு உளவு பாக்க அனுப்பி வைக்கப்பட்டார் என்பதை ஒத்துக் கொண்டுள்ளார். ஆனால், பாகிஸ்தான் வெடிகுண்டு பற்றியும், சரப்ஜித் சிங் பங்கு பற்றியும் எந்த விபரமும் கூறவில்லை. 

கட்டுரைக்கு உதவியது

http://en.wikipedia.org/wiki/Sarabjit_Singh
http://indiatoday.intoday.in/story/surjeet-singh-admits-he-was-a-spy-raw-agent-in-pakistan/1/202866.html

LinkWithin

Related Posts with Thumbnails