வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, July 25, 2014

சினிமா அன்றும் - இன்றும் !!

அன்று.

கொத்தமங்களம் சுப்பு அவர்கள் எழுதிய “தில்லானா மோகனாம்பாள்” ஆனந்த விகடனில் தொடராக வந்தக் கதை. அந்த கதையின் உரிமையும் விகடன் உரிமையாளராக எஸ்.எஸ்.வாசனிடம் இருந்தது.

அந்த சமயத்தில், ஏ.பி.நாகராஜன் அதைப் படமாக எடுக்க விரும்பி எஸ்.எஸ்.வாசனிடம் அனுமதிக் கேட்டார்.

“இக்கதையை நாம் கூட்டாக சேர்ந்து எடுப்போம். உங்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கிறேன். படம் எடுக்கும்போது நான் தலையிடமாட்டேன்” என்று எஸ்.எஸ்.வாசன் கூறினார்.

ஆனால், ஏ.பி.நாகராஜம் மறுத்துவிட்டார். லாபமோ, நஷ்டமோ நானே ஏற்றுக் கொள்கிறேன். கதைக்கு என்ன விலை என்று மட்டும் கூறுங்கள் என்றார்.

எஸ்.எஸ்.வாசன் “நாகராஜன் ! ஆனந்த விகடன் கதையை தரம் குறையாமல் எடுப்பீர்கள் என்று உங்களை நம்புகிறேன்” என்று சொல்லி கதைக்கு ரூ.25 ஆயிரம் கேட்டார்.

ஏ.பி.நாகராஜனுக்கு ஆச்சரியமாக இருந்தது. கதைக்கு ரூ.50 ஆயிரம் கேட்பார் என்று எதிர்பார்த்தார். ஆனால், எஸ்.எஸ்.வாசன் 25 ஆயிரம் தான் கேட்டிருக்கிறார். அதனால், மீதம் ரூ.25 ஆயிரத்தை கதை எழுதிய கொத்தமங்களம் சுப்புவுக்கு கொடுக்கலாம் என்று நினைத்தார்.



அந்த சமயத்தில் உடல்நல குறைவால் கொத்தமங்களம் சுப்பு மருத்துவமனையில் இருந்தார். ஏ.பி.நாகராஜன் கொத்தமங்களம் சுப்புவிடம் ரூ. 25 ஆயிர கொடுக்கும் போது, “ இப்ப தான் வாசன் நீங்க அவரிடம் கொடுத்துட்டு போன 25 ஆயிர ரூபாய கொடுத்துட்டு போறார்” என்றார். எஸ்.எஸ்.வாசனின் பெருந்தன்மை பெருமைப்பட்டுக் கொண்ட ஏ.பி.நாகராஜனும் தான் கொண்டு வந்த ரூ.25 ஆயிரத்தையும் கொத்தமங்களம் சுப்புவிடம் கொடுத்தார்.

இதில், கொத்தமங்களம் சுப்புவுக்கு நியாயமாய் உதவியது எஸ்.எஸ்.வாசனா ? நாகராஜனா ? என்று பட்டிமன்றம் நடத்தினால் இருவருமே வெல்வார்கள்.

இன்று.

ஆங்கிலமோ, கோரியப்படத்திலோ திருடப்பட்ட கதையில் படத்தின் கதை முடிவாகிறது. ரியல் எஸ்டேட், கருப்பு பணம், கொள்ளையடித்த பணத்தில் அந்த கதையை திரைப்படமாக தயாரிக்கிறார்கள்.

படத்தை வாங்கி விநியோகஸ்தர்களும் கந்துவட்டி, ஆள்கடத்தல், ரௌடிசத்தில் வந்த பணத்தில் படத்தை வாங்கி வெளியிடுகிறார்கள். அதை திருட்டுத்தனமாக டி.வி.டி போட்டு விற்பனை செய்வது, இணையத்தில் ஏற்றி சம்பாதிப்பது இன்னொரு கூட்டம் இருக்கிறது. தியேட்டரில் படம் பார்க்க வரும் ரசிகர்களிடம் கொள்ளையடிக்கும் மால்கள் இருக்கிறது.

இதில் யார் திருடர்கள், பாவம் என்று சொல்லுவது ?

 அன்று, சினிமா எடுத்தவர்களிடம் அடிப்படையில் ஒரு நேர்மை இருந்தது. உதவும் மனமிருந்தது. இன்று, சினிமாவில் ஒவ்வொரு விஷயத்திலும் ஏதோ ஒரு திருட்டுத்தனம் இருக்கிறது. திருட்டுதனம் மனம் முழுக்க வைத்துக் கொண்டு எப்படி தரமான படைப்பை அவர்களிடம் இருந்து நாம் எப்படி எதிர்ப்பார்க்க முடியும்.

ரசிகர்கள் அன்னப்பறவையாய் இருந்து தரமான விஷயத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு, தரமற்றதை புறக்கணி வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

சினிமாவை டி.வி.டி, டவுன்லோட் செய்யும் ரசிகர்களால் அழியவில்லை. சினிமா எடுக்கும் சினிமாக்காரர்களால் தான் சினிமா அழிகிறது.

Thursday, July 17, 2014

இப்படிக்கு கடவுள் !

அடுத்தவரை ஒதுக்க சொல்லும்
ஹிந்து மதம் வேண்டாம் !

ஆயுதம் எந்தச் வைக்கும்
இஸ்லாம் மதம் வேண்டாம் !

சந்தர்ப்பத்தை பயன்படுத்தி
மதம் மாற வைக்கும் கிறிஸ்துவமும் வேண்டாம்

அன்பை ஏட்டில் எழுதி வைத்து
கொலை செய்யும் புத்தனும் வேண்டாம்

இதையெல்லாம் மதங்கள் செய்யவில்லை
மனிதன் தான் செய்கிறான் என்று தெரியும்

அதனால்,
எனக்கு மனிதர்களே வேண்டாம்.

இப்படிக்கு,
கடவுள்.

Monday, July 14, 2014

பீமாயணம் : தீண்டாமையின் அனுபவங்கள்

இந்திய அரசியலில் ஒடுக்கப்பட்டோரின் குரலும் அரசியல் சாசனத் உருவாக்கியவருமான பி.ஆர்.அம்பேத்கர் வரலாறு பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கிறது. காந்திப்படத்தை பெருமையாய் ஒவ்வொரு தொலைக்காட்சியும் ஒளிப்பரப்பும் அளவிற்கு அம்பேத்கர் படம் தொலைக்காட்சியில் அதிகளவில் ஒளிப்பரப்பாததே சாட்சி.


காந்தி, நேரு, பட்டேல் போன்ற தேசியத் தலைவர்கள் மக்களது நினைவில் பதியவைக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் காந்தியை விட அதிக சிலை அம்பேத்கருக்கு தான் இருக்கிறது. ஆனால், அம்பேத்கர் இன்னமும் சாதித் தலைவர் என்ற வட்டத்துக்குள் மக்கள் மனதில் இருக்கிறார்.

வழக்கமான வரலாற்று வடிவில் நூல் இல்லாமல், தற்காலத்தில் இரண்டு பேர் தீண்டாமைப் பற்றி பேசுவது தொடங்குகிறது. அம்பேத்கர் தீண்டாமையால் சந்தித்த அவமானங்கள், அதனால் அவருக்கு ஏற்ப்பட்ட விபத்து என்று அவரைப் பற்றி கேள்விப்படாத ஒரு சில தகவல் இந்த நூலில் கிடைத்தது. அதற்கு தகுந்தாற்போல் வித்தியாசமான ஓவியங்களும் இடம் பெற்றுயிருக்கிறது.

இதில் இடம்பெற்ற நாம்தேவ் தாஸ்ஸின் மொழிப்பெயர்ப்பு கவிதை மனதை கவர்க்கிறது.

”எருமைகளைக் கூட தேய்த்துக் குளிப்பாட்டுவார்கள். ஆட்டு உரோமத்தை கத்தரிப்பார்கள். ஆனால். மஹரின் தலைமுடியைக் கத்தரிக்க மாட்டார்கள். அதைவிட அவன் கழுத்தையே அறுப்பார்கள்.”

”மற்ற பையன்கள் தண்ணீர் குடிக்கலாம். விலங்குகள் கூட வயிறு முட்டக் குடிக்கலாம். ஆனால், எனக்கு தாகம் எடுக்கும் போது கிராமமே பாலைவனமாக மாறிவிடுகிறது.”

இந்த புத்தகம் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டதா அல்லது பெரியவர்களுக்காக வடிவமைக்கப்பட்டதா என்ற குழப்பம் இருக்கிறது. வித்தியாசமான ஓவியங்களுடன் அம்பேத்கரின் வாழ்க்கை சம்பவங்களை சொல்கிறார்கள். இதை வைத்து குழந்தைகளுக்காக புத்தகம் என்று சொல்ல முடியவில்லை. இடையில், சமக்காலத்தில் தலித்துகளுக்கு எதிராக நடந்த பத்திரிக்கை செய்திகள் சேர்த்துள்ளனர். “அம்பேத்கர் காலத்தில் இருந்தது. இப்போது இல்லை” என்று வாதம் செய்பவர்களுக்கு தகவலாக கொடுத்திருக்கிறார்கள்.

இந்த நூலின் உண்மையான வாசகன் யார் என்பதில் கொஞ்சம் சந்தேகத்தை எழுப்புகிறது.

**

பீமாயணம் : தீண்டாமையின் அனுபவங்கள் 
கலை : துர்காபாய் வ்யாம், சுபாஷ் வ்யாம் 
கதை : ஸ்ரீவித்யா நடராஜன், எஸ்.ஆனந்த் 
காலச்சுவடு பதிப்பகம்
Rs.245 

இணையத்தில் வாங்க... 


Tuesday, July 8, 2014

விஜய் டி.வி விருது அபத்தத்தின் உச்சம் !

ஒரு மொழி சார்ந்து விருது வழங்குகிறார்கள் என்றால், அந்த மொழியில் அந்த வருடம் முழுக்க வந்த படத்தை பார்க்க வேண்டும். அதை தேர்வு செய்வதற்கான சரியான குழுவை அமைக்க வேண்டும். இந்த இரண்டும் விஜய் டி.வி விருதுகளில் செய்யப்பட்டதா என்று தெரியவில்லை.

இவர்களுக்கு தான் விருது என்று முடிவு செய்த பிறகு அந்த குழு சம்மதித்தது போல் உள்ளது என்பதை தான் காட்டுகிறது.


நான் கமலின் தீவிர ரசிகன். அவருக்கு விருது கிடைக்கிறது என்றால் அதிக சந்தோஷப்படக் கூடியவன் நான். ஆனால், ”விஸ்வரூபம்” படத்திற்கு விஜய் டி.வி சிறந்த நடிகர் விருது வழங்கியிருப்பது என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

கமல் - காலத்தால் மறக்க முடியாத நாயகன். அவர் வாங்காத விருதில்லை. ஆனால், விஸ்வரூபம் படத்தில் விருது வாங்கும் அளவிற்கு கமல் நடிக்கவில்லை என்பது என் கருத்து. விஸ்வரூபத்தில் கமல் நடிப்பை விட ஆதர்வா (பரதேசி) வின் நடிப்பு நன்றாக இருந்தது.

”சிறந்த நடிகர் விருது” - அந்த படத்தில் நடித்தற்காக கொடுத்ததா ? அல்லது அவரின் முந்தைய சாதனையை வைத்துக் கொடுக்கப்பட்டதா ? என்பது இப்போது கேள்வியாக உள்ளது. விஜய் டி.வி விருது சினிமாவில் இருப்பவர்கள் மன வேதனை இருந்தாலும், வெளியே சொல்ல யோசிப்பார்கள். கமலுக்கு விருது வழங்கியதால் இப்படி பேசுகிறார் என்று விஜய் டி.வி தனது தவறை திசைத் திருப்பலாம்.

இன்னும் சில படங்கள் பரிந்துரை பட்டியலில் கூட இல்லை என்பது அதை விட வேதனை.

 விஜய் டிவி விருதில் தேசிய விருது பெற்றவர்கள் ஒரு சிலர் கலந்துக் கொள்ளவில்லை. அல்லது அழைப்பு விடப்பட்டாதா என்று கூட தெரியவில்லை. தேசியளவில் தமிழ் படங்களுக்கு பெருமை தேடி தந்தவர்கள், அவர்களுக்கு முறையான மரியாதையோ உபசரிப்போ விஜய் டி.வி வழங்கவில்லை என்று தோன்றுகிறது. ஆனால், வடக்கில் இருந்து ஷாருத்கான் வர வழைக்க அவருக்காக ஒரு விருது வழங்குகிறார்கள். அதே போல், கமல் வர வழைக்க தான் அவருக்கு விருது வழங்கினார்களோ என்ற சந்தேகம் வருகிறது.

ரஜினிக்கு ‘எந்திரன்’ படத்திற்கு இரண்டு விருது வழங்கும் போதும், அஜீத்துக்கு ‘மங்காத்தா’ படத்திற்கு இரண்டு விருது வழங்கும் போதும் அவர்கள் கலந்துக் கொள்ளவில்லை. உண்மையில், அவர்கள் விஜய் டி.வி விருதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை தான் காட்டுகிறது.

’தலைவா’ வெளிவருவதே கேள்வி குறியாக இருந்தது. இணையத்தில் படம் பார்க்க முடியவில்லை என்று அவனவன் புலம்பிக் கொண்டு இருந்தான். ஆனால், அபிமான நடிகராக விஜய்க்கு வழங்கியிருக்கிறார்கள். அஜீத்துக்கு வழங்கினால் அவர் எப்படியும் நிகழ்ச்சிக்கு வர மாட்டார் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.

வருடா வருடம் விஜய் டி.வி விருது உண்மையான கலைஞர்களை தேடிப்பிடித்து விருது வழங்குவதை விட, தங்கள் விருது வழங்கும் நிகழ்ச்சியை எப்படி பிரபலப்படுத்துவது என்பதை யோசித்து யோசித்து பிரபலங்களை அழைக்கிறார்கள். ஒரு சிலரை வரவழைக்க அவர்களுக்கு விருது வழங்குகிறார்கள்.

விஜய் டி.வி எத்தனையோ சினிமா கலைஞர்களை உருவாக்குகிறது என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால், அவர்கள் உருவாக்கி விற்பனை செய்கிறார்கள் என்பதை அவர்களின் போக்கு காட்டுகிறது.

ஒரு வேளை, விஜய் டி.வி தொலைக்காட்சி உரிமை வாங்கிய படங்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்குகிறார்கள் என்று நினைக்கிறேன். அப்படி தான் விஜய் விருது வழங்கும் விழா காட்டுகிறது. 

மேற்கத்திய ஓவியங்கள் - பி.ஏ.கிருஷ்ணன்

"ஓர் ஓவியத்தையோ சிற்பத்தையோ பார்த்தால் நமக்குப் பிடித்திருக்கிறது அல்லது பிடிக்கவில்லை என்ற முடிவிற்கு நம்மில் பெரும்பாலோரால் உடனடியாக வர முடிகிறது. ஆனால் ஏன் பிடித்திருக்கிறது அல்லது ஏன் பிடிக்கவில்லை என்ற கேள்வியை நாம் கேட்பதில்லை. இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடிச் சென்றால் நமக்காக பல கதவுகள் திறக்கும். தேடிச் சோறு நிதம் தின்று வாழ்க்கை நடத்தும் கட்டாயம் இல்லாவிட்டால், கட்டாயம் இருந்தாலும்கூடவே களை சார்ந்த மூர்க்கம் இருந்தால், திறந்த கதவுகள் காட்டும் வழிகளில் நம்மில் சிலராவது செல்ல முடியும். சென்றால் ஓவியங்கள் மட்டுமல்ல, வரலாறு, மக்கள் வாழ்ந்த முறை, அறிவியல், இலக்கியம் போன்ற பல வெளிகளில் நாம் பயணிக்கலாம்."

- மேற்கத்திய ஓவியங்கள் நூலிருந்து...



ஏசுவிற்க்கு முன் மற்றும் பதிமுன்றாம் நூற்றாண்டில் இருந்து இருபதாம் நூற்றாண்டு வரையிலான ஓவியப் பதிவு. ஓவியப் பதிவு என்பதை விட ஓவியங்களின் பதிவு என்று தான் சொல்ல வேண்டும்.

பல ஓவியங்கள் மனிதனின் காமத்தையும், கிரோதத்தையும் தான் வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, அதிகார போதையில் நடந்த விருந்துகள், அதிகார வர்க்கத்தில் இருந்தவர்கள் முகங்கள் தான் ஓவியமாக பதியப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஓவியத்திற்கு பின் நடந்திருக்கும் சரித்திரக் குறிப்புகள், அதை வரைந்தவர்கள் என்று பல தகவல்கள் இருக்கிறது. கிட்டத்தட்ட 160 அழகிய ஓவியங்களோடு அதன் குறிப்புகள் இருக்கின்றன.

இந்த குகை ஓவியங்களை போல் எத்தனையோ உண்மைகளும் புதைக்கப்பட்டிருக்கிறது என்பது தான் வரலாற்று உண்மை.

தமிழ்நாட்டில் வரலாற்றை பதிவு செய்ய ஓவியங்களுக்கு பதிலாக சிற்பக்கலை தான் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. காலத்தால் எத்தனையோ சிற்பங்கள் அழிந்திருக்கிறது. வரலாற்று சொல்லும் சில சிற்பங்கள் பெருமைப் பேசும் சிற்பமாக மாறிவிட்டது.

வரலாறு வரலாறாக மக்களிடம் சென்றைடையாமல் இருப்பது தான் எல்லா நாட்டில் நடக்கும் மிகப் பெரிய கொடுமை. இதுப் போன்ற ஒரு சில புத்தகங்கள் அதைப் போக்க முயற்சி செய்கிறது.

மிக நேர்த்தியான வடிவமைப்பு. ஒவ்வொரு பக்கமும் ஆயில் பேப்பரில், மல்டிக்கலரில் அச்சடிக்கப்பட்ட பக்கங்கள். ஓவியங்கள் என்று வாசகனை கவர்கிறது. வாசிக்க தூண்டும் விதமாக எழுதிய பி.ஏ. கிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்.

இணையத்தில் வாங்க....

Monday, July 7, 2014

அகம் புறம் அந்தப்புறம் - முகில்

சமஸ்தானங்களில் அந்தரங்க வாழ்க்கை. யார் யார் எத்தனை பெண்கள் வைத்துக் கொண்டார்கள். அவர்களுக்கு எத்தனை மகாராணிகள். எத்தனை பிள்ளைகள் என்று அவர்களின் அந்தரங்க வாழ்க்கையை கணக்கு சொல்கிறது இந்த புத்தகம்.

மகாராஜாக்கள் அந்தப்புரத்தில் உல்லாசமாக இருந்தது நமக்கு ஒரு வரி தகவலாக தான் தெரியும். ஆனால், அதுவே தலையணை அளவில் ஒரு புத்தகமாக எழுதி சொல்லிருக்கிறார் முகில்.

முகிலின் நகைச்சுவை கலந்த எழுத்து, எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் லொள்ளு தர்பார், லொள்ளு காப்பியம் போன்ற புத்தகங்கள் நாளிதழலில் தொடராக வந்தாலும், நூலாக வரும் போது பெரிய அளவில் கவரவில்லை. பேக் பிரோபைலில் இண்டர்வியூவுக்கு செல்லும் கட்டுரை இன்று வரை என்னால் மறமுடியாத ஒன்று.



'அகம் புறம் அந்தப்புறம்' - புத்தகத்தின் உள்ளட்டத்தை பார்த்தால் மிகவும் ட்ரையான ஒன்று. மேடையில் பேசு பேச்சாளர்களுக்கும், நண்பர்களுடன் விவாதிப்பதற்கும், நாம் அறிவாளி என்று காட்டி கொள்வதற்கும் பயண்படாத புத்தகம். ஆனால், முகிலின் நகைச்சுவை எழுத்து நடை புத்தகத்தை ஸ்வரஸ்யமாக நகர்த்தி செல்கிறது. இரண்டு வரி தகவல் வைத்து ஒரு அத்தியாயமாக சிறுகதை வடிவில் எழுதுகிறார். இடை இடையே தகவலும் கொடுக்கிறார். இடையைப் பற்றி வர்ணிக்கிறார்.

அந்தக் காலத்தில் வாழ்க்கையை மகாராஜாக்கள் எப்படியெல்லாம் அனுபவித்திருக்கிறார்கள் என்ற பிரமிப்பு வருகிறது. இன்று விஜய மாலியா போன்ற தொழில் அதிபர்கள் உல்லாசமாக வாழ்வதை எத்தனையோ ஊடகங்கள் காட்டுகிறது. ஆனால், அன்றைய காலத்தில் அடிமை இந்தியாவில் ஊடக வளர்ச்சியில்லாத சமயத்தில் விருந்து என்ற பெயரில் அவர்கள் அடித்த கூத்து பதிவு செய்கிறது இந்த நூல்.

மக்களைப் பற்றி கவலைபடாமல் வாழ்ந்தவர்கள். சுதந்திரம் அடைந்து காங்கிரஸ்ஸில் சேர்ந்து அரச பரம்பரை, ராஜா பரம்பரையில் வந்தவர்கள் என்று பெருமையாக பேசி கொள்பவர்கள் தெற்கில் இல்லையென்றாலும் வடக்கில் பலர் இருக்கிறார்கள். அவர்கள் பரம்பரை முகத்திரையை இந்தப் புத்தகம் கிழித்து காட்டுகிறது.

இந்த நூலின் விலை பிரமிப்பாக இருக்கலாம். ஆனால், அதன் வடிவமைப்பு, புகைப்படங்கள், உள்ளடக்கம் என்று எல்லாம் சேர்த்து பார்த்தால் இந்த புத்தகத்தின் விலை குறைவு தான்.

வரலாற்று பிரியர்கள் வாசிக்க வேண்டிய நூல். கல்லூரி, அரசு நூலகத்தில் அவசியமாக இருக்க வேண்டிய குறிப்பு புத்தகம் இது.

**

அகம் புறம் அந்தப்புறம்
- முகில்
- Rs.999

இணையத்தில் வாங்க

LinkWithin

Related Posts with Thumbnails