வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, May 27, 2009

தெரு கூத்து …

முகத்தில் காலை சூரியன் வெளிச்சம் பலிர் என்று அடித்தது. இரவு நேரம் காற்றோட்டமாக இருக்கும் என்று ஜன்னலோர சீட்டு பார்த்து பஸ்ஸில் அமர்ந்தேன். அதுவே என் தூக்கத்திற்கு எதிரியாக இருக்கும் என்று காலையில் தான் தெரிந்து கொண்டேன். ஐந்து நாட்கள் பெட்ரோல், டீசல் புகையில் இருந்து விடுதலை பெற்று என் பூஞ்சோலை கிராமத்துக்கு வந்தேன்.

என்னை அழைத்து செல்வதற்காக மாடசாமி மாட்டு வண்டியுடன் தயாராக இருந்தார். எனக்கும், மாடசாமிக்கும் பத்து வயது வித்தியாசம் இருக்கும். சிறு வயதில் இருந்து என் வீட்டில் இருக்கிறார். எங்கள் வீட்டில் யாரும் அவரை வேலைக்காரராக நடத்தியதில்லை. அவர் என் குடும்பத்தில் ஒருவர். என்னை சின்ன வயதில் இருந்து வளர்த்தவர் அவர் தான்.

" வாங்க ராமு தம்பி. பிராயாணம் எப்படி இருந்தது ?"

" நல்லா இருந்தது. நீங்க எப்படி இருக்கீங்க...? வீட்டுல அண்ணி, பையன் எப்படி இருக்காங்க ?"

" எல்லோரும் நல்லா இருக்கோம். பைய கொடுங்க..."

" நானே எடுத்திட்டு வரேன்" என்று கூறி என் பையை மாட்டு வண்டியில் போட்டேன்.

என் கிராமத்தில் பெட்ரோல் வண்டிகள் அதிகம் இல்லை. பெட்ரோல் பங்க் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதால், பலர் சைக்கிளும், மாட்டு வண்டியும் தான் வைத்திருக்கிறார்கள். பலருக்கு ப்ளாஸ்டிக் என்றால் என்ன என்பது கூட தெரியாமல் இருக்கிறார்கள். அதனால், எங்கள் கிராமத்து இயற்கை இயற்கையாகவே இருந்தது.

மரம், சேடி, கொடி அழகை ரசித்ததில் என் வீடு வந்ததை கவனிக்கவில்லை.

" தம்பி ! வீடு வந்திருச்சி இறங்குங்க..." - மலர்ந்த முகத்துடன் மாடசாமி கூறினான்.

ஒரு மாதத்திற்கு பிறகு என் கால்கள் வீட்டில் பதிந்தது. அப்பா என் வரவை எதிர்பார்த்து இருந்தார். எனக்காக அம்மா கோழி கறி சமைத்து வைத்திருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு அம்மா கையால் கோழி கறியை ஒரு பிடி பிடித்தேன். மாட்டை கட்டி விட்டு மாடசாமி விட்டுக்குள் வந்தார்.

" வா மாடசாமி! வந்து ஒரு வாய் சாப்பிடு" என்றாள் என் அம்மா.

" இல்லம்மா! வீட்டுக்கு போனும். என் பையனுக்கு காய்ச்சல். எத பார்த்து பயந்தான் தெரியல்ல. மந்திருச்சு விட்ட மாதிரி இருக்கான். நம்ப கூத்து நாடகம் ஆரம்பிச்சதுல்ல இருந்து காய்ச்சல் இருக்கு" என்று கவலையாக மாடசாமி கூறினார்.

" என்ன கூத்து...?" என்றேன்.

" நம்ம ஊர் திருவிழாவுல.... சஷ்டிக்கு முருகன் அசுரர்கள வதம் பண்ணுற கூத்து. அதுல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அசுரன நான் நடிக்கிறேன். அத பாக்குறதுக்கு என் பொண்டாட்டியும், பிள்ளையும் வந்தாங்க. என்ன காத்து பட்டுச்சோ தெரியல்ல.“

" டாக்டர் கிட்ட காட்டுனீங்களா..?

" காட்டுனேன் தம்பி. பையன் எதோ பார்த்து பயந்திருக்கிறான் சொன்னாரு. மருந்து கொடுத்திருக்காரு. கொடுத்து பார்த்தேன். குணமாகல்ல. வேப்பிலை அடிச்சி பார்த்தாச்சி. என்னனு தெரிய மாட்டிங்குது.."

" நான் சாப்பிட்டு பையன பார்க்க வரேன்...".

" பரவாயில்ல. இப்போவே ரொம்ப மணி அயிடுச்சு. ஆறு மணிக்கு கூத்து ஆரம்பிச்சிடும். அங்க வந்திங்கனா என் பையனையும், பொண்ணாட்டியும் பார்க்கலாம்."

" சரி! நான் ஆறு மணிக்கு கூத்து பட்டறைக்கு வந்துடுறேன்"

மாடசாமி தன் வீட்டுக்கு சென்றார். பயண கலைப்பு வேறு. மதியம் சாப்பாடு அளவுக்கு மீறி சாப்பிட்டு விட்டேன். பஸ்ஸில் சரியாக தூக்கம் இல்லாததால் தூக்கம் என் கண்ணை சொக்கியது. நன்றாக படுத்து உறங்கினேன்.

அப்போது தான் தூங்கியது போல் இருந்தது. அதற்குள் மணி ஐந்திரை ஆகிவிட்டது. மாடசாமியின் கூத்து பார்க்க வேண்டும் என்ற ஆசை. அதே சமயம் அவர் பையனையும் பார்க்க வேண்டும். சீக்கிரமாக என் முகத்தை அலம்பி கொண்டு கூத்துக்கு சென்றேன்.

கூத்து பட்டறையில் ஒவ்வொருவரின் முகத்திலும் முக சாயம் புசிக் கொண்டு இருந்தார்கள். உடனே மாடசாமி குரல் கேட்டது.

"தம்பி! நான் இங்க இருக்கேன் "

திரும்பி பார்த்த போது பச்சை சாயமும், பய முறுத்தும் கருப்பு மை அப்பிய விழிகளுடன் இருந்தார்.

" அடையாளமே தெரியல்ல. நீங்க நடிக்கும் போது அண்ணியாள கூட கண்டு பிடிக்க முடியாதுனு நினைக்கிறேன்."

" அசுரனா நடிக்கிறது நான் தான்னு முன்னாடியே பொண்டாட்டி, பையன் கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன். அந்த சந்தேகம் வராதுல்ல.." சிரித்துக் கொண்டு கூறினார்.

அண்ணியும், அவர் பையனும் கூத்து பார்ப்பதற்காக முன் வரிசையில் அமர்ந்திருப்பதை பார்த்தேன். நான் என் அண்ணி அருகே சென்று அமர்ந்து கொண்டேன். அண்ணியிடம் இருந்து பையனை வாங்கி என் மடியில் வாங்கி கொண்டேன். அவனுக்கு ஆறு வயது இருக்கும். ரொம்ப சுட்டியாக திரிபவன் காய்ச்சல் வந்ததில் இருந்து துவண்டு போய் இருந்தான். அவன் உடல் அனலாய் கொதித்தது. எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

கூத்து தொடங்கியது. என்ன தான் ஏ.சி அறையில் அமர்ந்து படம் பார்த்தாலும், தெரு கூத்தை தரையில் அமர்ந்து பார்ப்பது போல் வரும் சுகம் கிடையாது. இந்த சுகம் கிராமத்தினருக்கு மட்டுமே தெரியும்.

" வந்தேன் வந்தேன்...மன்னன் வந்தேன்..." என்று மாடசாமி அரிதாரம் புசிய முகத்தோடு தோன்றினார். மாடசாமி வந்ததும் பலர் கைதட்டினார்கள். சிறு வயதில் இருந்தே அவருக்கு நடிப்பு ஆர்வம் அதிகம். தெருகூத்து நடிப்பில் அவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது என்று சொல்லலாம்.
கூத்தின் இறுதி கட்டம் நெருங்கியது. முருகர் கடவுள் அசுரனை கொள்ளும் கட்டம். முருகராக நடித்தவர் அசுரரை... மாடசாமியை வேலால் கொல்ல வேண்டும். மாடசாமி மீது வேல் படும் போது பார்க்க வந்த அனைவரும் 'அரோகரா... அரோகரா...' என்று கத்தினர். ஒருவன் மட்டும் பயத்தில் நடுங்கி கொண்டு இருந்தான். அதை என்னால் நன்றாக உணர முடிந்தது. பயந்து நடுங்கியது என் மடியில் அமர்ந்த மாடசாமியின் மகன். அவன் நடுங்கியது அண்ணி கவனிக்கவில்லை. நான் அவனை தனியாக அழைத்து சென்று பேசினேன்.

" என்னடா.... ஆச்சு. ஏன்டா பயப்படுற..." என்று கேட்டேன்.

" அப்பா.. அப்பாவ.. கொன்னுடாங்க...." பயத்தில் பிதறினான்.

" அப்படி எல்லாம் ஒன்னுமில்ல. பத்து நிமிஷத்துல வந்திருவாரு..."

"ஏன் தினமும் எங்கப்பாவ வேலால குத்துறாங்க ?" மழலை கலந்த மொழியுடன் கேட்டான்.

நமக்கு தான் மாடசாமி செய்தது நடிப்பென்று தெரியும். பாவம் சின்ன குழந்தையின் பிஞ்சு மனம். அது நிஜம் என்று நம்பி ஒவ்வொரு நாளும் மாடசாமி மீது வேல் பாய்யும் போது கதறி இருக்கிறான். அண்ணி 'அரோகரா' போடும் கோஷத்தில் தன் மகன் பயப்படுவதை கவனிக்காமல் இருந்திருப்பார். நான் என்ன சொல்லியும் அந்த பையன் பயம் தெளியவில்லை. கொஞ்ச நேரத்தில் மாடசாமி முக சாயத்தை கலைத்து வெளியே வந்ததை பார்த்த பிறகு, அந்த பையனுக்கு உயிரே வந்தது.

மாடசாமி வந்ததும் அவரை இருக்க கட்டி பிடித்துக் கொண்டான். ஒவ்வொரு நாளும் தன்னை பாசத்துடன் கட்டி பிடிக்கிறான் என்று மாடசாமி நினைத்துக் கொண்டு இருந்திருக்கிறார். அவன் பயத்தில் தான் கட்டி பிடித்தான் என்று என்னால் உணர முடிந்தது.

" பட்டனத்துல படம் பார்த்த நீங்க கூத்து பார்க்க வந்திருக்கீங்க. பிடிச்சிருந்ததா...?"

" என்ன இப்படி சொல்லுறீங்க...? கூத்துல இருந்து தான் சினிமாவே வந்தது.."

" ஆனா யார் அத ஞாபகம் வச்சிருக்காங்க...!"

" உங்க கிட்ட தனியா பேசனும்". கையில் இருந்த மகனை அண்ணியிடம் கொடுத்து விட்டு மாடசாமி என்னுடன் வந்தார்.

மாடசாமியிடம், " பையனுக்கு காய்ச்சல் வந்ததுக்கு காரணமே நீங்க தான்" என்றேன்.

அவர் என்னை உற்று பார்த்தார். "என்ன சொல்லுறீங்க?" மெல்லிய குரலில் கேட்டார்.

" கூத்துல உங்கள குத்துனத பார்த்து நிஜம்னு நம்பிட்டான். ஒவ்வொரு நாளும் உங்க மேல் வேல் குத்தும் போது பயந்து போய் இருக்கிறான். உங்க மேல இருக்குற பாசம் தான் அவன் காய்ச்சலுக்கு காரணம்."

நான் பேசுவதை கேட்டு தன்னால் மகன் பயப்படுவதை உணர்ந்தார். கூத்து முடியும் போது பலர் தன்னை பாராட்டியதில் மகனின் பாசம் மாடசாமி கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டது.

" இப்போ என்ன பண்ணுறது...?"

" உங்க பையன் பழையப்படி சந்தோஷமா இருக்கனும்னா ? அது உங்க கையில தான் இருக்கு "

" என்ன பண்ணனும் சொல்லுங்க..?"

" நாளைக்கு கூத்துல நடிக்காதீங்க. உங்க பையனோட உக்காந்து கூத்து பாருங்க. உங்களுக்கு பதிலா வேற யாராவது நடிக்க நான் ஏற்ப்பாடு பண்ணுறேன்."

சிறு வயதில் இருந்து மாடசாமிக்கு கூத்துக் கட்டி வேஷம் போடுவது ரொம்ப பிடிக்கும். ஆனால், தன் மகனின் பயத்தை பார்த்த பிறகு நடிப்பு அவருக்கு பெரிதாக தெரியவில்லை. என்னிடம் எந்த பதிலும் சொல்லாமல் கூத்து நடத்தும் தலைவரிடம் விஷயத்தை சொன்னார். தலைவரும் சற்று நேரம் யோசித்தார். அதன் பின் " பரவாயில்ல மாடசாமி ! நம்ப பையன் ஒருத்தன் ரொம்ப நாளா நடிக்குறதுக்கு வாய்ப்பு கேட்டுட்டு இருந்தான். அவன வச்சி சமாளிச்சுக்கிறேன். நீ பையன பார்த்துக் கோ."

அடுத்த நாள்.

நானும், மாடசாமி குடும்பத்துடன் கூத்து பார்க்க சென்றோம். அப்பா தன் அருகில் இருந்ததால் பையன் முகம் பிரகாசமாக இருந்தது. இந்த அசுரன் உடலில் வேல் படும் போது அந்த பையனும் மற்றவர்களோடு சேர்ந்து 'அரோகரா' என்று கத்தினான். அவனுடைய பழைய தெம்பு வந்தது. புது நடிகன் மாடசாமி அளவுக்கு நடிக்கவில்லை என்றாலும், சொதப்பாமல் நடித்தான். மாடசாமிக்கு கிடைத்த கைதட்டல் அவனுக்கு கிடைக்காத போது தெரிந்துக் கொண்டேன் 'மாடசாமி எங்களூர் சுப்பர் ஸ்டார்' என்று !

அன்று இரவே நான் ஊருக்கு செல்ல வேண்டியதாக இருந்தது. மாடசாமி வழக்கம் போல் என்னை பஸ் ஏற்றிவிட்டார். நான் செல்லும் போது என் கையை பிடித்து ‘நன்றி’ கூறினார். மன நல மருத்துவராய் என் கடமையை தான் செய்தேன் என்று கூறினேன். கலைஞர்கள் கூத்து கலையை விடுவதற்கு பாசமும் ஒரு காரணமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே சென்னைக்கு வந்தேன் . மீண்டும் பெட்ரோல், டீசல் காற்றை ஸ்வாசித்தேன்.

*****

சமூக கலை இலக்கிய அமைப்பு சார்பாக வலைப்பதிவர்களுக்கு நடத்தப்படும் சிறுகதைப் போட்டிக்கான ஆக்கம்!

Tuesday, May 26, 2009

வாழ்க அகதிகள் மூகாம் !

விடுதலை புலிகள் தங்கள் தலைவர் பிரபாகரின் மரணத்தை உறுதி செய்து விட்டனர். இறந்த உடல் பிரபாகரன் தானா என்று எழுதிய கேள்விகள் எல்லாம் குப்பையில் போட வேண்டிய நிலையில் தள்ளப்பட்டு விட்டோம்.

பிரபாகரன் மரணத்தை பற்றி சிங்கள இராணுவம் அறிவித்த போது நான் வருந்தி பதிவு எழுதினேன். அதன் பின், வந்த ஒரு சில பதிவுகள் ( குறிப்பாக லக்கி லுக் பதிவுகள்), பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற நம்பும் வகையில் எனக்கு ஆறுதலாக இருந்தது. அடுத்து, நக்கீரன் வெளியீட்ட செய்தியும் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று நம்பினேன். இப்போது, விடுதலை புலிகள் பிரபாரனின் மரணத்தை உறுதி செய்த பிறகு 'தமிழ் ஈழம்' கனவு என்று உறுதி செய்யும் நிலையில் நாம் இருக்கிறோம்.

இனியாவது என் தமிழர்களுக்கு இலங்கையில் உயிர் பாதுகாப்பு இருக்குமா...? மூன்று வேளை உணவு சாத்தியமா... ? இயல்பால வாழ்க்கை வாழ முடியாமா ? என்று பல கேள்விகள் எழுகின்றன.

‘போர் முடிந்த விட்டது’ என்று ராஜபாக்ஷே அறிவித்த பிறகும்... ஏன் வெளி நாட்டு ஊடகங்கள் இலங்கையில் அனுமதிக்க வில்லை...? நிவாரண நிதி சரியாக பாதிக்கப்பட்ட தமிழர்கள் சென்று அடைகிறதா என்று இப்போதாவது யாராவது உறுதியாக சொல்ல முடியுமா...? பிரபாகரன் கையில் துப்பாக்கி இருந்த போதே தமிழர்களின் உயிருக்கு அங்கு பாதுகாப்பு இல்லை. இப்போது, பிரபாகரன் இறந்து விட்டார். அவர்கள் நிலை....??? இந்த கேள்விகள் எல்லாம் வேள்வியில் எரிந்துக் கொண்டு இருக்கின்றன. பதில் அளிப்பவர்கள் தான் யாருமில்லை.

பிரபாகரனின் நண்பன் கலைஞர் தன் கட்சி தமிழருக்கு மத்திய அமைச்சர் சீட் வாங்குவதில் கவனமாக இருக்கிறார். காங்கிரஸின் சந்தோஷத்தை பற்றி சொல்லவே வேண்டாம்.

இனி.... அதகதிகள் மூகாம் அதிகரிக்கும். தமிழர்களை பிச்சைக்காரனாக்கிய சந்தோஷத்தில் ஆட்சி நடக்கட்டும். தமிழர்கள் உயிரை பேரம் பேசியவர்கள் மானங்கெட்டு வாழ்க்கை வாழட்டும்.

வாழ்க அகதிகள் மூகாம் !

****

படங்கள்நன்றி : http://www.inllanka.com/

Thursday, May 21, 2009

ஆதவன் எழுதிய 'என் பெயர் ராமசேஷன்'

அதிகமான ஆங்கில வார்த்தைகளில் எழுதப்பட்ட தமிழ் நாவல். ஆங்கில அகராதி பக்கத்தில் வைத்துக் கொண்டு தான் இந்த தமிழ் நாவலை படிக்க வேண்டும். காரணம், கதை மேல்தட்டு மனிதர்கள் சுற்றி நகர்வதால் வாக்கியத்திற்கு 'நான்கு வார்த்தை ' ஆங்கிலம் பேசுவது போல் எழுதியிருக்கிறார் ஆதவன்.

1980ஆம் ஆண்டு முதல் பதிப்பாக வந்த 'என் பெயர் ராமசேஷன்' நாவல், உயிர்மை பதிப்பகத்தின் மூலம் இரண்டாம் பதிப்பு வெளிவந்திருக்கிறது. 30 வருடங்கள் முன்பு வந்திருந்தாலும், இந்த காலக்கட்டத்தின் இளைஞனின் மனநிலையை பிரதிபலிக்கும் அளவிற்கு 'ஆதவன்' அவர்கள் எழுத்துக்கள் இருக்கின்றன. இதை படிப்பவர்கள் யாரும் முப்பது வருடம் முன்பு எழுதிய நாவல் என்று சொன்னால் நிச்சயமாக நம்ப மாட்டார்கள். நாவலில் வரும் கதாபாத்திரமும், சம்பவமும் இந்த காலத்திற்கும் பொருந்துகின்றன.சா.கந்தசாமியின் 'விசாரணை கம்மிஷன்', வண்ணநிலவனின் 'கடல்புறத்தில்', வைரமுத்துவின் 'கள்ளிகாட்டு இதிகாசம்' போன்ற நாவலில் வரும் வலிகளையும், மரணங்களையும் படித்து பழக்கப்பட்டவர்களுக்கு குளிர்ச்சியான நாவல் இது. முழுக்க முழுக்க மத்தியத்தர இளைஞனான ராமசேஷனை சுற்றி நடக்கும் சம்பவங்கள் தான் கதை.

ராமசேஷன் கதாபாத்திரத்தின் காதல், காமம், நட்பு என்று உணர்வுகளை வெளிப்படுத்தும் இளமை மிக்க நாவல் என்று சொல்லலாம். நாவல் படிக்க தொடங்கும் போது எனக்கு Chetan Bhagat எழுதிய ‘Five Point Someone’ நாவல் நினைவுக்கு வந்தது. ( அந்த நாவலில் IITயில் மூன்று இளைஞர்கள் அறிமுகமாவது போல், இந்த நாவலிலும் மூன்று இளைஞர்கள் பொறியியல் கல்லூரியில் அறிமுகமாகுகிறார்கள்.) ஆனால், கதை செல்ல செல்ல ராமசேஷனின் ஆழ் மனதில் இருக்கும் வன்ம சிந்தனைகளையும், மன தடுமாற்றத்தையும் படம் பிடித்து காட்டுகிறார். குறிப்பாக, ராமசேஷன் தன் மனதில் " உலகமே 'ப்ராஸ்'களும், 'பிச்'களும் நிரம்பியதாகத்தான் தோன்றியது" என்று மாலாவை பார்க்கும் போது அவன் நினைத்துக் கொள்வதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

நண்பன் ராவின் தங்கயான மாலாவை அனுபவித்த ராமசேஷன், ராவ் காதலுக்கு அறிவுரை கூறு அளவிற்கு இறுதி ஆண்டில் காதல் மன்னனாக இருக்கிறான்.

"ஒரு பெண்ணை நேசிக்க வேண்டுமென்றால் நமக்கு எஸ்கிமோக்கள் பற்றியும், சூரியப் பொருட்டுகள் பற்றியும் தெரிய வேண்டுமென்று அவளிடம் நிரூபிக்க முயல்வதால் எந்த பிரயோஜனமுமில்லை. பேசாமல் ஒரு தனியிடத்துக்கு அவளை எப்படியோ அழைத்து சென்று எனக்கு உன்னை ரொம்பப் படித்திருக்கிறது என்று சொன்னால் போதும்" என்று அறிவுரை சொல்லுவது 'நச்' என்று உள்ளது.

நண்பனின் தங்கை மாலா தன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் போன் போட்டு ராமசேஷனை அழைப்பதும், நண்பன் காதலித்த பெண் ராமசேஷனிடம் ஹோட்டலில் ரூம் போட சொல்வதும், திருமண வயதில் பெண்ணுக்கு தாயானா மாமியை திருமணம் செய்து கொள்ள நினைப்பதும் என்று ஒரு இளைஞனின் ஆழ் மனதின் ஒலிந்து இருக்கும் வன்மமான சிந்தனைகள் எல்லாம், கல்லூரி முடிந்து தன் தங்கை வேறு ஒருவனுடன் பார்க்கும் போது ‘காதல் மன்னன்’ என்ற வட்டத்தில் இருந்து குடும்பஸ்தனுக்குரிய கோபம் அவனுக்கு வருகிறது.

தற்கால வாழ்ந்துக் கொண்டு இருக்கும் எழுத்தாளர்களின் நூல்களை படித்தே பழக்கப்பட்ட எனக்கு மறைந்த எழுத்தாளர் நூல்களை படிக்க தொடங்கி இருக்கிறேன். சாண்டில்யன், ஆதவன்..... தொடர்ந்து.... அடுத்து நான் படிக்க போகும் எழுத்தாளர் 'தேவன்'.


உயிர்மை பதிப்பகம்,
விலை.100
பக்கங்கள் : 198.

Tuesday, May 19, 2009

பிரபாகரனின் ஆத்மா சாந்தி அடையுமா ??

பல முறை 'பிரபாகரன் மரணம்' என்று அறிவித்திருந்த இலங்கை அரசு இந்த முறை ஆதரப்புர்வமாக அறிவித்திருக்கிறது. அறிவிப்போடு இல்லாமல் ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் இறந்த அவர் உடலை காட்டிவருகின்றனர். (இந்த முறையும் இது வேறும் வதந்தியாக இருக்க கூடாத என்று மனம் எங்குகிறது.)மூடாத கண்கள், நிறைவேறாத கனவுகள், கம்பிரமான இரண்வு உடையில் பிரபாகரன் இறந்திருக்கிறார். அவர் லண்டன், அமெரிக்கா என்று பதுயிருப்பார் என்று சில ஊடங்கள் மூலம் தவறாக பிரச்சாரம் செய்தவர்களுக்கு 'பிரபாகரன் ஒரு உண்மையான போராளி' என்று பிரபாகரனின் மரணம் காட்டியிருக்கும். இறந்த அவர் ஆத்மா தமிழீழ எல்லையில் தான் சுற்றிக் கொண்டு இருக்கும். அந்த ஆத்மாவையாவது இலங்கை இராணுவம் சுதந்திரமாக உலாவ விடட்டும்.

பிடல் காஸ்டிரோ ஆயுதம் எடுத்தான் - க்யூபா பிறந்தது. ஹோ சி மின் ஆயுதம் எடுத்தான் - வியட்நாம் மலர்ந்தது. ஈழம் மலர பிரபாகரன் ஆயுதம் எடுத்தான். இன்று நரகாசுரன் இறந்த தீபாவளி தினம் போல் கொண்டாடுவதும், சந்தோஷமாக இனிப்பு வழங்குவதுமாக தான் இருக்கிறார்கள். ஹிட்லர் தொடங்கி இந்த உலகம் தோல்வி அடைந்தவர்களை விமர்சித்து வருகிறது. இதில் பிரபாரகனும் தப்ப முடியாமல் போனது தான் மிக கொடுமை.

பிரபாகரன் செய்தது சரியா ? தவறா ? என்று விவாதிக்க விரும்பவில்லை. விவாதித்தாலும் இனி எந்த பயனுமில்லை. அவரால் இறந்த உயிர் இழப்புகளை நியாயப்படுதவுமில்லை. இனியாவது, 'இன படுகொலை' என்ற பெயரில் யார் உயிரும் போகாமல் இருக்க வேண்டும். யுத்தமில்லாத பூமியாக மாற வேண்டும். அது தான் எல்லோருடைய ஆசையாக இருக்கும்.பிரபாகரன் மீது சிறு கீறல் விழுந்தால் தமிழ் நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்று சொன்ன அரசியல் வாதிகள், தனி ஈழம் அமைத்து கொடுப்போம் என்று சொன்னவர்கள் இப்போது எதை வைத்து அரசியல் செய்ய போகிறார்கள் ?

இது வரை, அவரை வைத்து அரசியல் செய்தவர்களுக்கு இனி அரசியல் செய்ய வேறு காரணம் கிடைத்து விடும். தமிழ் நாட்டில் அரசியல் செய்ய காரணத்திற்கா பஞ்சம்...! ஆனால், இலங்கை தமிழர்களுக்கு இனி யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

Monday, May 18, 2009

கலைஞரின் சாணக்கிய தந்திரம்

தி.மு.கவுக்கு சென்ற முறையை விட 12 சீட்டு குறைவாக கிடைத்ததை ஏளனம் செய்பவர்களுக்கு....

2004 ஆண்டு, நாடாள மன்ற தேர்தலில் அதிமுக எதிரான எல்லா முக்கிய கட்சிகளும் தி.மு.கவுடன் கூட்டனி வைத்திருந்தனர். அதனால், 40 தொகுதிகளில் வென்றது பெரிய விஷயம் ஒன்றுமில்லை. ஆனால், இந்த தேர்தலில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சிகள் தவிர பெரும்பாலான முக்கிய கட்சிகள் தி.மு.க எதிர் அணியில் இருந்திருக்கிறது. இதில், 28 சீட்டுகள் வென்று இருப்பது தான் மிக பெரிய வெற்றி !!

தி.மு.க தோல்வி என்று பார்த்தால் நான்கு தொகுதிகள் மட்டும் தான் ( ஒரு தொகுதியில் வேட்பாளர் புதுமுகம்). ஏழு இடங்களில் தோல்வி அடைந்தது மக்கள் 'காங்கிரஸ் கட்சி' மேல் இருக்கும் அதிருப்தி தான் காரணம்.காங்கிரஸூடன் கூட்டனியை தி.மு.கவை பலர் பல விதமாக விமர்சித்து வந்தனர். அவர்களுக்கு 'தான் ஒரு அரசியல் பிதாமகன்' என்று கலைஞர் மீண்டும் ஒரு முறை காட்டிவிட்டார்.

கடைசி வரை தி.மு.க காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக இருந்ததால், கலைஞர் எதிர்பார்ப்பது போல் ஏழு மந்திரி சீட் கிடைத்தாலும் கிடைக்கலாம். பங்கு போட்டுக்கொள்ள உதிரி கட்சிகள் என்று யாருமில்லை. ஒரு வேளை திருமாவுக்கு ஒரு மந்திரி சீட் கொடுத்தாலும், மீதம் இருக்கும் ஆறு சீட் தி.மு.கவுக்கு தான் !!

40 தொகுதியில் வெற்றி பெற்ற போது ஆறு மந்திரி சீட் வாங்கியவர், இப்போது 28 தொகுதியில் வெற்றி பெற்று ஏழு மந்திரி சீட் வாங்க போகிறார்.

கலைஞர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !!

இப்போழுது தெரிந்திருக்கும்.... 'கலைஞர்' வயதானாலும் சாணக்கியர் சாணக்கியர் தான் !!

Friday, May 15, 2009

ஜெயமோகன் எழுதிய 'நிழல் வெளிக்கதைகள்'

'கடவுள் உண்டா ? இல்லையா ? என்ற வாதங்கள் இழுவையில் இருப்பது போல் 'பேய்கள் உண்டா ? இல்லையா' என்ற வாதமும் இழுவையில் உள்ளன. 'கடவுளை பார்த்தேன்' என்று ஒருவன் சொன்னால், அவனை பைத்தியக்காரனாக பார்ப்பவர்கள் கூட, 'இந்த இடத்தில் பேய் இருக்கிறது' என்று சொன்னால் உள்ளூர இருக்கும் பயத்தில் செல்லமாட்டார்கள். 'கடவுள் இல்லை' என்று சொல்பவர்கள் கூட மனதில் ஒரு இடத்தில் பேய் பயம் ஒழிந்துக் கொண்டு இருப்பதை தான் இது காட்டுகிறது. அப்படிப்பட்ட பேய்களை பற்றின பத்து சிறுகதைகள் தான் ஜெயமோகன் எழுதிய 'நிழல் வெளிக்கதைகள்'.

'Evil dead, Excorist போன்ற படங்களை நல்லிரவு 12 மணிக்கு கூட தனியாக பார்த்திருக்கிறேன். இரவில் பேய் கதைகள் படிக்கும் அனுபவம் இது தான் முதல் தடவை. 'இமையோன்' சிறுகதையை படித்தவுடன் கொஞ்ச நேரத்தில் பேய் உல்கத்திற்கு சென்று விட்டேன். அடுத்த சிறுகதையான 'பாதைகள்' படிக்கும் போது வீட்டில் கீழே விழுந்த பாத்திரம் எப்படி பயமுறுத்தும் என்று அப்போது தான் புரிந்துக் கொண்டேன்.பேய் படமாக இருந்தாலும், புத்தகமாக இருந்தாலும் யாராவது நம்மை தொடாத வரை நாம் தைரியசாலியாக தான் இருக்கிறோம். அந்த சமயத்தில் ஒருவர் அழைக்கும் போது, சத்தம் கேட்கும் போதும் நமக்குள் ஒழிந்து இருக்கும் பயம் பிரீட்டு வெளிப்படுகிறன.

"தம்பி" சிறுகதை குறிபிட்டு சொல்ல வேண்டும். சுபமாக முடியும் என்று எதிர்பார்த்த கதை. ஆனால், பயத்தில் பேய்யை உதாசினம் செய்வதால் மேலும் பேய் விடாது என்பதை கதை உணர்த்துகிறது.பத்து சிறுகதைகளும் பேய்களால் மனிதன் ஆழ் மனதில் இருக்கும் பயமும், பீதியை காட்டுகிறது, 'பேய் இல்லை' என்று சொல்பவன் கூட தன் மனதில் ஒழிந்து இருக்கும் பேய் குணங்களோடு தான் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறான்.

ஜெயமோகன் அவர்கள் பீதியும், பரபரப்பும் உருவாகும் படி எழுதியிருக்கிறார். வரிவேலு பாணியில் சொல்வதென்றால் " நல்ல தான் கலப்புறாங்க பீதிய ?" என்று சொல்லும்படி இந்த சிறுகதைகள் இருக்கிறது.

உயிர்மை பதிப்பகம்,
பக்கங்கள் : 120, விலை.60

Tuesday, May 12, 2009

சி.டி கடை வைத்த குண்டு குரு - மண்டு மதன்

(கொஞ்ச இடைவேளைக்கு பிறகு மீண்டும் ‘குண்டு குரு - மண்டு மதன்’ )

குருவும் , மதனும் ஒரு புது டி.வி.டி கடை வைக்கின்றனர். ‘ஆஹா, ஒஹோ’ என்று வியாபாரம் போகவில்லை என்றாலும் ஒரளவு லாபமாக சென்று கொண்டு இருந்தது.

மண்டு மதன் : ஹெலோ பெப்சி உமாவா?????? எனக்கு சிவகாசில இருந்து ஒரு பாட்டு பொடுங்க...
(பக்கத்தில் இருந்த குண்டு குரு )

குண்டு குரு : பெப்சி உமா சென்னையில இருக்காங்க...
மண்டு மதன் : விளையாட குரு இப்பதான் லைன் கிடைச்சிருக்கு. (போனில்) ஹெலோ பெப்சி உமாவா ??

போன் : பெப்சி உமா வேற சேனல்லுக்கு போய்ட்டாங்க... என் பேரு திவ்யா. உங்களுக்கு என்ன பாட்டு வேணும்
மண்டு மதன் : நா பெப்சி உமா கிட்ட தான் பேசனும். அவங்க நம்பர் கொடுக்க முடியுமா...

போன் : ஹெலோ என்ன ஈவ் டிசிங்கா... போலீஸ கூப்பிட வேண்டியயிருக்கும்...
குண்டு குரு : டேய் மண்டு முதல்ல போன் வைய்டா....

குரு மதனிடம் போனை வாங்கி வைக்கிறான்.

மண்டு மதன் : என்ன குரு...? இந்த பொண்ணுகிட்ட இன்னொரு பொண்ணு நம்பர் கேட்டா டென்ஷனாகுற...
குண்டு குரு : ஆமா... நீ அவள பத்தி கேட்காமா இன்னொருத்திய பத்தி கேட்டா அவளுக்கு கோபம் வரதா...!

மண்டு மதன் : ச்சே..! இந்த பொண்ணுங்களே இப்படி தான்...
குண்டு குரு : ரொம்ப பீல் பண்ணாத வேலைய பாரு...!

அப்போது ஒருவர் கடைக்கு வந்து புது படத்தை பற்றி கேட்கிறான்.

குண்டு குரு : என்ன புது படம் வேண்டும் ஸார் !
வந்தவன் : புதுசா என்ன என்ன படம் வந்திருக்கோ எல்லாம் படமும் எடு...!

குண்டு குரு மதனிடம் சொல்லி எல்லா படத்தின் டி.வி.டிகளை எடுத்துக் காட்டுகிறான்.

வந்தவன் : ஏம்பா ! கவர்மெண்ட் திருட்டு வி.சி.டி ஓழிச்சாச்சு சொல்லியிட்டு இருக்காங்க... நீ இப்படி பப்ளிக்கா புது படம் வீக்குற...
குண்டு குரு : ஸார் ! டி.வி.டி வந்தது அப்புறம் யாருமே வி.சி.டி வாங்குறது இல்ல. வி.சி.டி அதுவா ஒழிஞ்சு போச்சு. உடனே கவர்மெண்ட் நாங்க தான் ஓழிச்சோம் சொல்லுறாங்க....

வந்தவன் : அப்போ திருட்டு டி.வி.டி ஒழிக்கனும்னா புதுசா ஒண்ணு வந்தான் ஒழியும்னு சொல்லு...
குண்டு குரு : எங்கள பொழப்ப பார்க்கவுக்க விடுங்க ஸார்...! எதோ ஒரு நாளைக்கு நூறு, இரு நூறு பார்க்குறோம்...

" சரி பொழைச்சு போங்க...." என்று வந்தவன் வந்த வழியாக சென்றான்.

இவர்களை பேசுவதை காதில் வாங்காமல் மண்டு மதன் டி.வி.டி போட்டு படம் பார்த்துக் கொண்டு இருந்தான்.

மண்டு மதன் : குரு ! நாலைஞ்சு படம் பார்த்திட்டேன். எல்லா படம் கதையும் ஒரே மாதிரி இருக்கு...
குண்டு குரு : டேய்... நீ பாக்குறது ப்ளூ ப்லிம்

மண்டு மதன் : ஓ.... அப்படியா...
குண்டு குரு : அப்படியாவா... முதல்ல ஆப் பண்ணு. கடைக்கு கஸ்டமர் வர நேரம்.

"சரி ! இங்க்லீஷ் படம் வேண்டாம். தமிழ் படம் பார்ப்போம் " என்று ஒரு டி.வி.டி யை மதன் எடுத்தான்.

மண்டு மதன் : என்ன இந்த டி.வி.டிய பார்த்தா என்ன படம் தெரியலையே !
குண்டு குரு : டி.வி.டி ய பார்த்தா படம் தெரியாது. டி.வி.டி ப்ளெயர்ல போட்ட தான் படம் தெரியும்....

மண்டு மதன் : வர வர நீ ரொம்ப மொக்கை போடுற குரு !
குண்டு குரு : வர வர உன் இம்சை பெரும் இம்சையா இருக்கே... அதுல இருந்து என்ன காப்பாத்திக்க தான்..!

மதன் அந்த டி.வி.டியை ப்ளேயரில் போட்டு பார்த்து பார்த்தான்.

மண்டு மதன் : குரு..! இதுல படம் ஒண்ணு தெரியமாட்டீதிங்குது ?
குண்டு குரு : டேய் வெண்ணே ! அது ப்ளெயர் கிளினரு டா....

மண்டு மதன் : எனக்கு நேரமே சரியில்ல... நான் எதுவும் பண்ணாம இருக்கேன்.
குண்டு குரு : அத தாண்ட உன்கிட்ட ஆரம்பத்தில்ல இருந்து சொல்லுறேன்.

அப்போது கடைக்கு ஒரு பட்டிகாட்டான் வந்து புது சி.டி ஒன்று கேட்கிறான்.

பட்டிகாட்டான் : ஏன்பா...! ஒரு புது சி.டி. ஒண்ணு கொடு...

குண்டு குரு புது சி.டியை கொடுத்து பத்து ரூபாய் கேட்கிறான். பட்டிகாட்டான் டி.வி.டியை பார்த்து அதன் விலையை கேட்க, குரு "இருபது ரூபாய்" என்றான்.

பட்டிகாட்டான் : இரண்டும் ஒரே மாதிரி தான் இருக்கு. வேற வேற விலை சொல்லுற...
குண்டு குரு : சி.டியில 700 MB வரைக்கும் இருக்கும். டி.வி.டியில 4 GB வரைக்கும் இடமிருக்கு.

பட்டிகாட்டான் : யோவ் ! என்னையா விலைய பத்தி கேட்டா MB,GB சொல்லுற. நல்ல புரியுற மாதிரி சொல்லு...
குண்டு குரு : உங்களுக்கு எப்படி புரியுற மாதிரி சொல்லுறது...?

பட்டிகாட்டான் : சொல்ல தெரியல்லைனா... உன் சி.டியே என்னக்கு வேண்டாம் போ...

அந்த பட்டிகாட்டான் செல்வதை பார்த்த மதன் அவனை தடுத்து நிருத்துகிறான்.

மண்டு மதன் : இருங்க அண்ணே ! அவசரப்படதாங்க.... இப்ப என்ன பிரச்சன உங்களுக்கு...?

பட்டிகாட்டான் : சி.டிக்கு டி.வி.டிக்கும் என்ன வித்தியாசம் சொல்லனும்...
குண்டு குரு : உனக்கு புரியுற மாதிரி சொல்ல முடியாது. நீ எதுமே எங்க கிட்ட வாங்க தேவையில்ல...

மண்டு மதன் : இரு குரு ! நா இவருக்கு புரிய வைக்கிறேன். சி.டியில பாதி தமிழ் படம் வைக்கலாம். டி.வி.டியில நாலு தமிழ் வைக்கலாம். அதுனால தான் சி.டிய விட டி.வி.டி விலை ஜாஸ்தி.....
பட்டிகாட்டான் : எவ்வளவு சுலபமா புரிய வச்சிட்ட... இவனும் இருக்கானே ( குருவை காட்டி...)

குருவுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. எப்படியோ அந்த பட்டிக்காட்டான் டி.வி.டி அவர்களிடம் இருந்து வாங்கினான்.

பட்டிகாட்டான் : தம்பி ! அப்போ சின்ன உதவி பண்ணு... ! நாலு தமிழ் படம் புதுசு கொடு... அப்படியே அந்த காலி டி.வி.டியில ஒரு காப்பி எடுத்துக் கொடுத்தா என் தங்கச்சி வீட்டுக்கும் கொடுப்பேன்.
மண்டு மதன் : சரி அண்ணே...!

மதன் குருவை பெருமையுடன் பார்த்தான். ஒரு சி.டி வாங்க வந்தவனிடம் டி.வி.டி, நான்கு தமிழ் படம் விற்று குரு முன் தன் திறமையை காண்ப்பித்து விட்ட பெருமிதம்.

பட்டிகாட்டான் சொன்ன தமிழ் படங்களை புது டி.வி.டியில் குரு காப்பி செய்துக் கொண்டு இருந்தான். அந்த டி.வி.டியில் குருவால் இரண்டு தமிழ் தமிழ் படங்கள் மட்டும் தான் காப்பி செய்ய முடிந்தது.

குண்டு குரு : மதன் ! ஒவ்வொரு படமும் 2 GB இருக்கு. ஒரு டி.வி.டியில இரண்டு தமிழ் படம் தான் காப்பி பண்ண முடியும். அந்த பட்டிக்காட்டான் கிட்ட நீயே சொல்லு.

மண்டு மதன் : விடு குரு..! நான் பார்த்துக்கிறேன். நம்ப அண்ணே அவரு... கேட்டுப்பாரு..

மண்டு மதன் பட்டிக்காட்டானிடம்
மண்டு மதன் : அண்ணே ! அந்த டி.வி.டியில இரண்டு தமிழ் படம் காப்பி பண்ண முடிஞ்சது... வேணும் நா இன்னொரு புது டி.வி.டியில மீதி இரண்டு படம் காப்பி பண்ணி தரட்டா...

பட்டிகாட்டான் : யோவ் ! பாக்குறது பட்டிகாட்டான் மாதிரி தெரியுறதால என்ன ஏமாத்த பாக்குறியா.... ஒரு டி.வி.டியில நாலு படம் வைக்காலம் சொன்னயில்ல... இப்போ மாத்தி சொல்லுற...

மண்டு மதன் : நீங்க எடுத்த தமிழ் படம் டி.வி.டி எல்லாமே இரண்டு ஜி.பி சைஸ்...

பட்டிகாட்டான் : மறுபடியும் ஜி.பி, கி.பி சொல்லிட்டு... என்ன ஏமாத்துர..... இரு..இரு.. உன் மேல கன்ஸ்யூமர் கோர்ட்டு கேஸ் பொடுவேன் ஜாக்கிரதை.

மண்டு மதன் : டேய் ! கன்ஸ்யூமர் கோர்ட் எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்க..... கம்ப்யூட்டர் சைஸ் ஜி.பி மட்டும் ஏன்டா தெரிய மாட்டீங்குது....
பட்டிகாட்டான் : எனக்கு ஒரே டி.வி.டியில நாலு படம் வேணும்..

இதை பார்த்து கடுப்பாகி போன குரு அந்த பட்டிக்காட்டனை அடித்து விரட்டுகிறான். அவர்கள் கேட்ட நேரம், அந்த பட்டிகாட்டான் போலீஸ்யை அழைத்து வருகிறான்.

திருட்டு டி.வி.டி. வித்ததிற்காக கைது செய்ய படுகிறார்கள்.

Wednesday, May 6, 2009

1857 - சிப்பாய் புரட்சி

1857 ஆம் ஆண்டு இந்திய விடுதலை போராட்டங்களுக்கு விதை போட்ட ஆண்டு. பல லட்ச உயிர்களை குடித்த வெள்ளையர்கள், அஞ்சி நடுங்கிய ஆண்டு. பல வெள்ளையர்களின் குடும்பம் பயந்து மீண்டும் இங்கிலாந்து செல்ல வைத்த ஆண்டு. வெள்ளையரை ஹிந்துஸ்தானை விட்டு விரட்ட வேண்டும் என்ற சூடு, சோரணை வந்த ஆண்டும் இதுவே !

கண் மூடித்தனமான விசுவாசத்தை மட்டுமே வெளிகாட்டிக் கொண்டு இருந்த சுதேசி சிப்பாய்கள், மங்கள் பாண்டே எனும் சிப்பாய் மரணம் வட இந்தியர்களை விழிக்க வைத்தது. ஒரு வருடம் மேல் வெள்ளையர்கள் வயிற்றில் நெருப்பு ஏறிய தொடங்கியது. எங்கு ? எந்த இடத்தில் ? யார் தலைமையில் ? புரட்சி வெடிக்குமோ என்று வெள்ளையர்கள் அஞ்சி நடுங்கினர். இவர்களை மேலும் பயம் காட்டியது இந்து, முஸ்லீம் ஒற்றுமை தான்.பன்றி இறைச்சியும், பசு இறைச்சியும் சேர்த்து தயாரித்த கொழுப்பு தடவப்பட்ட பொருள் பயன்படுத்தப்படுவதாக அறிந்த சுதேசி சிப்பாய்கள் அதை தொட மறுத்தனர். ஒழுங்கு மீறல் காரணமாக அந்த படை பிரிவு கலைக்கப்படுகிறது. எதிர்த்து புரட்சி செய்த மங்கள் பாண்டேவும் தூக்கிலிடப்படுகிறான். இதை தொடர்ந்து டெல்லி, மீரட், பெரேல்லி, ஜான்ஸி, கான்பூர், லக்னோ, குவாலியர் என்று ஒவ்வொரு இடத்திலும் புரட்சி சிப்பாய் புரட்சி வெடிகிறது.

பகதூர் ஷா, ஜான்சி ராணி லட்சுமி பாய், நானா சாகிப், குனவர் சிங், அமர் சிங், பகத்கான், தாத்தியா தோபே என்று பலர் தலைமையில் நடந்த சிப்பாய் புரட்சி, சரியான ஒருங்கிணைப்பு, ஒற்றுமையில்லாமல் படு தோல்வி அடைந்தது.

சிப்பாய் புரட்சியில் ஆங்கிலேயர்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் இந்தியர்கள் தான். இந்தியர்களிகளை விரோதிகளாக நினைத்த இந்தியர்கள், முகலாயர்களை எதிரியாக நினைத்த சீக்கியர்கள், புரட்சி முன்வராத மன்னர்கள் என்று பல காரணங்கள் சொல்லலாம். கிழக்கிந்திய கம்பேனியிடம் இருந்த ஹிந்துஸ்தான் இங்கிலாந்து காலனி நாடாக மாறியது வரை எழுத்தாளர் உமா சம்பத் அழகாக விளக்கியுள்ளார்.

ஒரு வேலை சிப்பாய் புரட்சி வெற்றி பெற்றுயிருந்தால், காங்கிரஸ் , காந்தி நமக்கு தேவைப்பட்டுயிருக்க மாட்டார். இந்தியாவும் விடுதலைக்காக 90 வருடங்கள் காத்திருக்க வேண்டியதில்லாமல் இருந்திருக்கும்.

நூலை வாங்க....

உமா சம்பத்.
பக்கங்கள் : 240 , விலை. 100
கிழக்கு பதிப்பகம்

Monday, May 4, 2009

மன்னிச்சிடுங்கோ அண்ணா....

நாளைக்கு தேர்வு. இன்னும் நுழைவு சீட்டு வந்து அடையவில்லை. எப்படி தேர்வு எழுதுவேன் என்று புரியாமல் குழப்பத்தில் இருந்தேன். தேர்வுக்கு படிப்பதற்காக அலுவலக விடுமுறை போட்டு படித்து விட்டேன். இந்த சமயத்தில் இப்படி ஒரு பிரச்சனை வரும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.

தேர்வுக்கு பணம் கட்ட கடைசி நாளுக்கு முந்தின நாள் ஒரு லேட்டர் வந்தது. 500 ரூபாய்க்கு டி.டி. எடுக்க வேண்டும் என்று இருந்தது. எப்படியோ அடித்து பிடித்து பணம் கட்டிவிட்டேன்.

அங்கு வேலை செய்யும் ராகவன் என்பவர் 350 ரூபாய்க்கு டி.டி எடுத்தால் போதும் என்றார். 'மார்க் ஷீட்' கடைசி ஆண்டு தான் கொடுப்பார்கள். அதனால் பணம் கட்ட வேண்டாம் என்றான். அவர் சொல்லுவதை நம்பி நானும் 350 ரூபாய்க்கு டி.டி., பார்ம் அனைத்தும் அங்கு இருக்கும் ஒரு பெட்டியில் போட்டேன்.

இன்னும் தேர்வுக்கு நுழைவு சீட்டு வராததால் நானும், என் நண்பன் பரத்தை அழைத்துக் கொண்டு நான் படிக்கும் திறந்த பல்கலைக்கழகத்திற்கு சென்றேன். சென்ற முறை டி.டி. எடுக்க சொன்ன ராகவன் ரொம்ப தீவிரமாக வேலை செய்துக் கொண்டு இருந்தார்.

"ஸார் ! என் பேரு தியாகு. இங்க 'M.B.A' எக்ஸாமுக்கு அப்ளை பண்ணேன். இன்னும் ஹால் டிக்கேட் வரல...." என்றேன்.

" உன் நம்பர் சொல்லு..." என்று உதாசினம் படுத்துவது போல் கேட்டான்.

" 583480...." என்ற என் என்னை சொன்னேன்.

" இரு வரேன் " என்று கூறி உள்ளே சென்றார் ராகவன்.

பதினைந்து நிமிடங்களாக ராகவன் எதோ தேடிக்க் கொண்டு இருந்தார்.

" என்ன தியாகு ? சீக்கிரம் வேல முடிஞ்சதும் வெளியே போலாம் சொல்லிதானே கூப்பிட்ட. வேலை முடியுற மாதிரி தெரியல...." என்று கேலியாக பரத் கேட்டான்.

" கொஞ்சம் வெயிட் பண்ணுடா..." என்றேன். இவனிடம் வண்டி இருப்பதால் போன் போட்டு வர வைத்தேன். வந்த வேலை முடியுற வரை எத்தன தடவை இப்படி கேட்க போறானோ என்று தோன்றியது. உள்ளே சென்ற ராகவன் தன் கையில் சில காகிதங்களோடு வந்தார். அதை பார்த்ததும் சற்று அதிர்ந்து விட்டேன்.

என் தேர்வுக்காக எடுத்த டி.டி., பார்ம் எல்லாம் இங்கேயே இருந்திருக்கிறது. தலைமை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பாமால் வைத்திருந்தனர்.

" என்ன ஸார்.... நான் கொடுத்த பார்மை அப்படியே கொடுக்குறீங்க...." என்று வியப்புடன் கேட்டேன்.

" பணம் கம்மியா கட்டியிருக்க... போய்ட்டு அடுத்த வாட்டி பணம் கட்டி எழுது...." என்று அலட்சியமாக சொன்னான்.

" நீங்க சொன்ன பணம் தான் டி.டி எடுத்து கொடுத்தேன். இப்போ நீங்களே இப்படி சொன்னா எப்படி....??" என்றேன்.

"நா சொன்னா உனக்கு அறிவு எங்க போச்சு. போ... போ. அடுத்த வருஷம் வந்து எழுது...." என்று பிச்சைக்காரனை விரட்டுவது போல் விரட்டினான்.

"யோவ்... கொஞ்சமாவது மரியாதையா பேசு. நான் நாளைக்கு எக்ஸாம் எழுதனும். இன்னும் என் பார்ம் இங்கையே வச்சிருக்க. அதுக்கு பதில் சொல்லு...." என்று கோபமாக பேசினேன்.

" அதான் சொல்லிட்டேன்ல. போடா...." என்றான்.

" டி.டி பின்னாடி என் போன் நம்பர் இருக்குல. பணம் கம்மியா இருந்தா போன் போட்டு சொல்ல வேண்டியது தானே..." என்றேன்.

" எனக்கு வேற வேலையில்ல... முதல்ல இடத்த காலிப்பண்ணு." என்று என்னை துரத்துவதிலே குறியாக இருந்தான்.

எனக்கு கோபம் தலைக்கேறியது. அவன் பார்ம் அனுப்பாமல் இருந்ததால் இனிமேல் இந்த வருடம் தேர்வு எழுத முடியாது என்பது உறுதியாகி விட்டது. ஆனால், அவன் மரியாதை இல்லாமல் பேசியது என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. என் ஆதங்கத்தை கொட்டாமல் இருக்க முடியவில்லை.

" உன்னால ஒரு வருஷம் படிப்பு போச்சு. கேட்டா பொருப்பிலாம்ம பதில் சொல்லுற..." என்று நானும் அவனை மரியாதையில்லாமல் ஒருமையில் பேசினேன். என்னுடன் வந்த பரத் என்னை பேசாமல் தடுத்தான். பெரிய பிரச்சனை ஆனாலும் பரவாயில்லை என்று ஒரு முடிவோடு நான் இருந்தேன்.

" படிச்சவனா நீ. உன்னால முடிஞ்சது பண்ணிக்கோ...." என்று அலட்சியமாக பேசினான்.

அவன் மரியாதையில்லாமல் என்னை பேசியது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவனை பற்றி புகார் கொடுக்க துணை மேலாளரிடம் சென்றேன்.

அலுவலக அறை பலகையில் 'ரங்காச்சாரி' என்று பெயர் இருந்தது.

உள்ளே சென்றவுடன் எனக்கு முன் ராகவன் அறையில் இருப்பதை பார்த்தேன். அவன் கண்டிப்பாக நடந்ததை கூறியிருப்பான்.

" வணக்கம் ஸார். நான் நாளைக்கு எக்ஸாம் எழுதனும். இன்னும் ஹால் டிக்கெட் வரல... " என்று என் பிரச்சனை சொல்ல தொடங்கினேன்.

" இனிமே ஒண்ணும் பண்ண முடியாது தம்பி. அடுத்த வருஷம் வந்து எழுதுங்க...." என்று அதே பதிலை கூறினார்.

" அது கூட பரவாயில்ல... உங்க ஸ்டாஃப் என்ன மரியாதையில்லாம பேசிட்டாரு. நான் யார் கிட்ட கம்ளேன்ட் பண்ணனும்..." என்றேன்.

" நான் தான் இவருக்கு சீனியர். என் கிட்ட சொல்லிடிங்கல கலம்புங்க...." என்று மீண்டும் அலட்சியமாக பதில் வந்தது.

எனக்கு வந்த கோபத்தில் அவனை அடித்து விடலாம் என்று இருந்தேன். அதற்குள், என் நண்பன் பரத் அறைக்குள் நுழைந்தான். அவன் முகத்தில் எதோ மாற்றம் தெரிந்தது.

"வணக்கம் அண்ணா ! இவர் என் ஸ்நேகிதர். எனக்காக தான் பேசிக்கிட்டு இருக்கார். எங்கள பார்த்து உங்க மனுஷ படிச்சவளா கேட்டா கோபம் வராம... என்ன அண்ணா பண்ண முடியும்." என்று அக்கிரகார பாஷை பின்னி எடுத்தான் பரத்.

" யோவ்... உனக்கு கொஞ்சமாவது அறிவுயிருக்கா... நம்ப மனுஷால்னு தெரிஞ்சும் இப்படியா பேசுறது. " என்று ராகவனை கடித்துக் கொட்டினார் ரஙச்சாரி.

" ஸாரிடா அம்பி... என்ன படிக்கிறே....." என்று மிக அக்கரையா கேட்டார்.

" MBA படிக்கிறேண்ணா...."

" இந்த வருஷம் எக்ஸாம் எழுத முடியாது. அடுத்த வருஷம் பேஷா படிச்சு எழுது... இனி நோக்கு இப்படி நடக்காம பார்த்திக்கிறேன்.

" சரிண்ணா... கொஞ்ச மரியாதையா பேச சொல்லுங்கோ.... அது போதும்" என்று கூறி என்னை அந்த அறையையில் இருந்து அளைத்து சென்றான்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் சொன்னதை தான் என் நண்பன் பரத்தும் சொன்னான். எனக்கு கொடுக்காத மரியாதையை அவனுக்கு மட்டும் எப்படி கிடைத்தது என்று வியப்பாக இருந்தது.

வெளியே வந்தவுடன் பரத் தன் நெற்றியில் இருந்த நாமத்தை அழித்தான். இப்போது, " நேக்கு விஷயம் புரிந்திடுத்து....." என்று அவனிடம் சிரித்துக் கொண்டே சொன்னேன்.

------

யார் மனதை நோகும்படியான கதையில்லை. தொலைத்தூர கல்வி மூலம் MBA படிக்கும் என் நண்பருக்கு நடந்த சம்பவத்தை கற்பனை கலந்து எழுதியிருக்கிறேன்.

Saturday, May 2, 2009

வயிறு குலுங்க சிரிக்க வைத்த 'பசங்க' படம்

'அஞ்சலி' படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக தமிழ் படம்.

இங்கிலீஷ் மிடியத்தில் படிக்கும் அன்பு பீச் கட்ட முடியாமல் அவன் அப்பா தமிழ் மிடியத்தில் சேர்க்கிறார்.எதிர் வீட்டில் வாத்தியார் மகனான ஜீவாவும் அன்பு படிக்கும் அதே வகுப்பில் படிக்கிறான். பள்ளி முதல் நாள் அன்றே அன்புவும், ஜீவாவும் சண்டை போடுகிறார்கள். படிப்பு, போட்டி, பாராட்டு என்ற எல்லா விஷய்ங்களிலும் அன்பு ஜீவாவை விட மிஞ்சி இருக்கிறான். அன்பு சண்ட மறந்து ஜீவாவிடம் நட்பு கரம் நீட்டியும் ஜீவா ஏற்ற்க மறுக்கிறான். இதற்கிடையில் ஜீவாவின் அக்கா கோபிகுட்டிக்கும், அன்புவின் சித்தப்பா மீனாட்சி சுந்தரத்திற்கும் மெல்லிய காதல். அன்பு, ஜீவா சண்டை பெரியவர்கள் சண்டையாக மாறுகிறது. அன்பு ஜீவா இணந்தார்களா ? சோபிகுட்டி, மீனாட்சி சுந்தரம் காதல் கைகுடியதா ? இரண்டு குடும்பம் சேர்ததா ? என்பது மீது கதை.அன்பு, ஜீவா வரும் இரண்டு சிறுவர்கள் கதாநாயகர்கள். இரண்டு பேருமே நடிப்பில் பிண்ணி பேடல் எடுத்திருக்கிறார்கள். முதல் நாள் பள்ளியில் 'என் பேரு அன்பரசன் I.A.S' என்று சொல்லுவதும், அவனை பார்த்து மற்ற மாணவர்களும் தங்கள் புத்தகத்தில் B.E,MBBS,IPS போட்டுக் கொள்வதும் நல்ல சிந்தனை. கை தட்டல் குழந்தைகளை எந்த அளவிற்கு ஊக்கவிக்கும் என்பதை அன்புவாக வரும் சிறுவன் வாழ்ந்து காட்டியிருக்கிறான்.

படம் முழுக்க வில்லத்தனத்தை செய்யும் சிறுவனாக ஜீவா. வாத்தியாரான அப்பா அன்புவை பாராட்டும் போது பொறாமையில் காலை எழுந்து சத்தமாக படிப்பதும், அக்காவின் காதலை வீட்டில் உடைப்பதும், அப்பாவிடம் சிகரெட் பிடிக்க வேண்டாம் என்று சொல்வதும் உணர்ந்து நடித்திருக்கிறான் அந்த சிறுவன். ஜீவாவை ஏத்தி விடும் இரண்டும் சிறுவர்களாக பகோடா, மணி. ஒவ்வொரு முறையும் பகோடா ஏத்திவிடும் போது ஜீவா 'விஜய்' மாதிரி மெனலீசம் செய்வது நல்ல நகைச்சுவை.மீனாட்சி சுந்தரத்தின் செல்போன் ரீங் டோனே அவன் வரும் காட்சியில் சிரிப்பு வரவழைக்கிறது. 'நண்பர்கள் வைத்து சோபிகுட்டியை பாராட்டியே கரேட்' செய்கிறார். பெண்ணை காதலிக்க வைக்கும் புது யுக்தி. பெற்றோர்கள் கற்று கொள்ள வேண்டிய காட்சிகளும் இந்த படத்தில் உள்ளது.

ஜெம்ஸ் வசந்த் இசை சுமார் தான். ஆனால், அன்பு, ஜீவா மோதும் காட்சியில் பின்னனி இசை நன்றாக அமைத்திருக்கிறார். படத்துக்கு பாடலே தேவையில்லை என்று தோன்றுகிறது.

முதல் படத்தில் குழந்தைகளுக்காக படம் கொடுத்து பெரியவர்களை கட்டி போட்டு உட்கார வைத்திருக்கார் இயக்குனர் பாண்டியராஜ்.ஒவ்வொரு சீனும் சிரிக்கவும், ரசிக்கவும் வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இவருக்கு நல்ல எதிர்காலமுண்டு.

இயக்குனராக வெற்றி பெற்ற சசிகுமார் இந்தம் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்று இருக்கிறார்.

பசங்க - பசங்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களும் தான்.

LinkWithin

Related Posts with Thumbnails