அதிகமான ஆங்கில வார்த்தைகளில் எழுதப்பட்ட தமிழ் நாவல். ஆங்கில அகராதி பக்கத்தில் வைத்துக் கொண்டு தான் இந்த தமிழ் நாவலை படிக்க வேண்டும். காரணம், கதை மேல்தட்டு மனிதர்கள் சுற்றி நகர்வதால் வாக்கியத்திற்கு 'நான்கு வார்த்தை ' ஆங்கிலம் பேசுவது போல் எழுதியிருக்கிறார் ஆதவன்.
1980ஆம் ஆண்டு முதல் பதிப்பாக வந்த 'என் பெயர் ராமசேஷன்' நாவல், உயிர்மை பதிப்பகத்தின் மூலம் இரண்டாம் பதிப்பு வெளிவந்திருக்கிறது. 30 வருடங்கள் முன்பு வந்திருந்தாலும், இந்த காலக்கட்டத்தின் இளைஞனின் மனநிலையை பிரதிபலிக்கும் அளவிற்கு 'ஆதவன்' அவர்கள் எழுத்துக்கள் இருக்கின்றன. இதை படிப்பவர்கள் யாரும் முப்பது வருடம் முன்பு எழுதிய நாவல் என்று சொன்னால் நிச்சயமாக நம்ப மாட்டார்கள். நாவலில் வரும் கதாபாத்திரமும், சம்பவமும் இந்த காலத்திற்கும் பொருந்துகின்றன.
சா.கந்தசாமியின் 'விசாரணை கம்மிஷன்', வண்ணநிலவனின் 'கடல்புறத்தில்', வைரமுத்துவின் 'கள்ளிகாட்டு இதிகாசம்' போன்ற நாவலில் வரும் வலிகளையும், மரணங்களையும் படித்து பழக்கப்பட்டவர்களுக்கு குளிர்ச்சியான நாவல் இது. முழுக்க முழுக்க மத்தியத்தர இளைஞனான ராமசேஷனை சுற்றி நடக்கும் சம்பவங்கள் தான் கதை.
ராமசேஷன் கதாபாத்திரத்தின் காதல், காமம், நட்பு என்று உணர்வுகளை வெளிப்படுத்தும் இளமை மிக்க நாவல் என்று சொல்லலாம். நாவல் படிக்க தொடங்கும் போது எனக்கு Chetan Bhagat எழுதிய ‘Five Point Someone’ நாவல் நினைவுக்கு வந்தது. ( அந்த நாவலில் IITயில் மூன்று இளைஞர்கள் அறிமுகமாவது போல், இந்த நாவலிலும் மூன்று இளைஞர்கள் பொறியியல் கல்லூரியில் அறிமுகமாகுகிறார்கள்.) ஆனால், கதை செல்ல செல்ல ராமசேஷனின் ஆழ் மனதில் இருக்கும் வன்ம சிந்தனைகளையும், மன தடுமாற்றத்தையும் படம் பிடித்து காட்டுகிறார். குறிப்பாக, ராமசேஷன் தன் மனதில் " உலகமே 'ப்ராஸ்'களும், 'பிச்'களும் நிரம்பியதாகத்தான் தோன்றியது" என்று மாலாவை பார்க்கும் போது அவன் நினைத்துக் கொள்வதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
நண்பன் ராவின் தங்கயான மாலாவை அனுபவித்த ராமசேஷன், ராவ் காதலுக்கு அறிவுரை கூறு அளவிற்கு இறுதி ஆண்டில் காதல் மன்னனாக இருக்கிறான்.
"ஒரு பெண்ணை நேசிக்க வேண்டுமென்றால் நமக்கு எஸ்கிமோக்கள் பற்றியும், சூரியப் பொருட்டுகள் பற்றியும் தெரிய வேண்டுமென்று அவளிடம் நிரூபிக்க முயல்வதால் எந்த பிரயோஜனமுமில்லை. பேசாமல் ஒரு தனியிடத்துக்கு அவளை எப்படியோ அழைத்து சென்று எனக்கு உன்னை ரொம்பப் படித்திருக்கிறது என்று சொன்னால் போதும்" என்று அறிவுரை சொல்லுவது 'நச்' என்று உள்ளது.
நண்பனின் தங்கை மாலா தன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் போன் போட்டு ராமசேஷனை அழைப்பதும், நண்பன் காதலித்த பெண் ராமசேஷனிடம் ஹோட்டலில் ரூம் போட சொல்வதும், திருமண வயதில் பெண்ணுக்கு தாயானா மாமியை திருமணம் செய்து கொள்ள நினைப்பதும் என்று ஒரு இளைஞனின் ஆழ் மனதின் ஒலிந்து இருக்கும் வன்மமான சிந்தனைகள் எல்லாம், கல்லூரி முடிந்து தன் தங்கை வேறு ஒருவனுடன் பார்க்கும் போது ‘காதல் மன்னன்’ என்ற வட்டத்தில் இருந்து குடும்பஸ்தனுக்குரிய கோபம் அவனுக்கு வருகிறது.
தற்கால வாழ்ந்துக் கொண்டு இருக்கும் எழுத்தாளர்களின் நூல்களை படித்தே பழக்கப்பட்ட எனக்கு மறைந்த எழுத்தாளர் நூல்களை படிக்க தொடங்கி இருக்கிறேன். சாண்டில்யன், ஆதவன்..... தொடர்ந்து.... அடுத்து நான் படிக்க போகும் எழுத்தாளர் 'தேவன்'.
உயிர்மை பதிப்பகம்,
விலை.100
பக்கங்கள் : 198.
No comments:
Post a Comment