வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, May 27, 2009

தெரு கூத்து …

முகத்தில் காலை சூரியன் வெளிச்சம் பலிர் என்று அடித்தது. இரவு நேரம் காற்றோட்டமாக இருக்கும் என்று ஜன்னலோர சீட்டு பார்த்து பஸ்ஸில் அமர்ந்தேன். அதுவே என் தூக்கத்திற்கு எதிரியாக இருக்கும் என்று காலையில் தான் தெரிந்து கொண்டேன். ஐந்து நாட்கள் பெட்ரோல், டீசல் புகையில் இருந்து விடுதலை பெற்று என் பூஞ்சோலை கிராமத்துக்கு வந்தேன்.

என்னை அழைத்து செல்வதற்காக மாடசாமி மாட்டு வண்டியுடன் தயாராக இருந்தார். எனக்கும், மாடசாமிக்கும் பத்து வயது வித்தியாசம் இருக்கும். சிறு வயதில் இருந்து என் வீட்டில் இருக்கிறார். எங்கள் வீட்டில் யாரும் அவரை வேலைக்காரராக நடத்தியதில்லை. அவர் என் குடும்பத்தில் ஒருவர். என்னை சின்ன வயதில் இருந்து வளர்த்தவர் அவர் தான்.

" வாங்க ராமு தம்பி. பிராயாணம் எப்படி இருந்தது ?"

" நல்லா இருந்தது. நீங்க எப்படி இருக்கீங்க...? வீட்டுல அண்ணி, பையன் எப்படி இருக்காங்க ?"

" எல்லோரும் நல்லா இருக்கோம். பைய கொடுங்க..."

" நானே எடுத்திட்டு வரேன்" என்று கூறி என் பையை மாட்டு வண்டியில் போட்டேன்.

என் கிராமத்தில் பெட்ரோல் வண்டிகள் அதிகம் இல்லை. பெட்ரோல் பங்க் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதால், பலர் சைக்கிளும், மாட்டு வண்டியும் தான் வைத்திருக்கிறார்கள். பலருக்கு ப்ளாஸ்டிக் என்றால் என்ன என்பது கூட தெரியாமல் இருக்கிறார்கள். அதனால், எங்கள் கிராமத்து இயற்கை இயற்கையாகவே இருந்தது.

மரம், சேடி, கொடி அழகை ரசித்ததில் என் வீடு வந்ததை கவனிக்கவில்லை.

" தம்பி ! வீடு வந்திருச்சி இறங்குங்க..." - மலர்ந்த முகத்துடன் மாடசாமி கூறினான்.

ஒரு மாதத்திற்கு பிறகு என் கால்கள் வீட்டில் பதிந்தது. அப்பா என் வரவை எதிர்பார்த்து இருந்தார். எனக்காக அம்மா கோழி கறி சமைத்து வைத்திருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு அம்மா கையால் கோழி கறியை ஒரு பிடி பிடித்தேன். மாட்டை கட்டி விட்டு மாடசாமி விட்டுக்குள் வந்தார்.

" வா மாடசாமி! வந்து ஒரு வாய் சாப்பிடு" என்றாள் என் அம்மா.

" இல்லம்மா! வீட்டுக்கு போனும். என் பையனுக்கு காய்ச்சல். எத பார்த்து பயந்தான் தெரியல்ல. மந்திருச்சு விட்ட மாதிரி இருக்கான். நம்ப கூத்து நாடகம் ஆரம்பிச்சதுல்ல இருந்து காய்ச்சல் இருக்கு" என்று கவலையாக மாடசாமி கூறினார்.

" என்ன கூத்து...?" என்றேன்.

" நம்ம ஊர் திருவிழாவுல.... சஷ்டிக்கு முருகன் அசுரர்கள வதம் பண்ணுற கூத்து. அதுல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அசுரன நான் நடிக்கிறேன். அத பாக்குறதுக்கு என் பொண்டாட்டியும், பிள்ளையும் வந்தாங்க. என்ன காத்து பட்டுச்சோ தெரியல்ல.“

" டாக்டர் கிட்ட காட்டுனீங்களா..?

" காட்டுனேன் தம்பி. பையன் எதோ பார்த்து பயந்திருக்கிறான் சொன்னாரு. மருந்து கொடுத்திருக்காரு. கொடுத்து பார்த்தேன். குணமாகல்ல. வேப்பிலை அடிச்சி பார்த்தாச்சி. என்னனு தெரிய மாட்டிங்குது.."

" நான் சாப்பிட்டு பையன பார்க்க வரேன்...".

" பரவாயில்ல. இப்போவே ரொம்ப மணி அயிடுச்சு. ஆறு மணிக்கு கூத்து ஆரம்பிச்சிடும். அங்க வந்திங்கனா என் பையனையும், பொண்ணாட்டியும் பார்க்கலாம்."

" சரி! நான் ஆறு மணிக்கு கூத்து பட்டறைக்கு வந்துடுறேன்"

மாடசாமி தன் வீட்டுக்கு சென்றார். பயண கலைப்பு வேறு. மதியம் சாப்பாடு அளவுக்கு மீறி சாப்பிட்டு விட்டேன். பஸ்ஸில் சரியாக தூக்கம் இல்லாததால் தூக்கம் என் கண்ணை சொக்கியது. நன்றாக படுத்து உறங்கினேன்.

அப்போது தான் தூங்கியது போல் இருந்தது. அதற்குள் மணி ஐந்திரை ஆகிவிட்டது. மாடசாமியின் கூத்து பார்க்க வேண்டும் என்ற ஆசை. அதே சமயம் அவர் பையனையும் பார்க்க வேண்டும். சீக்கிரமாக என் முகத்தை அலம்பி கொண்டு கூத்துக்கு சென்றேன்.

கூத்து பட்டறையில் ஒவ்வொருவரின் முகத்திலும் முக சாயம் புசிக் கொண்டு இருந்தார்கள். உடனே மாடசாமி குரல் கேட்டது.

"தம்பி! நான் இங்க இருக்கேன் "

திரும்பி பார்த்த போது பச்சை சாயமும், பய முறுத்தும் கருப்பு மை அப்பிய விழிகளுடன் இருந்தார்.

" அடையாளமே தெரியல்ல. நீங்க நடிக்கும் போது அண்ணியாள கூட கண்டு பிடிக்க முடியாதுனு நினைக்கிறேன்."

" அசுரனா நடிக்கிறது நான் தான்னு முன்னாடியே பொண்டாட்டி, பையன் கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன். அந்த சந்தேகம் வராதுல்ல.." சிரித்துக் கொண்டு கூறினார்.

அண்ணியும், அவர் பையனும் கூத்து பார்ப்பதற்காக முன் வரிசையில் அமர்ந்திருப்பதை பார்த்தேன். நான் என் அண்ணி அருகே சென்று அமர்ந்து கொண்டேன். அண்ணியிடம் இருந்து பையனை வாங்கி என் மடியில் வாங்கி கொண்டேன். அவனுக்கு ஆறு வயது இருக்கும். ரொம்ப சுட்டியாக திரிபவன் காய்ச்சல் வந்ததில் இருந்து துவண்டு போய் இருந்தான். அவன் உடல் அனலாய் கொதித்தது. எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

கூத்து தொடங்கியது. என்ன தான் ஏ.சி அறையில் அமர்ந்து படம் பார்த்தாலும், தெரு கூத்தை தரையில் அமர்ந்து பார்ப்பது போல் வரும் சுகம் கிடையாது. இந்த சுகம் கிராமத்தினருக்கு மட்டுமே தெரியும்.

" வந்தேன் வந்தேன்...மன்னன் வந்தேன்..." என்று மாடசாமி அரிதாரம் புசிய முகத்தோடு தோன்றினார். மாடசாமி வந்ததும் பலர் கைதட்டினார்கள். சிறு வயதில் இருந்தே அவருக்கு நடிப்பு ஆர்வம் அதிகம். தெருகூத்து நடிப்பில் அவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது என்று சொல்லலாம்.




கூத்தின் இறுதி கட்டம் நெருங்கியது. முருகர் கடவுள் அசுரனை கொள்ளும் கட்டம். முருகராக நடித்தவர் அசுரரை... மாடசாமியை வேலால் கொல்ல வேண்டும். மாடசாமி மீது வேல் படும் போது பார்க்க வந்த அனைவரும் 'அரோகரா... அரோகரா...' என்று கத்தினர். ஒருவன் மட்டும் பயத்தில் நடுங்கி கொண்டு இருந்தான். அதை என்னால் நன்றாக உணர முடிந்தது. பயந்து நடுங்கியது என் மடியில் அமர்ந்த மாடசாமியின் மகன். அவன் நடுங்கியது அண்ணி கவனிக்கவில்லை. நான் அவனை தனியாக அழைத்து சென்று பேசினேன்.

" என்னடா.... ஆச்சு. ஏன்டா பயப்படுற..." என்று கேட்டேன்.

" அப்பா.. அப்பாவ.. கொன்னுடாங்க...." பயத்தில் பிதறினான்.

" அப்படி எல்லாம் ஒன்னுமில்ல. பத்து நிமிஷத்துல வந்திருவாரு..."

"ஏன் தினமும் எங்கப்பாவ வேலால குத்துறாங்க ?" மழலை கலந்த மொழியுடன் கேட்டான்.

நமக்கு தான் மாடசாமி செய்தது நடிப்பென்று தெரியும். பாவம் சின்ன குழந்தையின் பிஞ்சு மனம். அது நிஜம் என்று நம்பி ஒவ்வொரு நாளும் மாடசாமி மீது வேல் பாய்யும் போது கதறி இருக்கிறான். அண்ணி 'அரோகரா' போடும் கோஷத்தில் தன் மகன் பயப்படுவதை கவனிக்காமல் இருந்திருப்பார். நான் என்ன சொல்லியும் அந்த பையன் பயம் தெளியவில்லை. கொஞ்ச நேரத்தில் மாடசாமி முக சாயத்தை கலைத்து வெளியே வந்ததை பார்த்த பிறகு, அந்த பையனுக்கு உயிரே வந்தது.

மாடசாமி வந்ததும் அவரை இருக்க கட்டி பிடித்துக் கொண்டான். ஒவ்வொரு நாளும் தன்னை பாசத்துடன் கட்டி பிடிக்கிறான் என்று மாடசாமி நினைத்துக் கொண்டு இருந்திருக்கிறார். அவன் பயத்தில் தான் கட்டி பிடித்தான் என்று என்னால் உணர முடிந்தது.

" பட்டனத்துல படம் பார்த்த நீங்க கூத்து பார்க்க வந்திருக்கீங்க. பிடிச்சிருந்ததா...?"

" என்ன இப்படி சொல்லுறீங்க...? கூத்துல இருந்து தான் சினிமாவே வந்தது.."

" ஆனா யார் அத ஞாபகம் வச்சிருக்காங்க...!"

" உங்க கிட்ட தனியா பேசனும்". கையில் இருந்த மகனை அண்ணியிடம் கொடுத்து விட்டு மாடசாமி என்னுடன் வந்தார்.

மாடசாமியிடம், " பையனுக்கு காய்ச்சல் வந்ததுக்கு காரணமே நீங்க தான்" என்றேன்.

அவர் என்னை உற்று பார்த்தார். "என்ன சொல்லுறீங்க?" மெல்லிய குரலில் கேட்டார்.

" கூத்துல உங்கள குத்துனத பார்த்து நிஜம்னு நம்பிட்டான். ஒவ்வொரு நாளும் உங்க மேல் வேல் குத்தும் போது பயந்து போய் இருக்கிறான். உங்க மேல இருக்குற பாசம் தான் அவன் காய்ச்சலுக்கு காரணம்."

நான் பேசுவதை கேட்டு தன்னால் மகன் பயப்படுவதை உணர்ந்தார். கூத்து முடியும் போது பலர் தன்னை பாராட்டியதில் மகனின் பாசம் மாடசாமி கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டது.

" இப்போ என்ன பண்ணுறது...?"

" உங்க பையன் பழையப்படி சந்தோஷமா இருக்கனும்னா ? அது உங்க கையில தான் இருக்கு "

" என்ன பண்ணனும் சொல்லுங்க..?"

" நாளைக்கு கூத்துல நடிக்காதீங்க. உங்க பையனோட உக்காந்து கூத்து பாருங்க. உங்களுக்கு பதிலா வேற யாராவது நடிக்க நான் ஏற்ப்பாடு பண்ணுறேன்."

சிறு வயதில் இருந்து மாடசாமிக்கு கூத்துக் கட்டி வேஷம் போடுவது ரொம்ப பிடிக்கும். ஆனால், தன் மகனின் பயத்தை பார்த்த பிறகு நடிப்பு அவருக்கு பெரிதாக தெரியவில்லை. என்னிடம் எந்த பதிலும் சொல்லாமல் கூத்து நடத்தும் தலைவரிடம் விஷயத்தை சொன்னார். தலைவரும் சற்று நேரம் யோசித்தார். அதன் பின் " பரவாயில்ல மாடசாமி ! நம்ப பையன் ஒருத்தன் ரொம்ப நாளா நடிக்குறதுக்கு வாய்ப்பு கேட்டுட்டு இருந்தான். அவன வச்சி சமாளிச்சுக்கிறேன். நீ பையன பார்த்துக் கோ."

அடுத்த நாள்.

நானும், மாடசாமி குடும்பத்துடன் கூத்து பார்க்க சென்றோம். அப்பா தன் அருகில் இருந்ததால் பையன் முகம் பிரகாசமாக இருந்தது. இந்த அசுரன் உடலில் வேல் படும் போது அந்த பையனும் மற்றவர்களோடு சேர்ந்து 'அரோகரா' என்று கத்தினான். அவனுடைய பழைய தெம்பு வந்தது. புது நடிகன் மாடசாமி அளவுக்கு நடிக்கவில்லை என்றாலும், சொதப்பாமல் நடித்தான். மாடசாமிக்கு கிடைத்த கைதட்டல் அவனுக்கு கிடைக்காத போது தெரிந்துக் கொண்டேன் 'மாடசாமி எங்களூர் சுப்பர் ஸ்டார்' என்று !

அன்று இரவே நான் ஊருக்கு செல்ல வேண்டியதாக இருந்தது. மாடசாமி வழக்கம் போல் என்னை பஸ் ஏற்றிவிட்டார். நான் செல்லும் போது என் கையை பிடித்து ‘நன்றி’ கூறினார். மன நல மருத்துவராய் என் கடமையை தான் செய்தேன் என்று கூறினேன். கலைஞர்கள் கூத்து கலையை விடுவதற்கு பாசமும் ஒரு காரணமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே சென்னைக்கு வந்தேன் . மீண்டும் பெட்ரோல், டீசல் காற்றை ஸ்வாசித்தேன்.

*****

சமூக கலை இலக்கிய அமைப்பு சார்பாக வலைப்பதிவர்களுக்கு நடத்தப்படும் சிறுகதைப் போட்டிக்கான ஆக்கம்!

9 comments:

Vidhoosh said...

அற்புதமான படைப்பு. வெற்றி பெற வாழ்த்துக்கள்

நிலாரசிகன் said...

நல்ல கதை. எழுத்துப்பிழைகளை களைந்துவிடுங்கள்.வாழ்த்துகள்.

கோபிநாத் said...

தலைப்பும் கதையும் அருமைங்க ;)

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;)

குகன் said...

// Vidhoosh said...
அற்புதமான படைப்பு. வெற்றி பெற வாழ்த்துக்கள்

கோபிநாத் said...
தலைப்பும் கதையும் அருமைங்க ;)

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;)

//

நன்றி கோபிநாத், Vidhoosh :)

குகன் said...

// நிலாரசிகன் said...

நல்ல கதை. எழுத்துப்பிழைகளை களைந்துவிடுங்கள்.வாழ்த்துகள்.
//

நன்றி நிலாரசிகன் :)

Proof reader வைத்து பதிவு போட்டாலும் எழுத்து பிழை வந்து விடுகிறது :(

சென்ஷி said...

நல்லா வந்திருக்குது குகன்...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

மேவி... said...

நன்றாக உள்ளது...
வாழ்த்துக்கள்

குகன் said...

// சென்ஷி said...
நல்லா வந்திருக்குது குகன்...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

MayVee said...

நன்றாக உள்ளது...
வாழ்த்துக்கள்
//

நன்றி சென்ஷி , MayVee:)

சரவணகுமரன் said...

இந்த கதையை போன்ற சம்பவத்தை ‘துணையெழுத்து’ இல் எஸ். ராமகிருஷ்ணன் எழுதியிருப்பதை இன்று படித்தேன்.

LinkWithin

Related Posts with Thumbnails