வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, September 29, 2010

ஹைக்கூ கவிதைகள் - 3

காடுகள் அழிந்து
வீடுகள் வந்தன
நடுவில் மயாணம் !

**

தூக்க முடியாத
செங்கற்களை சுமக்கிறது
விவசாயின் கரங்கள் !

**

மரங்கள் வெட்டப்பட்டது
மணல் குவிந்தது
பூமி பூஜைக்கு !

**

இறந்த பின்னும்
உயிர் உள்ளது
டிசம்பர் ஆறு !

Tuesday, September 28, 2010

ஓரின சேர்கையாளர்கள் மிருகங்களா ?

தன் மதர் சூப்பிரியர் ஓரின சேர்கையின் ஆசைக்கு இனங்காமல், மனநோயாளி என்று சொல்லி ஒரு கன்னியாஸ்திரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள். அவர் பெரிய பாதரியாரிடம் சொல்லியும் அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை. தன் சுயசரிதையில் தனக்கு ஏற்ப்பட்ட ஓரின கொடுமைகளை விளக்கிய பிறகு பலர் மனநோயாளி புத்தகம் என்றே விமர்சனம் செய்தனர். இந்த சம்பவம் கேரளாவில் நடந்தது.

*

சென்னை விடுதியின் மேனேஜர் ஒருவர், ஒரு இளைஞனை ஓரின உடல் உறவுக்காக தொல்லைக் கொடுத்தார். வற்புறுத்திய மேனேஜரின் தொல்லை தாங்காமல் இந்த இளைஞன் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டான்.

மேனேஜரின் ஓரின வேட்கை அந்த இளைஞனை மிருகமாக மாற்றிவிட்டது.

*ஜனவரி 24, 1994.

திருப்பதி.

ஐந்தாவது தேசிய அளவில் மகளிர் மாநாடு நடைப்பெறவிருந்தது. பெண் இயக்கங்கள், பெண் முன்னேற்ற அமைப்புகள், பெண்கள் மறுவாழ்வு என்று பல அமைப்புகளில் இருந்து பெண்கள் கலந்து கொண்டனர். வழக்கத்துக்கு மாறாக இந்த முறை சில புது அமைப்பினரும் வந்திருந்தனர்.

இதற்கு முன் நடந்த நான்கு மாநாட்டில் இல்லாத ஒரு அஜென்டா இந்த மாநாட்டில் சேர்த்திருந்தார்கள். அந்த அஜென்டாவை பார்த்தும் ஒரு சிலர் முனு முனுத்தனர். இன்னும் சிலர் அதை பற்றி பேச எதிர்த்தனர். முதல் முறையாக மகளிர் மாநாட்டில் 'லெஸ்பியனை' பற்றி அஜென்டாவாக சேர்த்திருந்தனர். லெஸ்பியன் பெண்கள் பொருத்தமட்டில் இது தான் முதல் மாநாடு. முதல் முறையாக லெஸ்பியன் குறித்து விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்படிருந்தது.

ஒரு சில எதிர்ப்புகள் மீறி லெஸ்பியன் பற்றி கருத்துகள் அந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. எதிர்த்தவர்கள் கூறிய கருத்து " ஓரின சேர்க்கையாளர்கள் மிருகங்கள்" என்றது தான்.

ஓரின சேர்கையாளர்கள் உடல் சுகத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய கூடியவர்கள், மிருகங்கள் போல் நடந்துக் கொள்பவர்கள், கொலை கூட செய்வார்கள் என்று பல கருத்து நிலவி வருகிறது.

‘செக்ஸ்’ விஷயத்தில் ஓரின சேர்கையாளர்கள் மட்டும் தான் மிருகங்களாக நடந்து கொள்கிறார்களா என்ற கேள்விக்கு முதலில் பதிலளித்தால், மேல் சொன்ன கருத்துக்கு பதில் வந்துவிடும்.

மனைவியின் மரணத்திற்கு பிறகு பாலியல் உறவுக்காக தன் சொந்த மகளை ஒரு பாதள அறையில் அடைத்து இருபது வருடங்களாக ஒருவன் வாழ்ந்து வந்திருக்கிறான் என்ற செய்தியை சமிபத்தில் படித்திருப்பீர்கள். சொந்த மகளை புணர நினைத்தவன் மனிதன் என்பதா அல்லது மிருகம் என்பதா ?

நொய்டாவில் சின்ன சிறுமிகளை வன்புணர்ச்சிக்காக கொலை செய்தவனை இயற்கைக்கு ஒப்பான உறவில் ஈடுப்பட்டவன் என்று யாராலும் சொல்லமுடியாமா ?

இன்னும் மலையடிவாரத்தில் பழங்குடி மக்களின் பெண்கள் அதிகார வர்கத்தினரால் தொல்லைகள் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதை மனித உணர்ச்சிகள் என்று சொல்லி நம்மால் நிராகரிக்க முடியுமா ? இல்லை நியாயம் தான் படுத்த முடியுமா ?

அளவுக்கு மீறிய செக்ஸ் ஆசை ஒரு மனிதனை மிருகமாக மாற்றிவிடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. மற்ற உறவில் ஜோடி கிடைப்பது போல் எதிர்பால் உறவுகளை விட சுயபால் உறவுக்கு ஜோடி கிடைப்பது சிக்கல் மட்டுமல்ல… இது பகிரங்கமாகத் தேடலில் ஈடுபட முடியாத ஒன்று. அதனால் மற்ற உறவு தேடலில் விட இதில் வன்முறை கூடுதலாக உள்ளது.

இயற்கையான உறவு என்று சொல்லப்படும் ஆண் - பெண் உறவாகட்டும், ஓரின சேர்கையாகட்டும்... செக்ஸ் உணர்வுக்கான உடல் கிடைக்காத போது கிடைத்த உடலில் மீது வன்முறை அதிகமாக இருப்பதை தான் தினமும் செய்திதாளில் பார்க்கிறோம்.

மேல் சொன்ன எல்லா வன்முறைகளும் 'செக்ஸ்' வன்முறையாகவே பார்க்க வேண்டிய ஒன்று. எந்த வன்முறையையும் நம்மால் எப்படி நியாயப்படுத்த முடியாதோ அதே போல் ஓரின சேர்க்கையாளர்கள் இப்படி தான் என்று முத்திரை குத்தவும் முடியாது.

“சுயபால் விழைவு இயற்கைக்கு ஒவ்வாத கொடூரச் செயல். அதனால் தான் மிருகத்தனமான நிலை” என்று சொல்லுபவர்களுக்கு இன்னும் சில உதாரணங்கள்.

விலங்கு, பறவைகளில் தாமே இரு பாலுமாக இருக்கும் வகைகள் இயற்கையிலேயே உண்டு. ஒரு ஜோடி ஆண் பறவைகள் தம்பதியாகக் கூடு கட்டி வாழும் போது முட்டைகளுக்குப் பதிலாக அதே போன்ற தோற்றமுடைய கற்களைச் சேகரித்து வந்து தங்கள் கூட்டில் வைக்கும் பழக்கத்தில் உள்ளன. இவை சில சமயம் வேறு பறவையின் அசல் முட்டையைத் திருடி வந்து தம் கூட்டில் வைத்துப் பொரித்து வளர்ப்பதும் உண்டு !

சுமார் 1500 வகை உயிரினங்களில் சுயபால் விழைவுச் செயல்பாடுகளுக்கும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காட்டெருமை, யானை, சிங்கம், மான், பூனை, சிறுத்தை, நாய், பசு, முயல், ஓட்டைச்சிவிஅங்கி, ஆடு, குரங்கு, கரடி, குதிரை, நரி, கழுகு என்று இன்னும் பல இனங்கள் இந்த பட்டியலில் உண்டு.

( நன்றி : ஞாநியின் 'அறிந்ததும் அறியாமலும்' )

‘சுயபால் விழைவு’ என்பது இயற்கையில் இல்லாத ஒன்று என்ற அணுகுமுறையில் இருந்து மிருக தனமான உணர்வு என்று நிலையில் தான் இன்று பார்க்கிறார்கள். மிருக தனமான உணர்வு என்ற நிலையில் இருந்து மாறினால் தான், மிருகங்களாக பார்க்கும் ஓரினசேர்கையாளர்கள் மனிதர்களாக நடத்த பட முடியும்.

செக்ஸ்காக கொலை செய்பவர்கள், வன்முறையில் இறங்குபவர்கள், கொடூரமாக நடந்துக் கொள்பவர்கள் போன்றவர்களை மிருகங்கள் என்று சொல்லலாம். ஆனால், ஓரினசேர்கையாளர்கள் மிருகங்கள் என்ற பொதுவான பார்ப்பது எந்த வகையிலும் நியாயம் இருப்பதாக தெரியவில்லை.

இதில், ஓரின சேர்க்கையாளர்களால் நடத்தப்படும் செக்ஸ் வன்முறைக்கு நான் ஆதரவு தெரிவிக்கவில்லை. எதிர்பாலில் செக்ஸ் வன்முறை இருப்பது போல் சுயபாலிலும் உள்ளது என்பதை தான் இந்த கட்டுரையில் எழுதியிருக்கிறேன்.

Monday, September 27, 2010

நேரு முதல் நேற்று வரை

ப.ஸ்ரீ. ராகவன்ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆவதற்கு படிக்க வேண்டிய புத்தகங்கள் பல இருக்கிறது. தகவல், அறிவியல், தொழினுட்பம் என்று பல விஷயங்களை பற்றி கேள்வி ஞானமாவது இருந்திருக்க வேண்டும். ஒரு வருடம் கடுமையாக உழைக்க வேண்டும். ஐ.ஏ.எஸ் தவிர எதை பற்றியும் நினைத்துக் கூட பார்க்க கூடாது. இப்படி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பலர் சொல்லும் கருத்துகள் இவை. ஆனால், ஐ.ஏ.எஸ் அதிகாரியான பிறகு எப்படி இருக்க வேண்டும், எப்படி மேலான்மை வளர்த்துக் கொள்ள வேண்டும், நாட்டின் வளர்ச்சிக்காக எப்படி பாடுப்பட வேண்டும் என்று சொல்லக் கூடிய புத்தகங்கள் எதுவும் இல்லை.அந்த குறையை இந்த புத்தகம் போக்கியுள்ளது.

ஓய்வு பெற்ற ப.ஸ்ரீ. ராகவன் அவர்களின் ப்ரோபைலே வியக்க வைக்கிறது. மாநில அரசியல் , மத்திய அரசியல் முதல் ஐ.நா வரை பார்த்தவர். நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி போன்ற முக்கிய பிரதமர்களிடம் பணியாற்றியவர்.


ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தன் வாழ்க்கையை தொடங்கியதால் வங்காளிகள் பற்றிய தனது அனுபவத்தை அதிகம் பதிய வைத்திருக்கிறார்.

* கண்ணெதிரில் நடக்கும் அநீதியையும் அதிகார வர்க்கத்தின் இறுமாப்பையும் இரக்க மின்மையையும் பொறுத்துக் கொள்ளும் குணம் வங்காளிகளுக்குக் கிடையாது.

* அதிகார தோரனையில் கட்டளையிட்டு அவர்களிடம் வேலை வாங்க முடியாது. ' ஒருவர் முதுகை ஒருவர் தட்டி கொடுத்து தான் வேலை வாங்க முடியும்.
மனிதர்களுக்கான நிறைகுறைகள் அவர்களிடம் இருக்கலாம். ஆனால், அவர்கள் மிருகங்களாக நடந்துக் கொள்ளமாட்டார்கள்.

* தமிழ் நாட்டில் அதிகார வர்க்கத்தினர் காட்டும் கொடுமைகளையும், சமூக அவலங்களின் சாட்டையடிகளையும் நாம் பொறுத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். வங்காளிகளுக்கு அந்த தாழ்வு மனப்பான்மை கிடையாது.அதுதான் வித்தியாசம்.

அதே போல், அவர் பணியாற்றிய பிரதமர்கள் பற்றியும் இந்த புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

ஜோதிபாசு பிறகு ஒரு மாநிலத்தில் தொடர்ந்து அதிக ஆண்டுகளுக்கு முதலவராக இருந்தவர் பி.சி.ராய் அவர்கள். 12 ஆண்டுகளுக்கு முதல்வராக இருந்தவர் நாள் முழுவது உழைத்தபோதும், காலையிலும், மாலையிலும் இரண்டு மணி நேரம் ஏழைகளுக்கு அவர் வீட்டில் இலவச சிகிச்சை செய்துவந்தார்.

இந்திரா காந்தி சிறு சிறு விஷயங்களுக்கு கூட அமைச்சர்களை விட அதிகாரிகளை தான் அதிகம் நம்பினார்.

இன்னும், சில இடங்களில் காங்கிரஸின் சாயலை மறைமுகமாகவும், நேரடியாகவும் கிலித்திருக்கிறார்.

**

1994ஆம் ஆண்டு டி.என்.சேஷன் தன் பணிகால அனுபவங்களை அடங்கிய புத்தகத்தில், அவர் மதுரை மாவட்ட கலெக்டராக இருந்தபோது கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில், அண்ணாதுரை அவர்கள் அமெரிக்க உளவகமான சி.ஐ.ஏயின் கைப்பாவையாக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினார் என்ற தோனியில் எழுதினார். அந்த புத்தகத்தை திராவிட கடசிகள் தடை செய்ய உச்ச நீதிமன்றம் வரை சென்றனர்.

ஒரு கலெக்டருக்கு புலனாய்வு நிறுவனத்தின் எந்தத் தகவலும் எந்த விதத்திலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிய வேண்டிய தேவை எழுந்தால் கூட, மத்திய உளவுத் துறைக்குத் தெரியாதது மதுரை கலெக்டருக்கு தெரிந்திருக்க முடியாது. பல வருடம் முன் நடந்த சம்பவத்தை இந்த புத்தகம் மூலம் ஞாபகப்படுத்திருக்கிறார். இந்த புத்தகத்தில் இது தேவையா என்று தோன்றுகிறது.

**
ஐ.ஏ.எஸ் குறித்து சுவையான தகவல்கள்

கணவன், மனைவி இருவரும் ஐ.ஏ.எஸ்யில் இருப்பவர்களாக இருந்தால், கூடுமான வரை ஒரே இடத்தில் வேலைகளுக்கு நியமிப்பது என்ற கொள்கையை அரசு கடைப்பிடிக்கிறது.

பல மாவட்டங்களில் போக்குவரத்து வாகனங்கள் கிடையாது என்பதால் 1980ஆம் ஆண்டு வரை ஐ.ஏ.எஸ் பயிற்சியில் குதிரை ஏற்றம் மிக முக்கியமான பயிற்சியாக இருந்தது.

**

ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மிக முக்கியமான பங்கு ஒரு புதிய திட்டம் வகுப்பது என்றால், அமைச்சர்களுக்கு துறை சார்ந்த தகவல், அதன் பாதுப்புகள், அதன் அடிப்படியில் எடுக்க வேண்டிய முடிவுகளைப் பற்றி அறிவுரை கூற வேண்டும். அதன் பாதிப்பு, தாக்கங்களை பற்றி அமைச்சருக்கு எடுத்துக்கூற, எழுத்தில் தர அதிகாரிக்கு உரிமை உண்டு. அதையும் மீறி அமைச்சர் செயல்பட விரும்பினால், அதற்கான காரணங்களை விளக்கமாக அமைச்சர் எழுதிக் கையெழுத்திட வேண்டும். அந்த உத்தரவை மதித்து நிறைவேற்றுவது அதிகாரியின் கடமை.

இறுதி அத்தியாயத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அறிவுரை கூறுபதாக இருந்தாலும், அவருக்கும் உள்ளுக்குள் இருந்த பயம் தெரிகிறது.

இப்போது இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்கள் பணி அனுபவத்தை பற்றி எழுதினால் அதில் பெரும் பகுதி ஊழல் பற்றியதாக இருக்கும். சிலர் ஊழலில் மந்திரிகளையே மிஞ்சியவர்கள். ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதை இந்த நூல் சொல்லுகிறது.

நூலை வாங்க... இங்கே

ரூ.150, பக்: 256
கிழக்கு பதிப்பகம்

Thursday, September 23, 2010

மூன்று புத்தக விமர்சனங்கள்

சண்டைத்தோழி
கட்டளை ஜெயா
விலை.ரூ. 30. பக்கங்கள் : 80
கற்பகம் புத்தகாலயம்

வேலூர் புத்தகக் கண்காட்சியில் கட்டளை ஜெயா என்ற நண்பர் அறிமுகமானார். அதிகமாக காதல் கவிதைகள் எழுதும் இவர், இதுவரை நான்கு நூல்கள் எழுதியுள்ளார். அவர் எழுதிய 'சண்டைத்தோழி' படிக்கலாம் என்று வாங்கினேன்.

"என் கழுத்துக்கு
நெக்லெஸ் போன்றவன்
என்றும் எல்லை தாண்டியதில்லை"

"உன் விடுமுறை கடிதம் கொடுக்கவே
பள்ளிக்கு செல்கிறேன் "

பெண்களை கவரும் தோழி கவிதைகள் இந்த புத்தகம் முழுக்க நிரம்பியிருந்தது. அவர் எழுதிய ஒரு புத்தகம் நான்காம் பதிப்பு வரவிருப்பதாக கூறினார். மாடல் அழகிகள் நிரம்பிய ஐந்து வரி கவிதைகளுக்கு இவ்வளவு வரவேற்பு உள்ளதா என்று வேலூர் புத்தகக் கண்காட்சி உணர்த்தியது. ஆனால், இது போல் நூல் வடிவம் அமைத்து அச்சிடுவதற்கு மற்ற நூல்களை விட அதிக செலவாகும் என்ற உண்மை தான் கசக்கிறது.

**
மனசே டென்ஷன் ப்ளீஸ் !
நளினி
விலை. ரூ.10. பக்கங்கள் : 32
பாரதி புத்தகாலயம்

எதிர்மறையான தலைப்பு எப்போதுமே வாசகனை ஒரு நிமிடம் கவரும். இரண்டு நிமிடம் புத்தகத்தை புரட்ட வைக்கும். அந்த வகையில் தலைப்பில் கவரப்பட்டு வாங்கிய புத்தகம்.

வாழ்க்கையில் இருந்து விடுப்பு எடுத்தால் தான் டென்ஷனில் இருந்து விடுப்பட முடியும் என்பதை ஆரம்பத்திலே சொல்லிவிடுகிறார். டென்ஷன் இல்லாமல் எப்படி வாழ வேண்டும், எப்படி பொறுமையாக இருக்க வேண்டும் என்ற பொய் உபதேசங்கள் இந்த புத்தகத்தில் எங்கும் இல்லை.

டென்ஷனால் வரும் விளைவுகள், டென்ஷன் எப்படி எல்லாம் வருகிறது, எதனால் டென்ஷன் ஆகிறோம் போன்ற விளக்கங்களை இந்த புத்தகம் விளக்கியுள்ளது. எல்லோரும் வாங்கும் படியான விலையில் பயனுள்ள நூல் என்று சொல்லலாம்.

**
மறக்க முடியுமா ?
புரட்சிப்பாடகர் கத்தார்
விலை.ரூ.40. பக்கங்கள் : 64
நக்கீரன் பதிப்பகம்

தேசியம், ஒருமைப்பாடு என்ற போலி பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட தெலுங்கானா பழங்குடி மக்களில் இருந்து ஒரு புரட்சி குரல். தனது பாட்டால் பாரதி எப்படி ஆங்கிலேயரை மிரட்டினாரோ, தன் குரலால் ஆதிக்க வர்கத்தினரை பயமுருத்தியவர் கத்தார். அவரது அனுபவத்தை பேட்டியை தொகுக்கப்பட்ட புத்தகம்.

தனது பிறப்பில் இருந்து இன்றைய தெலுங்கானா போராட்டம் வரை கூறியுள்ளார். போலீஸாரால் தாக்கப்பட்டது, முகம் தெரியாத மனிதரால் சுடப்பட்டது, தன் ஆசை மகனை இழந்தது என்று ஒரு புரட்சியாளருக்கு கிடைக்கும் எல்லா பரிசும் இவருக்கும் கிடைத்திருக்கிறது.

அவர் பாடிய பாடலில் ஒரு சில வரிகள்...

எல்லா வண்டியும் பெட்ரோலில் ஓடுது
ரிக்ஷா வண்டி என் இரத்தத்தில் ஓடுது
பெட்ரோல் விலை மட்டும் ஏறுது
என் இரத்தத்தின் விலை மட்டும் மூழ்குது !


பெட்ரோல் விலை எவ்வளவு ஏறினாலும் விலை கொடுத்து வாங்கும் நாம், இவர்கள் உழைப்புக்கான ஊதியத்தை கொடுக்க நினைக்கிறோமா என்ற கேள்வி என்னை தொற்றிகொண்டது.

இன்று மேடை அரசியல் பேச்சாக அமைந்திருக்கும் தெலுங்கானா மாநிலப் பிரச்சனையை, ஒருமைப்பாடு என்ற வார்த்தில் மூட நினைப்பவர்கள் கத்தார் போன்ற போராளிகளுக்கு முதலில் பதில் சொல்ல வேண்டும்.

Monday, September 20, 2010

கவிதை உலகம் நூல் இலவசமா !!

இந்த கட்டுரை தொடங்கும் முன்பு இரண்டு சம்பவத்தை சொல்கிறேன்.

*

விடுமுறை நாட்களில் நான் கலந்துக் கொள்ளும் இலக்கிய நிகழ்ச்சிகளில் புத்தக கடை போடுவது வழக்கம். இதில் மூன்று முதல் ஐந்து புத்தகம் தான் அதிகம் விற்கும். இருந்தாலும் மற்ற புத்தகங்கள் வாசகர் பார்வை படுவது ஒரு விளம்பரமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் செய்கிறேன்.

அப்போது ஒரு நண்பர், அவர் நடத்தும் மாத இழதை வரும் வாசகர்களுக்கு இலவசமாக கொடுக்க சொன்னார். பழைய இலக்கிய மாத இதழ் இலவசமாக வழங்குவதில் இரண்டு லாபம் உண்டு. ஒன்று மாத இதழுக்கு விளம்பரம். இன்னொரு வீட்டில் இருக்கும் பழைய இதழை காலி செய்வது. நானும் வாங்கி கொண்டு, வந்தவர்களுக்கு கொடுத்தேன். ஒரு முதியவர் இலவசமாக வாங்கிய இதழை கையில் வைத்துக் கொண்டு நான் கொண்டு சென்ற புத்தங்களை ஏதாவது இலவசமாக கொடுக்க முடியுமா என்று கேட்டார்.

புத்தகம் இலவசமாக கொடுப்பதிலும் சரி, வாங்குவதிலும் சரி எனக்கு என்றும் உடன்பாடில்லை. அப்படியே புத்தகத்தை இலவசமாக பெற்றுவிட்டால் அதை பற்றி ஒரு மொக்கை விமர்சண பதிவு போட்டு அந்த புத்தகத்தில் இலவச விளம்பரத்தை தேடி கொடுத்துவிடுவேன். எடைக்கு போகும் புத்தகத்தை விட இலவசமாக போகும் புத்தகத்தின் நிலைமை மிகவும் கொடுமையானது. அதை ப் பெற்றி இந்த பதிவில் பேச வேண்டாம்.

இலவசமாக கேட்ட முதியவரிடம், எல்லா புத்தகமும் கழிவு விலையோடு விற்பனைக்கு தான், இலவசம் கிடையாது என்றேன். ஓய்வு பெற்ற ஊழியர் போல் தெரிந்ததால் 20% கழிவு கூட கொடுக்க தயாராக இருந்தேன். ஆனால், அவர் விரும்பியது இலவச புத்தகங்களை தான்.

*

அதே போல், இன்னொரு நிகழ்ச்சியில் இரண்டு சிறுவர்கள் 'காந்தி வாழ்ந்த தேசம்' வேண்டும் எடுத்து பார்த்து விலையை கேட்டார்கள். ரூ.45 யான புத்தகத்தை சிறுவர்களுக்காக ரூ.35 என்றேன். அம்மாவிடம் கேட்டு பணம் வாங்கி வருவதாக இந்த சிறுவர்கள் புன்னகையோடு சென்றனர்.

இன்று சிறுவர்கள் புத்தகத்தை மதிக்கும் அளவிற்கு பெரியவர்கள் மதிப்பதில்லை என்பது இந்த இரண்டு சம்பவத்தில் புரிந்துக் கொண்டேன். ஆனால், சிறுவர்கள் விரும்பிய புத்தகத்தை வாங்க பெற்றோர்களை நம்பி இருக்க வேண்டிய நிலைமை.

*

இப்படி புத்தகம் எழுதுவதை விட புத்தகம் விற்பனை சவாலானது என்று ஒவ்வொரு நிகழ்ச்சியில் கடை வைக்கும் போது உணர முடிந்தது. புத்தகங்கள் விற்பனையாகாவிட்டாலும் இது போன்ற வித்தியாசமாக மனிதர்களை சந்திப்பதற்காகவே கடை வைக்கிறேன். என்னைப் போல் சிறு பதிப்பாளர்கள் இன்னும் பல சவால்களை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

புத்தகங்கள் விற்பனையாகவில்லை, சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொள்வது என்று பல விமர்சனங்களுக்கு நடுவில் தான் பதிப்பகத் துறை இயங்கி வருகிறது. ஆனால், இதில் முத்தெடுத்த ஜான்பாவான் பார்க்கும் போது நஷ்டத்தில் இயங்கும் தொழிலாக இருக்காது என்ற நம்பிக்கையில் தைரியமாக களத்தில் குத்தித்தேன்.

இலவச பிரியர்களுக்கு நடுவில் லாபம் பார்க்க வில்லை என்றாலும் குறைந்த அளவு நஷ்டம் அடையாமல் இருக்க கவிதை தொகுப்பு நூலை வெளியிட திட்டமிட்டு அரும்பு முயற்சியாக 'காந்தி வாழ்ந்த தேசம்' கவிதை நூலை வெளியிட்டேன். முழுக்க முழுக்க விளம்பர நோக்கத்தோடு வெளியிட்ட நூல் என்றாலும், இந்த நூலில் நாகரத்னா பதிப்பகத்திற்கு லாபமும் இல்லை. நஷ்டமும் இல்லை. வருடத்திற்கு இது போன்ற கவிதை நூல் வெளியிடலாம் என்ற யோசனையில் இந்த வருடம் 'கவிதை உலகம்' என்று வெளியிட்டேன்.வேலூர் புத்தகக் கண்காட்சியில் நானே எதிர்பார்க்காத அளவிற்கு 'கவிதை உலகம்' நூல் சக்கை போடு போட்டது. கவிதை நூலுக்கு வெளியூரில் வரவேற்பு உண்டு என்பதை வேலூர் புத்தகக் கண்காட்சி உணர்த்தியிருக்கிறது என்று சொல்லலாம். கவிதை நூல் என்பதால் குறைந்த பிரதிகள் போட்டுவிட்டோமே என்ற என்னை நானே திட்டிக்கொண்டேன். இதில் வேதனை என்னவென்றால் இங்கும் இலவச பிரியர்கள் என்னை விடவில்லை.

கவிதை உலகம் நூலில் எழுதிய ஒரு சிலர் புத்தகத்தை தனக்கு அனுப்ப வேண்டும் என்ற அதிகார தோரனையில் கேட்கிறார்கள். அதாவது, புத்தகத்தை இலவசமாக என் சொந்த செலவில் அனுப்ப வேண்டும் என்பது தான் அந்த நண்பர்களின் வேண்டுகோள்.

தங்கள் கவிதை இடம் பெற்ற புத்தகத்தையே இலவசமாக வாங்க நினைப்பவர்கள் மற்றவர்கள் புத்தகங்கள் பணம் கொடுத்து தான் வாங்குகிறார்களா என்று தெரியவில்லை. நூலில் இடம் பெற்ற எந்த எழுத்தாளரையும் புத்தகம் வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. அதே சமயம் இலவசமாக கொடுக்க முடியாது என்பதில் தீவிரமாக இருக்கிறேன்.

நூல் வாங்க விரும்புவர்கள்…

நேரடியாக என்னை தொடர்பு (99404 48599) கொண்டு வாங்கலாம்.

இணையத்தில் இங்கே வாங்கலாம்.

டிஸ்கவரி புக் ஃபெலஸ், கே.கே.நகர் புத்தக கடையில் வாங்கலாம்.

குறைந்த பிரதி போட்டிருப்பதால், வேறு எங்கும் விற்பனைக்கு கொடுக்கவில்லை.

Thursday, September 16, 2010

ஓஷோ சொன்ன கதை – 4

சந்தோஷமாக வாழ ஓஷோ அவர்கள் ஒரு கதை சொல்கிறார்.

வயதான கிழவர் தன் நூறாவது பிறந்த நாளை மிகவும் சந்தோஷமாக கொண்டாடுகிறார். அவரை பார்த்து வியந்தவர்கள் "எப்படி சந்தோஷமாக வாழ்வதாக கேட்டபோது அவர், " ஒவ்வொரு நாளும் நான் கண் விழிக்கிற போது சந்தோஷமாயிருப்பதா ? வேதனைப்படுவதா ? என்று கேட்டு விட்டு சந்தோஷத்தை தேர்வு செய்கிறேன்" என்றார்.

***


ஒரு ஜென் குரு தன் சீடர்களிடம், " நான் பாட்டிலில் ஒரு வாத்தை போட்டேன். இப்போது அந்த வாத்து வளர்ந்து விட்டது. பாட்டிலின் கழுத்தோ மிகச் சிறியது. எனவே வாத்து வெளியே வர முடியவில்லை. அது ஒரு சிக்கலாகி விட்டது. வெளியே வராவிட்டால் வாத்து செத்துவிடும். பாட்டிலை உடைத்து வாத்தை வெளியேற்றலாம். ஆனால், பாட்டிலை உடைக்க நான் விரும்பவில்லை. அது விலைமதிப்புள்ள ஒன்று. என்ன செய்வது என்று நீங்கள் சொல்லுங்கள்" என்றார்.

பாட்டில் தலையில் உள்ளது அதன் கழுத்தோ குறுகியது. தலையை உடைக்கலாம். ஆனால் அது விலைமதிப்புள்ளது. அல்லது வாத்தை சாகவிடலாம். ஆனால், அதையும் அனுமதிக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் தான் அந்த வாத்து.

அந்த ஜென் குரு தொடர்ந்து சீடர்களைக் கேட்டார். அவர்களை அடித்தார். சீக்கிரம் வழி கண்டுபிடியுங்கள் என்றார். ஒரே ஒரு பதிலை தான் அவர் ஏற்றுக் கொண்டார். ஒரு சீடன் கூறினான், " வாத்து வெளியில் தான் இருக்கிறது !"

நீங்கள் வெளியே இருக்கிறீர்கள். எப்போதும் நீங்கள் உள்ளே இருந்ததில்லை. உள்ளிருப்பதாக எண்ணுவது தவறான கருத்து. எனவே, நிஜமான பிரச்சனை என்பது எதுவும் இல்லை என்பதை விளக்க இந்த கதையை ஓஷோ சொல்லுகிறார்.

***

குருட்ஜீஃப் பின் தன் சீடர்க்கள் முழுமையாக சரணடைதல் தேவைப்பட்டது. அவர் எதை சொன்னாலும் பின்பற்ற வேண்டும் என்று கட்டளையிட்டார். ஒரு குறிப்பிட்ட பயிற்சியை கூறுவார். அதை செய்து கொண்டிருக்கும் போது 'நிறுத்து !' என்பார். உடனே நிறுத்திவிட வேண்டும்.

ஒரு நாள் காலையில் கால்வாயில் இறங்கி நடக்கிற போது அவர் நிறுத்து என்று சொல்லிவிட்டு, தன் டென்ட்டிற்குப் போய்விட்டார். நான்கு சீடர்கள் கால்வாயில் நின்றிருந்தனர். யாரோ தண்ணீரைத் திறந்து விட, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வந்தது.

குருட்ஜூஃப் உள்ளே போய்விட்டார். அவருக்கு தெரியாது. ஆனாலும் சீடர்கள் காத்திருந்தனர்.

கழுத்துவரை தண்ணீர் வந்து விட்டது. ஒருவன் கரைக்கு ஓடி விட்டன். "இது ரொம்பவும் அதிகம். குருவுக்கு எப்படி தெரியும் ? " என்றான்.

மற்ற இரண்டு சீடர்களும் மூக்குவரை தண்ணீர் வந்ததும் வெளியேறி விட்டனர். ஆனால், ஒரு சீடன் மட்டும் அப்படியே நின்றான். தண்ணீர் அவன் தலையைத் தொட்டு ஓடிக் கொண்டிருந்தது. அவன் மூழ்கிக் கொண்டிருந்தான்.

தன் அறையை விட்டு பாய்ந்து வந்த குருட்ஜீஃப் தண்ணீரில் குதித்து அவனை காப்பாற்றிக் கொண்டு வந்தார்.

மரணத்தில் இருந்து வந்த சீடர் கண்களை திறக்கும் போது புதிய மனிதனாக இருந்தான். அவனுக்குள் மாற்றம் நிகழ்ந்திருந்தது. அந்தப் பழைய மனிதன் இறந்து அவன் புதிதாகப் பிறப்பெடுத்திருந்தான்.

அந்த சீடன் குருவை முழுமையாக ஏற்றுக் கொண்டான். தன் மனதையும், அதன் கணக்குகளையும் அவன் நிராகரித்தான். தன் வாழ்வின் மீதான பற்றை நிராகரித்து, உயிராசையைத் துறந்தான். அதனால் அதான் அவனை எதுவும் நகர்த்தி விடவில்லை என்பதை ஓஷோ இந்த கதையின் மூலம் சொல்லுகிறார்.

உதவிய புத்தகம் :-

"My way the way of the white clouds" - ஓஷோ

Saturday, September 11, 2010

அட்டடென்ஸ் பதிவு !

வேலை எழுத்து ஆர்வமுள்ளவனை எப்படி விழுங்குவிடுகிறது என்று கடந்த பத்து நாட்களில் அனுபவ ரீதியாக உணர்ந்துக் கொண்டேன். என்ன தான் வேலை, டென்ஷன் இருந்தாலும் ஒரு நாளைக்கு பத்து நிமிடமாவது படிப்பேன் இல்லை என்றால் எழுதுவேன். கடந்த பத்து நாட்களில் எந்த புத்தகத்தை படிக்கவோ, எழுதவோ முடியவில்லை.

28.8.10 அன்று ‘கவிதை உலகம்’ வெளியீட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தது. பதிவு நண்பர்கள் வேடியப்பன், லக்கி, ஆதிஷா வந்திருந்தார்கள். முதல் முறையாக நிகழ்ச்சி நடத்திய செலவுக்கு மேல் புத்தகம் விற்பனையானது. ஆனால், இதை பற்றி பதிவு போட இப்போது தான் நேரம் கிடைத்தது. 'கவிதை உலகம்' நூல் வெளியீடு, வேலூர் புத்தகக் கண்காட்சி , அலுவலக வேலை என்று என்னை கட்டிப்போட்டு கைதியாகவே மாற்றிவிட்டது.

எந்த பதிவும் எழுதாததால் எதோ பதிவுலகில் இருந்து அந்நியப்பட்டு விட்டோமோ என்ற உணர்வு தோன்றியது. என்ன எழுத வேண்டும், எதை பற்றி எழுத வேண்டும் என்று யோசிக்க கூட முடியவில்லை. புத்தக கண்காட்சி முடிந்தாலும் அதன் சார்ந்த சில வேலைகள் முடிந்தபாடில்லை. இன்னும் தொடர்ந்துக் கொண்டு இருக்கிறது. எல்லா வேலைகளும் முடிய ஒரு வாரம் மேல் ஆகும்.

யாரும் என்னை மறந்து விடக்கூடாது என்பதற்காக, ஒரு அட்டடென்ஸ் போட தான் இந்த பதிவு.

***

நாகரத்னா பதிப்பகத்தின் வெளியிடான 'கவிதை உலகம்' நூல் வாங்க....

1. பெயர் : K.G.Kannan
வங்கி எண் : 50132 82449
வங்கி : Citibank, Chennai

வங்கியில் பணம் செலுத்திய பிறகு, tmguhan@yahoo.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் வீட்டு முகவரி அல்லது தொடர்பு கொள்ளும் முகவரி அனுப்பவும்.

2. M.O / Cheque / DD மூலம் வாங்க விரும்புபவர்கள் 'K.G.Kannan' என்ற பெயரில் ரூ.45 (தபால் செலவு ரூ.10 சேர்த்து)யை, Nagarathna Pathippagam, 3A., Dr.Ram Street, Paddy field Road, Perambur, Chennai - 11 முகவரிக்கு அனுப்பவும்.

புத்தகத்தோடு சான்றிதழ் பெற விரும்புபவர் கோரியர் ரூ.25 அனுப்பவும்.

3. இணையத்தில் வாங்க...
http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=156

LinkWithin

Related Posts with Thumbnails