வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, October 24, 2016

எப்படி ? இப்படி ? - பட்டிக்கோட்டை பிரபாகர்

ஒவ்வொரு மர்ம நாவலுக்கு பின்னால் எதோ உண்மையான குற்றம் ஒழிந்திருக்கிறது. உண்மையும், புனைவும் கலந்த ஒரு புள்ளி தான் மர்ம நாவலின் அடித்தளமாக இருக்கிறது. அப்படி மர்ம நாவலின் ஆசானான பட்டிக்கோட்டை பிரபாகர் புனைவு அல்லாத உண்மை சம்பவங்களின் குற்றத்தைப் பற்றி எழுதியிருக்கும் நூல் ‘எப்படி ? இப்படி ?’. தமிழகத்தில் எம்.ஜி.ஆர் சுடப்பட்டதில் இருந்து அமெரிக்காவின் மர்லின் மன்றோ மரணம் பின் வரை நடந்த சம்பவங்கள், வழக்கு விசாரணை, தீர்ப்பு என்று 31 உண்மை குற்றச் சம்பவங்களை கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு சம்பவம் மர்மமான சிறுகதை போல் இருக்கிறது. சில வழக்கின் தீர்ப்புகள் இந்திய நீதிமன்றத்தில் பணம் எந்த அளவுக்கு விளையாடுகிறது என்பது புரிந்து கொள்ள முடிகிறது. 

உண்மை குற்றவியல் சம்பவங்களை வாசிக்க விரும்புபவர்கள் வாசிக்க வேண்டிய நூல்… 

Wednesday, October 19, 2016

என் பிரியமான போட்டியாளர் என்.சொக்கன் !

என் பிரியமான போட்டியாளர் என்.சொக்கன். 

“இதை நான் சொல்லும் போது எனக்கு நீயெல்லாம் போட்டியாளனா என்று சொக்கன் நினைக்கக்கூடும். 

ஐம்பதுக்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருப்பார். நான் முப்பது புத்தகம் கூட தாண்டியிருக்க மாட்டேன். அதில் பாதி அச்சில் கூட வரவில்லை.

சொக்கன் எழுத்தில் சந்திப்பிழை இருக்காது. எனக்கு சந்தி தாண்டவமாடும். ( இந்தப் பதிவில் எத்தனை சந்திப்பிழை இருக்கிறது என்பதை பார்த்தால் உங்களுக்கே என்னைப் பற்றி தெரியும்.) 

ஏணி வைத்து எட்டமுடியாத உயரத்தில் இருக்கும் சொக்கனை நான் ஏன் போட்டியாளராக நினைக்க வேண்டும்? 

அதற்கும் காரணம் இருக்கிறது. கிழக்கு பதிப்பகத்தில் புத்தகம் எழுத பா.ரா தொடர்பு கொள்ளும் போதெல்லாம், “இந்த புக் சொக்கன் எழுதுறான்” என்பார். அல்லது சொக்கன் எழுதி முடித்து புத்தகமாக வந்திருக்கும். ஒவ்வொரு முறையும் கஷ்டப்பட்டு ஏதாவது தலைப்பு நான் யோசிப்பதற்குள், சொக்கன் செயலில் இறங்கிவிடுவார். 

ஐ.டி.ஊழியர்களைப் பற்றி எழுதலாம் ? என்று பா.ராவிடம் சொல்லும் போது, சொக்கன் விகடன்ல “வல்லினம் மெல்லினம் இடையினம்” தொடர் எழுதுவதாக கூறினார். 

I give up. கிழக்கில் எழுதுவது தான் பிரச்சனை. Prodigy எழுதலாம் என்று “கலீலியோ கலீலி”, ”ரைட் சகோதரர்கள்” எழுதினேன். 

”RAW இந்திய உளவுத்துறை” எழுதலாம் என்று நினைக்கும் போது, “ அப்பா சொக்கா !!! RAW நீங்க எழுத தொடங்கலையே” என்று கேட்டேன். 

“எழுதலாம் நினைச்சேன். வேற வேலையில விட்டுட்டேன்.” என்றார்.

”புண்ணியமா போகும். எழுதாதீங்க… நா எழுதுறேன்” என்று சொல்லி எழுதத் தொடங்கியது தான் R.A.W. 

F.B.I., C.I.A., Mossad, K.G.B என்று எழுதியவர் ‘R.A.W’ எழுதவிடாமல் செய்த அவரின் பணிகளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். 

ஓ.கே… ஜோக்ஸ் அப்பார்ட். ஜிப்ரான் கதைகளை மிட்டாய் கதைகள் என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார். வாழ்க்கை வரலாறு, வரலாறு, தொழிட்நுட்ப கட்டுரைகள் பல எழுதியிருக்கிறார். ”தினம் ஒரு பா” என்று மரபு இலக்கியத்தையும் விட்டு வைக்கவில்லை. ‘நல்ல தமிழில் எழுதுவோம்’ என்று இலக்கணத்தையும் விட்டு கொடுக்கவில்லை. 

சமக்காலத்தில் ஒரு Versatile Writer என்று சொன்னால் என்.சொக்கனை குறிப்பிடுவேன். நேர்த்தியான நடையை முழுவதுமாக குத்தகைக்கு எடுத்து எழுதியது போல் இருக்கும். 

அவர் ஆரம்பக்கால சார்லி சாபிளின் வரலாறு தொடங்கி அம்பானி, நாராயண மூர்த்தி, அயோத்தி, F.B.I., C.I.A., Mossad, K.G.B, அக்பர் என்று அவரின் பெரும்பாலான புத்தகங்கள் வாசித்திருக்கிறேன். 

இப்போது சொக்கனை பற்றி எழுதுவதற்கு முக்கிய காரணம் “வண்ண வண்ணப் பூக்கள்” நூல். 

இயல், இசை, நாடகம் குறித்து அவர் கூறும் விளக்கம், பொருள் என்று வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. குறிப்பாக, பாடகர்கள் மாற்றி உச்சரிக்கும் வார்த்தைகளால் பாடலாசிரியர் எழுதிய பொருள் மாறுப்படுவதை எடுத்து கூறிய விதம் ரசிக்கும் படியாக இருந்தது. 

இந்தப் புத்தகம் வாசிப்புக்கான நூல் இல்லை. ரசனைக்கான நூல். இன்னும் சொல்லப்போனால் ரசனையோடு வாசிக்கப்பட வேண்டிய புத்தகம். இதை வாசித்தப் பிறகு அவர் குறிப்பிட்டிருக்கும் பாடலை மீண்டும் கேட்கிறேன். இந்த அளவுக்கு நுணுக்கமான ரசனை கொண்டவரா சொக்கன் என்று வியக்க வைக்கிறார். 

ஒரு முறை பத்ரி கூறியிருக்கிறார், “புத்தகம் எனக்கு விற்பனை பண்டம்” என்று. எனக்கும் அப்படி தான். என் பொருளாதார நிலைமை அப்படி நினைக்க வைக்கிறது. ஆனால், சொக்கனுக்கு புத்தகம் என்பது புத்துயிர் கொடுக்கும் அமிர்தம். 

குறிப்பாக, “ஏழு கருவிகள்” என்ற கட்டுரையில், ”எல்லாம் ஒழுங்காக வர வேண்டும் என்று நினைப்பது சர்வாதிகாரம் இல்லை. கலை மீது இருக்கும் அக்கறை, தன்னுடைய படைப்பின் மீது இருக்கும் முனைப்பு. 

 உண்மையில், சொக்கனிடம் இருந்து நான் கற்க நினைத்து, இன்று வரை கற்க முடியாமல் நிரம்ப இருக்கிறது. 

Monday, October 17, 2016

பதிப்பகம் தொடங்கும் ஆசை ?

எப்பொதெல்லாம் பதிப்பகம் தொடங்கும் ஆசை வருகிறதோ, அப்போதெல்லாம் ‘நாகரத்னா பதிப்பகம்’ சார்பாக வெளியிட்டப் புத்தகங்களை பார்ப்பேன். மீண்டும் பதிப்பகம் தொடங்கும் ஆசை பறந்துவிடும்.

கடந்த இரண்டு மூன்று மாதமாக மீண்டும் பதிப்பகம் தொடங்க வேண்டும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம், நான் எழுதி கொடுத்த நூல்களை பதிப்பகங்கள் உரிய நேரத்தில் வெளியிடாமல் இருப்பது தான். ஏறக்குறைய எட்டு நூல் நான்கு பதிப்பகத்திடம் வெளியிடப்படாமல் இருக்கிறது. எப்போது வெளியிடுவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாத ரகசியம்.

இதனால், அடுத்த எழுதிய இரண்டு நூலை எந்தப் பதிப்பகத்திடமும் கொடுக்கவில்லை. மீண்டும் பதிப்பகம் தொடங்கி நாமே வெளியிடலாமா என்ற சிந்தனை வருகிறது. பணம் பிரச்சனை இல்லை. அச்சடிக்கும் நூல்களை வைப்பதற்கு இடம் இல்லை. முந்தைய நூல்கள் இடத்தை ஆக்கிரமித்து இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் படித்த புத்தகங்கள் வைப்பதற்கு கூட இடமில்லாமல், நாகரத்னா பதிப்பக நூல்கள் பாதுகாப்பாக வைக்க வேண்டியதாக இருக்கிறது. அதையும் மீறி சென்னை மழையில் சில நூறு பிரதிகள் பாதிக்கப்பட்டது. அப்படியாவது புத்தகம் செல்கிறதே என்று நினைத்து சந்தோஷப்படும் மனநிலை இருக்கிறேன்.

பதிப்பகம் தொடங்கும் ஆசை குறைத்துக் கொள்வதற்காக, என் வீட்டை ஆக்கிரமித்திருக்கும் நாகரத்னா புத்தகத்தை எண்ணிக்கை வெளியிடுகிறேன்.2012ல் வெளிவந்த புத்தகங்கள் Stock விபரங்கள்…
கேபிளின் கதை – 748 
என்றென்றும் நன்றியுடன் கே.எஸ்.ரவிக்குமார் - 596 
பிணம் தின்னும் தேசம் – 412 
விழிப்பறி கொள்ளை – 333

2010ல் வெளிவந்த புத்தகங்கள் Stock விபரங்கள்… 
டைரிக்குறிப்பு காதல் மறுப்பும் – 524 
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் – 258

2010 முன்பு வெளியிட்ட நூல்கள்… 
எனது கீதை – 488 
என்னை எழுதிய தேவதைக்கு - 56 

நாகரத்னா பதிப்பகத்தில் 300-500 பிரதிகள் அச்சத்தடித்த நூல்கள் லாபம் தரவில்லை என்றாலும், பெரிய நஷ்டம் கொடுக்கவில்லை. மேல் குறிப்பிட்ட அனைத்து நூல்களும் 1000 பிரதிகள் அடித்தது. நஷ்டம் ஏற்படுத்தியதை விட இடம் ஆக்கிரமிப்பை தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

என் புத்தகம் இத்தனை பிரதிகள் விற்பனையாகியிருக்கிறதா என்று எழுத்தாளர்கள் சந்தோஷப்பட வேண்டாம். என்றென்றும் நன்றியுடன் கே.எஸ்.ரவிக்குமார், லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும், என்னை எழுதிய தேவதைக்கு… இந்த மூன்று நூல் மட்டும் தான் எனக்கு Breakeven கொடுத்தது (லாபம் இல்லை என்பதை கவனத்தில் கொள்க). 

சென்னை மழையில் கொஞ்சம், சில புத்தக விற்பனையாளர் ஸ்வாகா செய்தது கொஞ்சம் என்று காணாமல் போன பிரதிகளை கணக்கில் கொண்டு வரவில்லை. அதுவெல்லாம் போக கையில் இத்தனை பிரதிகள் இருக்கிறது. இதையெல்லாம் எப்படி காலி செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை.

சென்னை புத்தகக் கண்காட்சி நெருங்கி வருவதால், பல எழுத்தாளர்கள் சொந்தப் பதிப்பகம் தொடங்குவார்கள். அவர்களுக்கு ஒரு ப்ரீ அட்வைஸ்… 1000 பிரதிகள் அடிக்க வேண்டாம். அதே சமயம் POD மூலம் 200-300 பிரதிகள் அடிக்க வேண்டாம். 500 பிரதிகள் அச்சடித்து என்னால் விற்பனை செய்ய முடியும் நம்பிக்கை இருந்தால் மட்டுமே பதிப்பகம் தொடங்கலாம். இந்த நம்பிக்கையில் கொஞ்சம் குறைவதாக உங்களுக்கு தோன்றினாலும், உங்கள் பழைய பதிப்பகத்தோடு சமசரமாக சென்று கொடுக்கும் ராயல்டியை வாங்கிக் கொள்ளுங்கள். 

ராயல்டி பிரச்சனைக்காக வேறு பதிப்பகம் சென்று, இரண்டு மூன்று பதிப்பகம் மாற்றி… கடைசியில் பழைய பதிப்பகத்திடம் சரணடையும் கதை இங்கு ஆயிரம் உண்டு. ( பல பிரபல எழுத்தாளர் ஒரு ரவுண்ட் அடித்து, கடைசியில் தங்கள் பழைய பதிப்பகத்தில் தஞ்சமடைந்திருப்பதை கவனத்தில் கொள்க !) 

இந்த பதிவில் எனது எழுத்தாளர்களை குறைச் சொல்ல விரும்பவில்லை. அது என் நோக்கமுமில்லை. பதிப்பகம் தொடங்குவது விளையாட்டான விஷயமில்லை. வரும் லாபத்தை விட இரண்டு மடங்கான உழைப்பை கொட்ட வேண்டும். நஷ்டத்தை விட அதிகமாக நம்மை பாதிப்பது விற்பனையாக புத்தகங்கள். இந்த இரண்டு விஷயத்தை தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். 

பதிப்பகம் தொடங்குவது… வியாபாரிகளின் வேலை. வியாபார சிந்தனையில்லாத எந்த எழுத்தாளரும் பதிப்பகம் தொடங்கினால் நிலைமை இதுவாக தான் இருக்கும். 

பின்குறிப்பு : இந்த பதிவை எழுதிய நான் விரைவில் புது பதிப்பகம் தொடங்கினால், அதற்கு காரணம் நானல்ல… என் பதிப்பகங்கள் .

Sunday, October 9, 2016

தேவி ( 2016 ) - திரை விமர்சனம்

விஜய் சேதுபதி, சிவ கார்த்திகேயன் படங்களுக்கு மத்தியில் Comeback நாயகன் பிரபு தேவா களம் இறங்கியிருக்கிறார்.

படத்தில் பேய் இருக்கிறது. ஆனால், பயமுறுத்தவோ, பழிவாங்கவோ, கொலை செய்யவோ இல்லை. கதாப்பாத்திரங்களோடு கதாப்பாத்திரமாக வருகிறது. அதுவும் உருவம் இல்லாமல் வருகிறது.எப்படி பேய் பிடித்தது, பேய் பிடிக்கும் முன் பயமுறுத்தும் formalities காட்சிகள் எல்லாம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் வழக்கமான பேய்-காமெடி படமில்லை. காமெடிப் படம்.

பேய் பிடித்திருக்கிறது என்று நமக்கு உணர்த்திவிட்டு நேராக கதைக்கு சென்றிருக்கிறார்கள்.

பிரபு தேவாவுக்கு நல்ல Comeback படம். இளம் நாயகர் கொஞ்ச ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

தமன்னா ஹிந்திப்படத்திற்கான கவர்ச்சியை காட்டியிருக்கிறார். ( படம் ஹிந்தியிலும் வெளியாகுவதால் இருக்கலாம்.)

100 % காமெடிப் படம். குடும்பத்தோடு பார்க்கலாம்.

Tuesday, September 27, 2016

கவிதை : வாணி ஸ்ரீ !

அன்று என் காதலை மறுத்தவள்
இன்று பேஸ்புக்கின் என் நட்பை ஏற்க மறுக்கிறாள்

அன்றும் என்னை கடந்து போக விரும்பியவள்
இன்று என்னை பார்க்க விரும்பாதவளாக இருக்கிறாள்

என்றோ ஒரு நாள்
நீ என்னை மீண்டும் பார்த்தாள்
அடையாளம் தெரிவதற்காகவே
உடல் எடைப்போடாமல்
அதே எடையில் இருக்கிறேன்!
தலை முடிக்கு
கருப்பு சாயம் பூசுகிறேன் !

அந்த ஒற்றை நாளுக்காக
பல நாட்களாக
என்னை நான் பாதுகாத்துவருகிறேன் !

சந்தேகம் இல்லை
நீ என் வாணி ஸ்ரீ தான்
மாறவே இல்லை !
இந்த அளவுக்கு
ஒரு ஆணின் இதயத்தை உடைக்க
உன்னால் மட்டுமே முடியும் !!

ஆனால்,
அன்றும் சரி, இன்றும் சரி
நான் சிவாஜி கணேசன் அல்ல !

உன்னிடம் ஒரு நொடிக் கூட
நடிக்க தெரியாதவன் நான்
எப்படி சிவாஜியாக முடியும் ?

வாணி ஸ்ரீ !
நீ மறுப்பாய் என்று தெரிந்தும்
ஒரு முறை
உன்னை பார்க்க வேண்டும்
என்று என் மனம் விரும்புகிறது !

நீ என்னை மீண்டும் பார்த்தால்
அடையாளம் தெரிவதற்காகவே
நான் மார்க்கண்டேயனாக
 காத்திருக்கிறேன் !

LinkWithin

Related Posts with Thumbnails