வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label World Movie. Show all posts
Showing posts with label World Movie. Show all posts

Wednesday, June 20, 2018

Tanna ( 2015 )

Tanna ( 2015 - Language : Nauvhal)

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பழங்குடியினர் மக்கள் பின்னனி கொண்டப் படம். 

படம் முழுக்க ஆண்களும், பெண்களும் அரையாடையில் வருவதால், உங்களால் ரசிக்க முடியாமல் போகலாம். முழுப் படமும் உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். ஒவ்வொருவரின் முகமும் உங்களுக்கு அருவருப்பாக தோன்றலாம். ஆனால், இறுதிக்காட்சியில் நமது நெற்றிப்பொட்டில் அறைந்தது போல் இருக்கும். 

அப்படியென்ன பெரியக் கதை... 

பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பேர் காதலிக்கிறார்கள். எதிரி குழுவோடு சமரசரசப் பேச்சுவார்த்தையில் நாயகன் காதலிக்கும் பெண்ணை எதிரி குழுவில் ஒருவனுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதிக்கிறார்கள். காதலர்கள் இருவரும் காட்டைவிட்டு ஓடிப்போகிறார்கள். நீண்ட நாள் அவர்களால் காட்டை விட்டு இருக்க முடியவில்லை. தங்கள் உறவுகளை பார்க்க மீண்டும் காட்டுக்குள் வருகிறார்கள். எதிர் குழுவினர்கள் தங்களை விடமாட்டார்கள் என்பதை உணர்ந்த காதலர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். 



இது என்ன பெரிய விஷயம். பல தமிழ் படங்களில் வந்த கதைத்தானே என்று நினைக்கலாம். 

இறுதி காட்சியில், பழங்குடியில் தலைவர் “இனி நமது குழுவில் உயிர் பிரியாமல் இருக்க காதல் திருமணத்தை அங்கிகரிக்கப்படும்” என்கிறார். 

மீண்டும், இது ஒரு பெரிய விஷயமா என்று கேட்பீர்கள்.

1978 ஆண்டில் அந்த குழுவில் காதல் திருமணத்திற்கு அங்கிகாரம் அளிக்கப்பட்டதாக எழுத்துகள் போகும். 

எந்த நாகரிகம் இல்லாமல், தொழிற்நுட்ப வளர்ச்சிப் பற்றி தெரியாதவர்கள், ஆடை என்றால் என்னவென்று தெரியாதவர்கள்… இப்படி என்ன வேண்டுமானாலும் சொல்லக் கூடிய பழங்குடியினர்கள் மக்களில் இருவர் காதலுக்காக தற்கொலை செய்துகொள்ளும் போது தங்கள் குழுவில் மாற்றம் கொண்டு வருகிறார்கள். 

யோவ் இதிலென்ன பெரிய விஷயம் ? 

நீங்கள் கௌரவ கொலை செய்வதில் எந்த மாற்றம் இல்லையே !! அவ்வளவு தான் விஷயம். 

படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் என்னுள் உருவான கேள்வி தான் இந்தப் படம் ஏற்படுத்திய பாதிப்பு. மற்றப்படி படத்தை குறித்து பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. நீங்கள் இந்தப்படத்தை தவிர்க்கலாம்.

Thursday, July 6, 2017

Sairat (2016 – Marathi )

ஏறக்குறைய பேஸ்புக்கில் இருக்கும் அனைத்து சினிமா பிரியர்களுமே இந்தப்படத்தை குறித்து எழுதிவிட்டார்கள். ( என்னுடைய பதிவு எத்தனையாவது பதிவு என்று தெரியவில்லை. ) 

படத்தின் பாதிப்பிலிருந்து மீள வேண்டும் என்றால் இதைக் குறித்து பகிர்ந்துகொண்டால் மட்டுமே மீள முடியும். அப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்தப்படம். 

முதல் பாதி முழுக்க சாதாரண கல்லூரி காதல் படம் போல் நகர்கிறது. அவர்களின் காதல் பெற்றோர்களுக்கு தெரிய வர, வழக்கமான காதலர்கள் ஊரைவிட்டு ஓடிப்போகிறார்கள். ஆந்திராவில் ரோட்டுக்கடை அம்மாவிடம் அடைக்களமாகிறார்கள். அதன்பின் அவர்கள் வாழும் வாழ்க்கையும், இறுதி முடிவும் அனைவரையும் இந்தப்படம் பேச வைத்திருக்கிறது. 



ஜாலியான கமர்ஷியல் படமாக தொடங்கி, கொஞ்சம் எதார்த்தப்படமாக நகர்ந்து, முகத்தில் அறையும் அரசியல் படத்தின் முடிவாக முடிகிறது. எல்லாத்தரப்பினருக்கு திருப்தி தரும்படியான ஒரு காதல் காவியமாக திரைக்கதை அமைத்திருப்பதால் இந்தப்படம் வெற்றிப்பெற்றிருக்கிறது என்று சொல்ல வேண்டும். 

ஒட்டுமொத்தப்படத்தை தூக்கி நிறுத்துவது படத்தின் நாயகி தான். பொதுவாக, காதல் கதையென்றால் ஆண் பாத்திரம் முன்னிருத்தப்படும். காதலி அழும்போது ஆறுதல் சொல்லும் வீர ஆண்மகனைத் தான் சினிமா காட்டியிருக்கிறது. ’சைரட்’ படத்தில் காதலனைக் காப்பாற்றும் வீரமகளாக காட்டியிருக்கிறார்கள். 

முதல் பாதியில் தனது காதலை நாயகனுக்கு தெரியப்படுத்துவதும், அண்ணனின் புல்லட் ஓட்டுவதும், காதலனை தாக்கும் அடியாட்களிடம் இருந்து காப்பாற்றுவதும், காவல் நிலையத்தில் ‘நான் தான் அவனை கடத்தினேன்’ என்று கத்தும்போதும் காதலில் பெண்ணுக்கு இவ்வளவு துணிச்சல் இருக்குமா என்று வியக்கும் அளவிற்கு இருக்கிறது. கதைப்படி அதிகார வர்க்க சாதியில் பிறந்தப் பெண்ணாக காட்டப்படுவத்தால் தைரியமானப் பெண் என்று நினைத்தால், பிற்பாதியில் காதல் கணவனின் குணமாற்றத்தில் தடுமாறும் சராசரிப் பெண்ணாகவும் நடித்திருக்கிறார். நல்ல நிலைமைக்கு வரும் போது கணவனை தனக்கு பின் இருக்கையில் அமர வைத்து வண்டி ஓட்டும்போது குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வந்தப் பெண்ணாகவும் காட்டுகிறார். (இவர் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கக்கூடாது என்பது என்பது என் ஆவா !!) 


ஏதார்த்த இளைஞனாகவும், பிறகு சந்தேகப்படும் கணவனாகவும் நாயகன். தமிழ் சினிமாவின் நாயகிப் போல் காதலியின் காதல் பார்வையில் வேட்கப்பட்டு அதிகம் பேசாமல் இருக்கும் பாத்திரம். 

முதல் பாதி முழுக்க காதல், மோதல், செண்டிமெண்ட். இரண்டாம் பாதி முழுக்க வீட்டை விட்டு ஓடிவந்தால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று புத்தி சொல்கிறது. பல பிரச்சனையில் இருந்து மீண்டு சந்தோஷமாக வாழும் வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்படும் முடிவு… நமக்கு தெரிந்த அரசியலாக மாறுகிறது. 

கமர்ஷியல் படம் போல் தான் இருந்தாலும், சில காட்சியில் நடந்துக் கொண்டிருக்கும் அரசியல் முகத்தை கிழிக்கிறார் இயக்குனர். பூங்காவில் காதலர்களை தண்டிப்பதாக இருக்கும், இறுதிக்காட்சியும் ஒரு அரசியல் படத்திற்கான எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஓடி வந்த காதலர்கள் சமூகத்தில் என்ன பிரச்சனை சந்திப்பார்கள், அவர்களது குடும்பம் எப்படி பாதிக்கப்படும் என்பதையும் இந்தப் படம் காட்டுகிறது. 

சைரட் 100 கோடிக்கு மேல் வசூலான முதல் மராத்திப் படம். கன்னடத்திலும் ரீ-மேக்கில் இதில் நடித்த நாயகி தான் கன்னடத்திலும் நாயகியாக நடித்திருக்கிறார். ஹிந்தி ரீ-மேக் உரிமையை கரன் ஜோஹர் வாங்கியிருக்கிறார். 

உண்மையில் வேற்றுமொழிப் படத்தை பார்க்கிறோம் என்ற உணர்வே வராதப்படம். தமிழ் நாட்டில் நடக்கக்கூடிய ஒரு சம்பவமாக தான் இந்தப்படம் இருக்கிறது. தமிழ்நாட்டில் அரசியலையும் பேசுகிறது. இதேக் கதையில் பல தமிழ் படம் வேறு வேறுவிதமாக வந்திருந்தாலும், இந்தப் படம் ஏற்படுத்திய பாதிப்பு எதுவும் ஏற்படுத்தில்லை. 

அவசியம் பார்க்க வேண்டியப்படம்.

Tuesday, March 21, 2017

La La Land (2016) - Oscar Award Winning Movie

ஆங்கிலத்தில் பார்த்த தமிழ் படம். 

 “இதுக்காடா இவ்வளவு ஆஸ்கர் விருது கொடுத்தாங்க” என்று தோன்றியது என்று சொல்லலாம். இதுப் போன்ற படங்கள் தமிழில் நூறுக்கு மேல் வந்திருக்கிறது. 



க்ளைமாக்ஸ் காட்சியில் நாயகி இப்படியெல்லாம் நடந்திருந்தால் என்று கற்பனை செய்து பார்க்கும் போது அவருக்குள் இருக்கும் காதலை உணர முடிந்தது. அதை தவிர்த்து இந்தப்படத்தில் பெரிதாக என்னை கவரவில்லை.

தமிழ் படங்களுக்கு இணையாக ஐந்து பாடல்கள் வேறு இருக்கிறது. பாடல்களை விட நாயகன், நாயகி நடனம் நன்றாக இருந்தது. 

Living together காதல் கதை என்றால் “No Strings Attached” படத்தின் அளவுக்கு கூட இல்லை. இரண்டு கலைஞர்களுக்கான காதல் கதை என்று எடுத்துகொண்டால் "The Artist" படத்தில் பாதிக் கூட இல்லை. 

La La Land ஒ.கே என்று சொல்லும் அளவுக்கான படம். ஆஸ்கருக்கான படம் இல்லை. 

La La Land வை ஒப்பிட்டால் எனக்கு ’வின்னை தாண்டி வருவாயா’ படம் மிகவும் பிடித்திருந்தது. வாழ்க கௌதம் மேனன் !!

Monday, November 21, 2016

உலக சினிமா : Pelé: Birth of a Legend (2016)

ஒரு மகன் தந்தைக்கு கொடுக்கும் உண்மையான வலி என்ன ? 

தான் தோற்றுப்போன கனவை மகன் நினைவுப்படுத்துவது. 

அதேப் போல், மகன் தந்தைக்கு கொடுக்கும் மிகப் பெரிய சந்தோஷம் என்ன ?

 தந்தை தோற்றுப்போன கனவை மகன் வெற்றிப் பெற்றுக்காட்டுவது. 

*




Pelé: Birth of a Legend கடைசி இருபது நிமிடங்கள் Peleவின் தந்தை இடத்தில் பார்த்தால் என்னவோ, கண்ணில் நீர் தழும்பப் படத்தை பார்த்தேன். Pelé என்ற தனி மனிதனின் வாழ்க்கை வரலாறோ, ஒரு விளையாடு வீரனைப் பற்றிய கதையோ இல்லை. 

1950ல் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ‘Ginga’ என்ற ஸ்டைலில் தான் பிரேசில் தோற்றதாக பரவலாக நம்பப்பட்டது. 1958ல் இறுதிப் போட்டியின் ஸ்விடன் பயிற்சியாளர் பிரேசில் விளையாட்டு வீரர்களில் உடலில் இருக்கும் ஒவ்வொரு குறைப்பாடுகளை சொல்கிறார். பிரேசில் வீரர்கள் மனமுடைந்து போகிறார்கள். ஸ்விடன் நாட்டில் ஸ்விடனை வெற்றிக்கொள்வது என்பது இயலாத காரியம் என்று நினைக்கிறார்கள். 

17வயதான Pelé அவர்களை உத்வேகப்படுத்துகிறான். அவர்களுடைய இயல்பான விளையாட்டை நினைவுப்படுத்துகிறான். பிரேசிலின் பயிற்சியாளரும் ‘Ginga’ முறை தான் ஸ்விடனை வெற்றிக்கொள்ள உதவும் என்று நம்புகிறார். இறுதிப்போட்டில் பிரேசில் வரலாறுக்காணாத 5-2 என்று வெற்றிப் பெறுகிறது. 

அதுவரை யாரும் மதிக்காத Ginga’ ஸ்டைலை கால்பந்தின் மிக அழகான ஸ்டைல் என்று வர்ணிக்கப்படுகிறது. கால்பந்து விளையாட்டில் மிகப் முக்கியமான ஸ்டைலாகவும் கருதப்படுகிறது. 


படம் முடியும் Pelé என்கிற Edson Arantes do Nascimento வரின் சாதனையை காண்பிக்கப்படுகிறது. இதுவரை 1283 கோல் அடித்திருக்கிறார். மூன்று முறை பிரேசில் உலகக்கோப்பை வெற்றி பெற உதவியிருக்கிறார். இறுதியாக சொல்லப்படும் சாதனையானாலும் முறியடிக்க முடியாத சாதனை ஒன்று குறிப்பிடப்படுகிறது. அது ஒரே ஆட்டத்தில் ஐந்து கோல் அடித்த ஒரே சர்வதேச வீரர் Pelé மட்டும் தான். இந்தச் சாதனையை ஒரு க்ளப் கால்பந்து போட்டியில் ஒருவர் ஐந்து கோல் அடித்து சாதனை செய்திருக்கிறாரான். அவர் Pelé வின் தந்தை Dondinho !!! 

பிரேசில் நாடே Peléவின் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. மகனின் வெற்றியில் Dondinho பேசமுடியாமல் வாயடைத்து கண்ணீர்ப்பட நிற்கும் காட்சி ஒரு தந்தையின் வெற்றியை காட்டுகிறது. படம் தொடக்கத்தில் இவர் கால்பந்தின் சச்சின் டெண்டுல்கர் என்று நினைத்தேன். படம் முடியும் போது பிரேசில் கால்பந்து உலகத்தின் கடவுளாக தெரிந்தார். 


படத்தின் பின்னனி இசை நமது ஏ.ஆர்.ரகுமான். இசை தான் வாழ்க்கை என்று இருக்கும் ஏ.ஆர்.ரகுமானுக்கு Pelé பற்றியோ, கால்பந்து பற்றியோ எதுவும் தெரியாது. அவருக்கு தெரிந்தது பிரேசிலியன் இசை மட்டுமே !!! 

Pelé படத்திற்காக இசையமைக்க ஏ.ஆர்.ரகுமான் கேட்டப்போது Peléவை பற்றி கூகுள் அடித்து தேடியிருக்கிறார். Peléவின் சாதனைக்கு Ginga ஸ்டைல் மிக முக்கியக் காரணம் என்று அறிந்துக்கொண்டார்.

வெஸ்டன் கலந்த பிரேசிலியன் இசையை பின்னனி கொடுத்ததோடு இல்லாமல் “Ginga” என்ற promo song யை உருவாக்கினார். Pelé படத்தின் திரைக்கதையில் இந்தப்பாடல் இல்லை. “Ginga” முறையை பயன்படுத்தி தான் Pelé வெற்றிப்பெற்றிருக்கிறார். அதனால், இந்தப்பாடல் அவசியம் என்று ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து அதற்கான புரோமோ பாடலில் பாடியும், தோன்றியும் இருக்கிறார். 


** 

Pelé: Birth of a Legend ஒரு தனி மனிதனின் சாதனைப் படம் மட்டுமல்ல… ஒரு தந்தையின் கனவு வெற்றியைப் பற்றியப் படம். கால்பந்து என்ற விளையாட்டை பிரேசில் மக்கள் மனதில் விதைத்தவனின் படம். #worldmovie #உலக_சினிமா

Friday, May 13, 2016

உலக சினிமா : Coastal Guard

தேசப்பற்று என்பது தானாக விரும்பி வர வேண்டியது. உணர்வுப்பூர்வமாக உணர்ந்து புரிந்துக் கொள்ள வேண்டியவை. அதேப் போல், தேச சேவை தானாக விரும்பி செய்ய வேண்டிய ஒன்று. அதற்கான மனநிலையை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும், உடலை தயார்ப்படுத்தி கொள்ள வேண்டும். கற்பனைகளும், வார்த்தைகளும் தேசபக்தியை ஊட்டிவிட்டு பக்குவற்றவர்களை தேவைக்கு அதிகமான பயிற்சியெல்லாம் அளித்தால் அவர்களின் மனநிலை எப்படியிருக்கும் என்பதற்கு “Coastal Guard” மிக சிறந்த உதாரணம். 

தென் கொரியா, வட கொரியாவின் எல்லை கடலோர பகுதியாக Saemangeum.

அந்த கடலோரப்பகுதியில், மீன் பிடிப்பவனாக ச்யோல் கு இருக்கிறான். அவனுக்கு மீ யோங் என்ற தங்கை உண்டு. அவள் கில் என்பவனை காதலிக்கிறாள். எல்லைப் பகுதியில் இருக்கும் இராணுவ வீரர்களுக்கு எதிரான விமர்சனம் இருப்பது போல் அந்த பகுதியில் இருக்கும் இராணுவ வீரர்கள் மீது இருக்கிறது. அவர்களால் தங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்பது அந்தப் பகுதி பொது மக்களின் கருத்து. 

கடலோர எல்லை பாதுகாப்பு படை வீரர்களில் ஒருவனாக காங் ஹாங் இருக்கிறான். வட கொரியா உளவாளியை எப்படியாவது பிடிப்பது தான் அவனுடைய வாழ்நாள் லட்சியம். சக வீரர்கள் இந்த பகுதியில் எந்த உளவாளியும் ஊடுரூவதில்லை என்று சொல்லியும் அவன் ஏற்பதாக இல்லை.

யுத்த சாயத்துடன் யுத்திற்காக தன்னை தயார் நிலையில் வைத்துக் கொண்டு கடலோர பகுதியை காவல் காக்கிறான். 

ஒரு முறை, காங் ஹாங் தனது நண்பனோடு செல்லும் போது அவனுக்கும் ச்யோல் கு என்ற மீனவனுக்கும், வாக்குவாதம் முற்றுகிறது. அப்போது, ச்யோல் கு “எங்கள் வரி பணத்தை நீங்கள் வீணடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். இங்கு உளவாளிகளே கிடையாது. உங்களிடம் இருப்பது வெத்து தூப்பாக்கி” என்கிறான். 

கோபத்தில், காங் ஹாங் “நான் உங்களை சுட நீங்கள் உளவாளியாக இருக்க வேண்டிய அவசியமில்லை” என்கிறான். ஒரு கட்டத்தில், இருவரும் அடித்துக் கொள்ளும் வரை செல்கிறார்கள். பிறகு, அந்த பகுதியில் இருப்பவர்கள் அவர்களில் சண்டையை தடுக்கிறார்கள். 

காங் ஹாங் எப்படியாவது ஒரு உளவாளியை பிடித்துவிட வேண்டும் என்று எண்ணம் வலுப்பெறுகிறது. 



இதற்கிடையில், ச்யோல் கு கில்லிடம் குடிப் போதையில் இராணுவ எல்லைக்குள் சென்று வந்தால் தனது சகோதரி உனக்கு தான் என்று கூறுகிறான். போதையில் ச்யோல் உறங்கிய பிறகு, மீ யோங் கில்லை அழைத்துக் கொண்டு இராணுவ எல்லைக்குள் நுழைகிறாள். கில் செல்ல தயங்கியும், அவள் மீது கொண்ட காதலால் செல்கிறான். அங்கு இருவரும் கலவியில் ஈடுப்படுகிறார்கள். 

காங் ஹாங் வீரத்தை நிரூப்பிக்கும் வகையில் அந்த கடற்கரையில் மனித நடமாடும் சத்தம் கேட்கிறது. யாரோ எல்லைக்குள் புகுந்துவிட்டனர் என்று தனது தூப்பாக்கியை தயார்ப்படுத்துகிறான். தூரத்தில் தெரியும் உருவத்தை குறிப்பார்த்து சூடுகிறான். அப்போது, ஒரு பெண் கத்தும் குரல் கேட்கிறது. தூப்பாக்கி, பெண் குரல் என்று அந்த எல்லைப்பகுதியில் இருப்பவர்கள் அனைவரும் தூக்கத்தில் இருந்து விழிக்கிறார்கள். 

இறந்த சடலத்தில் அருகே மீ யோங் அழுது கொண்டிருப்பதை ஹாங் பார்க்கிறான். அவர்கள் கலவி ஈடுப்பட்டிருக்கும் போது ஏற்ப்பட்ட சத்தத்தை தவறாக புரிந்துக் கொண்டு கில்லை சுட்டிருக்கிறான். தான் செய்த தவறை நினைத்து வருந்துகிறான். குற்றவுணர்வில் தவிக்கிறான். 

அடுத்த நாள், இராணுவ முகாம்மில் விசாரணை நடக்கிறது. அந்த பகுதி மக்கள் ஹாங்யை அடிக்கின்றனர். ஒரு கட்டத்தில் இராணுவத்தினர் தூப்பாக்கி காட்டி அவர்களை தங்கள் முகாமை விட்டு வெளியே துறத்துகிறார்கள். தனது கடமையை செய்ததற்காக ஹாங்க்கு ஏழு நாள் விடுமுறை கொடுக்கப்படுகிறது. அந்த பகுதி மக்களால் ஏற்படுத்தப்பட்ட காயத்தால் வழியும் இரத்ததை பார்த்து கொண்டு செல்கிறான். 

குற்றவுணர்வில் அவனால் முன்பு போல் இயல்பாக இருக்க முடியவில்லை. ஊருக்கு செல்லும் வழியில் ஒரு குழந்தையின் தூப்பாக்கியை உடைக்கிறான். தன் நண்பர்கள் மீது கோபப்படுகிறான். காதலியிடம் அன்பாக பேச மறுக்கிறான். அதனால் காதலியை விட்டு பிரிக்கிறான். 

மன உலைச்சலில் ஹாங் விடுமுறை முடிகிறது. எல்லைப்பகுதிக்கு வேலைக்கு வரும் போது ச்யோல் குவால் தாக்கப்படுகிறான். மீ யோங் தனது மனநிலை இழந்து பைத்தியமாக இருப்பதை பார்த்து, மேலும் குற்றவுணர்வில் தவிக்கிறான். 

தன் மீது இருக்கும் கோபத்தை தனது சக இராணுவ வீரர்கள் மீது காட்டுகிறான். வெறித்தனமாக அடிக்கிறான். இரவு நேரத்தில் தூப்பாக்கியோடு போது மக்கள் இருக்கும் பகுதிக்கு செல்ல முயற்சிக்கும் போது, மற்ற இராணுவ வீரர்கள் அவனை தடுக்க, தனது தூப்பாக்கியை வானத்தை நோக்கி சுடுகிறான். 

முரட்டு தனமாக நடந்துக் கொள்ளும் ஹாங் இனி இராணுவ வேலைக்கு தகுதியற்றவன் என்று சான்றிதழ் வழங்கி அவனை வேலையை விட்டு அனுப்புகிறார்கள். புத்தி பேதலித்த மீ யோங் அடிக்கடி இராணுவ எல்லைக்குள் நுழைகிறாள். அவள் ஒவ்வொரு முறை இராணுவ முகாமுக்குள் நுழையும் போது, ஒரு இராணுவ வீரனால் கற்பழிக்கப்படுகிறாள். தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் அவள் விளையாட்டு தனமாக இருக்கிறாள். 

ஒரு கட்டத்தில், மீ யோங் கற்பமாகிறாள். இந்த உண்மையறிந்த அவளது ச்யோல் கு இராணுவ முகாமுக்கு கோபமாக செல்கிறான். அங்கிருக்கும் கேப்டன் உதவியோடு தன் தங்கையோடு தவறாக நடந்து கொண்டிருப்பவர்களுக்கு இராணுவ தண்டனை வாங்கி கொடுக்கிறான். ஆனால், அவர்களுக்கு கொடுக்கும் தண்டனையால் பிறக்க போகும் குழந்தைக்கு என்ன பயனுமில்லை என்பதை சொல்கிறான். அதற்கு தான் ஒரு வழி செய்கிறேன் என்று கேப்டன் உறுதியளிக்கிறான். 

அன்றிரவு, மீ யோங் இராணுவ மருத்துவ முகாமுக்கு இழுத்து வரப்பட்டு கருக்கழைப்பு செய்கிறார்கள். ஹாங் தடுக்க நினைத்தும் முடியவில்லை. செயலற்றவனாக இருப்பதை தன் மீது கோபப்படுகிறான். 

கருகழைக்கப்பட்ட மீ யோங் மேலும் வெறிப்பிடித்தவள் போல் செயல்படுகிறாள். ச்யோல் கு வளர்க்கும் மீன்களை உயிருடன் கடித்து உண்கிறாள். தன் தங்கையில் நிலைமைக்கு காரணமாக இராணுவ வீரர்களை கொல்ல வேண்டும் என்று ச்யோல் கு தாக்க முயற்சிக்க இராணுவ வீரர்கள் அவனை கடுமையாக தாக்குகிறார்கள். அன்றிரவு ஒவ்வொரு இராணுவ வீரனும் மர்மமான முறையில் கொல்லப்பட்டு வருகிறார்கள். 

எதிரிகள் ஊடுரூவல் இருக்கிறது. உளவாளி அல்லது எதிரிகள் கடல் எல்லைப்பகுதிக்குள் நுழைந்துவிட்டார்கள் என்று பாதுகாப்பு பலப்படுத்துகிறார்கள். பகலில் கடுமையான பயிற்சி மேற்கொள்கிறார்கள். ஆனால், அப்படியும் அன்று இரவு இன்னொரு இராணுவ வீரன் இறக்கிறான். அப்போது அவர்களை தாக்குவது ஹாங் என்று தெரிகிறது. 

காட்சி மாறுகிறது. மக்கள் நடமாட்டம் கொண்ட பகுதியில் இராணுவ உடையுடன் ராணுவ வீரர்கள் ஓய்வு நேரத்தில் பாடும் பாடலல் ஒன்றை காங் ஹாங் பாடிக்கொண்டிருக்கிறான். பாடலைப் பாடி முடித்துவிட்டு, இராணுவ பயிற்சி செய்கிறான். மக்கள் வேடிக்கை பார்ப்பதற்காக கூடுகிறார்கள். அப்போது, தனது துப்பாக்கியில் இருக்கும் கத்தியால் ஒருவனை தாக்கியவுடன், குடியிருந்த மக்கள் பிதியடைகிறார்கள். அவனைப் போலீஸ் தூப்பாக்கியோடு சுற்றி வளைக்கிறது. கேமரா, காங் ஹாங்கின் முகத்தை க்ளோஸப்பில் காட்ட, துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கிறது. 

அடுத்து, ராணுவ வீரர்கள் அனைவரும் சந்தோஷமாக வாலிபால் விளையாடும் காட்சியின் பின்னணியில், இந்தப் பாடல் பாட, படம் முடிகிறது.

கிம் கி டுக்கின் மிக நேர்த்தியான படங்களில் இதுவும் ஒன்று. துண்டான இரண்டு நாடுகளில் எல்லை பகுதி. தங்கள் நாட்டை காப்பாற்ற தென் கொரியாவில் கட்டாய இராணுவம் கொண்டு வரப்படுகிறது. உளவாளி, எதிரி ஊடுரூவல் இல்லாத போதும் போருக்கான பயம் இராணுவத்திற்காக செலவு செய்ய வேண்டியதாக இருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பல இளைஞர்கள் தங்கள் வாழ்க்கை தொலைத்து கடுமையான பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. தங்கள் இயல்பு தன்மையில் இருந்து மாறவும் முடியாமல், மாற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளும் போது மன பிழவு ஏற்படுகிறது. 

அதேப் போல், எல்லைப் பகுதியில் வாழும் மக்கள் இராணுவ வீரர்கள் எப்போது தூப்பாக்கியோடு நடமாடி அச்சத்தை ஏற்படுத்துவதால் மக்களின் மனநிலை பாதிக்கப்படுகிறது. எந்த நேரத்தில் அவர்கள் என்ன செய்வார்களோ எண்ணம் பொது மக்கள் மனதில் இருந்துக் கொண்டே இருக்கும். ஜனநாயகப்படி முறையான கேள்வியோ, அதற்கான பதிலோ அவர்களிடம் கேட்டு பெற முடியாது என்ற அச்சம் அவர்களிடம் ஒட்டிக் கொண்டே இருக்கும். 

 இந்தப்படத்தில் கிம் கி டுக் நேரடியாக தனது நாட்டை விமர்சனம் செய்கிறார். தென் கோரியாவில் இந்த படம் அதிகம் கவனம் பெறவில்லை. ஆனால், உலக அளவில் பல திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படம்.  

Friday, April 22, 2016

உலக சினிமா : Birdcage Inn

உங்கள் வீட்டின் எதிரே ஒரு விபச்சாரி இருக்கிறாள். தினமும் அவளோடு தங்குவதற்கு ஆண்கள் வந்து போகிறார்கள். சில சமயம் எதிர் வீட்டில் இருக்கும் கூச்சல் சத்தம் உங்கள் வீடு வரை கேக்கிறது. அப்போது உங்களுடைய மனநிலை என்ன ? 

நான் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுப்பேன் என்று கூறி நல்லவர் போல் நடிக்கலாம். ஆனால், உங்கள் மனதில் அவளோடு ஒரு இரவு தங்க வேண்டும் என்று தான் எதிர்பார்க்கும். அதற்கான விலையை அவளிடம் பேசத் தோன்றும். அதே சமயம் உங்கள் வீட்டு பெண்களுக்கு அந்த விஷயம் தெரியக் கூடாது என்ற அச்சமும் இருக்கும். 

இது ஆண்களுக்கான மனநிலை. மாற்ற முடியாது. ஒரு பெண் தன் வீட்டு எதிரில் விபச்சாரி தங்கியிருப்பதை எப்படி ஏற்றுக் கொள்வாள் ? தன் வீட்டின் இருக்கும் ஆண்களை அவளிடத்தில் காப்பாற்ற நினைப்பாள். அவளை அங்கிருந்து துரத்திவிடதான் நினைப்பாள். ஆனால், அவளால் அதிக ஆதாயம் இருக்கும் போது அவளை ஒரு பெண்ணால் எப்படி ஒதுக்கிவிட முடியும். வெளியே சிரித்து நடித்து, உள்ளுக்குள் கோபத்தை வளர்த்துக் கொள்வாள்.



விபச்சாரி எதிர் வீட்டில் இருக்கும் ஆண் – பெண் மனநிலையை கடந்து மூன்றாவது முக்கியமான ஒருவரின் மனநிலை இருக்கிறது. அந்த விபச்சாரியின் மனநிலை. இரவில் பணத்துக்காக ஒருவரோடு இருந்து, மறுநாள் மற்றவர்கள் போல் இயல்பான வாழ்க்கை வாழலாம் என்று நினைக்கும் போது, மற்றவர்கள் அவளை பார்க்கும் பார்வை எப்படி இருக்கும் ? பகலாக இருந்தாலும் இரவில் செய்யும் வேலையை தான் செய்ய வேண்டும் என்ற சுற்றியிருக்கும் பார்வைகள் நினைக்கும். தன்னுடைய செயல்பாடு நியாயம் சொல்ல முடியாமல், அவர்களின் பார்வையை கடந்து செல்ல முடியாமல் அந்த விபச்சாரியின் மனம் தள்ளாடிக் கொண்டு இருக்கும். 

அந்த விபச்சாரி தங்கியிருக்கும் எதிர் வீட்டில் அவள் வயதுடைய ஒரு பெண் அவளை எப்படி பார்ப்பாள் ? அவளோடு எப்படி பழகுவாள் ? அவர்களுக்குள் எப்படிப்பட்ட உறவு இருக்கும் ? இப்படி ஒரு விபச்சாரிக்கும், சாராசரி குடும்ப பெண்ணுக்கும் இருக்கும் உறவை சொல்வது தான் "Birdcage Inn" படத்தின் கதை.  

கடற்கரை சிறு ஹோட்டல் விடுதி. ஒரு பெண், தனது சாமான்களை எடுத்துக்கொண்டு கிளம்பிக்கொண்டிருக்கிறாள். அவள் எதிரில் இன்னொரு பெண் சாமான்களோடு உள்ளே வருகிறாள். அந்தப் புதிய பெண், கிளம்பிக்கொண்டிருக்கும் பெண்ணைப் பார்த்துக் கையசைத்து, வழியனுப்புகிறாள். ஆனால், கிளம்பும் பெண்ணின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. 

புதிதாக வந்த பெண்ணின் பெயர் ஜின்-ஆ. புதிதாக வந்த இடத்தின் அழகை ரசிக்க கடற்கரை பாறை மீது அமர்கிறாள். அப்போது கண்கள் சொருகி கடலில் விழ, ஒருவர் அவளை காப்பாற்றுகிறார். மீண்டும் விடுதிக்கு வரும் ஜின்-ஆ தன் சம வயதில் இருக்கும் ஒரு பெண் அவளை முகம் சுளுத்து பார்க்கிறாள். அவள் “Birdcage Inn” நடத்தும் முதலாளியின் மகள் ஹ்யே – மி. 

அந்த விடுதியை நடத்தும் முதலாளிக்கு உதவாத கணவன். பள்ளிக்கு செல்லும் பதின்ம வயதில் ஹ்யூன்- வூ என்ற மகனும், ஒரு மகளும் இருக்கிறாள். இரவில் தங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவோடு, ஜின்-ஆவும் விருந்தாக இருக்கிறாள். அது தான் ஜின்-ஆவின் தொழில் என்பது நமக்கு அப்போது தான் புரிகிறது. 

அந்த விடுதி மூலம் வரும் வருமானத்தில் அதை நடத்து பெண்மணி தனது மகன், மகளை படிக்க வைக்கிறாள். குடும்பமும் நடத்துகிறாள். ஆனால், அவளின் கணவன் பார்வை வேறு மாதிரியாக இருக்கிறது. அவனால் ஜின்-ஆ கற்பழிக்கப்படுகிறாள். ஆனால், அதை அவளது மனைவியிடம் கூறவில்லை.

பதின்ம வயது மகன் ஹ்யூன்- வூ புகைப்பட போட்டிக்காக அவளை நிர்வாணப்படத்திற்கு போஸ் கொடுக்க வற்பூறுத்திக் கொண்டே இருக்கிறான். ஜின் – ஆ பல முறை மறுத்தும் அவன் கேட்பதாக இல்லை. ஒரு கட்டத்தில் கடற்கரை படகில் அவன் புகைப்படத்திற்கு நிர்வாணமாக போஸ் கொடுக்க, அவளோடு உறவு கொள்ள கட்டாயப்படுத்துகிறான். ஜின் – ஆ மறுத்தும் அவன் விடுவதாக இல்லை. ஒரு கட்டத்தில் அவளும் இணங்கிறாள். 

அந்த வீட்டில் இரண்டு ஆண்கள் இப்படி இருக்க, முதலாளி பெண்மணியோ அவளை பணம் சம்பாதித்துக் கொடுக்கும் கருவியாக பார்க்கிறாள். தனக்கு நட்பாக பழகக்கூடியவள் ஹ்யே – மி என்று நினைத்து, அவளுக்கு பிடித்ததை எல்லாம் வாங்கி கொடுக்கிறாள். ஆனால், ஹ்யே – மி ஜின் – ஆவின் நட்பை ஏற்றுக் கொள்ளவில்லை. 

இதற்கு நடுவில், ஹ்யே – மிவுக்கு ஒரு காதலன் இருப்பது தெரியவருகிறது. ஹ்யே – மி உடல் உறவுக்கு அழைக்க, திருமணத்திற்கு முன் கிடையாது என்று மறுக்கிறாள். ஹ்யே – மி உறவுக்கு மறுத்த சோகத்தில் போதையோடு ஜின் – ஆவுடன் உறவுக்காக செல்கிறான். 

ஜின் - ஆ வாழும் அறையை பார்க்க ஹ்யே – மி உள்ள நுழைகிறான். அங்கு இருக்கும் பொருட்கள், படங்கள் எல்லாம் பார்த்து அவள் மீது இரக்கம் பிறக்கிறது. தன் சம வயதில் இருக்கும் ஒரு பெண் வாழும் வாழ்க்கை நினைத்து அவள் மீது பரிதாபம் பிறக்கிறது. 

அந்த சமயத்தில் ஹ்யூன்- வூ ஜின் – ஆவை எடுத்த நிர்வாணப்படம் பத்திரிகையில் வெளியாகிறது. அவளின் முன்னாள் தரகர் பத்திரிகையாளர் கொடுத்தப் பணத்தில் பங்குக்கேட்கிறான். தனக்கு யாரும் பணம் தரவில்லை என்று ஜின் – ஆ சொல்லியும் அவன் நம்ப மறுகிறான். கோபத்தில் ஜின் – ஆவை அடிக்கவும் செய்கிறான். அந்த சமயத்தில் ஹ்யே – மி அவளை காப்பாற்றுகிறாள். 

அந்த தரகர் திரும்பவும் பணத்திற்காக வருவேன் என்று சொல்லி செல்கிறான். விரக்தியின் உச்சத்தில் இருக்கும் ஜின் – ஆ தற்கொலை செய்து கொள்ள தனது கையை அறுத்துக் கொள்கிறாள். ஆனால், சரியான நேரத்தில் ஹ்யே – மி அவளை காப்பாற்றுகிறாள். அந்த வீட்டில் இது வரை கிடைக்காத அன்பும், கனிவும் ஹ்யே – மி மூலம் கிடைக்கிறது. 

ஹ்யே – மி ஜின் – ஆவை கை கட்டோடு அழைத்து வந்து தனது அறையை காட்டுகிறாள். அப்போது, விடுதிக்கு ஒரு வாடிக்கையாளர் வர ஜின் – ஆ பதிலாக ஹ்யே – மி அந்த வாடிக்கையாளரோடு உறவுக் கொள்கிறாள். 


கதை என்று எடுத்துக் கொண்டால் ஒரே இடத்தில் வாழும் சமய வயதுடைய இரண்டு பெண்கள். ஒரு பெண்ணை வெறும் உடலாக பார்க்கிறார்கள். அதன் மூலம் வரும் ஆதாயத்தை மட்டும் அனுபவிக்கிறார்கள். இன்னொரு பெண்ணிடம் அன்பாக நடத்துகிறார்கள். இந்த இரண்டு பெண்களை நடத்தும் மனிதர்கள் அவர்களுக்குள் ஒரு பாசப்பினைப்பை உருவாக்குகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக தனது காதலனுடன் இழக்க விரும்பாத தனது கண்ணித்தன்மையை, ஜின் – ஆவுக்காக இழக்கிறாள். 

மற்ற இயக்குனர்களை காட்டிலும் கிம் கி டுக் இதில் தான் வேறுபட்டு இருக்கிறார். ஏதார்த்த வாழ்க்கை இப்படி நடக்குமா என்ற கேள்வியோடு அதை நடத்தி காட்டி நம்மை ஏற்றுக் கொள்ள முயற்சி செய்வார். அதை ஏற்றுக்கொண்டால் நாம் கணத்த மனதோடு செல்ல வேண்டும். ஏற்கக்கூடாது என்று நினைத்தால் நாம் கிம் கி டுக்கை முழுவதுமாக புரக்கணிக்க வேண்டும். 

இரண்டு பெண்ணின் வாழ்க்கை காட்டிய கிம் கி டுக்கின் “Birdcage Inn” படைப்பை உங்களால் புரக்கணிக்க முடியாது என்பது தான் உண்மை.

Thursday, January 3, 2013

உலக சினிமா : Khamosh Pani

சாதத் ஹசன் மாண்டோவின் சிறுகதை அடிப்படையாக கொண்ட குறும்படங்களின் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள், "காமோஷ் பாணி" படம் என்னை மேலும் பாதித்தது. குழந்தைகள் பிறப்பது பெற்றோர்களுக்கு சந்தோஷமாக இருக்கலாம். ஆனால், ஒரு நாடு பிறக்கும் போது பல மக்கள் மனதில் வேதனைகளையும், வலியையும் கொடுத்து தான் பிறக்கிறது. அப்படி வலிகளும், வேதனையோடு மட்டுமல்லாமல் கலவரத்தில் பிறந்த தேசம் இந்தியா - பாகிஸ்தான். அதன் பின்னனியில் கதைக்களம் இல்லை என்றாலும், அதன் வேதனையில் உருவாக பெண்ணின் கதை தான் "காமோஷ் பாணி".

1979ல் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் சர்கி கிராமத்தின் நடக்கும் கதை. அம்மா ஆயிஷாவின் அன்பு, புல்லாங்குழல் இசை, சுபைதா என்ற பெண்ணின் காதல், நண்பர்கள் என்று எல்லோரைப் போலவே சந்தோஷமான இளைஞனாக இருக்கிறான் சலீம். ஆனால், அவனது அம்மா ஆயிஷாவுக்கு கிணற்றை நோக்கி நினைவுகள் செல்லும். அமைதியான கிணற்று நீர் இரண்டு நாடு பிரிந்ததற்கு சாட்சியாக இருக்கிறது.

சலீம் தனது நண்பனின் தூண்டுதலால் அரசியல் ஆர்வம் கொண்டு, அரசியல் கூட்டத்திற்கு செல்கிறான். அப்போது, அவனது நண்பன் காதல் நம் கலாச்சாரத்திற்கு எதிரானது, அவர்கள் நம்மை மதிக்க மாட்டார்கள் என்கிறான். அரசியல் ஆர்வம் சலீம்மை அம்மாவிடம் பொய் சொல்ல வைக்கிறது. காதலி சுபைதாவை உதாசினப்படுத்த வைக்கிறது.



இதற்கிடையில் இந்தியா – பாகிஸ்தான் அமைதி உடன்படிக்கையில் சீக்கியர்கள் பாகிஸ்தானில் உள்ள புனித தளங்களுக்கு வரலாம் என்று கையெழுத்திடுகிறார்கள். இதனால், இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஒரு சீக்கிய குழுக்கள் வருகிறது. சர்கி கிராமத்தில் தனது சகோதரியை தேடி வருகிறார் ஒரு சீக்கியர். அவர் ஆயிஷாவை பார்த்து தனது சகோதரி ‘வீரோ’ என்கிறார். அந்த சமயத்தில் சலீம் வர, வந்த சீக்கியரிடம் ‘இங்கு இஸ்லாம் குடும்பம் மட்டுமே வசிக்கிறது’ என்று சொல்லி கதவை முடுகிறாள். அவளது சீக்கிய சகோதரன் தனது தந்தை சாக கிடப்பதாக சொல்லியும், அவள் மௌனமாக வீட்டுக்குள் செல்கிறாள்.

கண்ணீர் நிரம்ப தனது சீக்கிய ஆடை எடுக்க, மௌனமான கிணற்றை நோக்கி நினைவுகள் செல்கிறது. இந்திய – பாகிஸ்தான் பிரிவினை போது பாகிஸ்தான் கலவரக்காரர்களிடம் தப்பிக்க, தங்கள் கற்பை காப்பாற்றிக் கொள்ள பல பெண்கள் அந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக் கொண்டார்கள். வீரோவின் தந்தையே அவளை கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக் கொள்ள சொல்ல, உயிருக்கு பயந்து அங்கு இருந்து தப்பி ஓடுகிறாள். ஆனால், பாகிஸ்தான் கலவரக்காரர்களால் கற்பழிக்கப்பட்டு, சிறைக்கைதியைப் போல் அடைக்கப்படுகிறாள். பிறகு, ஒருவன் தன் தவறுக்கு மனம் வருந்தி அவளை திருமணம் செய்துக் கொள்ள விருப்பம் தெரிவிக்கிறான். கற்பழிக்கப்பட்டு இஸ்லாமியல்லாத பெண்ணாக இருப்பதைவிட, அவனை ஏற்றுக் கொண்டு திருமணத்துக்கு சம்மதிக்கிறாள். ‘வீரோ’ என்ற பெயரை ‘ஆயிஷா’ என்று மாற்றிக் கொண்டு புது வாழ்க்கை தொடங்குகிறாள்.

தனது அம்மா சீக்கியர் என்று தெரிந்தும் தனது மதவாதத்தில் இருந்து மாறாமல் இருக்கிறான் சலீம். அதுமட்டுமில்லாமல் பிராத்தனைக்கு வந்த சீக்கியர்களை விரட்டி அடிக்கும் கூட்டத்தில் செல்கிறான்.

இந்த உண்மை தனது சகாக்களிடம் சொல்கிறான் சலீம். அவன் நண்பர்கள் அவன் தந்தை ‘பாகிஸ்தானி’ என்பதால் அவனை தவறாக நினைக்கவில்லை. ஆனால், அவன் அம்மா முழுமையாக இஸ்லாமியத்தை ஏற்றுக் கொண்டைதை அறிவிக்க வேண்டும் என்கிறார்கள். இதை சலீம் ஆயிஷாவிடம் சொல்லியும் அவள் மறுக்கிறாள். தன் மகன் மதவாதத்தால் அவளை உதாசினப்படுத்துகிறாள். அவளை சுற்றி இருக்கும் தோழிகளும், நண்பர்களும் உதாசினப்படுத்துகிறார்கள். ஆயிஷாவுக்கு சலீமின் முன்னாள் காதலி சுபைதா மட்டும் ஆதரவாக இருக்கிறாள். ஆயிஷாவால் இஸ்லாத்தை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியாமல் வாழ்ந்ததை தனது சகோதரனிடம் சொல்லி அழுதுகிறாள்.

மகனின் புரக்கனிப்பும், சகோதரனுடன் செல்ல முடியாமல் தவிக்கும் ஆயிஷா, பிரிவினையின் போது அஞ்சி ஓடிய கிணற்றில் தற்கொலை செய்துக் கொள்கிறாள். அவனது மகன் சலீம் அவளது பொருட்களை ஆற்றில் போட்டு, செயின்னை மட்டும் தன் முன்னாள் காதலி சுபைதாவுக்கு கொடுத்துவிட்டு செல்கிறான். “வீரோ இறக்க, ஆயிஷாவின் பிணம் மட்டும் இங்கு இருக்கிறது” என்ற சுபைதா குரலில் படம் 2002ல் நகர்கிறது. திருமணமாகாத சுபைதா நடைபாதையில் செல்லும் போது சலீமின் அரசியல் பேச்சை தொலைக்காட்சியில் பார்த்து புன்னகைத்தப்படி செல்கிறாள்.

ஒரு தாயின் மறு ஜென்மம் ஒரு குழந்தையின் பிறப்பில் உருவாகிறது. ஆனால், நாடுகள் பிறப்பதில் மட்டும் ஏன் மனித உயிர்கள், உணர்வுகள் மேல் நடக்கிறது ? பிரிந்து வந்த பிறகு இரண்டு நாடுகளும் நண்பர்களாக இருக்க வேண்டாம், குறைந்த பட்சம் அடுத்தவர்கள் சுதந்திரத்தில் தலையீடாமல் இருந்தாலாவது பல பிரச்சனைகள் தடுக்கப்பட்டிருக்கும். தங்கள் நாட்டின் வளர்ச்சியை விட சகோதர நாட்டில் வீழ்ச்சியை பார்க்கும் அரசியலை யாரால் உருவானது ? எப்படி மாற்றப் போகிறோம் ?

இந்திய - பாகிஸ்தான் பிரிவினையை வரலாறு புத்தகங்கள் நினைவு படுத்தினாலும், அதன் வலி, வேதனையை இது போன்ற படைப்புகள் தான் நமக்கு ஞாபகப்படுத்துகிறது.

Monday, October 8, 2012

உலக சினிமா - ஓர் பார்வை

ஏழைகளுக்காக பணக்காரர்களால் தயாரிக்கப்படும் ஒரே பொருள் ‘சினிமா’. சினிமாவில் மட்டும் தான் ஏழை பணக்காரனை முந்தி செல்கிறான். காட்சிப்படுத்தும் போதாகட்டும், வசனம் எழுதும் போதாகட்டும், பாடல் இசை அமைக்கும் போதாகட்டும் அடித்தட்டு ரசிகர்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்படுகிறது.


 பணக்காரர்களில் ஆதரவு இல்லை என்றாலும் அடித்தட்டு ரசிகர்களின் விசில் சத்தம் போது ஒரு படத்தை வியாபார ரிதியாக வெற்றி பெற வைப்பதற்கு. ஆனால், இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள படங்கள் வியாபாரத்திற்காக எடுக்கப்படவில்லை. தங்கள் நாட்டில் நடந்ததை பதிவு செய்யவும், வரலாறு நிகழ்வுகளை நினைவு கூறவும், தனி மனித உணர்வுகளை கொள்ளப்படுவதையும் எந்த ஒழிவு மறைவும் இன்றி காட்சிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்தாக்கியுள்ளார்கள்.

இதில் வரும் பத்தொன்பது படங்களையும் கண்டிப்பாக மூன்று, நான்கு பக்கத்தில் அடக்கி விடமுடியாது. ஒவ்வொரு படங்களை பற்றி எழுத வேண்டும் என்றால் ஒரு தனி புத்தகமே எழுதலாம். வானத்தில் இருக்கும் நிலவை கண்ணாடியில் பிடித்து நிலவை ரசிக்கும் குழந்தையின் முயற்சி தான் இந்த புத்தகம்.

’கல்வெட்டு பேசுகிறது’ மாத இதழில் ‘உலக சினிமா’ கட்டுரைகளுக்கு தனி இடம் ஒதுக்கி கொடுத்த இதழின் ஆசிரியர் சொர்ணபாரதி அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி சொல்லியாக வேண்டும். தொடர் வந்துக் கொண்டு இருக்கும் போதே புத்தகம் போட சம்மதித்த கௌதம் பதிப்பகத்தார் சந்திரசேகர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

இந்த புத்தகம், உலக சினிமாவுக்கான அறிமுகம் மட்டுமே. உண்மையான அனுபவத்தை படம் பார்த்து உணருங்கள்.

 அன்புடன்,
குகன்

**

விரைவில் வெளிவர இருக்கும் "உலக சினிமா - ஓர் பார்வை" நூலுக்கு, நான் எழுதிய என்னுரை.

Wednesday, August 29, 2012

உலக சினிமா : Declaration of War

சமிபத்தில் பார்த்த இரண்டு பிரென்சு படங்கள் என்னை மிகவும் பாதித்தது. ஒரு படத்தின் இருந்து பாதிப்பு மீண்டு வருவதற்குள் அடுத்த படத்தை பார்த்து தவறு செய்துவிட்டேன். இரண்டு படங்களும் அடுத்த ஒரு வாரத்திற்கு எந்த படங்களும் பார்க்க முடியாமல் என்னையே ஆட்கொண்டு விட்டது.

 உலகத்தில் சிறந்த காதலர்கள் என்று ரோமியோ - ஜூலியட் என்று சொல்வோம். காரணம், காதலித்து காதலுக்காக இறந்ததால். ஒரு வேளை இவர்கள் திருமணம் செய்து வாழ்ந்திருந்தால், இவர்களை உலக காதலர்கள் பட்டியலில் நாம் சேர்த்திருப்போமா ? கண்டிப்பாக சேர்க்கலாம் என்கிறது ‘Declaration of War'.



எட்டு வயது சிறுவனுடன் மருத்துவ அறையில் நுழைகிறாள் ஜூலியட். உள்ளே நுழையும் முன் தனது காதல் கதையின் நினைவுகளை சொல்கிறாள். நண்பர்கள் ஏற்பாடு செய்த விருந்தில் ரோமியோவை பார்க்கிறாள் ஜூலியட். பார்த்த மாத்திரத்தில் இருவரும் காதல் கொள்கிறார்கள். திருமணம் செய்துக் கொள்கிறார்கள். ஷேக்ஸிபியர் வஞ்சத்தால் இறந்த காதலர்கள், மீண்டும் உயிர் கொண்டு வாழ்வது போல் வாழ்கிறார்கள்.

எல்லாம் சுபமாக நடக்க, ஜூலியட்டுக்கு கருத்தரித்து ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறாள். அதுவரை உலக காதலர்களாக இருந்தவர்கள், குழந்தையை பார்த்துக் கொள்வதில் சண்டைப்போடுகிறார்கள். அதுவும், இரவு நேரத்தில் குழந்தை அழும் போது, பசிக்காக அழுகிறது என்று அம்மா சொல்ல, இரவு முழுக்க குழந்தை எப்படி பசிக்காக அழும் என்று அப்பா கேட்கிறார்.

குழந்தையை அழைத்து கொண்டு மருத்துவரிடம் செல்ல, குழந்தையை அழுவதை நிறுத்த வழிகள் சொல்கிறார். ஒரு சமயம், குழந்தை வாந்தி எடுப்பதை பதட்டப்பட்டு ரோமியோ ஜூலியட்டுக்கு அலைப்பேசியில் அழைக்க, வேலை நடுவில் இருக்கும் ஜூலியட்டுக்கு கோபம் வருகிறது. குழந்தை விஷயத்தில் இருவருக்கு சிறு சிறு மன கசப்புகள் வருகிறது.

 சில மாதம் கழித்து, குழந்தையை ப்ளே ஸ்கூல் சேர்க்க, அங்கு “உங்கள் குழந்தை மற்ற குழந்தைகள் போல் இல்லை” என்பதை சொல்கிறார்கள். மருத்துவரிடம் குழந்தையை கொண்டு செல்ல, குழந்தைக்கு மூளையில் புற்றுநோய் இருப்பதாக சொல்கிறார்கள். அந்த மருத்துவர், மூளைக்கு என்று வேறொரு மருத்துவரை அறிமுக செய்து வைக்கிறார். மூன்று வயது நிறம்பாத குழந்தைக்கு, அருவை சிகிச்சை செய்கிறார். ஆனால், புற்றுநோய் முழுமையாக குணமைடையவில்லை. சரியான மருத்துவம், சுத்தம், காற்று எல்லாம் சேர்த்து குழந்தையை பாதுக்காக்க முடியும் என்கிறார் மருத்துவர். ஐந்து ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு தங்கள் மகனை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பது மீதி கதை.

குழந்தையை விட பெற்றோர்கள் வியாதியிடம் அதிகம் போராடுகிறார்கள். குழந்தை புற்றுநோயோடு போராடும் போது கணவன் - மனைவி உறவும் போராட்டத்தில் தள்ளப்படுகிறது. சிகிச்சைக்கு பணம், ஆருதலான வார்த்தைகள், தாம்பத்திய உறவு என்று எதிர்பார்க்கும் சராசரி பாத்திரங்களை காட்சியில் கொண்டு வந்துள்ளார்கள். இருவரும் தங்கள் குழந்தையை நினைத்து கலங்காமல், மன உறுதியுடன் இருப்பது நம்மை கலங்க வைக்கிறது.

மருத்துவமனையில் ரோமியோ, ஜூலியட் உறவினர்கள் அவர்களுக்கு ஆருதலாக இருப்பதும், ஜூலியட் அம்மா நம்பிக்கைக்காக கயிறு தருவதும், ஜூலியட் சகோதரி துணையாக இருப்பது.... துன்ப நேரத்தில் நல்ல உறவுகள் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள். இது போன்ற உறவுகள் இந்தியாவில் மட்டுமே சாத்தியம். வெளிநாட்டில் இல்லை என்ற பொய் பிரச்சாரத்தை உடைத்து எறிகிறது.

மருத்துவர்கள் என்ன தான் வேலை பளுவில் இருந்தாலும், தங்கள் குழந்தை காப்பாற்ற முடியுமா ? குழந்தையின் உடல்நிலை எப்படி இருக்கிறது போன்ற பெற்றோர்களின் கேள்விகள் பெரிய மருத்துவரிடம் கேட்க முடியாமல் சிப்பந்திகள் தடுத்தால் கோபம் வரும். சிப்பந்தியோ, டியூட்டி டாக்டரோ என்ன சொன்னாலும் கேட்க தோன்றாது. இதை அப்படியே இந்த படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.

84வது ஆஸ்கர் விருதுக்காக அந்நிய மொழி பிரிவுக்கு, பிரென்சு மொழியில் இந்த படத்தை தேர்வு செய்து அனுப்பப்பட்டது. இறுதி சுற்றுக்கு இந்த படம் தேர்வாகவில்லை என்றாலும், பார்க்க வேண்டிய படம் என்று என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இரண்டாவதாக பார்த்த பிரென்சு படம், "A Happy Event (Un heureux événement)". நேரம் கிடைத்தால் அடுத்த பதிவில் இந்த படத்தைப் பற்றி எழுதுகிறேன்.


Friday, June 15, 2012

உலக சினிமா - Departures (2008 - ஜப்பான் மொழி)

 எல்லோருக்கும் விரும்பும் வேலை அமைந்து விடுமா ? பிடித்த வேலை அதிகம் பணம் கிடைக்காததால் கிடைத்த வேலை செய்பவர்கள் தான் அதிகம். விரும்பாத மனைவியுடன் வாழ்வுவது போல் தினமும் வேலை செய்ய வேண்டும். கள்ள காதல்ப் போல் நாம் விரும்பிய வேலையை எப்போதாவது செய்து பார்க்கலாம். அதை முழு நேரமாக மாற்றிக் கொள்ள முடியாமல் தவிப்பார்கள். தலை விதியே என்று கிடைத்த வேலை, எப்படி ஒரு மனிதனை மனதை மாற்றுகிறது. அந்த வேலை எப்படி விரும்ப தொடங்குகிறான் என்பதை உணர்வு பூர்வமாக சொல்லும் படம் தான் " Departures".



டைகோ ஒரு செல்லோ கலைஞன். அவனது இசைக் குழு கலைக்கப்பட்டதால் அவனுக்கு வேலை பரிபோகிறது. இரண்டு வருடத்திற்கு முன்பு தான் அவன் அம்மா இறந்தார். அப்பா சிறு வயதில் தங்கள் தேநீர் கடையில் வேலை செய்யும் பெண்ணுடன் ஓடிவிட்டார். அவரின் முகம் கூட டைகோவுக்கு நினைவில் இல்லை. மனைவுடன் தனிக்குடித்தனம் நடத்துபவன். அடுத்த என்ன செய்வதறியாமல் தவிக்கிறான்.

“Assiting Departures" வேலை காலியிருப்பதாக செய்திதாளில் பார்த்து நேர்முக தேர்வுக்கு செல்கிறான். சசாகி என்பவர், "நீ கடுமையாக உழைப்பாயா ?" என்று கேட்கிறார். டைகோ செய்வேன் என்று சொல்ல, அவனுக்கு வேலை கிடைக்கிறது. வேலை கிடைத்த பின்பு தான் தெரிகிறது, இறந்த உடலுக்கு அலங்காரம் செய்து சவப்பெட்டியில் வைத்து, வழியனுப்பி வைக்கும் வேலை என்று. இறந்த கோழியை பார்த்தாலே வாந்தி எடுக்கும் டைகோ, இறந்த உடலோடு எப்படி வேலை செய்ய போகிறோம் என்று அஞ்சுகிறான். தனது மனைவியிடம் உண்மையை சொல்லாமல், நிகழ்ச்சி அமைப்பாளருக்கு உதவியான வேலை என்கிறான்.

முதல் நாளில், பிணங்களுக்கு எப்படி சுத்தம் செய்யப்படுகிறது என்ற விடியோ படத்திற்கு டைகோவை பிணமாக இருக்க சொல்லுகிறான் சசாகி. அடுத்து இறந்து இரண்டு வாரம் கலித்து கண்டு பிடிக்கபட்ட வயதான பெண்ணின் பிரேதத்துக்கு தனது முதலாளி சசாகியுடன் வருகிறான் டைகோ. இரண்டு வார பிரேதத்தை பார்த்ததும் வாந்தி எடுத்து எடுக்கிறான். சசாகி அவனை விடுப்பு எடுத்துக் கொள்ள சொல்கிறார்.

டைகோ தன்னை ஆஸ்வாசப்படுத்திக் கொள்ளும் பொது குளியலறையில் குளித்து ஓய்வு எடுத்துக் கொள்கிறான். அதை, யமஷிட்டா என்ற வயதான பெண்மனி நடத்தி வருகிறாள். அவளது மகன் டைகோவின் பள்ளி நண்பன். ஒரு நாள் அவனது முதலாளி, சசாகி செல்ல முடியாததால் டைகோ சென்று பிரேதத்திற்கு அலங்காரம் செய்து சவப்பெட்டியில் அடைக்கிறான். அங்கு உறவினர்களின் கண்ணீர் அவனை மிகவும் பாதிக்கிறது. தொடர்ந்து பல மரண வீடுகளும், உறவினர்களின் நெகிழ்ச்சியான வார்த்தைகளும் அவன் இந்த வேலை மீது வைத்திருந்த கசப்பு தன்மை மறக்கடிக்கிறது. ஆனால், டைகோ செய்யும் வேலை அவன் மனைவிக்கு தெரிந்து அவனை விட்டு பிரிகிறாள். அவனது பள்ளி நண்பன் அவனிடம் வேறு நல்ல வேலை தேட சொல்கிறான். அவனின் குடும்பத்திடம் பேச கூட அவன் நண்பன் அனுமதிக்கவில்லை. 

நாட்கள் செல்கிறது. டைகோவின் மனைவி திரும்பி வருகிறாள். அவள் கற்பமாக இருப்பதை சொல்கிறாள். அந்த சமயம் போது குளியளறை நடத்தும் யமஷிட்டா இறந்த செய்தி வருகிறது. தன் மனைவியுடம் டைகோ செல்கிறான். அங்கு யமஷிட்டாவுக்கு உயிருடன் தூங்குவது போல அழகாக அலங்காரம் செய்கிறான். இறந்த தன் அம்மாவை டைகோவின் நண்பன் கண் கலங்கி அவனுக்கு நன்றி சொல்கிறான்.

கர்பினியான தன் மனைவியை ஆறங்கரையில் தன் தந்தையுடன் வந்ததை சொல்கிறான். மொழிகள் தெரியாத காலத்தில் கற்களை கொண்டு தான் பேசுவார்கள். மென்மையான கற்கள் கொடுத்தால் சந்தோஷமாக இருப்பதாகவும், கரடுமுரடான கற்கள் கொடுத்தால் கவலையாக இருப்பதாகவும் பொருள். சிறு வயதில் தன் அப்பாவுடன் கற்களை பரிமாரி விளையாடுவதை தன் மனைவியிடம் சொல்கிறான். வருடத்திற்கு ஒரு முறை தனக்கு கல் அனுப்புவதாக சொன்னார். ஆனால், இது வரை அவர் அனுப்பவில்லை. அவன் முகம் எனக்கு நினைவுக்கு வரவில்லை என்கிறான். 

ஒரு நாள் டைகோ வேலைக்கு சென்றதும் தன் அப்பா இறந்த தகவல் தெரிந்துக் கொள்கிறான். முதலில் செல்ல மறுக்கும் டைகோ பிறகு செல்ல சம்மதிக்கிறான். சசாகி தன்னிடம் இருக்கும் ஒரு சவப்பெட்டி எடுத்து செல்ல சொல்கிறான். அங்கு அப்பாவின் உடலை இறுதி காரியம் செய்பவர்கள் அஜாக்கிரதையாக கையாள, டைகோவுக்கு கோபம் வருகிறது.

தன் அப்பாவின் உடலை அவனே தயார் படுத்துவதாக சொல்கிறான். அப்போது தான் தன் அப்பாவின் முகத்தை பார்க்கிறான். தன் அப்பாவின் உடலை சுத்தம் செய்ய கை எடுக்கும் போது, அவர் கையில் மென்மையான கல் இருப்பதை பார்க்கிறான். சிறு வயதில் அப்பாவிடம் விளையாட்டிய வாலிப முகம் நினைவுக்கு வருகிறது. கர்பினியான தனது மனைவியின் வயிற்றில் மென்மையான கல்லை வைக்கிறான்.

விருப்பமில்லாத வேலையை எப்படி ரசித்து செய்ய தொடங்குகிறான் என்பதை டைகோ பாத்திரத்தின் மூலம் காட்டியுக்கிறார் இயக்குனர் யோஜிரோ டகிடா ("Yōjirō Takita "). அந்த பாத்திரம் மனநிலை மாறுவதற்கான காட்சிகள் அமைத்திருப்பது மிகவும் நெஞ்சை தொடுவதாக உள்ளது.


தீண்டப்படாத அல்லது சமூகத்தில் மதிக்கபடாதவர்களாக தான் இன்று வரை வெட்டியான் வேலை செய்பவர்களை பார்த்து வருகிறார்கள். கண்ணீரும், மரணமும் தினமும் பார்த்து வாழ்ந்துக் கொண்டு இருப்பவர்கள் தங்கள் மனதை எப்படி பாதித்திருக்கும் என்பதை ஒரு நாள் நாம் யோசித்திருப்போமா ? அவர்கள் அந்த வேலையை விரும்பி செய்வார்கிறார்களா ? என்று ஒரு முறையாவது நினைத்து பார்த்திருப்போம். ஒரு வேலை நாமும் நமக்குள் இந்த வேலையை விரும்பி செய்கிறோமா என்ற சந்தேகம் இருக்கிறாதா ?

Tuesday, February 28, 2012

உலக சினிமா : The Japanese Wife

இணைய புரட்சி பிறந்த இந்த உலகத்தில் எந்த இடுக்கட்டில் இருக்கும் ஒருவருடன் நாம் தொடர்பு கொள்ள முடிகிறது. நட்பு கொள்ள முடிகிறது. காதல் செய்ய முடிகிறது. இணையம் மூலம் வாசனையை மட்டுமே நம்மால் உணர முடிவதில்லை. விரைவில் அதற்கும் வழி கிடைத்தாலும் வியப்போன்றுமில்லை. ‘இணையதளம்’ என்ற மிடியெட்டர் இருப்பதால் நேரில் பார்க்காமல் பரஸ்பர அன்பை பரிமாறிக் கொள்ள முடிகிறது. ஆனால், இணையம், தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் காதலை, அன்பை பரிமாறிக் கொள்ள உதவியது கடிதங்கள் மட்டும்.



இராணுவத்தில் நாட்டுக்கு வேலை செய்யும் கணவன் தன் மனைவிக்கு முத்தம் அனுப்பியது கடிதத்தில் தான். வெளியூரில் இருக்கும் ஒருவனின் கடிததிற்காக சொந்தபந்தங்கள் காத்திருந்த காலம் ஒன்று இருந்தது என்று சொல்லு அளவிற்கு நம் அறிவியல் வளர்ந்து விட்டது. நாம் அனைவரும் மறந்து விட்ட கடித போக்குவரத்து நினைவுப்படுத்தி அதன் மூலம் மெல்லிய காதலை சொல்லியிருக்கும் படம் " The Japanese Wife ".

ஜப்பானில் இருந்து தபாலில் சட்டர்ஜிக்கு பரிசு வருவதில் இருந்து படம் தொடர்கிறது. பரிசு பொருளை தன் அறையில் நிரப்பி ஜப்பானில் இருக்கும் தன் மனைவி மியகே எழுதிய கடிதத்தை வாசிக்கிறான். ஆசிரியர் பணி செய்யும் மியகே கடிதத்தில் தங்கள் எண்ணங்கள், கருத்துக்கள், இலக்கியம் என்று பரிமாரிக் கொள்கிறார்கள். பதினைந்து வருடங்களாக ஒருவரை ஒருவர் பார்க்கமால் கணவன், மனவியாக வாழ்ந்திருக்கிறார்கள். தங்கள் திருமண ஒப்பந்தத்தையும் கடிதம் மூலமே பரிமாரிக் கொள்கிறார்கள்.

பார்க்காமல் வளர்ந்த சட்டர்ஜியின் காதலுக்கு விதவை பெண் சந்தியா மூலம் சிறு சோதனை வருகிறது. சந்தியாவின் எட்டு வயது மகன் சட்டர்ஜியிடம் தந்தை பாசத்துடன் பழகுவதை சந்தியா பார்க்கிறாள். தன்னையும் அறியாமல் சட்டர்ஜி மீது காதல் கொள்கிறாள். ஆனால், சட்டர்ஜி பார்க்காத தன் மனைவிக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை. புற்று நோயால் பாதிக்கப்பட்ட மியகே தன் பணிக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு சிகிச்சைக்காக செல்கிறாள். மியாகேயின் புற்றுநோய்க்காக குணமாக உள்ளூர் மருத்துவரிடம் விசாக்கிறான் சட்டர்ஜி. நோயாளியை நேரில் பார்க்காமல் எந்த உதவியும் செய்ய முடியாது என்கிறார் மருத்துவர். வீட்டு திரும்பும் வழியில் புயல் மழையில் நனைகிறான் சட்டர்ஜி. கடும் காய்ச்சலில் பாதிக்கபட்ட சட்டர்ஜியை கிராமத்தில் இருந்து கல்கத்தா மருத்துவர்களிடம் அழைத்து சென்றால் குணப்படுத்தலாம் என்கிறார்கள். ஆனால், கடும் புயல், வெள்ளத்தின் காரணமாக கிராமத்தில் இருந்து யாரும் சட்டர்ஜியை அழைத்து செல்ல முன் வரவில்லை. சட்டர்ஜியும் இறக்கிறான்.

இறுதியில், மொட்டைத்தலையுடன் விதவை கோலத்தில் மியகே சட்டர்ஜியின் கிராமத்துக்கு வருகிறாள். சந்தியா மியகேவுக்கு சட்டர்ஜியின் அறையை காட்டுகிறாள். அறை முழுக்க தான் அனுப்பிய பரிசு பொருள் நிறம்பி இருப்பதை பார்ப்பதில் படம் முடிகிறது.


பெங்காலி எழுத்தாளர் குணால் போஸ் எழுதிய ” The Japanese Wife” சிறுகதை தொகுப்பில் இடம் பெற்ற சிறுகதையை திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் அபர்னா சென். எழுத்தாளர் குணால் போஸூம் ஒரு காட்சியில் தோன்றுகிறார். வங்கால இயக்குனர்களில் மிக குறிப்பிட வேண்டிய இயக்குனர் அபர்னா சென். முதல் முறையாக அடுத்தவர் கதைக்கு திரைக்கதை அமைத்து படம் எடுத்திருக்கிறார்.

பார்க்காமல் காதல் படமான ’காதல் கோட்டை’ என்ற தேசிய விருது படத்தை பார்த்த நமக்கு பெரிய பாதிப்பு ஏற்ப்படுத்தாது மிக முக்கிய காரணம். ஆனால், கதாநாயகன் பாத்திரத்தை தூக்கிப்பிடிப்பது போல் ரைமா சென்னை (சந்தியா பாத்திரம்) மணந்துக் கொள்ளாமல் பார்க்காத தன் மனைவிக்கு விஸ்வாசமாக இருக்கிறான். அதேப் போல், நாயகி அப்படி நடந்துக் கொள்கிறாளா என்பதை தெளிவாக காட்டவில்லை.

இந்த படம் நல்ல பொழுதுப் போக்கு படம் இல்லை என்றாலும், ஒரு கவிதை வடிவிலான படம் என்பதற்கு மாற்று கருத்து இல்லை.

குணால் பாசு எழுதிய "The Japanese Wife" சிறுகதை நூலை வாங்க... இங்கே அழுத்தவும்.

The Japanese Wife படத்தின் சி.டியை வாங்க...

Friday, February 3, 2012

உலக சினிமா : Bad Education

உண்மையான கல்வி என்பது என்ன ? அறியாமையை போக்க வேண்டும், சிந்தனையை தூண்ட வேண்டும், அறிவை வளர்க்க வேண்டும், நல்லது கேட்டது தெரிந்துக் கொள்ள வேண்டும். முதல்வராகி மேடையில் அமர்ந்தாலும் படிப்பு சொல்லிக் கொடுத்த ஆசிரியர் வந்தால் தன்னை அறியாமல் எழுந்து நிற்கும் மரியாதை கொடுக்க தோன்றும். அந்த அளவிற்கு, வாழ்க்கையில் நம்முடனே பயனிக்கும் கல்வியை கற்று தரும் ஆசிரியர் மீது நாம் மரியாதை வைத்திருக்கிறோம்.

புனிதமான படிப்பை சொல்லி தரும் ஆசிரியர் கெட்டவராக அமைந்தால் அவனிடம் படிக்கும் மாணவர்களின் கதியை பற்றி சொல்லும் படம் தான் "Bad Education".

1980ல், என்ரிக் என்ற இளம் திரைப்பட இயக்குனர் தனது உதவியாளருடன் அடுத்த படத்திற்கான கதை விவாதித்துக் கொண்டு இருக்கிறார். அப்போது, ஒரு மேடை நடிகன் தன் கதையோடு என்ரிக்கை சந்திக்க வருகிறான். அந்த மேடை நடிகன், "உன்னுடன் படித்த பழைய நண்பன் இங்னசியோ" என்கிறான். என்ரிக் தன் பள்ளி நண்பனை பார்த்ததும் அடையாளம் கண்டுக் கொள்ள முடியவில்லை. காலம் இருவரின் உருவத்தை அப்படி மாற்றியிருக்கிறது. இங்னசியோ, தன்னை நாடக வட்டத்தில் "ஏன்ஜல்" என்று அழைப்பதாக கூறுகிறான். தன் கையில் இருக்கும் "தி விசிட்" என்ற கதையை கொடுத்து இதை அவனின் அடுத்த படத்துக்கு பயன்படுத்தி, தனக்கும் ஒரு பாத்திரம் தர வேண்டும் என்று வேண்டுக்கோள் விடுக்கிறான். அந்த கதை நம் பள்ளி நாட்களில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து எழுதப்பட்ட கதை என்கிறான். என்ரிக் படித்து விட்டு தன் கருத்தையும், முடிவையும் சொல்லுவதாக சொல்கிறான்.



'தி விசிட்' கதை 1977ல் தொடங்குகிறது. இங்னசியோ, கதையில் தன் பெயரை “சாரா” என்று மாற்றி, திருநங்கையாக மாறி மேடையில் நடித்து வாழ்பவளாக எழுதியுள்ளான். ஒரு நாள் ஹோட்டலில் குடித்து வரும் இளைஞனிடம் உடலுறவு கொண்டு அவனிடம் இருக்கும் பணத்தை திருட முயற்சிக்கிறாள் சாரா. ஆனால், அந்த இளைஞன் தன் பள்ளி நாட்களின் நண்பன் என்ரிக் என்று தெரிந்ததும் திருடிய பணத்தை அங்கையே வைத்துவிடுகிறாள். தன் வாழ்க்கையை கதையாக எழுதி சாரா தன் பள்ளி பாதரியார் மனோலோவை சந்திக்கிறாள். சாரா பாதரியார் மனோலோவிடம் தன்னை அறிமுகப்படுத்தியதும் கதை பின்னோக்கி செல்கிறது.

1964ல், இனிமையான குரலில் இங்னசியோ பாடுவதுப் போல் தொடங்குகிறது. பாதரியார் தனது காம பார்வையை இங்னசியோ மீது வைத்திருந்தார். இங்னசியோவின் முதல் காதலும், நண்பனும் என்ரிக் தான். ஒரு நாள் என்ரிக்கும்,இங்னசியோவும் ஒன்றாக இருப்பதை பார்த்த பாதரியார் மனோலோ என்ரிக்கை பள்ளியில் விட்டு விரட்டுவதாக மிரட்டுகிறார். என்ரிக்கை காப்பாற்ற, இங்னசியோ பாதரியார் ஆசைக்கு இணங்கிறான். இருந்தும், பாதரியார் பொறாமை குணத்தால் என்ரிக் பள்ளியை விட்டு விரட்டப்படுகிறான்.

'தி விசிட்' கதையை படித்து முடித்த என்ரிக், அதை படமாக்க முடிவெடுக்கிறான். ஆனால், இங்னசியோ என்கிற ஏன்ஜல் 'சாரா' பாத்திரத்தை தான் நடிக்க வேண்டும் என்று நிபந்தனை வைக்கிறான். என்ரிக் அதை மறுக்க, இங்னசியோ தன் கதையை தன்னுடன் எடுத்து செல்கிறான். என்ரிக் பள்ளிநாட்களில் தான் காதலித்த இங்னசியோவுக்கும், இப்போது இருக்கும் இங்னசியோவுக்கும் பல மாற்றங்கள் இருப்பதை உணர்கிறான். அவனைப் பற்றி விசாரிக்க கிராமத்தில் இருக்கும் இங்னசியோவின் அம்மாவை பார்க்க செல்கிறான். அங்கு தான் என்ரிக்கு மிக பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. உண்மையான இங்னசியோ இறந்து நான்கு வருடமாகிறது. அவன் பெயரை சொல்லிக் கொண்டு வந்தவன் அவனின் சகோதரன் ‘ஜூஅன்’.

மீண்டும் நகரத்துக்கு வந்த என்ரிக், ஜூஅன்னுக்கு தன் படத்தில் வாய்ப்பு அளிப்பதாக சொல்லுகிறான். அதுவும் அவன் விருப்பமான 'சாரா' என்ற முக்கிய பாத்திரம் தருவதாக உறுதி அளிக்கிறான். இருவரும் கட்டி தழுவி உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள். என்ரிக் ஜூஅன் கொண்டு வந்த கதையில் சில மாற்றங்கள் செய்கிறான். இறுதிக் காட்சியில், பாதரியார் மனோலோவை பணத்திற்காக மிரட்டும் சாராவை தன் உதவியாளர் துணையோடு கொலை செய்வது போல் காட்சி எடுக்கிறார். காட்சி படமாக்கிய பிறகு, "சாரா"வாக நடித்த ஜூஅன் தன்னையும் அறியாமல் அழுகிறான்.

தன் அறைக்கு வரும் என்ரிக், பெரெங்கர் என்ற மனிதரை தன் அறையில் பார்க்கிறான். அவன் தான் தன் கதையில் வரும் பாதரியார் மனோலோ பாத்திரத்தின் உண்மையான உருவம். என்ரிக்கிடம் உண்மையை சொல்ல வந்திருப்பதாக பாதரியார் பெரெங்கர் சொல்லுகிறான். அவன் எடுத்த காட்சிக்கும், நடந்த உண்மைக்கு பெரிய தூரம் இல்லை என்பதை கூறுகிறான்.

திருநங்கையான இங்னசியோ தன் "தி விசிட்" கதையை வைத்து பாதரியார் பெரெங்கரை மிரட்டியிருக்கிறாள். அதற்கு பத்து லட்சம் பணம் தரவில்லை என்றால், அந்த கதையை புத்தகமாக கொண்டு வரப்போவதாக கூறுகிறாள். அவளை பார்க்க வந்த பெரெங்கர் அவளின் தம்பி ஜூஅன் மீது ஆசைக் கொள்கிறான். இருவரும் உறவும் வைத்துக் கொள்கிறார்கள். இங்னசியோ கேட்ட பணம் பாதரியார் பெரெங்கரால் தர முடியவில்லை. ஜூஅன்னுக்கும் பணம் வேண்டும். அதனால், இங்னசியோ உட்கொள்ளும் போதை மருந்தில் மேலும் போதை தரக்குடிய பொருளை சேர்க்கிறான் ஜூஅன். அதிக போதை மருந்து உண்டதால் இங்னசியோ இறக்கிறாள். இங்னசியோ இறந்ததும், ஜூஅன் பாதரியார் பெரெங்கரை விட்டு விலகி செல்கிறான். தன்னை தொடர்ந்தால் கொலை செய்வதாக மிரட்டுகிறான்.

இங்னசியோவுக்காக அவன் தம்பி ஜூஅனுக்கு வாய்ப்பு கொடுத்த என்ரிக்கு இந்த உண்மை அதிர்ச்சியாக இருந்தது. தன் வீட்டில் தங்கி இருந்த ஜூஅன்னை விரட்டி அடிக்கிறார் என்ரிக். வெளியே செல்லும் போது, ஜூஅன் இங்னசியோ இறக்கும் போது எழுதிய கடிதத்தை என்ரிக்கிடம் கொடுக்கிறான். அதில், " அன்புள்ள என்ரிக், எல்லாம் நலமாக முடிகிறது..." கடிதம் முடிப்பதற்குள் இறந்திருக்கிறாள் இங்னசியோ. அந்த கிதம் பார்த்ததும் கண்ணில் நீர் தழும்ப நிற்கிறான் என்ரிக்.

"என்ரிக் எடுத்த படம் மிக பெரிய வெற்றிப்பெறுகிறது"

"ஜூஅன் சகோதரனை கொன்ற குற்றவுணர்ச்சி இல்லாமல் பெரிய நடிகனாகிறான். ஆனால், இப்போது ஜூஅன் சின்னத்திரையில் வேலை செய்துக் கொண்டு இருக்கிறான்"

"பாதரியார் பெரெங்கர் ஜூஅன் தன்னுடன் வாழ வேண்டும் என்று அவனை பின் தொடர்ந்தே வாழ்க்கை முடிந்து இறக்கிறார்"

போன்ற வாசகங்கள் திரையில் ஓட படம் முடிகிறது.

நீங்கள் கலாச்சார காவலர்கள் என்றால் இந்த படத்தை பார்க்காமல் இருப்பது நல்லது. இதில், ஆபாசமாக நடிக்கும் பெண்கள் இல்லை. இன்னும் சொல்லபோனால் இந்த படத்தில் பெண்களே இல்லை. ஆணுக்கும், ஆணுக்கும் இருக்கும் காதல், காமத்தை தான் அதிகம் விவரிக்கிறது. ஆணுக்கும், ஆணுக்கும் இருக்கும் உடலுறவு காட்சியைக் மேலோட்டமாக தான் எடுத்திருக்கிறார் படத்தின் இயக்குனர் பெட்ரோ அல்மோடோவர். கிறிஸ்த்து மடத்தில் நடக்கும் பல உண்மைகளை இந்த படம் தோலுரித்துள்ளார்.

57வது கேன்ஸ் திரைப்பட விழா பலரது பாராட்டுகள் பெற்றதோடு இல்லாமல், அமெரிக்காவில் ஸ்பெயின் மொழி படங்களில் அதிக வசூல் செய்த Bad Education படம் என்பது குறிப்பிடதக்கது.

எத்தனையோ மாணவர்கள் ஆசிரியர் செய்யும் பாலியல் கொடுமைகளை பெற்றோர்களிடம் சொல்லவும் முடியாமல், படிப்பை கவனம் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். ஓரின சேர்க்கையை எதிர்ப்பவர்கள் சிறுவர்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமையை ஏன் எதிர்த்து குரல் கொடுப்பதில்லை. கலாச்சாரத்தை காக்க நினைப்பவர்கள் அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டும் என்ற அக்கரை இல்லாத மிக வேதனையாக இருக்கிறது.

சிறுவர்/சிறுமிகள் மீது வன்கொடுமை செய்யும் ஆசிரியர்கள் தான் வன்முறை தூண்டிவிடும் ஆயுதங்களாக இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

Friday, December 30, 2011

உலக சினிமா : Dr.Babasaheb Ambedkar

ஒவ்வொரு வருடமும் தூர்தர்ஷனில் அல்லது ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் 'காந்திஜி' படம் போடுவார்கள். ஒரு வெள்ளையன் காந்தியாக நடித்திருந்தாலும் காந்தியின் வரலாற்று படமாக அதை போற்றி டி.வியில் போட்டுக் கொண்டுயிருக்கிறார்கள். 1982 ல் வெளிவந்த காந்தி திரைப்படம், எத்தனை முறை தொலைக்காட்சியில் போட்டியிருப்பார்கள் என்று கணக்கே இல்லை. காந்தியை பற்றியும் அவரது கொள்கையை பற்றியும் மக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று பிரச்சாரமாக 'காந்தி' படம் இருக்கிறது. ஆனால், அம்பேத்கரை பற்றி 2000ல் வெளியான படத்தை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று விரல் விட்டு எண்ணிவிடலாம்.

மகாராஷ்ட்ரா அரசின் நிதி உதவியோடு 1998ல் எடுக்கப்பட்ட 'அம்பேத்கர்' திரைப்படம் 2000ல் தான் வெளிவந்தது. 1998ல் சிறந்த கலைப்படத்திற்கும், சிறந்த நடிகர் ( மம்மூட்டி) க்கான தேசிய விருதை இந்த படத்திற்கு கிடைத்தது. மற்ற கலைப் படம் போல் இல்லாமல் அம்பேத்கர் படம் வசூலிலும் ஒரளவு நன்றாகவே இருந்தது.



காந்தி, அம்பேத்கர் இரண்டு படங்களிலும் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றை தான் பதிவு செய்கிறது. காந்தி படத்தில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அம்பேத்கர் படத்தில் பல உண்மைகள் வெட்டப்பட்டுள்ளது.

‘காந்தி’ படத்தில் காந்தி வில்லன் என்று எடுத்துக் கொண்டால் வெள்ளையன். அவனை விரட்டி அடிப்பதே காந்தியின் போராட்டமாக இருக்கும். ஆனால், அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றில் வில்லன் என்று எடுத்துக் கொண்டால் அது ‘காந்திஜி’ தான். இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில், தாழ்த்தப்பட்டவர்களுக்கு வெள்ளைக்காரனே சிறப்பு சலுகை தர முன்வந்தும், காந்திஜி அதை எதிர்க்கிறார். தன் உயிரை ஆயுதமாக்கி பூனா பேக்ட் ஒப்பந்தத்தில் அம்பேத்கரை கையெழுத்திட வைக்கிறார்.

அம்பேத்கர், காந்தி இருவருக்குள் பல பணிப் போர் இருக்கிறது. ஆனால், 3 மணி நேர திரைப்படத்தில் ஓரளவு பதிவு செய்திருக்கிறார். சரி.. படத்திற்கு வருவோம்.

தலித்தை இந்து மதத்தில் இருந்து பிரித்து விட்டால் எதிர்காலத்தில் இந்தியாவில் இந்து மதம் சிறுபான்மையினராக மாறிவிடுமோ என்று காந்தி அஞ்சுகிறார். அதே சமயம் தலித்துக்கு இழைக்கப்படும் கொடுமைகள் சரியாக காலமாகும். அதுவரை பொறுமையாக இருங்கள் என்கிறார். இன்று வரை, பல கிரமங்களில் அந்த காலத்திற்காக தான் காத்திருயிருக்கிறார்கள்.

மழைக்கு கோயிலுக்குள் ஒதுங்கிய தலித்தின் மரணத்தில் கதை தொடங்குகிறது. அமெரிக்காவில் தன் பட்டப்படிப்பு படிக்கும் அம்பேத்கர் அமெரிக்காவில் வாழும் கருப்பர்களையும், இந்தியாவில் வாழும் தீண்டாமையை ஒப்பிட்டு பேசுகிறார். பரோடா அரசு நிதி உதவியில் படிக்கும் அம்பேத்கர் தன் படிப்பு முடித்ததும் பத்து வருடம் பரோடா மஹானத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனை. ஆனால், படிப்பு முழுமை பேராமலே பரோடா அரசுக்கு வேலை செய்ய அழைப்பு வருகிறது.

தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்ததால் வீடு கிடைக்காமல் அவதைப்படுவதும், தனக்கு கீழ் வேலை செய்பவர்கள் மரியாதை இல்லாமல் நடத்துவதும், தூசிப்படிந்த அறை தங்குவதும் போன்ற அவமானங்களை சந்திக்கிறார். பின்பு, பரோடா மன்னர் பத்து வருடம் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்திக் கொள்கிறார். தன் மனைவி ரமாபாய்யுடன் வறுமையில் வாடுகிறார். தன் நான்கு குழந்தைகளை இழக்கிறார்.

வழக்கறிஞர் பட்டம் பெற்ற அம்பேத்கர் தன் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கிறார். தீண்ட தகாதவர்களை அணியாக திரட்டி மகாத்தில் இருக்கும் குளத்தில் நீர் குடிக்கிறார். பிராமினர் சஹரபுத்தேவுடன் சேர்ந்து மனு தர்மத்தை எரிக்கிறார். அனைத்து ஐரோப்பிய சைமன் கமிஷனில் பம்பாய் மகான அமைப்பு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். அம்பேத்கர் காங்கிரஸ் பற்றி தன் அதிருப்தி கருத்துக்களை தெரிவிக்கிறார். இதை கேள்வி பட்ட காந்தி அம்பேத்கரை பார்க்க அழைக்கிறார்.

காந்தி, அம்பேத்கர் சந்திப்பில் இருந்து அக்‌ஷன் படத்திற்கு உண்டான விருவிருப்பு இந்த கலை படத்தில் இருக்கிறது. காந்திக்கு எதிராக பல வசனங்கள் இந்த படத்தில் பார்க்க முடிந்தது.

“He is not Mahatma. He is an moderm politican"

" மகாத்மா வருவார்கள். போவார்கள். ஆனால் காலம் காலமாக தீண்டப்படாதவன் தீண்டப்பட்டாமல் ஒதுக்கப்படுகிறான்"


காந்தியிடம் " அடிக்கடி உண்ணாவிரதத்தை ஆயுதமாக பயன்படுத்தாதீங்க..."

இன்னும் பல வசனங்கள் இருந்திருக்கும் என்றே நினைக்க்க தோன்றுகிறது. சென்சார் போர்ட்டின் கை வண்ணம் தெரிகிறது.

காந்தி, அம்பேத்கர் முதல் சந்திப்புக்கு பிறகு, காந்தி தன் காரியதரிசியிடம் “ என்னது அம்பேத்கர் மார் இனத்தை சேர்ந்தவரா ? நான் அவரை பிராமனர் என்று நினைத்தேன். நீங்கள் ஏன் சொல்லவில்லை” என்று கோபப்படுகிறார். இந்த வசனத்தில் பல அர்த்தங்கள் உள்ளது.

தனி நாடு கேட்கும் ஜின்னாவிடம் தன் அதிருப்தியை தெரிவிக்கிறார். காங்கிரஸ் உறுப்பினர் இல்லாத அம்பேத்கர், காந்தி சிபாரிசால் முதல் சட்ட அமைச்சராக பொறுப்பேற்கிறார். ( காந்தி அம்பேத்கர் பெயர் சொல்லும் போது, நேருவின் முகம் மாறுவதை சற்று உண்ணிப்பாக கவனிக்க வேண்டும்). இந்து மதத்தை புரக்கணிக்க போவதாக அறிவிப்பு விட, ஒவ்வொரு மதத்தினரும் அம்பேத்கரை தங்கள் மதத்திற்கு அழைக்கிறார்கள். குறிப்பாக, கிறித்துவ மதத்தினருக்கு அம்பேத்கர் கேட்கும் கேள்வி சென்சார் போர்ட் வெட்டாமல் விட்டதை பாராட்டியாக வேண்டும்.

தனது உடல்நலம் கவனித்துக் கொள்ள சாராத கபீரை மணந்துக் கொள்கிறார். சுதந்திர இந்தியாவின் சட்டங்கள் வகுக்கிறார். இந்து கோட் சட்டத்தை கொண்டு வர நினைக்க, போதிய ஆதரவு இல்லாதததால் அந்த சட்டம் அமலாக்க அவரால் முடியவில்லை. தனது சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார். இந்து மதத்தின் அதிருப்தியால் ஐந்து லட்ச ஆதரவாளர்களோடு புத்த மதத்தை தழுவிகிறார்.

புத்தகர் மதம் தழுவிய இரண்டு மாதத்தில் இறந்து விட்டதாக எழுத்துக்கள் வர படம் முடிகிறது. இன்னும் பல இடங்கள் தீண்டாமை உள்ளது என்பதையும் படம் முடிவில் எழுத்துக்களை ஓட விட்டிருக்கிறார்கள்.

இந்த படம் மக்களிடம் கொண்டு செல்லாமல் இருந்ததற்கு இரண்டு காரணம். ஒன்று, அரசு தயாரிப்பு. இன்னொரு, நான் சொல்ல வேண்டியதில்லை. பலருக்கு தெரிந்த காரணம் தான்.

இப்படத்தை விமர்சனம் செய்வதை விட பலருக்கு கொண்டு செல்வதே நோக்கம் என்பதால், படத்தில் பணியாற்றிய இயக்குனர், நடிகர் பற்றி அதிகம் குறிப்பிட விரும்பவில்லை.

இப்படம் இணையத்தில் இருப்பதை பரிந்துரை செய்த நண்பர் கார்க்கிக்கு என் நன்றிகள் பல..

இந்த படத்தை முழுமையாக பார்க்க...

Friday, December 16, 2011

உலக சினிமா : Shadow of Time

மனிதன் வாழ்க்கையில் காதல் எந்த காலத்திலும் பிரிக்க முடியாது. பதின் வயதில் வரும் காதல் சந்தோஷத்தை கொடுக்கும். வாலிய வயதில் வரும் காதல் சுகத்தை தரும். நடுத்தர வயதில் வரும் காதல் ஆறுதலை தரும். முதுமையில் வரும் காதல் இறப்புக்கு முன் நிம்மதி தரும். ஒவ்வொரு காலத்திலும் மற்றவர் மீது வைத்திருக்கும் காதல் தான் நம் வாழ்க்கையில் நம்மை பயணிக்க வைக்கும். ஆனால், ஒவ்வொரு காலகட்டத்தில் இந்த காதல் ஒரு பெண்ணின்/ஆண்ணின் மீது மட்டும் இருக்கிறதா என்பது தான் சந்தேகம். ஆனால், வாழ்க்கையில் வரும் இந்த நான்கு காலகட்டத்திலும் காதலர்களுக்குள் பயணமாகும் அன்பை காட்டியிருக்கும் படம் தான் ‘Shadow of Time’.

1940 ல், கல்கத்தாவில் உள்ள குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்யும் நெசவு தொழிற்சாலையில் தந்தையால் ரூ.25க்கு விற்கப்படுகிறாள் சிறுமி மாஷா. அங்கு ரவி என்ற சிறுவனின் நட்பு அவளுக்கு கிடைக்கிறது. பிஞ்சு மலர்களை கசப்பதற்காக பிரத்தேயமாக தயாரிக்கப்பட்ட தொழிற்சாலை வேலை அவர்களை நசுக்கிறது. அந்த வேலை பலுவிலும் இருவருக்குள் இருக்கும் ஒரே சந்தோஷம் அவர்களுடைய நட்பு தான். தன் தந்தை பணம் சம்பாதித்து தன் தந்தை திருப்பி அழைத்து செல்வார் என்ற நம்பிக்கையில் இருக்கும் மாஷாவிடம், ரவி அவர் வரமாட்டார் என்று சொல்கிறான். இருவருக்குள் சண்டை வருகிறது. ஒரு கட்டத்தில் நெசவு தொழிற்சாலை மேலாளர் மாஷாவை ஒரு சீமானுக்கு விற்றுவிடுகிறார். அவளை காப்பாற்ற ரவி தன் கையில் இருக்கும் ரூ.35 யை கொடுக்கிறான். ஒரு நாளுக்கு 2 பைசா என்று தன் சம்பளத்தில் பிடித்து மாஷாவை மேலாளரிடம் விடுவிக்கிறான்.



மாஷா தன் தந்தையை தேடி நகரத்துக்கு செல்லும் போது, ஒவ்வொரு பௌர்நமி அன்றும் சிவன் கோயிலில் அவனுக்காக காத்திருப்பதாக சொல்கிறாள். பெரியவர்களானதும் நாம் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி தன் தந்தையை தேடி செல்கிறாள் மாஷா. சந்தர்ப்ப சூழ்நிலையில் அவள் விபச்சார விடுதியில் மாட்டிக் கொள்ள, அவள் அங்கு வளர்கிறாள்.

காலம் கடக்கிறது. மாஷா விபச்சார விடுதியில் நடனக்காரியாக இருக்கிறாள். வாலிப வயதில் இருக்கும் ரவி தான் சேர்த்து வைத்த சம்பள பணத்தை தன் மேலாளரிடம் கொடுத்து தன்னை தானே விடுவித்துக் கொள்கிறான். தன் சம்பளத்தை இரண்டு மடங்காக மாற்றுவதாக சொல்லியும், ரவி அங்கிருந்து வெளியே வருகிறான். சம்பளமில்லாமல் உணவுக்காகவும், தங்க இடத்திற்காகவும் பழைய கம்பளக் கடையில் வேலைக்கு சேர்கிறான். அந்த கடையின் உரிமையாளர் ஒரு முதியவர். அவர் பேத்தி தீபா ரவியை விரும்புகிறாள். ஆனால், ரவி இரவு நேரங்களில் மாஷாவை தேடி கல்கத்தா முழுக்க அழைகிறான். விபச்சார விடுதி பெண்களிடம், தரகர்களிடம் என்று மாஷாவைப் பற்றி விசாரிக்கிறான். ஒரு கட்டத்தில் மாஷா ரவியை அடையாளம் கண்டு அருகே வர நினைக்கும் போது, சிவன் கோயிலில் ரவி தீபாவிடம் பேசுவதை பார்க்கிறாள். ரவி திருமணமானதாக நினைத்துக் கொண்டு, மாஷா ஒதுங்கிக் கொள்கிறாள். கம்பளக்கடை உரிமையாளர் இறக்க, ரவி தீபாவை திருமணம் செய்துக் கொள்கிறான். ரவி கம்பளக்கடை பெரிய கம்பள நிறுவனமாக மாறுகிறது. வெளிநாடுகளுக்கு கம்பளங்களை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு தொழில் முன்னேறுகிறான்.

ஒரு சமயம், ரவியின் 200 கம்பளம் வெளிநாட்டுக்கு போகாமல் தடைப்பட சுங்க அதிகாரி அலுவலகத்துக்கு செல்கிறான். அங்கு தனது பழைய வாடிக்கையாளர் மிஷ்ரா சுங்க அதிகாரியாக இருப்பதை பார்க்கிறான். மிஷ்ரா ரவி உதவி செய்ததோடு இல்லாமல், இரவு விருந்துக்கு அழைக்கிறான். மிஷ்ரா ரவியிடம் அவர் மனைவியை அறிமுகம் செய்து வைக்க, அது தன் பாலிய காதலி மாஷா என்று புரிந்துக் கொள்கிறான். விருந்தில் தனியாக இருந்த ரவியிடம் மாஷா கோயிலில் அவனை மனைவியுடன் பார்த்ததை கூறி, தன்னை ஏமாற்றிவிட்டதாக கோபப்படுகிறாள். அடுத்த நாள், அவள் வீட்டுக்கு சென்று "அன்று மட்டும் அவள் தன்னிடம் பேசியிருந்தால் இந்த பிரிவு வந்திருக்காது" என்கிறான். மாஷா ரவியை தேடி அவன் நிறுவனத்திற்கு செல்கிறாள். மீண்டும் அவர்களுக்குள் பழைய காதல் துளிர்விடுகிறது. மாஷா தன் கணவனுக்கு தெரியாமல் ரவியுடன் உறவு வைத்துக் கொள்கிறாள்.

மிஷ்ரா கல்கத்தாவில் இருந்து கேரளாவுக்கு வேலை மாற்றல் கிடைத்ததால், தன் மனைவி மாஷாவை அழைத்து செல்லப்போவதாக கூறுகிறான். மாஷா ரவி இழக்க விரும்பவில்லை. ஆனால், ரவி தன் மனைவிக்கும், தன்னை நம்பும் மிஷ்ராவையும் ஏமாற்ற முடியாமல் தடுமாறுகிறான். மிஷ்ரா, மாஷா வை ரயிலில் ஏற்றி விடும்போது, மாஷா கர்ப்பமாக இருப்பதை மிஷ்ரா சொல்லி சந்தோஷப்படுகிறான். ரவி தான் தவறு செய்துவிட்டோமோ என்று நினைத்து முடிப்பதற்குள் ரயில் அங்கிருந்து செல்கிறது.

மீண்டும் காலம் பயணிக்கிறது. நடுத்தர வயதில் ரவி, தீபா இரண்டு குழந்தைகளோடு இருக்க அவனை பார்க்க மிஷ்ரா வருகிறான். மிஷ்ரா தனக்கு மகன் பிறந்தான் என்றும், ஆனால் அந்த தனக்கு பிறக்கவில்லை என்றும் கூறுகிறான். தன் மனைவி இன்னொருத்தருடன் தொடர்பு வைத்திருந்ததால் அவளை விரட்டிட்டதாக கூறுகிறான். இவ்வளவு வருடம் கலித்து, தன்னை சந்திக்க வந்து “ஏதற்காக இதை சொல்ல வேண்டும்?” என்று ரவி கேட்க, மிஷ்ரா “ தவறு செய்த நீ மட்டும் எப்படி நிம்மதியாக இருக்க முடியும் ?” என்கிறான். மிஷ்ராவுக்கு எல்லா உண்மையும் தெரிந்திருக்கிறது அந்த வார்த்தைகளிலே தெரிந்துக் கொள்கிறான் ரவி. மீண்டும் மாஷாவை தேடி சிவன் கோயில், விபச்சார பகுதிகளுக்கு செல்கிறான். ஒரு வீட்டில் மாஷா, தன் மகனுடன் இருப்பதை பார்க்கிறான் ரவி. மாஷா ரவியை திட்டி அனுப்புகிறாள். தன் கையில் இருக்கும் பணத்தை மாஷாவின் வீட்டு ஜன்னலில் வைத்துவிட்டு ரவி செல்கிறான். மாஷா ரவி தேடி வருவதற்குள், ரவி சென்று விடுகிறான்.

கதை தற்காலத்திற்கு வருகிறது. முதியவனான ரவி தான் சிறுவயதில் வேலை செய்த நெசவு தொழிற்சாலைக்கு வருகிறான். அங்கு ஒரு சிறுமியை பார்க்கிறான். அவள் சிறுவயதில் பார்த்த மாஷாப் போல் இருக்கிறாள். அந்த சிறுமி தன் பாட்டிக்கு தண்ணீர் தருவதை பார்த்து, அந்த பாட்டி மாஷா என்று அடையாளம் கண்டுக் கொள்கிறான். கண்ணிழந்த முதிய வயதில் தன் மகன் இறந்ததையும், இவ்வளவு நாட்கள் கஷ்டப்பட்ட கதைகளை ரவியிடம் சொல்கிறாள். “நான் தான் ரவி” என்று சொல்ல முடியாமல் குற்றவுணர்ச்சியில் ரவி அங்கு விட்டு செல்கிறான். சிறுமி தன் பாட்டி வந்தது யார் என்று கேட்க, “அவர் தான் ரவி” என்கிறாள். ரவி செல்வதை சிறுமி பார்த்த மாதிரி படம் முடிகிறது.

ஒவ்வொரு காலக்கட்டங்களும் ஒவ்வொரு பகுதியை சிறுகதைகளாகவும், அதற்கு ஒரு முடிவும் வைத்து படத்தை அழகாக காட்சி அமைத்திருக்கிறார்கள். படத்தின் பின்னனி கல்கத்தாவில் நிகழ்வதால், ஆறுபது வருடங்கள் நகரத்தில் நிகழும் மாற்றங்கள் காட்சிப்படுத்திருக்கிறார் இயக்குனர் ப்ளோரின் கல்லேன்பெர்கர்.

ஜெர்மன் நாட்டை சேர்ந்த இவர் ஒரு ஆய்வுக்காக 2001ல் இந்தியா வந்தார். ஒன்றரை வருடம் கல்கத்தாவில் தங்கியிருந்த ப்ளோரின் அதன் பின்னனியில் இந்த காதல் கதையை எழுதினார். மற்றவர்கள் போல் இந்த கதையை ஆங்கிலத்தில் அவர் எடுக்க விரும்பவில்லை. பெங்காளி மற்றும் ஜெர்மன் மொழியில் எடுத்தார்.

2004ல் வெளியான இப்படம் பல ஐரோப்பா திரைப்பட நிகழ்வுகளில் திரையிடப்பட்டது. ஜெர்மன் திரைப்பட விருதுதான பெவேரியன் விருது இப்படத்திற்கு கிடைத்துள்ளது.

Thursday, November 17, 2011

உலக சினிமா : The Isle

ஒரு மனிதனால் எவ்வளவு நேரம் தனிமையில் இருக்க முடியும் ? ஒரு மணி நேரம், இரண்டு... ஒரு நாள் ...!! அதன் பிறகு பேச்சு துணைக்கு ஆள் கிடைத்தால் அந்த ஆள்ளிடம் எவ்வளவு நேரம் பேசுவோம் என்று நமக்கே தெரியாது. தனிமையின் வலி நம்மை அதிக நேரம் பேச வைக்கிறது என்று தெரியாமல் பேசுவோம். அப்படி தனிமையின் வலி, அதனால் வரும் காமம், குரோதம் என்று சொல்லும் படம் தான் ‘The Isle’.

ஊமைப் பெண்ணான ஹீ-ஜின் மிதவை படகு விடுதி நடத்தி வருபவள். தன் விடுதிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தேவையானதை வாங்கி வந்து கொடுப்பாள். பெண்கள் உட்பட. சில சமயம் இவளே வாடிக்கையாளர்களை சந்தோஷப்படுத்துவாள். தனிமை, மௌனம் இரண்டும் அவள் உடன் பிறந்த சகோதரிகளாக அவளுடன் வாழ்கிறது.



சட்டத்திடம் தப்பித்து ஹியூன் ஷிக் ஹீ-ஜின் விடுதியில் வந்து தங்குகிறான். கம்பிகளை வலைத்து பொம்மை செய்வதில் வல்லவன். அவன் தன் காதலியை கொன்றதை நினைத்து தூங்க முடியாமல் தவிக்கிறான். ஹியூன் ஷிக் அழுவதும், அவனுக்காக வைத்த உணவு சாப்பிடாமல் இருப்பதை பார்த்தும் ஹீ ஜின் அவனும் தன்னைப் போல் தனிமையில் வாடுவதை புரிந்துக் கொள்கிறாள். குற்ற உணர்வில் ஹியூன் ஷிக் தற்கொலைக்கு முயற்சிக்கும் போது ஹீ ஜின் காப்பாற்றுகிறாள். அவன் தனிமையை போக்க ஹீ-ஜின் விலைமாதுவை வர வழைக்கிறாள். ஹியூன் ஷிக் அவளிடம் உடல் சுகத்தை விட பேசவே விரும்பினான். விலைமாது பெண்ணுக்கு ஹியூன் ஷிக் கம்பிகளால் வலைத்து செய்த பொம்மை மிகவும் பிடிக்கிறது. அவனுடன் அதிக நேரம் இருக்க விரும்புகிறாள். இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போது விலைமாதுவின் தரகன் அடித்து இழுத்து செல்கிறான்.

ஹியூன் ஷிக் தேடி காவலர்கள் வரும் போது, ஹியூன் ஷிக் மீண்டும் தற்கொலை செய்துக் கொள்ள முயற்சிக்கிறான். மீன் பிடிக்கும் தூண்டிலை தொண்டையில் விழுங்கி இரத்த சொட்ட சொட்ட இறக்க நினைக்க, ஹீ-ஜின் மீண்டும் அவனை காப்பாற்றுகிறாள். அவனை காப்பாற்றிய பிறகு, அவனுடன் உறவுக் கொள்கிறாள் ஹீ-ஜின்.

அடுத்த நாள் விலைமாது ஹியூன் ஷிக் பார்க்க வருகிறாள். அன்று இரவு இருவரும் உடல் உறவு கொள்வதை ஹீ ஜின் மறைந்திருந்து பார்க்கிறாள். ஹியூன் ஷிக் விலைமாதுவுக்கு பணம் கொடுக்க, தான் விரும்பி வந்ததாக சொல்கிறாள். அவனிடம் இருந்து கம்பி பொம்மையை எடுத்துக் கொள்கிறாள். அந்த விலைமாது மீது ஹீ ஜின் பொறாமை ஒட்டிக் கொள்கிறது. அவளை அழைத்து கரைக்கு விட ஹீ ஜின் படகு செலுத்தாமல் இருக்கிறாள்.

ஒரு கட்டத்தில், ஹியூன் ஷிக் படகுக்கு செல்லாமல் வேறொரு படகு வீட்டுக்கு விலைமாதுவை அழைத்துச் சென்று கட்டி வைக்க, அதில் தப்பிக்க நினக்கும் போது விலைமாது இறக்கிறாள். அவளை தேடி வரும் தரகனும் ஹீ ஜின்னால் கொல்லப்படுகிறான். விலைமாது இல்லாத ஹியூன் ஷிக் தனிமையை பயன்படுத்தி ஹீஜின் அவனுடன் உறவுக் கொள்கிறாள்.

ஹீ ஜின் இரண்டு பேரைக் கொன்றது ஹியூன் ஷிக் தெரிய வர, அவன் படகு வீட்டை விட்டு செல்ல முயற்சிக்கிறான். ஆனால், ஹீ ஜின் அவனை செல்லவிடாமல் தடுகிறாள். ஹியூன் ஷிக் தண்ணீரில் விழுத்து நீந்திச் செல்கிறான். ஹியூன் ஷிக் தடுக்க மீன் தூண்டிலை தன் பெண் உருப்பில் சொருகிக் கொண்டு தற்கொலை செய்துக் கொள்ள முயற்சிக்கிறாள். ஹீஜின் அலறல் சத்தம் கேட்டு ஹியூன் ஷிக் ஹீஜின்னை காப்பாற்றி அவள் பெண் உருப்பில் இருக்கும் தூண்டில் கம்பிகளை அகற்றுகிறான்.

அந்த படகு விடுதியில் தங்கி இருக்கும் பணக்காரரின் ரோலெக்ஸ் வாட்ச் தண்ணீரில் விழ, அதை எடுப்பதற்கு உள்ளூர் ஆட்களை அழைக்கிறான். அப்போது, விலைமாதுவின் உடலும், அவளது தரகனின் உடலும் எடுக்கப்படுகிறது. இதை பார்த்த ஹீ ஜின் தன் படகில் இருக்கும் மோட்டாரை படகு வீட்டில் மாட்டி இருவரும் தப்பி செல்கின்றனர். ஹியூன் ஷிக் தண்ணீரில் இருந்து வெளியே வர, படகில் ஹீ ஜின் நிர்வாணமாய் இறந்து இருப்பதோடு படம் முடிகிறது.

பலருக்கு இறுதி கட்டம் புரிந்துக் கொள்வது சற்று கடினமாக இருக்கும். நாயகன் தன் காதலியை கொன்றதுப் போல் ஹீஜின்னை கொன்று இருக்கலாம் அல்லது பெண் உருப்பில் காயம் பட்ட நாயகி இறந்திருக்கலாம். இந்த இரண்டு யூகங்களில், முதல் யூகத்திற்கு தான் அதிக வாய்ப்புள்ளது.



மென்மையான மனம் கொண்டவர்கள் இந்த படத்தை பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. சுயவதையை இந்த அளவுக்கு கொடூரமாக யோசிக்க முடியுமா என்று தெரியவில்லை. நாயகன், நாயகி இருவரும் தனிமையில் வாடும் போது தங்களை தாங்களே வருத்திக் கொள்கிறார்கள். நாயகன் தற்கொலை செய்துக் கொள்வதற்கு மீன் தூண்டிலை விழுங்குவதும், நாயகி தற்கொலை செய்துக் கொள்வதற்கு தன் பெண் உருப்பில் செழுத்துவதும் பார்ப்பவர்களால் ஜீரனிக்க முடியாத காட்சிகள்.

மீன்கள் பயன்படுத்தி எடுக்கப்பட்ட சில காட்சிகள் சிறப்பாக இருக்க நிஜ மீன்களை அதிகம் துன்பப்படுத்தியிருக்கிறார்கள். சில மீன்கள் இறந்தும் இருக்கின்றன.

கிம் கி டுக் இயக்கத்தை பாராட்டுவது அமெரிக்காவுக்கே ஆயுதம் வழங்குவது போன்றது. இயற்கையோடு தன் கதையை நடக்க விட்டுயிருக்கிறார். அமைதியான பெரிய ஏரி. அதற்குள் மிதக்கும் சின்னச் சின்ன மிதவை வீடுகள். அவற்றில் தங்கி ஓய்வெடுக்கும், மீன்பிடிக்கும் வாடிக்கையாளர்கள் என்று நம்மையும் கொண்டு சென்றுயிருக்கிறார்.

பொதுவாக, முடிவை பார்வையாளனுக்கு விடுவதில் குறும்படத்திற்கு நன்றாக இருக்கலாம். ஆனால், முழு நீள படத்திற்கு இறுதி கட்டத்தை பார்வையாளனுக்கு விட்டதில் இந்த படம் உள்ளூரில் சரியாக போகததிற்கு காரணம். ஆனால், வென்னிஸ் திரைப்பட விழாவில் பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.

Wednesday, June 3, 2009

உலக சினிமாவை காட்ட போகும் பைத்தியகாரனுக்கு நன்றி

எஸ்.ராமாகிருஷ்ணன் எழுதிய "தேசாந்திரி" புத்தகத்தை படிக்கும் போது, கொச்சியில் உள்ள ‘ஒபேசா’ என்ற மக்கள் சினிமா இயக்கம் கிராமம் கிராமமாக சென்று உலக திரைப்படங்களை திரையிடப்படுவதை சொல்லுவார். 'உலக சினிமா'வை கிராமத்து மக்கள் எப்படி எல்லாம் ரசிக்கிறார்கள் என்று விளக்கி இருப்பார். படத்தை பார்த்த கிராமத்து மக்கள் தங்களால் முடிந்த அளவு பொருள் உதவியை சினிமா இயக்கத்திற்கு கொடுப்பார்கள். இப்படி நல்ல ரசனை உள்ள மக்கள் இருப்பதால் தான் கெரளாவில் மட்டும் நல்ல திரைப்படங்கள் வருகின்றன.

கெரளா கிராமத்து மக்களின் ரசனை இப்படி இருக்க, நகரத்தில் வாழும் நாம் மட்டும் 'சிவாஜி', 'வில்லு', 'படிக்காதவன்', 'தோரனை' போன்ற படங்களை பார்க்கும் சாபத்தில் ஆளாகி இருக்கிறோம். இந்த சாபத்தில் இருந்து விடுப்படுவது கடினம் தான். ஆனால், கொஞ்சம் இளைப்பாருவதற்காக நம்ப ‘பைத்தியக்காரன்’ அவர்கள் 'இலவசமாக உலக திரைப்படங்களை பார்க்கலாம்' பதிவின் மூலம் உலக திரைப்படங்களை நம் பார்வைக்கு கொண்டு வந்திருக்கிறார். சிறுகதை போட்டி மூலம் பதிவர்களின் சிந்தனை தூண்டி விட்டவரின்… அடுத்த புதிய முயற்சி இது ! அவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.

இதுவரை 'உலக சினிமா' என்று படித்து வந்த பதிவர்களுக்கு, பார்க்கவும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அதுவும் நான் முதன் முதலில் பார்த்து ரசித்த ‘கிம் கி டுக்’ இயக்கிய " Spring, Summar, Fall, Winter and Spring" படம்.

இந்த படத்தை பற்றின நான் எழுதின விமர்சனத்தை பார்க்க... இங்கு பார்க்கவும்.

என் பதிவை பைத்தியக்காரன் பதிவில் குறிப்பிட்ட வண்ணத்துபூச்சியார் நன்றி :)

LinkWithin

Related Posts with Thumbnails