ஒரு மனிதனால் எவ்வளவு நேரம் தனிமையில் இருக்க முடியும் ? ஒரு மணி நேரம், இரண்டு... ஒரு நாள் ...!! அதன் பிறகு பேச்சு துணைக்கு ஆள் கிடைத்தால் அந்த ஆள்ளிடம் எவ்வளவு நேரம் பேசுவோம் என்று நமக்கே தெரியாது. தனிமையின் வலி நம்மை அதிக நேரம் பேச வைக்கிறது என்று தெரியாமல் பேசுவோம். அப்படி தனிமையின் வலி, அதனால் வரும் காமம், குரோதம் என்று சொல்லும் படம் தான் ‘The Isle’.
ஊமைப் பெண்ணான ஹீ-ஜின் மிதவை படகு விடுதி நடத்தி வருபவள். தன் விடுதிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தேவையானதை வாங்கி வந்து கொடுப்பாள். பெண்கள் உட்பட. சில சமயம் இவளே வாடிக்கையாளர்களை சந்தோஷப்படுத்துவாள். தனிமை, மௌனம் இரண்டும் அவள் உடன் பிறந்த சகோதரிகளாக அவளுடன் வாழ்கிறது.
சட்டத்திடம் தப்பித்து ஹியூன் ஷிக் ஹீ-ஜின் விடுதியில் வந்து தங்குகிறான். கம்பிகளை வலைத்து பொம்மை செய்வதில் வல்லவன். அவன் தன் காதலியை கொன்றதை நினைத்து தூங்க முடியாமல் தவிக்கிறான். ஹியூன் ஷிக் அழுவதும், அவனுக்காக வைத்த உணவு சாப்பிடாமல் இருப்பதை பார்த்தும் ஹீ ஜின் அவனும் தன்னைப் போல் தனிமையில் வாடுவதை புரிந்துக் கொள்கிறாள். குற்ற உணர்வில் ஹியூன் ஷிக் தற்கொலைக்கு முயற்சிக்கும் போது ஹீ ஜின் காப்பாற்றுகிறாள். அவன் தனிமையை போக்க ஹீ-ஜின் விலைமாதுவை வர வழைக்கிறாள். ஹியூன் ஷிக் அவளிடம் உடல் சுகத்தை விட பேசவே விரும்பினான். விலைமாது பெண்ணுக்கு ஹியூன் ஷிக் கம்பிகளால் வலைத்து செய்த பொம்மை மிகவும் பிடிக்கிறது. அவனுடன் அதிக நேரம் இருக்க விரும்புகிறாள். இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போது விலைமாதுவின் தரகன் அடித்து இழுத்து செல்கிறான்.
ஹியூன் ஷிக் தேடி காவலர்கள் வரும் போது, ஹியூன் ஷிக் மீண்டும் தற்கொலை செய்துக் கொள்ள முயற்சிக்கிறான். மீன் பிடிக்கும் தூண்டிலை தொண்டையில் விழுங்கி இரத்த சொட்ட சொட்ட இறக்க நினைக்க, ஹீ-ஜின் மீண்டும் அவனை காப்பாற்றுகிறாள். அவனை காப்பாற்றிய பிறகு, அவனுடன் உறவுக் கொள்கிறாள் ஹீ-ஜின்.
அடுத்த நாள் விலைமாது ஹியூன் ஷிக் பார்க்க வருகிறாள். அன்று இரவு இருவரும் உடல் உறவு கொள்வதை ஹீ ஜின் மறைந்திருந்து பார்க்கிறாள். ஹியூன் ஷிக் விலைமாதுவுக்கு பணம் கொடுக்க, தான் விரும்பி வந்ததாக சொல்கிறாள். அவனிடம் இருந்து கம்பி பொம்மையை எடுத்துக் கொள்கிறாள். அந்த விலைமாது மீது ஹீ ஜின் பொறாமை ஒட்டிக் கொள்கிறது. அவளை அழைத்து கரைக்கு விட ஹீ ஜின் படகு செலுத்தாமல் இருக்கிறாள்.
ஒரு கட்டத்தில், ஹியூன் ஷிக் படகுக்கு செல்லாமல் வேறொரு படகு வீட்டுக்கு விலைமாதுவை அழைத்துச் சென்று கட்டி வைக்க, அதில் தப்பிக்க நினக்கும் போது விலைமாது இறக்கிறாள். அவளை தேடி வரும் தரகனும் ஹீ ஜின்னால் கொல்லப்படுகிறான். விலைமாது இல்லாத ஹியூன் ஷிக் தனிமையை பயன்படுத்தி ஹீஜின் அவனுடன் உறவுக் கொள்கிறாள்.
ஹீ ஜின் இரண்டு பேரைக் கொன்றது ஹியூன் ஷிக் தெரிய வர, அவன் படகு வீட்டை விட்டு செல்ல முயற்சிக்கிறான். ஆனால், ஹீ ஜின் அவனை செல்லவிடாமல் தடுகிறாள். ஹியூன் ஷிக் தண்ணீரில் விழுத்து நீந்திச் செல்கிறான். ஹியூன் ஷிக் தடுக்க மீன் தூண்டிலை தன் பெண் உருப்பில் சொருகிக் கொண்டு தற்கொலை செய்துக் கொள்ள முயற்சிக்கிறாள். ஹீஜின் அலறல் சத்தம் கேட்டு ஹியூன் ஷிக் ஹீஜின்னை காப்பாற்றி அவள் பெண் உருப்பில் இருக்கும் தூண்டில் கம்பிகளை அகற்றுகிறான்.
அந்த படகு விடுதியில் தங்கி இருக்கும் பணக்காரரின் ரோலெக்ஸ் வாட்ச் தண்ணீரில் விழ, அதை எடுப்பதற்கு உள்ளூர் ஆட்களை அழைக்கிறான். அப்போது, விலைமாதுவின் உடலும், அவளது தரகனின் உடலும் எடுக்கப்படுகிறது. இதை பார்த்த ஹீ ஜின் தன் படகில் இருக்கும் மோட்டாரை படகு வீட்டில் மாட்டி இருவரும் தப்பி செல்கின்றனர். ஹியூன் ஷிக் தண்ணீரில் இருந்து வெளியே வர, படகில் ஹீ ஜின் நிர்வாணமாய் இறந்து இருப்பதோடு படம் முடிகிறது.
பலருக்கு இறுதி கட்டம் புரிந்துக் கொள்வது சற்று கடினமாக இருக்கும். நாயகன் தன் காதலியை கொன்றதுப் போல் ஹீஜின்னை கொன்று இருக்கலாம் அல்லது பெண் உருப்பில் காயம் பட்ட நாயகி இறந்திருக்கலாம். இந்த இரண்டு யூகங்களில், முதல் யூகத்திற்கு தான் அதிக வாய்ப்புள்ளது.
மென்மையான மனம் கொண்டவர்கள் இந்த படத்தை பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. சுயவதையை இந்த அளவுக்கு கொடூரமாக யோசிக்க முடியுமா என்று தெரியவில்லை. நாயகன், நாயகி இருவரும் தனிமையில் வாடும் போது தங்களை தாங்களே வருத்திக் கொள்கிறார்கள். நாயகன் தற்கொலை செய்துக் கொள்வதற்கு மீன் தூண்டிலை விழுங்குவதும், நாயகி தற்கொலை செய்துக் கொள்வதற்கு தன் பெண் உருப்பில் செழுத்துவதும் பார்ப்பவர்களால் ஜீரனிக்க முடியாத காட்சிகள்.
மீன்கள் பயன்படுத்தி எடுக்கப்பட்ட சில காட்சிகள் சிறப்பாக இருக்க நிஜ மீன்களை அதிகம் துன்பப்படுத்தியிருக்கிறார்கள். சில மீன்கள் இறந்தும் இருக்கின்றன.
கிம் கி டுக் இயக்கத்தை பாராட்டுவது அமெரிக்காவுக்கே ஆயுதம் வழங்குவது போன்றது. இயற்கையோடு தன் கதையை நடக்க விட்டுயிருக்கிறார். அமைதியான பெரிய ஏரி. அதற்குள் மிதக்கும் சின்னச் சின்ன மிதவை வீடுகள். அவற்றில் தங்கி ஓய்வெடுக்கும், மீன்பிடிக்கும் வாடிக்கையாளர்கள் என்று நம்மையும் கொண்டு சென்றுயிருக்கிறார்.
பொதுவாக, முடிவை பார்வையாளனுக்கு விடுவதில் குறும்படத்திற்கு நன்றாக இருக்கலாம். ஆனால், முழு நீள படத்திற்கு இறுதி கட்டத்தை பார்வையாளனுக்கு விட்டதில் இந்த படம் உள்ளூரில் சரியாக போகததிற்கு காரணம். ஆனால், வென்னிஸ் திரைப்பட விழாவில் பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.
1 comment:
வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். இன்று தான் தங்களின் தளத்திற்கு வருகிறேன். அருமையான விமர்சனம்... தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்று முத்துக்கள் என்ன?"
Post a Comment