வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, August 30, 2012

நடுரோட்டில் ஆபத்தான குழி !!

பதினைந்து நாள் போராட்டத்திற்கு பிறகு மிகுந்த வெருப்புடன், மன வேதனையுடன் இந்த பதிவு எழுதுகிறேன்.

பெரம்பூர் வடிவேலு முதலி தெருவில் (நெல்வயல் நகர்) நான்கு அடிக்கு இரண்டு குழிகள் தோண்டி ஒன்றரை மாதங்களாக மூடப்படாமல் இருக்கிறது. விவேகானந்தா, மான்போர்ட், ஞானஜோதி, அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி என்று பள்ளி மாணவர்கள் அந்த வழியாக பள்ளிக்கு செல்கிறார்கள். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், அவர்களை அழைத்து செல்லும் பெற்றோர்களுக்கு ஆபத்தாக அந்த குழி இருக்கிறது. வயதான முதியவர்களும் மார்க்கெட்டுக்கு அந்த வழியாக தான் செல்ல வேண்டும்.

அந்த குழிக்கு மிக அருகில் தமிழ அரசு குடி மக்கள் தஞ்சமடையும் டாஸ்மார்க் இருக்கிறது. இரவு குடி போதையில் செல்பவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

 குழி நெ.1 (வெளிப்புரம்)

 குழி நெ.1 (உள்புரம்)

 இப்படி, முக்கிய பகுதியில் பல நாட்களாக குழி மூடப்படாமல் இருக்கிறதே என்று விசாரிக்க, மெட்ரோ வாட்டர் தோண்டிப் போட்டதாக கூறினர். நானும் அவர்களிடம் சென்று புகார் கொடுத்தேன்.

எதோ எண்ணை அழுத்தினார். நான் பார்த்து முடித்து விடுகிறேன் என்றார். மூன்று நாட்கள் ஆனது. குழி முடப்படவில்லை. (அவர் பெயரை கேட்காமல் விட்டுவிட்ட தவறை இப்போது உணர்கிறேன்.)

மீண்டும் மெட்ரோ வாட்டர் சென்று புகார் கொடுத்தேன். இந்த முறை குரலை உயர்த்தி பேசினேன். "நீங்க போய் கவுன்ஸ்லர் கிட்ட கம்ப்ளைன்ட் கொடுங்க" என்றார். எதற்காக குழி தோண்டியிருக்கிறார்கள் என்று சரியான பதில் கூட சொல்லவில்லை.

குழி நெ.2


இவர்கள் குழி தோண்டுவார்கள், அதை மூடிவதற்கு கவுன்ஸ்லர், எம்.எல்.ஏவிடமா செல்ல வேண்டும் ? இதற்கிடையில் இன்னொரு எண் கொடுத்தார்கள். எப்போது போன் செய்தாலும் அவங்க சீட்டுல இல்ல... நாங்க பக்கத்து டிவிஷன் என்கிறார்கள்.

சரி ! இணையத்தில் தேடி http://www.chennaicorporation.gov.in/ ல் இருக்கும் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அடித்தேன்.

 “Digged road is not closed more than one month. Vadivelu mudali street and nelvayal road inter section point. ( Near vellayan market), perambur.

என்று 9789951111 எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினேன் (22 ஆகஸ்ட்). குழி மூடப்படாமல் இருந்ததால், இரண்டு நாள் கலித்து 1913 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டேன். யாரும் போன் எடுக்கவில்லை. இணையத்தில் போடும் முன்பு, ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம் என்று மீண்டும் 1913 எண்ணுக்கு போன் போட்டேன். என்னுடைய பெயர், முகவரி, போன் நம்பர் எல்லாம் வாங்கிக் கொண்டு புகார் எண் சொல்லாமல் இணைப்பை தூண்டித்துவிட்டார்.

இவர்கள் என் புகார் எடுத்துக் கொண்டார்களா ? என்று எதை வைத்து நம்புவது. ஒரு வாரம் கலித்து கேட்டால் இப்படி ஒரு புகார் வரவில்லை என்று சொல்லுவார்கள்.

பள்ளிகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்த .. மாணவர்கள் ஸ்ரூத்தி, ரஞ்சன் மரணமடைய வேண்டியிருக்கிறது.. அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்ய பிறந்த குழந்தை எலி கடித்து சாக வேண்டியிருக்கிறது. சென்னை கார்ப்ரேஷனில் எல்லோரும் ஒழுங்காக வேலை செய்ய... இன்னொரு சிறுவன்/சிறுமி உயிர் தேவைப்படுகிறதா ? என்று தெரியவில்லை.

உயிர் பலி வரும் இவர்கள் அலட்சிய போக்கு தொடரும் என்று நினைக்கிறேன்.

Wednesday, August 29, 2012

உலக சினிமா : Declaration of War

சமிபத்தில் பார்த்த இரண்டு பிரென்சு படங்கள் என்னை மிகவும் பாதித்தது. ஒரு படத்தின் இருந்து பாதிப்பு மீண்டு வருவதற்குள் அடுத்த படத்தை பார்த்து தவறு செய்துவிட்டேன். இரண்டு படங்களும் அடுத்த ஒரு வாரத்திற்கு எந்த படங்களும் பார்க்க முடியாமல் என்னையே ஆட்கொண்டு விட்டது.

 உலகத்தில் சிறந்த காதலர்கள் என்று ரோமியோ - ஜூலியட் என்று சொல்வோம். காரணம், காதலித்து காதலுக்காக இறந்ததால். ஒரு வேளை இவர்கள் திருமணம் செய்து வாழ்ந்திருந்தால், இவர்களை உலக காதலர்கள் பட்டியலில் நாம் சேர்த்திருப்போமா ? கண்டிப்பாக சேர்க்கலாம் என்கிறது ‘Declaration of War'.



எட்டு வயது சிறுவனுடன் மருத்துவ அறையில் நுழைகிறாள் ஜூலியட். உள்ளே நுழையும் முன் தனது காதல் கதையின் நினைவுகளை சொல்கிறாள். நண்பர்கள் ஏற்பாடு செய்த விருந்தில் ரோமியோவை பார்க்கிறாள் ஜூலியட். பார்த்த மாத்திரத்தில் இருவரும் காதல் கொள்கிறார்கள். திருமணம் செய்துக் கொள்கிறார்கள். ஷேக்ஸிபியர் வஞ்சத்தால் இறந்த காதலர்கள், மீண்டும் உயிர் கொண்டு வாழ்வது போல் வாழ்கிறார்கள்.

எல்லாம் சுபமாக நடக்க, ஜூலியட்டுக்கு கருத்தரித்து ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறாள். அதுவரை உலக காதலர்களாக இருந்தவர்கள், குழந்தையை பார்த்துக் கொள்வதில் சண்டைப்போடுகிறார்கள். அதுவும், இரவு நேரத்தில் குழந்தை அழும் போது, பசிக்காக அழுகிறது என்று அம்மா சொல்ல, இரவு முழுக்க குழந்தை எப்படி பசிக்காக அழும் என்று அப்பா கேட்கிறார்.

குழந்தையை அழைத்து கொண்டு மருத்துவரிடம் செல்ல, குழந்தையை அழுவதை நிறுத்த வழிகள் சொல்கிறார். ஒரு சமயம், குழந்தை வாந்தி எடுப்பதை பதட்டப்பட்டு ரோமியோ ஜூலியட்டுக்கு அலைப்பேசியில் அழைக்க, வேலை நடுவில் இருக்கும் ஜூலியட்டுக்கு கோபம் வருகிறது. குழந்தை விஷயத்தில் இருவருக்கு சிறு சிறு மன கசப்புகள் வருகிறது.

 சில மாதம் கழித்து, குழந்தையை ப்ளே ஸ்கூல் சேர்க்க, அங்கு “உங்கள் குழந்தை மற்ற குழந்தைகள் போல் இல்லை” என்பதை சொல்கிறார்கள். மருத்துவரிடம் குழந்தையை கொண்டு செல்ல, குழந்தைக்கு மூளையில் புற்றுநோய் இருப்பதாக சொல்கிறார்கள். அந்த மருத்துவர், மூளைக்கு என்று வேறொரு மருத்துவரை அறிமுக செய்து வைக்கிறார். மூன்று வயது நிறம்பாத குழந்தைக்கு, அருவை சிகிச்சை செய்கிறார். ஆனால், புற்றுநோய் முழுமையாக குணமைடையவில்லை. சரியான மருத்துவம், சுத்தம், காற்று எல்லாம் சேர்த்து குழந்தையை பாதுக்காக்க முடியும் என்கிறார் மருத்துவர். ஐந்து ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு தங்கள் மகனை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பது மீதி கதை.

குழந்தையை விட பெற்றோர்கள் வியாதியிடம் அதிகம் போராடுகிறார்கள். குழந்தை புற்றுநோயோடு போராடும் போது கணவன் - மனைவி உறவும் போராட்டத்தில் தள்ளப்படுகிறது. சிகிச்சைக்கு பணம், ஆருதலான வார்த்தைகள், தாம்பத்திய உறவு என்று எதிர்பார்க்கும் சராசரி பாத்திரங்களை காட்சியில் கொண்டு வந்துள்ளார்கள். இருவரும் தங்கள் குழந்தையை நினைத்து கலங்காமல், மன உறுதியுடன் இருப்பது நம்மை கலங்க வைக்கிறது.

மருத்துவமனையில் ரோமியோ, ஜூலியட் உறவினர்கள் அவர்களுக்கு ஆருதலாக இருப்பதும், ஜூலியட் அம்மா நம்பிக்கைக்காக கயிறு தருவதும், ஜூலியட் சகோதரி துணையாக இருப்பது.... துன்ப நேரத்தில் நல்ல உறவுகள் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள். இது போன்ற உறவுகள் இந்தியாவில் மட்டுமே சாத்தியம். வெளிநாட்டில் இல்லை என்ற பொய் பிரச்சாரத்தை உடைத்து எறிகிறது.

மருத்துவர்கள் என்ன தான் வேலை பளுவில் இருந்தாலும், தங்கள் குழந்தை காப்பாற்ற முடியுமா ? குழந்தையின் உடல்நிலை எப்படி இருக்கிறது போன்ற பெற்றோர்களின் கேள்விகள் பெரிய மருத்துவரிடம் கேட்க முடியாமல் சிப்பந்திகள் தடுத்தால் கோபம் வரும். சிப்பந்தியோ, டியூட்டி டாக்டரோ என்ன சொன்னாலும் கேட்க தோன்றாது. இதை அப்படியே இந்த படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.

84வது ஆஸ்கர் விருதுக்காக அந்நிய மொழி பிரிவுக்கு, பிரென்சு மொழியில் இந்த படத்தை தேர்வு செய்து அனுப்பப்பட்டது. இறுதி சுற்றுக்கு இந்த படம் தேர்வாகவில்லை என்றாலும், பார்க்க வேண்டிய படம் என்று என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இரண்டாவதாக பார்த்த பிரென்சு படம், "A Happy Event (Un heureux événement)". நேரம் கிடைத்தால் அடுத்த பதிவில் இந்த படத்தைப் பற்றி எழுதுகிறேன்.


Thursday, August 23, 2012

மாற்றம் தந்த இந்திய சினிமா : 2.சுபர்ண ரேகா

ஜெ.ஜெ.ப்ளிம்ஸ் ( அம்மாவுக்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை) தயாரிப்பில் ரித்விக் கட்டக் இயக்கியப் படம் 'சுபர்ண ரேகா'.



சுதந்திர சந்தோஷத்தை விட வலியும், வேதனையும் கொடுத்த இந்திய, பாகிஸ்தான் பிரிவினை பிந்தைய காலமான 1948ல் கதை தொடங்குகிறது. தாக்காவில் சொத்துக்களை இழந்து தன் தங்கை சீதாவுடன் அகதி முகாம்மில் இருக்கிறான் ஈஸ்வர். அவனது நண்பன் ஹரபிரசாத் சமூகத் தொண்டில் அதிக ஆர்வமுள்ளவன். பொதுவுடைமை சிந்தனையாளன். ஈஸ்வரும், ஹரபிரசாத்துக்கும் அகதி முகாம்மில் இருக்கும் சிறுவர்களுக்கு வகுப்பு எடுக்கிறார்கள். இந்த சமயத்தில் அகதி முகாம்மில் புகலிடம் கேட்டு ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த சிறுவன் அவிராம், அவனது அம்மா வருகிறார்கள். அகதி முகாமாக இருந்தாலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அங்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதுமட்டுமில்லாமல், குண்டர்கள் கூட்டம் ஒடுக்க இனத்தினரை ஒரு வேன்னில் ஏற்றி இழுத்து செல்கிறார்கள். அதில் இருந்து அவிராம் மட்டும் தப்பிக்கிறான். தாய்யை இழந்த அவிராம்மை ஈஸ்வர் ஆதரவு தருகிறான்.

பொதுவுடமை சிந்தனைவாதியான ஹரபிரசாத் காந்தியின் மரணத்துக்கு அழுகிறான். ஆனால், ஈஸ்வர் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. தன் தங்கைப் பற்றி தான் அதிகம் சிந்திக்கிறான். 

ஈஸ்வரின் நண்பன் ராம்தாஸ் அவனது மில்லில் வேலை செய்ய அழைக்கிறான். தன் தங்கை சீதாவுக்காக அவன் வேலையை ஏற்கிறான். ஆனால், அவனது ஹரபிரசாத் ஈஸ்வரை சுயநலவாதி என்று சொல்லி அவனிடம் பேச மறுக்கிறான். ஈஸ்வரின் தங்கை சீதா தாங்கள் செல்ல விருக்கும் புது வீட்டைப் பற்றி ஈஸ்வரிடம் கேட்கிறாள். அங்கு நீல ஆறு, நீல மலை, எல்லாம் இருக்குமா என்று கேட்கிறாள். ( தாக்காவை நினைவுப்படுத்துபவை). ஆனால், ஈஸ்வர் எதற்கும் பதிலளிக்கவில்லை.

தனக்கு வேலை கிடைத்த மில்லுக்கு சீதாவுடன், அவிராம்மையும் அழைத்து செல்கிறான். அந்த மில் 'சுபர்ண ரேகா' என்ற நதியின் அருகே இருக்கிறது. ரயிலில் இருந்து இறங்கியதும் மில்லில் வேலை செய்யும் முகர்ஜி அவர்களை அழைத்து சென்று அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் விடுகிறான். சீதா சங்கீதத்தில் அதிக ஆர்வமுடையவள். எப்போது நதிக்கரையில் பாடுவாள். சிறுவனான அவிராம்மை வெளியூரில் அனுப்பி படிக்க வைக்க வேண்டும் என்று ஈஸ்வர் முடிவெடுக்கிறான். 

அவிராம் ஊருக்கு செல்வதை சீதாவால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. அவன் மீது கோபப்படுகிறாள். பிறகு, சமாதானமாகி இருவரும் விளையாடுகிறார்கள். நதிக்கரை அருகில் போரால் பாதிக்கப்பட்ட வீடு, விமானம், கோயில் ஒவ்வொன்றையும் சுற்றிப்பார்கிறார்கள். விமானம் தரையிரங்கும் இடத்தில் விளையாடுகிறார்கள். போருக்கு பின் ஒழிந்து இருக்கும் கொடுமை பிஞ்சு சிறுவன், சிறுமிக்கு தெரியவில்லை.

அவிராம் ஊருக்கு சென்றதும், ஆற்றக்கரை அருகே காளி வேடத்தில் ஒருவன் பார்த்து பயப்படுகிறாள் சீதா. அப்போது ஈஸ்வரின் மேனேஜர் அங்கு வர, ‘காளி’ வேடத்தில் இருப்பவனுக்கு காசுக் கொடுத்து அனுப்புகிறார். தன் பெயர் சீதா என்றதும், மேனேஜர் ராமாயணத்தில் வரும் சீதாவின் கதையை சொல்லுகிறார். ( ராம்யாணம் - சீதையுடைய கதை என்று சொல்லுவதை இந்த இடத்தில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று)

பல ஆண்டுகள் செல்கிறது.

பழைய மேனேஜர் ஓய்வுப் பெற ஈஸ்வர் மேனேஜர் பொருப் பெற்றுக் கொள்கிறான். படிப்பு முடித்து வரும் அவிராம், தனது முதல் நாவலை சீதாவிடம் படித்து காட்டி தன் காதலை சொல்கிறான். சீதா வெட்கத்தால் அவிராம் காதலுக்கு சம்மதம் சொல்லுகிறாள். இருவரும் காதலிப்பது ஈஸ்வருக்கு தெரியவருகிறது. இதற்கிடையில், வெளியூரில் இருந்து வரும் ராம்தாஸ், தன் மில்லில் இரண்டு சதவீத உரிமையை ஈஸ்வருக்கு தருவதாக சொல்கிறான். அப்போது, ராம்தாஸ் ஈஸ்வர் அவிராமை வளர்த்து, படிக்க வைப்பதை தெரிந்துக் கொண்டு "அவன் என்ன ஜாதி தெரியாமல் ஏன் உதவி செய்கிறாய் ?" என்று கேட்கிறான். அவிராம் ஈஸ்வர் ஆசைப்படி பொறியியல் படிக்க ஜெர்மன் செல்ல நினைக்கும் போது சிறு வயதில் தொலைந்த அம்மாவை சந்திக்கிறான். மகன் பார்த்த சந்தோஷத்தில் அந்த அம்மா இறக்கிறாள். அவிராம் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவன் என்பது, ஈஸ்வருக்கு இன்னும் உறுதியாகிறது. 


அவிராமை வெளியூருக்கு அனுப்பிவிட்டு, சீதாவுக்கு அவசர அவசரமாக திருமண ஏற்பாடு செய்கிறான். திருமணத்துக்கு மறுக்கும் சீதாவை, ஈஸ்வர் அடித்து சம்மதிக்க வைக்கிறான். ஆனால், திருமண முதல் நாள் சீதா அவிராமுடன் ஓடி திருமணம் செய்துக் கொள்கிறாள்.

மேலும் சில ஆண்டுகள் செல்கிறது.

ஐந்து வயது மகனுடன் அவிராம், சீதா வறுமையில் வாழ்கிறார்கள். எழுத்தை விட்டு டிரைவராக முடிவெடுக்கிறான் அவிராம். அந்த வறுமையிலும், சீதா தன் அண்ணனை தேடி செல்ல விரும்பவில்லை. அப்படி சென்றால், உயிர் விட்டுவிடுவேன் என்கிறாள்.

ஆசையாய் வளர்த்த தன் தங்கை தன்னை பிரிந்ததில் இருந்து மனது பாதிக்கப்பட்டவனாக திறிக்கிறான் ஈஸ்வர். மில்லில் தன்னை புறம் பேசுவதை உணர்ந்தும், பேசாமல் அமைதியாக இருக்கிறான். ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் போது பாலிய நண்பன் ஹரபிரசாத் வருகிறான். தான் வாழ்க்கை தோல்வியுற்று எதுவும் இல்லாதவனாக இருப்பதை சொல்கிறான். ஈஸ்வர், ஹரபிரசாத் வேறு வேறு வழி சென்றாலும், இறுதியில் இருவரும் தோல்வி பெற்றதை பற்றி பேசிக் கொள்கிறார்கள். இறுதி நாட்களை சந்தோஷமாக கழிக்க வேண்டும் என்கிறான் ஹரபிரசாத். அவன் சொன்னதை போலவே குடி, சூதாட்டம் என்று பணத்தை செலவு செய்கிறான் ஈஸ்வர்.

அவிராம் டிரைவர் வேலை செய்யும் போது ஒரு சிறுமி மீது வண்டி ஏற்றி கொன்று விட, பொது மக்கள் அவனை அடித்துக் கொன்றுவிடுகிறார்கள். இது வரை வறுமையில் இருந்த சீதா, மேலும் வறுமையில் வாழ்கிறாள். ஒரு கட்டத்தில் விபச்சாரத்தை செய்ய வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்படுகிறாள். அதை விட பெரிய கொடுமை, முதல் வாடிக்கையாளராக அவன் அண்ணன் ஈஸ்வர் வருவது. அண்ணன் முன் விபச்சாரியாக நிற்க முடியாமல் தற்கொலை செய்துக் கொள்கிறாள் சீதா. தற்கொலைக்கு தூண்டியதற்காக ஈஸ்வர் கைது செய்யப்பட்டு சிறை செல்கிறான். சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவன் வேலை பரிபோனதை தெரிந்துக் கொள்கிறாள். அதாரமற்ற தன் வாழ்க்கை இருக்கிறதே என்று நினைக்கும் போது, சீதாவின் மகன் அவனை 'மாமா' என்று அழைக்கிறான்.

'சுபரணரேகா' ஆற்றங்கரையில் மீண்டும் தன் வாழ்க்கையை ஈஸ்வர் தொடங்குவது படம் முடிகிறது.

சுபரணரேகா என்றால் நிற்காமல் ஓடும் நதி என்று பொருள். 1962 எடுக்கப்பட்ட இத்திரைப்படம், வெளியானது 1965ல் தான்.

பெங்காலி படங்களில் மட்டும் எப்படி சிறுவர்களுக்காக உலகத்தை அழகிய கவிதைப் போல் காட்டுகிறார்கள். போரால் பாதிக்கப்பட்ட இடத்தில், விமானம் தரையிறங்கும் இடத்தை சிறுவர்கள் பேசும் போது, போரில் கொடுமையை மறந்து இவர்களை ரசிக்க வைக்கிறது.

கருப்புவெள்ளை திரைப்படத்தில் கதாநாயகி இவ்வளவு அழகாக தமிழ் படங்களில் காட்டியிருக்கிறார்களா ? என்று தெரியவில்லை. நாயகி அவ்வளவு அழகாக இருக்கிறார். நாயகி பாத்திரத்துடன் ஒட்டி வரக்கூடிய பாடல், அர்தம் புரியாமல் இருந்தாலும் நெஞ்சய் அழகாக வருடுகிறது.

அவிராமை சகோதரனாக நினைத்து படிக்க வைத்தவர். ஜெர்மன் அனுப்பி பொறியியல் படிக்க வைக்க ஆசைப்படும் ஈஸ்வர், தன் சகோதரியை ஒடுக்கப்பட்ட இனத்தில் இருந்து வந்தவன் என்று ஒரு காரணத்துக்காக மறுக்கிறார் என்பதை தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன் தங்கைக்காக பொதுவுடைமை சிந்தனை விட்டு, சுய நலமாக முடிவெடுக்கிறார். மேட்டுக்குடியில் பிறந்த ஆணவமோ, அகந்தையோ அந்த பாத்திரத்துக்கு காட்டவில்லை. அவிராம், சீதா திருமணத்துக்கு சம்மதித்தால், ராம்தாஸ் மூலம் வரும் பங்கு பாதுக்கப்படும் என்று அஞ்சுவதாக இருந்தாலும், அச்சத்தை விட இருவர் கோபம் தான் அந்த பாத்திரத்துக்கு இருக்கிறது. அப்படி, ஜாதி பார்ப்பவன் ஏன் ஒடுக்கப்பட்ட இனத்தில் இருப்பவனை படிக்க வைக்க வேண்டும் ?

பொதுவுடைமை சிந்தனையாளரின் தோல்வியையும் இந்த படத்தில் சொல்லியிருக்கிறார். ஈஸ்வரின் நண்பன் ஹரபிரசாத், தன் சிந்தனையில் தோல்வி அடைந்து நெழிந்து ஈஸ்வர் வருகிறார். பெரிய எழுத்தாளராக வேண்டும் என்று நினைக்கும் அவிராமும் தன் நாவலை தூக்கிப் போட்டு, டிரைவராக மாறுகிறார். எழுத்தை வாழ்க்கையாக ஏற்றுக் கொள்வதும் , சமூகத்தீய்மைக்காக போராடுவதும் வாழ்க்கையை ஆரம்பிக்கும் முன்பே தோல்வியை  ஏற்றுக் கொள்வதை காட்டியுள்ளார்கள். அதே சமயம், சுய நலமாக முடிவெடுத்த ஈஸ்வரும் இறுதில் தோற்றுப் போகிறான். அதே சமயம், வசதியான ராம்தாஸ் மேலும் மேலும் பணத்தை பெருகி வெளிநாட்டுக்கெல்லாம் செல்கிறான். சிந்தனை, கருத்து என்று இருந்தால் பணம் சம்பாதிக்க முடியாது என்பதை காட்டுகிறது. அதுவும், எதார்த்த உண்மையே !!!

இந்திய சினிமாவில் ரித்விக் கட்டக்கின் ஆளுமை யை நம்மால் மறக்க முடியாது ஒன்று. இன்று, இந்திய சினிமாவை நாம் பேசுவதாக இருந்தால், பெங்காலி படங்களை தவிர்த்து பேசாமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு சத்தியஜித்ரே, ரித்விக் கட்டக் பெங்காலி படங்கள் மக்கள் மனதில் பதியவைத்திருக்கிறார்கள்.

இந்திய - பாகிஸ்தான் பிரிவினையில் எத்தனையோ சோகக் கதைகள் ஒழிந்து இருக்கிறது. அதை சொல்லும் துணிச்சல் நம் இந்திய சினிமாவுக்கு இல்லை என்பது தான் வருத்தமான ஒன்று. ஆரம்ப காட்சியில் இந்திய - பாகிஸ்தான் பிரிவினையை வன்முறையால் உணர்த்தாமல் , காட்சியால் உணர்த்திய ரித்விக் கட்டக்கு கோடான கோடி நன்றி.

Friday, August 17, 2012

மனநல காப்பகத்தில் ஒரு நாள் !!!


ஆகஸ்ட் 15 அன்று, தோழர் சீதா கோபாலகிருஷ்ணன் எழுதிய ‘தொழிற்சங்கம் நமது இதயம்நூல் வெளியீட்டு விழாவை அயினாவரம் ESI மனநலக்காப்பக அரங்கில் ஏற்பாடு செய்திருந்தார். 1979ல் முதல் தோழர் அங்கு பணி செய்வதால் நூல் வெளியிட அவருக்கு அங்கு அனுமதியளித்திருந்தனர். இன்னும் ஐந்து மாதங்களில் வேலை ஓய்வுப் பெற போகிறார். அவரை எனக்கு இரண்டு வருடங்களாக தெரியும் என்பதால், என்னையும் நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைத்திருந்தார்.

சுதந்திர தினம் என்பதால், காலை எங்கள் பகுதியில் கொடியென்ற நிகழ்ச்சி, என் மகன் பள்ளி நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மூன்றாவது நிகழ்ச்சியாக அவரது நூல் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டேன். அங்கு சென்றதும், இது வரை நூல் வெளியீட்டு விழாவில் பார்க்காத ஒரு விஷயத்தை தோழர் சீதா கோபாலகிருஷ்ணன் செய்திருந்தார். பார்வையாளர் ஒரு பகுதியில் மனநல பாதிக்கப்பட்டவர்கள் அமர்ந்து இருந்தனர் !!!!


உண்மையில், இவர்களை மனநல பாதிக்கப்பட்டவர்கள்/ இழந்தவர்கள் என்று எப்படி அழைப்பது ? அளவுக்கு அதிகமான கோபம், துக்கத்தில் துவண்டு போகும் மனம், கருத்துக்கு எதிர் கருத்து கூறினால் நண்பனை எதிரியாக பார்க்கும் எண்ணம்.... என்று நம்மில் மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். எதோ ஒரு கனத்தில் மனிதன் தன் மனநிலையை இழக்கிறான். கொஞ்ச நேரத்தில் மீண்டும் தன் இயல்பு நிலைக்கு திரும்புகிறான். இது மனிதனின் சராசரி குணமாக இருக்கும் போது எல்லோரும் மனநிலை இழப்பவர்களே !! இவர்கள் மட்டும் எப்படி நாம் ஒதுக்க முடியும் ??
இவர்களை மனநிலை இழந்தவர்கள் என்று சொல்லுவதை விட, மனநிலை மறந்தவர்கள் என்று சொல்லுவது தான் சரி !! மனநிலை ஒன்று இருப்பதை மறந்து எப்போதும் ஒரே மனநிலையில் இருப்பவர்கள். ஒரு கனம் சராசரி மனிதர்களோடு இவர்களை ஒப்பிட்டு பார்த்துக் கொண்டேன். சிலர் சீரூடையணியாமல் வெளியே இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் குறையறிந்து, பச்சையாடையில் சிகிச்சை பெறுகிறார்கள்.


இவர்களும் பள்ளி மாணவர்கள் போல் மேடையில் என்ன பேசுகிறார்கள் என்று தெரியாமல் கை தட்டினார்கள். உட்கார வைத்த இடத்தில் உட்கார்ந்து இருந்தார்கள். நிகழ்ச்சி இடையே வெளியே சென்று வரும் பழக்கம் இவர்களிடம் இல்லை. இவர்கள் வரைந்த ஓவியத்தை அரங்கு சுவற்றில் ஒட்டிவைத்திருந்தார்கள். உண்மையில் இவர்களின் சிரிப்பு நூறு கவிதை சொல்லும். பல புத்தகங்கள் எண்ணங்கள் இவர்களிடம் மறைந்துக் கிடக்கிறது.

நிகழ்ச்சி முடியும் போது கனத்த மனதோடு வெளியே வந்தேன்.

Friday, August 10, 2012

டெஸோ - விமர்சனத்துக்கு அப்பால் !!!!!!!

[இந்த கட்டுரை தொடங்கும் முன் ஒன்று தெளிவாக சொல்லிக் கொள்கிறேன். நான் கலைஞரின் இலக்கிய மேடைப்பேச்சு ரசிகனே தவிர, தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. தி.மு.கவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.]

ஆக்ஸ்ட் 12 டெஸோ மாநாடு அறிவித்ததும், கலைஞர் ஈழ மக்களுக்காக இப்பொது ஏன் கண்ணீர் வடிக்கிறார் ? போர் சமயத்தில் மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்று ஈழ ம்க்களை காப்பாற்றி இருக்க வேண்டாமா ? இது வெறும் முதலை கண்ணீர் என்று பல விமர்சனங்கள் வந்துக் கொண்டு இருக்கின்றன. இனிமேலும் வரும்.

முதலில் ஒன்று தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். ஈழப் பிரச்சனையால் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும், யாருக்கும் ஓட்டு வங்கி பெருகவில்லை. பெருக போவதில்லை. இலங்கைப் போர் உச்சத்தில் இருக்கும் போது, 2009ல் நடந்த பாராளமன்ற தேர்தலில் தி.மு.க போட்டியிட்ட 18 இடங்களில் 16 இடங்கள் வெற்றிப் பெற்றது. [ காங்கிரஸ் 18ல் 9 இடங்கள் வெற்றி பெற்றதே என்று கேட்கலாம். இந்த வெற்றியே அவர்களுக்கு அதிகம். இந்த கதை இங்கு வேண்டாம்.]

ஈழப்பிரச்சனை அதிகம் பேசி வை.கோ எந்த தேர்தலிலும் சொல்லிக் கொள்ளும் படியாக பெரிய வெற்றிப் பெறவில்லை. கலைஞர் டெஸோ மாநாட்டை வெற்றிக்கரமாக நடத்தினாலும், அடுத்த நான்கு ஆண்டு தமிழ்நாட்டில் அம்மாவின் ஆட்சி தான். பாராள மன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடம் இருக்கிறது. அதற்குள் மக்கள் டெஸோ மாநாட்டை மறந்துவிடுவார்கள். அரசியல் ரிதியாக கலைஞருக்கோ அல்லது தி.மு.கவுக்கோ டெஸோ மாநாடு எந்த பயனும் இல்லை.


பெரும்பான்மையான தமிழக மக்கள் ஈழப்பிரச்சனையை பக்கத்து நாட்டு பிரச்சனையாக தான் பார்க்கிறார்கள். ஈழப்போரில் கலைஞர் மௌனமாக இருந்தது குற்றம் என்றால், எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக கலைஞரின் ஒரு ரூபாய் அரிசி வாங்கி மக்கள் அதைவிட குற்றவாளிகள். இதை ஈழத்தை வைத்து அரசியல் செய்யும் துணிச்சலாக சொல்வார்களா !!!!

**

கலைஞருக்கு எதிரான விமர்சனம்

ஈழத்தின் வீழ்ச்சி... தமிழர்களின் ஒற்றுமையின்மையே !!!!! ராஜபக்ஷேக் கூட அடுத்த இடத்தில் தான் வருகிறார். 40,000 தமிழர்கள் இறந்தும், அங்கு இருக்கும் அரசியல் கட்சிகள் இன்னும் தனித் தனியாக தான் இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவில் இருந்து சென்று பார்த்த தூது குழுவினர்களை தனித்தனியாக தான் பார்த்தார்கள். பாதிக்கப்பட்ட அவர்களே இன்னும் ஒற்றுமையில்லாமல் இருக்கும் போது, இங்கு இருக்கும் தமிழ்நாடு என்ன செய்ய முடியும் ?

இன்னும் பிரபாகரன் வருவர். ஐம்பதேழு வயதில் புது இராணுவம் அமைத்து, அவர்களுக்கு பயிற்சி கொடுத்து ஈழம் மீட்பார் என்று அரசியல் நடத்துபவர்கள், ஏன் இருக்கும் ஈழ தமிழ் உயிர்களை மீட்க அல்லது காக்க எந்த நடவடிக்கை இல்லை ? பிரபாகரன் இருக்கும் போது ஈழம் சென்று போட்டோ எடுத்துக் கொண்டவர்கள், இப்போது ஏன் அங்கு சென்று அவர்களுக்கான உதவியை செய்யவில்லை. இவர்களில் வை.கோ கொஞ்சம் பரவாயில்லை. ஈழ நாட்டுக்காக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் போன்ற ஆக்கப்பூர்வமாக பேசுகிறார். மற்றவர்கள் ம்ம்ம்.

ஈழப்போர் முடியும் போது கலைஞர் முதலமைச்சாராக இருந்தார். அவ்வளவு தான். கலைஞர் விமர்சனம் செய்பவர்கள் ஏன் எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்யவில்லை ? 1987ல் ராஜீவ் - ஜெயவர்தனே - பிரபாகரன் ஒப்பந்தம் செய்யும் போது எம்.ஜி.ஆர் எங்கு சென்றார். உடல்நலம் சரியில்லாமல் இருந்தால், அவரது கட்சி என்ன நிலைப்பாட்டில் இருந்தது ? அந்த ஒப்பந்தத்தில் இருப்பது எல்லாம் அவர் எற்றுக் கொண்டாரா ? புலமைப்பித்தன் ‘இலங்கை பிரச்சனையில் ராஜீவ் காந்தி எம்.ஜி.ஆரை மிரட்டினார்’ என்று கூறினாரே ! அதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து என்ன பதில் ? என்று பல கேள்விகள் கேட்கலாம். ஆனால், மீண்டும் இது ஒரு விமர்சன கட்டுரையாக முடியும். நமது நோக்கம் அதுவல்ல.

ஈழப்போர் பொருத்தவரை மத்திய அரசு என்ன நிலைப்பாடில் இருந்ததோ, மாநில அரசு அதே நிலைப்பாடில் தான் இருந்தது. இந்திரா காந்தி ஆதரித்த போது ஆதரித்தார்கள் (எம்.ஜி.ஆர்). ராஜீவ் எதிர்க்க தொடங்கியதும் மௌனமானார்கள். அன்று முதல் இன்று வரை தமிழ முதலமைச்சர்களாக இருந்த எம்.ஜி.ஆர், கலைஞர் மௌனமாக தான் இருந்தார்கள்.

கலைஞர் மீது அதிகம் வைக்கப்படும் விமர்சனம் இது தான். ஈழப்போர் சமயத்தில் கலைஞர் மத்தியில் இருந்து தனது ஆதரவை திரும்ப பெற்று இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், அனைத்து மாநிலங்களும் தமிழகம் உட்பட கலைஞரை வசைப்பாடியிருப்பார்கள். நாடு முழுக்க மறு தேர்தல் நடந்திருக்கும். தமிழ்நாட்டுக் கூட மக்களே கலைஞரை தீட்டி தீர்த்து இருப்பார்கள். தன் மாநில மக்களே ஆதரிக்காத ஒன்றை கலைஞர் செய்ய வேண்டும் என்று எப்படி எதிர்ப்பார்க்க முடியும் ?

இன்று கூடாங்குளத்தில் அனு மின்நிலையத்திற்காக போராடும் மக்களுக்கு சென்னையில் என்ன ஆதரவு இருந்தது ? முல்லை பெரியால் நீர் போராடும் விவசாயிகளுக்கு வேலூரில் இருந்து என்ன ஆதரவு கிடைத்தது ? சென்னையில் வாழ அதிகமாக பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களுக்கு ( என்னையும் சேர்த்து) மத்தியில் கூடாங்குளத்தில் என்ன நடந்தால் என்ன மனநிலை தான் பலருக்கும். மக்கள் ஆதரவு, மக்கள் ஒற்றுமை இல்லாத எந்த போராட்டமும் வெற்றிப் பெறாது.

***

டெஸோவில் விவாதிக்கப்பட வேண்டியது

டெஸோ வில் தனி ஈழம் கோரியோ அல்லது இலங்கை அரசை வசைப்பாடியோ, இருக்கும் உயிர்களுக்கு பிரச்சனை உண்டு பண்ணுவதற்கு பதிலாக அவர்களை காக்க எடுக்கப்படும் கூட்டம். நாளையே ஈழம் மலர வேண்டும் என்று துடிப்பவர்கள் அங்கு வாழ மக்கள் வேண்டும் என்று யோசிக்க வேண்டும் !!

முதலில் மக்களை காப்போம், பிறகு ஈழத்தை மீட்டு கொள்ளுங்கள். ஈழத்தில் அகதி முகாமில் பலரது குரல், " எங்களை வாழ விடுங்கள்" என்று கெஞ்சும் நிலையில் விடுப்பட வேண்டும். அதை முதலில் செய்ய வேண்டும்.

இந்திய ஊடகங்கள் ஈழப்பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும் என்றால் தமிழகத்தில் இரண்டு கட்சிகள் கையில் தான் உள்ளது. ஒன்று தி.மு.க, இன்னொன்று அ.தி.மு.க. வேறு எந்த கட்சியும் காட்டு கத்து கத்தினாலும் தமிழகம் தாண்டி கேட்காது. தி.மு.க ஈழப்பிரச்சனை கையில் எடுத்துள்ளதை, ஆதரித்து இருக்கும் ஈழ உயிர்களை காப்பாற்ற வேண்டும். டெஸோவில் முக்கியமான விவாதிக்கப்பட வேண்டியதாக நாம் கருதுவது....

1. இந்தியாவுக்கு குடிபெயர்ந்த அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கினால் இந்தியாவில் நிம்மதியான அவர்களால் வாழ முடியும்.

2.போரில் பாதிக்கப்பட்ட இடங்களை சரி செய்து, மீண்டும் தமிழ் மக்கள் வாழ வழி வகுக்க வேண்டும். குறிப்பாக கல்வி, மருத்துவ வசதி போன்றவற்றை அமைத்துதர வேண்டும். இலங்கை அரசுக்கு பணம் தேவைப்பட்டால், ஆயுதம் வழங்கிய கையால் பண உதவி செய்ய இந்திய அரசு தயாராக இருக்க வேண்டும்.

3.போரால் உடலால், மனதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும். தொழில், வேலை போன்றவற்றை விவாதிக்கப்பட வேண்டும்.

4.போர் முடிந்து மூன்று வருடங்களாகியும், பல ஆயிரக்கணக்கான ஈழ தமிழர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்து, இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அரசு உதவி செய்ய வேண்டும்.

5. தங்க வீடு வசதி செய்துக் கொடுத்து, அவர்களும் இலங்கை முதல் தர குடி மக்களாக நட்த்த வேண்டும்.

இன்னும் விவாதிக்க எவ்வளவோ உள்ளது. ஆனால், ”கலைஞர் சொல்லியாச்சு ஈழம் உறுதியாச்சு” போன்ற பேனர் வாசகங்கள் மீண்டும் அரசியலாக்க தான் பார்க்கிறார்கள். கலைஞர் கவனத்தை பெற டெஸோவை விமர்சனமாக்குகிறார்கள்.

ஈழப்பிரச்சனை வைத்து யார் அரசியல் செய்தாலும், ஒன்று தெளிவாக புரிந்துக் கொள்ளுங்கள். ஈழத்தால் உங்களுக்கு ஒரு ஓட்டுக்கூட அதிகமாக கிடைக்க போவதில்லை. இதைப் பற்றி எதையும் டெஸோவில் விவாதிக்கப்படவில்லை என்றால்.... இதுவும் சாதான மாநாடாக தான் முடியும்.

[ தனி ஈழம் பற்றி பேசவில்லை. ராஜபக்‌ஷே மீது போர் குற்றம் சுமத்த வேண்டும் போன்ற வாதங்களை கொஞ்ச நாளுக்கு பேசாமல் இருப்பது, அங்கு இருக்கும் தமிழர்களுக்கு நல்லது. இப்போதை அங்கு அகதி முகாமில் இருக்கும் தமிழர்களுக்கு இந்த இரண்டும் பலனில்லை.]

 **

இதற்கு மேலும், ”கலைஞர் துரோகி, அவர் எப்படி ஈழத் தமிழருக்காக மாநாடு நடத்தலாம் என்று கேட்பவர்கள், ஈழப் பிரச்சனைக்கான மாநாடு யார் நடத்த வேண்டும் என்று நீங்கள் கூறுங்கள். வை.கோ, சீமான், பழ.நெடுமாறன் என்று கூறலாம். எத்தனையோ மாநாடுகள் அவர்கள் நடத்திவிட்டார்கள். போர் முடிந்து மூன்று வருடத்தில், அங்கு எந்த முன்னேற்றமும் இல்லை. கொட நாடு சென்ற அம்மா நடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா !! தராளமாக நடத்தட்டும். யார் வேண்டாம் என்றார்கள்.

[விட்டா... சோனியா காந்தி, ராஜபக்‌ஷே நடத்த வேண்டும் என்று இவன் சொல்லுவான் என்று விமர்சிப்பீர்கள். ஆட்சியில் இருப்பவர்கள் போராட தொடங்கிவிட்டால் அவர்கள் இருக்கும் பதவிக்கு மரியாதை கிடையாது.]

நம் கருத்து இருக்கும் ஈழ உயிர்களை பாதுகாக்க வேண்டும். உலகளவில் ஈழப்பிரச்சனை எடுத்து செல்ல வேண்டும். அவர்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்க வேண்டும். அதை யார் செய்தால் என்ன ?

Tuesday, August 7, 2012

அணு உலை எதிர்ப்பு தினம்


ஐன்ஸ்டின் தான் கண்டுபிடித்த அணு ஆயுதத்தை பயன்ப்படுத்த வேண்டாம் என்று எவ்வளோ முயன்றும், அன்றைய அமெரிக்க அதிபர் ட்ரூமென் அணு ஆயுதத்தை ஹிரோஷிமா மீது இன்று(அகஸ்ட் 6, 1945) தான் பயன்ப்படுத்தினார். தன் வாழ்நாள் முழுக்க செய்த பாவத்திற்கு, அணு ஆயுதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தார் ஐன்ஸ்டின்.

அனைத்து நாடுகளுக்கும் யூரேனியத்தை அளிக்கும் ஆஸ்திரேலியா நாட்டில் ஒரு அணு உலைக் கூட இல்லை. வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் அணு கைவிட வேண்டும் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள். காரணம், ஹிரோஷிமா அணு குண்டு உலகிற்கு ஏற்ப்படுத்திய பாதுப்பு.

நேற்றோடு ( ஆகஸ்ட் 6) ஹிரோஷிமா குண்டு வெடிப்பு நிகழ்ந்து 67 ஆண்டுகள் ஆகிறது. அதை நினைவூட்டு வகையில் நேற்று வள்ளுவர் கோட்டம் அருகே “அணு உலை” எதிர்ப்புக்கான கூட்டம் நடந்தது.

இரண்டாம் உலகப் போரில் எத்தனையோ மாற்றுதிறனாளிகளை உருவாக்கிறது. அவர்களுக்கு வாழ்வாதாரமே கேள்விக்குறியாக இருக்கும் போது, தெரிந்தே நாம் ஏன் அணு உலை மூலம் இன்னும் மாற்றுதிறனாளிகளை உருவாக்க வேண்டும் என்ற கேள்விகள் ஏழுப்பப்பட்டது.

தங்களைப் போல் மற்றவர்களும் மாற்றுதிறனாளிகளாகக் கூடாது என்று இவர்களின் போராட்டம் வெற்றிப் பெற வேண்டும். இவர்களுக்கு இருக்கும் சமூக உணர்வு இரண்டு கை, கால் இருந்து... எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்க்கும் எனக்கு குற்றவுணர்வு மட்டுமே மிஞ்சுகிறது.



LinkWithin

Related Posts with Thumbnails