வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, April 29, 2013

RAW (5) : சொந்த விமானத்தையே எரித்த இந்தியா !

கங்காவை கடத்த வேண்டும் என்பது தான் குரேஷி, அஷ்ரபின் திட்டமாக இருந்தது. இரண்டு பேர் ஒரு பெண்ணை கடத்தப் போவது ரா அத்தியாயத்தில் பெரிய விஷயமாக இருக்காது. ஆனால், கங்கா என்பது பெண் அல்ல. விமானம்.

ஒரு நாட்டில் பெண்கள் கடத்துப்படுவதும், பாலியல் தொல்லையில் அவதைப்படுவதும் அன்றாடம் நடக்கும் சம்பவமாக இருக்கிறது. எத்தனையோ ‘கங்கா’ க்கள் ஏதாவது ஒரு பகுதியில் கடத்தப்படுகிறார்கள். ஆனால், விமானக் கடத்தல் என்பது அப்படி இல்லை. ஒரு நாட்டின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட விஷயம். எங்காவது விமானம் கடத்தப்பட்டால், அந்த நாடு உலக ஊடகங்களுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும். அதில் பயணம் செய்த வெளிநாட்டு பயணிகளின் உயிருக்கு உத்தரவாதம் தர வேண்டியது இருக்கும். கடத்தப்பட்ட விமானம் மீட்கும் வரை, அந்த நாட்டின் மானம் செய்திதாளில் பறந்துக் கொண்டு இருக்கும்.

30 ஜனவரி, 1970ல் குரேஷியும், அஷ்ரபும் ‘கங்கா’ என்கிற இந்திய போக்கர் 27 விமானத்தை எந்த பிசுரு இல்லாமல் கடத்தினர். கடத்தப்பட்ட விமானம் பாகிஸ்தானில் இருக்கும் லாகூரில் தரையிறக்கினர். இந்தியா பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐக்கு விமானக்கடத்த சதி திட்டத்தில் பங்கு இருப்பதாக கூறியது. ஆனால், பாகிஸ்தான் இதை செய்தவர்கள் JKLFயை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதியது. கடத்தியவர்கள் தங்கள் நிபந்தனைகள் எதுவும் சொல்லவில்லை. இரண்டு நாள் பரப்பரப்பாக இருந்த விமான கடத்தல், பயணிகள் ஒன்றன் பின் ஒன்றாக பிப்ரவரி 1ல் விடுவிக்கப்பட்டனர். கடப்பட்ட விமானமும் கொளுத்தப்பட்டு தீக்கு இறையானது.
இந்திய விமானம் கடத்தப்பட்டு எரிக்கப்பட்டுயிருக்கிறது. இந்திய எப்படி பதில் அடிக் கொடுக்க போகிறது யோசித்து மண்டை உடைத்துக் கொண்டு இருக்க, பிரதமர் இந்திரா காந்தி இந்திய எல்லை மேல் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை விதித்தார். மீறி பறந்தால் சுட்டு விழ்த்தப்படும் என்று எச்சரித்தார்.

மீண்டும் ஒரு யுத்தம் வரும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு…. ‘இவ்வளவு தானா உங்க டக்கு’ என்று சொல்லும் அளவிற்கு இந்திரா காந்தியின் அறிவிப்பு இருந்தது. கிழக்கு பாகிஸ்தானில் பிரச்சனை நடக்கும் சமயத்தில் இந்திரா காந்தி இந்த அறிவிப்பு எரிச்சலை வரவழைத்தது.

பாகிஸ்தான் இந்தியாவின் ரா இக்கடத்தல் நாடகத்தை நடத்தியதாக கூற, இந்தியா இதை மறுத்தது.காரணம், கடத்திய இரண்டு பேரை கைது செய்து பாகிஸ்தான் விசாரித்ததில், இரண்டு பேரும் கஷ்மீர் போராளிகள் அல்ல ‘ரா ‘ உளவாளிகள் என்று தெரிவந்தது. குரேஷி இந்திய காவல்துறையில் பயணியாற்றியவர். இந்திரா காந்தி லேசுப்பட்ட அம்மையார் அல்ல என்பது ஐ.எஸ்.ஐக்கு புரிந்தது.

கிழக்கு பாகிஸ்தானுடன் பிரச்சனை தலைக்கு மேல் இருக்கும் சமயத்தில் ராவின் இந்த சதி திட்டம் மேலும் அவர்களுக்கு பிரச்சனைக்குள்ளாகியது. அதாவது, மேற்கு பாகிஸ்தான் தனது இராணுவத்தை கிழக்கு பாகிஸ்தானுக்கு அனுப்புவதாக இருந்தால் ஆப்கான், சீனா என்று சுற்றிக் கொண்டு செல்ல வேண்டும்.

இந்தியா கிழக்கு பாகிஸ்தான் பகுதி உதவுவதற்காக ஏன் தங்களது விமானத்தை கடத்தி அவர்களே எரிக்க வேண்டும் கேள்வி எழுந்தது. இந்தியாவுக்கு பிரச்சனை தருபவர்கள் யாராக இருந்தாலும் ஐ.எஸ்.ஐ எப்படி வழி காட்டி உதவுமோ, பாகிஸ்தானுக்கு பிரச்சனை தருபவர்கள் யாராக இருந்தாலும் ரா உதவும். அந்த வகையில் இந்தியா வங்க மொழி பேசும் கிழக்கு பாகிஸ்தானுக்கு உதவ தீர்மானித்திருந்தது.

அது மட்டுமில்லாமல், கங்கா விமானத்தின் சேவையை இந்தியா நிறுத்தி பல வருடங்கள் ஆனது. யாரும் பயன்படுத்தாமல் இருந்த விமானத்தை, கடத்தப்பட்ட சிறிது நாட்கள் முன்பு தான், மீண்டும் கங்கா விமான சேவையைப் பயன்படுத்தப் போவதாக அறிவித்தார்கள்.

கிழக்கு பாகிஸ்தானுடன் மேற்கு பாகிஸ்தானுக்கு இருக்கும் பிரச்சனையின் வரலாற்று பின்னனியை கொஞ்சம் பார்த்தால், ராவின் திட்டம் எந்த அளவுக்கு துள்ளியமானது என்பது புரியும். இந்திரா காந்தி அரசியல் தொலை நோக்கு பார்வை பாராட்டாமல் இருக்க முடியாது.

வெள்ளையன் இந்தியாவை விட்டு சென்ற பொது இந்தியா – பாகிஸ்தான் என்று இரண்டு நாட்டை உருவாக்கினான். ஆனால், இந்தியாவில் இருந்த ஒற்றுமை பாகிஸ்தானில் இல்லை. கிழக்கு பாகிஸ்தானில் பெங்கால மொழியும், மேற்கு பாகிஸ்தானில் உருது மொழியும் பேசுபவர்கள். மதத்தால் முஸ்லிம்களாக இருந்தாலும், மொழியால் வேறுப்பட்டு இருந்தது அவர்களின் பிரிவுக்கு ஒரு காரணமாக இருந்தது.

1948ல் மார்ச் மாதம், டாக்கா உள்ள கர்ஸான் மன்றத்தில் பட்டமளிப்பு விழாவில் பேசுவதற்காக, பாகிஸ்தானை நிறுவிய ஜின்னா அவர்கள் பேசும் போது, “ பாகிஸ்தான் தேசிய மொழி உருது மட்டும் தான்” என்றார். அப்போது, “இல்லை… இல்லை” என்று எதிர்க்குரல் மக்கள் எழும்பினர். அன்றைய தேதியில் பாகிஸ்தானில் உருது பேசுபவர்களை விட வங்காள மொழி பேசுபவர்கள் தான் அதிகம்.

1949ல் மௌலான பஷானி, கிழக்கு பாகிஸ்தானில் “அவாமி முஸ்லிம் லீக்” என்ற கட்சியை தொடங்கி, ‘வங்காளி மொழி முன்நிறுத்தி’ ஷேக் முஜிபுர் ரஹ்மான் என்பவர் முதல் முதலாக கூட்டம் நடத்தினார்.

அரசியல் ரீதியாக மேற்கு பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தானைக் காட்டிலும் பலன்களை அனுபவித்து வந்தது. மதத்தை காட்டிலும் கிழக்கு - மேற்கு பாகிஸ்தானில் உருது - வங்களாம் மொழி அவர்கள் பிரிவினைக்கு காரணமாக இருந்தது.

1971ம் ஆண்டு மார்ச் மாதத்தில், கிழக்கு பாகிஸ்தான் படையினரிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. டாக்காவில் விமானம் மூலம் படைகள் இறங்கத் தொடங்கின. முதல் குண்டு வெடித்தது.

கிழக்கு பாகிஸ்தான் படையில் பலர் கைது செய்யப்பட்டார்கள். மேற்கு பாகிஸ்தான் இராணுவம் தீவிரமான அடக்குமுறையில் இறங்கியது.

“முக்தி ஃபௌஜ்” என்ற பெயரில் 10,000 வங்க வீரர்கள் தாய் நாட்டைக் காக்கும் பணியில் இறங்கினார்கள். அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியை ரா மேற்க்கொண்டது. ஆயுதங்களும் வழங்கியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நிவாரப்பணிகளும் செய்தது.

முக்தி ஃபௌஜ் பாகிஸ்தானுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுப்படும் போது, மேற்கு பாகிஸ்தானில் இருந்த உதவி கிடைக்காமல் இருக்கவும், அப்படி கிடைக்க இருந்தாலும் காலதாமதமாக இருக்கவும் தான் இந்திய உளவுத்துறை ‘கங்கா’ விமான கடத்தல் திட்டத்தை போட்டது என்று கூறப்படுகிறது.

இந்தியாவை எதிர்க்காமல் கிழக்கு பாகிஸ்தானை கட்டுப்படுத்த முடியாது என்று பாகிஸ்தான் முடிவு செய்தது. விளைவு…. டிசம்பர் 3 அன்று, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான போரை அறிவித்தது, இந்திய எல்லைக்குள் விமான தாக்குதலை நிகழ்த்தியது. இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

இந்த யுத்தத்தின் முடிவில் பாகிஸ்தான் தோல்வியுற்று, “பங்களாதேஷ்” என்ற தேசம் உருவானது நம் பள்ளிப்பாடங்களில் படித்தக் கதை.

பங்களாதேஷ் என்ற தேசம் உருவாகாமல் இருந்திருந்தால், இந்தியா மேற்கு – கிழக்கு பாகிஸ்தான் என்று இரண்டு பக்கம் எதிரிகளை சமாளிக்க வேண்டிய இருந்திருக்கும். இப்போது, வட கிழக்கு இந்திய பகுதியில் பாகிஸ்தான் உடுருவல் பிரச்சனை இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் கிழக்கு பாகிஸ்தானுக்கு உதவியது தான் காரணம். ( இன்று, அந்த பகுதியில் வேறு பிரச்சனைகள் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.)

‘பங்களாதேஷ்’ என்ற தேசம் உருவாக இந்தியா உதவி செய்தது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், இந்தியாவுக்கு ‘உதவியாக ராவின் செயல்பாடு மிகவும் முக்கியமானது என்பது யாராலும் மறுக்க முடியாது.

Friday, April 26, 2013

அந்த மூன்று பெண்கள் (2) - 8

எம்.ஜி.ஆர் முதல்வரானதை கொண்டாட தெருவோரம் இருந்தவர்கள் எல்லாம் பட்டாசு வெடித்து கொண்டாடினர். எனக்கு நல்லது நடக்கும் போது தமிழ் நாட்டுக்கு நல்லது நடக்கின்றது என்பது போல் தெரிந்தது. முதல் நாள் பள்ளியில் ரகுவை விட்டேன். முதல் நாள் என்பதால் அரை நாள் தான் பள்ளி வகுப்பு இருந்தது. ஜோசப்பிடம் சொல்லிவிட்டு என் மகனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தேன்.தன் பள்ளியில் நடந்தை எல்லாம் அம்மாவிடமும், சிவகாமியிடம் சொல்லிக் கொண்டு இருந்தான். அம்மா அவன் பேசும் போதெல்லாம் "உங்க மாமா இப்படி தான் பேசுவாரு" என்று சொல்வார். அம்மா ஒரு முறை கூட அப்பாவை பற்றி சொல்லவேயில்லை. மாமா அந்த அளவிற்கு அப்பாவை மறக்கடித்து குடும்பத்தை பார்த்திருகிறார்.

சீனியர் முத்தையாவிடம் சேர்ந்து ஒரு வருடத்தில் தனி அலுவலகம் வைக்க வேண்டும் என்று நானும் ஜோசப்பும் முடிவு செய்திருந்தோம். ஆனால், நீதிதுறையில் எல்லாம் ஒரே ஆண்டில் எப்படி கற்பது ? நான்கு வருடம் கலித்து இப்போது எங்களுக்கு தனி அலுவகம் வைக்க முடிவு செய்தோம்.

அலுவலத்திற்காக பல இடங்கள் பார்த்தோம். சில இடங்களில் வாடகை அதிகமாக இருந்தது. வாடகை சரியான இடத்தில் 'வழக்கறிஞருக்கு இடமில்லை' என்றனர். நான் என்ன தீண்டதகாதவர்களா தெரியவில்லை. வழக்கறிஞருக்கு இடம் கொடுத்தால் பிரச்சனை தன்னுடன் வைத்துக் கொள்வது போல் ஒரு சிலர் நினைக்கிறார்கள்.

பல அலைச்சலுக்கு பிறகு, எங்களுக்கு எழும்பூர் அருகே இடம் கிடைத்தது. மாத வாடகை ஆற நூறு ரூபாய். இரண்டு நாற்காலி, மேஜை எல்லாம் வைத்து எங்கள் அலுவலகத்தை அமைத்தோம். ஒரு அலமாரியில் எங்களுக்கு தேவையான சட்ட புத்தகங்களையும் அடுக்கி வைத்தோம்.

ஜோசப் கடவுள் நம்பிக்கை இருப்பவன் என்பதால் அவன் நாற்காலிக்கு மேல் சிலுவையில் அறைந்த இயேசு படம் மாட்டினான். எனக்கு நாற்காலிக்கு மேல் பெரியார், அண்ணா படத்தை மாட்டி வைத்தேன். அலுவலகம் அமைத்து விட்டோம். இனி வழக்குகள் தான் வர வேண்டும்.

எங்கள் சீனியரும் வழக்கறிஞர் தொழிலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். தன்னிடம் வரும் கட்சிகாரர்களை எல்லாம் எங்களிடம் அனுப்பி அவர் உதவி செய்தார். அதனால், புது அலுவகம் வைத்ததும் சீனியரால் எங்களுக்கு கட்சிக்காரர்கள் வர தொடங்கினர்.

முதல் நட்பு, முதல் காதல், முதல் முத்தம்.... எப்படி இதை எல்லாம் மறக்க முடியாதோ முதல் முதலில் நமக்கு கிடைத்த வேலையும் மறக்க முடியாது. நாங்கள் அலுவலகத்தை ஆரம்பித்து எங்களுக்கு வந்த முதல் வழக்கு 'சொத்து விவகாரம்'.

வழக்கு போட்டவர் என் கட்சிக்காரர் மகாதேவன். அவரின் அப்பா தேவராஜனின் வப்பாட்டியான சுந்தரிக்கு எதிராக வழக்கு. தேவராஜன் இறக்கும் போது எந்த உயிலும் எழுதாததால் சொத்துக்காக மகாதேவனுக்கும். சுந்தரிக்கும் பிரச்சனை. சிவில் வழக்கு. எப்படியும் குறைந்தது பத்து வருடம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது. ஆனால், எங்கள் முதல் வழக்கை அவ்வளவு நாள் நீடிக்க எங்களுக்கு விருப்பமில்லை.


சட்டப்படி தேவராஜனின் சொந்துக்களுக்கு என் கட்சிக்காரர் மகாதேவன் தான் வாரிசு. தன் சந்தோஷத்திற்காக வைத்துக் கொண்ட சுந்தரி எக்காரணத்தாலும் வாரிசாக நியமிக்க முடியாது. தேவராஜன் மூலம் சுந்தரிக்கு எந்த குழந்தையும் பிறக்கவில்லை. குறிப்பிட்டு எந்த சொத்தும் சுந்தரி மேல் உயில் எழுதாததால் எல்லா சொத்துகளும் மகாதேவனுக்கு தான் சென்று அடைய வேண்டும். அடையும். அது தான் சட்டம்.

தேவையில்லாமல் பிரதிவாதி சுந்தரி சொத்தில் பங்கு கேட்டு எதிர் வழக்கு போட்டுருப்பது நேரத்தையும், பணத்தையும் விரணயம் செய்வது போல் ஆகும். அவளின் வக்கிலும் வழக்கில் வெற்றி பெறலாம் என்று நம்ப வைத்து அவளிடம் இருந்து அதிக பணம் வாங்குவதிலும், வாய்தா வாங்குவதிலும் தான் கவனமாக இருந்தான். தீர்ப்பு என்று வந்தால் மகாதேவனுக்கு தான் ஆதரவாக இருக்கும் என்று தெரிந்தும் அந்த வக்கில் முடிந்தவரை சுந்தரியிடம் இருந்து பணத்தை கரந்தான்.

நானும், ஜோசப்பும் சுந்தரியிடம் தனியாக மகாதேவனுகாக பேச சென்றோம். அப்போது அவளுடைய வக்கில் எங்களை பேச விடவில்லை. வேறு வழியில்லாமல் அந்த வக்கிலை வைத்தே சுந்தரியிடம் சமாதானம் பேசினோம். அவள் கேட்கவில்லை. வழக்கு கோர்ட் ஹியரிங்க்கு(Hearing) வந்தது.

சுந்தரி மகாதேவனின் அப்பா தேவராஜனை சட்டப்புர்வமாகவோ, சம்பிரதாய முறைப்படியோ திருமணம் செய்யவில்லை. இவர்கள் சேர்ந்து வாழ்ந்ததை சொல்ல இரண்டு சாட்சிகளை எதிர் கட்சி வக்கில் கொண்டு வந்தார். நான் இவர்களை ‘Hearsay evidence’ என்று சொல்லி வாதாடினேன்.

Hearsay evidence என்றால் தனக்கு நேரடியாகச் செய்தி அறியாது, பிறர் கூற அது பற்றிக் கேள்விப்படுதல் ஆகும். சிவில் வழக்குகளில் இது போன்ற சாட்சிகள் ஏற்றுக் கொள்ளப்படாது. எல்லாம் பத்திரத்தில் இருந்தால் தான் நீதிபதி ஏற்றுக் கொள்வார்.

சுந்தரி, தேவராஜன் சேர்ந்து வாழ்ந்ததற்கு குழந்தைகளோ, உறவினர்களோ என்று வேறு சாட்சிகள் இல்லை. எதிர் கட்சி கொண்டு வந்த இரண்டு சாட்சிகளும் பலவீனமானது என்று சொல்லி நீதிபதி வேறு ஆதாரங்களை கேட்டார். வழக்கம் போல் எதிர்கட்சி வக்கில் தனக்கு நேரம் வேண்டும் என்று சொல்லி வாய்தா வாங்கினார்.

எதிர்கட்சி வக்கில் சுந்தரியிடம் இவர்கள் சேர்ந்து வாழ்ந்தை பார்த்ததாக ஒரு பொய் சாட்சியை தயார் செய்ய சொன்னார். ஆனால், சுந்தரிக்கு பொய் சாட்சி ஏற்பாடு செய்வதில் கொஞ்சம் பயம் இருந்தது. எதிர் கட்சி வக்கில் 'பொய் சாட்சி இல்லை என்றால் இந்த வழக்கில் வெற்றி பெற முடியாது' என்று கூறிவிட்டார். அப்போது தான் சுந்தரி தன் வழக்கில் பலவீனமாக இருப்பதை உணர்ந்தாள்.

பிரதிவாதி சுந்தரி எங்கள் அலுவலகத்திற்கு வந்து தான் போட்ட வழக்கை திரும்ப பெற்றுக் கொள்வதாக கூறினாள். அதற்கு தான் தங்கி இருக்கும் வீட்டை மட்டும் தனக்கு கொடுக்க வேண்டும் என்று நிபந்தனையும் வைத்தாள். நான் இதை என் கட்சிக்காரர் மகாதேவனிடம் சொன்னேன். முதலில் சுந்தரிக்கு ஒரு பைசா கூட கொடுக்க முடியாது என்று முரண்டு பிடித்தார். நான் மகாதேவனிடம் " உங்க பக்கம் தான் நியாயம் இருக்கு. இருந்தாலும் இந்த கேஸோட தொடர்ந்தா, சொத்த உங்க பேரன் பிள்ளைங்க தான் அனுபவிக்க முடியும். அதனால கொஞ்ச விட்டு கொடுங்க ! " என்றேன்.

நான் சொல்வதில் உண்மை இருப்பதை உணர்ந்த மகாதேவன் சுந்தரி இருக்கும் வீட்டை மட்டும் அவளுக்கு விட்டு கொடுத்தார். அதற்கு சுந்தரி மற்ற சொத்துக்களில் தனக்கும், தன்னை சேர்ந்தவர்களுக்கு சம்மந்தமில்லை என்று எழுதிக் கொடுத்தாள். குறுகிய காலத்தில் நாங்கள் எடுத்த சிவில் வழக்கை வெற்றிகரமாக முடித்தோம். எங்கள் முதல் வெற்றியை சீனியர் முத்தையா அவர்கள் வாழ்த்தினார். மகாதேவனும் நல்ல பீஸ் கொடுத்ததோடு இல்லாமல், தன் வியாபாரத்திற்கு லீகல் அட்வைஸராக எங்களை நியமித்தார்.

முதல் வழக்கு சிவில் வழக்காக இருந்ததால் என்னவோ எங்களுக்கு வந்த பெரும்பாலான வழக்குகள் சிவில் வழக்குகளாகவே இருந்தன.

Wednesday, April 24, 2013

அந்த மூன்று பெண்கள் (2) - 7

என் பக்குத்தறிவுக்கு மட்டுமல்ல, தமிழர்களின் பகுத்தறிவுக்கு விளக்கேற்றியவர் பெரியார். என்னை வாழ வைத்த மாமாவை இழந்த இதே நேரத்தில், பெரியாரின் மரணம் என்னை மேலும் பாதித்தது. அரசு மரியாதையோடு அவர் உடல் தகனம் செய்ய போவததை என் மாமனார் சொன்னார்.

முதுமையிலும் கம்பிரமாக பேசக்குடியவர், எங்கள் சுய மரியாதையின் தந்தை என்று கண்கலங்கி சொன்னார். என் மாமாவின் மரணத்தை எப்படி என்னை பாதித்ததோ அதை விட பெரியாரின் மறைவு தமிழ் நாட்டை பாதிக்கும்.

பெரியாரின் சுய மரியாதை கொள்கையை ஏற்றுக் கொண்டதால், உறவினர்கள் எத்தனைப் பேர் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். எத்தனைப் பேர் மன உலைச்சல் ஆளாகியிருக்கிறார்கள். மனைவி, பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்கு தினமும் பதில் வேண்டியிருக்கும். இத்தனையும் கடந்து ஒருவன் சுய மரியாதை கொள்கையை ஏற்றுக் கொள்கிறான் என்பதை இந்த சமூகம் உணரும் போது தான், சுய மரியாதைக்காரர்களை மதிப்பார்கள்.

பார்ப்பனர்கள் இதை அரசியலாக பார்ப்பதால், அவர்களின் தாக்கம் மற்றவர்களையும் சுய மரியாதைக்காரர்களையும் அரசியல்வாதியாக பார்க்க வைக்கிறது. பல வலிகளை சுமந்து ஏன் சுயமரியாதைக் கொள்கையை ஏன் ஏற்றுக் கொள்கிறார்கள் என்ற கேள்வியை தங்களுக்குள்ளே ஒவ்வொருவனும் கேட்டு கொண்டால், சுயமரியாதையில் இருக்கும் சுகத்தை புரியும். பெரியார் இறந்து ஒரு வாரம் கலித்து, ஜோசப்பும், நானும் முத்தையா என்பவரிடம் ஜூனியராக பணிக்கு சேர்ந்தோம்.

 சீனியர் முத்தையா ஐம்பது வயது தாண்டியவர். சட்டத்துறையில் நல்ல அனுபவமுடையவர். வழக்குகளை அவர் கையாளுவதை பார்த்து நாங்கள் இருவரும் பிரம்மித்து விட்டோம். மாதம் ஐந்நூறு சம்பளம் கொடுப்பதாக சொன்னார். எனக்கு சம்பளம் பெரிதாக தெரியவில்லை. வழக்குகளை பற்றி கற்றுக் கொள்ள வேண்டும் அவ்வளவு தான். ஒரு வருடம் கலித்து தனி அலுவகம் வைக்கலாம் என்று ஜோசப் கூறினான். எனக்கும் அது தான் சரி என்று பட்டது.

 சிதம்பரத்தை விட்டு வந்தது அம்மாவுக்கு பிடிக்கவில்லை. நான் சொல்வதற்கெல்லாம் 'சரி சரி' என்று சொல்லிவிட்டு மனதில் ஏதோ போட்டு குழப்பிக் கொண்டே இருந்தார். அம்மாவுக்கு பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டதில் இருந்து நான் என்ன செய்தாலும் எந்த மாற்று கருத்தும் சொல்வதில்லை. கடவுள், பூஜை என்று இருந்து விடுவார். முன்பு போல் என்னிடம் அதிகம் பேசுவதில்லை.

அம்மா சாப்பிடுவதற்கு மட்டும் தான் பூஜை அறையை விட்டு வருவாள். என் மனைவி சிவகாமி சமைப்பதில் ஏதாவது குற்றம் குறை சொல்லிக் கொண்டே இருப்பாள். ஆரம்பத்தில் அம்மா பேசுவதது சிவகாமிக்கு கஷ்டமாக இருந்தது. பிறகு அம்மாவின் குணம் அவளுக்கு பழகிவிட்டது. ஒரு நாள் கூட அம்மாவை பற்றி தவறாக சொன்னதில்லை. தாயில்லாமல் அவள் வளர்ந்ததால் என் அம்மாவை தன் அம்மாவாக தான் பார்த்தாள். ஆனால், அம்மா தான் இன்னும் அவளை ராசியில்லாதவளாக பார்த்தாள். ஹோட்டலை விற்று சென்னைக்கு வந்ததும், அந்த எண்ணம் மேலும் அதிகமானது. சின்ன சின்ன விஷயங்களை பெரிதாக சொல்லி கொண்டு இருந்தாள்.

என் மனைவிக்காக பணிந்து பேசும் போதெல்லாம், " இது வரைக்கும் என்ன எதிர்த்து ஒரு வார்த்த பேசுவியா. இப்போ கல்யாணத்துக்கு அப்புறம் நா பண்ணுறது தப்புனு சொல்லுற அளவுக்கு நீ வளர்ந்திட்ட...." என்பாள். இன்னும் நான் ஏதாவது பேசினால், கண்களில் நீர் வைத்துக் கொண்டு நான் 'செத்து போறேன்' என்பாள். அதனால், அம்மாவிடம் அதிகம் பேசாமல் இருந்து வந்தேன்.

சிவகாமியிடம் அம்மா எது பேசினாலும் பெரிதாக எடுத்துக் கொள்ள கூடாது என்று சொல்லி வந்தேன். அம்மா அடிக்கடி சிவகாமியை குறை சொன்னாலும், மாமியார் கொடுமை என்று சொல்லும் அளவிற்கு இல்லை.

ஒரு முறை, பரூக் தன் குடும்பத்துடன் எங்கள் புது வீட்டுக்கு வந்திருந்தான். பாத்திமா எங்கள் வீட்டுக்கு வாங்கி வந்த பலகாரங்களை சிவகாமியிடம் கொடுத்து சமையல் அறைக்கு சென்றார்கள். இருவரும் சேர்ந்து சமைத்து ஒரு குடும்பமாக சாப்பிட வேண்டும் என்று முன்பே பரூக்கிடம் சொல்லியிருந்தேன். சிவகாமியும், பாத்திமாவும் சேர்ந்து சமைத்துக் கொண்டு இருக்க சாப்பிட போகும் எங்கள் நிலைமை நினைத்து பயந்திருந்தோம்.

என் அம்மா பரூக்கின் அம்மா ஆயிஷாவிடம் என்னை பற்றி சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தார். நான் முன்பு போல் இல்லையாம். மனைவிக்கு அதிகம் பணிந்து பேசுகிறேனாம். அவர்கள் என் அம்மாவுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அம்மா என்னை பற்றி இப்படி சொன்னதற்கு எனக்கு வருத்தமாக தான் இருந்தது. ஆனால், நான் வருத்தப்பட்டு வந்த விருந்தாளிகளுக்கு தெரிய கூடாது என்பதில் அமைதியாக இருந்தேன். போக போக அம்மா மனம் மாறிவிடும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருந்தது. இதே போல் ஒரு நாள், ஜோசப் தன் மனைவி ஜாஸ்மின் அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்தான்.

நேரம் கிடைக்கும் போது நண்பர்கள் வீட்டுக்கு வருவதும், நாங்கள் அவர்கள் வீட்டுக்கு செல்வதுமாக இருந்தோம். புது ஊருக்கு வந்த உணர்வு, கொஞ்ச கொஞ்சமாக மறைய தொடங்கியது.

நாங்கள் சென்னை வந்து இரண்டு மாதமானது.

கோர்ட் வேலை எல்லாம் முடித்து விட்டு வீட்டுக்கு சென்ற போது அம்மா வாயில் சக்கரை தினித்தார்.

"டேய் ! நீ அப்பாவாக போற...." என்றார்.

சென்னைக்கு வந்து அம்மா சிரிப்பதை இன்று தான் நான் பார்க்கிறேன். மாமாவின் மரணம், ஹோட்டல் விற்றது, சிதம்பரத்தை காலி செய்தது என்று தன் எல்லா கவலைகளை மறந்து பேர குழந்தை பிறக்க போவதை நினைத்து சந்தோஷமாக இருந்தார். நான் அப்பாவாக போவதை விட அம்மாவை பழையப்படி சந்தோஷமாக பார்த்தது தான் எனக்கு பெரிய சந்தோஷமாக இருந்தது.

அம்மா வழக்கம் போல் கருவுற்ற என் மனைவிக்காக கடவுளிடம் நன்றி சொல்ல பூஜையறைக்கு சென்றார். அவளை கருவுற செய்தவன் எனக்கு வாழ்த்துக்கள் மட்டுமே !! எப்படியோ அம்மா பழையப்படியானதே எனக்கு போதும் என்று இருந்தது.

என் அறைக்கு சென்று சிவகாமியை பார்த்தேன். வெட்கப்பட்டு திரும்பிக் கொண்டாள். நான் அவளை கட்டியனைத்தேன். எத்தனையோ முறை அவளை கட்டி அணைத்திருந்தும், இப்போது இரண்டு பேரை சேர்த்து கட்டியணைப்பது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. நாளை, எங்கள் அணைப்பை ஒரு குழந்தை வந்து தடுக்கும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். சிவகாமியின் வயிற்றை தடவி பார்த்தேன். இப்போதே குழந்தை வெளியே வந்து என்னிடம் பேச கூடாதா என்று தோன்றியது.

என் மாமனார் இனிப்புகளோடு வந்திருந்தார். தலைபிரசவம் அம்மா வீட்டில் பார்க்க வேண்டும் என்ற போதிலும் அங்கு பெண்கள் யாரும் இல்லாததால் எங்கள் வீட்டிலே பார்த்து கொள்கிறோம் என்றோம்.

அம்மா சிவகாமியை அன்போடு கவனித்து கொண்டார். அவள் மீது உள்ள கோபம், வெறுப்பு எல்லாம் மறைந்திருந்தது. அவளை பூ போல் பார்த்துக் கொண்டார். பிரசவ நாள் நெருங்க நெருங்க சிவகாமி பயம் அதிமானது. அம்மா அவளுக்கு தைரியமுட்டினாள்.

கோர்ட் வேலையாக ஜோசப்பிடம் ஒரு பத்திரத்தை பற்றி பேசிக் கொண்டு இருந்தேன். அப்போது அலுவகத்திற்கு போன் வந்தது. என் மாமனார் தான் பேசினார். சிவகாமிக்கு பிரசவ வழி வந்திருப்பதாக கூறினார். நான் அந்த பத்திர வேலையை ஜோசப்பிடம் கொடுத்து விட்டு சிவகாமியை பார்க்க சென்றேன்.

 மாலை ஆறு மணி.

சிவகாமி பிரச வேதனையில் நாக்கை கடித்து கத்தி கதறுவது காதில் கேட்டது. உடம்பில் இருக்கும் நாடி, நரம்பு இழுத்துக் கொண்டு கத்தினாள். அவள் ஒவ்வொரு முறையும் கத்தும் போதும் என் கண்களில் இருந்து நீர் துளி தரையில் விழுந்துக் கொண்டு இருந்தது.

இரவு ஒன்பது மணி.

முதலில் கத்தியதை விட இன்னும் அதிகமாக கத்தினாள். இடையில் சத்தம் கேட்காமல் இருந்தது. திடீர் என்று சத்தம் போட்டாள். ஏன் இவ்வளவு நேரம் குழந்தை பிறக்காமல் இருக்கிறது. பிரசவ அறையில் இருந்து வந்த சிப்பந்தியிடம் " எதுக்கு விட்டு விட்டு கத்துறாங்க...."

"பிரசவ வலினா அப்படி தான். வலி எடுக்கும் போது கத்துவாங்க. கொஞ்ச வலி தாங்கிட்டு இருப்பாங்க. எங்கள கேள்வி கேட்காம வேல செய்ய விடுங்க" என்று சொல்லி மருத்துவரின் அறையில் இருந்து எதோ எடுக்க சென்றாள்.

நல்லிரவு 12 மணி.

நீண்ட நேரம் மருத்துவமனையில் அங்கும் இங்கும் நடந்துக் கொண்டு இருந்தேன். பிரசவம் என் மனைவிக்கு என்றாலும், வலி எனக்கு இருந்தது. ஆறு மணி நேரமாக நடந்திருக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. உடல் முழுக்க வேர்வையுமாக இருந்தது. மருத்துவமனையில் இருக்கும் மின் விசிரியில் கீழ் நின்றேன். வேர்வை தனிந்தது. மனதில் படபடப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது.

இரவு 2 மணி

மருத்துவமனையில் அப்படியே இரண்டு மணி நேரம் உடகார்ந்தப்படி தூங்கிவிட்டேன். என் மாமனார் என்னை தட்டி எழுப்பி டீ குடிக்க அழைத்தார். என்னால் எதுவும் சாப்பிட முடியவில்லை. எட்டு மணி நேரம் பிரசவ வலி எடுத்திருக்கிறது. இன்னும் ஏன் குழந்தை பிறக்காமல் இருக்கிறது ? பத்து தடவைக்கு மேல் வெளியே வந்த சிப்பந்தியிடம் கேள்வி கேட்டுவிட்டேன். என்னை பார்த்தாலே முறைத்து கொள்ளும் அளவிற்கு கேள்விகள் கேட்டுயிருக்கிறேன்.

கொஞ்ச நேரத்தில்.... ஒரு சிப்பந்தி வெளியே வந்தாள். நான் மீண்டும் அவளிடம் சென்று கேட்க ஒரு மாதிரியாக இருந்தது. அந்த பெண்ணே சிரித்தப்படி எங்கள் அருகில் வந்தாள். " ஆண் குழந்தை பொறந்திருக்கு....." என்று மருத்துவ சிப்பந்தி சொன்னாள்.

அம்மாவின் கண்களில் ஆனந்த கண்ணீர். என் மாமனாருக்கு சந்தோஷம்.

அம்மா என்னிடம், "உங்க மாமா உனக்கு குழந்தையா பொறந்திருக்காரு" என்று சொன்னார்.

நான் மாமாவுக்கு செய்ய நினைத்தை எல்லாம் என் மகனுக்கு செய்ய வேண்டும். அவன் ஆசைப்பட்டதை எல்லாம் நான் செய்து தர வேண்டும். என் வாழ்க்கையில் நான் அடுத்த கட்டத்தை நோக்கி சென்று இருக்கிறேன் என்று மகன் பிறந்த போது புரிந்தது.

அம்மா, சிவகாமி மகனை புதிதாய் பூத்த மல்லிகை பூ போல் ஒவ்வொரு விஷயத்தை பார்த்து பார்த்து செய்தனர். என் மாமாவின் நினைவாக என் மகனுக்கு அவர் பெயரையே வைத்தேன். 'ரகுராம்'.

நாட்கள் உருண்டோடியது. என் மகனுக்கு மூன்று வயது வந்தவுடன் அவனை பள்ளியில் சேர்க்க நினைத்தேன். அம்மா விஜயதசமி அன்று பள்ளி சேர்த்து விடு என்றார். அதில் எனக்கு நம்பிக்கையில்லை. இருந்தாலும், அம்மாவிடம் இதைப்பற்றி வாதம் செய்திருக்க முடியாது. ஐந்தாறு வருடங்களாக ஏற்றுக் கொண்ட பகுத்தறிவு பேசுகிறேன். ஆனால், அம்மா பிறந்ததில் இருந்து கடவுள் நம்பிக்கை உடையவர். என்னால் எப்படி மாற்ற முடியும். சுயமரியாதைக்காரர்கள் குடும்பத்தில் சந்திக்கும் மிக பெரிய சவால் என்பது என்னைப்போல் இருப்பவர்களுக்கே தெரியும்.

ஜோசப்பின் நண்பர் ஒருவரின் சிபாரிசு மூலம் ரகுவுக்கு பள்ளியில் இடம் கிடைத்தது. அவனை முதல் நாள் பள்ளிக்கு அழைத்து செல்லும் போது பட்டாசு வெடிகள் எல்லாம் வெடித்து சந்தோஷமாக பலர் ஆரவாரம் செய்தனர். இன்று தீபாவளி கூட இல்லை. எனக்கு ஒன்றும் புரியவில்லை.

"வாத்தியார் முதலமைச்சராயிட்டார்...." கோஷங்கள் பலர் எழுப்பினர்.

Monday, April 22, 2013

RAW (4) : மாலத்தீவு ஆக்கிரமிப்பு

“நம் கொள்கை என்ன ? செய்துக் கொண்டு இருக்கும் காரியம் என்ன ?” 

 எதற்காக இந்த விஷப்பரிட்சையில் இறங்க வேண்டும் ? 

யாரை நம்பி ஒரு தீவை கட்டுப்படுத்தும் முயற்சியில் இவர் இறங்குகிறார். 

தீவை ஆக்கிரமிப்பு செய்தால், நாளை உலகம் நம் போராட்டத்தைப் பற்றி தவறாக பேசுமே ! இவர்களுக்கு ஆளும் ஆசையில் தான் போராட்ட குழு நடத்துகிறார்கள் என்று எல்லா பத்திரிக்கைகளும் எழுதுமே ! 

இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை மற்ற நாடுகள், தீவுக்கு ஆதரவாக வந்தால் நம்மால் சமாளிக்க முடியுமா ? 

- இப்படி பல கேள்விகள், விவாதங்கள் அந்தப் போராட்ட குழுக்களுக்குள் நடைப்பெற்றது. என்ன கேள்வி கேட்டாலும், யார் கேட்டாலும் மாலத்தீவின் ஆட்சியை கவிழ்த்து, ஆக்கிரமிக்கப் போவதில் உறுதியாக இருந்தார் உமா மகேஸ்வரன்.

உமா மகேஸ்வரன் ? எங்கோ ஈழப் போராட்டத்தில் கேள்விப்பட்ட பெயர் தெரிகிறதா ? சந்தேகம் வேண்டாம். புளோட் (PLOTE) போராட்டக் குழுவின் தலைவன் உமா மகேஸ்வரன் தான் மாலத்தீவில் கலகம் செய்து, ஆக்கிரமிக்க நினைத்தார்.

இலங்கை அரசுக்கு எதிராக போராட வேண்டிய ஈழப்போராளிகள் ஒரு தீவை ஆக்கிரமிக்க திட்டமிட்டது முரணாக தெரியலாம். தங்களை இரண்டாம் தர குடிமகன்களாக நடத்தும் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி, விடுதலைப் புலிகளிடம் இருந்து பிரிந்து, தனக்கென்று தனியாக ஒரு போராட்டக் குழுவை உருவாக்கியவர் தான் உமா மகேஸ்வரன். சிங்களர்களிடம் இருந்து தமிழ் மக்களை காப்பாற்ற நினைக்கும் தலைவன், எப்படி ஒரு தன்னாட்சி புரியும் தீவை ஆக்கிரமிக்க நினைக்கிறார் என்று அவர் கூட்டத்தில் இருப்பவர்களே கேள்வி கேட்டனர்.

மாலத்தீவை ஆக்கிரமித்தால், தங்கள் போராட்டம் உலகளவில் பேசப்படும், மற்ற நாடுகளின் நட்பு கிடைக்கும், தங்கள் ஆயுதங்களை சேகரித்து வைக்க தளமாக இருக்கும் என்று திடமாக நம்பினார் உமா மகேஸ்வரன்.

தங்கள் உரிமைக்காக தங்கள் எல்லைக்குள் தாக்குதல் நடத்தும் வரை தான் அவர்கள் போராளிகள். தங்களுக்கு சம்மந்தமே இல்லாத ஒரு இடத்தில், எல்லை தாண்டி தாக்குதல் நடத்தினால், அது தீவிரவாதம் என்று தான் சொல்வார்கள். உரிமைக்காக போராடுகிறோம் என்று சொன்னால் யார் நம்புவார்கள். இந்த உண்மை உமா மகேஸ்வரனுக்கு புரிந்ததா ? இல்லை அவருக்கு பின் பக்கத்தில் இருந்து ஆட்டி வைத்தவர்களுக்கு தெரிந்ததா ? என்று தெரியாது. மாலத்தீவில் ஆட்சி செய்தும் அப்துல் கயூம் கவிழ்க்க வேண்டும். அது தான் முடிவு என்றார்.

மாலத்தீவு. இலங்கைக்கு அருகில் இருக்கும் தீவு. இந்தியாவுடன் அதிக நெருக்கமில்லாத, பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருக்கும் அப்துல் கயூம் ஆட்சி செய்கிறார். ஏற்கனவே, ஆட்சி செய்தவர்களை கவிழ்த்து, விரட்டி அடித்து ஆட்சியை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையே வைத்து ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று நினைத்தார் உமா மகேஸ்வரன்.

ஐ.பி.கே.எப் கண்காணிப்பில் இருந்து எப்படி கப்பலில் ஏறுவது ? இந்திய கடல் வழியாக தான் மாலத்தீவுக்கு செல்ல வேண்டும். இந்திய இராணுவம் நம்மை தாக்கினால் என்ன செய்வது ? உமா மகேஸ்வரனின் திட்டம் புளோட் குழுவுக்கே பைத்தியக்காரத்தனமாக தான் தெரிந்தது.

 “வழியில் எந்த பிரச்சனை வராது. நமக்கு உதவ பல நண்பர்கள் இருக்கிறார்கள். நம் போராட்டத்திற்கு ஒரு தனி தளம் வேண்டும். அதற்கு மாலத்தீவு தான் சரி. அதை அடைந்துவிட்டால், பிறகு இலங்கை அரசை ஆட்டிப்படைக்கவும், மற்ற நாடுகளின் உதவிக் கோரவும் வசதியாக இருக்கும்” என்றார்.

எந்த நம்பிக்கையில் உமா மகேஸ்வரன் இப்படி செய்கிறார் என்று கொஞ்சம் வியப்பாக தான் இருந்தது. ஆனால், உமா மகேஸ்வரன் சொல்லுவதுப் போல் நடந்துவிட்டால் மாலத்தீவில் இருந்தப்படி இலங்கை அரசுக்கு எதிராக போர் தொடுக்கலாம் என்று போராட்டக்காரர்கள் நினைத்தார்கள்.

1988 நவம்பர் 2… ‘அல் அகமத்’ என்ற போலிப் பெயர் கொண்ட கப்பலில், ப்ளோட் போராளிகள் ஆயுதங்களுடன் பிரயாணம் செய்தனர். வழியில் எந்த ஆபத்தும் இல்லை. தாக்குதல் நடத்த வழி வகுத்து தருவது போலவே சிறு பிரச்சனை இல்லாமல் மாலத்தீவை அடைந்தனர். அமைதியான சுற்றுலா பயணிகள் போலவே மாலத்தீவில் மேல் நகரத்துக்குள் நுழைந்தனர். இதற்கு முன், சுற்றுலா பயணிகள் போலவே சிலர் அங்கு இருந்ததால், அவர்களின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை விரைவாக நடந்தது.

வானொலி, விமான நிலையம் , தொலைக்காட்சி, அரசு கட்டிடங்கள் என்று ஒன்றன் பின் ஒன்றாக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். முழுத் தீவும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டோம் என்று நினைத்த நேரத்தில் தான் அந்த அதிர்ச்சியான செய்தி கிடைத்தது. அதிபர் கயூம் அதிபர் மாளிகையில் இல்லை. அவரைக் கைது செய்யாமல் இந்தப் ஆக்கிரமிப்பு வெற்றி முழுமைப் பெறாது. அடுத்து எதைத் தாக்குவது என்ற குழப்பத்தில் வேறு இருந்தனர். அவர்களின் குழப்பம் தீருவதற்குள், அதிபர் கயூம் தான் தங்கியிருந்த இடத்தில் இருந்தே வானொலியில் சர்வதேச உதவிக் கேட்டார்.

உதவிக்கு அவர்களின் நட்பு நாடான பாகிஸ்தான் வரும் என்று நினைத்த அதிபருக்கு, இந்தியாவிடம் இருந்து உதவி கிடைத்தது. ரா உதவியுடன் 2000 பேர் கொண்ட இந்திய விமான வீரர்கள், கப்பல் படையினர்கள் மாலத்தீவுக்கு அனுப்பினார். 12 மணி நேரத்திற்குள், விமான நிலையம், வானொலி என்று போராட்டக்காரர்களிடம் இருந்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அதிபர் கயூம் மீட்கப்பட்டார். இந்தியாவின் இந்த மீட்பு பணிக்கு ‘ஆப்ரேஷன் காக்டஸ் (Operation Cactus) என்ற பெயரிட்டனர்.இலங்கைக்காக விடுதலைப் புலிகள், புளோட் போன்ற போராட்ட அமைப்புகளைப் பற்றிய தகவல் சேகரித்து வைத்திருந்ததால், இந்திய இராணுவத்திற்கு ரா தகவல் கொடுப்பதில் பெரிய சிக்கல் இருக்கவில்லை. ரா உளவு அமைப்பின் உதவியில்லை என்றால், இவ்வளவு விரைவில் ஆக்கிரமிப்புக் ரர்களை இந்தியப்படையால் வெளியேற்றியிருக்க முடியாது.

உமா மகேஸ்வரனின் இந்த தாக்குதலுக்கு பின் புலமாக இருந்தது முன்னாள் மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் நசீர் என்று அப்துல் கயூம் கூறினார். ( இரண்டு வருடத்திற்கு பிறகு, நசீர் மீது குற்றம் சுமத்தியற்கு வருத்தம் தெரிவித்தார்.)

இந்த தாக்குதலில் உமா மகேஸ்வரனுக்கு உதவியாக இலங்கையில் வசிக்கும் ‘அப்துல்லா’ என்ற மாலத்தீவு வியாபாரி பணமும், ஆயுதமும் கொடுத்ததாக கண்டறியப்பட்டது. 1988ல் 8.2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களை இலங்கையில் இருந்து இறக்குமதி செய்து வந்த மாலத்தீவு 1989ல் 5.8 மில்லியனாக குறைத்துக் கொண்டது. அதுமட்டுமில்லாமல், இந்திய – மாலத்தீவு உறவு வலுவடைந்தது.

 “ நட்பு நாடுக்கு உதவக் கூடிய நல்ல வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது” என்று இராஜீவ் காந்தி பேசினார். ஆனால், மேலை நாட்டு ஊடகங்கள் இந்தியாவின் தலையீட்டை வேறு விதமாக விமர்சித்தது.

“ ஐ.பி.கே.எப் கண்காணிப்பில் இருக்கும் இலங்கையில் இருந்து எப்படி கலகக்காரர்கள் வெளியே வந்தார்கள். இந்தியாவுக்கு தெரியாமல் இவர்கள் வந்திருக்க முடியாது” என்றனர். மேலும், கலகக்காரர்கள் இந்தியாவுக்கு தெரியாமல் இந்திய கடல் பகுதி வழியாக எப்படி வந்திருக்க முடியும் ? என்று கேட்டனர். ரா உதவியுடன் தான் உமா மகேஸ்வரன் மாலத்தீவை ஆக்கிரமிக்க திட்டமிட்டார் போன்ற குற்றச்சாட்டுகள் வைத்தனர்.

“தெற்கு ஆசியாவின் தங்கள் கை ஓங்கியிருக்க இந்தியா நடத்திய சதியே “ என்றார்கள்.

இன்று வரை, கேள்விகளுக்கு இந்தியா மறுத்ததே தவிர அவர்கள் கேள்விக்கு இந்திய அரசோ, ரா உளவு நிறுவனமோ பதில் அளிக்கவில்லை.

ரா உளவு அமைப்பு தூண்டுதலால் உமா மகேஸ்வரன் மாலத்தீவு ஆக்கிரமிக்க நினைத்தாரோ அல்லது வேறு ஒருவர் தூண்டுதலில் உமா மேஸ்வரன் ஆக்கிரமிக்க நினைத்தாரோ என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. பின்னாளில், உமா மகேஸ்வரன் கொல்லப்பட்டப் போது விடுதலைப்புலிகள் உமாவை இந்தியாவின் கைக் கூலி என்று குற்றம் கூறியதும், மாலத்தீவின் ஆக்கிரமிப்பின் சந்தேகத்தை மேலும் வலுவூட்டியது. ரா தான் உமா மகேஸ்வரனை கொன்றது என்ற இன்னொரு சர்ச்சையும் உண்டு.

உளவுத்துறையில் எல்லாம் மர்மமான விஷயம். எல்லாவற்றையும் வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியாது. எல்லா யூகங்களுக்கும் உளவுத்துறை பதில் அளிக்காது. அதன் செயல்பாடு எப்போதுமே மர்மமாக இருக்கும்.

எது எப்படி இருந்தலும் இந்திய – மாலத்தீவு உறவு மலர்ந்ததற்கு ராவின் பங்கு மிக முக்கியம். அந்த அளவில் ரா உளவு நிறுவனத்திற்கு Operation Cactus மிக பெரிய வெற்றி என்பது குறிப்பிட தக்கது.

Thursday, April 18, 2013

ஹிட்லர் : ஒரு நல்ல தலைவன் – 4: ஜெர்மானியர்கள் நடத்திய யூத இனப்படுகொலை

பாகம் - 1, பாகம் -2, பாகம் -3 

யாரோ ஒரு கும்பல் ஒரு தலைவரை கொல்லப்படுகிறார் என்றால் அந்த குழுவுக்கு எதிராக அந்த தலைவர் செயல்ப்படுகிறார் என்று அர்த்தம். அல்லது அந்த குழுவுக்கு எதிரான கொள்கைக்கு ஆதரவு அளிக்கிறார் என்று அர்த்தம். மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, லிங்கன் என்று எல்லா அரசியல் கொலைகளும் இந்த இரண்டு காரணங்களில் அடங்கிவிடும். மூன்றாவது ஒரு காரணம் இருக்கிறது. கொலை முயற்சி வெற்றி பெற்றால் பெரும்பாலும் இந்த காரணங்கள் வெளியே தெரிவதில்லை. ( உதாரணத்திற்கு, சஞ்சய் காந்தி மரணம்). அதே கொலை முயற்சி தோல்வி அடைந்தால் அதற்கான காரணம் வெளியே தெரிய வரும், அப்படி கொலை முயற்சி தோல்வி அடைந்ததில் ஹிட்லருக்கு தன்னை சுற்றி இருப்பவர்கள் புரிய வைத்தது.

ஹிட்லரை கொல்ல நினைத்தது யூதர்களோ, கம்யூனிஸ்டுகளோ, நேச நாட்டு உளவாளிகளோ இல்லை. ஹிட்லருடன் பக்க பலமாக இருந்த ஜெர்மனிய ஜெனரல். அதிஷ்டவசமாக ஹிட்லர் தப்பினாலும், அவருடன் இருக்கும் சில பாதுகாவலகளும், இராணுவ தளபதிகளும் கொல்லப்பட்டார்கள்.

அந்த சம்பவத்துக்கு பிறகு ஹிட்லரின் அழிவை விரும்புபவர்கள் ஏராளமான அதிகாரிகளும் இராணுவ தளபதிகளும் இருக்கிறார்கள் என்பது இந்த நிகழ்ச்சியின் மூலம் நிரூபணாமாகியிருக்கிறது. ஆனால், அந்த தளபதிகள் போருக்கு எதிரானவர்கள் என்பதை ஆராய வேண்டும்.

மனித உயிர்களுக்கு மதிப்பு கொடுப்பதாக இருந்தால், ஹிட்லரின் தளபதிகள் யூத உயிர்களை கொல்லுவதற்கு பல தொழிற்நுட்பத்தை கண்டுபிடித்திருக்க மாட்டார்கள். வதை முகாம்களுக்கு ஹிட்லர் எள் என்றால் எண்ணெய்யாக நின்று இருக்க மாட்டார்கள். ஹிட்லரின் கட்டளைக்கு ஆதரவு தெரிவிக்காமல் போராட்டமோ, கிளர்ச்சியிலோ யாரும் இறங்கவில்லை. ஹிட்லரின் கட்டளையை நிறைவேற்றுகிறோம் என்ற பெயரில் தங்கள் மனதில் இருக்கும் வன்மத்தையும் சேர்த்து தான் யூதர்கள் மேல் செலுத்தினார்கள்.


ஹிட்லர் தவறு செய்யவில்லை, அவர்கள் தளபதிகள் தவறு செய்தார்கள் என்கிறீர்களா ? என்று கேட்கலாம். அப்படி சொல்லவில்லை. ஒரு நல்ல திட்டத்தை அரசு கொண்டு வருவதாக அதை செயல்படுத்த அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைப்பது அரிதாக இருக்கும் போது யூத அழிவு திட்டத்தை எப்படி அவ்வளவு கட்சிதமாக நிறைவேற்ற முடிந்தது என்பதை யோசிக்க வேண்டும்.

இன்று, இலங்கையில் நடக்கும் இனப்படுகொலை எடுத்துக் கொள்வோம். ராஜபக்ஷே என்ற தனி மனிதனை எதிர்த்தா போராட்டம் நடக்கிறது. ராஜபக்ஷே இல்லை என்றால் தமிழர்களுக்கு விடிவுக்காலம் பிறந்துவிடுமா ? பல வருடங்கள் மேல் நடக்கும் ஈழப் போராட்டத்தில் எத்தனையோ அதிபர், பிரதமர்கள் சந்தித்துவிட்டார்கள். யாரும் தமிழர்கள் உயிர்களை மதிக்கவில்லை என்பது தான் உண்மை. தங்கள் நாட்டிலே பல உயிர்கள் இறப்பதை எந்த சிங்கள கட்சியோ, அமைப்போ எதிர்த்து பேசவில்லை. ஆக, சிங்களர்களின் எண்ணத்தை ராஜபக்ஷே பிரதிபலித்துக் கொண்டு இருக்கிறார். தமிழர்களின் இனப்படுகொலையில் ‘ராஜபக்ஷே’ என்ற தனிமனிதன் மீது சிங்களர்கள் தப்பித்துவிட முடியாது.

அதேப் போல், யூத இனப்படுகொலையில் ‘ஹிட்லர்’ என்ற தனி மனிதன் மீது ஒட்டு மொத்த பழியையும் போட முடியாது. யூத இனப்படுகொலையை நடத்தியது ஜெர்மனியர்கள்…. ஹிட்லர் என்ற தனிமனிதன் அல்ல.

கொலைவெறி, யூத வன்மம் கொண்ட ஜெர்மனிய இராணுவ தளபதிகள் ஹிட்லரை கொன்று அமைதியா கொண்டு வந்திருப்பார்கள் ? இன்னொரு இராணுவ அதிகாரியை சர்வதிகாரியாக பதவியில் அமர்த்தி நேச நாடுகளோடு உடன்படிக்கை செய்து மேலும் பல கொடுமைகள் செய்திருப்பார்கள்.

ஹிட்லர் மீது இருக்கும் மிக பெரிய பழியே யூத இனப்படுகொலை தான். ஆனால், இந்த பழியை ஒட்டுமொத்த ஜெர்மானியர்கள் சுமக்க வேண்டும், ஹிட்லர் என்ற தனிமனிதனில்லை என்பதை விளக்கியிருக்கிறேன்.

தமிழர்கள் ஒரு பக்கம் இனப்படுகொலையில் இறக்கிறார்கள். பலர் இனப்படுகொலைக்காக போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இவன் என்ன காலவதியான யூத இனப்படுகொலைக்கும், அதுவும் ஹிட்லருக்கு வக்காலத்து வாங்கி கொண்டு இருக்கிறான் என்பதை உங்கள் உள் உணர்வு கேட்பது புரிகிறது. முந்தைய இனப்படுகொலையின் சரியான புரிதல் இல்லாமல் இருந்ததற்கான காரணம் தான், இன்று இனப்படுகொலை உலகமயமாக்கி விட்டது. இன்று, ஒவ்வொரு கண்டத்திலும் இனப்படுகொலை சம்பவம் நடந்திருக்கிறது. நடந்துக் கொண்டு இருக்கிறது. ஆனால், இனப்படுகொலைக்காக ஹிட்லர் மட்டும் தான் இதில் தண்டிக்கப்பட்டிருக்கிறார்.

உயிருடன் இருந்து இனப்படுகொலையில் எத்தனையோ பேர் செய்துக் கொண்டு இருக்கிறார்கள். ஐ.நா முதல் கொண்டு பல உலக நாடுகள் அமைதியாக இருக்கிறது. இவர்களை காட்டிலும் ஹிட்லர் நல்லவர் தான்.

**

குறிப்பு :

ஒரு பக்கம் இனப்படுகொலை பற்றி கட்டுரை எழுதுபவன், இன்னொரு பக்கம் யூத இனப்படுகொலை செய்த ஹிட்லருக்கு ஆதரவாக எழுதுகிறான் என்று நீங்கள் என்னை விமர்சிக்கலாம். இனப்படுகொலையை எந்த உருவத்தில் நடந்தாலும் அதை என்னால் ஆதரிக்க முடியாது.

யூத இனப்படுகொலையின் நம்முடைய தவறான புரிதலும், ஹிட்லரையே நல்லவராக்கிவிட்டவர்கள் இன்றைய அரசியல் சூழலில் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டவே "ஹிட்லரும் நல்லவர் தான்" என்ற தொடரின் நோக்கம். 


Monday, April 15, 2013

RAW என்ன செய்கிறது ?

இந்திரா காந்தி புன்னியத்தில் உளவுத்துறை உருவாகிவிட்டது. 'ரா' என்று அழகிய நாமகரனமும் சூட்டிவிட்டார்கள். அவர்களுக்கு என்ன வேலை ? என்ன நோக்கங்கள், கொள்கைகள், செயல்பாடுகள் என்று எல்லாவற்றையும் வரைமுறைப்படுத்த வேண்டுமே ! மனித உயிர்களை கொள்ளும் தீவிரவாத இயக்கமே கொள்கையோடு இயங்கும் போது ஒரு நாட்டை பாதுகாக்கும் பொருப்பில் இருக்கும் உளவுத்துறை செயல்பாடுகள் எப்படி இருக்கும் ? பாதுகாப்பில் மட்டுமல்லாமல் எதிர் நாட்டை உளவு பார்க்கும் வேலையில், திட்டம் மிகவும் அவசியம்.

‘ரா’வின் செயல்பாடுகளைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

ராவின் முக்கிய வேலைகள்

1. அண்டை நாடுகளில் நிகழும் - அரசியல், ராணுவ மாற்றங்களைக் கண்காணிப்பது.
2. சர்வதேச கம்யூனிசத்தின் வளர்ச்சியை கண்காணிப்பது. அந்த நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள்ள தொடர்புகளைக் கண்காணிப்பது.
3. பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ராணுவம் நவீன ஆயுதங்களை கண்காணிப்பது. ஏதாவது புது ஆயுதம் வாங்குவதாக தகவல், அதன் ரிஷிமூலத்தை மட்டுமல்லாமல் எல்லாவற்றையும் ஆராய வேண்டும்.
4. சர்வதேச நாடுகளில் வாழும், இந்திய சமூகத்தினைப் பயன்படுத்தி, அந்த நாடுகளில் கருத்துருவாக்கம் மற்றும் அரசியல் அழுத்தங்களை உருவாக்குதல்.

உலகில் எந்த ஒரு உளவு நிறுவனம் தொடங்குவதாக இருந்தாலும், அவர்களுக்கு பயிற்சி அளிக்க முதலில் அணுகுவது அமெரிக்க அண்ணனின் ‘சி.ஐ.ஏ’ என்பது மாற்றப்படாத விதி. அடுத்து பயிற்சிக்கு தொடர்பு கொள்வது அமெரிக்காவின் தம்பி இஸ்ரேலின் உளவு நிறுவனமான ‘மோஸாட்’. அதே விதியை தான் ரா விஷயத்திலும் பின்ப்பற்றப்பட்டது.ராவில் பணியாற்றுபவர்கள் அமெரிக்கா, இஸ்ரேலிடம் பயிற்சிப் பெற்றவர்கள். ‘ரா’ வின் தலைமை அமைச்சரவை செயலாளருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளார்கள். அமைச்சரவை செயலாளர் பிரதமருடன் தொடர்பு கொண்டுள்ளார். ஆனாலும், ஒவ்வொரு நாளும் – ‘ரா’ செயலாளர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகருடன் தொடர்பு கொண்டு செயல்பட்டு வருகிறார்.

இரண்டு சிறப்பு செயலாளர்கள் மற்றும் ஒரு சிறப்பு இயக்குனரின் கீழ் ‘ரா’வின் விமான ஆய்வு மையங்கள் இயங்குகின்றன. பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நான்கு கூடுதல் செயலாளர்களின் நிர்வாகத்தின் கீழ் விடப்பட்டுள்ளன. பல்வேறு தலைப்புகளின் கீழ் ‘ரா’ பிரச்சினைகளை கையாளுகிறது.

புது டெல்லி மட்டுமல்லாமல் வேறு பல இடங்களிலும் ‘ரா’விலும் மண்டல தலைமையகங்கள் உண்டு. சர்வதேச நாடுகளில், ரகசியமாக தகவல்கள் திரட்டி அனுப்பும் வேலைகளை கள அதிகாரிகளும் மற்றும் அவர்களது உதவியாளர்களும் கவனித்து வருகிறார்கள். திரட்டப்பட்ட தகவல்கள் இறுதியாக, ‘ஆய்வு அதிகாரிகளின்’ பார்வைக்கு வரும். திரட்டப்படும் தகவல் சரிபார்த்து, உண்மையானதா என்பதை உறுதி செய்துக் கொண்டு பிறகு அதற்கான செயல் திட்டங்கள் இறங்குவார்கள்.

என்ன தகவல் திரட்டுகிறார்கள் ?

தகவல் சேகரிப்பு : இந்தியாவின் நலன் தொடர்பான தகவல்கள் – முறையான வழிகளிலும், முறைகேடான வழிகளிலும் திரட்டப்படுகிறது.

தகவல் பகுப்பு : சேகரிக்கப்பட்ட தகவல்கள் – தலைப்பு வாரியாக பகுக்கப்பட்டு, கணினி வழியாக பதிவு செய்யப்படுகின்றன. புதுடில்லியிலுள்ள குண்டு துளைக்காத 13 அடுக்கு தலைமையகத்தில், இதற்கென்று தனித்தளம் உண்டு.

அதிரடி நடவடிக்கைகள் : உளவு பார்த்தல், கவிழ்ப்பு நடவடிக்கைகள், சதித் திட்டம், கலகக் குழுக்களை உருவாக்குதல் ஆகியவையும், ‘ரா’வின் செயல்பாடுகள் ஆகும்.

ஊடுருவல் : எதிரிகளின் உளவு நிறுவனங்களில் ஊடுருவி செயல்படும் முறையையும் ‘ரா’ பின்பற்றி வருகிறது. ஒரு காலத்தில் ‘ரா’ நிறுவனத்தின் முக்கிய பணியாக ‘ஊடுருவல்’ கருதப்பட்டது. ‘ரா’ உளவு நிறுவனங்களிலிருந்து பல முக்கிய அதிகாரிகள் வேறு நாடுகளின் உளவு நிறுவனங்களுக்கு தாவி விடுவது அதிகரித்து வருவதால், ‘ஊடுருவல்’ வேலைகளை இப்போது அதிகமாக ‘ஐ.பி’ மேற்கொண்டு வருகிறார்கள். 

( அண்மைக்காலமாக ‘ரா’ நிறுவனம், பாகிஸ்தானை விட சீனாவிடமிருந்து தகவல்களை திரட்டுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.)

 ‘ரா’ உளவு நிறுவனத்தின் உளவாளிகள் – தூதரகங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், தகவல் தொடர்பு நிறுவனங்களான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றைத் தளமாகக் கொண்டு செயல்படுகிறார்கள். ஆப்கானின் “காட்” (KHAD), இஸ்ரேலின் மொஸாத் அமெரிக்காவின் சி.ஐ.ஏ ஆகிய உளவு நிறுவனங்களோடு தொடர்பு கொண்டும் செயல்படுகிறார்கள். மேற்குறிப்பிட்ட உளவு நிறுவனங்கள் – பாகிஸ்தானின் அணு ஆயுதக் கொள்கைகளையும், அது தொடர்பான செயல்பாடுகளையும் கண்காணிப்பதும் ஒத்த கருத்துள்ளவையால் அவர்களின் ஆதரவு ‘ரா’ வுக்கு உண்டு.

ஆப்கானிஸ்தான், பிரிட்டன், ஹாங்காங், மியான்மர், சிங்கப்பூர் போன்ற நாடுகளைத் தளமாகக் கொண்டு, தீவிரமாக ‘ரா’ உளவு நிறுவனம் செயல்படுகிறது. தங்களது உளவு வேலைகளுக்கு, உள்ளூர் பகுதிகளிலிருந்தும் ஆட்களை தேர்வு செய்கிறார்கள். மது, மங்கை, பணம் போன்ற பலவீனங்களையும் பயன்படுத்தி, தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. சில நேரங்களில் மிரட்டியும் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இனம் , பிரிவு, பிரிந்து போகும் கொள்கை போன்ற உணர்வு ரீதியான பிரச்சனைகளை முன்வைத்து பணிபுரிவோரின் பலவீனங்களுக்கு தீனி போட்டு தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.

இதை எல்லாம் செய்வதால் ரா கெட்ட நிறுவனமோ, மக்களுக்கு எதிரான அமைப்போ இல்லை. எல்லா அரசு நிறுவனம் போல் ரா உளவு அமைப்பும் இந்திய நாட்டு மக்களுக்கான உருவாக்கப்பட்டது. நாட்டின் பாதுகாப்புக்காக தங்கள் உயிரை பணயமாக வைத்து, அந்நிய நாட்டை உளவு பார்த்து தகவல் திரட்டியிருக்கிறார்கள். அந்நிய நாட்டில் இவர்கள் மாட்டிக் கொண்டால், இந்தியாவுக்கும் இவர்களுக்கும் சம்மந்தமில்லை என்று இந்தியாவும் மறுத்திருக்கிறது. இராணுவ சிப்பாய்க்கு கிடைக்கும் இறுதி மரியாதைக் கூட நாட்டு பாதுக்காக்க தகவல் சேகரிக்கு உளவாளிக்கு கிடைப்பதில்லை.

பிரதமர், அமைச்சர்களின் கருத்துக்கு இவர்களின் செயல்பட வேண்டி இருப்பதாலும், அவர்களின் கருத்தை பிரதிபலிக்கும் தகவலை திரட்ட வேண்டியிருப்பதால் அரசியல்வாதிகள் மேல் இருக்கும் கோபம் இவர்கள் மீதும் வருகிறது.

பண்டைய காலத்திலும் சரி, தற்காலத்தில் சரி ஒரு நாட்டின் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் உளவுத்துறை மிகவும் முக்கியம். அதற்கான பணியில் ‘ரா’ உளவு நிறுவனம் மிகவும் அவசியம். ஆனால், முழுமையாக மக்கள் பாதுகாப்புக்கு செயல்படுகிறதா ? என்பதை வரும் அத்தியாயங்களின் பார்ப்போம்.

உதவிய நூல்

விடுதலை க.ராசேந்திரன். எழுதிய "ஈழப் பிரச்சனையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி" பின் சேர்கை கட்டுரை.

Thursday, April 11, 2013

ஆட்டிசம் சில புரிதல்கள்

எல்லா புத்தகங்களும் வாசிப்பதற்காக மட்டுமே எழுதப்பட்டதல்ல. எல்லா புத்தகங்களும் அறிவை வளர்த்துக் கொள்வதற்கு மட்டுமே தயாரிக்க பட்டதுமல்ல. அதையும் தாண்டி நம் சிந்தனையை தூண்டவும், மற்றவர் உணர்வுகளை புரிந்துக் கொள்ள உதவவும் புத்தகங்கள் வெளிவருகிறது. அந்த எண்ணத்தில் எழுதப்பட்டப் புத்தகம் தான் யெஸ்.பாலபாரதி எழுதிய "ஆட்டிசம் சில புரிதல்கள்".

"அந்த குழந்தைக்கு பைத்தியம், மனநிலை சரியில்லை" என்று சுற்றி இருக்கும் சமூகத்தினர் நினைத்தார்கள். அவர்களை ஒதுக்கிவைத்தார்கள். பெற்றோர்கள் மீது இரக்கம் காட்டினார்கள். இப்படி தான் ஆட்டிசம் பற்றி தெரியாமல் பலர் இருந்தோம். ஆனால், இதை எல்லாம் மாற்றி அமைக்க முடியும் என்பதை சமிபத்தில் ஆட்டிச குறைபாடு உள்ளவர்களின் இயல்பான வாழ்க்கை புரிய வைத்திருக்கிறது.

ஹிந்தியில் பிரியங்கா சோப்ரா நடித்த ‘பர்பி’, சமிபத்திய தமிழ்ப்படம் ‘ஹரிதாஸ்’ போன்ற திரைப்படங்களுக்கு ‘ஆட்டிசம்’ பற்றி நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில மக்களுக்கு "ஆட்டிசம்" என்றால் என்ன என்பது தெரிய ஆரம்பித்திருக்கிறது.


ஆனால், ஒரு விஷயத்தை தெரிந்து கொள்வது என்பது வேறு; புரிந்துக் கொள்வது வேறு. 'ஆட்டிசம்' பற்றி தெரிந்தவர்களுக்கு இந்த நூல் மிக எளிமையாக புரிதலை தரும். 'ஆட்டிசம்' என்ற சொல்லுக்கு யதார்த்ததிலிருந்து விலகி ஒடுவது என்பது அர்த்தம். இது ஒரு குறைபாடே அன்றி, நோயல்ல என்பதை புரிந்துக் கொள்ள உதவுகிறது.

1943ல் டாக்டர் வியோ கானர் 'ஆட்டிசம்' பற்றி ‘Nervous Child’ என்ற பெயரில் வெளியிட்டார். முதலில் பெற்றோரின் அரவணைப்பு இல்லாத குழந்தைகள் இதில் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டது. ஆனால், அதே காலக்கட்டத்தில் ஹான்ஸ் ஆஸ்பெர்ஜர் என்பவர் வளர்ந்த குழந்தைகளிடமும் இதே குறைபாடு இருப்பதை கண்டறிந்தார். ( பின்னாளில், பேசக்கூடிய ஆனால் மற்றவர்களோடு பழகுவதில் சிரமம் உடைய குறைபாடுக்கு இவர் பெயரே ( Asperger ) வைத்தனர்).

எதார்த்தத்தில் இருந்து விலகி இருக்கும் குழந்தை எப்படி 'ஆட்டிசம்' என்கின்றோமோ, அதேப் போல் அதற்கான மருத்துவ சிகிச்சையும் வித்தியாசமானது. மருந்து, மாத்திரை, அருவை சிகிச்சை என்று எதானாலும் சரி செய்ய முடியாது. காரணம், 'ஆட்டிசம்' போலவே அதற்கான சிகிச்சையும் முறைகளையும் இதுவென்று சரியாக வரையற்றுக்க படவில்லை. ஒரு குழந்தைக்கு பயனளிக்கும் சிகிச்சை மற்றொரு குழந்தைக்கு பயன் தரும் என்பதில்லை. இதற்கான சிகிச்சை தேர்வை மருத்துவர்களை விட பெற்றோரிடமே அதிகமாக இருக்கிறது. தங்கள் குழந்தைகளுக்கான தேவை, ஆசை, வெறுப்பு, சந்தோஷம் எல்லாவற்றையும் புரிந்துக் கொண்டு அதையே தங்கள் குழந்தைக்கு தர வேண்டும். இயல்பான குழந்தைகளை விட ‘ஆட்டிசம்’ குறைபாடு உள்ள குழந்தை மீது பெற்றோர்கள் அதிக அக்கரை செலுத்த வேண்டும்.

முன்பெல்லாம் எதோ ஒரு குழந்தைக்கு தான் குறைபாடு இருக்கிறது என்று இருந்ததை உடைத்து 88 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை சமிபத்திய புள்ளி விபரம் சொல்கிறது.

மற்ற குழந்தைகளிடம் ஒதுங்கி இருப்பது, கண்களைப் பார்த்துப் பேசுவதை தவிர்ப்பது, அச்சம், ஆபத்து உணராதது, வித்தியாசமான முறையை திரும்ப திரும்ப செய்வது, அதீதமான பதட்டம், தேவைகளை கையைப் பிடித்து சொல்லுவது, வலியை உணராது இருப்பது என்று ஆட்டிச குறைபாடு குழந்தைகள் நடவடிக்கையில் நாம் தெரிந்துக் கொள்ளலாம்.

நடத்தைக்கான பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சி, கல்விக்கான பயிற்சி, பேச்சுக்கான பயிற்சி என்று அடிப்படை சிகிச்சைகள் ஆட்டிச குழந்தைகளுக்கு இருந்தாலும், பெற்றோர்களின் பங்களிப்பே ஆட்டிசத்தில் இருந்து ஒரு குழந்தையை மீட்டெடுக்க முடியும். பத்திய உணவு பழக்கங்களை சரியாக கொடுக்க வேண்டும். பதட்டம் அடையும் போது கவனத்தை திசை திருப்ப வேண்டும். சரி, தவறு என்று உணர்த்த வேண்டும். தங்கள் செயல்களை அவர்களாகவே செய்து கொள்ள பக்குவப்படுத்த வேண்டும்.

மற்ற குழந்தைகள் போல் வேகமாக ஒரு விஷயத்தை கற்றுக் கொள்வதைப் போல் ஆட்டிச குழந்தைகள் கற்று கொள்வதில் சிரமம் இருக்கும். ஆனால், கற்றுக் கொள்ள முடியும் என்பதை முதலில் பெற்றோர்கள் நம்ப வேண்டும். 

ஒருவரை நிராகரிப்பதம் மூலம் நாம் எதையும் சாதித்து விட முடியாது எங்கிற போது ஆட்டிச குழந்தைகளை ஒதுக்கி என்ன சாதிக்க போகிறோம். அவர்களுக்கு தேவை நாம் அவர்களை புரிந்துக் கொள்வதும், அவர்களுக்கு தகுந்தாற்போல் நாம் செயல்படுவதும் தான்.

ஆட்டிச குறைபாடுள்ளவர்களும் மற்றவர்களைப் போல் இயல்பாக வாழ முடியும் என்பதை ஆட்டிச குழந்தையின் பெற்றோர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

**
ஆட்டிசம் சில புரிதல்கள் 
யெஸ்.பாலபாரதி 
ரூ.50. பக்கங்கள் : 80
பாரதி புத்தகாலயம்

 இணையத்தில் வாங்க….

Tuesday, April 9, 2013

அப்பா !

அந்த பிஞ்சு மனதில் இத்தனை பெரிய ஏமாற்றத்தை ராஜா எப்படி விதைத்தான் ? வாங்கும் சம்பளத்தில் இப்போது அவனால் வாங்கி தர முடியாதவனில்லை. ‘இது தேவையில்லை’ என்று நினைத்த எண்ணம் தான் அவன் மகன் அவன் மீது நம்பிக்கையில்லாமல் போனது.

ஒவ்வொரு மகனுக்கும் அப்பா தான் முதல் கதாநாயகன். முதல் வில்லன். ஆனால், ஏனோ ஆரம்பத்தில் இருந்தே அவனுக்கு வில்லனாக மட்டுமே இருந்திருக்கிறான் என்று நினைக்கும் போது அவன் மீது அவனுக்கே கோபமாக இருந்தது.

 “அப்பா ! வாங்கி தரமாட்டார்” என்ற எண்ணம்.மகனிடம் ‘முடியும்’ என்று சொல்ல முடிந்த விஷயத்தை ‘முடியாது’ என்று சொல்லுவது அப்பாவுக்கு மட்டுமே தெரியும் அவனுடைய வலி. ஆரம்பத்தில் தனது சம்பளத்தில் இயலாமையை மகன் மீது கோபமாக காட்டியிருக்கிறான். ‘பணம் இல்லை’ என்று சொல்ல தைரியமில்லாமல் அடித்திருக்கிறான். ஒரு வேலை தன் மகனுக்கு வாங்கி தராமல் இருக்க பலகிவிட்டேனோ என்ற சந்தேகம் அவனுள் எழுந்தது.

உள்ளுக்குள் பாசம் இருந்தாலும் வெளியில் எதிரிப் போல் பழகுவது அப்பா – மகன் உறவில் தான். தருணுக்கு எட்டு வயது தான் ஆகிறது. அவன் கேட்பது எல்லாம் தந்து விட வேண்டும் என்றே ஆசை. ஆனால், தன் சம்பளத்தில் ஒரு பங்கை அம்மா, அப்பாவுக்கும், இன்னொரு பங்கை தன் குடும்ப செலவுக்கும் சரியாக இருக்கிறது. காதலித்து திருமணம் செய்ததால் சொந்த வீட்டிலே தனிக்குடித்தனம். அப்பா, அம்மா மாடியில், ராஜாவின் குடும்பம் கீழ் வீட்டில்.

அம்மா தனது மகனை தட்டி பறித்த எண்ணத்தில் ராஜாவின் மனைவியிடம் பேசமாட்டாள். அப்பா ராஜாவுக்கு சாதகமாக பேசவும் மாட்டார். எதிர்க்கவும் மாட்டார். சொந்த வீட்டில் அப்பா அம்மாவுடனே மூன்றாவது மனிதன் போல் வாழ்க்கிறான். அவர்களுக்கும் பணம் கொடுத்து, தங்களுக்கும் பணம் செலவு செய்து மீதி பணம் சேர்த்து வைப்பது என்பது மன்மோகன் இரண்டு மணி நேரம் பேச சொல்வதற்கு சமம். இப்படி, இருக்கும் நிலையில் மகன் கேட்பதெல்லாம் ராஜாவால் எப்படி வாங்கி தர முடியும்.

ஓடி ஆடி விளையாடும் வயதில் மடியில் கணிணியை வைத்து விளையாடுகிறார்கள். ஆனால், தருண் கேட்டது சைக்கிள்.

ஒரு முறை மனைவியுடன் வெளியே செல்லும் போது தருணை அழைத்து சென்று இருந்தான். அப்போது ஒரு கடையில் சைக்கிளை ஆசையாக தடவிப்பார்த்துக் கொண்டு இருந்தான். மனைவி "சைக்கிள் வேண்டுமா ?" என்று கேட்டதற்கு, "அப்பா வாங்கி தரமாட்டார்" என்று அவன் சொன்ன பதில் அவனை மிகவும் பாதித்தது.

மற்ற வீட்டில், எழு எட்டு வயது குழந்தைகள் ஒரு பொருளை எப்படியாவது அடம் பிடித்து வாங்கிவிடுவார்கள். ஆனால், தருண் தன்னிடம் ஆசையாய் சாக்கலெட் கூட கேட்டதில்லை. அவன் கேட்ட பொருளெல்லாம் மறுத்ததற்கு, அவனிடம் இருந்து அவன் எவ்வளவு தூரம் அந்நியப்பட்டு இருக்கிறான் என்று புரிந்திருந்தது.

இதுவரை கடன் அட்டை வேண்டாம் என்று இருந்த அவன், தன் மகனுக்காக கடன் அட்டை வாங்கினான். மகளிடம் / மகனிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்றால், பெரும்பாலும் அப்பாக்கள் கடன் வாங்க வேண்டியதாக இருக்கிறது.

தன் நண்பன் ஒருவன் சைக்கிள் ஹோல்சேல் கடைக்கு 'சைக்கிள் விலை குறைவாக இருக்கும் என்று அழைத்து சென்றான். தருண் ஆசையாய் தடவிப் பார்த்த சைக்கிளை விட விலை உயர்ந்த, அழகான சைக்கிள் அங்கு இருந்தது.
 முதல் முதலாக வாங்கிய கடன் அட்டையில், தருணுக்காக சைக்கிள் வாங்கினான்.

கடன் அட்டை தேய்க்கும் போது கொஞ்சம் உருத்தலாக இருந்தாலும், தருணின் சந்தோஷத்திற்கும் எதுவும் பெரிதாக தெரியவில்லை. வாங்கிய புது சைக்கிலை என் நண்பன் வண்டி பின் அமர்ந்து எடுத்து வந்தேன்.

கடைசி தேர்வு முடித்து வீட்டுக்கு வந்த தருணின் முகத்தில் சந்தோஷத்தை பார்க்க மிகந்த ஆசையாக இருந்தது.

புது சைக்கிளைப் பார்த்ததும் அப்பா "என்னடா ! தருணுக்கா சைக்கிள்"

“இந்த சைக்கிள் ஓட்டுறதுக்கு வீட்டுல வேற பசங்க இருக்காங்களா....” என்றான் ராஜா.

 “நல்ல இருக்குடா.. !”

அப்பாவிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது, என் மனைவி கீழ வர "என்னங்க புது சைக்கிள் வாங்குனீங்களா ?"

ஆமாம் என்பது போல் தலையாட்டினான். "நேத்து வீட்டு செலவுக்கு பணம் கேட்கும் போது இல்ல சொன்னீங்க.. இப்போ எப்படி ? "

"கிரடிட் கார்ட் வச்சி வாங்கினேன்".

"எதுக்கு கடன் வாங்கி சைக்கிள் வாங்குன... என் கிட்ட கேட்டுருந்தா நா தந்திருக்க மாட்டேன்" என்று ராஜாவின் அப்பா பாசமாய் கூற, “நீயா..! உன்னால எனக்கு எந்த உதவியும் பண்ண முடியாது. நீ எனக்கு பணம் தரப் போறீயா ? " என்று அப்பாவை ஏளனமாகப் பார்த்துவிட்டு தருணின் பள்ளியில் இருந்து வருவதற்காக காத்திருந்தான்.

LinkWithin

Related Posts with Thumbnails