வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, October 31, 2014

THE GHOST WRITER (2010)

Roman Polanski யின் Carnage படத்தைப் பற்றி பதிவிடும் போது ’கோஸ்ட் ரைட்டர்’ படத்தை பற்றிய சில குறிப்புகள் சொல்லியிருந்தேன்.

ஒரு படத்தை விவாதிக்கும் போது அந்த படத்தின் கதையை முழுவதுமாக சொல்லக் கூடாது என்று நினைப்பவன் நான். அதுவும் மர்ம படங்கள் என்றால் முக்கியமான மர்ம முடிச்சை பற்றி வெளியே சொன்னால் ஸ்வாரஸ்யம் போய்விடும் என்று சொல்வதில்லை. ஆனால், ’கோஸ்ட் ரைட்டர்’ படத்தைப் பற்றி பேசும் போது கண்டிப்பாக இந்த இரண்டையும் சொல்லிதான் ஆக வேண்டும் என்று தோன்றுகிறது. காரணம், அந்த படத்தின் பின்னிருக்கும் அரசியல் களன்.


ஆரம்பக் காட்சியில், மர்மமான முறையில் ஒரு எழுத்தாளர் இறந்ததில் இருந்து படம் தொடங்குகிறது. அந்த எழுத்தாளர் பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் அடம் லாங்யின் வாழ்க்கை வரலாற்றை எழுத வந்தவன். அமெரிக்கத் தொடுத்த போரில் பிரிட்டன் பிரதமராக இவர் ஆதரித்திருக்கிறார். அதனால், ‘போர் குற்றவாளி’ என்று இவரது அமைச்சரவையில் இருந்தவர்களே விமர்த்தார்கள். தனது வாழ்க்கை வரலாறு நூல் மூலம் அனைத்து விமர்சனத்திற்கும் பதில் கூற வேண்டும் என்று நினைக்கிறார். அதனால், அடம் லாங் தனது வாழ்க்கை வரலாற்றை எழுத புது எழுத்தாளரை நியமிக்கிறார்.

முன்னாள் பிரதமர் வாழ்க்கை வரலாற்றை எழுத 'கோஸ்ட்' வருகிறார். அதாவது, பிரதமர் எழுதுவது போல் அவரின் வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டும். புத்தகத்தில் பிரதமரின் பெயர் இருக்கும். எழுதியவரின் பெயர் எங்கும் குறிப்பிடப்படாது. புது எழுத்தாளர் முன்னாள் பிரதம மந்திரி ஒய்வு விடுதியில் தங்க வைக்கப்படுகிறார். தனது ஓய்வு நாட்கள் முடிவதற்குள், புத்தகத்திற்கு தேவையான தகவலை பெற்று எழுத வேண்டும் என்று அடம் லாங் சொல்கிறார்.

முன்பு வந்த எழுத்தாளர் பாதிக்கு மேல் முடித்து வைத்திருந்ததார். இருந்தாலும் அது முழுமையானதாக இல்லை. ஆரம்பத்தில் இருந்து புதிதாக தொடங்க வேண்டும் என்கிறார். அங்கு இருந்து எந்த குறிப்புகள் வெளியே எடுத்தச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அந்த ஓய்வு விடுதியில் நடக்கும் சில விஷ்யங்கள் அவனுக்கு மர்மமாக இருக்கிறது.

இறந்துப் போன எழுத்தாளர் இறக்கும் முன் பிரதம மந்திரியோடு வாக்குவாதம் செய்திருக்கிறான். தன் மேல் சுமத்த பட்ட போர்க் குற்றத்திற்கு புத்தகத்தில் விளக்கம் சரியாக அளிக்கவில்லை என்று கோஸ்ட் நினைக்கிறான். இறந்த எழுத்தாளர் காரில் சாகும் போது ஹார்வட் பேராசிரியரை பார்த்துவிட்டு வந்திருக்கிறார். கோஸ்ட்டும் அந்த பேராசிரியரை சந்தித்து என்ன நடந்தது என்று விசாரிக்கிறான்.

இதற்கிடையில், முன்னாள் பிரதம மந்திரி அடம் லாங்யின் மனைவியோடு கோஸ்ட்டுக்கு நெருக்கம் ஏற்ப்படுகிறது. அவள் மூலம் சில தகவல்கள் கோஸ்ட் தெரிந்துக் கொள்கிறான்.

பல முக்கிய அரசியல் தகவல் தெரிந்துக் கொண்ட கோஸ்ட் முன்னாள் பிரதமர் அடம் லாங்கிடம் சொல்லலாம் என்று நினைக்கும் போது போருக்கு எதிராக போராட்டக்காரர்களிடம் இருந்த ஒருவன் அவரை சுட்டுக் கொண்டு விடுகிறான். காவலர்களும் சுட்டவனை கொன்று விடுகிறார்கள். முன்னாள் பிரதமர் மீது ‘போர் குற்றம்’ இருந்த நிலையில் அவர் இறந்தது பெரிய சர்ச்சையை கிளப்புகிறது.

அடம் லாங் இறப்பதகு முன் எழுதிய நூல் என்பதால், அவரது வாழ்க்கை வரலாறு விற்பனையில் சாதனை படைக்கிறது. இறந்த பழைய எழுத்தாளரின் சில குறிப்புகள் புத்தகத்தில் சேர்க்கப்பட்டாமல் இருந்தது. கோஸ்ட் அந்த இறந்த எழுத்தாளரின் குறிப்புகள் மீண்டும் ஒரு முறை பார்க்கும் போது ஒரு தகவல் கிடைக்கிறது. அதை கண்டதும் அதிர்க்கிறான்.

"முன்னாள் பிரதமரின் மனைவி சி.ஐ.ஏ ஏஜேன்ட். அவளை ஹார்வர்ட் பல்கலலைக்கழகத்தில் இருப்பவர் பயன்படுத்திக் கொண்டார்" என்று இருக்கிறது. அதாவது, பிரிட்டன் பிரதமரின் மனைவி உதவி மூலம் தங்கள் தேவைக்கு ஏற்றார் போல் அமெரிக்கா பயன்படுத்தி கொண்டது. அவரை போர் குற்றம் செய்ய வைத்திருக்கிறது. தனக்கு இந்த உண்மை தெரிந்துவிட்டது என்பதை ஒரு பேப்பரில் எழுதி பிரதமர் மனைவிக்கு கொடுக்கிறான்.

கோஸ்ட் வெளியே செல்லும் போது, விபத்து நடந்தது போல் சத்தம் கேட்கிறது. கோஸ்ட் கையில் இருந்த காகிதங்கள் பறக்க, நடைப்பாதையில் நடந்தவர்கள் அதிர்ச்சியுடன் காணப்படுகின்றனர்.

அரசியலில் எத்தனையோ மர்மங்கள் இருக்கிறது. அரசியல் கொலைகளில் அதைவிட மர்மங்கள் நிறைந்திருக்கிறது. மோகந்தாஸ் காந்தி படுகொலை, ஜென்னடி படுகொலை தொடங்கி இந்திரா காந்தி, ராஜூவ் காந்தி படுகொலை வரை இன்னும் எத்தனையோ படுகொலைகளில் தெரியப்படாத உண்மைகள் இருக்கின்றன. அதை அறிந்து கொள்ள ஸ்வரஸ்யம் இருக்கும். அதே சமயம் அதன்பின் ஆபத்தும் இருக்கிறது.

சில அரசியல் உண்மைகள் சாமான்யனுக்கு தெரியக் கூடாது. அதை தான் எல்லா அரசாங்கம் விரும்பும். அப்படி தெரிந்துக் கொண்டால் தற்கொலையும், விபத்துக்களும் இந்த படத்தில் முடிவில் வருவது போல் தான் நடக்கும்.

அமெரிக்காவை விமர்சனம் செய்வது போல் இருந்ததால் இந்த படம் ஆஸ்கருக்கு பரிசீலனை செய்யப்படவில்லை. ஆனால், மற்ற இடங்களில் பல விருதுகள் வாங்கி இருக்கிறது. 

இந்த படத்தை யாரும் இந்திய மொழியில் எடுக்க முடியாது. எடுத்தால் தடைவிதிக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரியும். ( இந்தப் படத்தின் கதையை முழுவதுமாக சொன்னதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு புரிந்திருக்கும்.)

Wednesday, October 29, 2014

பூஜை - விமர்சனம்

ஊரே ’கத்தி’ படத்தைப் பற்றி பேசிக் கொண்டு இருக்க... யாரும் பூஜைப் படத்தைப் பற்றி பேசாததால் ,அந்த படத்தை பற்றி விமர்சனம் எழுதுகிறேன். ’ரேஸ் குர்ரம்’ போன்ற தெலுங்கு படங்களில் ஸ்ருதி ஹாசனை ரசிக்கும் ஆந்திர ரசிகர்கள் நமக்கு தரிசனம் தராமல் போய்விடுவார் என்ற நல்ல எண்ணம் தான் காரணம்.

பூஜைப் போன்ற படங்களை ஆதரித்து வெற்றிப் பெற்றால் தான், ரேஸ் குர்ரத்தை மிஞ்சக் கூடிய நடிப்பை நாம் ஸ்ருதி ஹாசனிடம் இருந்து எதிர்பாக்கலாம்.



படத்தின் கதை. முந்தைய ஹரி படங்களில் வரும் அதே கதை. அதே திரைக்கதை. மசாலா படங்களில் நடிக்கும் அதே விஷால். படம் பார்க்கும் அதே ரசிகர்கள். ஆனால், ஸ்ருதி ஹாசன் மட்டும் கொஞ்சம் புதுசு.

“இவங்க அப்பா மாதிரி நடிக்கவே இல்லை” என்கிறார் ஒரு நண்பர்.

“எதுக்கு நடிக்கனும் ?” என்பது தான் என் கேள்வி.

இப்படி ரசனையே இல்லாமல் இருப்பதால் தான் ‘ஆகாடு’ போன்ற படங்களில் ஒரு பாட்டு நடனமாடும் ஸ்ருதி, நாயகியாக அழைத்தால் கூட தமிழ் சினிமா பக்கம் வருவதில்லை. ஸ்ருதி ஹாசன் முப்பது வயதுக்கு மேல் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டினால் போதும்.

ஸ்ருதி ஹாசன் தவிர இந்த படத்தில் வேறு ஒன்றுமில்லையா நீங்கள் கேட்பது புரிகிறது. ஒரு வேளை இருக்கலாம். என் கண்ணுக்கு ஸ்ருதி ஹாசன் எல்லாவற்றையும் மறைத்துவிடுகிறார். சாரி... மறக்கடித்து விடுகிறார்.

 (இது தான் உங்க விமர்சனமா என்று கேட்கும் மைட் வாய்ஸ் புரிகிறது.)

Tuesday, October 28, 2014

திரைக்கதை எழுதலாம் வாங்க ? - ’கருந்தேள்’ ராஜேஷ்

தமிழ் செய்யுளுக்கு உரை எழுது இருக்கிறார்கள். தமிழ் நூல் இன்னொரு மறுப்பு நூலாக தமிழில் வெளிவந்திருக்கிறது. அதிகப்பட்சம் ஆங்கில நூலை அப்படி தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். ஆனால், முதல் முறையாக ஆங்கிலத்தில் எழுதிய நூலுக்கு தமிழில் உரையை எழுதியதை பார்க்கிறேன். இதற்கு முன் இப்படி ஒரு முயற்சி மேற்க் கொள்ளப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. 

நூலில் இடம் பெற்றிருக்கும் 55 அத்தியாயங்களும் ஸிட் ஃபீல்டின் திரைக்கதை கோட்பாட்டை விளக்கியும், அந்த கோபாட்டு அடிப்படையாக கொண்ட தமிழ் சினிமா காட்சியை மேற்கோள் காட்டியிருக்கிறார். 



சினிமா அனுபவம் இல்லாத 'கருந்தேள்' ராஜேஷ் எழுதியிருப்பதால், ஸிட் ஃபீல்டின் கோட்பாட்டை சரியாக அப்படியே விளக்க முடிந்திருக்கிறது. சினிமா அனுபவஸ்தர்கள் யாராவது இதை செய்திருந்தால், "டைரக்டர் சங்கர் இந்த காட்சி அமைப்புக்கும் போது என்னை பாராட்டினார்" போன்ற சுய புராணமும், தங்கள் திரப்பட வாய்ப்புக்கு தேடும் முயற்சிக்கான புத்தகமாக அமைந்திருக்கும். ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஸிட் ஃபீல்ட்டின் தத்துவத்தை தான் முன் நிறுத்துகிறார்.

உண்மையில் திரைக்கதை அமைப்பதற்கான ஒரு கையேடு இந்த புத்தகம். இந்த புத்தகத்தை படித்துவிட்டால் திரைக்கதை 100% வடிவமத்துவிடலாம் என்பது எல்லாம் இல்லை. நமது கதைக்கு தேவையான வடிவத்தை தாயார் செய்வதில் நமது கையில் தான் இருக்கிறது. அதில் தவறு இருந்தால் நமது தேர்வில் தான் தவரே தவிர, கோட்பாட்டில் இல்லை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். 

முன்பு, சுஜாதா "திரைக்கதை எழுதுவது எப்படி ?" என்ற புத்தகம் எழுதியிருந்தார். இந்த புத்தகம் முதல் வகுப்பு சிலபஸ் என்றால், ராஜேஷின் புத்தகம் 1-3 க்ளாஸ்க்கான புத்தகம். நிறைய உதாரணங்கள் இந்த புத்தகத்தில் மேற்கோள் காட்டப்படுகிறது. 

45வது அத்தியாயத்தில் நாவலில் இருந்து திரைக்கதை என்று எழுதியிருக்கிறார். அந்த அத்தியாயத்தில் சிறு வருத்தம், சிறுகதையை சேர்த்து சொல்லியிருக்கலாம். தமிழ்செல்வனின் சிறுகதையை வைத்து தான் 'பூ" திரைப்படம் எடுக்கப்பட்டது. ஆனால், தமிழ் சினிமாவில் இது போன்ற முயற்சிகள் மிக அறிதாகவே இருக்கிறது. 

எதிர்காலத்தில் நாவலை சுருக்கி திரைப்படமாக எடுப்பதை விட, சிறுகதையில் காட்சிகளை சேர்த்து படமாக எடுக்கப்படுவது தான் அதிகம். (இப்போதும், சிறுகதையை படத்தில் பயன்படுத்துகிறார்கள். கதாசிரியர்களுக்கு க்ரேடிட் கொடுக்க தான் இயக்குனர்களுக்கு மனம் வரவில்லை.) 

அடுத்த பதிப்பில் நூலின் உள்ளடக்க விவரங்களை சேர்த்துக் கொள்வது நல்லது. 

’கருந்தேள்’ ராஜேஷ் வெற்றிப் பெற வாழ்த்துக்கள் !!! 

** 

இந்த புத்தகத்தை படித்து முடிக்கும் போது உதிர்த்த சிந்தனைகள்…. 

எந்த திரைக்கதை கோட்பாடு இல்லாமல் முந்தைய படங்களில் இருக்கும் காட்சிகளை உருவி எடுத்த வேலையில்லா பட்டதாரி, அரண்மனை போன்ற படங்கள் வெற்றி பெறுவதை பார்க்கிறோம். வித்தியாசமான திரைக்கதை வடிவத்தில் வந்த ஆரண்ய காண்டம் தோல்வியை பார்க்கிறோம். 

திரைக்கதை கோட்பாடு எல்லாம் வேறும் இலக்கணம் மட்டுமே. படத்தின் வெற்றி இலக்கை ரசிகர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். அவர்களின் நாடி துடிப்பை அறிந்துக் கொள்ள புத்தகமும் உதவுவதில்லை 

Call +91 90032 67399 - Cash on Delivery thro' VPP 
or

Tuesday, October 21, 2014

இலக்கியம் மாறுமா ? - அ.ஞா.பேரறிவாளன்

தூக்குத் தண்டைக்கும், அரசியலுக்கும் நடுவில் மாட்டி தவிக்கும் பேரறிவாளன் எழுதிய புத்தகம் “இலக்கியம் மாறுமா ?”

சங்கக் காலத்தில் நடந்த சிலப்பதிகாரத்தில் நடந்த அநீதியும், தற்காலத்தில் காவல் நிலையங்களில் நடக்கும் அநீதியையும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்.



தவறு செய்யாத கோவலன் மீது திருட்டு பழி சுமத்தி கொல்லப்படுவதையும், அதேப் போல் தற்காலத்தில் 'அழகர்சாமி' என்ற அப்பாவி மீது திருட்டு பழி சுமத்தி கோர்ட்டில் விசாரணை நடத்தப்படுவதையும் சரியான ஒப்பிட்டாக இருக்கிறது.

சிறுகதை வடிவில் இல்லாமல் நாடக வடிவத்தில் எழுதியிருக்கிறார். பொது நிகழ்ச்சியில் மேடை நாடகமாக போட விரும்புபவர்கள் இந்த நாடகத்தை முயற்சி செய்து பார்க்கலாம்.

கடைசியாக முடிக்கும் போது…

”ஆயிரம் ஆயிரம் 
  ஆண்டுகளின் பின்னும் 
  அநீதிகள் 
  தொடரவே செய்கின்றன. 
  ஆயினும் 
  அநீதிக்கான தீர்வுகள் மட்டும் 
  திசையறியாமல் திண்டாடுகிறது” 

- என்று சொல்லி முடிக்கிறார்.

பேரறிவாளன் - சிறை கம்மிகளுக்கு பின்னால் ஒரு எழுத்தாளனாக இருக்கிறார். அவரை தான் விடுதலை செய்ய முடியவில்லை. அவரது எழுத்துக்களையாவது விடுதலை செய்து, மக்களிடம் கொண்டு செல்வோம்.

**
இலக்கியம் மாறுமா ?
- அ.ஞா.பேரறிவாளன்
பக்கங்கள் : 60 விலை. ரூ.50

வெளியீடு :
திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம்
11, கே.கே. தங்கவேல் தெரு,
பெரியார் நகர்,
சோலையார் பேட்டை – 635851
அலைப்பேசி : 94430 58565

Tuesday, October 14, 2014

மெட்ராஸ் ( Madras )

நானும் வடசென்னை பகுதியை சேர்ந்தவன் என்பதால் இந்த படத்தை பற்றி சொல்லியாக வேண்டும். தினமும் இந்த பாதை வழியாக கடந்து செல்கிறேன்.

பெண்களின் சண்டை, எருமை மாடுகள் ரோட்டில் கடந்து செல்வது, குப்பை நாற்றம், மைதானத்தில் கிரிக்கெட் என்று பல வருடங்களாக பார்த்து பழக்கப்பட்ட விஷயம். திரைப்படமாக பார்க்கும் போது அதைப் பாதிக்கூட எடுக்கவில்லை என்று தான் எனக்கு தோன்றுகிறது. (எந்த படத்திலும் எந்த விஷயமும் முழுமையாக காட்ட முடியாது என்பது வேறு விஷயம்) ஆனால், இதுவரை இந்த பாதிக்கூட யாரும் எடுக்காமல் இருக்கும் போது இயக்குனர் ரஞ்சித் அதை செய்திருக்கிறார் என்பதை பாராட்டியாக வேண்டும்.

அரசியல் லாபத்திற்காக பழகியவனை கொலை செய்யும் புளித்துப்போன பழைய கதை தான். என் உயிர் தோழன் தொடங்கி சுப்பிரமணியப்புரம் வரை பார்த்தது தான். புதிய கதைக்களனும், அதற்கு துணை நிற்கும் துணை பாத்திரங்கள் படத்திற்கு வலு சேர்க்கிறது.



கார்த்தி தனது பாத்திரத்திற்கு பாதி தான் செய்திருக்கிறார். சகுனி, அலேக்ஸ் பாண்டியன் பாதிப்பில் இருந்து அவர் இன்னும் மீண்டு வரவில்லை என்று தான் தெரிகிறது. (கடைசி வரைக்கும் கார்த்தி என்ன வேலை செய்கிறார் என்று சொல்லவே இல்லை)

நாயகனிடம் இவ்வளவு பேசும் நாயகி, மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் அமைதியான பெண்ணாக காட்டிருப்பது கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. நாயகி உண்மையிலேயே அடக்கமானவரா அல்லது அராத்தா என்பதில் குழப்பம். படத்திற்கு நாயகி தேவையில்லை என்பதால் இவரின் குழப்பமான பாத்திரப்படைப்பு பெரிதாக பாதிக்கவில்லை. ( பிற்ப்படுத்தப்பட்டவர்களின் வாழ்வியல் எடுக்கும் போது கூட வட இந்தியப் பெண் தான் வேண்டுமா என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.)

நாயகன், நாயகி தவிர்த்து மற்ற பாத்திரங்கள் படு இயல்பு. குறிப்பாக அன்பு - மேரி காதல், ஜானி பேசிக் கொண்டே இருப்பது, கார்த்தியின் அம்மா பெண் பார்ப்பது, ரௌடிகள், கவுன்சிலர் என்று காஸ்ட்டிங் படு கச்சிதம். உண்மையில் படத்தின் பலமே இந்த துணை பாத்திரங்கள் தான்.

காதல் காட்சிகள், நாயகன், நாயகி காஸ்ட்டிங் தவிர்த்து பார்த்தால் RGVயின் படம் பார்த்தது போன்ற உணர்வு ஏற்ப்பட்டிருக்கும்.

இயக்குனர் நாயகன், தயாரிப்பாளருக்கு வளைந்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்பது புரிக்கிறது.

தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனர் தனது இரண்டாவது, மூன்றாவது படத்தை தான் முழு சுதந்திரத்தோடு இயக்க முடியும் என்ற விதியை யாரால் மாற்ற முடியும். தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக ரஞ்சித் வருவார் என்பதை தான் ‘மெட்ராஸ்’ படம் காட்டுகிறது.

அதே சமயம் அனைவரும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவிற்கு படம் இல்லை.

Thursday, October 9, 2014

Roman Polaski இயக்கிய Carnage (2011)

"சம்சாரம் ஒரு மின்சாரம்" படத்தை போல் ஏன் உங்களால் மீண்டும் ஒரு படத்தை இயக்க முடியவில்லை” என்று இயக்குனர் விசுவிடம் ஒரு நிருபர் கேட்டார்.

அதற்கு விசு, "அந்த படத்தை இயக்கும் போது விசு ஒரு சராசரி டைரக்டர். பஸுல தான் போவேன். நிறைய ஜனங்க கிட்ட பேசுவேன். அவங்க கஷ்டத்த பத்தி கேட்பேன். இப்போது இருக்கும் விசு பணக்காரன். கார்ல தான் போரான். பணக்காரங்க கிட்ட தான் அதிகம் பழக வேண்டியதாக இருக்குது. அதனால சராசரி குடும்ப பிரச்சனை இப்போ அவனால எடுக்க முடியல" என்றார்.

ஒவ்வொரு இயக்குனருக்கு இப்படி ஒரு "Saturation Point" இருக்கும். ஆனால், தமிழ் சினிமாவில் இந்த "Saturation Point" இருந்து இயக்குனர்கள் மீண்டு வந்திருக்கிறார்களா என்பது சந்தேகம். கே.பாலசந்தர், பாரதிராஜா, பாக்கிராஜ் போன்ற பெரிய இயக்குனர்கள் கூட அந்த “Saturation Point”ல் சரி செய்ய முடியாமல் சின்னத்திரைக்கு சென்றுவிட்டார்கள்.

ஆனால், ஒரு சில இயக்குனர்கள் ஆராம்பக் கால தோல்விகளில் இருந்து மீண்டு வந்து பெரிய இயக்குனர்களாக வந்திருக்கிறார்கள். அவர்களின் குறிப்பிட தகுந்தவர் ரோமன் போளாஸ்கி.

**


நான்கு பேர். ஒரு வீட்டில் படத்தை முடிக்க வேண்டும். உடனே பிட்டு படம் தான் எடுக்க வேண்டும் என்று கிண்டலாக நினைக்க தோன்றும். அதையும் தாண்டி இப்படி ஒரு படம் எடுக்க முடியுமா என்று யோசிக்க வைக்கிறார் ரோமன் போளாஸ்கி.

தலைப்பு போடும் போது ஒரு பூங்காவில் ஒரு சிறுவன் இன்னொரு சிறுவனை பேஸ்பால் பேட்டால் அடித்துவிடுகிறான்.

அடுத்த காட்சி, ஒரு பிளாட்டில் அடிவாங்கிய சிறுவனின் பெற்றோரிடம் சமரசம் செய்து, அவர்கள் மன்னித்துவிட்டதாக கடிதம் பெற அடித்தவனின் பெற்றோர்கள் வருகிறார்கள். ஆரம்பத்தில் இரண்டு பெற்றோர்களும் சமரசமாக பேச, பிறகு ஒரு வார்த்தை இரண்டு பெண்களுக்குள் சண்டை வருகிறது.

இரண்டு பெண்கள் போடும் சண்டையை கணவன்மார்கள் தடுத்து சமரசம் செய்கிறார்கள். கொஞ்ச நேரத்தில் ஒருவரின் வளர்ப்பை இன்னொருவர் குறை சொல்கிறார்கள். மீண்டும் சண்டை வருகிறது. இரண்டு பெற்றோர்களின் சண்டை ஒரு கட்டத்தில் தம்பதியர்களுள்ளே வாக்குவாதத்தை உருவாகிறது. இத்தனை நாள் தம்பதியர்களுக்குள் இருந்த விரக்தியும் வெளிப்படுகிறது. நடுவில் தொலைப்பேசி வந்து தொல்லைக் கொடுகிறது.

75 நிமிடங்கள் ஒரே ப்ளாட்டில் நான்கு பேருக்கும் நடக்கும் வாக்குவாதம் தான் படம். ஒவ்வொரு முறையும் பிரச்சனை தீர்ந்தது என்று நினைக்கும் போது, எதோ ஒரு வார்த்தை மீண்டும் பிரச்சனையை உருவாக்கிறது. கடைசியில் எப்படி சமரசமாக போகிறார்கள் என்று ஆர்வத்திலையே படத்தை முடித்திருக்கிறார்.

 பெரியவர்கள் பேசும் போது சிறுவர்கள் தலையிடக் கூடாது என்று எப்படி சொல்கிறோமோ, சிறுவர்களின் சண்டையில் பெரியவர்கள் தலையிடக் கூடாது. அதையும் மீறி தலையிட்டால் பெரியவர்கள் சண்டையாக மாறிவிடும் என்பதை இந்தப் படம் காட்டுகிறது. டைட்டானிக் கனவு தேவதை கேட் வின்செண்ட் ஒரு சிறுவனுக்கு அம்மாவாக பார்க்க வைத்தது சங்கடமாக இருந்தது. மற்ற மூன்று நடிகர்கள் தொலைக்காட்சி தொடரில், படங்களில் சிறு வேடத்தில் நடிப்பவர்கள்.

**

ரோமன் போளாஸ்கி ஆரம்பக் காலத்தில் ஹிட்ச்காக் போலவே பல மர்மப்படங்களை இயக்கினாலும் அவர் அளவுக்கு இவரால் புகழ் பெற முடியவில்லை. ‘சைனா டவுன்’ மட்டுமே அவருக்கு ஆஸ்கர் விருது பெற்று தந்தது. “ரோஸ்மேரி பேபி” பலரது பாராட்டுக்குறிய படமாக இருந்தது.

மூன்று ஆஸ்கர் விருது பெற்ற பியானிஸ்ட் (Pianist – 2002 ) படத்திற்கு பிறகு ரோமன் போலாஸ்கியின் படங்கள் அதிக கவனம் பெற தொடங்கின. அதன் பிறகு அவரது முந்தைய படங்களும் பலர் பேசப்பட்டது.

2010ல் இவர் இயக்கிய ‘கோஸ்ட் ரைட்டர்’ (Ghost Writer) படத்தை யாராவது இந்திய மொழியில் படம் எடுத்தால், கண்டிப்பாக தடைவிதிப்பார்கள். அதிபரின் வாழ்க்கை வரலாற்றை எழுத வரும் எழுத்தாளர், அந்த அதிபர் பின்னால் இருக்கும் மர்மத்தை கண்டுப்பிடிப்பது தான் படம். இந்திய அரசியல் சூழலை எடுத்துக் கொண்டால் ராஜிவ் காந்தி, சோனியா காந்தியை தான் நினைவுப்படுத்தும்.

இப்போது ரோமன் போலாஸ்கிக்கு 81 வயதாகிறது. ‘Carnage’ படம் எடுக்கும் போது அவருக்கு 78 வயது. இந்த வயதில் எப்படியெல்லாம் யோசிக்கிறார் வியக்காமல் இருக்க முடியாது. இன்னும் திரைத்துறையில் இருந்து ஓய்வு பெறாமல் இயக்கிக் கொண்டு இருக்கிறார்.

10, 20 லட்சத்தில் படம் எடுக்க விரும்பும் இயக்குனர்கள் சரியான வசனங்களுடன் ’Carnage’ படத்தை தமிழில் எடுக்க முயற்சிக்கலாம். அதேப் போல் Low Budget படம் எடுக்க விரும்பும் இயக்குனர்கள் ரோமன் போளாஸ்கியின் ஆரம்பக் கால மர்ம படங்களை பார்க்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பிலே பல படங்களை இயக்கியிருக்கிறார். 

பின் குறிப்பு : 
நீங்களே மற்ற படங்களை தமிழில் எடுக்கலாம் என்று ஏன் பரிந்துரை செய்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். 

நல்ல படங்களை பரிந்துரை செய்யாததால் தான் மோசமான படங்களை தமிழாக்கம் செய்து பார்வையாளாரான நம்மை கஷ்டப்படுத்துகிறார்கள். அதற்கு நாமலே நல்ல படங்களை இயக்குனர்கள் எடுத்து சொல்வோம்.

அது மட்டுமில்லாமல் இயக்குனர்கள் காப்பி அடித்து படம் எடுப்பதால் தான் நம்மால் பேஸ்புக், டிவிட்டரில் எழுத முடிகிறது. அதை நாம் மறந்திவிடக் கூடாது.

Monday, October 6, 2014

டிராபிக் நீதி !!



ஒரு முறை அவசரமாக செல்ல வேண்டிய நேரத்தில் டிராபிக்கில் மாட்டிக் கொண்டேன்.

Accordingly to Newton’s 5th law, “No Rules in Traffic” என்ற விதியை கடைப்பிடித்து இரண்டு வண்டிக்கு இடையில் புகுந்து புகுந்து சென்றேன். ஒரு இடத்தில் வலது பக்கம் ‘U’ அடிக்க வேண்டும். முன்னாடி கார் இருந்தது. வலது பக்கமாக முந்த முடியவில்லை. அதனால், இடது பக்கமாக சென்று, வலது பக்கத்தில் ‘U’ அடித்தேன்.

அந்த கார்காரன் சமஸ்கிரத வழி வந்தவன் என்பதால் ஆங்கிலத்தில் கண்ட மேனிக்கு திட்டத் தொடங்கினான். (நல்ல வேளை… ராயப்புரத்துக்காரர்களிடம் மாட்டவில்லை)

ஆனால், எனக்கு கோபம் துளிக்கூட வரவில்லை. (தமிழில் திட்டியிருந்தால் கோபம் வந்திருக்கலாம்). தவறு என்னுடைய என்பதற்காக அல்ல. என்னுடைய பதட்டத்தை அவனுக்கு கொடுத்துவிட்டேன் என்பதற்காக !!

நீதி: நாம் பதட்டமாக வண்டி ஓட்டு போது மற்றவர்களை சேர்த்து பதட்டமடைய வைக்கிறோம்.

Wednesday, October 1, 2014

வருத்தம் தரும் அம்மாவுக்கு எதிரான தீர்ப்பு !

நான் கலைஞரின் அபிமானி என்பதால், அம்மாவுக்கு கிடைத்த தண்டனையை நினைத்து சந்தோஷப்படுவதாக பலர் நினைக்கிறார்கள்.

உண்மையில் அ.தி.மு.க கட்சியினர்களை விட எனக்கு தான் அதிக வருத்தம். (எனக்கு கண்ணீர் வரவில்லை என்றால் சொல்வது நடிப்பு என்பதில்லை.) அதற்கு இரண்டு காரணம் இருக்கிறது.

முதல் காரணம்.

91-96, 2001-06 காலக்கட்டத்தில் அம்மா எவ்வளவோ தவறு செய்திருக்கிறார். ஆனால், இந்த மூன்று ஆண்டுகளில் பழி வாங்கும் அரசியல் நடவடிக்கை தவிர்த்து பார்த்தால் அம்மாவின் ஆட்சி சிறப்பாகவே இருந்தது. தவறு செய்த காலத்தில் கிடைக்க வேண்டிய தண்டனை, மனம் திருந்தி சிறப்பாக ஆட்சி செய்யும் போது அவருக்கு தண்டனை வழங்கியது வருத்தம் தான்.

தேசியளவில் தமிழகம் இப்படி ஒரு செய்தியை சந்திக்கும் போது என்னால் எப்படி சந்தோஷப்பட முடியும்.

2016 தேர்தலில் இது அனுதாப அலையாக மாறுமா அல்லது பாதகமாக மாறுமா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும். 



இரண்டாவது காரணம்.

பெங்களூர் தீர்ப்பு அ.தி.மு.க கட்சியின் எதிர்காலத்திற்கு பின்னடைவு என்பதை யாரும் மறுக்க முடியாது. அடுத்த மூன்று ஆண்டுகளில் எந்த வித கோஷ்டி புசல் வராமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு அம்மாவிடம் இப்போது அதிகமாக இருக்கிறது.

தி.மு.க கட்சியின் தற்போதைய நிலைமைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. தனக்கு பிறகு ஸ்டாலின் தான் என்பதை அவர்கள் கட்சியினரை உறுதியாக நம்ப வைக்கும் முயற்சியை கலைஞர் செய்ய வேண்டும். இன்னும் அவர் காலம் கடத்தி செல்வது எந்த பலனும் அளிக்காது. அது மட்டுமில்லாமல் முந்தைய ஆட்சியில் இருந்த அதிருப்தி இன்னும் மக்கள் மீளவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் தமிழகத்தில் எதிர்காலம் இருப்பதாக தெரியவில்லை. வைகோ, விஜயகாந்த் உட்பட மற்ற இதர கட்சிகள் பெரிய கட்சிகளோடு கூட்டணி வைத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள். இதனால், தமிழகத்தில் மூன்றாவது இடத்தை பலமாக்கிக் கொள்ள பா.ஜ.கவுக்கு அதிக தான் வாய்ப்பு இருக்கிறது !!

மத்தியில் பா.ஜ.க ஆட்சி. மோடி அலை. திராவிடத்தால் ஏமாற்றப்பட்டோம் என்ற பிரச்சாரம். இந்த மூன்றும் அஸ்திரமாக பயன்படுத்தி வருகிறார்கள். இவர்களின் அடுத்த அஸ்திரம் நடிகர்கள் !!!

ரஜினி, விஜய் போன்றவர்கள் தங்களது கட்சியில் சேர்க்கும் முயற்சியை பா.ஜ.க செய்துவருவதாக சில தகவல்கள் வெளியாகிவருகிறது. நடிகர்களுக்கு மக்கள் ஓட்டுப் போடுவதை நிறுத்தி நீண்ட நாட்கள் ஆகிறது. ஆனால், மக்கள் நடிகர்கள் மீது வைத்திருக்கும் கவர்ச்சியை நம்மால் மறுக்க முடியாது. (பெப்ஸி, கோக் ஒரு உதாரணம் !!)

முன்னனி நடிகர்கள் பா.ஜ.கவில் சேர்ந்தால், அந்த கவர்ச்சியாக செய்தியோடு மோடி அலையை சேர்த்து தங்கள் கட்சியை பலப்படுத்தலாம். இவ்வளவு ஏன் விஜயகாந்த் தனது கட்சியை கலைத்து விட்டு பா.ஜ.கவில் இணையலாம்.

நிச்சயமாக 2016 தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க பலமான மூன்றாவது அணியாக மாற இந்த தீர்ப்பு வழிவகுக்கும். ‘பெரியார் பூமியில்’ இன வாதம் வளரக்கூடாது என்றால் அ.தி.மு.க, தி.மு.க இரண்டுமே பலமான கட்சிகளாக இருக்க வேண்டும். தற்போதிய சூழ்நிலை அப்படி இல்லை என்பது தான் என் இரண்டாவது வருத்தம்.

2030 வரையிலான தமிழ்நாட்டின் அரசியலை 2016 தேர்தல் தான் தீர்மானிக்கப் போகிறது. பொருத்திருந்து பார்ப்போம் !!

அதலால், அம்மாவுக்கு எதிரான தீர்ப்பை நான் கொண்டாடுவதாக சொல்லி என்னை மேலும் வருத்தப்பட வைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

LinkWithin

Related Posts with Thumbnails