வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, September 11, 2008

"மனசாட்சி சொன்னது" - பரிசு வென்ற சிறுகதை

இந்த முறையாவது கிடைக்குமா... இது நம்முடைய மூன்றாவது முயற்சி... ஏன் இரண்டு முறை கிடைக்கவில்லை என்று கேட்டால் என்ன சொல்வது....? பல சிந்தனைகளை மனதில் ஓட்டிக் கொண்டு இருந்தான் ரமேஷ். ரமேஷ் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பொறியாளர். மூன்று வருடங்களாக கண்ட கனவு நாளை நிறைவேறுமா என்ற அச்சம். இது அவனுக்கு மூன்றாவது முறை... என்ன நடக்க போகிறது....?

ரமேஷின் பிராஜெக்ட் மேனேஜர் ராமன் அங்கு வருகிறான்.

"ஹெலோ ரமேஷ்.... என்ன ரொம்ப டென்ஷனா இருக்க..." என்றான்.

" ஆமா சார்.... ரொம்ப டென்ஷனா இருக்கு... இந்த தடவை கிடைச்சா..என் லைப்பே மாறிடும்..."

"கவலை படாத... இந்த பிராஜக்ட் சக்ஸஸ் ஆனதற்கு காரணம் நீ தான்.... கண்டிப்பா கிடைக்கும்... டோட் வொரி..."

யார் வேண்டுமானாலும் அறிவுரை சொல்லலாம்... ஆனால், நடந்து காட்டுவது வேறு... இரண்டு தடவை விசா கிடைக்கவில்லை... இது எனக்கு மூன்றாவது தடவை. கிடைத்தால், இரண்டு வருஷம் நல்ல சம்பளம்....இனி வாழ்க்கையில் வேலை கூட செய்ய வேண்டியதில்லை.... ஆனால், விசா கிடைத்த பிறகே எல்லாம் சாத்தியம்.

2001ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வர்த்தக மையம் இடிக்கப்பட்டதிலிருந்து, அமெரிக்காவுக்கு விசா கிடைப்பது மிகவும் கஷ்டமான காரியமாக உள்ளது. எந்த காரணத்திற்காக விசா மறுக்கப்படுகிறது என்ற காரணம் கூட தெரிவதில்லை.நாம் கொடுக்கும் தகவல்களில் ஒரு சிறு தவறு இருந்தால் கூட விசா கொடுக்க மறுத்துவிடுகிறார்கள்.

மறுநாள்....
அமெரிக்கா தூதரகத்தில் ரமேஷ் காத்துக்கொண்டு இருந்தான். மூன்று மணி நேரம் கழிந்தது, ஒவ்வொரு முறையும் இப்படி தான் பல மணி நேரம் பலருக்கு செலவாகிறது. விசா மறுக்கப்பட்டால் பல மணி நேரம் காத்து கிடந்ததற்கு பலன் இல்லாமல் போய்விடுகிறது.

"ரமேஷ்...." - என்று ஒரு வெள்ளைக்காரன் குரல் அழைப்பு.

ரமேஷ் உள்ளே செல்கிறான். அரை மணி நேரம் ஆகியும் இன்னும் வெளியே வரவில்லை.
"சோ... மிஸ்டர் ரமேஷ்... யூவர் எச்1பி விசா இஸ் கிரன்டட் ...."

"தாங்க் யூ சார்...."

"ஒ.கே.... ஆல் தி பெஸ்ட்...."

ரமேஷின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.... பல நாள் கனவு இன்றே நிஜமானது... இரண்டு வருடம் கஷ்டப்பட்டு வேலை செய்தால் போதும், வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வந்துவிடலாம்.
தனக்கு விசா கிடைத்துவிட்டதை தன் நிறுவனத்திற்கு போன் செய்து சொல்கிறான். தன் நண்பர்களுக்கு விருந்துகள் எல்லாம் கொடுத்து தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டான்.

அவன் நிறுவனத்தில் ஒரு மாதத்தில் செல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அதற்கான வேலைகளை பார்த்துக் கொண்டு இருக்கிறான். அமெரிக்காவுக்கு புறப்பட நல்ல துணிகளை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தான். 2007ஆம் ஆண்டு தன் வாழ்க்கையில் நல்ல திருப்புமுனை ஆண்டாக இருக்கும் என்றே இருந்தான். அந்த நேரத்திலா அவன் தொலைக்காட்சியில் அதை பார்க்க வேண்டும்.. அதை பார்த்ததும் மிகவும் மனம் வேதனையுடன் அன்று இரவு பொழுது அவனுக்கு கழிந்தது.
மறு நாள் தன் அலுவலகதில் தன் மேனேஜர் ராமனை பார்க்கிறான்.

"சார்... நான்... அமெரிக்காவுக்கு போகல... நான் இங்கேயே இருந்து வேலை செய்றேனே.."

"என்ன... ரமேஷ்... என்ன ஆச்சு உங்களுக்கு... விசாக்காக ரொம்ப கஷ்டப்பட்டீங்க... இப்போ ஏன் இந்த தீடிர் முடிவு? "

"இல்ல...என க்கு அமெரிக்கா போக மனசு இல்ல... நான் இந்தியாவிலே இருந்து வேலை செய்யனும்னு ஆசை படுறேன்..."

சிரித்துக்கொண்டே ராமன் " அமெரிக்கா போயி வேலை செய்தா தேச திரோகம்னு யாராவது அட்வைஸ் பண்ணாங்கள...? அப்படி யாராவது சொன்னா நம்பாதிங்க... அமெரிக்கா போயி வேலை செய்தா இரண்டு நாட்டுக்கும் நல்ல லாபம் தான்.... யாரோ உங்கள நல்லா குழப்பி இருக்காங்க..."

"யாரும் என்ன குழப்பலை...இது நானா எடுத்த முடிவு தான்... அது மட்டும் இல்லாம நான் வேறொரு காரணத்திற்காக தான் போகலைனு சொன்னேன்"

" அப்படியா....சரி..! என்ன காரணம்... எனி பர்சனல் ரீசன்.."

" சொந்த காரணம் இல்லை... உலக காரணம்... அதான் போகலை...."

"புரியல..."

" நேத்து டி.வியில சதாம் ஹுசைனை தூக்குல போடுறத பார்த்தீங்களா...."

"பார்த்தேன்... ஆனா அதுக்கும் நீங்க சொல்ல வந்ததுக்கும் என்ன சம்மந்தம் இப்போ.."

" நம்மல மாதிரி சாப்ட்வேர் ஆளுங்க சம்பாதிச்சு... இரண்டு நாட்டுக்கும் நல்ல லாபம் வாங்கி தரோம்... ஆன அமெரிக்கா அந்த பணத்தை நல்ல வழியில செலவு செய்யல... மத்த நாடு கிட்ட சண்ட போடுரதுல தான் செலவு பண்றாங்க.."

"அதுனால நமக்கு என்ன ?... நம்ம இந்தியா மட்டும் என்ன... நல்ல விஷயத்துக்கா பணம் செலவு பண்றாங்க.... எத்தனையோ அரசியல்வாதி நம்ப வரி பணத்தை கொள்ளை அடிக்கிறாங்க.."

" நம்ம இந்தியாவால எந்த நாடும் கஷ்டப்பட்டது இல்ல.... ஒரு பிலைட் ஹைஜாக் பண்ணி தீவிரவாதிகளை விட சொன்னா கூட... எந்த உயிரும் சாகக் கூடாதுனு நாம தீவிரவாதியை விடுதலை பண்ணியிருக்கோம்.... ஆனா ஒரு பிரதமர கொன்னு.. ஈராக்ல கலவரத்த உண்டு பண்ணிட்டாங்க அமெரிக்கா.."

"ரமேஷ்... எனக்கும் விஷயம் தெரியும்... ஆனா உலக அரசியல் பேசி இவ்வளவு வருஷம் காத்திருந்து வாங்கின விசாவ தூக்கி எறியப் போறிங்களா"

"கண்டிப்பா நான் தூக்கி ஏறியதான் போறேன்.... அமெரிக்கா பண்ணுற காரியத்திற்கு மறைமுகமா நாம சம்மந்தம் படுறோம்... க்யூபா, ஜப்பான், ஆப்கானிஸ்தான், இப்போ ஈராக் இன்னும் எவ்வளவு நாட்டை அழிக்க போறாங்கனு தெரியலை.... ஆனா இவங்க பண்ணுரதுக்கு தைரியம் கொடுக்குறது நாம சம்பாதிச்சு கொடுக்கும் பணம் தான்...."

" அப்போ.. உங்க முடிவுல இருந்து மாறப் போறதில்லையா..."

" கண்டிப்பா மாற மாட்டேன்... நீங்க என்னை வர்புறுத்தி அமெரிக்கா போக சொன்னா வேலையை விட்டு தான் மாறுவேன்..."

ராமன் என்ன பேசுவது என்று தெரியவில்லை... ஆனால், இறுதியாக ராமன் "நான் வேற யாராவது இந்த பிராஜக்ட்காக அனுப்பிடுவேன்... உங்களுக்கு கிடைச்ச நல்ல சந்தர்ப்பத்தை நழுவவிடுறீங்க... அது தான் என்னால சொல்ல முடியும்"

"சந்தர்ப்பத்தை நழுவவிட்டா பரவாயில்லை... ஆனா, மத்தவங்க சாகுறதுக்கு நாம மறைமுகமாக காரணம் நினைக்கும் குற்ற உணர்ச்சியை விட பரவாயில்லைனு தோன்னுது..."

சரி..உங்க இஷ்டம்..." என்று சொல்லி ராமன் தன் குழுவில் இருக்கும் வேறொருவரை தேர்ந்தெடுத்து அமெரிக்கா செல்ல விசா வேலைகளை தொடங்க சொல்கிறான்.

ரமேஷ் செய்தது முட்டாள் தனமாக தெரிந்தாலும்..அதில் இருக்கும் உண்மை ராமனின் மனிதநேயம், அந்த குழுவில் வேலை செய்யும் எல்லோருக்கும் புரிந்தது. புரிந்தும் இந்த சுயநல உலகில் சுயநலமான முடிவைத்தான் எடுக்க வேண்டியுள்ளது. அந்த குழுவில் ஒருவன் அமெரிக்கா செல்கிறான்.

( "நம் உரத்தசிந்தனை" சிற்றிதழ் நடத்திய சிறுகதை போட்டியில் ரூ.250 பரிசுவென்றது. என்னுடைய "நடைபாதை" நூலில் ஐந்தாவது கதையாக இடம் பெறுகிறது.

என்னுடைய "நடைபாதை" நூலில் ஐந்தாவது கதையாக இடம் பெறுகிறது. "நடைபாதை" நூல் வெளியீட்டு விழா செப்.14 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மேலும் விபரங்களுக்கு.....
http://tamilbookreview.blogspot.com/2008/09/14.html பார்க்கவும்)

LinkWithin

Related Posts with Thumbnails