வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, December 26, 2014

பிசாசு - விமர்சனம்

தமிழ் சினிமாவில் பேய்களை வைத்து பயமுறுத்தவும், சமிபக்காலமாக சிரிக்க வைக்கவும் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். மிஷ்கின் பேய்யை உணர்வு புர்வமாக காட்டியிருக்கிறார். பேய் முகத்தை முழுமையாக காட்டிவிடும் போல் இருக்கிறது. ஆனால், நாயகன் நாகா தன் முகத்தை தலைமூடியால் மறைத்து கொண்டு வருகிறார். தன் கண்முன் உயிருக்காக போராடும் பெண்ணை காப்பாற்ற முடியாமல் போகும் போது ஏற்படும் குற்றவுணர்வை பாதி முகத்தில் தெரிகிறது. 

ராதா ரவி சில காட்சிகளே வந்தாலும் ’நடிகவேள்’ வாரிசு என்பதை காட்டியிருக்கிறார். அவர் மகளை நினைத்து அழும் காட்சி கண் களங்காமல் இருக்க முடியாது. ஒரு தந்தையின் சோகத்தை கண் முன் கொண்டு வந்து காட்டியிருக்கிறார். 

முன்பின் தெரியாத சிறுவனுக்கு உதவுவது (நந்தலாலா), முன்பின் தெரியாதவன் உயிருக்காக போராடும் போது காப்பாற்றுவது (ஓநாயும் ஆட்டுக்குட்டியும்)... இந்த படத்தில் முன்பின் தெரியாத ஒரு பெண்ணின் மரணத்திற்காக வருந்துவது என்று இன்னும் மனிதத் தன்மை மண்ணில் இருப்பதை, மிஷ்கின் தனது படங்களில் காட்டிவருவது பாராட்டுக்குறியது. 

படத்தில் பேய் வரும் காட்சிகள் குறைவாக இருக்கலாம். மற்ற படங்களை போல் பயமுறுத்தாமல் இருக்கலாம். ஆனால், சமிபத்திய தமிழ் படங்களில் ‘பிசாசு’ முக்கியமானது என்பதை மறுக்க முடியாது. 

Dont miss to watch.

Monday, December 22, 2014

லிங்கா - சிறு விமர்சனம்

எல்லோரும் ரஜினிக்கு வயதாகிவிட்டதாக கூறுகிறார்கள். எனக்கு என்னவோ கே.எஸ்.ரவிகுமாருக்கும், ஏ.ஆர்.ரகுமானுக்கும் தான் வயதாகிவிட்டது என்று நினைக்கிறேன்.கே.எஸ்.ரவிகுமார் தனது திரை வாழ்க்கையில் இவ்வளவு சோர்வான திரைக்கதை அமைத்திருக்கமாட்டார். ஏ.ஆர்.ரகுமானும் இவ்வளவு மோசமான இசையை எந்த படத்திலும் கொடுத்ததில்லை. ஒரு பாடல் கூட மனதில் பதியவில்லை. 

ரஜினியின் மோசமாக தோல்வியடைந்த கொடிப் பறக்குது, பாபா படத்தில் கூட நகைச்சுவை காட்சி ஒரளவுக்கு நன்றாக இருக்கும். இந்த படத்தில் அது கூட இல்லை. சந்தானம் ரஜினியை பார்த்து “நண்பேன்டா” கூட சொல்லக் முடியவில்லை. அவரை கலாய்க்கவும் யோசிக்கிறார். 

Better Luck next time for Rajini fans !!!

Friday, December 19, 2014

எம்.ஜி.ஆர் பேட்டிகள்

”உங்களை தாக்கி எழுதும் தமிழ்வாணனை பற்றி தங்கள் கருத்தென்ன ? வல்லவர், திறமையானவர், வியாபார ரகசியம் தெரிந்தவர் ! 

அரசியல் கேள்விகளுக்கு நகைச்சுவையாக பதில் கூறுவது கலைஞரின் சொத்தல்ல. திராவிடக் கழகத்தின் சொத்து என்பதை இந்த நூல் நிருபிக்கிறது. பல கேள்விகளுக்கு எம்.ஜி.ஆர் கூறியிருக்கும் பதில் மிக சிறப்பானது. தமிழக அரசியல் வரலாற்றிலும், சினிமாவிலும் மறக்க முடியாதவர் எம்.ஜி.ஆர் அவர்கள். இன்றைக்கு ஒரு படம் ஓடிவிட்டால், அரசியலில் சாதித்துவிடலாம் என்று பலருக்கு நம்பிக்கை வளர்த்தவர் எம்.ஜி.ஆர். எந்த வயதானாலும் மீண்டும் கதாநாயகன் வாய்ப்பு கிடைத்துவிட்டால் சினிமாவில் பெரிய இடத்துக்கு செல்லலாம் என்ற தன்னம்பிக்கை ஊட்டுவது எம்.ஜி.ஆரின் சினிமா வாழ்க்கை. 

தன்னம்பிக்கை என்பதன் பொருள் என்ன ?
தான் கையாலாகாதவன் என்று உணர்வது. 

முயற்சி இல்லாமல் கிடைப்பது எது ?
மரணம். 

கண்ணதாசன் பாணியில் தத்துவ நிறைந்த பதில்களை அளித்திருக்கிறார். 

அரசியலில் மாணவர்கள் ஈடுப்படக் கூடாது என்பதற்கு கூறும் விளக்கம், கலைஞரை நகைச்சுவையாக தாக்குவது, மத்திய அரசை ஆதரிப்பது, பச்சைக்குத்தி கொள்வதற்கு எம்.ஜி.ஆர் மீது சுமத்தப்பட்ட விமர்சனத்திற்கு கூறும் விளக்கம், ஜெயலலிதாவுடன் இருந்த நட்பு, சிவாஜியுடன் இருக்கும் போட்டி என்று தமிழக அரசியல் வரவாற்றில் எம்.ஜி.ஆரின் பதில் மிக முக்கியமானது. 

கேள்வி – பதில் இவ்வளவு ஸ்வரஸ்யமாக நான் படித்ததில்லை. சுஜாதாவின் “கற்றதும் பெற்றதும்” நூல் போல், இந்த கேள்வி – பதில் நூலும் ஸ்வரஸ்யமாக இருக்கிறது. ஆனால், ஒரே வித்தியாசம்,சுஜாதாவின் பதில்கள் அறிவு சார்ந்தது. எம்.ஜி.ஆர் பதில்கள் அரசியல் சார்ந்தது. 

முதல் இரண்டு பதிப்பை ஆழி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதற்கடுத்து மூன்று பதிப்புகளை தொகுப்பாசிரியரே வெளியிட்டிருக்கிறார். சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த புத்தக கண்ணில் பட்டால் அவசியம் வாங்குகள். 

** 
Manomani Pathippagam 
201 – P, S.S.K. Nagar, 5th Street, 
( near Railway Station) 
Kanchipuram – 631502 
Ph: 8754496134 / 9790576470

Wednesday, December 10, 2014

விவேகானந்தர்: இந்திய மறுமலர்ச்சி நாயகன்

இந்தியாவில் சாம்ராட் அசோகன், சத்திரபதி சிவாஜி, முகலாயர் மன்னர்கள் என்று நம்மை ஆண்ட மன்னர்களின் பட்டியல் எடுத்தால் நீண்டுக் கொண்டே போகும். அவர்களின் வீரமும், சாகசமும் உண்மையாகவும், சிலது கற்பனை கலந்து சொல்லப்படுகிறது. நாட்டை ஆண்டவர்கள் தான் சரித்திர நாயகர்களாக திகழந்து இருக்கிறார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டும் நாட்டை ஆளாமல் மக்கள் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். 

பல மகாராஜா போர், நிர்வாகம், அரசியல் திறன், நீதி என்று போன்ற பல விஷயங்களில் கவனம் செலுத்தி எடுத்த பெயரை அந்த ஒரு சிலர் தனிமனிதனாக எப்படி எடுக்க முடிந்தது என்ற பிரம்மிப்பதை எற்படுத்துகிறார்கள். மன்னர்களுக்கும், அந்த ஒரு சிலருக்கும் உள்ள ஒரே வித்தியாசம். மன்னர்கள் நாட்டை ஆண்டார்கள். அந்த ஒரு சிலர் தன்னை தானே ஆண்டார்கள். 

தனக்கென்ற ஒரு நீதி, ஒரு கொள்கை, ஒரு கட்டுப்பாடு வைத்துக் கொண்டு மன்னர்களுக்கு நிகராக பெயர் எடுத்திருக்கிறார்கள். அந்த கட்டுப்பாடு, நீதியை மற்றவர்களுக்கு சொல்லி ஏற்க வைத்திருக்கிறார்கள். தெனாலிராமன், பீர்பால் போன்ற புத்திக்கூர்மையாளர்கள், புத்தகர், மகாவீர் என்று மன்னர்கள் அல்லாதவர்கள் சரித்திர புருஷர்களாக இருந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் மிக முக்கியமானவர் ஒருவர் தான் விவேகாந்தர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராகவும் விளங்கினார். ’நரேந்திரநாத் தத்தா’ என்ற இயற்பெயர் கொண்ட இவர் இராமகிருஷ்ண பரமஹம்சரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவரது சீடரானார். 1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும், இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். அவர்களின் விவேகானந்தர் முதல்மையாக திகழ்ந்தார். 

இவரின் ஆன்மீக கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வதாக அமைந்துள்ளன. இந்தியாவில் மட்டுமல்லாமல் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு, இவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது. 

1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். அன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் இன்று உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது. 

ஒரு முறை, மன்னர் ஒருவர் விவேகானந்தரிடம் எனக்கு உருவ வழிப்பாட்டில் நம்பிக்கையில்லை என்கிறார். கல்லையும், மண்ணையும், மரத்தையும் கடவுளாக எண்ணி வழிபட முடியாது என்கிறார். அப்போது, விவேகானந்தர் மன்னரின் திவானிடம் மன்னரின் புகைப்படத்தை பார்த்து துப்பச் சொல்கிறார். திவான் துப்ப யோசிக்க, விவேகானந்தர் மன்னரிடன் “திவான் அவர்கள் அந்த புகைப்படத்தில் மன்னர் முகம் பொருந்திய படமாக பார்க்கவில்லை. மன்னரை பார்க்கிறார். அதனால், அவர் துப்ப யோசிக்கிறார். நீங்கள் கல், மண் என்று சொல்லுவது மற்றவர்கள் அதில் கடவுள் இருப்பதாகப் பார்க்கிறார்கள்” என்று விளக்கமளித்தார். 

அதேப் போல் உலகின் மிக பெரிய பணக்காரரான ராக்பெல்லர் ஒரே ஒரு நன்கொடை வழங்கியிருக்கிறார். அது விவேகானந்தரின் உரைக் கேட்டப் பின்பு வழங்கியிருக்கிறார் !! 

விவேகானந்தர் பற்றிய வரலாறு, சொற்பொழிவு என்று அத்தனை குறிப்புகளும் நமக்கு எளிதாக கிடைக்கிறது. ஆனால், இந்த புத்தகத்தில் அதையும் தாண்டி ஒரு கூடுதல் சிறப்பு ஒன்று இருக்கிறது. இதில் அவரின் வரலாற்று மட்டுமல்லாமல், வெளிநாட்டில் சொற்பொழிவு மேற்கொள்ளும் போது கிறிஸ்துவ பாதரியார்களால் எதிர்க் கொண்ட எதிர்ப்புகளை சொல்கிறது. விவேகானந்தரை மதம் மாற்றம் செய்ய நடந்த முயற்சியையும் சொல்கிறது. 

இந்துக்கள் பெரும்பான்மை கொண்ட இந்தியாவில் இந்து மத கொள்கை, ஆன்மீக சொற்பொழிவு நடத்துவது போன்ற விஷயங்கள் பெரிய சவால் இல்லை. ஆனால், அந்நிய நாட்டில் மற்ற மதத்தினர் முன்பு இந்து மத சொற்பொழிவு ஆற்றுவது என்பது மிகப் பெரிய சவால். கோபப்படுத்துவதற்கும், பகடி செய்வதற்கும் பல கேள்விகள் கேட்கப்படும். அவர்களிடம் கோபப்படாமல் பொறுமையாக பதிலளிக்க வேண்டும். அளிக்கும் பதில் பிரமிப்பு ஏற்படுத்த வேண்டும். 

இன்று வணிக நோக்கத்துடன் எத்தனையோ பேர் வெளிநாடுகளில் சொற்பொழிவு செய்கிறார்கள். தங்களை வளர்த்துக் கொள்வதில் பிரதான நோக்கத்துடன் செயல் படுகிறார்கள். ஆனால், எந்த விதப் பிரதிபலன் பார்க்காமல், தனது மதக் கொள்கையை பரப்ப வேண்டும் என்று விவேகானந்தரை போல் யார் செய ல்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். 

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாசித்த கிழக்கு பதிப்பகத்தின் எழுத்து நடையும், இப்போது வரும் புத்தகத்தின் எழுத்து நடையும் பல வித்தியாசங்கள் தெரிகிறது. முன்பு கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களில் குறிப்பாக வாழ்க்கை வரலாறு நூல்கள் வாசிக்க மிக எளிமையாக இருக்கும். நாவல், கதை படிப்பது போன்ற உணர்வு இருக்கும். ஆனால், சமிபத்திய நூல்கள் வடிவமைப்பு பாடப்புத்தக படிப்பதை போன்ற சோர்வு ஏற்படுகிறது. இந்த நூலிலும் பார்க்க முடிகிறது. 

பல சமயம், காவியை வெளிப்படையாக விமர்சிக்கும் அளவிற்கு, நாம் வெள்ளை அங்கியை விமர்சிக்கவில்லை என்ற குற்றவுணர்வு இந்த நூல் படித்து முடிக்கும் போது ஏற்படுத்துகிறது.


***
விவேகானந்தர்: இந்திய மறுமலர்ச்சி நாயகன்
ரஞ்சனி நாராயணன்
கிழக்கு பதிப்பகம், ரூ 150

Monday, December 1, 2014

காவியத் தலைவன் (திரை விமர்சனம்)

வெள்ளையர் காலத்தில் மேடை நாடக கலைஞர்கள் பற்றிய கதை. ‘அங்காடி தெரு’ போல் மிக அற்புதமான கதைக் களன். 

நாடகக் கலைஞர்கள் சந்தித்த சவால், நாடகக் கலைஞர்களுக்கு கொடுக்கும் பயிற்சி, அவர்களின் நடிப்பு திறன், பயாஸ்கோப் (சினிமா) வரவால் அவர்களுக்கு ஏற்ப்பட்ட பாதிப்பு, பாலியல் தொல்லை என்று பல விஷயங்களில் எதை சொல்லப் போகிறார் என்று யோசித்துக் கொண்டு படம் பார்த்தால் மிகுந்த ஏமாற்றம் தான். வழக்கமான முக்கோண காதல் கதையும், இரண்டு பேர்களுக்குள் இருக்கும் ஈகோ பிரச்சனை தான் கதை. இந்த கதைக்கு எதற்கு அந்த காலத்து நாடக் குழு பின்னனியில் படம் எடுத்தார் என்று தான் புரியவில்லை. 

படத்தின் தயாரிப்பாளர் சித்தார்த் என்பதால் இவ்வளவு பலமான பாத்திரத்தை அவர் ஏற்று நடித்திருக்க வேண்டாம். தன்னுடைய அதிகப்பட்ச நடிப்பை அவர் வெளிப்படுத்திருக்கலாம். அந்த பாத்திரம் அதை விட அதிகமாக நடிக்க வேண்டும். சித்தார்த் நடிப்பில் இன்னும் பல மைல் தூரம் போக வேண்டியது இருக்கிறது என்பதை அவருக்கு யாராவது புரிய வைத்தால் நல்லது.

பிரித்விராஜ் நன்றாக நடித்திருந்தாலும், பல இடங்களில் மலையாள வாடை அடிப்பது அவரால் தவிர்க்க முடியவில்லை. வேதிகா பாத்திரம் கே.பி.சுந்தரம்மாள் பாதிப்பில் உருவானது என்று இணையத்தில் படிக்க செய்தி கிடைக்கிறது. கே.பி.சுந்தரம்மாள் கிட்டப்பாவுக்கு இரண்டாவது மனைவி, கிட்டப்பா அதிகம் மது அருந்துபவர் போன்ற தகவல் தவிர வேறு எந்த பாதிப்பும் இந்த படத்தில் தெரியவில்லை. 

அந்த காலத்தில் ஒரு பெண் ஷீரிப்பார்டை வேஷம் அணிவது என்பது மிகப் பெரிய விஷயம். அப்படி ஷீரிப்பார்ட்டை அணிந்து நடிக்கும் பெண்களை பல ஜமிந்தார்கள் தவறாக பார்த்தார்கள். தங்கள் இச்சைக்கு இணங்க வைக்க நாடகம் நடத்துபவர்களுக்கு தொல்லை கொடுத்தார்கள். (ஷீரிப்பார்ட்டை வேடம் அணியும் ஆண்களுக்கும் இந்த பிரச்சனை உண்டு). [ உபயம் – எம்.ஆர்.ராதாவின் சிறை சிந்தனைகள் நூல்] 

இதனாலையே பெண்ணை நடிக்க வைக்க பல நாடகக் குழு பெண்ணை சேர்த்துக் கொள்வதில் தயக்கம் காட்டினர். இதை எல்லாம் எதிர்த்து தான் ஒரு பெண் மேடையில் நடிக்க வேண்டியது இருக்கும். சர்வ சாதாரணமாக ஒரு பெண் ஷீரிப்பாட்டை ஏற்று நடிப்பதை காட்டியிருக்கிறார். புராண நாடகங்களின் வீழ்ச்சி சுதேசி நாடகம் மட்டுமல்ல, அன்றைய சினிமா ஆரம்பக் காலத்தில் புராண நாடகங்கள் பயஸ்கோப் படங்களாக சென்றுக் கொண்டு இருந்தது. அதனால், சமூகக் கதைகள் நாடகத்தை பார்க்க மக்கள் ஆர்வம் காட்டினர். 

மேடை நாடக பின்னனி கதை என்று இருக்கும் போது, அந்த காலத்தின் மேடைக் கலைஞர்களை பயன்படுத்தியிருக்கலாம். அல்லது ஆலோசனையாவது கேட்டு இருக்கலாம். வி.எஸ்.ராகவன், ஔவை நடராஜன், டி.கே. சண்முகத்தின் வாரிசான கலைவாணன், சகஸ்ரநாமமின் மகன் என்று அந்தக் கால மேடை நாடக கலைஞர்கள் பலர் இருக்கிறார்கள்.

நாசர் தவிர்த்து படத்தில் திறமையான நடிகர்களை வசந்த பாலன் சேர்க்காமல் விட்டுவிட்டார் என்று தான் தோன்றுகிறது. பிரகாஷ் ராஜ், ஜெய்பிரகாஷ் போன்ற நடிகர்களை இந்த கதைக்கு அருமையாக பயன்படுத்தியிருக்கலாம். 

எல்லாவற்றிருக்கும் மேலாக ஏ.ஆர்.ரகுமானின் மேற்கித்திய இசை. பாடல்கள் தனியாக கேட்கும் போது நன்றாக தான் இருக்கிறது. ஆனால், Period படம் என்கிற போது அந்த காலத்து தியாகராஜ பாகவதர் பாடல் பாணியில் இசை அமைத்திருக்க வேண்டும். அப்படி ஒரு பாடல்கள் கூட இல்லை. [‘இருவர்’ படத்திலேயே ஏ.ஆருக்கு பிரியர்ட் படம் வராது என்பது புரிந்திரிந்துவிட்டது. அந்த படத்தின் பாடலை வைரமுத்து ஒரளவுக்கு காப்பாற்றினார். இந்த படத்தை அப்படி காப்பாற்ற யாருமில்லை. ]

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் இயக்குனர்களின் வசந்த பாலன் பெயர் கண்டிப்பாக இருக்கும். அதற்காக அவர் மேற்கொண்ட இந்த முயற்சியை பாராட்டலாம். நல்ல கதை களனை தேர்வு செய்ததற்காக வாழ்த்தலாம். ஆனால், பழக்கப்பட்ட கதையை தேர்வு செய்ததில் சறுக்கலை சந்திக்கிறார். அதை விட மிகப் பெரிய சறுக்கல் ஏ.ஆர்.ரகுமான், சித்தார்த்தை தேர்வு செய்தது.

LinkWithin

Related Posts with Thumbnails