வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, May 31, 2010

படித்ததும் பார்த்ததும் - 31.5.10

பிரபல தொலைக்காட்சி ஒன்று, தனது டி.வி நிகழ்ச்சிக்காக பல ஜோடிகளை அழைத்து போட்டிகள் நடத்தினர். போட்டியில் வெற்றிப்பெற்ற தம்பதியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசு வழங்குவதாக அறிவித்திருந்தனர். இதில், எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் தன் மனைவியுடன் கலந்து கொண்டு முதல் பரிசு வென்றார். முதல் பரிசு வழங்குவது போல் படம் எடுத்து விட்டு, பரிசுடன் வெளியே வரும் போது ஒருவர் தடுத்தார். பரிசு பொருளை வீட்டுக்கு அனுப்புவதாக சொல்லி, கொடுத்த பரிசு பொருளை வாங்கி கொண்டார். அன்று ஐந்து வாரத்திற்கு சேர்த்து நிகழ்ச்சியை படம் பிடித்ததில் , முதல் பரிசுக்கு ஒரே பெட்டியை பயன்படுத்தியுள்ளார்கள் என்று பிறகு தான் என் நண்பருக்கு தெரியவந்துள்ளது.

முதல் பரிசு பெற்ற தம்பதியருக்கு பரிசு பொருளே வரவில்லையாம். டி.வியில் அவர்களை காடியது தான் மிச்சம்.

பரிசு மழை, பம்பர் பரிசு என்று அறிவித்து பல போட்டிகள் நடத்தி தங்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்திக் கொள்கிறார்கள். உண்மையில் பரிசு பொருள் போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கு கிடைக்கிறதா என்று விசாரனை செய்ய தனி குழுவே தேவைப்படும் போலிருக்கிறது.

***
சுட்டாச்சு சுட்டாச்சு
பக்கங்கள் : 286
விலை.120

காங்கிரஸ் ஆதரவாளாரான எம்.ஆர்.ராதா தி.மு.க தொண்டரான எம்.ஜி.ஆரை சுட்ட வழக்கு பற்றின விசாரணை புத்தகம். இந்த கொலை முயற்சிக்கு பிறகு மருத்துவமனையில் இருந்தபடி எம்.ஜி.ஆர் பரங்கிமலை தொகுதியில் வெற்றி பெற்றார். தி.மு.க முதல் முறையாக ஆட்சியை பிடித்தது. காமராஜர் கல்லூரி மாணவரிடம் தோல்வியுற்றார்.

இரண்டு திரை கலைஞர்களுக்குள் இருக்கும் அரசியல் கருத்து வேறுபாடு, தமிழ அரசியல் மாற்றத்திற்கு முக்கிய காரணங்களில் இதுவும் ஒரு காரணமாக இந்த சம்பவத்தை சொல்லலாம்.

நந்தா என்ற கதாப்பாத்திரத்தை புகுத்தி கற்பனை நடையில் உண்மை சம்பவத்தை மிக ஸ்வாரஸ்யமாக கொடுத்துள்ளார் சுதாங்கன்.

எம்.ஆர்.ராதா - என்.எஸ்.கே விவகாரம் எம்.ஆர்.ராதாவின் குணத்தை அறிந்துக் கொள்ள கொடுக்கப்பட்ட தகவலாக இருந்தாலும், இந்த புத்தகத்திற்கு தேவையில்லாதது.
எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு படிப்பது போல் சில இடங்களில் தோன்றுவதை தடுக்க முடியவில்லை. வழக்கு விசாரணை பற்றிய புத்தகம் என்பதால் படித்த கேள்வி - பதில், தேவையில்லாத கேள்விகள் என்று எல்லாவற்றையும் படிக்க வேண்டியதாக உள்ளது. படிக்கும் வாசகனுக்கே இப்படி இருக்கும் போது விசாரணைக்கு பதில் அளித்தவருக்கு எப்படி இருந்திருக்கும்.

***

நேற்று ஜெயா டி.வி நிகழ்ச்சியில் ஒரு சிறுமி தன் ஒரு நாள் முழுக்க செய்யும் வேலையை பற்றி பட்டியல் போட்டாள். ஸ்கூல், டூஷன், பியனோ க்லாஸ் என்று பல வகுப்பு இருப்பதால், அரை மணி நேரம் தான் தன்னால் டி.வி பார்க்க முடிகிறது என்று குறைப்பட்டு கொண்டாள்.

பெரியவர்களை விட சிறுவர், சிறுமியர்கள் பிஸியாக இருக்கிறார்கள் என்ற உண்மையை அப்போது தான் புரிந்தது.

நேரமின்மையை பற்றி பேச பெரியவர்களை விட சிறுவர்களுக்கு அதிக உரிமை இருக்கிறது.

***

நாகரத்னா பதிப்பக சார்பில் 'கவிதை உலகம்' என்ற கவிதை தொகுப்பு நூல் போட இருக்கிறோம். படைப்புகள் அனுப்ப விரும்புவோர் 'nagarathna_publication@yahoo.in' என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

தலைப்பு : எழுத்தாளர் விரும்பும் தலைப்பில் எழுதலாம்

கவிதை 24 வரிக்குள் இருக்க வேண்டும். ஹைக்கூ, மரபு, புதுக்கவிதை என்று எந்த வகையில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

கவிதைகள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 30.6.10

Friday, May 28, 2010

குறும்படம் : ஊன்றுகோல், தடுமாறும் நூலகம்

குறும்படம் என்றால் வலியை உணர்த்தும் சோகம் இருக்க வேண்டும் இல்லை என்றால் கருத்து சொல்ல வேண்டும் என்ற விதியை யார் நிர்ணயம் செய்தார்கள் என்று தெரியவில்லை. இந்த இரண்டு விதி பின்பற்றி வந்திருக்கும் குறும்படங்கள் தான் - ஊன்றுகோல் மற்றும் தடுமாறும் நூலகம்.

ஊன்றுகோல்

தெருவில் குப்பை பொறுக்கும் சிறுவர்களுக்கு உடைந்த செல்போனும், கடிகாரமும் குப்பை தொட்டியில் கிடைக்கிறது. யாருக்கும் உதவாத பொருளாக இருந்ததை இரண்டு சிறுவர்கள் பயனுள்ளதாக மாற்றுகிறார்கள். இருந்தாலும், அவர்கள் திறமை மதிக்கப்பட்டாமல் மிதிக்கப்படுகிறது. அவர்கள் திறமையை யாரும் புரிந்து கொள்ளாமல் இருக்கும் போது வயதான ஒருவர் அவர்களை ஊக்கப்படுத்தி தன் நண்பர் மூலம் நாளிதழில் இரண்டு சிறுவர் புகைப்படத்தை பிரசுரம் செய்கிறார்.

திறமை இருப்பவர்களுக்கு ஊக்கம் கொடுத்தால், யார் வேண்டுமானாலும் புகழ் உச்சத்தை தொடலாம் என்ற கருத்தை சொல்ல வந்திருக்கும் குறும்படம். வழக்கமான கருத்து சொல்லும் குறும்படம் என்றாலும் இரண்டு சிறுவர்களில் திறமையை காட்டியதில் செய்கை தனம் தெரிகிறது.

சிறுவர், இளைஞர்களின் திறமை மதிப்பு கொடுக்க வேண்டும் என்றால் முதலில் நம் கல்வி முறைகள் மாற வேண்டும். தொழிற்கல்வி, பயிற்சி முறை கல்வி போன்ற முயற்சிகள் வந்தால் தான் திறமையானவர்களை மதிக்கும் குணம் வரும். அதுவரை, யார் என்ன கண்டுபித்தாலும், சாதித்தாலும் கல்வி பின்னனி பார்த்து பாராட்டும், வாழ்த்தும் கிடைக்கும்.

இந்த குறும்படத்தை இயக்கியவர் தனுஷ்ராஜா.

தடுமாறும் நூலகம்

இன்றைய அவசர யுகத்தில் எத்தனையோ விஷயங்களை தொலைந்தை தெரியாமல் வாழ்கிறோம். அப்படி தொலைந்த ஒரு தொழிலை இந்த குறும்படம் உணர்த்துகிறது.

ஒரு காலத்தில், ஒருவர் வீடு தேடி வந்து வார இதழ்கள், நாவல்கள் கொடுப்பார். இரண்டு, மூன்று நாட்கள் கலித்து படித்ததற்கு பணத்தையும், இதழையும் வாங்கி செல்வார். வீட்டில் இருக்கும் பல பெண்கள், ஓய்வு பெற்றவர்கள் என்று பலர் எல்லா வார இதழ்களையும் குறைந்த விலையில் படித்தனர். இன்று படிக்கும் பழக்கமே அறிதாக போய்விட்ட காலத்தில் வீடு தேடி புத்தகம் கொடுத்து, வாங்கி செல்பவர்கள் தொலைந்துவிட்டார்கள்.

இப்படி காலத்தால் மறக்கடிக்கப்பட்ட நடமாடும் நூலகமாக இருந்தவரின் மன வேதனையை சொல்லும் குறும்படம். ஒரு நிமிடத்தில் காட்ட வேண்டிய நடமாடும் நூலகத்தின் வாழ்க்கையை ஐந்து நிமிடங்களாக காட்டியிருப்பது கொஞ்சம் இழுவையாக தான் இருக்கிறது. இறுதியில், தன் மகன் வாங்க வேண்டிய பாட புத்தகத்தின் பட்டியலையும், தொழிலுக்காக வாங்க வேண்டிய புத்தகத்தின் பட்டியலும் வைத்து எது வாங்க வேண்டும் தெரியாமல் தவிக்கிறார். நடமாடும் நூலகமாக இருந்தவர் தடுமாறும் நூலகமாகிறார்.

காலத்தால் மறந்த தொழிலை நினைவு படுத்தியதற்காக இந்த குறும்படத்தை பாராட்டலாம். இந்த குறும்படத்தை இயக்கியவர் நாஞ்சில் தமிழ்வாணன்.

மேல் குறிப்பிட்டுள்ள இரண்டு குறும்படங்களை கீழ் காணும் முகவரியில் வாங்கலாம்.

கலைமலர் கலைக்கூடம்
50/1ஏ, ராஜசுபம் காம்ளேக்ஸ்,
இந்து கல்லூரி தெற்கு,
நாகர்கோவில் – 629002

Thursday, May 27, 2010

கவிதை : மகாகவி பாரதி

பாருக்குள்ளே நல்ல நாடு
பாரதி பிறந்த தமிழ் நாடு !
சிந்தனை பிறந்தது எந்நாளாம்
சிந்து பாடும் பாரதி பிறந்த நாளாம் !

தன் திம்தரிகிட பாட்டால்
தமிழனை தட்டி எழுப்பினார் !
தன்னலம் பாராமல் எழுதியதால்
தருமி போலவே வாழ்ந்தார் !இவர் மீசையை நிமிர்த்தி
தமிழர்களில் நரம்புகள் முறுக்கேறினார் !
அதட்டும் கண்களால்
அன்பு காட்டினார் !

ஹரிஜனை தொட்ட முதல் பிராமிணர் !
பெண் உரிமைக்காக பேசிய முதல் ஆண் !
தமிழுக்கு இருக்கும்
வறுமையை இருபதாம் நூற்றாண்டில்
உணர்த்திய முதல் கவிஞர் !

வறுமை, அலச்சல்
ஒரு கவிஞனை உருவாக்கும் சமையல் !
இதை எங்களுக்கு காட்டிய
பாரதி ஒரு கவிச் செம்மல் !

தமிழ் தாய்
தன்னை தலை நிமிர
இவரிடம் ஆலாதி பிரியம்
இளைமையிலே
தன்னிடம் அழைத்து கொண்டார் !

அச்சத்தை தவிர்க்க வைத்தார்!
மானத்தை போற்ற வைத்தார் !
ரௌத்திரத்தை பழக செய்தார் !
கவிஞன் பணத்தை திரட்ட
சொல்லி தர மறந்துவிட்டார் !

ஆதலால்,
" நான் கவிஞன்
எனக்கு தொழில் கவிதை "
என்று சொல்லும் துணிச்சல் எனக்கில்லை !
எழுத்தும், வறுமையும் ஒன்றாய் ஏற்று
புகழ் கண்ட பாரதி
உன்னை போல் யாருமில்லை !!

Wednesday, May 26, 2010

கிரடிட் கார்ட் - வங்கி பாதுகாப்பு வளையம்

கிரடிட் கார்ட் வந்த புதிதில் அதன் 16 இலக்கு நம்பர் மற்றும் காலவதியாகும் மாதம் / வருடம் போன்ற விபரங்களை சிதம்பர ரகசியம் போல் காக்க வேண்டும். அந்த நம்பர், மற்ற விபரங்கள் வேறுயாருக்காவது தெரிந்துவிட்டால் போதும், யார் வேண்டுமானாலும் அதை வைத்துக் கொண்டு என்ன வேலை வேண்டுமானாலும் செய்யலாம். இணையதளத்தில் யார் என்ன பொருள் தேவையோ வாங்கிவிடலாம். இப்படி கிரடிட் கார்ட் வாங்கி விட்டு தேவையில்லாமல் தொல்லையில் மாட்டியவர்கள் பலர். பணத்தை காப்பதை விட கிரடிட் கார்ட்டை பத்திரமாக பாதுகாக்க வேண்டியிருந்தது. கார்ட்டை தேய்க்க கடைக்காரனிடம் கொடுக்க கூட பயந்தனர். இதனாலே, பலர் கிரடிட் கார்ட் வாங்குவதற்கு அஞ்சினார்கள்.

இப்போது வளர்ந்து விட்ட தொழில் நுட்பத்தில் ஒவ்வொரு கிரடிட் கார்ட்டுக்கும் 'CSC/CVV' என்ற மூன்று நம்பர் இருக்கிறது. இந்த எண்கள் கிரடிட் கார்ட் பின்புறத்திலேயே இருக்கும். பெரும்பாலும், இந்த எண்கள் தொலைப்பேசி மூலம் வங்கி சேவை நாடும் போதும், இணையதளத்தில் பொருள் வாங்கும் போதும் பயன்ப்படும்.CSC / CVV என்றால் Card Verification Value / Card Security Code. இந்த மூன்று இலக்கு எண்கள் பெரும்பாலும் தொலைப்பேசி வங்கி சேவையிலும், இணையதளத்திலும் அதிகம் பயன்ப்படும். அதாவது, யார் கையில் கிரடிட் கார்ட் உள்ளதோ, அவர்கள் தான் தனக்கு சொந்தமாக பொருள் வாங்குகிறார் என்பதை சொல்லுவதற்கு இந்த எண்ணை பயன்படுத்துவார்கள்.

இந்த தகவலை எல்லாம் ஒரு பேப்பரில் குறிப்பு எடுத்துக் கொண்டு நம் பெயரில் யாராவது இணையத்தில் வாங்க முடியாதா என்று கேட்டால், கண்டிப்பாக முடியும். அதனால், கிரடிட் கார்ட் தேய்க்கும் போது பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்வது நல்லது.

ஒரு சில வங்கிகள் தன் வாடிக்கையாளர் கிரடிட் கார்ட் விபரத்தை திருடி இணையத்தில் வாங்க நினைத்தாலும், அதை தடுக்க பாதுகாப்பு வளையம் வைத்துள்ளது. உதாரணத்திற்கு, உங்கள் பெயர், கிரடிட் கார்ட் காலவதி மாதம், வருடம்,'CSC' எண் என்று எல்லா குறிப்புகள் எடுத்துக் கொண்டு இணையத்தில் வாங்க நினைத்தால், Secret Pin அல்லது 'Authorization Code' என்று கிரடிட் கார்ட் உரிமையாளிரின் செல்போனுக்கு அனுப்புகிறார்கள். இதனால் எல்லா தகவல் திருடினாலும் திருடனால் ஒன்றும் செய்யமுடியாது. இது போன்ற சேவையை எல்லா வங்கிகளும் எல்லா கிரடிட் கார்டுக்கும் தருவதில்லை. குறிப்பிட்ட ஒரு சில வங்கிகளே இது போன்ற சேவைகளை வழங்குகிறது.

ஒரு சில வங்கிகள் தன் வாடிக்கையாளர் 5000 ரூபாய் மேல் பொருள் வாங்கினால், கிரடிட் கார்ட் உரிமையாளர் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி விபரத்தை உறுதி செய்துக் கொள்வார்கள். சில சமயம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கிரடிட் கார்ட் உரிமையாளர் தான் பொருள் வாங்கினாரா என்று உறுதி படுத்திக் கொள்வார்கள். ஒரு வேலை நீங்கள் எந்த பொருள் வாங்கவில்லை என்றால், வாடிக்கையாளர் சேவை தொடர்புக் கொண்டு தெரிவிக்க வேண்டும்.

அதே சமயம் வங்கியால் எல்லா வர்த்தக நடவடிக்கைகளை கண்காணிக்க முடியாது. அதனால் பெரிய அளவில் வாடிக்கையாளர் வாங்கும் போது இது போன்ற சேவையை வழங்குகிறது.

இப்படி வங்கிகள் தன் வாடிக்கையாளர் கிரடிட் கார்ட் சேவை பல பாதுகாப்பு வளையம் வைத்திருந்தாலும், கிரடிட் கார்ட் பார்த்த மாத்திரத்தில் போலி கிரடிட் கார்ட் தயாரிக்கும் நுதன திருடர்கள் இருக்க தான் செய்கிறார்கள்

Monday, May 24, 2010

படித்ததும் பார்த்ததும் - 24.5.10

முன்பெல்லாம் திரையரங்கிற்கு போகாதவர்கள் 30,40 ரூபாய் கொடுத்தாவது திருட்டு விசிடி, டிவிடி வாங்கி படம் பார்ப்பார்கள். ஆனால், இப்போது அந்த செலவு கூட இல்லாமல் யூ-டியூப் போன்ற இணையதளத்தில் புதுபடங்களை இலவசமாய் திரையிடுகிறார்கள். 'ஜக்குபாய்' படம் வந்த பிறகு இணையதளத்தில் படம் வர அதிக கெடுபிடி இருக்கும் என்று எதிர்பார்த்தால், முன்பை விட சீக்கிரமாகவே இணையத்தில் படம் வருகிறது.

சமீபத்தில் வெளிவந்து, இரண்டாவது வார தொடக்கத்திலே இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், கோரிப்பாளையம் போன்ற படங்கள் இணையத்தில் கிடைக்கிறது. திரை உலகினர் இதை தீவிரமாக எடுத்து கொண்டால் நல்லது.

***

பிரபாகரன் பேசுகிறார் ( வீரம் விளைந்த ஈழம் - 2)அருட்தந்தை ஜெகத்கஸ்பர்
பக்.176, விலை.140

ஹிட்லர் இறந்த பிறகு, உலக நாடுகளில் இருந்து ஜெர்மனுக்கு வர வழைத்து, மரண மூகாம் பற்றியும், ஹிட்லரின் கொடுமை பற்றியும் பதிவு செய்தனர். ஜெர்மானியர்களை கொண்டு யூத உடல்களை அப்புரப்படுத்தினர். இப்படி எல்லாம் செய்யாமல் போனால் நாளைய சங்கதியர்களுக்கு ‘யூத இன படுகொலை’ பற்றி தெரியாமலே போயிருக்கும். 'யூத இன படுகொலை' ஹிட்லரோடு முடிந்தது என்று தைரியமாக சொல்லும் அளவிற்கு இந்த வரலாறு பதிவுகளே உதவியிருக்கிறது.

யூதர்களுக்கு பிறகு அதிகமாக இன படுகொலை செய்யப்பட்ட இனம் 'தமிழர்' இனம் தான். ஈழ யுத்த நடக்கும் போதே ஹிந்து நாளேடு, சோ, ஞாநி போன்றவர்கள் ஈழத்தில் அப்படி ஒரு யுத்தமே நடக்கவில்லை என்று தான் பேசினார்கள். இன்னும், 20,30 வருடங்களில் ராஜபாக்ஷே பெரிய நாயகனாக கருதப்படலாம். தமிழர் இன படுகொலை நடக்கவில்லை என்று தமிழர்களே வாதாடலாம்.

அப்படி எல்லாம் நடக்காமல் இருக்க இது போன்ற சில வரலாற்று பதிவு நூல்கள் தேவை. ஈழ போராட்ட வரலாறு குறிப்பு சேகரிப்பில் நக்கீரன் குழுமத்துக்கு தனி பங்கு உண்டு. அதே சமயம் அவர்களின் நம்பக தன்மையை விமர்சனம் செய்பவர்களும் கண்டிப்பாக இருப்பார்கள்.

ஈழ யுத்தத்திற்கு பிறகு அரசியல்வாதிகளே மறந்து விட்ட நிலையில் நக்கீரன் குழுமமாவது ஈழத்தை பற்றி பரப்புகிறார்கள்.

****

ஜூலை மாதத்தில் இருந்து அடித்தல் திருத்தல் கொண்ட காசோலைகளை வங்கிகள் ஏற்றுக் கொள்ளாது. முன்பு, காசோலையில் பெயர், தேதி, பணம் போன்ற விபரங்களில் தவறு இருந்தால் அடித்து திருத்தி விட்டு கையெழுத்து போடுவார்கள். வங்கிகளும் ஏற்றுக் கொள்ளும். இனி அப்படி நடந்தால், புது காசோலை தான் கொடுக்க வேண்டும். காசோலை ஏமாற்று வேலையை தவிர்க்க ஆர்.பி.ஐ இந்த புது அறிவிப்பை அறிவித்துள்ளது.

****

தெனாவட்டு, தீ படங்களை விட 'சுறா' சன் குழுமத்திற்கு அதிக நஷ்ட கொடுத்த படம் என்று நினைக்கிறேன். சன் குழுமம் ஒரு படம் வாங்கினால், குறைந்தது இரண்டு மாதம் விளம்பரம் ஓடும், ஆறு வாரமாவது சன் டாப் 10 மூவியில் முதல் இடம் இருக்கும். ஆனால், 'சுறா' வெளிவந்து ஒரு மாததிற்குள் தன்னுடைய அடுத்த படமான 'சிங்க' த்தை வெளியிடுகிறார்கள். இதனால், படம் வெளிவந்து இரண்டாவது வாரத்தில் இருந்து 'சிங்கம்' முதல் கொடுக்க, 'சுறா' இரண்டாவது இடத்துக்கு தள்ளப்படும்.

விஜய்யால் வந்த நஷ்டத்தை சூர்யா 'அயன்' போல் லாபம் சம்பாதித்துக் கொடுக்கிறாரா என்று பார்ப்போம்.

Thursday, May 20, 2010

'மேலிட உத்தரவுப்படி தமிழர்களைக் கொன்று குவித்தோம் ' - சிங்கள தளபதி

லண்டன்: எங்களால் பிடிக்கப்பட்ட, எங்களிடம் வெள்ளைக் கொடியுடன் வந்து சரணடைந்த அனைத்துத் தமிழர்களையும் சித்திரவதை செய்து கொடூரமாகக் கொலை செய்தோம் என ஈழப் போரின் கடைசிக் கட்டத்தின்போது களத்தில் இருந்த ராணுவ தளபதி ஒருவரும், ஒரு ராணுவ வீரரும் சானல் 4 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளனர்.

மேலும் தமிழ் இளைஞர்களை கைகளையும், கண்களையும் கட்டி துப்பாக்கிகளால் பின்னாலிருந்து கொடூரமாக ராணுவத்தினர் சுட்டுக்கொன்ற காட்சிகளை இந்த ராணுவ வீரர்தான் படம் பிடித்து சானல் 4 தொலைக்காட்சிக்கு அளித்துள்ளார் என்றும் சானல் 4 தெரிவித்துள்ளது.

பிரபாகரனின் இளைய மகன் சித்திரவதை செய்து கொலை:

இதேபோல, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகனை உயிருடன் பிடித்து கொடூரமாக சித்திரவதை செய்து, பிரபாகரன் இருப்பிடத்தை அறிந்து கொண்ட பின்னர் அந்த சின்னஞ் சிறுவனையும் மிகக் கொடூரமாக ராணுவம் சுட்டுக் கொன்றதாகவும் அந்த சிங்கள ராணுவ வீரர் கூறியுள்ளார்.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது இலங்கைப் படையினரால் பிடிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்ட வீடியோவை முன்பு சானல் 4 வெளியிட்டது.

கண்களையும், கைகளையும் கட்டிய நிலையில் பின்னாலிருந்து மிருகத்தனமாக தலையில் சுட்டு அந்தத் தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர். இது உண்மையான வீடியோதான் என பின்னர் நிரூபிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட அந்த வீடியோ தொடர்பாக மேலும் ஆதாரங்களை பெறும் வகையில் அந்த படுகொலைகளை மேற்கொண்ட இலங்கை ராணுவ சிப்பாய் மற்றும் போர் முனையில் இருந்த ராணுவ தளபதிகளில் ஒருவருடைய பேட்டியை தற்போது சானல் 4 வெளியிட்டுள்ளது.

அதில் அந்த ராணுவ வீரர் கூறுகையில், எமது தளபதி எல்லோரையும் படுகொலை செய்யுமாறு உத்தரவிட்டார். ஆகவே, நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் யாரையும் உயிருடன் வைத்துப் பாதுகாக்க்கும் திட்டம் ஏதும் எங்களிடம் இல்லை. எனவே அனைவரையும் படுகொலை செய்து விட்டோம். இதற்கான உத்தரவு நிச்சயமாக உயர்மட்டத்திலிருந்தே கிடைத்திருக்க வேண்டும்.

வெள்ளைக் கொடியுடன் சரணடைவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வந்தபோது, அவர்களை முதலில் கைது செய்தோம். பின்னர் சித்திரவதை செய்தோம். அதன் பின்னர் கொலை செய்தோம்.

போரின் இறுதி நாட்களில் நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம் என்றார்.

இந்த செய்திகள் மற்றும் படங்கள் குறித்து லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திடம் சனல் 4 செய்தி நிறுவனம் கேட்டபோது,

இலங்கை படையினர் மனிதாபிமான நடவடிக்கையினையே கடந்த வருடம் மேற்கொண்டிருந்தனர் அதில் பொதுமக்கள் எவருக்கும் எந்த இழப்பும் எற்படவில்லை. அவ்வாறு படையினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் என்று வெளிவரும் செய்திகள் எதிலும் எந்த உண்மையும் இல்லை.

சானல் 4 தொலைக்காட்சியினால் தற்போது வெளியிடப்பட்ட தகவல்கள் குறித்து தற்போது நான் எந்த பதிலும் கூறமுடியாது. இது தொடர்பான வீடியோவை அனுப்புங்கள். அதன் பின்னர்தான் அது குறித்து கருத்து கூறமுடியும்.

இலங்கைப் படையினர் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு இலங்கை அதிபர் குழு ஒன்றினை நியமித்துள்ளார் என்று இங்கிலாந்துக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய வீடியோ தகவல் குறித்து சானல் 4 தொலைக்காட்சியின் வெளியுறவு செய்தியாளர் ஜோனதன் மில்லர் கூறுகையில், புரட்சிகளையும், மக்கள் எழுச்சியையும் அடக்க இனிமேல் உலக நாடுகள் இலங்கை மாடலை உதாரணமாக எடுத்துக் கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஈவு இரக்கமின்றி சரணடைந்தவர்களையும் கொடூரமாகக் கொலை செய்துள்ள இலங்கைப் படையினரின் செயல் சர்வதேச மனித உரிமைச் சட்டத்திற்கும், மனிதாபிமானத்திற்கும் வைக்கப்பட்ட வேட்டு ஆகும் என்றார்.

சரணடைய வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களை அப்படியே சுட்டுக் கொல்லுமாறு கோத்தபயா ராஜபக்சேதான் உத்தரவிட்டார் என்று முன்பு பொன்சேகா கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். தற்போது சானல் 4 வெளியிட்டுள்ள வீடியோவுக்கு பேட்டிஅளித்துள்ள ராணுவ அதிகாரியும், வீரரும் கூறியிருப்பதை வைத்துப் பார்த்தால், பல ஆயிரக்கணக்கான அப்பாவிகளும், விடுதலைப் புலிகளும், பா. நடேசன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் படுகொலை செய்யப்பட கோத்தபயாதான் காரணம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிறது.

கோத்தபயாதான் இதைச் செய்ய உத்தரவிட்டார் என்பதற்கு மேலும் உறுதியான ஆதாரம் கிடைத்தால், ஹிட்லரை விட மிக மிக மோசமான கொலைகாரனாக கோத்தபயா உருவெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சர்வதேச பிரச்சினைகளுக்கான குழுமம், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை தேவை என்று திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோ தகவல் இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது- சர்வதேச சமுதாயம் சீரியஸாக இதை கருதி செயல்பட்டால்.

நன்றி : தட்ஸ்தமிழ்.காம்

Wednesday, May 19, 2010

புத்தக விற்பனை - நல்ல பகுதி நேர வேலை

இரயில் பயணமோ, பஸ் பயணமோ எதுவாக இருந்தாலும் எனக்கு துணையாக இருப்பது புத்தகங்கள் தான். Landmark முதல் பிளாட் பாரம் கடை வரை விற்க்கும் புத்தகங்களை வாங்கி படித்திருக்கிறேன். அதிக பண புழக்கம் தொழில் உள்ளஇல்லை என்று விற்பனை அனுபவத்தில் தெரிந்துக் கொண்ட உண்மை.

புத்தக விற்பனையாளர் என்றவுடன் பதிப்பகம் தொழிலை பற்றி யோசனை சொல்ல போவதாக நினைக்க வேண்டாம். தமிழ் நாட்டில் மூன்னூறுக்கு மேற்ப்பட்ட பதிப்பகங்கள் உள்ளன. இப்போது இருக்கும் சூழ்நிலையில் புதிய பதிப்பகம் ஆரம்பித்து அதற்கு விளம்பரம் தேடி லாபம் சம்பாதிப்பது என்றால் குறைந்தது ஒரு இரு வருடமாவது வேண்டும். அதிக மூதலீடு வேண்டும். நான் சொல்ல வருவது புத்தக விற்பனையை மட்டுமே !

எத்தனை பதிப்பகங்கள் நூலை போட்டு விட்டு வியாபாரத்திற்காக புத்தக கண் காட்சியையும், அரசாங்க நூலகத்தையும் நம்பி இருக்கிறார்கள். ஒரு சில எழுத்தாளர்கள் சொந்தமாக நூலை போட்டு விட்டு அரசாங்க நூலகத்தை மட்டுமே நம்புகிறார்கள். இவர்களின் புத்தகங்கள் தமிழ் வாசகர்கள் பார்வைக்கு போவதே இல்லை. எடைக்கும் போட மனமில்லாமல், தூக்கி எறியாமல் பல புத்தகங்கள் பதிப்பகத்தில் அறையிலும், பறனையிலும் தூங்கிக் கொண்டு இருக்கிறது. இதனால் எத்தனையோ நல்ல புத்தகங்கள் பலர் இழந்து விடுகிறார்கள்.

புத்தக விற்பனை தொழிலில் பெரிய மூதலீடு என்றால் எழுத்தாளர்களின் புத்தகங்கள் தான். தூங்கிக் கொண்டு இருக்கும் பல எழுத்தாளர்களின் புத்தகங்களை தட்டி எழுப்புவது தான் விற்பனையாளனின் வேலை. அவர்களிடம் இருந்து புத்தகத்தை சலுகை விலையில் வாங்கி, அதை புத்தக கடையில் 65 மூதல் 70 சதவீத விலைக்கு கொடுக்க வேண்டும். புத்தகம் விற்பனையாகவிட்டால் வாங்கிய எழுத்தாளர்களிடம் திருப்பி கொடுக்க வேண்டியது தான். அதனால், வாங்கும் முன்பே விற்பனையாகும் நூலுக்கு மட்டும் தான் பணம் (Sale or Return basis) தருவதாக எழுத்தாளர்களிடம் முன்பே கூறிவிட வேண்டும்.

விற்பனையாகும் ஒரு நூலுக்கு 40 மூதல் 50 சதவீதம் வரை எழுத்தாளர்களுக்கு கொடுப்போம். (எழுத்தாளரோ, பதிப்பகமோ 1000 பிரதி போட்டிருந்தால் ஒரு நூலுக்கு அவர்கள் செய்த செலவு 30 சதவீதம் தான் இருக்கும். நம் மூலம் அவர்கள் நூல் விற்பனையாவதால் அவர்களுக்கு 10 - 20 சதவீதம் லாபம், விளம்பரமும் கிடைக்கும்). கண்டிப்பாக புத்தக கடைக்காரர்கள் 30 முதல் 35 சதவீதம் வரை கமிஷனாக எடுத்துக் கொள்வார்கள். நமக்கு 15 முதல் 20 சதவீதம் வரை லாபம் கிடைக்கும். அது மட்டுமில்லாமல், ஒரு இடம் பார்த்து நம்மிடம் இருக்கும் எல்லா புத்தகங்களை 15 சதவீதம் கலிவு விலையில் விற்க்கலாம். இதில் அதிகம் லாபம் இல்லை என்று உங்களுக்கு தோன்றலாம். பள்ளி, கல்லூரி என்று அணுகி இருபது மூதல் மூப்பது சதவீத கழிவு விலையில் விற்பனை செய்யலாம்.

இது ஒரு நல்ல பகுதி நேர வேலை மட்டுமே. ஆரம்பத்தில் முழு நேர வேலையாக செய்வது கொஞ்சம் ரிஸ்க் தான். புத்தக விற்பனை கடை வைத்திருப்பவர்கள் தாராளமாக முழு நேர வேலையாக செயல் படலாம்.

பல வருடங்கள் முன் தொடங்கிய எத்தனையோ பதிப்பகங்கள் புதிதாக புத்தகம் போடாமல் இன்னும் பழைய புத்தகங்களை புதிய பதிப்பாக போட்டு கொண்டு இருக்கிறார்கள். புது தலைப்பில் புத்தகங்கள், இணையதளம் என்று புது முயற்சியில் இறங்குவதில்லை. ஆனால், கிழக்கு, விகடன், உயிர்மை போன்ற சில பதிப்பகங்கள் மட்டும் தான் இப்போது இருக்கும் கணினியையும், இணையத்தளத்தை பயன்படுத்தி புத்தகம் விற்பனை செய்கிறார்கள்.

அடுத்தவர்கள் தனக்காக வேலை செய்வதை யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். தெரியாத ஒருவருக்கு பணத்தை தர தான் பயப்படுவார்கள். தாராளமாக புத்தகத்தை பெற முடியும்.

சரி ! எதற்கு இந்த கட்டுரை ??? என்று உங்கள் சந்தேகம் தெரிகிறது. சென்னை மற்றும் திருச்சியில் மட்டுமே நாகரத்னா மற்றும் விற்பனை உரிமை வாங்கிய புத்தகங்கள் கிடைக்கிறது. மற்ற ஊர்களில் புத்தககங்கள் கிடைக்க, புத்தக விற்பனை ஆர்வமுள்ளவர்கள் தேவை.

எங்கள் நோக்கம் புத்தக விற்பனை மட்டுமல்ல, பதிப்பகம் அல்லாமல் சொந்தமாக வெளியிடுபவர்களில் நூல்களை தமிழக முழுக்க கொண்டு செல்வது தான். சென்னை, திருச்சி விற்பனையில் எங்களுக்கு கிடைக்கும் அதே லாபம் மற்ற ஊரில் விற்பனை செய்யும் விற்பனையாளருக்கும் கிடைக்கும். நாங்கள் விற்பனை உரிமை வாங்கிய புத்தகங்களுக்கு எந்த லாபமும் எங்களுக்கு இல்லை. ஒரு பதிப்பாளனாக என் பதிப்பகம் நூல்களுக்கு 50% சதவீதம், விற்பனையாளனாக உங்களுக்கு 20%, கடைக்கு 30% கிடைக்கும். புத்தகத்தை பல இடங்களில் கொண்டு செல்வதே எங்கள் நோக்கம்.

எந்த தொழிலாக இருந்தாலும் உழைப்பை தவிர வேறு பெரிய முதலீடு எதுவுமில்லை. ஆர்வமுள்ளவர்கள் 'nagarathna_publication@yahoo.in' என்ற மின்ஞசல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

Monday, May 17, 2010

படித்ததும் பார்த்ததும் 17.5.10

பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் நேற்று (16.5.10) ஞாயிறு அன்று காலமானார். இதுவரை 1000 மேற்பட்ட சிறுகதைகள், 800 மேற்பட்ட நாவல் எழுதுயுள்ளார். பல இல்லத்தரசிகள் விரும்பி வாசித்த நாவல்களில் அனுராதா ரமணனின் நாவல் மிக முக்கியமானது.

இவர் எழுதிய ஒரு சில படைப்புகள் திரை வடிவமும் பெற்றள்ளது. அதில் குறிப்பாக...

சிறை , கூட்டுபுழுக்கள் - ஆர்.சி. சக்தி இயக்கியுள்ளார்.
ஒரு மலரின் பயணம் - முக்தா சினிவாசன் இயக்கியுள்ளார்.
ஒரு வீடு இரு வாசல் - கே. பாலசந்தர் இயக்கியுள்ளார்.

இன்னும் சில படைப்புகள் தொலைக்காட்சி தொடராகவும் வந்துள்ளது. 1976 ஆண்டு, எம்.ஜி.ஆர் திரு கரங்களால் 'சிறை' சிறுகதைக்கு தங்க பதக்கம் வாங்கியுள்ளார்.

பதிவர்களின் சார்ப்பாக அனுராதா ரமணன் மரணத்துக்கு இரங்கல் தெரிவிப்போம்.

***

உலக சினிமா - பாகம் I & II

வில்லனை அடித்து வீழ்த்துவது, நாற்பது வயதில் கல்லூரி செல்வது, அறுபது வயதிலும் இருபது வயது பெண்ணுடன் டூயட் பாடுவது போன்ற மசாலா படங்களை சாபமாக பார்ப்ப்பவர்களுக்கு 'உலக சினிமா' ஒரு வர பிரசாதம். உலக சினிமாவை தமிழ் படுத்தும் போது கதையை மட்டுமே எடுக்கிறார்கள். ஆனால், உணர்வுகளை கொட்டை விடுகிறார்கள்.

ஒரு எழுத்து படம் பார்க்கும் தொற்றத்தை கொடுக்க முடியும் என்பதை இந்த புத்தகம் காட்டுகிறது. பார்க்காத பல படங்களை காட்டியுள்ளது.

முதல் பாகத்தில், E.T குறிப்பிட்டதை உலக சினிமாவாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது ஒரு ‘Science Fiction' படமாக தான் எடுத்துக் கொள்ள முடியும்.

இரண்டாவது பாகத்தில், Moolaade, Where is my fiend's home, The day I become woman, Postman போன்ற படங்களை பற்றிய கட்டுரைகள் படத்தை பார்த்து ஏற்ப்படுத்தும் பாதிப்பை ஏற்ப்படுத்தியது.

தமிழ் சினிமாவில் இருந்துக் கொண்டு எப்படி உலக சினிமாவை பற்றி இவ்வளவு அழகாக எழுதிருக்கிறார் என்று ஆரம்பத்தில் படிக்கும் போது வியப்பாக இருந்தது. ஆனால், படிக்க படிக்க தான் உண்மை புரிந்தது. பசிப்பவனுக்கு தான் உணவின் அருமை தெரியும். அதே போல் ஒரு சராசரி ரசிகனை விட தமிழ் சினிமாவில் வேலை செய்பவருக்கு தான் ஆதங்கம், ஏக்கம், நல்ல படம் எடுக்க முடியாத கவலை இருக்கும். அந்த ஆதங்கத்தை செழியன் உலக சினிமா புத்தகத்தில் தனது எழுத்து மூலம் தீர்த்து உள்ளதாக தெரிகிறது.

ஒவ்வொரு பாகமும் ரூ.105. விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது.

***

கிரிக்கெட்டை தேசிய விளையாட்டாக கொண்ட இங்கிலாந்து இது வரை சொல்லிக் கொள்ளும்படி பெரிய கோப்பையை வெல்லவில்லை. 92 உலக கோப்பை, குட்டி உலக கோப்பை (world knock-out championship) போட்டிகளில் இறுதி சுற்று வரை வந்து கோட்டை விட்டது. நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20/20 உலக கோப்பை போட்டியின் வெற்றியின் மூலம் இங்கிலாந்து தன்னை முன்னிலை படுத்தியுள்ளது.

மார்கன், பிட்டர்சன், கோலிங்வுட் போன்ற வீரர்களுக்கு ஐ.பி.எலை நல்ல பயிற்சி களமாக இருந்ததுள்ளது என்பது குறிப்பிடதக்கது..

***

இந்தியா உட்பட 17 வளரும் நாடுகள் உருபினர்களாக கொண்ட 'G-15' அமைப்புக்கு புது தலைவராக ராஜபாக்ஷே நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் தலைமை பொறுப்பில் இருந்தவர் இரான் அதிபர் முகமத் அகமதினாஜாத். அமெரிக்காவை வெளிப்படையாக விமர்சனம் செய்யும் ஒரு சில அதிபர்களின் இவரும் ஒருவர். நான் படித்த வரை இவர் மிக எளிமையானவர். இவர் இடத்தை ராஜபாக்ஷே நிரப்ப போகிறார்.

போதுவாக எதிரி வெற்றி பெற்றால் கூட வாழ்த்துபவன் நான். ஆனால், இந்த விஷயத்தில் என்னால் முடியவில்லை.

***

Friday, May 14, 2010

மீண்டும் ஒரு காதல் கதை - எதிர்வினை

இணையத்தில் தொடராய் வந்து விரைவில் புத்தகமாய் வருவிருக்கு கேபிள் சங்கர் எழுதிய 'மீண்டும் ஒரு காதல் கதை' நெடுங்கதை பற்றிய என் பார்வை. புத்தகம் வரும் முன்பே முதல் விமர்சனம் என்னுடையதாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.தொடக்கத்தில் ஒரு பெண் சங்கரிடம் தொலைப்பேசியில் பேசுகிறாள். அந்த பெண்ணில் குரல் கேட்டதும் அவன் தன் பழைய காதலி 'ஷ்ரத்தா' என்று புரிந்துக் கொள்கிறான். அவனை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவிக்கிறாள். சங்கர் சம்மதம் சொல்லி போனை துண்டிக்க, அவனது நினைவலைகள் ஐந்து வருடம் பின்னோக்கி செல்கிறது. சங்கர், ஷ்ரத்தா ஐந்து வருடம் முன்பு எப்படி சந்தித்தார்கள், எந்த சூழ்நிலையில் காதலர்களானார்கள், ஏன் பிரிந்தார்கள் என்று கதை நகர்கிறது.

சங்கரின் பார்வையில் ஷ்ரத்தா கதாபாத்திரம் விளக்கப்படுவதால் அந்த பெண்ணின் கதாபாத்திரம் அதிகம் மனதில் நிற்கிறது. ஆரம்பத்தில் ஹோட்டலில் சாப்பிடும் போதும் சங்கருக்கும் சேர்த்து ஆர்டர் செய்வதில் தொடங்கி அவன் வாழ்க்கையில் அவள் எடுக்கும் முடிவு வரை நன்றாகவே கதாப்பாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார் கேபிள். ஒன்பதாவது பகுதி வரை கர்வமானா ஷ்ரத்தாவை வாசகர்களே காதலிக்கும் அளிவிற்று உணர்வு புர்வமாகவே கட்டமைத்திருந்தார்.

கேபிள் சங்கரின் நாயகிகள் பெரும்பாலும் செக்ஸ்யை பெரிதாக எடுத்துக் கொள்ளாதவர்கள். காதலனுடன் உறவு வைத்துக் கொண்டாலும் சரி, கணவனுக்கு துரோகம் செய்தவர்களானாலும் சரி அதை பற்றின குற்ற உணர்வு இல்லாதவர்கள். தங்கள் தவறுகளுக்கு நியாயமான காரணங்களை கொடுப்பவர்கள். இதில் வரும் 'ஷ்ரத்தா' பாத்திரப் படைப்பும் அப்படி தான். இப்படி கட்டமைத்த நாயகியை தமிழ் சினிமாப் போல் ஐந்து வருட காதலனை நினைத்துக் கொண்டு இருப்பது போல் சொல்வது சுத்த அபத்தமாக உள்ளது.

க்ளைமாக்ஸ் பகுதியில், கர்வமும், எள்ளி நகையாடும் குணமும் காட்டும் இடத்தில், ஷ்ரத்தா உடல் உறவு வைத்துக் கொள்ள நினைப்பது இதுவரை வடித்த பாத்திரத்துக்கு முரணாக காட்டுகிறார். மிக எளிமையாக சொல்லுவதென்றால், ஓப்பனிங்கில் பாலசந்தர் நாயகி போல் வந்து இறுதியில் பாரதிராஜா நாயகி போல் முடிக்கிறார்.

லட்சியமே கனவாய் கொண்ட ஒரு ஆணுக்கு ஐந்து வருடத்தில் இன்னொரு காதல் வரும் போது, கர்வம், திமிர், செக்ஸ்யை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அலட்சியம் கொண்ட பெண்ணுக்கு ஐந்து வருடத்தில் இன்னொரு காதல் வராதா ?? இந்த கதையின் முடிவு - ஆண் ஆதிக்கம் தனம்.

இரண்டும், மூன்று நாட்களாக என்ன முடிவு வைத்திருக்கிறோ என்று அவர் பதிவை மோப்பமிட்ட என்னை ஒரு சினிமா தனமான முடிவை கொடுத்து கேபிள் என்னை ஏமாற்றிவிட்டார்.

கடைசி பகுதியையும், முதல் பகுதியில் பத்து வரிகளையும் நீக்கிவிட்டு படித்தால் நல்ல காதல் (திரை) கதை படித்த அனுபவம் தருகிறது.

ஏழாவது பகுதிக்காக மறுபடியும் வாசிக்கலாம்.

Thursday, May 13, 2010

அன்புள்ள நண்பனுக்கு...!

நம் நான்கு வருட நட்பில்
நான் அனுப்பும் முதல் மடல் !
நன்றி , மன்னிப்பு
வார்த்தைகள் நம்மிடம் இல்லை !
மடல் அனுப்பும் தொலைவில்
இதுவரை நாம் இருந்தில்லை !

எல்லை தாண்டிய பயங்கரவாதம்
நாளைக் கூட தொடரும் !
நம் நட்பு
எல்லை தாண்டியும் தொடரும் !
அதற்கு
இந்த மடல் ஒரு ஆதாரம் !

அன்று -
ஆழகிய பாவை ஒருத்தி
நம்மை பார்க்கும் போது
'அவள் என்னை தான் பார்க்கிறாள்'
- என்று நீ உரைக்க !
'என்னை விட அழகன் நீ'
- என்று நான் பொய்யுரைக்க !
'அவள் உன்னை தான் பார்க்கிறாள்'
என்று நான் கேலி செய்ய !
நாம் வாழ்ந்த கல்லூரி நாட்களை
எப்படிச் சொல்ல !

இன்று -
நீ பார்க்கும் பாவையர்களை
நான் பார்க்கவில்லை !
நான் பேசும் பெண்ணிடம்
நீ பேசவில்லை !

அன்று -
நம் நான்கு கண்களில்
ஒரே அழகை ரசித்தோம் !
இன்று -
தேசம் வேறு ஆனதால்
வேவ்வெரு அழகை ரசிக்கின்றோம் !

வெளிச்சத்தில் மறையும்
தீப்பொறி போல்
எல்லா துறையில் வல்லவனாக
என்னை நான் முற்பட்டேன் !
ஒரு துறையில் திறமை காட்ட
எழுத்து பக்கம் திசை காட்டினாய் !

ரயில் பொட்டிப்போல்
பேச்சை அடுக்கிக் கொண்டு இருந்தேன் !
அதிகமாய் பேசும் நாவை
பூட்டு என்றாய் !

தவறு செய்ய தவறியவன்
வரலாறு படைப்பதில்லை என்றாய் !
என் தவறுகளில்
பாடம் படிக்கச் சொன்னாய் !

காதல் கடிதங்கள்
பொய்களைச் சொல்லும் !
நட்பின் கடிதங்கள்
மனதைச் சொல்லும் !

உனக்கோ
அங்கு பல நண்பர்கள்
எனக்கும்
இங்கு பல நண்பர்கள்
ஆனால்...
என் தமிழுக்கு முதல் நண்பன் நீ !

நம் சந்திப்பை
கடல்,எல்லை,பாஸ்போட்,விசா
இவைகள் தடுக்கலாம்
நாம் சந்தித்த
நினைவுகளை இல்லை |

நம் முதல் சந்திப்பில்
வழிப்போக்கர்களாக சந்தித்தோம் !
நாளை சந்திப்பில்
நாம் உலக்கிற்கு வழிக்காட்டிகளாக ...!!

Wednesday, May 12, 2010

தோனியின் அதிஷ்டம் ??!

2007 உலக சாம்பியன் இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் எந்த ஒரு வெற்றியும் பெறாமல் நாடு திரும்புகிறார்கள்.இந்தியா முதலில் ஆடினால், இலங்கை அணியை 20 ரன்னில் வீழ்த்த வேண்டும். அல்லது இரண்டாவதாக ஆடினால் 17.4 ஓவரில் இலக்கை அடைய வேண்டும். அதுமட்டுமில்லாமல், ஆஸ்திரேலியா அணி வெஸ்ட் இன்டிஸ் அணியை வீழ்த்த வேண்டும். இந்த இரண்டும் நடந்தால், இந்தியா அரை இறுதி சுற்றுக்கு முன்னேற முடியும்.

இதில் ஆஸ்திரேலியா நமக்கு உதவி செய்தாலும், நமக்கு நாம் உதவி செய்யாத போது யார் தான் காப்பாற்ற முடியும்.

இந்தியாவின் மூன்று தோல்விகளில் நேற்று தான் போராடி தோற்றுயிருக்கிறார்கள். இந்த உலக கோப்பை போட்டியில் இந்தியா - இலங்கை ஆட்டம் தான் மிகவும் விரு விருப்பாகவும் இருந்தது என்று கூட சொல்லலாம்.

இதில் தோனிக்கு அதிஷ்டம் இல்லை என்று சொல்ல முடியாது. அதிஷ்டம் இருந்ததால் தான் கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரை இறுதியில் நுழையும் வாய்ப்பு இருந்தது. ஆனால், வெற்றி பெறாமலே அரை இறுதிக்கு நுழைய நினைத்தால் எப்படி ???

ஐ.பி.எல் ஆட்டத்தை விரு விருப்பாக விளையாட்டு மைதானத்தை சிறிதாக வைத்து விளையாடியதில் இந்திய வீரர்களின் உண்மையான ஆட்டம் தெரியவில்லை. இப்போது தெரிந்தது !!!

"என்னை கேட்டால் இந்தியாவின் தோல்விக்கு ஐ.பி.எல் தான் காரண்ம்".

இப்படி நா சொல்லலைங்க. தோனி இந்தியா வந்தா இதை தான் சொல்லுவாரு. ஆனா, காரணம் வேற மாதிரி இருக்கும்.

Monday, May 10, 2010

படித்ததும் பார்த்ததும் - 10.5.10

கடந்த வெள்ளிகிழமை நான்கு படங்கள் வெளிவந்து எந்த படம் பார்க்கலாம் என்ற குழப்பத்தில் எந்த படமும் பார்க்கவில்லை. 'நாரத கானா சபா'வில் சே.வி.சேகர் 5600வது மேடை நாடக நிகழ்ச்சிக்கு சேன்றிருந்தேன். கலைஞர், ஸ்டாலின், 'நல்லி' குப்புசாமி, 'திரிசக்தி' சுந்தராமன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். முதன் முறையாக கலைஞர் பத்தடி தூரத்தில் இருந்து பார்த்தேன். அவர் பேசுவதற்காக இரண்டு மணி நேர நாடகத்தை ஒரு மணி நேரத்தில் எஸ்.வி.சேகர் முடித்துவிட்டார். நிகழ்ச்சி முடிவில் கலைஞர்களுக்கு கலைஞர் அவர்கள் விருது வழங்கினார்.

****

எல்லோரும் எதிர்பார்த்தது போலவே 20/20 உலக கோப்பை போட்டியில் இந்தியா அரை இறுதி வாய்ப்பை இழந்தது. நமக்கும், பாகிஸ்தானுக்கு எவ்வளவு ஒற்றுமை.

2007 - ஒரு நாள் உலக கோப்பையில் இருவருமே முதல் சுற்றில் வெளியெறினர். இதில் பாகிஸ்தான் அயர்லாந்திடம் தோல்வி பெற்ற அடுத்த நாளில், இந்தியா பங்லாதேஷிடம் தோற்றது.

2007 - 20/20 உலக கோப்பையில் இருவரும் இறுதி ஆட்டத்தில் மோதினர். இதில் இந்தியா கோப்பையை கைபற்றியது. அடுத்த உலக கோப்பையை பாகிஸ்தான் வென்றது.

2010 - பாகிஸ்தான் நியூசிலாந்து அணியிடம் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தது. அடுத்த நாள், இந்தியா வெஸ்ட் இன்டிஸ் அணியிடம் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தது.

என்ன மாதிரியே அழுவுறானே ! இதான் ஒரே இரத்தம் சொல்லுறது !!

****

திரைக்கலை பிறந்த கதை

வாசகர்கள் பார்வைக்கு வராத நல்ல புத்தகம். சினிமாவில் முதல் கேமிரா கொண்டு இயக்கப்பட்ட படம் தொடங்கி கேமிராவும், திரைக்கலை வளர்ச்சியையும் பற்றி வரை சொல்லும் புத்தகம். உலகில் முதல் அசையும் படம், திரைகதை வடிவ படம், நகைச்சுவை படம் என்று பல தகவல்கள் இந்த புத்தகத்தில் உள்ளது. சினிமா பற்றி தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் இந்த புத்தகத்தை படிக்கலாம்.

இந்த புத்தகம் நூலகத்தில் கிடைத்தது. நூலக ஆணைக்கு பிறகு இந்த புத்தகம் மறு அச்சு செய்தார்களா என்று தெரியவில்லை. பாரதி புத்தகாலயம் விற்பனை உரிமை பெற்றுள்ளது.

****

நேற்று (9.5.10) அனைத்திந்திய எழுத்தாளர் சங்கம் சார்பில் வாசுகி கண்ணப்பன் விருது வழங்கும் விழா மாம்பலம் சந்திரசேகர் மண்டப்பத்தில் நடந்தது. நாகரத்னா பதிப்பகம் சிறப்பு புத்தக கண்காட்சி அனுமதி பெற்று நடைப்பெற்றது. நல்ல வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் நாகரத்னா பதிப்பக புத்தங்களை விட விற்பனை உரிமை வாங்கிய புத்தகங்கள் அதிகமாக விற்றதில் பதிப்பாளனாக சிறு வருத்தம். விற்பனையாளனாக சந்தோஷம்.

****

யுவராஜ் சிங் : தல ! நாம தோத்துட்டோமே இப்ப என்ன பண்ணுறது ?

தோனி : கவலப்படதா ! ரொம்ப 'ஐ.பி.எல்' விளையாடுனதால நாங்க ரொம்ப டையர்ட் ஆய்ட்டோம். அதனால உலக கோப்பையில சரியா விளையாட முடியல சொல்லி பேட்டி கொடுப்போம்.

ரைனா ஓடி வந்து " தல நாம மோசம் போய்ட்டோம் "

"'ஐ.பி.எல் விளையாடுனதால எங்களால நல்ல விளையாட முடிஞ்சதுனு' கெயல், பிட்டர்சன் பேட்டி கொடுத்திருக்காங "

தோனி : நாம் தோத்ததுக்கு என்ன காரணம் சொல்லலாம்னு உக்காந்து யோசிப்போம். அதுக்குள்ள என் வீட இடிக்காம இருந்தா நல்லா இருக்கும் !!

****

Wednesday, May 5, 2010

கவிதை : வெயில் பேசுகிறது

நான் வீசும் ஒளியால்
என் கண்கள் கூசுகிறது
நீங்கள் மரத்தை வெட்டியதால் !

என் தாகத்திற்கு
ஆற்று நீரை வற்ற வைத்தேன்
நதி நீரை வற்ற வைத்தேன்
மனித உடல் நீரை கூட வற்ற வைத்தேன்
பிளாஸ்டிக்கை நீங்கள் பயன்படுத்தியதால் !

இனி நான் மட்டும்
தனியாக பேச போகிறேன்
உலகம் உங்களால் அழிய போவதால் !!

Tuesday, May 4, 2010

கிரடிட் கார்ட் செய்ய வேண்டியவை, வேண்டாதவை !!

Do’s and Don’ts என்ற புரிதல் இல்லாமல் வாழ்க்கையில் எதிலும் சிறப்பாக நம்மால் செய்ய முடியாது. அலுவலகம், போக்குவரத்து, விளையாட்டு என்று எதை எடுத்துக் கொண்டாலும் Do’s and Don’ts என்று சில விதி முறைகள் இருக்கும். இதில் கிரடிட் கார்ட் மட்டும் விதிவிளக்கல்ல.கிரடிட் கார்ட் செய்ய வேண்டியவை, வேண்டாதவை !!

1. கிரடிட் கார்ட் வாங்கியதும் உங்கள் கையெழுத்தை கார்ட்டின் பின் பக்கம் குறிப்பிட்ட இடத்தில் போடுங்கள். போதுவாக வங்கி கிரடிட் கார்ட் கொடுக்கும் போதே கையெழுத்து போட வேண்டும் என்று சொல்லுவார்கள். அவர்கள் சொல்ல மறந்தாலும், கிரடிட் கார்ட் வாங்கிய கையோடு கையெழுத்து போட்டுவிடுவது நல்லது.

ஒரு வேளை, கையெழுத்து போடாமல் கிரடிட் கார்ட் தொலைத்திருந்தால், அந்த கிரடிட் கார்ட் யாராவது பொருள் வாங்கியிருந்தால் அதற்கு பணம் கட்ட வேண்டிய பொருப்பு உங்களுடையது தான்.

2. பின் (PIN) நம்பரை எங்கும் எழுதி வைக்க வேண்டாம். கிரடிட் கார்ட் பின் நம்பரை கிரடிட் கார்ட் பின் பக்கம் எழுதி வைப்பதோ அல்லது மோபைல் போனில் வைத்திருப்பதோ நல்லதல்ல. நன்கு பரிச்சயமான அல்லது நினைவில் வைத்துக் கொள்ளுவது போல் எண்களை பின் நம்பராக வைத்துக் கொள்ளுங்கள்.

3. கிரடிட் கார்ட்டின் ஜெராக்ஸ் காப்பியை யார் கேட்டாலும் கொடுக்காதீர்கள். கிரடிட் கார்ட்டின் பின் பக்கம் 'CVV' (card verification value) எண் இருப்பதால் அதை வைத்துக் கொண்டு இணையதளத்தில் உங்கள் பெயரில் என்ன பொருள் வேண்டுமானாலும் வாங்க முடியும்.

4. இணையதளத்தில் பொருள் வாங்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். சில ஷாப்பிங் இணையதளங்கள் மிகவும் பாதுகாப்பானது என்று சொல்லுவார்கள். இப்படி பாதுகாப்பானவர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் எல்லா தளங்களும் பாதுகாப்பானதாக இருக்காது.

இந்த இணையதளம் பாதுகாப்பானது என்று சான்றிதழ் வாங்கியிருந்தால் மட்டும் அந்த தளத்தில் பொருள் வாங்க உங்கள் கிரடிட் கார்ட் விபரத்தை கொடுக்க வேண்டும்.
உதாரணத்திற்கு, 'VeriSign' - ஒரு தளத்தை பாதுகாப்பானது என்று சொல்லிவிட்டால் தாராளமாக பொருள் வாங்கலாம் என்று பயன்படுத்துபவர்களின் நம்பிக்கை. அப்போது அவர்கள் அந்த தளத்திற்கு பாதுகாப்பு சான்று கொடுத்திருக்கிறார்களா என்று பார்த்து, உங்கள் விபர்த்தை கொடுக்கவும்.

5. நீங்கள் சந்தேகப்படும் எந்த இணையத்தளத்திலும் உங்கள் கிரடிட் கார்ட் பற்றிய விபரத்தை கொடுக்க வேண்டாம். நல்ல பழக்கப்பட்ட, நம்பிக்கையான இணையத்தில் மட்டும் உங்கள் கிரடிட் கார்ட் விபரத்தை கேட்டால் கொடுங்கள்.

6. யாராவது போன்னில் தொடர்பு கொண்டு உங்கள் கிரடிட் கார்ட் விபரத்தை, குறிப்பாக பின் பக்கம் இருக்கும் மூன்று எண்கள் பற்றி கேட்டால் எந்த விபரத்தை சொல்லாதீர்கள்.

வங்கியில் பணிபுரிபவர்கள் உங்களிடம் தொலைப்பேசி அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டு கிரடிட் கார்ட் விபரத்தை கேட்க மாட்டார்கள். அப்படி யார் கேட்டாலும், எந்த தகவல் கொடுக்காமல் தொடர்பை துண்டிப்பது நல்லது.

7. கடைக்காரணிடம் கிரடிட் கார்ட் கொடுத்து மிஷினில் தெய்ப்பதை நீங்கள் ஒரு கண் பார்த்து கொள்வது நல்லது. உங்கள் கிரடிட் கார்ட்டை ஒரு முறை தெய்க்கிறானா அல்லது உங்கள் தகவல் பார்ப்பது போல் கிரடிட் கார்ட் மெஷின் வைத்திருக்கிறார்களா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

நிங்கள் கையெழுத்து போட்டு கடைக்காரன் கொடுத்த பேப்பரில் நீங்கள் வாங்கிய பொருளின் விலையை அதில் உள்ளதா என்று சரி பார்த்துக் கொண்ட பிறகு கையெழுத்து போட வேண்டும். நீங்கள் கையெழுத்து போட்ட பேப்பரை கடைக்காரனிடமும், அதன் நகல் உங்களிடமும் கொடுக்கப்படும். உங்களிடம் கொடுக்கப்படும் நகலை தூக்கி எறியாமல் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். மாத இறுதியில் உங்களுக்கு அனுப்பப்படும் கணக்கு விபரத்தோடு (Statement) நீங்கள் வாங்கிய பொருள்களின் விலையையுடன் ஒத்துப் போகின்றனவா பாருங்கள். மாத கணக்கு விபரத்தில் அதிகமாக பணம் குறிப்பிட்டு இருந்தால், வங்கியை தொடர்ப்பு கொண்டு புகார் கொடுக்கலாம்.

நீங்கள் விருப்பப்பட்டால் நீங்கள் வைத்திருக்கும் கிரடிட் கார்ட்டுக்கு இன்ஷூரன்ஸ் கூட எடுத்துக் கொள்ளலாம். ஒரு வேளை நீங்கள் கிரடிட் கார்ட் தொலைத்திருந்தால், தொலைத்த நேரத்தில் இருந்து 12 மணி நேரத்துக்குள் (உதாரணத்திற்கு) கிரட்டி கார்ட்டை பயன்படுத்தி யார் எந்த பொருள் வாங்கியிருந்தாலும் இன்ஷூரன்ஸ் க்ளைம் பண்ணலாம். ஆனால், கிரடிட் கார்ட் தொலைந்து விட்டால் சும்மா இருந்து விட கூடாது. வங்கியின் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டு உங்கள் கிரடிட் கார்ட் 16 இலக்கு எண்களை சொல்லி யாரும் பயன்படுத்த முடியாதப்படி தடுக்க வேண்டும்.

இவை எல்லாம் கிரடிட் கார்ட் பயன்படுத்துபவர்கள் அடிப்படையாய் தெரிந்துக் கொள்ள வேண்டிய விபரங்கள். கார்ட்டை பயன்படுத்த பயன்படுத்த உங்களுக்கு பல அனுபவங்கள் அதிகமாக சொல்லிக் கொடுக்கலாம்.

Monday, May 3, 2010

படித்ததும் பார்த்ததும் - 3.5.10

தேவதை, திரிசக்தி, தமிழக அரசியல் போன்ற இதழ்களை வெளியீட்டு வரும் திரிசக்தி குழுமம் , இப்போது மேலும் மூன்று இதழோடு வருகிறது. ஜோதிடம், சினிமா, இலக்கியம் போன்ற பிரிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. பதிப்பகம் மூலம் மேலும் பல புத்தகங்களை வெளியீட இருப்பதாக தெரிகிறது.

விகடன் மார்க்கெட்டை பிடிக்க மிக தீவிரமாக திரிசக்தி இறங்கியுள்ளது. இது போன்ற போட்டிகளில் யார் வெற்றி பெற்றாலும் வாசகர்களுக்கு கண்டிப்பாக வெற்றி.

திரிசக்தி குழுமத்திற்கு வாழ்த்துகள் !!

***

சமிபத்தில் நாம்மக்கல் கவிஞர் ராமலிங்கம் அவர்கள் எழுதிய "என் கதை" சுயவரலாறு படிக்க வாய்ப்பு கிடைத்தது. இன்னும் முழுமையாக படித்து முடிக்கவில்லை. தன் வாழ்க்கை கதையை இவ்வளவு எளிமையான நடையில் எழுதியிருக்கிறார். தமிழில் நேரடி சுயவரலாறு புத்தகங்கள் மிகவும் குறைவு. கலைஞரின் " நெஞ்சுக்கு நீதி", கண்ணதாசனின் "வனவாசம்", "மனவாசம்" என்று விரல் விட்டு எண்ணிவிடலாம். கண்டிப்பாக அந்த வரிசையில் "என் கதை" புத்தகமும் இடம் பெறும். முழுமையாக படித்துவிட்டு பதிவிடுகிறேன்.

***

1.5.10 அன்று நம் உரத்தசிந்தனை நடத்திய "எழுத்துக்கு மரியாதை" நிகழ்ச்சியில் நாகரத்னா பதிப்பகம் ஸ்டால் போடப்பட்டது. முன்பு விட அதிக அளவு புத்தகங்கள் பார்வைக்கு வைத்தும், எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் வராததால் விற்பனை சொல்லும் படியாக இல்லை. ஆனால், இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பொது தான் பதிப்பாளனாக கற்றுக் கொள்ள முடிகிறது.

***

சரத்குமார், நெப்போலியன் போன்றவர்களுக்கு பல வருடம் தவம் இருந்து தேர்தலில் நின்று வெற்றி பெற்றார்கள். ஆனால், ஜே.கே.ரித்தீஷ் இரண்டு படங்களில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுவிட்டார். அவரி விஜய் டி.வியின் வேடிக்கையான நேர்காணல்.

நான் மிகவும் ரசித்த கேள்வி பதில்...

கேள்வி : கானல் நீரை நீங்களாவது முழுசாப் பார்த்தீங்களா?
ஜே.கே: படத்தோட டைட்டிலுக்கு கீழே நானே ஒரு வரி போட்டிருப்பேன். கானல் நீர் – a true punishment.

கேள்வி : கானல் நீர் படத்தை ஏன் கலைஞருக்குப் போட்டுக் காட்டல?
ஜே.கே: அவ்வளோ பெரிய தண்டனையை தலைவருக்குக் கொடுக்க விரும்பல.


நிகழ்ச்சியை முழுமையாகப் பார்க்க : இங்கே.

Sunday, May 2, 2010

கவிதை : மோர்

உணவு வரலாறு தொடங்கி
நிறம் மாறாதது !
சமயல் புத்தகத்தில் கூட
செய்முறை விளக்கம் தேவையில்லாதது !

பங்கு சந்தை போல்
உயரும் குளிர்பாணம் நடுவில்
ஏழைகளுக்காக உயராமல்
குளிரவைக்கும் ஒரே பாணம் !

அம்பானி முதல்
அருப்புக்கொட்டை முனுசாமி வரை
பருக கூடிய மலிவான பாணம் !

பார்ப்பவர் கண்களுக்கு
கள்ளாகவும், பாலாகவும்
தெரியும் போதே
குணத்தை காட்டிடும் பாணம் !

மண்சட்டியானாலும்
வெள்ளி கின்னமானாலும்
கொடுக்கும் சுவையில்
பேதம் பார்த்ததில்லை !

ஐஸ்கிரீம் - ஒரு நொடி பொழுது
தாகத்தை தனிக்கும் !
பெட்ரோல் விலை போல்
சில சமயம் பழச்சாறு உயரும் !
எட்டாத உயரத்தில்
இளநீர் இருக்கும் !
அரசியல், கோயில் கூட்டத்தில் கூட
மோர் இலவசமாய் கிடைக்கும் !!

எரிபொருளுக்கும் மோருக்கு,
சம்பந்தமில்லை
அதனால்,
இதன் விலை ஏற்ற
இன்னும் காரணம் கிடைக்கவில்லை !

(நம் உரத்தசிந்தனை நடத்திய "எழுத்துக்கு மரியாதை" நிகழ்ச்சியில் (1.5.10) வாசித்த கவிதை.)

LinkWithin

Related Posts with Thumbnails