வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, May 20, 2010

'மேலிட உத்தரவுப்படி தமிழர்களைக் கொன்று குவித்தோம் ' - சிங்கள தளபதி

லண்டன்: எங்களால் பிடிக்கப்பட்ட, எங்களிடம் வெள்ளைக் கொடியுடன் வந்து சரணடைந்த அனைத்துத் தமிழர்களையும் சித்திரவதை செய்து கொடூரமாகக் கொலை செய்தோம் என ஈழப் போரின் கடைசிக் கட்டத்தின்போது களத்தில் இருந்த ராணுவ தளபதி ஒருவரும், ஒரு ராணுவ வீரரும் சானல் 4 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளனர்.

மேலும் தமிழ் இளைஞர்களை கைகளையும், கண்களையும் கட்டி துப்பாக்கிகளால் பின்னாலிருந்து கொடூரமாக ராணுவத்தினர் சுட்டுக்கொன்ற காட்சிகளை இந்த ராணுவ வீரர்தான் படம் பிடித்து சானல் 4 தொலைக்காட்சிக்கு அளித்துள்ளார் என்றும் சானல் 4 தெரிவித்துள்ளது.

பிரபாகரனின் இளைய மகன் சித்திரவதை செய்து கொலை:

இதேபோல, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகனை உயிருடன் பிடித்து கொடூரமாக சித்திரவதை செய்து, பிரபாகரன் இருப்பிடத்தை அறிந்து கொண்ட பின்னர் அந்த சின்னஞ் சிறுவனையும் மிகக் கொடூரமாக ராணுவம் சுட்டுக் கொன்றதாகவும் அந்த சிங்கள ராணுவ வீரர் கூறியுள்ளார்.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது இலங்கைப் படையினரால் பிடிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்ட வீடியோவை முன்பு சானல் 4 வெளியிட்டது.

கண்களையும், கைகளையும் கட்டிய நிலையில் பின்னாலிருந்து மிருகத்தனமாக தலையில் சுட்டு அந்தத் தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர். இது உண்மையான வீடியோதான் என பின்னர் நிரூபிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட அந்த வீடியோ தொடர்பாக மேலும் ஆதாரங்களை பெறும் வகையில் அந்த படுகொலைகளை மேற்கொண்ட இலங்கை ராணுவ சிப்பாய் மற்றும் போர் முனையில் இருந்த ராணுவ தளபதிகளில் ஒருவருடைய பேட்டியை தற்போது சானல் 4 வெளியிட்டுள்ளது.

அதில் அந்த ராணுவ வீரர் கூறுகையில், எமது தளபதி எல்லோரையும் படுகொலை செய்யுமாறு உத்தரவிட்டார். ஆகவே, நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் யாரையும் உயிருடன் வைத்துப் பாதுகாக்க்கும் திட்டம் ஏதும் எங்களிடம் இல்லை. எனவே அனைவரையும் படுகொலை செய்து விட்டோம். இதற்கான உத்தரவு நிச்சயமாக உயர்மட்டத்திலிருந்தே கிடைத்திருக்க வேண்டும்.

வெள்ளைக் கொடியுடன் சரணடைவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வந்தபோது, அவர்களை முதலில் கைது செய்தோம். பின்னர் சித்திரவதை செய்தோம். அதன் பின்னர் கொலை செய்தோம்.

போரின் இறுதி நாட்களில் நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம் என்றார்.

இந்த செய்திகள் மற்றும் படங்கள் குறித்து லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திடம் சனல் 4 செய்தி நிறுவனம் கேட்டபோது,

இலங்கை படையினர் மனிதாபிமான நடவடிக்கையினையே கடந்த வருடம் மேற்கொண்டிருந்தனர் அதில் பொதுமக்கள் எவருக்கும் எந்த இழப்பும் எற்படவில்லை. அவ்வாறு படையினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் என்று வெளிவரும் செய்திகள் எதிலும் எந்த உண்மையும் இல்லை.

சானல் 4 தொலைக்காட்சியினால் தற்போது வெளியிடப்பட்ட தகவல்கள் குறித்து தற்போது நான் எந்த பதிலும் கூறமுடியாது. இது தொடர்பான வீடியோவை அனுப்புங்கள். அதன் பின்னர்தான் அது குறித்து கருத்து கூறமுடியும்.

இலங்கைப் படையினர் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு இலங்கை அதிபர் குழு ஒன்றினை நியமித்துள்ளார் என்று இங்கிலாந்துக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய வீடியோ தகவல் குறித்து சானல் 4 தொலைக்காட்சியின் வெளியுறவு செய்தியாளர் ஜோனதன் மில்லர் கூறுகையில், புரட்சிகளையும், மக்கள் எழுச்சியையும் அடக்க இனிமேல் உலக நாடுகள் இலங்கை மாடலை உதாரணமாக எடுத்துக் கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஈவு இரக்கமின்றி சரணடைந்தவர்களையும் கொடூரமாகக் கொலை செய்துள்ள இலங்கைப் படையினரின் செயல் சர்வதேச மனித உரிமைச் சட்டத்திற்கும், மனிதாபிமானத்திற்கும் வைக்கப்பட்ட வேட்டு ஆகும் என்றார்.

சரணடைய வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களை அப்படியே சுட்டுக் கொல்லுமாறு கோத்தபயா ராஜபக்சேதான் உத்தரவிட்டார் என்று முன்பு பொன்சேகா கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். தற்போது சானல் 4 வெளியிட்டுள்ள வீடியோவுக்கு பேட்டிஅளித்துள்ள ராணுவ அதிகாரியும், வீரரும் கூறியிருப்பதை வைத்துப் பார்த்தால், பல ஆயிரக்கணக்கான அப்பாவிகளும், விடுதலைப் புலிகளும், பா. நடேசன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் படுகொலை செய்யப்பட கோத்தபயாதான் காரணம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிறது.

கோத்தபயாதான் இதைச் செய்ய உத்தரவிட்டார் என்பதற்கு மேலும் உறுதியான ஆதாரம் கிடைத்தால், ஹிட்லரை விட மிக மிக மோசமான கொலைகாரனாக கோத்தபயா உருவெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சர்வதேச பிரச்சினைகளுக்கான குழுமம், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை தேவை என்று திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோ தகவல் இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது- சர்வதேச சமுதாயம் சீரியஸாக இதை கருதி செயல்பட்டால்.

நன்றி : தட்ஸ்தமிழ்.காம்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails