வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label English Movie. Show all posts
Showing posts with label English Movie. Show all posts

Friday, May 15, 2020

Breaking Bad

வேகமாக செல்லும் திரைக்கதை கிடையாது. அதிகமான கதாப்பாத்திரங்கள் கிடையாது. ஒரு காட்சியை பார்க்காவிட்டால் கதை புரியவில்லை என்ற கவலை கிடையாது. பல இடங்கள் forward செய்து பார்க்கலாம். அந்த அளவுக்கு தேவையில்லாத நீளமாக காட்சிகள். சில இடங்களில் நம்மவூர் மெகா சீரியலை நினைவுப்படுதலாம். 

Game of Thrones, Prison Break, Money Heist அளவிற்குக்கு Breaking Bad எனக்கு பிடிக்கவில்லை. விறுவிறுப்பு இல்லாத திரைக்கதை என்பது ஒரு காரணம் என்று சொல்லலாம். Television / Web Series என்றாலே வேகமாக எடுப்பார்கள் என்ற பிம்பத்தில் இருந்தேன். ஐந்தாவது சீசன் மட்டும் கொஞ்சம் பிடித்திருந்தது.

   

பூற்றுநோய்யால் மரணத்தை நெருங்கும் நாயகன், மரணத்திற்குமுன் தன் குடும்பத்திற்கு பணத்தை சேர்த்து வைக்க பொருளை தயாரிக்கிறான். இறுதிக்காட்சியில், குடும்ப பொருளாதாரத்தை காக்கா போதைப் பொருள் தயாரிக்கிறேன் என்று கூறியவன், எனக்காகதான் செய்தேன் என்றேன் உண்மையை மனைவியிடம் ஒத்துகொள்கிறான். தன் வாழ்நாள் முழுக்க தோல்வியடைந்த வியாபாரியாக, ஒரு குடும்ப தலைவனாக மட்டும் இருந்துவிடக் கூடாது என்று மரணத்தை நெருங்கும்போது தோன்றுகிறது. அந்த எண்ணம் அவனது கட்டுப்பாட்டை தாண்டி, தனக்கான சம்ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும் என்ற அளவுக்கு செல்கிறது. நாயகனின் கதாப்பாத்திரத்தின் உண்மையான உணர்வுகள் கடைசி சீசனில் புரிய வருகிறது. 

2013ல் அதிகப்பேரால் பாராட்டப்பட்ட தொடர் என்ற ரீதியில் Breaking Bad கின்னஸ் சாதனை பெற்றுயிருக்கிறது. 

அதற்கு பல முக்கியக் காரணங்கள் இருக்கிறது. ஆங்கில Seriesல் குடும்ப உறவுகளை, அதை தக்க வைத்துகொள்ளும் முயற்சிகள் பெரும்பாலும் கவனம் செலுத்துவதில்லை. அதை இந்த Series செய்கிறது. மகன் – தந்தை, கணவன் – மனைவி, சகளைகள் என்று நெருக்கடியான நேரங்கள் உதவும் உறவுகள், அவர்களே எதிரியாக மாறும் நிகழ்வுகள் என்று Sentiment இருக்கிறது. அடுத்து, பின்னனி இசை. Series தேவையான க்ரைம் நிகழ்வுகளும் இருக்கிறது. 

வேகம், விறுவிறுப்பு பிரியர்களாக இருந்தால், கண்டிப்பாக இந்த சீரியஸ் உங்களுக்கு பிடிக்காது. Drama விரும்பியாக இருந்தால், Breaking Bad உங்களுக்கு பிடிக்கும்.

Tuesday, May 12, 2020

Prison Break - Television series

ஆள் ஆளுக்கு Money Heist பற்றி புகழ்ந்துகொண்டிருக்கும் போது அதைவிட சிறந்த Series பல இருக்கிறது. அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை என்று குறைப்பட்டுகொண்டார்கள். அதில் முக்கியமான Series - Prison Break

இது Web series அல்ல. Television series.

அதனால் சீசனுக்கு 7-8 Episode கிடையாது. ஒவ்வொரு சீசனுக்கும் 22 Episodes மேல் இருக்கிறது. கடைசி சீசன் மட்டும் 9 Episode.

மொத்தம் 5 சீசன். 90 Episodes.




முதல் 10 Episodes பார்த்த போது இதபொய் ஏன் பெரிதாக சொல்கிறார்கள் என்று தோன்றியது. ஒரு நாளுக்கு 2-3 Episodes தான் பார்த்தேன். ஆனால், அதன்பிறகு இந்த series பிடித்த வேகம் அதிகம். ஒரு நாளுக்கு 9-10 Episodes பார்த்தேன்.

ஐந்து நாட்களில் நான்காவது சீசன் பாதிக்கு மேல் பார்த்துவிட்டேன்.

சீசன் 2, 3 Ultimate Jet வேகம். ஒவ்வொரு Episodeல் நாயகன் திட்டம் போட்டது நடக்கவில்லை. ஆனால், அதற்கு மாற்றாக இன்னொரு வழி கிடைக்கிறது. எதிரியும் பலமான எதிரி என்பதை விட நிழல் எதிரியாக இருக்கிறான். அதுவும் ஸ்வாரஸ்யம் அதிகமாகிறது. போன சீசனில் எலியும், பூனையுமாக இருந்தவர்கள் சேர்ந்து வேலைச் செய்ய வேண்டியதாக இருக்கிறது. துரோகம், கிரோதம், பேராசை, அதிகாரம் என்று எல்லாம் சேர்ந்த நட்பை பல இடங்களில் பார்க்க முடிகிறது.

இதில் வரும் ஒரு காட்சியை விளக்கினாலே Spoiler ஆக இருக்கும் அளவிற்கு திரைக்கதை. நம்ப ஆட்கள் இரண்டு மணி நேர படத்திற்கு திரைக்கதை அமைக்க திண்டாடிக்கொண்டிருக்கும்போது எப்படி 70 மணி நேர seriesக்கு நேர்த்தியான திரைக்கதை அமைக்க முடிகிறது என்று தெரியவில்லை.

சீசன் 4 – 14 Episodeக்கு மேல் கொஞ்சம் பரபரப்பு குறைந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த சீசனுக்கான முக்கியமான நோக்கம் 13வது Episodeல் முடிவைந்துவிட்டால், தேவையில்லாமல் இழுத்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். அல்லது எப்படி முடிக்க வேண்டும் என்று முடிக்கதெரியாமல் இருந்தார்கள் என்று சொல்லலாம். இன்னும் எவ்வளவு காலத்திற்கு இப்படி ஓட வேண்டும் என்று நாயகனுக்கு சலிப்பு வருவதுபோல் நமக்கு வருகிறது. எப்படியும் என்ன முடிவு என்பதை தெரிந்துகொள்ள மீதம் இருக்கும் Episode பார்க்க வேண்டியதாக இருக்கிறது.

சீசன் 5 ஒ.கே ரகம் தான். முந்தைய சீசன் 2,3ல் இருந்த பரப்பரப்பு அதிகமாக இல்லை. சீசன் 6 வரும் ஆரம்பத்தில் வரும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால், 20th Century Fox Television நிறுவனம் Prison Break, 24 – இரண்டு Television series அடுத்த சீசன் பணிகளை தொடங்கவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள்.

பார்க்க விரும்புபவர்கள் Disney Hotstarல் இருக்கிறது. பார்க்கலாம்

Thursday, February 15, 2018

USS Indianapolis: Men of Courage ( English - 2016)

USS Indianapolis: Men of Courage இரண்டாம் உலகப் போரில் எத்தனையோ கப்பல்கள் முழ்கியிருக்கிறது. பல வீரர்கள் மடிந்திருக்கிறார்கள். பல கோடி மதிப்புள்ள பொருட்கள் நாசமாகியிருக்கிறது. அடையாளம் தெரியாத பல கப்பல்களுக்குள் இன்னும் கடலில் இருக்கிறது. அதில், USS Indianapolis என்ற தாக்கப்பட்ட சம்மவமும் ஒன்று என்று ஒதுக்கமுடியாது. 

USS Indianapolis தாக்குதல் அமெரிக்காவின் அணு ஆயுத தாக்குதலுக்கு முன் நடந்த சம்பவம். USS Indianapolis போர் கப்பல் அல்ல. அணு ஆயுத உபரி பாகங்களை பாதுகாப்பாக ஏற்று செல்வதற்காக ரகசியமாகப் பயன்படுத்தப்பட்ட நீர்முழ்கி கப்பல். ஜப்பான் இராணுவம் போர் கப்பல் என்ற சந்தேகத்தில் USS Indianapolis கப்பலை தாக்க, அதில் இருக்கும் பாதுக்காப்பு வீரர்கள் தத்தலிக்கிறார்கள். ஐந்து நாள் உண்ண உணவின்றி நடுக்கடலில் உயிருக்காகப் போராடி மீட்பு பணி குழுக்களால் மீட்கப்படுகிறார்கள். 

1196 பேர் சென்ற USS Indianapolis கப்பலில் 317 மட்டுமே உயிருடன் மீட்கப்படுகிறார்கள். அதில் USS Indianapolis கப்பலின் கேப்டன் சார்லஸ் மெக்வே ஒருவர். சில காயங்களுடன் திரும்பிய கேப்டன் தங்களை மீட்பதற்கு ஏன் இவ்வளவு நாட்களானது என்று கேள்வி கேட்கிறார். ரெடியோ சரியாக கேட்கவில்லை, ஜப்பானின் சூழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்தோம், போதையில் யாராவது கத்துகிறார்கள் என்று நினைத்தோம் என்ற சப்பை பதில்கள் அளித்தார்கள். அதிகாரப்பூர்வமாக கேப்டனின் கேள்விக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. தங்களை காப்பாற்றிகொள்ள USS Indianapolis கப்பல் மூழ்கியதற்கு கேப்டன் சார்லஸ் மெக்வே தான் காரணம் என்று கூறினார்கள்.



USS Indianapolis முழ்கியதைக்குறித்து விசாரணை நடக்கிறது. ஜப்பான் தாக்குவதை அறிந்து கப்பலை ‘Zig-Zag’ திருப்பியிருக்கலாம். சாட்சியங்கள் கேப்டனுக்கு ஆதரவாக இருந்தும், கேப்டன் மீது குற்றம் சுமத்தி அவரை கோர்ட் மார்ஷல் செய்தார்கள். ( USS Indianapolis கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஜப்பானிய கேப்டன் தனது தாக்குதலிலிருந்து அவர்களால் தப்பிக்க வாய்ப்பில்லை என்று சாட்சி அளித்திருக்கிறார்.) 

இரண்டாம் உலகப் போரில் தண்டனைக்கு உள்ளான ஒரே அமெரிக்க கேப்டன் என்ற பெயரை சார்லஸ் மெக்வே பெற்றார். 1968ல் மனநலம் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொள்கிறார். அந்த தாக்குதலில் மீட்கப்பட்ட 150 வீரர்களின் முயற்சியால் 800 ஆவணங்கள் தயார் செய்து கேப்டன் சார்லஸ் மெக்வேவுக்கு அளிக்கப்பட்ட அநீதிக்காக போராடுகிறார்கள். 

2000ல் அதிபர் கிளிண்டன் கேப்டன் சார்லஸ் மெக்வே குற்றமற்றவர் என்று கூறி, அவரிடம் திரும்பப் பெற்ற பதக்கங்களை எல்லாம் அவரது வாரிசுகளுக்கு அளிக்க உத்தரவிடுகிறார். 

இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டப்படம் தான் ”USS Indianapolis: Men of Courage”. 

ஐந்து நாள் நடுக்கடலில் உண்ண உணவின்றி உயிருக்கு போராடிய தனது வீரர்களை கண்முன் கேப்டன் பார்க்கிறார். தனது வீரர்கள் சுறா மீன் கடித்து இறப்பதும், தனிமை புத்திப்பேதலித்ததும், கடலின் உப்பு தண்ணீர் குடித்து இறப்பதையும் மனவேதனை அடைக்கிறார். மிக காலத்தாமதமாக தங்களை மீட்க வந்ததில் கோபமடைகிறார். ஒரு கேப்டனாக கேள்வியை கேட்கிறார். அதற்கு பதலளிக்க முடியாமல் தண்டனை அளிக்கிறார்கள். 

கேப்டன் சார்லஸ் மெக்வே பாத்திரத்தில் Nicholas Cage. அவரின் இயல்பான நடிப்பை அதிகம் சொல்ல வேண்டியதில்லை. தனது வீரர்கள் கண்முன் இறக்கும் போது குற்றவுணர்வில் தவிக்கும் ஒரு இடம் போதும் அவரது நடிப்பைப் பற்றி சொல்வதற்கு. 

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் மீது அணுகுண்டு வீசிய வீரர்களுக்கு பாராட்டும், பரிசும் வழங்கி அமெரிக்கா அழகுப் பார்த்தது. பல லட்சப் பேரை கொன்று குவித்தவரக்ளுக்கு விருது வழங்கியது. ஆனால், தனது வீரர்கள் கண்முன் இறப்பதைப் பார்த்து கேள்விக் கேட்ட கேப்டனுக்கு “கப்பலை Zig-Zagஆக திருப்பாததை குற்றமாக” கூறி தண்டனையை அமெரிக்கா வழங்கியிருக்கிறது என்பதை இந்தப்படம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 

அதிகாரத்தில் இருப்பவர்களை கேட்டால் அதற்கான தண்டனை நிச்சயம் என்பதற்கு ” USS Indianapolis: Men of Courage” படம் ஒரு உதாரணம்.

Tuesday, April 11, 2017

Edge of Seventeen ( 2016 - English Movie)

பதின்ம வயது என்பது ஆபத்தான வயது என்று பலர் சொல்வார்கள். காரணம், அந்த வயதில் தவறாக வழியில் செல்வார்கள், தவறாக பழக்கத்தை கற்றுக்கொள்வார்கள் என்பதற்காக மட்டுமல்ல, கற்றுகொள்ள வேண்டிய நல்ல விஷயங்களை தவறவிடக்கூடிய வயது என்பதாற்காகவும் தான். அந்த பதின்ம வயதில் உடல் ரிதியான மாற்றங்கள் மட்டுமல்ல, உளவியல் ரிதியான பல மாற்றங்களையும் சந்திக்க வேண்டியது இருக்கும். அதை எப்படி திறமையாக கையாண்டு, Balance ஆக வாழ்பவர்கள் வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்கு வர முடியும்.

அப்படி, பதின்ம வயதில் இருக்கும் ஒரு பெண் உளவியல் ரிதியான சந்திக்கும் சிக்கலை மையமாக கொண்ட கதை. 



நைடின், சிறுவயதில் இருந்தே யாருடனும் இனக்கமாக இருக்காதவள். சகோதரன், அம்மா கூட அந்நியமாக பார்ப்பவள். எந்த விஷயத்திலும் உற்சாகமோ, ஆர்வமோ இல்லாதவள். மற்றவர்களை போல் கலகலப்பாக இருக்க நினைத்தும் அவளால் அப்படி இருக்க முடியவில்லை. அவளுக்கு ஒரே ஆதரவு அப்பாவும், அவளது தோழி கிரிஸ்டா மட்டும் தான். 

அவளின் பதிமூன்று வயதில் அப்பாவும் இறந்துவிட, தோழி கிரிஸ்டா தவிர்த்து அவளுக்கு நெருக்கமாக யாருமில்லை. அவளின் பதின்ம வயது வந்தப் போது கூட அவளது அம்மாவும், சகோதரனும் அவளிடம் அக்கரையோடு நடந்துக்கொள்ளாமல் தங்கள் வாழ்க்கையில் சுயநலமாக வாழ்கிறார்கள். இதனாலையே நைடினுக்கு தனது சகோதரனை பிடிக்காமல் போகிறது. 

ஒரு கட்டத்தில் அவளது தோழி கிரிஸ்டாவும், சகோதரனும் காதலர்களாக மாற, கிரிஸ்டாவுடன் இருந்த நட்பையும் முறித்துக்கொள்கிறாள். தன் மீது யாரும் அன்பு செலுத்தவில்லை என்ற விரக்தியில் விபரீதமான முடிவு எடுக்கிறாள். அதில் இருந்து எப்படி மீண்டு வந்து, எப்படி மற்றவர்கள் போல் இயல்பானவளாக நடந்துக்கொள்கிறாள் என்பது தான் கதை. 

 பொதுவாக ஆங்கிலப்படத்தில் இதுப் போன்ற சப்ஜெட்டில் படம் வருகிறது என்றால் செக்ஸுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால், செக்ஸுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உளவியல் ரிதியாக தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் பதின்ம வயதுப் பெண் எப்படி அதில் இருந்து மீண்டு வருகிறாள் என்பது படமாக எடுத்திருப்பதை பாராட்டியாக வேண்டும். 

குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டு, இரட்டை மடங்காக வியாபாரமானப்படம். அமெரிக்காவில் விருதுகள், நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல், டோரண்டோ திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. 

 கொஞ்சம் பட்டைத்தீட்டி, டிங்கரிங் செய்து தமிழ் கலாச்சாரத்திற்கு மாற்றினால் தமிழ் படத்திற்கு நல்ல கதையாக அமையும்.

Sunday, February 5, 2017

Face/Off ( 1997)

அவனை பிடிக்க வேண்டும் என்றால் அவனாகவே மாற வேண்டும். இது தான் ‘Face Off’ படத்தின் ஒரு வரி கதை. 

வில்லன் Nicholas Cage பிடிக்க நினைக்கும் போலீஸ் அதிகாரியான John Travalto வில்லனை போன்று முகமுடியை ஆப்ரேட் செய்து வில்லன் குழுவில் சேர்கிறான். காவலர் பிடியில் இருக்கும் Nicholas Cage அவர்களிடம் தப்பித்து John Travalto முகமுடியை ஆப்ரேட் செய்து மாட்டிக் கொள்கிறான். 

இப்போது, வில்லனாக இருந்த Nicholas Cage நாயகன். போலீஸ் அதிகாரியான நாயகன் John Travalto தான் வில்லன். இருவரும் தங்கள் இயல்பான உடல்மொழியை மறந்து பாத்திரத்திற்கான உடல் மொழியை காட்ட வேண்டும். படம் முழுக்க இந்த இருவரின் ராஜ்ஜியம் தான் நடக்கும். 



 இரண்டு நாயகர்களுக்கான படம் என்றால் ‘Face Off’ படத்தை உதரணமாக குறிப்பிடலாம். ஒருவருக்கு அதிக முக்கியத்துவமோ, இறக்கமோ இல்லாத கதை. நேர்த்தியான திரைக்கதை. இருவருக்குமே சமமான வாய்ப்பு. ஒரு நல்ல ஆக்ஷன் படத்திற்காக எடுத்துக்காட்டாக இந்தப்படத்தை சொல்லலாம். 

1997ல் வந்த இந்தப் படம். படம் வந்து 20 வருடங்களிலாகியும் Body Swap திரைக்களனாக கொண்டு, இந்த அளவிற்கு விறுவிறுப்பாக யாரும் எடுக்கவில்லை. இவ்வளவு நாள் இந்தப் படத்தை தமிழில் எடுக்காமல் இருந்ததே மிகப் பெரிய விஷயம். 

இப்போது, ‘போகன்’ Face off படத்தின் கதை கொண்டதாக தெரிகிறது. Face offல் இருக்கும் 50% எடுத்தாலே ’போகன்’ வெற்றிப்படமாக அமையும். பொருத்திருந்து பார்ப்போம்.

Friday, October 31, 2014

THE GHOST WRITER (2010)

Roman Polanski யின் Carnage படத்தைப் பற்றி பதிவிடும் போது ’கோஸ்ட் ரைட்டர்’ படத்தை பற்றிய சில குறிப்புகள் சொல்லியிருந்தேன்.

ஒரு படத்தை விவாதிக்கும் போது அந்த படத்தின் கதையை முழுவதுமாக சொல்லக் கூடாது என்று நினைப்பவன் நான். அதுவும் மர்ம படங்கள் என்றால் முக்கியமான மர்ம முடிச்சை பற்றி வெளியே சொன்னால் ஸ்வாரஸ்யம் போய்விடும் என்று சொல்வதில்லை. ஆனால், ’கோஸ்ட் ரைட்டர்’ படத்தைப் பற்றி பேசும் போது கண்டிப்பாக இந்த இரண்டையும் சொல்லிதான் ஆக வேண்டும் என்று தோன்றுகிறது. காரணம், அந்த படத்தின் பின்னிருக்கும் அரசியல் களன்.


ஆரம்பக் காட்சியில், மர்மமான முறையில் ஒரு எழுத்தாளர் இறந்ததில் இருந்து படம் தொடங்குகிறது. அந்த எழுத்தாளர் பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் அடம் லாங்யின் வாழ்க்கை வரலாற்றை எழுத வந்தவன். அமெரிக்கத் தொடுத்த போரில் பிரிட்டன் பிரதமராக இவர் ஆதரித்திருக்கிறார். அதனால், ‘போர் குற்றவாளி’ என்று இவரது அமைச்சரவையில் இருந்தவர்களே விமர்த்தார்கள். தனது வாழ்க்கை வரலாறு நூல் மூலம் அனைத்து விமர்சனத்திற்கும் பதில் கூற வேண்டும் என்று நினைக்கிறார். அதனால், அடம் லாங் தனது வாழ்க்கை வரலாற்றை எழுத புது எழுத்தாளரை நியமிக்கிறார்.

முன்னாள் பிரதமர் வாழ்க்கை வரலாற்றை எழுத 'கோஸ்ட்' வருகிறார். அதாவது, பிரதமர் எழுதுவது போல் அவரின் வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டும். புத்தகத்தில் பிரதமரின் பெயர் இருக்கும். எழுதியவரின் பெயர் எங்கும் குறிப்பிடப்படாது. புது எழுத்தாளர் முன்னாள் பிரதம மந்திரி ஒய்வு விடுதியில் தங்க வைக்கப்படுகிறார். தனது ஓய்வு நாட்கள் முடிவதற்குள், புத்தகத்திற்கு தேவையான தகவலை பெற்று எழுத வேண்டும் என்று அடம் லாங் சொல்கிறார்.

முன்பு வந்த எழுத்தாளர் பாதிக்கு மேல் முடித்து வைத்திருந்ததார். இருந்தாலும் அது முழுமையானதாக இல்லை. ஆரம்பத்தில் இருந்து புதிதாக தொடங்க வேண்டும் என்கிறார். அங்கு இருந்து எந்த குறிப்புகள் வெளியே எடுத்தச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அந்த ஓய்வு விடுதியில் நடக்கும் சில விஷ்யங்கள் அவனுக்கு மர்மமாக இருக்கிறது.

இறந்துப் போன எழுத்தாளர் இறக்கும் முன் பிரதம மந்திரியோடு வாக்குவாதம் செய்திருக்கிறான். தன் மேல் சுமத்த பட்ட போர்க் குற்றத்திற்கு புத்தகத்தில் விளக்கம் சரியாக அளிக்கவில்லை என்று கோஸ்ட் நினைக்கிறான். இறந்த எழுத்தாளர் காரில் சாகும் போது ஹார்வட் பேராசிரியரை பார்த்துவிட்டு வந்திருக்கிறார். கோஸ்ட்டும் அந்த பேராசிரியரை சந்தித்து என்ன நடந்தது என்று விசாரிக்கிறான்.

இதற்கிடையில், முன்னாள் பிரதம மந்திரி அடம் லாங்யின் மனைவியோடு கோஸ்ட்டுக்கு நெருக்கம் ஏற்ப்படுகிறது. அவள் மூலம் சில தகவல்கள் கோஸ்ட் தெரிந்துக் கொள்கிறான்.

பல முக்கிய அரசியல் தகவல் தெரிந்துக் கொண்ட கோஸ்ட் முன்னாள் பிரதமர் அடம் லாங்கிடம் சொல்லலாம் என்று நினைக்கும் போது போருக்கு எதிராக போராட்டக்காரர்களிடம் இருந்த ஒருவன் அவரை சுட்டுக் கொண்டு விடுகிறான். காவலர்களும் சுட்டவனை கொன்று விடுகிறார்கள். முன்னாள் பிரதமர் மீது ‘போர் குற்றம்’ இருந்த நிலையில் அவர் இறந்தது பெரிய சர்ச்சையை கிளப்புகிறது.

அடம் லாங் இறப்பதகு முன் எழுதிய நூல் என்பதால், அவரது வாழ்க்கை வரலாறு விற்பனையில் சாதனை படைக்கிறது. இறந்த பழைய எழுத்தாளரின் சில குறிப்புகள் புத்தகத்தில் சேர்க்கப்பட்டாமல் இருந்தது. கோஸ்ட் அந்த இறந்த எழுத்தாளரின் குறிப்புகள் மீண்டும் ஒரு முறை பார்க்கும் போது ஒரு தகவல் கிடைக்கிறது. அதை கண்டதும் அதிர்க்கிறான்.

"முன்னாள் பிரதமரின் மனைவி சி.ஐ.ஏ ஏஜேன்ட். அவளை ஹார்வர்ட் பல்கலலைக்கழகத்தில் இருப்பவர் பயன்படுத்திக் கொண்டார்" என்று இருக்கிறது. அதாவது, பிரிட்டன் பிரதமரின் மனைவி உதவி மூலம் தங்கள் தேவைக்கு ஏற்றார் போல் அமெரிக்கா பயன்படுத்தி கொண்டது. அவரை போர் குற்றம் செய்ய வைத்திருக்கிறது. தனக்கு இந்த உண்மை தெரிந்துவிட்டது என்பதை ஒரு பேப்பரில் எழுதி பிரதமர் மனைவிக்கு கொடுக்கிறான்.

கோஸ்ட் வெளியே செல்லும் போது, விபத்து நடந்தது போல் சத்தம் கேட்கிறது. கோஸ்ட் கையில் இருந்த காகிதங்கள் பறக்க, நடைப்பாதையில் நடந்தவர்கள் அதிர்ச்சியுடன் காணப்படுகின்றனர்.

அரசியலில் எத்தனையோ மர்மங்கள் இருக்கிறது. அரசியல் கொலைகளில் அதைவிட மர்மங்கள் நிறைந்திருக்கிறது. மோகந்தாஸ் காந்தி படுகொலை, ஜென்னடி படுகொலை தொடங்கி இந்திரா காந்தி, ராஜூவ் காந்தி படுகொலை வரை இன்னும் எத்தனையோ படுகொலைகளில் தெரியப்படாத உண்மைகள் இருக்கின்றன. அதை அறிந்து கொள்ள ஸ்வரஸ்யம் இருக்கும். அதே சமயம் அதன்பின் ஆபத்தும் இருக்கிறது.

சில அரசியல் உண்மைகள் சாமான்யனுக்கு தெரியக் கூடாது. அதை தான் எல்லா அரசாங்கம் விரும்பும். அப்படி தெரிந்துக் கொண்டால் தற்கொலையும், விபத்துக்களும் இந்த படத்தில் முடிவில் வருவது போல் தான் நடக்கும்.

அமெரிக்காவை விமர்சனம் செய்வது போல் இருந்ததால் இந்த படம் ஆஸ்கருக்கு பரிசீலனை செய்யப்படவில்லை. ஆனால், மற்ற இடங்களில் பல விருதுகள் வாங்கி இருக்கிறது. 

இந்த படத்தை யாரும் இந்திய மொழியில் எடுக்க முடியாது. எடுத்தால் தடைவிதிக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரியும். ( இந்தப் படத்தின் கதையை முழுவதுமாக சொன்னதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு புரிந்திருக்கும்.)

Thursday, October 9, 2014

Roman Polaski இயக்கிய Carnage (2011)

"சம்சாரம் ஒரு மின்சாரம்" படத்தை போல் ஏன் உங்களால் மீண்டும் ஒரு படத்தை இயக்க முடியவில்லை” என்று இயக்குனர் விசுவிடம் ஒரு நிருபர் கேட்டார்.

அதற்கு விசு, "அந்த படத்தை இயக்கும் போது விசு ஒரு சராசரி டைரக்டர். பஸுல தான் போவேன். நிறைய ஜனங்க கிட்ட பேசுவேன். அவங்க கஷ்டத்த பத்தி கேட்பேன். இப்போது இருக்கும் விசு பணக்காரன். கார்ல தான் போரான். பணக்காரங்க கிட்ட தான் அதிகம் பழக வேண்டியதாக இருக்குது. அதனால சராசரி குடும்ப பிரச்சனை இப்போ அவனால எடுக்க முடியல" என்றார்.

ஒவ்வொரு இயக்குனருக்கு இப்படி ஒரு "Saturation Point" இருக்கும். ஆனால், தமிழ் சினிமாவில் இந்த "Saturation Point" இருந்து இயக்குனர்கள் மீண்டு வந்திருக்கிறார்களா என்பது சந்தேகம். கே.பாலசந்தர், பாரதிராஜா, பாக்கிராஜ் போன்ற பெரிய இயக்குனர்கள் கூட அந்த “Saturation Point”ல் சரி செய்ய முடியாமல் சின்னத்திரைக்கு சென்றுவிட்டார்கள்.

ஆனால், ஒரு சில இயக்குனர்கள் ஆராம்பக் கால தோல்விகளில் இருந்து மீண்டு வந்து பெரிய இயக்குனர்களாக வந்திருக்கிறார்கள். அவர்களின் குறிப்பிட தகுந்தவர் ரோமன் போளாஸ்கி.

**


நான்கு பேர். ஒரு வீட்டில் படத்தை முடிக்க வேண்டும். உடனே பிட்டு படம் தான் எடுக்க வேண்டும் என்று கிண்டலாக நினைக்க தோன்றும். அதையும் தாண்டி இப்படி ஒரு படம் எடுக்க முடியுமா என்று யோசிக்க வைக்கிறார் ரோமன் போளாஸ்கி.

தலைப்பு போடும் போது ஒரு பூங்காவில் ஒரு சிறுவன் இன்னொரு சிறுவனை பேஸ்பால் பேட்டால் அடித்துவிடுகிறான்.

அடுத்த காட்சி, ஒரு பிளாட்டில் அடிவாங்கிய சிறுவனின் பெற்றோரிடம் சமரசம் செய்து, அவர்கள் மன்னித்துவிட்டதாக கடிதம் பெற அடித்தவனின் பெற்றோர்கள் வருகிறார்கள். ஆரம்பத்தில் இரண்டு பெற்றோர்களும் சமரசமாக பேச, பிறகு ஒரு வார்த்தை இரண்டு பெண்களுக்குள் சண்டை வருகிறது.

இரண்டு பெண்கள் போடும் சண்டையை கணவன்மார்கள் தடுத்து சமரசம் செய்கிறார்கள். கொஞ்ச நேரத்தில் ஒருவரின் வளர்ப்பை இன்னொருவர் குறை சொல்கிறார்கள். மீண்டும் சண்டை வருகிறது. இரண்டு பெற்றோர்களின் சண்டை ஒரு கட்டத்தில் தம்பதியர்களுள்ளே வாக்குவாதத்தை உருவாகிறது. இத்தனை நாள் தம்பதியர்களுக்குள் இருந்த விரக்தியும் வெளிப்படுகிறது. நடுவில் தொலைப்பேசி வந்து தொல்லைக் கொடுகிறது.

75 நிமிடங்கள் ஒரே ப்ளாட்டில் நான்கு பேருக்கும் நடக்கும் வாக்குவாதம் தான் படம். ஒவ்வொரு முறையும் பிரச்சனை தீர்ந்தது என்று நினைக்கும் போது, எதோ ஒரு வார்த்தை மீண்டும் பிரச்சனையை உருவாக்கிறது. கடைசியில் எப்படி சமரசமாக போகிறார்கள் என்று ஆர்வத்திலையே படத்தை முடித்திருக்கிறார்.

 பெரியவர்கள் பேசும் போது சிறுவர்கள் தலையிடக் கூடாது என்று எப்படி சொல்கிறோமோ, சிறுவர்களின் சண்டையில் பெரியவர்கள் தலையிடக் கூடாது. அதையும் மீறி தலையிட்டால் பெரியவர்கள் சண்டையாக மாறிவிடும் என்பதை இந்தப் படம் காட்டுகிறது. டைட்டானிக் கனவு தேவதை கேட் வின்செண்ட் ஒரு சிறுவனுக்கு அம்மாவாக பார்க்க வைத்தது சங்கடமாக இருந்தது. மற்ற மூன்று நடிகர்கள் தொலைக்காட்சி தொடரில், படங்களில் சிறு வேடத்தில் நடிப்பவர்கள்.

**

ரோமன் போளாஸ்கி ஆரம்பக் காலத்தில் ஹிட்ச்காக் போலவே பல மர்மப்படங்களை இயக்கினாலும் அவர் அளவுக்கு இவரால் புகழ் பெற முடியவில்லை. ‘சைனா டவுன்’ மட்டுமே அவருக்கு ஆஸ்கர் விருது பெற்று தந்தது. “ரோஸ்மேரி பேபி” பலரது பாராட்டுக்குறிய படமாக இருந்தது.

மூன்று ஆஸ்கர் விருது பெற்ற பியானிஸ்ட் (Pianist – 2002 ) படத்திற்கு பிறகு ரோமன் போலாஸ்கியின் படங்கள் அதிக கவனம் பெற தொடங்கின. அதன் பிறகு அவரது முந்தைய படங்களும் பலர் பேசப்பட்டது.

2010ல் இவர் இயக்கிய ‘கோஸ்ட் ரைட்டர்’ (Ghost Writer) படத்தை யாராவது இந்திய மொழியில் படம் எடுத்தால், கண்டிப்பாக தடைவிதிப்பார்கள். அதிபரின் வாழ்க்கை வரலாற்றை எழுத வரும் எழுத்தாளர், அந்த அதிபர் பின்னால் இருக்கும் மர்மத்தை கண்டுப்பிடிப்பது தான் படம். இந்திய அரசியல் சூழலை எடுத்துக் கொண்டால் ராஜிவ் காந்தி, சோனியா காந்தியை தான் நினைவுப்படுத்தும்.

இப்போது ரோமன் போலாஸ்கிக்கு 81 வயதாகிறது. ‘Carnage’ படம் எடுக்கும் போது அவருக்கு 78 வயது. இந்த வயதில் எப்படியெல்லாம் யோசிக்கிறார் வியக்காமல் இருக்க முடியாது. இன்னும் திரைத்துறையில் இருந்து ஓய்வு பெறாமல் இயக்கிக் கொண்டு இருக்கிறார்.

10, 20 லட்சத்தில் படம் எடுக்க விரும்பும் இயக்குனர்கள் சரியான வசனங்களுடன் ’Carnage’ படத்தை தமிழில் எடுக்க முயற்சிக்கலாம். அதேப் போல் Low Budget படம் எடுக்க விரும்பும் இயக்குனர்கள் ரோமன் போளாஸ்கியின் ஆரம்பக் கால மர்ம படங்களை பார்க்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பிலே பல படங்களை இயக்கியிருக்கிறார். 

பின் குறிப்பு : 
நீங்களே மற்ற படங்களை தமிழில் எடுக்கலாம் என்று ஏன் பரிந்துரை செய்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். 

நல்ல படங்களை பரிந்துரை செய்யாததால் தான் மோசமான படங்களை தமிழாக்கம் செய்து பார்வையாளாரான நம்மை கஷ்டப்படுத்துகிறார்கள். அதற்கு நாமலே நல்ல படங்களை இயக்குனர்கள் எடுத்து சொல்வோம்.

அது மட்டுமில்லாமல் இயக்குனர்கள் காப்பி அடித்து படம் எடுப்பதால் தான் நம்மால் பேஸ்புக், டிவிட்டரில் எழுத முடிகிறது. அதை நாம் மறந்திவிடக் கூடாது.

Friday, September 6, 2013

White Dog - 26 வருடங்கள் தடை செய்யப்பட்ட திரைப்படம்

தமிழ்நாட்டில், 'குற்றப்பத்திரிக்கை' திரைப்படம் அரசியல் காரணத்திற்காக தடை செய்தார்கள். 'விஸ்வரூபத்தை' மதத்தின் காரணமாக தடைச் செய்ய சொன்னார்கள். ’டாம் 999’ படத்தை தவறான கருத்தை கூறி, மக்களை அஞ்சக் கூடாது என்பதற்காக தடைச் செய்தனர். இன்னும், எத்தனையோ ஈழ தமிழர் அவலப்படங்கள் மக்கள் தெரிந்துக் கொள்ளமால் இருக்க தடைச் செய்யப்பட்டிருக்கிறது. அதேப் போல், அமெரிக்காவில் 'வெள்ளை நாய்' யை கறுப்பினத்தினர்களுக்கு எதிராக பயிற்சி அளிப்பதை தெரியாமல் இருக்க இந்த படத்தை தடை செய்திருக்கிறார்கள்.

காரில் செல்லும் போது ஜூலி என்ற நடிகை வெள்ளை நாய் மீது மோதிவிடுகிறாள். அந்த நாய்யை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று வைத்தியம் பார்த்து, தன்னுடன் வைத்துக் கொள்கிறாள். அப்போது, அவள் வீட்டில் திருடன் நுழைய, அந்த வெள்ளை நாய் அவளை காப்பாற்ற, அந்த நாய் மீது அதிக பாசம் வைக்கிறாள். ஒரு நாள் அந்த வெள்ளை நாய் , நடு இரவில் சென்று ஒருவனை தாக்கி கொன்று விடுகிறது.



நாய் காணாமல் போனதாக நடிகை புகார் கொடுக்க, அந்த வீட்டை தேடி அதுவாக வந்து விடுகிறது. நாய்யை தன்னுடன் சினிமா ஷூட்டிங்க்கு அழைத்து செல்ல, அங்கு அவளுடன் நடிக்கும் நடிகையை தாக்குகிறது. அந்த ஜூலியின் காதலன் அவளிடம் அந்த நாய்க்கு எதோ கோளாறு இருக்கிறது, அதை கொன்று விட வேண்டும் என்கிறான். ஆனால், அவள் அவனிடம் இருந்து விலகி நாய்யை நாய் பயிற்சியாளரிடம் அழைத்து செல்கிறாள்.
பயிற்சியாளரான கருத்தரும் அந்த நாய்யை கொன்று விட சொல்கிறான். அங்கிருந்து கோபமாக ஜூலி நாய்யுடன் வெளியே வர, அப்போது அங்கு வேளை செய்பவனை தாக்குகிறது. அங்கு மிருகங்களுக்கு பயிற்சி அளிக்கும் கீஸ் என்ற கறுப்பர் “ இது வெள்ளை இன வெறி' நாய்” என்கிறான். ஆதாவது, கறுப்பர்களை மட்டும் தாக்க பயிற்சி அளிக்கப்பட்ட நாய்.

ஒரு நாய்யை குட்டியாக இருக்கும் போது, கறுப்பர்களை வைத்து அடிக்க வைத்து, கறுப்பர்கள் மீது வெறுப்பை வளர்த்து பய்ற்சி கொடுப்பார்கள். அந்த நாய் வளர்ந்ததும், கண்ணில் படும் கறுப்பர்களை தாக்கி சிறு வயதில் வாங்கிய அடியை பழி தீர்த்துக் கொள்ளும். இப்படி தான் ஒரு சாதான நாய்யை ‘வெள்ளை இன வெறி’ நாயாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதை மாற்றுவது மிக கடினமான காரியம் என்று கீஸ் கூறுகிறான்.

ஆனால், ஜூலி தன் நாய்யை குணப்படுத்த எவ்வளவு பணம் செலவு செய்ய தயாராக இருப்பதாக கூறுகிறாள். நிற துவேஷமுள்ள நாய்யை மாற்றும் சவாலை விரும்பி ஏற்றுக் கொள்கிறான். மிருக விடுதியில் வைத்து அந்த நாய்க்கு பயிற்சி அளிக்கிறான். ஒரு நாள், அந்த நாய் மிருக விடுதியில் இருந்து தப்பித்து ஒருவனை கொன்று விடுகிறது. கீஸ் மயக்க உசிப்போட்டு அந்த வெள்ளை நாய்யை திரும்பி விடுதி கொண்டு வருகிறான். தனது தீராத முயற்சியால் நாய்யின் நிற துவேஷத்தை போக்குகிறான்.



ஜூலியை பாசமாக முத்தமிடுகிறது. ஆனால், வெள்ளை நிறத்தினரின் மீது வெறுப்பை வளர்த்துக் கொள்கிறது. கீஸில் பயிற்சியாளர் நண்பராக கருத்தரை தாக்க முயற்சிக்க, அந்த நாய்யை கீஸ் கொன்றுவிடுகிறான்.
கறுப்பர்களை தாக்கும் நாய்யின் தவறா ? அல்லது கறுப்பின மக்கள் மீது துவேஷத்தை வளர்த்த வெள்ளை நிற வெறியர்களின் தவறா ? என்ற நம்மை நாமே கேட்டுக் கொள்வோம். தவறு செய்தவர்கள் மனிதர்கள் தான்.இதில் இறந்தது மனிதனின் குப்பையை சுமந்த வெள்ளை நாய்.

உலகளவில் 1982ல் இந்த வெளிவந்தாலும், அமெரிக்காவில் வெள்ளை நிறத்தினற்கு எதிராக இருப்பதால் இந்தப் படம் தடை செய்ய பட்டது. அதிகாரப்பூர்வமாக டிசம்பர்,2008 ல் அமெரிக்காவில் இந்த படத்தில் டி.வி.டி கிடைக்க தொடங்கின. இருபத்தி ஆறு வருடங்களுக்கு மேல் ஒரு திரைப்படத்தை வல்லரசு அமெரிக்கா தடை செய்கிறது என்றால், இந்தியா இதில் பின்னோக்கி இருப்பதில் பெரிய ஆச்சரியமில்லை.

விஸ்வரூபத்தின் தடையை எதிர்த்தவர்கள், ஏன் மெட்ராஸ் கபே, தலைவா படத்தின் தடையை ஏன் எதிர்க்கவில்லை என்று பல கேள்விகள் வருகிறது. ‘விஸ்வரூபத்தின் தடை மதத்தின் அடிப்படையில் தடை செய்யப்பட்டது. மெட்ராஸ் கபே, தலைவா படங்களுக்கு தடை செய்யப்பட்டது அரசியல் காரணங்களுக்காக....!!

இங்கு மதத்தை விமர்சனம் செய்யும் இருக்கும் துணிச்சல் அரசியலை விமர்சனம் செய்வதில்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஆளும் கட்சியின் கருத்துக்கு எதிராக படம் எடுத்தால் ‘தடை’ என்ற பாஸிசக் கொள்கையில் அரசு இயங்குகிறது.

குற்றப்பத்திரிக்கை, செங்கடல், காற்றுக்கென்ன வேளி போன்ற ஈழப்படங்களை தடை செய்தவர்கள், ‘மெட்ராஸ் கபே தடையை தவறு என்று சொல்கிறார்கள். இவர்கள் தமிழ் நாட்டில் தடை செய்த தமிழ் ஈழப்படங்களை வெளியிட்ட பிறகு , ‘மெட்ராஸ் கபே’ தாராளமாக தமிழ் நாட்டில் வெளியிடலாம். தமிழ் நாட்டில் தமிழ்படங்களுக்கு தடைப்பொடுபவர்கள், ‘டாம் 999, மெட்ராஸ் கபே மாற்று மொழி படங்களின் தடைகளை விமர்சனம் செய்ய தகுதியில்லை.

தமிழ் ஈழபடங்களுக்கு தடை விதித்தது நியாயம் என்றால், மெட்ராஸ் கபே படத்தின் நியாயமாக தான் பார்க்க வேண்டும். மெட்ராஸ் கபே வெளியாக வேண்டும் என்றால்,  தடை செய்யப்பட்ட எல்லா ஈழப்படங்களை வெளியிட்ட பிறகு ‘மெட்ராஸ் கபே’ வெளியிடலாம்.

ஆளும் கட்சியின் கருத்தை தான் சினிமாவில் சொல்ல வேண்டும் என்றால், இனிமேல் தேர்தல் வெற்றிப் பெறும் போது ‘சினிமா’ ஆளும் கட்சியின் சொத்து என்று அறிவித்துவிடலாம். எதிர் கருத்து இருப்பவர்கள் சினிமா பக்கமே வர மாட்டார்கள்.

இன்றும், அரசியல்வாதிகள் ‘சினிமாவை கண்டு பயப்படுவது இவர்கள் போடும் தடைகள் எடுத்துக் காட்டுகிறது. ஆனால், பெரியார், அம்பேத்கார் சொல்லி வராத விழிப்புணர்வு ஒரு திரைப்படத்தில் வந்துவிடவா போகிறது....?

Monday, October 22, 2012

சிரிப்பு சினிமா : The Dictator (2012)

நீண்ட நாட்கள் ஆனது இப்படி ஒரு ஆங்கிலப்படத்திற்கு நான் சிரித்து ரசித்து பார்த்தது. சமக்கால சர்வதேச அரசியலை இந்த அளவுக்கு பகடி செய்யும் அளவிற்கு படம் வந்திருக்காமா என்று தெரியவில்லை. முழுக்க முழுக்க நல்ல டைம் பாஸ் படம் தான்.

சார்லி சாப்லின் ‘The Great Dictator’(1940) படத்தின் கதை தான். வடையா நாட்டின் சர்வாதிகாரியான அலாதின் வெளிநாட்டுக்கு எண்ணெய் விற்க மறுக்கிறான். ஆனால், அவனின் ஆலோசகர் தமீர் அலாதின்னை கொல்ல முயல, அலாதின் நகல் கொல்லப்படுகிறான். அலாதினின் சர்வாதிகாரத்தை எதிர்த்து பல நாடுகள் கண்ட தெரிவித்தும், அவன் கண்டுக் கொள்ளவில்லை. ஐ.நாவில் தலையீட்டால் அங்கு விளக்கம் அளிக்க அலாதின் அழைக்கப்படுகிறான்.



அலாதின் அமெரிக்காவில் கால் பதிய அவனுக்கு எதிர்ப்பலைகள் பெறுகிறது. அங்கு விடுதியில் தங்கியிருக்கும் போது ஒரு உளவாளியால் அலாதின் கடத்தப்படுகிறான். அவனிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில், உளவாளியை கொன்று தனது தாடியை இழக்கிறான். தாடி இல்லாததால் அவன் சாமான்ய மனிதனாக அமெரிக்காவில் உளாவுகிறான். இதைப் பயன்ப்படுத்திக் கொண்டு தமீர் அலாதின் நகலை வைத்து, வடையாவில் மக்கள் ஆட்சிக் கொண்டு வருவதாக ஐ.நா அமைப்பு முன் சொல்கிறான். ஐ.நா உறுப்பினர் கைதட்டி அவனது முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்த சதி திட்டத்திற்கு அலாதின் ஆலோசகர் தமீர் இருக்கிறான். வடையாவில் மக்கள் ஆட்சிக் கொண்டு வந்து சீனாவுக்கு எண்ணெய் வளத்தை விற்க சதி செய்திருந்தான்.

பெரிய சர்வாதிகாரியான அலாதின் சராசரி காவலர்கள் தாக்கும் அளவிற்கு தள்ளப்படுகிறான். அவனுக்கு சொயே என்ற பெண் உதவுகிறாள். இதற்கிடையில், அலாதின் கொல்லச் சொன்ன விஞ்ஞானியான நாடல் உயிருடன் இருப்பதைப் பார்க்கிறான். அதுமட்டுமில்லாமல், அவன் கொல்லச் சொன்ன அனைவரும் அமெரிக்காவில் லிட்டில் வடையாவில் உயிருடன் இருப்பதை பார்க்கிறான். நாடல் பின் தொடர்ந்து லிட்டில் வடையாவுக்கு செல்ல, அவனை அடையாளம் கண்டுக் கொள்கிறான் நாடல். அங்கு அலாதினுக்கு என்ன ஆனது ? அவன் எப்படி மீண்டும் தன் சர்வாதிகாரத்தைப் பெற்றானா ? வடையாவில் மக்கள் ஆட்சி வந்து, தமீர் சதி வென்றதா ? என்று வயிறு வலிக்க சிரித்து பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

சார்லி சாப்லின் “The Great Dictator” படத்தில் எப்படி ஹிட்லரை கிண்டல் செய்தாரோ, அதேப் போல் இதில் இஸ்லாமிய நாடுகளையும், அதன் தீவிரவாதத்தையும், கொஞ்சம் அமெரிக்காவையும் நையாண்டி செய்திருக்கின்றனர்.

அலாதின் அமெரிக்காவில் வளம் வரும் போது, “அமெரிக்கா எயிட்ஸின் பிறப்பிடம்”, ஹோட்டல் அறையில், “ ஒரு மணி நேர இன்டர்நெட்டுக்கு 20$ வாங்குபவர்கள், என்னை சர்வதேச தீவிரவாதி என்கிறார்களா !!!” என்று அதிர்வதில் அமெரிக்காவை நக்கல் செய்திருக்கிறார்.

வடையாவில் மக்கள் ஆட்சி வரும் என்று ‘நகல்’ அலாதின் சொல்ல, சீனா அதிபர் “சீனாக் கூட மக்கள் ஆட்சி நாடு தான்” என்று சொல்லி சிரிப்பது சீனாவுக்கான வசனம். அதுவும், சீனா அதிபரின் மனைவி ஆங்கில அறிவு இல்லாதவர் என்று காட்டுவதும், அதை அதிபரே கிண்டலடிப்பது போன்ற காட்சிகள் சீனாவின் உளவுத்துறை பகையை சம்பாதித்திருக்கிறார்கள்.

அலாதினின் ஆங்கில புலமை, குறிப்பாக லிட்டில் வடையாவில் தன் பெயரை மறைத்து வேறு பெயர்கள் சொல்லும் இடம், சொயே பெண்ணின் கடையில் வேலை செய்வது, கூலிப்படை பெண்ணுடன் சண்டை, இறுதிக் காட்சியில் இரண்டு கட்டிடத்து நடுவில் தொங்குவது… என்று சிரிப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் காட்சிகள்.

மறைந்த லிப்யாவின் சர்வாதிகாரியான கடாபியை நினைவுப்படுத்தும் விதமாக அலாதின் பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இறுதிக்காட்சியில், சர்வாதிகாரத்தை விமர்சிப்பவர்களுக்கு மக்கள் ஆட்சி எதிராக பேசும் அலாதின் வசனங்கள் பல உண்மைகள் சொல்கிறாது. நகைச்சுவை படமாக இருந்தாலும், சொல்ல வந்த செய்தி ‘ஏ’ ரக நகைச்சுவையை கொஞ்சம் தவிர்த்திருந்தால் குடும்பத்துடன் பார்த்திருக்கலாம்.

LinkWithin

Related Posts with Thumbnails