வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Sunday, January 13, 2013

மாவோயிஸ்ட் எழுத்தாளருடன் நடைப்பயணம் – செ.பு.க நாள் 2

 சுமக்க முடியாத புத்தக சுமைகளோடு நேற்றைய புத்தகக் கண்காட்சிக்கு சென்றேன். முதல் வேலையாக இருவாட்சி இலக்கிய துறைமுகத்தில் (ஸ்டால். 554), எனது நாகரத்னா பதிப்பகத்தின் புத்தகங்களை கொடுத்தேன். அடுத்து, பாலவசந்தா (ஸ்டால் 138), விழிகள் பதிப்பகம் (ஸ்டால் 495), புத்தக பூங்கா (ஸ்டால். 137) என்று அடுத்த அடுத்த ஸ்டால்களுக்கு எங்கள் பதிப்பக நூல்களை கொடுத்தேன். காமதேனு ( ஸ்டால் 89), டிஸ்கவரி புக் பேலஸ் (43-44), கௌதம் பதிப்பகம் (ஸ்டால் 283) போன்ற நாகரத்னா பதிப்பகத்தின் விளம்பர பேனர்களை கொடுத்தேன். ஒரு வழியாக விற்பனைக்கு என்னால் முடிந்த அளவுக்கு என் பதிப்பகத்தின் நூல்களை எல்லா ஸ்டால்களில் சேர்த்துள்ளேன். இதற்கு மேல் சேர்த்தால், கடைசி நாளில் கணக்கு பார்த்து புத்தகம் எடுத்து வர சிரமமாக இருக்கும்.

கொஞ்ச நேரம் கலைப்பரலாம் என்று டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டாலில் நுழைந்தேன். அப்போது, தூக்கு தண்டனையில் இருந்து நிஜம் நூல் ஆசிரியர் திருச்சி வேலுச்சாமி வந்திருந்தார். இராஜூவ் படுகொலைக்கும் விடுதலை புலிக்கும் சம்மந்தம் இல்லை உரத்த குரலில் அனைவரிடமும் சொல்லிக் கொண்டே இருப்பவர் இவர் மட்டும் தான். அவரிடம் உரையாடும் போது அவர் சொன்ன பல தகவல் அதிர்ச்சியானதாகவும், சி.பி.ஐ விசாரனையைக் அவர் கேள்வி கேட்க்கும் படியாக இருந்தது. அவர் புலிகள் எதிர்ப்பாளர்களை விட, புலிகளின் ஆதரவாளர்கள் இராஜீவ் கொலைக்கு ஆதரவு தெரிவித்து மேலும் புலிகளை சம்மந்தப்படுத்தினர் என்று கூறினார். இன்னும், சில தகவல்கள் வெளியே சொல்ல முடியாததாகவே இருந்தது.பிறகு, திருவண்ணாமலையில் இருந்து வந்த புத்தக விற்பனையாளர் தமிழன்பாபு அவர்களை சந்தித்தேன். மதியம் ஒய்.எம்.சி.ஏ அருகில் இருக்கும் ஜனதா உணவு விடுதியில் சாப்பிட்டு விட்டு, ஒரு வாசகனாக புத்தகங்கள் வாங்க சென்றேன்.

காவிரி நாடன் அவர்கள் தொகுத்து எழுதிய “தந்தை பெரியாரின் இறுதி நாள்களும், இதழ்களும்”, “லார்ட் க்ளைவ் சரித்திரம்” புத்தகம் வாங்கினேன். அடையாளம் ஸ்டாலில், திருநங்கை ரேவதி அவர்கள் எழுதிய “வெள்ளை மொழி”, எஸ்.வி.ராஜதுரை எழுதிய “யூத்த பூமி லெபனான்” புத்தங்கள் வாங்கிவிட்டு வரும் போது எனக்காக ஒரு பஞ்சாயத்து காத்திருந்தது.

முத்து காமிக்ஸ் (ஸ்டால் 343) யில் 10% கழிவு இல்லாமல் வாசகர்களுக்கு புத்தகம் தருவதாக ஒரு நண்பர் கூறினார். ‘கேட்டால் கிடைக்கும்’ உறுப்பினர் ஆயிற்றே ! சும்மா எப்படி விடுவது ? பில்லையும், வாங்கிய புத்தகத்தோடு பபாஸி அலுவலகத்தில் புகார் செய்து, கழிவு தொகையை வாங்கினேன். பஞ்சாயத்து முடித்து முத்து காமிக்ஸ் ஸ்டாலில் இருந்து வெளியே வரும் போது என் மானசீக குருவை சந்தித்தேன்.

அவர் முன்னாள் கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியரும், இன்னாள் சின்னத்திரையின் வசனக்கர்த்தாவான பா.ராகவன் அவர்கள். அவரைப் பார்த்ததும் காலையில் புத்தகம் சுமந்த வலியெல்லாம் போய்விட்டது. பிறகு, அவருடன் ஒவ்வொரு புத்தகக் கடைக்கும் சென்றேன். அவருடன் பேசிக் கொண்டு இருந்ததில், முத்து காமிக்ஸ் புத்தகத்திற்காக காத்திருந்த நண்பரை மறந்தேன். நல்ல வேளை அவராகவே தொலைப்பேசியில் அழைத்தார். அவரிடம் புத்தகம் கொடுத்துவிட்டு, மீண்டும் பா.ரா அவர்களுடன் நடைப்பயணத்தை தொடர்ந்தேன்.இருவரும் மதி நிலையத்தில் (ஸ்டால் 33 – 34) கொஞ்சம் அமர்ந்தோம். அப்போது, பா.ராகவன் எழுதிய புது புத்தகம் “அன்சைஸ்” வாங்கி அவரிடம் கையெழுத்து வாங்கினேன். இந்த வருடம் நான் போடும் முதல் கையெழுத்து என்றார். (2010ல் அவர் எழுதிய ‘மாவோயிஸ்ட்’ புத்தகத்திற்கு அவர் போட்ட முதல் கையெழுத்தும் எனக்கு தான்.)இதற்கிடையில் கௌதம் பதிப்பகத்தில் (ஸ்டால். 283) நான் எழுதிய “உலக சினிமா – ஓர் பார்வை” வந்திருப்பதை அலைப்பேசியில் செய்தி வர, அங்கு சென்று ஐந்து பிரதியை வாங்கி வந்தேன். முதல் பிரதியை பா.ராகவனுக்கு தான் கொடுத்தேன். இரண்டாவது பிரதி பேஸ்புக் நண்பரும், மதி நிலையத்தில் பணியாற்றும் கமலி தாசனுக்கு கொடுத்தேன். கமலிதாசனின் உண்மையான பெயர் ரவிக்குமார். ஏன் 'கமலிதாசன்' என்று பெயர் வைத்தார் என்ற காரணத்தை கேட்டதற்கு, அவர் கூறிய கதை மிகவும் ஸ்வாரஸ்யமாக இருந்தது. திருமணத்துக்கு முன் அவர் பெயரை மாற்றிக் கொண்டால் அவருக்கு நல்லது. கமலிதாசன்… ச்சே ரவிகுமார், அவர் எழுதிய “Instant இங்லீஷ்” ( Jolly பீட்டர் விடுங்க) புத்தகம் கொடுத்தார். ஆங்கில இலக்கணத்தை வைத்து மிரட்டாமல், பீட்டர் விடும் அளவிற்கு ஆங்கில வாக்கியங்களை எங்கு, எப்படி பயன் படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.எங்கள் பதிப்பக எழுத்தாளருமான, திரைப்பட வசனக்கர்த்தா (இப்படி எல்லாம் சொல்லி டிஸ்கவரி புக் பேலஸ்யில் ஒரு பேனர் இருக்கு) கேபிள் சங்கர் டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டாலில் இருந்து அழைத்திருந்தார். அங்கு, வலைப்பதிவர் ரோஸ்விக், கே.ஆர்.பி.செந்தில், அப்துல்லா அண்ணன் எல்லாரும் இருந்தார்கள். அங்கையே, “உலக சினிமா – ஓர் பார்வை அறிவிக்கப்படாத நூல் வெளியிட்டு நடந்தது.

கொஞ்சம் நேரம் ஊர் கதைகள் பேசிவிட்டு நானும், பா.ரா அவர்களும் புத்தகக் கண்காட்சியை விட்டு வெளியே வந்தோம்.

இன்று என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். ஒரு நாள் முழுவதும், நான் நானாக இருந்தேன். எனக்கு பிடித்ததை மட்டும் செய்தேன் என்று சொல்ல வேண்டும். என்னைப் போன்ற அலுவலக கைதியாக இருப்பவர்களுக்கு புத்தகக் கண்காட்சி தான் சுதந்திரத்தை ஸ்வாசிக்க வைக்கும் பூங்கா. அந்த பூங்காவின் அரங்கத்தை இன்னும் சிறப்பாக அமைத்தால் நன்றாக இருக்கும்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails