வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Saturday, January 12, 2013

36வது சென்னை புத்தகக் கண்காட்சி – நாள் 1

சென்னை புத்தகக் கண்காட்சி இனிதே நேற்று (11.1.13) தொடங்கியது.

புது இடம். புது அரங்க அமைப்பு. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ விளையாட்டு மைதானத்தில் புத்தகக் கண்காட்சி நடப்பதால், விளையாட்டு வீரர்கள் செல்லும் வழியில் நுழைந்து விட்டேன். ஒய்.எம்.சி.ஏ வுக்குள் நுழைந்து ஒரு கி.மீ. வரை தொலைவில் அரங்கம் உள்ளது. இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் பாக்கியசாலி. காரில் வருபவர்கள் பார்க்கிங் சிரமம் இருக்குமோ தோன்றுகிறது. குறிப்பாக சனி, ஞாயிறு நாட்களில் விளையாட வருபவர்கள் அதிகம். அதனால், பார்க்கிங் பிரச்சனை, வண்டி நுழைவதும், வெளியே வருவது கொஞ்சம் சிரமமாக இருக்கலாம். புது இடம் என்பதால் எங்கு எப்படி என்பது சிரமங்கள் இருக்கும். இரண்டு மூன்று நாட்களில் பழகிவிடும்.

அரங்கிற்குள் நுழைந்ததும் நேராக டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டாலில் (43-44) நாகரத்னா பதிப்பகத்தின் அனைத்து வெளியீட்டு புத்தகங்களை கொடுத்தேன். வேடியப்பனிடம் பேச முடியாத அளவிற்கு புத்தக ஆர்வாளர்கள் அவரை சூழ்ந்து இருந்ததால், அரங்கம் சுற்றிப் பார்க்க சென்றுவிட்டேன். அப்போது, காமதேனு பதிப்பக (ஸ்டால். 89) அரங்கம் கண்ணில் பட்டது. கலைமாமணி விக்கரமனின் மகன் கண்ணன் விக்கரமனும், திரிசக்தி குழுமத்தில் வெளியே வந்த சில நண்பர்களும் சேர்ந்து காமதேனு பதிப்பகம் தொடங்கியிருக்கிறார்க்ள். அவரை முன்பே தெரியும் என்பதால் அவர் அப்பாவைப் பற்றி விசாரித்தேன். மிக உரிமையுடன் எங்கள் பதிப்பக புத்தகங்களை கேட்டார். என் கையில் இருக்கும் கொஞ்சம் புத்தகங்களை கொடுத்து விட்டு, நாளை எடுத்து வருவதாக கூறினேன். அவர் கடையில் “பெரியாவா” புத்தகம் அருமையாக சக்கைப் போடு போடுகிறது.

அடுத்து, இருவாட்சி இலக்கிய துறைமுக அரங்கத்திற்கு (554) சென்றேன். வெறும் கையோடு வந்த என்னை, ‘புத்தகம் எங்கே ?’ என்று நண்பர் உதயகண்ணன் கேட்டார். சுமக்க முடியாமல் புத்தகங்களை சுமந்து வந்து, இரண்டு அரங்கத்திலே எல்லா புத்தகங்களை கொடுக்க வேண்டியதாக இருந்தது என்பதை கூறினேன். மேலும், விழிகள் பதிப்பகம், நிவேதிதா புத்தக பூங்கா அரங்கில் மணி எழிலன், புதுகை தென்றல் அரங்கில் இளையபாரதி, தோழமை அரங்கில் காதர் பாய் என்று எனக்கு தெரிந்த பலர் ஏதாவது புத்தக கடையில் பார்க்க முடிந்தது.

பாலவசந்தா பதிப்பகத்தின் (ஸ்டால்.138) உரிமையாளர் பாலசங்கரன் அவர்கள் கொஞ்சத் தொலைவில் பேசிக் கொண்டு என்னுடன் நடந்து வந்தார். அவருக்கும் என்னால் புத்தகம் கொடுக்க முடியவில்லை. இந்த முறை பலர் நாகரத்னா பதிப்பகத்தின் புத்தகத்தை கேட்டுகும் எல்லா கடைகளுக்கு கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை.

 கையில் இருக்கும் புத்தக சுமை குறைந்ததால் புத்தகங்கள் வாங்க ஒவ்வொரு அரங்காக நோட்டம் விட்டேன். அப்போது, எங்கோ வலைப்பதிவில் பார்த்த முகம் மாதிரி இருந்தது. அவர் நர்சிம் தான். வலைபதிவுக்கு வந்து இரண்டு வருடங்கள் மேல் இருக்கும். அவர் எழுதிய இரண்டு புத்தகங்கள் நா.முத்துகுமாரின் பட்டாம்பூச்சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நர்சிம் எழுதிய ஒரு வெயில் நேரம்” (சிறுகதை) நூலோடு புத்தகக் கண்காட்சி புத்தகம் வாங்க தொடங்கினேன்.

பிறகு, வலைப்பதிவு நண்பர்கள் அப்துல்லா அண்ணன், மணிஜி, பொன்.வாசுதேவன், வேளாண்மை சங்கர் சந்தித்து பேசிவிட்டு காலச்சுவடு அரங்குக்கு சென்றேன்.அங்கு, wecanshopping.com விற்பனைக்காக “கூண்டு” மற்றும் “ஈழம் : சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்” புத்தகம் வாங்கினேன். அடுத்து, பொன்னி அரங்கில் (149) ‘லெனின் விருதுப் பெற்ற’ அம்ஷன் குமார் அவர்களை சந்தித்தேன். அவர் எழுதிய ‘சினிமா ரசனை’ புத்தக வாங்கி கையெழுத்தும் பெற்றுக் கொண்டேன். சினிமா ஆர்வாளர்கள் படிக்க வேண்டிய புத்தகம் என்று ஒரு முறை என் நண்பர் ஒருவர் கூறியிருந்தார். பல பழைய உலக திரைப்படங்களின் பார்வையோடு ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, எடிட்டிங், திரைக்கதை என்று விரிவான பதிப்பாக வந்திருக்கிறது. சினிமா ஆர்வாளர்கள் வாங்கலாம்.

வேடியப்பனுடன் பன்ஜாபி தாபாவில் இரவு உணவு முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். இன்றும், ஒரு பதிப்பாளராக பல அரங்குக்கு புத்தகம் கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. நாளையில் இருந்து தான் வாசகனாக புத்தகம் வாங்க வேண்டும்.

2 comments:

துளசி கோபால் said...

நேரில் வந்து கலந்து மகிழ வாய்ப்பில்லாத என்னைப் போன்றவர்களுக்காக , கூடியவரை விழாநாட்கள் முழுவதுமாக தினந்தோறும் பதிவிடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றோம்.

தமிழ் காமெடி உலகம் said...

தகவலுக்கு மிக்க நன்றி.....உங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/

LinkWithin

Related Posts with Thumbnails