வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, January 7, 2010

ஒரு குழந்தையின் டைரி : ஹீ-மேன் பொம்மை



எல்லோரும் சிறு குழந்தையாக இருக்கும் போது ஏதாவது ஒரு பொம்மையை அடம் பிடித்து வாங்கியிருப்போம். சில குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தாங்கள் கேட்ட பொம்மை வாங்கி தர மறுக்கும் போது அவர்கள் அடம் பிடிப்பதை பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வரும். உங்களுக்கு கூட சிரிப்பு வரும். அந்த சமயத்தில் பெற்றோர்கள் எவ்வளவு அடித்தாலும் அவர்களது கவனம் அந்த பொம்மை மீது தான் இருக்கும். இதை பார்க்கும் போது நமக்கும் நம் குழந்தை பருவம் ஞயாபகம் வரும். பெற்றோர்களிடம் அடம் பிடித்து பொம்மை வாங்கிய சம்பவம் நினைவில் வரும். பொம்மை வாங்கிய அன்றைய தினம் முழுவதும் அதை வைத்து தான் விளையாடியிருப்போம். சில நாட்களில் அப்பொம்மை தெகட்டிவிடும்.

நம் வீட்டுலேயே இருந்தும் அந்த பொம்மை இருக்கும் இடம் தெரியாது. தெரிந்துக் கொள்ளவும் முயற்சி செய்ய மாட்டோம். இப்படி எல்லோருடைய வாழ்க்கையிலும் கண்டிப்பாக ஒரு பொம்மை இருக்கும். இதை 'இல்லை' என்று யார் மறுத்தாலும், அது அவர்கள் மறதியே ! நீங்கள் இன்றும் அந்த பொம்மையை நினைவில் வைத்திருந்தால், அதை அவ்வளவு ரசித்து விளையாடி இருந்திருக்கீர்கள் என்று அர்த்தம். அப்படி அடம் பிடித்து நான் வாங்கிய பொம்மையின் பெயர் 'ஹீ-மேன்'.

இருபது வருடங்களுக்கு முன்பு தூர்தர்ஷன் மட்டும் இருந்த காலத்தில் ஒவ்வொரு ஞாயிறுக்கிழமை காலை பத்து மணிக்கு ஒலிப்பரப்பிய கார்டூன் நிகழ்ச்சி தான் இந்த 'ஹீ-மேன்' ( இன்று சுட்டி டி.வி வளம் வருகிறான்). இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு வாரமும் தவறாமல் பார்ப்பேன். ஒரு முறை இந்த கார்டூன் பார்ப்பதற்காக என் சொந்த தாய்மாமன் திருமணத்திற்கே போகவில்லை. அந்த கார்டூன் நிகழ்ச்சி அந்த வயதில் அவ்வளவு பிடிக்கும். இப்படி இருக்கும் போது அந்த பொம்மை கண் முன் இருக்கும் போது எப்படி வாங்காமல் இருக்க முடியும். என் அம்மாவிடம் கேட்டேன். எல்லா அம்மாக்கள் போல் அவர்களும் எனக்கு வாங்கி தர மறுத்தார். பிடிவாதம் தலைக்கேறியது. அன்பு பரிசாக ஐந்தாறு அடியும் விழுந்தது. ‘வாங்க வேண்டும்’ என்று முடிவு செய்த பிறகு இந்த அடியெல்லாம் நம்மை மாற்றி விடவா போகிறது. அப்போது வாங்கி தர அம்மாவிடம் பணம் இல்லை என்பது தான் உண்மை. என் குழந்தை மனது ( இருபது வருடம் முன்பு) கேட்கவில்லை. அந்த பொம்மையின் விலை அறுபது ரூபாய். 'ஆப்ட்ரால் சிக்ஸ்டி ரூபிஸ்' என்று ஆறு வயதில் கூறிய வார்த்தை இன்றைக்கும் ஞாபகம் இருக்கிறது. மறக்க நினைத்தாலும், என் அம்மாவும், தாய்மாமாவும் அந்த வார்த்தையை மறக்க விடவில்லை. இன்றும் என்னை கேலி செய்ய அந்த வார்த்தையை ஞயாபகப்படுத்துவார்கள். கடைசியில், எந்த மாமா திருமணத்திற்க்கு போகவில்லையோ அவர் தான் அந்த பொம்மையை வாங்கிக் கொடுத்தார். முதல் முறையாக அம்மாவிடம் என் பிடிவாதம் வென்றது.

கட்டு மஸ்தான ஹீமேன் பொம்மைக்கு எதிரி ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் 'ஸ்கேலட்டான்'. இன்று சுட்டி டி.வியில் எலும்பு மனிதனாக வருகிறானே... அவனே தான். கதாநாயகன் வைத்துக் கொண்டு எப்படி விளையாடுவது ? வில்லன் 'எலும்பு மனிதன்' வேண்டாமா !! அப்போது கேட்க எனக்கு தோன்றவில்லை. ஞயாபகம் வந்த போது பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன்.

என் பொம்மைகளை நான் உடைத்ததை விட உறவுக்கார நண்பர்கள் உடைத்தது தான் அதிகம். எத்தனையோ துப்பாக்கி, ட்ரெயின் என்று பல பொம்மைகளை இழந்திருக்கிறேன். அன்று அவர்கள் கண்ணில் இருந்து என் ஹீமேன் பொம்மையை மட்டும் கவனமாக பாதுகாத்தேன். இன்று என் மகனிடம் இருந்து பாதுகாக்க வீட்டு அலமாரியில் காட்சிப் பொருளாக வைத்திருக்கிறேன்.

முன்பெல்லாம் ஹீமேன் பொம்மையை வைத்து விளையாடும் போது அவன் எதிரி 'ஸ்கேலட்டனை' வாங்க வேண்டும் என்று நினைப்பேன். இன்று வரையிலும் அதை வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தான் இருக்கிறேன். அந்த பொம்மையை வாங்கினாலும் காட்சிப் பொருளாக தான் வைக்க முடியும். இப்போது ஹீமேனுக்கும், ஸ்கேலட்டனுக்கும் சண்டையை போட்டு நான் விளையாடினால் என்னை ஒரு மாதிரியாக தான் பார்ப்பார்கள். காட்சிப் பொருளாக வாங்க மனமில்லாததால் வாங்காமல் விட்டு விட்டேன்.

ஹீமேன் பொம்மையை வாங்கி இருபது வருடங்கள் மேலாகி விட்டது. என் உயரத்தில், உடலில் எத்தனையோ மாற்றங்கள். ஆனால், இன்றும் கைக்கு அடக்கமான என் ஹீமேன் பொம்மை அதே கட்டுமஸ்தான உடல் கட்டோடு வீட்டு அலமாரியில் காட்சி பொருளாக இருக்கிறது. இப்படி ஒரு பொம்மை உங்கள் வாழ்க்கையில் இருந்தால் உங்கள் குழந்தைக்கு வாங்கிக் கொடுக்கும் சாக்கில் அந்த பொம்மையை வாங்கிக் கொடுங்கள். ( என் மகனுக்கு 'ஸ்கேலட்டனை' பொம்மையை வாங்க தர முயற்சிக்கிறேன். எந்த கடையிலும் கிடைக்கவில்லை.)

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails