
ஒவ்வொரு அப்பாவும் தன் மகனை பார்க்கும் போது பொறாமை படும் விஷயம் பாலியத்தில் இழந்ததை, மகன் அனுபவிக்கும் போது தான். சில மகன்கள் செய்யும் செயல் தந்தை பாலியத்தை ஞாபகப்படுத்தும். பொறாமையும், நினைவுகளை ஒன்றாய் கொடுப்பவன் மகனாக தான் இருப்பான் என்று நினைக்கிறேன்.
பாலியத்தில் நாம் செய்த ஒவ்வொரு விஷயங்களை நினைக்கும் போது பசுமையாய் ஏக்கமாய் மனதிலே தங்கிவிடுகிறது. அதை நினைத்து பார்க்கும் நேரம் இல்லாமல் இருப்பது அதை விட கொடுமையாக இருக்கிறது.
அப்படி ஒரு நினைவை என் மகன் எனக்கு காட்டியது எங்கள் வீட்டு இரும்பு கட்டில்.
நான் வீட்டில் காணவில்லை என்றால், என் அம்மா என்னை தேடும் முதல் இடம் எங்கள் வீட்டு இரும்பு கட்டில் தான். சாப்பிட பயந்து, பள்ளி செல்ல அடம் பிடித்து, பேச விரும்பாமல் தனிமையை விரும்பி நான் நாடி சென்ற முதல் இடம் என் வீட்டு இரும்பு கட்டில். சுவரோடு ஒட்டி இருக்கும் இரும்பு கட்டில் ஓரத்தில் செல்லும்போது ஒரு இருட்டான உலகம் தெரியும். அந்த இருட்டு... அன்னை கருவரையில் இருக்கும் போது எப்படி பாதுகாப்பாக உறங்கினேனோ அவ்வளவு பாதுகாப்பு அந்த கட்டில் கீழ் ஓரத்தில் கிடைத்தது. அப்பா, அம்மா, மாமா எல்லோரும் என்னை வெளியே கொண்டு வர வாங்கி தர விருப்பமில்லாத பொருட்களை எல்லாம் வாங்கி தருவதாக சொல்வார்கள். அவர்கள் சொல்வதை நம்பவில்லை என்றாலும், பாதுகாப்பாய் இருந்த இரட்டு பல்லியை பார்த்ததும் பயத்தை கொடுக்க தொடங்கிவிடும். நான் வருவதற்கு முன்பே இரண்டு பல்லிகள் சல்லாபம் செய்து கொண்டு இருக்கும். உள்ளே வரும் போது நான் கவனிக்கவில்லை. திடிர் என்று கவனிததும் பயத்தில் வெளியே வந்து விடுவேன். அந்த பல்லிகள் என்ன செய்துக் கொண்டு இருக்கிறது என்று கூட எனக்கு தெரியாது. இப்படி அந்த இரும்பு கட்டில் ஒரத்தில் கீழ் இருக்கும் கறுப்பு உலகம் எனக்கு மட்டும் தெரிந்த ரகசியம்.
உலகத்திற்கு மட்டுமல்ல... என் இரும்பு கட்டிலுக்கும் இரவு பகல் உண்டு. பகலை ரசிக்க விருப்பட்டால் கட்டில் மேல் வந்து விடுவேன். நான் பொம்மைகள் வைத்து விளையாடிய மிக சிறிய மைதானம். இரண்டு கார்களை மோத வைத்து விபத்துக்கள் நடத்துவேன். மர குச்சியில் செய்ய வில், அம்புகளையும், பேனாவை ஈட்டியாகவும், குண்டு பேனாவை கடாயுதமாகவும் கற்பனை செய்து ஒரு மகாபாரதயுத்தத்தையே கட்டிலில் நடத்துவேன். பொம்மை ரயில் தண்டவாளத்தில் என் விரல்களை நடக்க வைப்பேன். பொம்மை சிங்கத்தின் வாயில் தைரியமாக கை விரல் விடுவேன். பென்ஸில், ரப்பர் வைத்துக் கொண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவேன். அடிப்படாது என்று தெரிந்த பின்பே கட்டில் மெத்தை மேல் குதிப்பேன். இந்த இரும்பு கட்டில் என் குழந்தை பருவத்தில் ஒரு அங்கம். (உங்களுக்கு அப்படி தான் என்று நினைக்கிறேன்...)
பல தேவையான பொக்கிஷம் தேவையில்லாமல் கட்டில் ஒரத்தில் கிடக்கும். தேவையில்லாத நேரத்தில் கிடைத்த பொக்கிஷம் குப்பையாய் தெரியும். அப்படிப்பட்ட பொக்கிஷங்கள் என் இரும்பு கட்டில் ஒரத்தில் நிறைய கிடைக்கும். சாவி கொத்து, கடித்து துப்பிய வெள்ளை நடராஜ் ரப்பர், உடைந்த பாதி பென்ஸில், ஷார்ப்பனாரில் சீவிய குப்பை எல்லாம் அந்த இரும்பு கட்டிலில் ரகசியமாய் புதைந்து கிடக்கும். குப்பை பெறுக்கும் போது அங்கு மறைந்த இருந்த ரகசியஙளும் கலைப்படும். ஆனால், கட்டில் மேல் ஒரத்தில் எட்டுக் கால் பூச்சி செய்து வைத்த குப்பை வீடு மட்டும் பொக்கிஷமாக அப்படியே இருக்கும்.
இப்படி கட்டில் கீழ் இருந்த எத்தனையோ பொக்கிஷங்களை தொலைத்துவிட்டேன். அன்று எனக்கு சிறு மைதானமாக இருந்த கட்டில் உறங்க மட்டுமே பயன்படுகிறது. சிறு வயதில் விளையாடிய கட்டிலை வீடு காலி செய்யும் போது கட்டிலின் அனடாமியும் தெரிந்தது.
என் அறையில் இருக்கும் புது கட்டில் என் பாலியத்தை ஞாபகப்படுத்தவில்லை. அப்பா அறையில் தான் இருக்கிறது. இன்றும், அந்த கட்டிலோர இருட்டு எனக்கு பாதுகாப்பு கொடுக்க தயாராக தான் இருக்கிறது. அதற்குள் சென்று பாதுகாப்பு தேட நேரம் கிடைக்கவில்லை. கட்டில் கீழ் நுழைவதற்கும் என் உடல் சம்மதிக்கவில்லை.
2 comments:
super thalaivaa. nalla eludhureeenga..
Post a Comment