சிறுகதை பயிற்சி பட்டறையில் கொடுத்த புத்தகம். நண்பர் சிவராமன் மட்டும் இந்த புத்தகம் கொடுக்கவில்லை என்றால், இது போன்ற புத்தகங்களை வாசித்திருப்பேனே என்பது சந்தேகம் தான். போதுவாக, நான் எழுத்தாளர்களின் நேர்காணலை விரும்பி வாசிப்பதில்லை. காரணம், எழுத்தாளரின் எழுத்துகளை நம் கையில் வைத்திருந்தாலும், எழுத்தாளனை தூரத்தில் வைத்திருப்பது தான் ஒரு வாசகனுக்கு நல்லது. பல ஏமாற்றங்களை தவிர்க்க முடியும்.
சில எழுத்தாளர்கள் அவர்கள் எழுதியதற்கும், நடை முறையில் இருப்பதற்கும் நேர் எதிராக இருப்பார்கள். அது அவர்களின் சொந்த விஷயம். படிக்கும் வாசகன் தான் ஏமாறப்படுகிறான். முடிந்தவரையில் எழுத்தாளர்கள் தள்ளி நின்று வாசிப்பேன். இது என்னுடைய அறிவுரை அல்ல... அனுபவம்.
சரி... புத்தகத்திற்கு வருவோம். இந்த புத்தகத்தில் வரும் பெரும்பாலான எழுத்தாளர்கள் தலித் சமூகத்தில் இருந்து வந்தவர்கள் அல்லது தலித் சமூகத்தை பற்றி எழுதுபவர்கள். 19 எழுத்தாளர்களின் பேட்டியை ஒருங்கிணைத்து புத்தகம் தொகுப்பது மிக பெரிய காரியம். சமிபத்தில் புத்தக தொகுப்பில் ஈடுப்படும் போது அனுபவ ரீதியாக உணர்ந்தேன்.
இந்த புத்தகத்தில் என்னை மிகவும் கவர்ந்த நேர்காணல் ‘ச.தமிழ்செல்வன் ‘ பேட்டி தான்.
'மன்னரை பாடமாட்டேன் மகேசனைத் தான் பாடுவேன்' என்று சொன்ன தியாகையின் குரல் முற்போக்கானது என்கிறோம். 'கடவுளை மட்டுமே பாடுவேன் மனிதனைப் பாடமாட்டேன்' என்று பின்னை வந்த குரலை பிற்போக்கு என்கிறோம். மனிதனைப் பாட வந்த பாரதியை முற்போக்கானவன் என்போம். காலத்தில் வைத்துத்தான் சொல்ல முடியும்.
முற்போக்கான சிந்தனை அழகாக விளக்கியிருக்கிறார். தமிழ்செல்வனின் எழுத்துக்களில் மட்டுமல்ல பேட்டியிலும் கிராமத்து வெப்பக் காற்று வீசுகிறது.
“தான் பிறந்த சொந்த சாதிக்குத் துரோகம் செய்யவும் தயங்காத மனநிலை உள்ளவன் தானே உண்மையான படைப்பாளி. அவன் எழுதலாம்.”
நல்ல அறிவுரை. ( ம்.... கண்டிப்பா என் சமூகத்தை திட்டி ஒரு கதை எழுதனும். )
“'உன் நண்பனைச் சொல். உன்னைச் சொல்கிறேன்' என்கிற ஆங்கில பழமொழி போல, 'எழுத்தாள யார் என்று சொல். அவன் எழுதியதை படிக்காமலே விமர்சிக்கிறேன்' என்கிற போக்கும் உள்ளது.” என்று சு.சமுத்திரம் சொல்லும் போது படிக்காமல் எழுத்தாளர்களை விமர்சிப்பவர்களை இரண்டு வரியில் விளக்கிவிட்டார்.
'சோலை' சுந்தர பெருமாள், “குடியரசு தலைவராக ஒரு தலித் வர முடிகிறது. ஆனால், பஞ்சாயத்து தலைவராக ஒரு தலித் வர முடியவில்லை.” என்று சொல்லும் போது, ஒருவன் வளராமல் இருப்பதற்கு சாதியை காரணம் காட்டும் மன போக்கினை உணர்த்துகிறார். இன்னும் பல கிராமத்தில் இப்படி தான் இருக்கிறது இதில் சொல்லும் பல எழுத்தாளர்களின் பேட்டியில் புரிந்துக் கொள்ள முடிகிறது.
கடைசி பக்கம், இமையன் 'பச்' மிகவும் அருமை.
எழுத்தாளன் என்பவன் வியாபாரி அல்ல; தொழில் நுட்பக்காரணுமல்ல. எழுத்தாளன் முதலில் விட வேண்டியது எழுத்தாளன் என்கிற திமிரை. இலக்கியம் எதையும் சொல்லக் கூடாது. உணர்த்த வேண்டும் என்பதை இன்றைய எழுத்தாளர்களுக்கு தெரிய வேண்டும்.
இதில் பல எழுத்தாளர்கள் தாமரை, செம்மலர் இதழில் எழுதியவர்கள். மூன்று தலைமுறையை சேர்ந்த கதாசிரியர்களுடன் பயணம் செய்த அனுபவம் இந்த புத்தகம் கொடுக்கிறது.
எத்தனை நாவல் நான் வாசிக்காமல் இருக்கிறேன். எத்தனை எழுத்தாளர்கள் பற்றி தெரியாமல் இருக்கிறேன். இன்னும் நான் சரியான வாசகனே இல்லை என்று உணர்த்துவது போல் இருந்தது இந்த புத்தகம். முடிந்தவரை இதில் சொல்லப்படும் பத்து நாவலையாவது படித்துவிட வேண்டும்.
பயிற்சி பட்டறைக்கு வந்தவர்கள் யாராவது இந்த புத்தகம் படிக்காமல் இருந்தால்........... தயவு செய்து படியுங்கள்
சூரியசந்திரன்
விலை.120, பக்கங்கள்.224
சந்தியா பதிப்பகம்.
1 comment:
நல்ல தகவல்.
"இலக்கியம் எதையும் சொல்லக் கூடாது. உணர்த்த வேண்டும்" அருமையான கருத்து.
சிறந்த கதைகளின் வெற்றி அதுதான்.
Post a Comment