பூர்ணிமா அழகில் டையனாவோ ஐஸ்வர்ய ராயோ இல்லை. பார்க்க சுமாராக தான் இருப்பாள். யாரிடமும் அதிகம் பேச மாட்டாள். குறிப்பாக ஆண்கள் இருக்கும் பக்கம் போகவே மாட்டாள். எப்போதும் எதையோ பறிகொடுத்தது போலவே சோகமாக முகத்தை வைத்திருப்பாள். அவள் சிரிக்காமல் இருப்பதால் எங்கள் கல்லூரியில் அவளுக்கு 'சோனியா அகர்வால்' என்ற பட்டப் பெயரும் அவளுக்கு உண்டு.
யாரிடமும் பேசாத பூர்ணிமா என்னிடம் மட்டும் தான் மனம் விட்டு பேசுவாள். அவளுக்கு பாட தெரியும் என்பது அவளுடன் பழகிய பிறகு தான் எனக்கு தெரியும். நான் அவளை கல்லூரி ஆண்டுவிழாவில் பாட சொன்னேன். பல ஆண்கள் கூடிய மேடையின் முன் பாட முதலில் தயங்கினாள். நான் கட்டாயப்படுத்தியதில் அவள் பாட சம்மதித்தாள்.

கல்லூரி ஆண்டு விழாவில் 'வசீகரா' பாடலை பாடினாள். அரங்கமே அதிரும் அளவிற்கு கைதட்டல் அவள் பாட்டுக்கு கிடைத்தது. பாடி முடித்து மேடையில் இருந்து இறங்கியதும், இரண்டு பேர் அவளை பாராட்டினர். அவர்கள் ‘ஆண்கள்’ என்பதால் பூர்ணிமா அவர்களின் பாராட்டுக்கு 'நன்றி' கூட கூறாமல் வந்து விட்டாள். எனக்கு அவள் செய்தது பிடிக்கவில்லை. நான் அவளிடம் அவள் செய்த தவறை சுட்டிக்காட்டினேன். எல்லா பெண்களை போல என்னிடம் சண்டைப் போட்டுக் கொண்டு பேசாமல் சென்றாள்.
இரண்டு நாளுக்கு மேல் அவளால் என்னிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. அவள் தான் உள்ளூர ஆண்களை வெறுப்பதை கூறினாள். காரணத்தை கேட்டேன். நடுங்கிய குரலில் பதிலளித்தாள். நான் அதிர்ந்து நின்றேன்.
பூர்ணிமாவுக்கு பத்து வயது இருக்கும் போது அவள் அப்பாவுக்கு வேலை மாற்றல் காரணமாக வெளியூர் செல்ல வேண்டியதாக இருந்தது. அவளுடைய அம்மாவும் அப்பாவுடன் செல்ல வேண்டிய நிலைமை. ஒரு வருடத்தில் தனக்கு வேலை மாற்றம் வாங்கி மீண்டும் இதே ஊரில் வந்து விடலாம் என்று நினைத்த பூர்ணிமாவின் அப்பா, தன் தூரத்து உறவினர் வீட்டில் தங்க வைத்தார். ஒரு வருடம் வரை அங்கு இருந்து படிக்க சொல்லி அவள் பெற்றோர் வெளியூர் சென்றனர். அந்த தூரத்து உறவினர் ஒரு வகையில் பூர்ணிமாவின் அப்பாவுக்கு அண்ணன் முறை. பூர்ணிமாவின் பெற்றோர்கள் ஊருக்கு சென்று பத்து நாள் வரை அவள் பெரியப்பா நன்றாக தான் பார்த்துக் கொண்டார். அதன் பிறகு தான் அவளுக்கு தெரிந்தது அவளுடைய பெரியப்பாவின் உண்மையான சுயரூபம்.
இரவு நங்கு தூங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் அவள் உடலில் எறும்பு ஊர்ந்து செல்லுவது போல் இருந்தது. தட்டி விட்டாள். பிறகு தான் தெரிந்தது அது அவள் பெரியப்பாவின் கை என்று ! பூர்ணிமா அவரை தடுத்தாள். கட்டாயப்படுத்தி முத்தமிட்டான். அவளை நிர்வாணமாக்கி மோப்பம் பிடிக்கும் நாய் போல் அவள் உடலை மோர்ந்தான். தடவினான். இன்னும் விவரிக்க முடியாத வார்த்தைகளில் அவள் பெரியப்பாவால் கொடுமைப்படுத்தப்பட்டாள். ஒரு நாள் அல்ல... இரண்டு நாள் அல்ல... இரண்டு மாதம் அந்த பெரியப்பனால் இரவில் நரக வேதனை அனுபவித்தாள். பயத்தில் அவளுக்கு காய்ச்சல் வந்தது. அந்த காய்ச்சலில் பள்ளிக்கு சென்று வந்தாள். வீட்டுக்கு வருவதை பயப்படுவாள். அவளின் நிலைமை அங்கு தான் வந்தாக வேண்டும். அப்பா, அம்மாவிடம் போனில் சொல்லுவதற்கு கூட பயந்தாள்.
நாளுக்கு நாள் அவன் கொடுமை அதிகரித்து வந்ததில் அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். ஊரில் இருந்து அவள் அப்பா, அம்மா வர வழைக்கப்பட்டனர். பூர்ணிமா அவள் அம்மாவை கட்டிபிடித்து அழுதாள். தன் அம்மாவிடம் அவளுக்கு சொல்ல தைரியமில்லை. தனக்கு நடந்தது என்ன என்று தெரிந்தால் தானே சொல்லுவதற்கு...! அந்த அறியாத வயதில் அந்த பெரியப்பா எதற்காக தன்னிடம் இப்படி நடந்துக் கொண்டார் என்று அவளுக்கு தெரியவில்லை. அவள் பெற்றோர்கள் அவர்களுடனே அழைத்து சென்றனர்.
விபரம் தெரியும் வயதில் பூர்ணிமாவுக்கு தனக்கு என்ன நடந்தது என்று புரிந்தது. அந்த காமந்தனை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்ததை நினைக்கும் போதெல்லாம் தன் உடலை கூட வெறுத்தாள். சில சமயம் காரணமில்லாமல் தன் உடலை அவளே காயப்படுத்திக் கொண்டாள். அந்த வெறுப்பு வளர வளர ஆண்கள் மீது அவளுக்கு வெறுப்பு அதிகமானது. தன் அப்பாவை உட்பட ஆண்களிடம் பேசுவதை குறைத்துக் கொண்டாள். எல்லா ஆண்களும் மோசமானவர்கள் என்ற முடிவுக்கே அவள் வந்துவிட்டாள்.
பூர்ணிமா தன் கதையை சொல்லி முடித்ததும் என் மடியில் படுத்து அழுதாள். நான் ஆறுதலாக அவள் தலையை தடவினேன். என்னை அறியாமல் அவள் மீது எனக்கு ஈர்ப்பு வந்தது. அப்போது எனக்கு வந்த எண்ணம் பெரிதாக தெரியவில்லை. நாளாக நாளாக பூர்ணிமா மீது இருப்பது 'காதல்' என்று உணர்ந்தேன். பூர்ணிமா என் வாழ்நாள் முழுக்க என்னுடன் இருக்க வேண்டும் என்று தோன்றியது. நேரில் அவளை பார்க்கும் போதெல்லாம் சொல்ல தயங்கினேன். இன்று தான் எனக்கு தைரியம் பிறந்தது.
பூர்ணிமாவிடம் சென்றேன்.
"இவ்வளவு நாள் என் மனசுல இருக்குறத சொல்ல போறேன். ஐ லவ் யூ ! பூர்ணிமா !!"
"உனக்கு என்ன பைத்தியமா..."
அவள் கத்தி முடித்தப்பின் என் கதையை கூறினேன். தன் கதையை தைரியமாக சொன்ன பூர்ணிமாவிடம் இன்று தான் என் கதையை சொல்ல போகிறேன். அவளை போல நானும் சிறு வயதில் மூன்று ஆண்களால் பாதிக்கப்பட்டவள். பல இரவு காமந்தர்களால் ஆடையில்லாமல் இருந்திருக்கிறேன்..
என் கதை யை சொல்ல சொல்ல அழுதுவிட்டேன் .
" காயத்ரி..! அழாதே..." என்று கண்களை துடைத்தாள். நான் அவள் கரத்தை பற்றிக் கொண்டேன். எனக்கு நடந்த சம்பவத்தை மறக்க வெளியே சிரித்து பேசிக் கொண்டு இருந்தேன். ஆனால், பூர்ணிமாவிடம் தான் சொல்லி அழ வேண்டும் போல் இருந்தது.
பூர்ணிமா முகத்தில் " இது நடக்குமா" என்ற கேள்வி தெரிந்தது.
நான் உச்ச நீதி மன்ற தீர்ப்பை காட்டினேன்.
****
தூறல்கவிதை ச.முத்துவேல்யின் எழுதிய கவிதையை கருவாக வைத்து
"உயிரோடை" நடத்தும் சிறுகதைப் போட்டிக்கான இரண்டாவது ஆக்கம் !
2 comments:
நல்ல கதை. வெற்றி பெற வாழ்த்துக்கள் குகன்
// மறவன் said...
நல்ல கதை. வெற்றி பெற வாழ்த்துக்கள் குகன்
//
நன்றி மறவன் :)
Post a Comment