சென்ற வாரம் ஒரு மலேஷியாவில் இருந்து வாசகி தன் மகளின் பள்ளியில் பேச்சு போட்டி நடப்பதாகவும், அதற்கான தலைப்பில் 'கட்டுரை' எழுதி தர முடியுமா என்று கேட்டுக் கொண்டார். நம்மையும் ஒரு நல்ல பதிவர் (??) என்று நம்பியிருக்கிறார் என்பதற்காக ஒரு பக்க அளவில் கட்டுரை எழுதி மின்னஞ்சல் அனுப்பினேன்.இதற்கு முன் அந்த வாசகி யார் என்று கூட தெரியாது. எதோ என் பதிவு அவர்களுக்கு பிடித்திருக்கலாம். கேட்டுவார். நானும் எழுதி கொடுத்து விட்டேன். அவர் மகள் வெற்றி பெற்றாரா என்று கூட தெரியவில்லை.
அவர் என்னிடம் கேட்ட தலைப்பு " இலக்கிய போட்டிகளால் நாம் அடையும் நன்மைகள்". இந்த தலைப்பை படித்ததும் எனக்குள் பல கேள்விகள். இந்த போட்டிகள் நடத்துவதால் பங்கு பெற வேண்டும் என்பதற்காக பலர் தங்கள் கற்பனை தட்டி எழுதுகின்றனர். ( வெற்றியை முக்கியமாக கருதுவதில்லை.)
எந்த வித உள் நோக்கமில்லாமல் உண்மையாகவே இலக்கிய போட்டிகள் நடத்தி எழுத்தாளர்களை ஊக்கவிக்கிறார்களா என்ற சந்தேகம் நீண்ட நாட்களாகவே என் மனதில் உள்ளது. 1000, 5000 ரூபாய் என்று ஒரு சிறுகதைக்கோ அல்லது கவிதைக்கோ கொடுக்கிறார்கள். வெற்றி பெற்ற எழுத்தாளர்களும் பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால், போட்டி நடத்துபவர்கள் என்ன பயன் பெறுகிறார்கள். எந்த லாபம் இல்லாமல் போட்டி நடத்துவார்களா...! இல்லை அவர்கள் போட்டி நடத்துபது மூலம் தேடிக் கொள்ளும் விளம்பரமா என்று புரியவில்லை.
ஒரு எழுத்தாளர் பார்வையில் எழுதிய கட்டுரையை கீழே குறிப்பிட்டுள்ளேன். எந்த வார்த்தைகளும் மாற்றாமல் அப்படியே கொடுத்திருக்கிறேன்.
-----
இலக்கிய போட்டிகளால் நாம் அடையும் நன்மைகள்
ஒரு திறந்த மைதானத்தில் பதினொரு பேர் கொண்ட இரு அணி வீரர்களை எந்த இலக்கும், விதிமுறைகளும் இல்லாமல் பந்தை இரண்டு பக்கமும் அடிக்க வேண்டும் என்று சொன்னால் எப்படி இருக்கும்....? அவர்கள் பந்தை அடித்தப்படி விளையாடிக் கொண்டே இருப்பார்கள். அந்த விளையாட்டுக்கு முடிவு என்பதே கிடையாது. பார்வையாளர்களும் அந்த விளையாட்டை பார்க்க மாட்டார்கள். ஒரு கட்டத்தில் விளையாட்டு வீரர்களுக்கும் அலுப்பு தட்டிவிடும். ஆனால், இதே விளையாட்டை காலளவு, விதிமுறைகள், இலக்கு என்று நிர்ணயம் செய்து விளையாடினால் ரசிகர்கள் திரண்டு வந்து பார்ப்பார்கள். இரண்டு அணிகளும் பந்தை தங்கள் இலக்கை நோக்கி அடித்து விளையாடுவார்கள். ரசிகர்களும் கைதட்டி ஆராவாரம் செய்வார்கள்.
இலக்கிய போட்டிகளும் அப்படி தான். ஒவ்வொரு எழுத்தாளனும் எழுத்து துறையில் நுழையும் போது 'கவிதை' என்ற நுழைவு தேர்வு மூலம் தான் உள்ளே வருகிறான். காலம் செல்ல செல்ல வளர்ந்த நிலையில் கட்டுரை, சிறுகதை, புதினம் என்று அவனது எழுத்துக்களும் வளர்ச்சி அடைகின்றன. ஒரு நல்ல எழுத்தாளரால் எல்லாமே எழுத முடியும். ஆனால், அவன் எதில் சிறந்து விளங்குகிறான் என்பதை இலக்கிய போட்டிகள் தான் அவனுக்கு உணர்த்துகிறது. இலக்கிய போட்டிகளில் வளர்ந்த எழுத்தாளர்கள் ஒருவனின் கவிதையோ அல்லது சிறுகதையோ தேர்வு செய்யும் போது எழுத்துலகில் மிக பெரிய அங்கிகாரம் கிடைக்கிறது. அவன் எழுதிய அந்த படைப்புக்கும் வாசகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெறுகிறது.
எந்த ஒரு எழுத்தாளனையும் இலக்கிய போட்டிகள் போல் வாசகர்களிடம் எதுவும் கொண்டு செல்வதில்லை. புகழ் பெற்ற இதழிலோ அல்லது நாளேடுகளிலோ எழுதுபவர்கள் குறிப்பிட்ட வாசகர்கள் வரை தான் சென்றடைகிறார்கள். ஆனால், இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற படைப்புகள் பெரும் அளவில் வாசகர்களின் ஆதரவு கிடைக்கிறது. இன்றும், சாகித்ய அகாதமி விருது, தமிழ அரசு விருது பெற்ற நூல்கள் வாசகர்கள் மத்தியில் நல்ல மதிப்பு பெற்றுள்ளது. அந்த நூலின் விற்பனைக்கும் இலக்கிய போட்டியின் முடிவுகள் உதவுகிறது.
இலக்கிய போட்டிகள் எழுத்தாளனை அங்கிகரிப்பதோடு அல்லாமல் வாசகனுக்கு நல்ல படைப்புகள் எளிதில் சென்றடைய வழி வகுத்துக் கொடுகிறது.
---
எழுத்தாளர் பார்வையில் இலக்கிய போட்டிகள் மிகவும் முக்கியம். ஆனால், போட்டிகள் நடத்துபவர்களின் பார்வையில் தேவை விளம்பரம் மட்டும் தானா...அல்லது அதையும் மீறி ஏதாவது ஒன்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களா !!
ச்ச.. யாரை தான் சந்தேகம் படனும் அறிவிருக்கா... எதோ காசு இருக்குறவங்க போட்டி நடத்துறாங்க ! எழுத்தாளர் போட்டியில் கலந்துக் கொள்ளுறான். உனக்கு என்ன வந்தது.இப்படினு நீங்கள் கேட்கலாம். அப்படி கேட்டாலும் அதில் உண்மை இருக்கிறது. இருந்தாலும், என் சந்தேகம் நியாயமாக தான் எனக்கு படுகிறது. நீங்க என்ன சொல்லுறீங்க... ????
No comments:
Post a Comment