"ஹலோ...! சந்திருவா... நா மணி பேசுறேன்...இந்த சண்டேக்கு எங்க போகலாம்..."
"எங்க போலாம்னு நீயே சொல்லு...."
"ம்... வண்டலூர் ஜீ-விற்க்குப் போவோம்... அங்கே போய் ரொம்ப வருசமாச்சு..."
"சரி ! நீ அப்படியே அடையாறிலிருந்து ராஜ் பவன்கிட்ட வந்திடு. நான் பைக்கில் அங்க வந்து பிக்கப் செய்துக்கிறேன்.."
"ஒ.கே ! சந்திரு..."
மணியுடன் பேசிய சந்திரு தன் செல்போனை பாக்கெட்டில் போட்டபடி திரும்பி பார்த்தான் . அவன் அம்மா கோபத்தோடு நின்றாள்.
"என்னம்மா கோபமா பார்க்குறீங்க...?" என்றான் சந்திரு.
"வாரத்துக்கு ஒரு நாள் வர்ற சண்டேயில கூட வீட்டில தங்காம அப்படி என்னடா சுத்துற... வாரம்தோறும் சண்டேயில் எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கனும்னு... நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன். லீவுல வீடு தங்கறதேயில்ல... ஊர் சுத்தறதை ஒரு கொள்கையாவே வச்சிருக்கியா..."
"சும்மா... வாரத்துக்கு ஒரு ரிலாக்ஸ் வேண்டாமாம்மா..."
"ஊரில இருக்குறவங்க...எல்லாம் உங்கள மாதிரி தான் இருக்காங்களா... வாரத்திற்கு ஒரு நாள் கொடுக்கிற லீவுலயும் இப்படி சுத்தப் போறது நல்லாவா இருக்கு..." அம்மா கோபத்துடன் வெடித்தாள்.
"மத்தவங்கள பத்தி எனக்கு கவல இல்லம்மா..! வார லீவுல கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கலாமுன்னுதான் நானும் மணியும் இப்படி எங்கேயாவது போறோம்... இந்த இளம் வயசுல சுத்தாம வயசான காலத்திலயா சுத்தப் போக முடியும்." என்று பதிலுக்கு இவனும் அம்மாவிடம் வாக்குவாதம் செய்தான்.
சந்திரு தன் அம்மாவுடன் பேசிக் கொண்டே தனது பேண்ட் சர்ட்டை மாற்றிக் கொண்டான்.
பைக் சாவியைக் கையில் எடுத்து சுழற்றியபடி " அம்மா... கோவிச்சுக்காதம்மா... நாங்க இன்னைக்கு வண்டலூர் ஜீ-விற்குப் போயிட்டு வந்துடுறோம். மதியம் அப்படியே வர்ற வழியில சாப்பிட்டு வந்துடுவோம். நீ நைட்டுக்கு மட்டும் டிபன் பண்னி வச்சா போதும்மா... அப்பா கிட்டயும் நீங்களே சொல்லிடுங்க...' என்றபடி கிளம்பினான்.
ராஜ் பவனுக்கு அருகில் நின்றிருந்தான் மணி.
"சந்திரு... ஏண்டா லேட்டு..." என்றான் மணி.
"ஒன்னுமில்லடா... வழக்கம் போல வீட்டுல அம்மா அட்வைஸ் பண்ணாங்க..."
"சரி...சரி...விடு..எல்லோர் வீட்டிலயும் இருக்கிறதுதானே...!" என்றபடி பைக்கின் பின்னால் அமர்ந்து கொண்டான் மணி.
அந்த பைக் வண்டலூரை நோக்கிச் சென்றது.
வண்டலூர் ஜீ-வில் சண்டே என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது.
சந்திரு பைக்கை அங்கிருந்த ஸ்டாண்டில் நிறுத்துவதற்காகக் கொண்டு சென்றான்.
ஸ்டாண்டிலிருந்த காண்டிராக்டர் பைக்கை அங்கே நிறுத்துவதற்காக நான்கு ரூபாய்க்கான ரசீது ஒன்றை அவனிடம் கொடுத்தார்.
சந்துரு தனது பர்ஸிலிருந்து நூறு ரூபாய் தாளை எடுத்து நீட்டினான்.
"என்னிடம் நூறு ரூபாய்க்கு சில்லரை இல்லை... சில்லரையாகக் கொடுங்க..."என்றார் அந்த ஸ்டாண்டிலிருந்தவர்.
"என்னங்க... இவ்வளவு கார் பைக் இங்கே நிறுத்தியிருக்காங்க... நூறு ரூபாய்க்கு சில்லரை இல்லைங்கிறீங்க..." என்றான் சந்திரு.
"இங்க வர்ற எல்லோரும் நூறும் ஐநூறுமாக் கொடுத்தா சில்லரைக்கு நான் எங்கே போறது..."
"தொழில் செய்ற நீங்க சில்லரை வாங்கி வச்சுக்கனும்..." என்றான் சந்திரு.
"நான் எவ்வளவு சில்லரையைத்தான் வாங்கி வச்சுக்கிறது...?"
"டேய் சந்திரு... ஏண்டா அவருகிட்ட தேவையில்லாமல் சண்டை போட்டுக்கிட்டிருக்க...." என்றபடி தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்து ஸ்டாண்டிலிருந்தவரிடம் கொடுத்தான் மணி.
அந்த ஸ்டாண்டுக்காரர், "சார் ஒரு ரூபாய் சில்லரை இல்லையே..."என்றார் மணியிடம்.
மணியும் உடனே "இருக்கட்டும் பரவாயில்லை...நீங்களே வச்சுக்குங்க..." என்றபடி "வாடா சந்துரு...போகலாம்" என்றான்.
"ஹலோ... பாக்கி ஒரு ரூபாயைக் கொடுங்க..." என்றான் சந்திரு.
"சார் சில்லரையில்லன்னு... நான் சொல்றேன்... நீங்க வேணும்னா நான்கு ரூபாயைக் கொடுங்க..." என்றபடி அந்த ஐந்து ரூபாய் நாணயத்தைச் சந்திருவிடம் திருப்பிக் கொடுத்தான்.
"நூறு ரூபாயைக் கொடுத்தாலும் சில்லரை இல்லேங்கிறீங்க...ஐந்து ரூபாயைக் கொடுத்தால் அதுக்கும் பாக்கி ஒரு ரூபாய் இல்லேன்னு சொல்றீங்க..."
"சார் நீங்க பிரச்சனை பண்ணனும்னே வந்திருக்கீங்களா... எனக்கு அடுத்த கஸ்டமர் காத்துக்கிட்டு இருக்காங்க..."
"பாக்கி ஒரு ரூபாயைக் கொடுன்னு கேட்டா...அது உங்களுக்குப் பிரச்சன பண்ணுற மாதிரி இருக்கா..."
"அப்போ... நீங்க சரியான சில்லரையத் தாங்க..."
"எங்க கிட்ட சில்லரயில்ல..."
"என்ன சார் உங்களோட பெரிய தொந்தரவா இருக்கு... நீங்க சில்லரை மாத்திட்டு வாங்க..."
"நான் ஏன் சில்லரை மாத்திட்டு வரனும்? நீங்க போய் சில்லரைய மாத்தி பாக்கி ஒரு ரூபாயைக் கொடுங்க"
"சார் ஒரு ரூபாய் நாணயம் சில்லரையாத் தர மாட்டாங்க... எல்லாம் காயின் பாக்ஸ் போனிற்குத் தேவைன்னு அதைக் கொடுக்க மாட்டேங்கிறாங்க..."
"எதைச் சொன்னாலும் ஒரு ரூபாய் தரக் கூடாதுன்னு நீங்க ஒரு முடிவோட இருக்கிறீங்க... நானும் ஒரு ரூபாயை வாங்காமல் போறதில்லன்னு முடிவெடுத்துட்டேன்..." என்ற சந்திருவை " விடுடா சந்திரு...ஒரு ரூபாய் தானடா... வாடா போகலாம்" என்றபடி இழுத்தான் மணி
ஸ்டாண்டில் தனது பைக்கை நிறுத்த வந்திருந்த மற்றொருவர் அவரது பைக்குக்கு தன்னிடமிருந்து ஒரு ரூபாய் நாணயமாக நான்கு நாணயங்களை அவரிடம் கொடுத்து, "இந்தாங்க...எனது பைக்குக்கு ரசீதைக் கொடுங்க...அவருக்கும் பாக்கி ஒரு ரூபாயைக் கொடுத்து அனுப்புங்க..." என்றார்.
வேகமாக அந்த நாணயங்களைப் பெற்றுக் கொண்ட அவர், ஒரு ரூபாயை சந்திருவிடம் கொடுத்து "நீங்க முதலில் இடத்தைக் காலி பண்ணுங்க சார்" என்றார்.
நாங்க இடத்தைக் காலி பண்றது இருக்கட்டும். இப்படியே ஒவ்வொரு பைக்குக்கும் ஒரு ரூபாய் எடுத்தால் உங்களுக்கு தினசரி இப்படி வர்ற ரூபாய் நூறு இருநூறுன்னு கிடைக்கும் அப்படித்தானே..." என்று விடாமல் அவரிடம் மீண்டும் தனது பேச்சைத் தொடர்ந்தான் சந்திரு.
அந்த ஸ்டாண்டுக்காரர் அடுத்து நிறுத்தப்பட்ட பைக்குகளுக்கு ரசீது கொடுப்பதற்காக நகர்ந்தார்.
"ஏன் சந்திரு அவருதான் பாக்கி ஒரு ரூபாயைக் கொடுத்திட்டாருல்ல...அப்புறம் ஏன் சண்ட போடுற..." என்ற மணி சந்திருவின் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர முயற்சித்தான்.
"இப்படி ஒரு ரூபாய் சில்லரை தட்டுப்பாடு வருதுன்னா...அந்த ஒரு ரூபாய்க்கு சரியான மதிப்புள்ள மிட்டாய் அல்லது வேறு ஏதாவது பொருளைக் கொடுக்கலாமில்ல... இவங்க வேணுமின்னே பாக்கியைக் கொடுக்கிறதில்ல...பைக்கு வைத்திருக்கிறவனெல்லாம் ஒரு ரூபாயைத் திருப்பிக் கேட்டுக்க மாட்டான்னு... நினைக்கிறாங்க...." என்று சற்று தள்ளி நின்றிருந்த அந்த ஸ்டாண்டுக்காரர் காதில் படும்படி சத்தமாகச் சொன்னான்.
சந்திருவின் சத்தத்தை அந்த ஸ்டாண்டில் பைக் நிறுத்த வந்த யாரும் கண்டு கொண்டதாகவேத் தெரியவில்லை. அவர்கள் ஒரு ரூபாய் பாக்கியை வாங்க அக்கறை காட்டியதாகவும் தெரியவில்லை. ஐந்து ரூபாயாகக் கொடுத்து நகர்ந்து கொண்டிருந்தார்கள்.
சந்திரு அருகிலிருந்த கடைக்குச் சென்று இருபது ரூபாய்க்கு வாழைப் பழங்களை வாங்கி தனது நூறு ரூபாயை மாற்றி சில்லரை பெற்றுக் கொண்டான்.
"என்னடா இவ்வளவு பழம் நமக்கெதுக்குடா?" என்கிற மணியின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் வண்டலூர் ஜீ-விற்குள் செல்வதற்கான நுழைவுச்சீட்டைப் பெற்று வந்தான்.
அவர்கள் வண்டலூர் ஜீ-விற்குள் சென்றனர்.
மரத்தில் தாவித் திரிந்து கொண்டிருந்த குரங்குகளைப் பார்த்த சந்திரு தான் வாங்கி வந்திருந்த பழங்களை ஒவ்வொன்றாக பிரித்து அங்கிருந்த ஒவ்வொரு குரங்கிற்கும் ஒன்றாக வீசி எறியத் துவங்கினான். அவைகளும் அதை லாவகமாகப் பிடித்துக் கொண்டு அடுத்த மரத்திற்குச் சென்று தின்னத் தொடங்கியது.
சந்திருவை வியப்பாக பார்த்தான் மணி.
"என்னடா மணி, அப்படிப் பார்க்கிற... பாக்கி ஒரு ரூபாய்க்கு ஒரு மணி நேரம் சண்டை போட்ட சந்திரு இப்படி இருபது ரூபாய்க்கு வாழைப் பழத்தை வாங்கி வந்து குரங்குக்கு வீசி எரிந்து கிட்டிருக்கானேன்னுதானே..."
மணியிடமிருந்து எந்த பதிலுமில்லை.
சந்திரு மணியிடம் தொடர்ந்தான்.
"நாம எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்கலாம். இப்படி வாயில்லா ஜீவன்களுக்கு உணவாகக் கொடுக்கலாம். ஏன் தானமோ, தர்மமோ கொடுக்கலாம். ஆனா ஒரு ரூபாய் கூட ஏமாற கூடாது..."
அவன் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த மணியிடம், "இப்படித்தாண்டா மக்கள் எதிலும் அக்கரையில்லாமல் இருக்கிறாங்க... ஒரு ரூபாய்தானே, இரண்டு ரூபாய்தானேன்னு விட்டுடுறாங்க... ஒரு பொருள் வாங்கினாலும் அதில போட்டிருக்கிற விலையைக் காட்டிலும் ஒன்றிரண்டு கூட சொன்னாலும் அதை ஏனென்று கேட்காம வாங்கிட்டுப் போகிறாங்க... பஸ்ஸில் சில்லரைக்காசைக் கேட்டு வாங்குறதில்லே... ரேசன் கடையில் வாங்குற பொருளில் எடை குறைந்தாலும் கேட்கிறதில்ல... எதையும் இவங்க திருப்பிக் கேட்காமல் இருக்கிறதால தவறுகள் கூடிக்கிட்டே போகிறது.
தாங்கள் வாங்குற சம்பளம் போக இப்படி எக்ஸ்ட்ரா வருமானம் வரும்னு அவங்களும் தவறைத் தைரியமாச் செய்துக்கிட்டு இருக்காங்க... நாம் செய்யும் இந்த சின்ன தவறு அவர்களைப் பெரிய தவறுக்கு கொண்டு போகுது... மக்கள் எப்போதுதான் தங்களுடைய உரிமையை விட்டுக் கொடுக்காமல் இருப்பாங்களோ... அப்போதுதான் தவறும் தொடராது...! ஏமாற்றமும் வராது...! " என்று வருத்தத்துடன் சந்திரன் புலம்பிக் கொண்டே வந்தான்.
"அவனது புலம்பலில் ஒரு உண்மையும் இருக்கிறது." என்று நினைத்த மணியின் மனதிற்குள் " இனி நம்முடைய பணத்தைத் தேவையில்லாமல் எங்கும் எதற்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது." என்கிற எண்ணம் மேலிட " சந்திரு, நீ செய்தது சரிதாண்டா...ஒரு ரூபாய்தானேன்னு நாம் விட்டு விடும் நமது சிறிய தவறு. அவர்களைத் தொடர்ந்து தவறு செய்ய வைத்து விடுகிறது." என்றான்.
இருவரும் வண்டலூர் ஜீ-வைச் சுற்றிவிட்டுத் திரும்பி பைக்கை எடுப்பதற்காக வந்தனர்.
அங்கே அந்த ஸ்டாண்டுக்காரர் பைக்கை நிறுத்திவிட்டு ரசீது வாங்கும் ஒருவரிடம், "சார், நீங்க கொடுத்த ஐந்து ரூபாயில் மீதி ஒரு ரூபாய் பாக்கிக்கு என்னிடம் சில்லரை இல்லை... இந்தாங்க அதுக்குப் பதிலாக ஒரு ரூபாய் சாக்லேட்" என்று ஒரு சாக்லேட்டை கொடுக்க, அதை வாங்கிய அந்த பைக்குக்காரர் அதைத் தனது குழந்தையிடம் கொடுக்க அது சிரித்தவாறே மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டது.
சந்திருவுக்கு தனது ஒரு ரூபாய் பாக்கிக்கான வாக்குவாதம் இப்போது அந்த ஸ்டாண்டுக்காரரிடம் ஏதோ ஒரு புதிய மாறுதலை உருவாக்கியிருப்பதைப் போல் தெரிந்தது.
நன்றி : முத்துகமலம்.காம்
5 comments:
நல்ல கருத்து...கதை..மனமாற்றம் அனைவரிடமும் வந்தால் நன்று...
அன்புடன் அருணா
// அன்புடன் அருணா said...
நல்ல கருத்து...கதை..மனமாற்றம் அனைவரிடமும் வந்தால் நன்று...
அன்புடன் அருணா //
வருகைக்கு நன்றி அருணா :)
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
நல்ல கருத்துள்ள கதை.. இதை அப்படியே திரைக்கதை ஆக்கலாம்... ஒரு காட்சியாக....
கருத்தூன்றி படித்தேன்... நன்றி.. வாழ்த்துகள்
// ஆதவா said...
நல்ல கருத்துள்ள கதை.. இதை அப்படியே திரைக்கதை ஆக்கலாம்... ஒரு காட்சியாக....
கருத்தூன்றி படித்தேன்... நன்றி.. வாழ்த்துகள் //
மிக்க நன்றி ஆதவா :)
Post a Comment