சென்ற வருடம், இரண்டு மாதமாக செலவிட்டு, மெனக்கிட்டு எழுதிய நாவல் 'அந்த மூன்று பெண்கள்'. ஆகஸ்ட் 15, 1947ல் பிறந்தவன் வாழ்க்கையில் மூன்று பெண்கள் அவனின் திராவிடக் கொள்கையை எப்படி மாற்றுக்கிறார்கள் என்பது தான் கதை கரு. திராவிட பதிவாக பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் கெஸ்ட் அபிரன்ஸாக அந்த நாவலில் வருவார்கள்.
1947 முதல் தற்காலம் வரை கதை நடக்கிறது. எழுதி முடித்த பிறகு அழியா காவியத்தை முடித்துவிட்ட மகிழ்ச்சி. புத்தகமாக்கும் முன்பு நண்பர்களின் கருத்தைக் கேட்கலாம் என்று என் நெருங்கிய நண்பன் ஒருவனிடம் கொடுத்தேன். (அவன் எழுத்தாளன் இல்லை. வாசகன் மட்டுமே).
படித்து விட்டு அவன் கூறிய கருத்து, " இனிமே எழுதுறத விட்டுடு" என்பது தான். என் நாவலை படிக்க சொன்னதிற்காக ரூ.500 அபராதம் (சரக்கு) வாங்கிக் கொண்டான். அது சரி, ‘வெட்டுப் புலி’ நாவல் விமர்சணத்தில் சொந்த புராணம் எதற்கு ? நானும் மிஷ்கின்ப் போல் ஆகிவிட்டேனா என்று நினைக்க வேண்டாம்.
வெட்டு புலி நாவலைப் பற்றி ஒரு சில வார்த்தைகளை சொல்லிவிட்டு பிறகு சொல்கிறேன்.
தமிழ்மகன் எழுதிய 'எட்டாயிரம் தலைமுறை' சிறுகதை தொகுப்புக்கு தமிழக சிறந்த சிறுகதை தொகுப்புக்கு பரிசு கிடைத்தது. இதில் கலைஞர், எம்.ஜி.ஆரை திட்டியிருப்பதால் கண்டிப்பாக இந்த புத்தகத்திற்கு தமிழக அரசு விருது கிடைக்காது. எட்டாயிரம் தலைமுறை சிறுகதை தொகுப்பில் ஒரு சில கதைகள் என்னை கவர்ந்ததால் இந்த புத்தகம் வாங்கினேன்.
1930ல் தொடங்கி தற்காலத்தில் வரை திராவிட பரிமாற்றத்தை பதிவு செய்திருக்கிறார்.
ஒரு நாவல் இயக்கத்தின் வரலாற்றை பதிவு செய்ய இயலுமா என்று பிரம்மிக்கும் அளவிற்கு எளிய நடையில் பல முக்கிய சம்பவங்கள் பதிவாகிறது.
நாற்பதுகளில் பெரியார் கொள்கையில் பிராமிண அல்லாதவர்கள் அதிகம் ஈர்க்கப்பட்டனர். ஆனால், தற்காலத்தில் பெரியாரின் கொள்கையை பிராமணர்கள் விரும்புவதை ஒரு இடத்தில் காட்டியிருப்பது ரசிக்கதக்கது.
லட்சுமண ரெட்டியின் முந்தைய, பிந்தைய தலைமுறைகள் கொண்டு நாவல் செல்கிறது. மேலும், கிளை கதாபாத்திரங்கள் வாயில திராவிட கொள்கை, நம்பிக்கை அழிந்து வருவதையும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வசனங்கள் பாத்திரத்திற்கு ஏற்றதாக இருப்பதால் ஆசிரியரின் தனிப்பட்ட கருத்தை யூகிக்க முடியவில்லை. ஒரு பாத்திரம் திராவிடத்தை விரும்பி ஆதரத்து பேசினால், கடவுளை நம்பும் பாத்திரம் நேர்மாறாக பேசுகிறது. இரண்டுக்கும் பதில் அளிக்க முடியாமல் இருக்கும் கதை நகர்கிறது.
தியாகாரசன் “அவனுங்களால தான் நம்ம் வாழ்க்கை இப்படி நாறிக்கிட்டு இருக்குது” என்று பார்ப்பனர்களை திட்டும் போது, எதிர் கருத்துள்ள மனைவி தன் கழுத்தில் தொங்கும் நகையையும், புடவையும் அவசரமாகப் பார்த்துவிட்டு நல்லாத்தானே இருக்கிறோம் என்று எறிட்டுப் பார்த்தாள். மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது.
இந்த நாவலில் பெரிய குறையாக என் கண்ணில் பட்டது இரண்டு விஷயம் தான்.
1.
நவம்பர் 1, 1956 அன்று மொழிவாறியாக மாநிலம் பிரிக்கப்பட்டதைப் பற்றி எந்த குறிப்புகளும் இதில் இல்லை. பெரியார், அண்ணா போன்றவர்கள் காட்டாத எல்லை போரை மா.போ.சி அவர்கள் போராடி சென்னை வரை தமிழ் நாட்டுக்கு மீட்டு தந்தார். திராவிடர்கள் ஆர்வம் காட்டாத எல்லை போரை திராவிட புனைவில் ஆர்வம் காட்டாமல் குறிபிடாமல் விடுப்பட்டு போனது.
2.
திராவிர வரலாறு பற்றிய புனைவாக இருந்தாலும் சாதியை விட முடியவில்லை. ரெட்டி, நாயகர், மலையாளி என்று ஜாதி பெயரை திராவிட கதாபாத்திரங்கள் பேசும் அதை எதிர்த்து வாசகனாக குரல்க் கொடுக்கிறோம். அதையும் காதில் வாங்கிக் கொள்ளாத அரசியல்வாதிப் போல் வாசகனும் அடுத்த பக்கத்திற்கு கடந்து செல்ல வேண்டியதிருக்கிறது. (அன்றைய திராவிடர்கள் குறித்து ஆசிரியரின் பகடியாகக் கூட இருக்கலாம்)
எனினும் இந்த வருடத்தில் வந்த மிக சிறந்த நாவலில் கண்டிப்பாக 'வெட்டுப் புலி’ நாவல் இடம் பெறும் என்று நினைக்கிறேன்.
நான் எழுதிய 'அந்த மூன்று பெண்கள்' நாவலுக்கும், வெட்டுப் புலிக்கும் என்ன சம்மந்தம் என்பதற்கு பதில் சொல்ல வில்லையே !!!
நண்பனின் கருத்தை பெரிதாக அந்த நாவலை திருத்தி எப்படியாவது புத்தகமாக்கலாம் என்று இருந்தேன். இருந்தும், சில பகுதிகள் எனக்கு திருப்தி அளிப்பதாக இல்லை. வெட்டுபுலி நாவலை படித்ததும் நான் எழுதிய ஒரு சில இடங்கள் இதில் பெற்று இருப்பதை உணர முடிந்தது.
அந்த நாவலை மாற்றி புத்தகமாக வந்தால், ஒன்று பெயர் கெட்டுவிடும் அல்லது Inspiration (உருவி) எழுதிய நாவலாக கருதப்படும். அதனால், Shift + Delete and Enter.
உயிர்மை பதிப்பகம்
ரூ.220, பக். : 378
No comments:
Post a Comment