நீச்சல் தெரியாதவன், கைக் கொடுத்து தூக்கி விட ஆள் இல்லாதவன் தைரியமாக கடலில் குதித்தால் என்னவாகும் ? அப்படி ஒரு வேலையை தான் "எனது கீதை" நூலை எழுதி வெளியிட்டேன். எந்த திட்டம் போடாமல், வாசிப்பு பழக்கம் உள்ள நண்பர்கள் இல்லாமல், யார் கருத்தும் கேட்காமல் நூல் போட வேண்டும் என்ற வேகத்தில் வெளியிட்டது. வெளியீட்டு விழா உட்பட 17,000 ரூபாய் செய்தேன். ஆனால், வெளியீட்டு விழாவில் 3000 ரூபாய்க்கு மட்டுமே புத்தகம் விற்பனையானது.
அதன் பிறகு அடுத்த புத்தகம் ( நடைபாதை) போட எனக்கு இரண்டு வருடம் தேவைப்பட்டது. பதிப்பகம் தொடங்கிய பிறகு விற்பனையாகும் நூல்களோடு இதையும் சேர்த்து தள்ளிவிடுகிறேன். இலவசமாக போனால் கூட பாரவாயில்லை என்றாகிவிட்டது. அந்த அளவுக்கு "எனது கீதை" எனக்கு கசப்பான அனுபவத்தை தான் கொடுத்துள்ளது.
நேற்று ஒரு வாசகரிடம் இருந்து வந்த கடிதம் படித்த பிறகு, என்னை சந்தோஷப்பட செய்ததோடு இல்லாமல் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காரணம், கடிதம் வந்திருந்த இடம் திருச்சி மத்திய சிறைசாலை.
அந்த கடிதம் கீழ்...
அன்புள்ள மேண்மைக்கு அய்யா உயர்திரு கு.கண்ணன், வெளியிட்டாளர் அவர்களுக்கு உங்கள் வெளியீடு மூலமாக நான் எனது கீதை புத்தகம் படித்தேன். மிகவும் பயன் உள்ளதாக இருந்தது.
நான் தண்டனை சிறைவாசியாக 6 1/2 வருடங்களாக திருச்சி மத்திய சிறையில் இருந்து 'B.A' சமுகவியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். ஆகையால் அய்யா அவர்கள் 'உறங்காத உணர்வுகள்' (கவிதை) புத்தகம் ஒன்று எனக்கு அனுப்பி வைத்தால் நான் மற்றும் நண்பர்கள் படித்து இங்கு எல்லோரும் மிகவும் சந்தோஷமாக இருப்போம்.
ஆகையால் அய்யா அவர்கள் எங்களுக்கு புத்தகம் அனுப்பி வைத்து உதவி செய்ய வேண்டும்.
- வி.செந்தில்குமார்.
மத்தியசிறை, திருச்சி
21.4.10
துரதிஷ்டவசமாக என்னிடம் 'உறங்காத உணர்வுகள்' பிரதிகள் இல்லை.
***
அடுத்து இன்னொரு கடிதம்.இந்த கடிதம் வந்து மூன்று ஆண்டுகள் மேலாகிறது. முகவரி போடாமல் பெயர் மட்டுமே குறிப்பிட்டு இந்த கடிதம் வந்தது.
தோழர் குகன் அவர்களுக்கு ரவிதாசனின் வணக்கம்.
என் திருமணம் 31.8.06 அன்று நடந்தது. என் திருமணத்தின் பரிசுப் பொருட்களாக வந்த புத்தகங்களில் தங்களின் "எனது கீதை"யும் உண்டு.
எட்டு மாதங்களுக்கு முன் தங்களின் புத்தகத்தை எடுத்து அட்டைப் படத்தைப் பார்த்து விட்டு, இது சீடம் பழக்கம் நிறைந்த ஆன்மீக புத்தகமாக இருக்கக் கூடும் என்று அலட்சியமாக வைத்துவிட்டேன்.
சென்ற வாரம், என்ன தான் எழுதியிருக்கிறது என்று எடுத்துப் படித்த போது, தங்களின் அரியத் தகவல் என் அகத்தைக் கவர்ந்தது. அற்புதமான நடை, எளிமை ஓட்டம். தலைப்பை நிரப்புவதற்கு நீங்கள் தேடித் தொகுத்த சான்றுகள். இவையாவும் உங்களை முதிர்ந்த எழுத்தாளராக காட்டுகிறது.
தங்களை தாழ்த்தி எடைப் போட்டத்திற்கு மன்னிக்கவும். தங்களின் நட்பு எனக்கு ஊக்கத்தை தரும் என்று நம்புகிறேன். வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம்.
அன்புடன்,
ரவிதாசன்
14.8.07
செந்தில்குமாரின் கடிதம் படித்ததும், ரவிதாசன் கடிதம் நினைவுக்கு வந்தது. இவரை நேரில் சந்தித்த போது ஒரு விதவை பெண்ணை மணந்துள்ளார் என்பது தெரிந்தது.
இது போன்ற வாசகரின் பாராட்டு கிடைக்கும் போது எத்தனை தோல்வி பெற்றுயிருந்தாலும் அதை எல்லாம் மறக்க செய்து விடுகிறது.
புத்தகத்தை வாங்க... இங்கே.
1 comment:
மேலும் பல பாராட்டுக்களை பெற வாழ்த்துக்கள்
Post a Comment