இப்படிக்கு பேராண்டி
அடுத்த தலைமுறைக்கு அம்மா, அப்பா தவிர மற்ற உறவு முறைகளின் பெயர் தெரியுமா என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு கூட்டு குடும்பம் மறைந்து தனி குடித்தனம் வளர்ந்து விட்டது. அப்படி, தனி குடித்தனம் நடத்து தம்பதியர்களின் பிள்ளைகள் தாத்தா, பாட்டி பாசத்திற்காக ஏங்கும் கதை தான் 'இப்படிக்கு பேராண்டி'.
முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக, குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறும்படம். அதனாலே, குழந்தைகளின் உலகிற்கு சென்று வாழ்ந்து திரைக்கதை அமைத்திருக்கிறார் என்று சொல்லலாம். வகுப்பில் மற்ற பிள்ளைகள் தாத்தா பாட்டி சொன்னதை கேட்பதாகட்டும், தாத்தா பாட்டி வேண்டும் என்று போராட்டம் நடத்துவது போல் கற்பனை செய்வதாகட்டும், பெற்றோர்களுக்கு தெரியாமல் அறையில் செய்யும் குறும்பு வேலையாகட்டும். எல்லாம் குழந்தைகளின் மனம்.
குழந்தைகளின் மீது பெற்றோர்கள் தினிக்கும் கனவுகளுக்கும் நல்ல அறிவுரை கூறியுள்ளார். குழந்தைகளுக்கான குறும்படம் என்பதால் கதையில் கொஞ்சம் நகைச்சுவை சேர்த்திருக்க வேண்டும். இதில் நகைச்சுவைக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
'இப்படிக்கு பேராண்டி' - பெற்றோர்கள் படிக்க வேண்டிய கடிதம்.
***
பூங்கா
'இப்படிக்கு பேராண்டி' நடித்த அதே சிறுவன், சிறுமி. பூங்காவில் விளையாட வேண்டும் என்ற கனவில் வாழும் சிறுவனுக்கு, பக்கத்து வீட்டில் வரும் அக்கா மூலம் அவன் வீட்டு அருகில் ‘பூங்கா’ வருகிறது. ஆனால், அதுவே அவன் தங்கி இருக்கும் வீட்டுக்கு ஏமனாகவும் மாறுகிறது.
குழந்தைகளுக்கான குறும்படம் என்று சொல்லி பெரியவர்களில் ஆதிக்கம் தான் தெரிகிறது. தனக்கு மனது கவலைப்படும் போது கோயிலுக்கு வந்து, கடவுள் முன் வேண்டி தரையில் எழுதுவதாகவும் கூறி அந்த கதாபாத்திரத்தின் முதிர்ச்சியை காட்டுகிறார். அதே சமயம் மனலில் பூங்கா வைத்து விளையாடும் போது மனதையும் காட்டியிருக்கிறார். இரண்டும் முரன்பாடாக உள்ளது.
ஏழை சிறுவன் 'பூங்கா' என்று சொல்லுவதில் பெரிதாக தெரியவில்லை. ஆனால், பணக்கார சிறுமி அதுவும் கான்வேன்ட்டில் படிப்பவள், 'பார்க்' என்று சொல்லாமல் 'பூங்கா' என்று சொல்லுவது செயற்கை தனம்.
தினமும் சிறுவனுக்கு படமும், சாக்லேட்டும் கொடுக்கும் அக்காவுக்கு, தான் ஆசையாக வளர்த்த நாய் கொடுத்து விட்டு செல்லும் காட்சி மனதை உறுக்க வைத்திருக்க வேண்டும். ஆனால், பெரிதாக அப்படி ஒரு பாதிப்பு ஏற்படுத்தவில்லை. சில வசனங்களுக்கு வேலை வைக்காமல் காட்சிகளிலே புரிய வைத்திருக்கிறார். குறிப்பாக, சிறுவன் வீட்டு விலை பேசும் போது சிறுவர்களின் சேஸ் விளையாட்டை காட்டி புரிய வைத்திருப்பதை சொல்லலாம்.
மேல் குறிப்பிட்டுள்ள இரண்டு குறும்படத்தை இயக்கியவர் தாண்டவக்கோன்.
குறும்படத்தை வாங்க விரும்புபவர்கள் கீழ் காணும் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.
தாண்டவக்கோன்
பூங்கா திரை தடம்,
6, திருவள்ளுவர் நகர்,
திருப்பூர் - 641 603
பேசி : 9360254206
1 comment:
ஆம். உறவுகள் ஒரு சுகமான அனுபவம் என்று நீல. பத்மனாபன் சொன்னது ஞாபகம் வருகிறது.
Post a Comment