வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, March 7, 2012

அந்த மூன்று பெண்கள் - 8

அறிமுக அத்தியாயம், அத்தியாயம் 1, அத்தியாயம் 2, அத்தியாயம் 3,அத்தியாயம் 4, அத்தியாயம் 5 அத்தியாயம் 6 அத்தியாயம் 7

பேராசிரியர் பாலசுந்தரம் அவர்களின் பேச்சு என்னை மிகவும் பாதித்தது. "கடவுள் இருக்கிறா ?" என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வளர தொடங்கியது. பெரியார், அண்ணாதுரை புத்தகங்களை தேடி தேடி படித்தேன். கடவுளுக்கு எதிராக அவர்கள் சொல்லும் வாதங்கள் அப்படியே என்னால் ஏற்க முடியாவிட்டாலும், அதில் இருக்கும் உண்மை புரிந்தது. மெல்ல மெல்ல நாத்திகத்தை நோக்கி செல்வதை என்னால் உணர முடிந்தது.

ராமா மாமாவுக்கு 'பெரியார்' என்றாலே பிடிக்காது. ஆனால், அண்ணாதுரையை பிடிக்கும். இருவரும் ஒரே விஷயத்தை தான் சொல்கிறார்கள். இதில் ஒருவர் பிடிக்க , இன்னொருவர் பிடிக்காமல் போனாது எப்படி என்று தான் புரியவில்லை. மாமாவுக்கு அண்ணாதுரையை பிடித்தாலும், கடவுளை தினமும் வணங்குபவர்.அவர் கொள்கையை பின் பற்றாவிட்டாலும், அவருடைய பேட்டியையும், படத்தையும் விரும்புவார். இதனால், அண்ணாதுரை புத்தகதை தைரியமாக என்னால் வீட்டுக்கு எடுத்து வந்து படிக்க முடிக்கந்தது. பெரியார் புத்தகத்தை வீட்டுக்கே எடுத்துவர மாட்டேன்.

நான் நாத்திகத்தை நோக்கி சென்றாலும், மாமாவுக்காக கடவுளை வணங்கி கொண்டு தான் இருந்தேன். 'கடவுள் இல்லை' என்று தைரியாமாக சொல்லும் நிலையில் நானில்லை. உண்மை சொல்வதென்றால், 'கடவுள் இருந்தால் என்ன ? இல்லை என்றால் என்ன ?' என் வேலை நான் தான் பார்க்கனும். வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது. கடவுள், கோயில் என்று நேரத்தை வீணாக்க கூடாது’ என்பதையும் முடிவு செய்தேன்.

முதலமைச்சர் அண்ணாதுரை அவர்கள் கொண்டு வந்த புது சட்டம் ஒவ்வொரு நாளிதழில்களும் பரபரப்பாக பிரசுரம் செய்திருந்தனர். அந்த சட்டத்தை பற்றி தெரிந்துக் கொள்ளவே எல்லா நாளிதழ்களும் விற்று தீர்ந்தது. சிதம்பர தீட்சதர்கள் கடுமையாக அந்த சட்டத்தை விமர்சித்தனர். அப்படி என்ன தான் சட்டம் கொண்டு வந்திருக்கிறார் என்று நானும் நாளிதழ் வாங்கி படித்தேன். அந்த சட்டத்தின் பெயர் 'சுயமரியாதை திருமண சட்டம்'.

திருமணமான பெண்கள் என்றாலே அவர்களுக்கு அடையாளம் தாலி தான். அது இல்லாமல் திருமணம் இதுவரை நடந்ததில்லை. அப்படியே தாலியில்லாமல் திருமணம் நடந்தாலும் அந்த திருமணத்துக்கு சட்டப்படி அங்கிகாரமில்லை. முதலமைச்சர் தாலி இல்லாமல் நடக்கும் திருமணத்துக்கு சட்டப்படி அங்கிகாரம் கொடுத்திருக்கிறார். தாலி திருமணத்துக்கு எவ்வளவு முக்கியம். ஏன் முதலமைச்சர் இப்படி ஒரு சட்டத்தை கொண்டு வந்தார். இந்த சட்டத்தை கொண்டு வந்து ஏன் பலரின் விரோதத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும்

நான் நாளிதழ் படிக்கும் போது மாமா என் அருகில் வந்து படிக்கும் செய்தியை பார்த்தார்.

" என்ன மருமகனே ! அண்ணா கொண்டு வந்த புது சட்டத்த பத்தி படிக்கிறீயா...?" என்று கேள்வி கேட்டு அருகில் அமர்ந்தார்.

"ஆமா ! எதுக்கு இந்த மாதிரி சட்டம். தாலி ஒரு பொண்ணுக்கு எவ்வளவு முக்கியம். அது இல்லாம திருமண நடத்தாலம்னு சொல்லுறார்." என்று அவரிடன் சொன்னேன்.

" மருமகனே ! ஒரு காலத்துல திருமணம் ஆன ஆம்பளைங்க கால்ல மெட்டி போடுவாங்க. இப்போ யாரும் போடுறது இல்ல. கல்யாணம் அன்னைக்கு மெட்டி போட்டுட்டு அப்புறம் கலட்டுறாங்க. அதே மாதிரி தாலி கொண்டு வரனும் நினைக்கிறாரு. இதுல என்ன தப்பு இருக்கு." என்றார்.

எனக்கு கல்லூரி மேல் மாடியில் இருந்து கீழே குதிப்பது போல் இருந்தது. எப்போதும் அண்ணாவின் கொள்கையை ஏற்காத மாமா முதல் முறை அவர் கொண்டு வந்த சட்டத்துக்கு ஆதரவாக பேசினார். வைத்த கண் மாறாமல் மாமாவையே பார்த்தேன்.

" தாலி இல்லாம கல்யாணம் நடந்தா, புருஷனுக்கு ஏதாச்சு ஆனா கூட இந்த சமுதாயத்துல எப்பவும் போல ஒரு பொண்ணால நடமாட முடியும். கல்யாணமாகி, புருஷன் செத்து தாலி இல்லாம நடந்து போனா பொண்ணுங்கள இந்த சமுதாயம் எவ்வளவு கஷ்டப்படுத்தும்னு எனக்கு தெரியும். உங்க அம்மா எவ்வளவு அவமானம் பட்டாங்கனு அவளுக்கு தெரியும்." என்று உருக்கமான குரலில் பேசினார்.

விதவையான அம்மா சில சமயம் நடக்கும் போது தெருவில் இருந்து ஒதுங்கிக் கொள்வார். உணவகம் வைத்த காலத்தில் காலையில் அந்த பக்கமே போகமாட்டார். மதியம் தான் செல்வார். காலையில் 'விதவை' முகத்தில் விழிக்க பலர் யோசிப்பார்கள் என்பதற்காக அம்மா இப்படி செய்திருக்கிறார் என்பதை இப்போது தான் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

" தாலி ஒண்ணு இல்லனு வச்சிக்கோ. சமுதாயத்துக்கு முன்னாடி விதவ பொண்ணும், கல்யாணமான பொண்ணும் ஒரே மாதிரி தான் தெரிவாங்க. அவங்களுக்கு ஒரு மரியாதை கிடைக்கும். இது தான் நா புரிஞ்சிக்கிட்டது." என்று அண்ணாவின் சுயமரியாதை சட்டத்தை விளக்கினார்.மாமாவின் விளக்கம் ‘பேராசிரியர் பாலசுந்திரம் வகுப்பு எடுக்கவில்லை என்ற குறையை திற்ந்தது. படிக்காத மாமாவே இவ்வளவு விளக்க கொடுக்கும் போது, முதலமைச்சர் அவர்கள் எவ்வளவோ யோசித்து தான் இந்த சட்டத்தை கொண்டு வந்திருப்பார். இந்த சட்டம் அமளுக்கு வந்தால் ‘அம்மா’ போன்ற விதவை பெண்கள் தைரியமாக சமுதாயத்தில் நடமாடலாம் என்று புரிந்துக் கொண்டேன்.

மெதராஸ் மகாணம் 'தமிழ் நாடு' மாற்றப்பட்டதாக இன்னொரு சட்டம். ஒவ்வொரு நாளும் அண்ணா அதிரடியான சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மனதால ஆசைப்பட்டேன். அதே போல் மாமாவின் ஹோட்டல் வியாபாரம் நன்றாக வளர தொடங்கியது.

கல்லூரியில் இறுதி ஆண்டு படிப்பை நானும், பரூக்கும் தீவிரமாக எங்கள் வீட்டில் படித்து கொண்டு இருந்தோம். அப்போது மாணிக்கம் மாமா வந்து பரூக்கை அவன் வீட்டுக்கு அழைத்து போக சொன்னார். அவன் என் வீட்டில் படிப்பது இந்த மாணிக்கம் மாமாவுக்கு என்ன வந்தது என்ற கோபப்பட்டேன். இப்போது என்ன செய்து என்னை குழப்ப போகிறார் என்று தெரியவில்லை. அவர் என்னை தனியாக அழைத்து விஷயத்தை சொன்னார். அதிர்ந்தே விட்டேன். இதை எப்படி பரூக்கிடம் சொல்ல போகிறேன் என்று புரியவில்லை.

மாமாவிடம் புல்லட்டை வாங்கி கொண்டு பரூக்கை அவன் வீட்டில் விட்டேன். அவன் வீடு வரும் வரை அவனிடம் விஷயம் சொல்லவில்லை. அவனுடைய வாப்பா பாட்ஷா பாய் இறந்திருந்தார். அவருடைய உறவினர்கள் எல்லாம் அவன் வீட்டு முன் நிறம்பி இருந்தனர்.

"வாப்பா... என்ன விட்டு போய்ட்டியே வாப்பா..." என்று கத்தி அழுதான்.அவன் அம்மா ஆயிஷா நிலை குலைந்து போனாள். பரிட்சை சமயத்தில் பரூக் வாப்பாவின் மரணத்தை எப்படி சமாளிக்க போகிறான் என்று புரியவில்லை.

தலையில் குல்லா அணிந்தவர்கள் இஸ்லாமிய மந்திரத்தை சொன்னப்படி பரூக்கின் வாப்பாவை தூக்கி சென்றனர். பரூக்கின் வாப்பாவின் தகனம் முடிந்து எல்லோரும் அவன் வீட்டுக்கு வந்தோம்.

ஒரு முறை பரூக்கிடம் அவன் தந்தை அவர்களுடன் இருப்பதை வைத்து "உன்னை பார்த்தா பொறாமையா இருக்கு" என்று சொல்லியிருக்கிறேன். நான் சொன்னதாலே என்னவோ இப்போது பரூக்கின் தந்தை அவனுடன் இல்லை. அவன் தந்தை மரணத்தை விட இன்னொரு பெரும் கஷ்டமான விஷயம் அவன் பரிட்சைக்கு பணம் கட்ட வேண்டும்.

பரூக்கின் வாப்பா எதோ வீட்டு வாடகையில் காலத்தை நடத்தி வந்தார். அவர் தகனத்துக்கான செலவு எல்லாம் கடன் வாங்கி தான் பரூக் செய்தான். அவர்களுக்கு உதவுவதற்கு உறவினர்கள் என்று சொல்லி கொள்ளும் படி யாருமில்லை. நண்பன் என்று என்னை தவிற பரூக்குக்கு யாரும் கிடையாது. என்னிடம் உதவி கேட்க ரொம்ப யோசித்தான். அவனுடைய வாப்பா பலரிடம் கடன் வாங்கியிருந்தாலும், அவன் இது வரை யாரிடமும் கடன் வாங்கியதில்லை.

அவன் என்னிடம் கடன் கேட்க மாட்டான் என்று தெரிந்து கொண்டேன். இந்த தேர்வு எழுதி முடிந்தால் கையில் பி.ஏ பட்டம் வாங்கி விடலாம். கௌரவம் பார்த்து அவன் என்னிடம் உதவி கேட்கவில்லை. ஆனால், இதை பார்த்து அமைதியாக இருந்தால் நான் உண்மையான நண்பனில்லை. மாமாவிடம் சொல்லி அவன் பரிட்சைக்கு பணம் வாங்கினேன். அந்த பணத்தை அவன் கையில் கொடுத்தால் வாங்க மறுப்பான் என்று நன்றாக தெரியும். அதனால், அந்த பணத்தை நேராக அவன் பெயரில் பரிட்சைக்கு பணம் கட்டி ரசிதை அவன் அம்மாவிடம் கொடுத்தேன்.

மாலை நேரம் பரூக் என் வீட்டுக்கு வந்தான். பரூக்கின் அம்மா ஆயிஷா நான் பரிட்சைக்கு பணம் கட்டியதை அவனிடம் சொல்லியிருக்கிறார் என்று புரிந்துக் கொண்டேன். அவன் வாயில் இருந்து 'நன்றி' என்ற வார்த்தை வரவில்லை. அந்த வார்த்தையால் என் நட்பை அந்நியப்படுத்தவில்லை. அவன் எதிர்பார்க்காத ஆளிடம் இருந்து எதிர்பார்க்காத உதவி கிடைத்திருக்கிறது.

அப்போது மாமா வந்தார். " வா பரூக் ! பரிட்சைக்கு பணம் கட்டுனியா..." என்றார்.

" ரொம்ப நன்றி மாமா... இந்த உதவிய என்னைக்கும் நா மறக்க மாட்டேன்".

"பரவாயில்ல... அப்பா இல்லாத குடும்பம் எப்படி கஷ்டப்படும்னு எனக்கும், சந்திருவுக்கு நல்லா தெரியும். நல்லப்படியா படிச்சு முன்னுக்கு வா..." என்று சொன்னார். இந்த பணத்தை எப்படியும் எனக்கு தருவதாக பரூக் சொன்னான். நான் எதுவும் சொல்லவில்லை. அந்த பணத்தை சம்பாதிக்க அவனுக்கு நல்ல வேலை கிடைத்தால் போதும் என்று நினைத்துக் கொண்டேன். அப்போது தான் அவனால் குடும்பத்தை காப்பாற்ற முடியும்.

எப்படியோ பெரும் பாடு பட்டு மூன்று வருட படிப்பை நானும், பரூக்கும் முடித்தோம். அடுத்து என்ன செய்யலாம் என்ற முடிவை பற்றி யோசிக்கவில்லை. தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறு என்று பல புத்தகங்கள் படித்த எங்கள் அறிவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.

இருவரும் மாமாவின் ஹோட்டல்லுக்கு சென்றோம். அந்த சமயத்தில் வானொலி ஒரு அதிர்ச்சியான செய்தி. நானும், பரூக்கும் உரைந்து போனாம். சாப்பிட வந்தவர்கள் பலர் ஸ்தம்பித்து நின்றனர்.

"ஐயோ போச்சே...போச்சே..." என்று தலையில் அடித்து கொண்டு மாமா அழுதார். என்னால் மாமாவுக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை. அவர் இப்படி அழுது நான் பார்த்ததில்லை.

முதலமைச்சர் ‘அண்ணாதுரை’ அவர்கள் அகால மரணம் அடைந்துவிட்டார் என்பது தான் அந்த செய்தி !!

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails