முதல் பாகம்
பாகம் - இரண்டு : அத்தியாயம் - 1
சட்டக் கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் போது யார் மீது தெரியாமல் இடித்தேனோ அவளே என் வகுப்பில் ஒருத்தியாக இருப்பாள் என்று நினைத்து பார்க்கவேயில்லை. ஒரு பக்கம் சாயலில் 'சரோஜா தேவி' போல் தெரிந்தாள். அவளை பார்த்ததும் நான் எம்.ஜி.ஆராக மாறிவிட்டேன். 'அன்பே வா' கனவு பாடல் 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' நாங்கள் இருவரும் சேர்ந்து பாட வேண்டும் போல் இருந்தது. முதல் பார்வை, முதல் சந்திப்பு, முதல் ஸ்பரிசம் என்று முதலாம் ஆண்டினேலே கனவில் மிதக்க தொடங்கிவிட்டேன். 'தமிழ்' படித்த எனக்கு கனவு வந்த கவிதைக்கு பஞ்சமாயிருக்க போகிறது.
“வஞ்சி நாண இடைக்கு, மடநடைக்கு
அஞ்சி அன்னம் ஒதுங்க, அடியன்ன
கஞ்சம் நீரில் ஒளிப்பக் கயலுகப்
பஞ்சி மெல்லடிப் பாவையும் ஆடினாள்”
சீதை நீராடும் போது அவளின் மெல்லிய இடையைக் கண்ட வஞ்சிக்கொடியானது வெட்கப்பட்டு ஒதுங்கிக்கொள்ள, நடையழகைப் பார்த்ததும் அன்னப்பறவைகள் பயந்து ஒதுங்கிக்கொள்ள, கால்களைப் பார்த்து வெட்கி தாமரை நீருக்குள் மறைந்து கொள்ள, கண்களைக் கண்ட மீன்கள் ஓட, பஞ்சை விட மென்மையான பாதங்களை உடைவது போல் இருக்கும் என்று “கம்பராமயணத்தில்” கம்பன் வர்ணிப்பார். இந்த பெண் நீருக்குள் இறங்க தேவையில்லை. நீராட நினைத்தாலே போதும். கம்பன் சொன்ன அத்தனை வர்ணனைகளும் சீதையை விட இவளுக்கு நன்றாக பொருந்தும்.
அவளை பார்த்து ஒரு கவிதை சொல்ல வேண்டும். அப்போது என் பின்னால் இருந்து ஒரு குரல்...
" மிஸ்டர்... ! க்லாஸ் ஸ்டார்ட் அயிடுச்சு. போய் உக்காருங்க...." என்று பேராசிரியர் கூறினார்.
அவளை பார்த்த சந்தோஷத்தில் சிலையாக நின்று விட்டேன். புது வகுப்பில் எங்கு எனக்கென்று ஒரு இடம் பார்த்து உக்கார வேண்டும். பள்ளியில் ஒரு வாரம் ஒரே இடத்தில் உக்கார்ந்து விட்டால் அது தான் நம் நிரந்தர இடம் என்று முத்திரை குத்திவிடுவார்கள். ஆனால், கல்லூரியில் அப்படியில்லை. நினைத்த மாத்திரத்தில் எந்த இடத்தில் வேண்டுமாலும் உட்காரலாம். ஆனால், பேராசிரியர் வந்த பிறகு ஏதாவது ஒரு இடத்தில் உக்கார நினைக்கும் போது இடம் தான் கிடைக்கவில்லை.
கண்ணாடி போட்ட ஒருவன் தன் அருகில் உக்காரும்படி சைகை செய்தான். இப்போதுக்கு உக்கார இடம் கிடைத்ததே பராவியில்லை என்று அந்த இடத்தில் சென்று அமர்ந்தேன்.
" ஹாய் ! ஐ எம் ஜோசப். யூவர் நேம்...." கண்ணாடி அணிந்தவன் தன்னை அறிமுகம் செய்துக் கொண்டான்.
" சந்திரு....." என்றேன்.
" ஃபெச்சுலர் டிகிரி என்ன படிச்சிங்க...." என்று ஜோசப் கே ட்க, பக்கத்தில் இருந்து அதட்டும் குரலில் "சைலன்ட்" என்று வந்தது. நாங்கள் இருவரும் பேசாமல் அமைதியாக இருந்தோம்.
பி.ஏ. தமிழ் படித்த எனக்கு இந்த சட்ட படிப்பு வகுப்பரை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. பி.ஏ படிப்பில் எல்லோரும் தமிழில் தான் பேசுவோம். பேராசிரியர் சுத்த தமிழில் தான் பேசுவார். அவர் பேசும் தமிழை பார்த்து தான், அதில் பாதியளவில் எங்கள் தமிழ் வளர்ந்தது. ஆனால், இங்கு ஆங்கிலம் கலந்த தமிழில் தான் பேசவேண்டும். முடிந்தால், முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசினால் நல்லது. காரணம், நீதி மன்றத்தில் வாதம் செய்வதாக இருந்தாலும், பத்திரமாக இருந்தாலும் பெரும்பாலும் ஆங்கில மொழிதான் தேவை. அதனாலே அங்கில மொழிக்கு முன்னுரிமை இருப்பதை உணர்ந்தேன்.
பேராசிரியர் வகுப்பு எடுத்துக் கொண்டு இருக்க ஜோசப் பெண் இருக்கையில் அமர்ந்து இருக்கும் பெண்களையே உற்று பார்த்தான். எனக்கு அடி வயிற்றில் என் தேவதையை பார்க்கிறானோ என்ற பொறாமை எழுந்தது. நல்ல வேலை, குறிப்பாக மஞ்சல் சேலை அணிந்த பெண்ணை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.
அந்த பெண்ணும் ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை அவனை திரும்பி பார்த்துக் கொண்டு இருந்தாள்.
"அடபாவி.... வந்த முதல் நாளே கண்களால் தூது விடுகிறானே" என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.
நமக்கு சிவப்பு தேவதை பிடிக்கும் போது, அவனுக்கு மிஞ்சல் நிற சேலை பெண் தேவதையாக தெரிந்திருக்கலாம். என் அடி மடியில் கை வைக்காதவரை சரி தான்.
வகுப்பு முடிந்ததும் என் தேவதையும், ஜோசப் பார்த்துக் கொண்டு இருந்த பெண்ணும், இன்னொருத்தியும் வெளியே சென்றார்கள். எனக்கும் அவர்கள் பின்னால் போக வேண்டும் போல் இருந்தது. முதல் நாளில் ஒரு பெண் பின்னால் செல்வதை யாராவது பார்த்தால் படிப்பு முடிக்கும் வரை என் பெயர் அவ்வளவு தான். வேறு வழியில்லாமல் ஜோசப்புடன் கல்லூரி சிற்றூண்டி விடுதிக்கு சென்றேன்.
" என்ன சாப்புடுற...." என்று ஜோசப் ஒருமையில் கேட்டான். காலையில் தான் சந்தித்தோம். அதற்குள் ஒருமையில் அழைக்கும் நண்பன் போல் பேசினான். அவன் ஒருமையில் பேசிய பிறகு நான் மட்டும் 'வாங்க', 'போங்க' என்று மரியாதையாக பேசினால் நன்றாக இருக்காது.
" ஒரு தோச சொல்லு " என்று ஒருமையில் பதிலளித்தேன்.
எனக்கு தோசையும், அவனுக்கு சாப்பாடும் சொன்னான். கொஞ்ச நேரத்தில் நாங்கள் சொன்னது வந்து விட்டது. இருவரும் சாப்பிட்டு கொண்டே எங்கள் குடும்பத்தை பற்றி பேசி கோண்டோம். அவன் தாத்தா வெள்ளையர் என்பதும், இந்திய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதை சொன்னான். நானும் என் குடும்பத்தை பற்றி அவனிடம் சொன்னேன்.
நாங்கள் இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போது மஞ்ச சேலை பெண் எங்கள் அருகில் வந்தாள்.
" என்ன ஜோசப்..! பார்த்தும் பார்க்காத மாதிரி இருக்க....?" என்றாள். இவர்கள் முன்பே அறிமுகமானவர்கள் என்பது அந்த பெண் பேசுவதிலே தெரிந்துக் கொண்டேன். அந்த பெண்ணோடு எனது தேவதையும் நின்று கொண்டு இருந்தாள்.
" அப்படியெல்லாம் இல்ல ஜாஸ்மின். பொண்ணுங்க நீங்க பேசிட்டு இருக்கீங்க. நான் எப்படி நடுவில் வந்து பேச முடியும் ?" என்று அவள் கேள்விக்கு எதிர் கேள்வி கேட்டான். குறும்பு புன்னகையோடு அவளும், அவளின் தோழிகளும் எங்களுடன் அமர்ந்தனர். நாங்கள் ஒருவர் முகம் ஒருவர் பார்த்து கொண்டு இருந்தோம்.
" ம்ம்... இப்படியே ஒருத்தர் முஞ்சி ஒருத்தர் பார்த்திட்டு இருந்தா போர் அடிக்கும். ஏதாவது பேசு.." என்று ஜாஸ்மின் பேச்சை தொடங்கினாள்.
நான் அவளை புன்முருவலோடு பார்த்தேன்.
" ஓ.கே. என் பேரு ஜோசப். ஜாஸ்மினோட அத்த பையன். படிப்பு முடிச்சதும் எங்க இரண்டு பெருக்கும் கல்யாணம்" என்று ஜாஸ்மின் தோழியர்களிடம் அறிமுகம் செய்துக் கொண்டான்.
எனக்கு வியப்பாக இருந்தது. கல்லூரிக்கு வந்து காதலை கண்டு பிடிப்பவர்களில் மத்தியில் காதலர்கள் கல்லூரியில் சேர்ந்து படிக்க வந்திருக்கிறார்கள். அதுவும் பெற்றோர் சம்மதத்துடன். இவர்கள் இருவரும் கொடுத்து வைத்தவர்கள் என்று நினைத்துக் கொண்டேன்.
அடுத்து என்னை பற்றி சொல்ல தோன்றியது. ஆனால், அதற்குள் ஜாஸ்மின் எதோ பேச ஆரம்பித்தாள்.
" என் பேரு ஜாஸ்மின். ஜோசபோட கஸின்" என்றாள்.
ஜோசப் மாதிரியே அவளும் இருக்கிறாள். அடுத்தவர்களுக்கு பேச வாய்ப்பு கொடுக்காமல் இவர்களே பேசுவதற்கு நான் ஏன் இங்கு உக்கார வேண்டும் என்று தோன்றியது. என் தேவதை அருகில் உட்கார சந்தர்ப்பம் கிடைத்தும் அவள் பெயர் தெரியாமல் எப்படி செல்வது. கொஞ்சம் இடைவேளை விட்டாலும் மீண்டும் ஜோசப் பேச தொடங்கிவிடுவான் என்பதால் அவரசரமாக நான் பேசினேன்.
" என் பேரு சந்திரசேகர். பி.ஏ தமிழ். சிதம்பரத்துல இருந்து வரேன். இங்க பிரண்ட் வீட்டுல இருந்து படிக்கிறேன்." என்று என் தேவதையை பார்த்து சொன்னேன். அப்போது தான், அடுத்து தன்னை பற்றி சொல்வாள் என்று அற்ப சந்தோஷம். என் எண்ணம் புரிந்து கொண்டு அவளும் பேச வாயெடுத்தாள்.
" என் பேரு ரம்யா ராமானுஜம். பி.ஏ ஹிஸ்ட்ரி. அப்பா, அம்மா ஸ்ரீ ரங்கத்துல இருக்கா. இங்க ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறேன்." என்று என்னை பார்த்து சொன்னாள். அவள் பெயரும், தோரணையும் ஐய்யர் ஆத்து பெண் என்ற சொல்லவே வேண்டியதில்லை. அவள் 'ஐயர்' பெண் என்று தெரிந்து மனம் அவளை ஏன் பார்க்க தோன்றியது என்று தெரியவில்லை.
நான் அசைவம். அதுவும் இப்போது 'பெரியார்', 'அண்ணா' என்று அவர் புத்தகங்களை விரும்பி படிப்பவன். எனக்கு 'பிராமின பெண்ணுடன் காதல் வேண்டுமா என்று தோன்றியது. ஆனால், காதல் என் எண்ணத்தை வென்றது.
"என் பேரு லஷ்மி. பி.ஏ இங்க்லீஷ். எங்க ஆத்து மைலாப்பூர்ல இருக்கு….." என்றாள்.
எனக்கு ராம்யாவிடம் பேச வேண்டும் போல் இருந்தது. நான் அவளிடன் ஒன்று கேட்டு அதற்கு அவள் என்னை பார்த்து பதில் சொல்ல வேண்டும். அதே சமயம், பள்ளிக்கூடத்திலிருந்து பாஸ் ஆகி வந்து, புதிதாக கல்லூரியில் சேர்ந்த ஒரு பெண்ணிடம் பேசி, அற்ப சுகதுக்காக அலையும் பைத்தியக்கார ஆண் என்று என்னை நினைக்ககூடாது. என்ன கேட்கலாம், எதை பற்றி கேட்கலாம்.... யோசி சந்திரு...யோசி....!
" ரம்யா உங்களுக்கு என்ன பிடிக்கும் " மனதில் தோன்றியதை கேட்டுவிட்டேன். ஜோசப் என்னை ஒரு மாதிரியாக பார்த்தான். மூன்று பெண்கள் இருக்க குறிப்பாக அவளை பார்த்து கேட்டதும் அவனுக்கு என் மீது சந்தேகம் ஏற்படுத்தியிருக்கும்.
" எனக்கு புத்தகம் படிக்கிறது ரொம்ப புடிக்கும். குறிப்பாக கல்கி கதைகள், சாண்டில்யன் நாவல்கள் ரொம்ப விரும்பி படிப்பேன்." என்றாள்.
எனக்கும் புத்தகங்கள் என்றால் பிடிக்கும். ஆனால், கல்கி, சாண்டில்யன் மீது அவ்வளவோ ஈடுபாடில்லை. புத்தகம் விரும்பிகள் என்ற புள்ளியில் இணைந்த எங்கள் சிந்தனை ஒருவரின் அபிமானி என்பதில் வேவ்வேறாக தெரிந்தோம்.
ரம்யா சொன்னவுடன் ஜோசப், ஜாஸ்மின், லக்ஷ்மி என்று அவரவர் தங்கள் விருப்பத்தை சொன்னார்கள். இப்படியே பேசிக் கொண்டதில் அவரவர் வீட்டுக்கு செல்லும் நேரம் நெருங்கி விட்டது. நாங்கள் அனைவரும் விடை பெற்றுக் கொண்டோம். இறுதிவரை யாரும் என் விருப்பத்தை பற்றி கேட்கவில்லை.
1 comment:
முதலீடு இல்லாமல் நம்மால் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பு !!!
Visit Here For More Details : http://puthuputhuthagavalgal.blogspot.in/2012/03/profit-sharing.html
Post a Comment