அறிமுக அத்தியாயம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
பௌர்ணமி முழு நிலவு வானதில் பிரகாசமாக ஒலித்துக் கொண்டு இருந்தது.
இரவு எஸ்.எஸ்.எல்.சி பாடம் படித்து முடித்து விட்டு நன்றாக தூங்கி கொண்டு இருந்தேன். உணவகத்தில் வேலை முடித்து விட்டு அம்மா நடந்தே வீட்டுக்கு வந்து விட்டார். தனக்கு உணவகத்தில் கொஞ்சம் வேலை இருப்பதால் முடித்து பிறகு தன் நண்பன் மாணிக்கத்தை பார்த்து விட்டு வருவதாக மாமா சொன்னார். நடு ஜாமத்தை நெருங்கியும் மாமா வீட்டுக்கு வரவில்லை.
அம்மா பயந்து போய் என்னை எழுப்பினார்.
"டேய் சந்திரு...! மாமா இவ்வளவு நேரம்மாகியும் வீட்டுக்கு வரல. போய் என்னனு பாருடா...." என்று பயம் கலந்த குரலில் சொன்னார்.
அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. வேறு மாதிரி இடத்துக்கு சென்று இருப்பார் என்று நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை. அதே சமயம் இவ்வளவு நேரம் வீட்டு வராமல் இருந்ததுமில்லை. ஒரு வேலை நான் வளர்ந்து விட்டேன் என்ற தைரியத்தில் வீட்டுக்கு காலதாமதமாக வருகிறாரோ என்று நினைக்க தோன்றியது.
"என்னடா....யோசிக்கிற...! போய் பாருடா..." என்று அதட்டி அம்மா கூறினாள்.
தூக்கக்கலக்கத்தில் சட்டையை மாட்டிக் கொண்டு இருந்தேன். சைக்கிளை நான் எடுத்து வந்து விட்டதால் நடந்து வருவதற்கு இவ்வளவு நேரம் ஆகியிருக்குமோ என்று யோசித்தேன். நடந்தே வந்திருந்தாலும் நடு ஜாமத்துக்கு முன் வந்திருக்கலாம். எனக்கு எதோ நடந்திருக்கும் என்று தோன்றியது.
திடீர் என்று கதவு "பட...பட...." தட்டும் சத்தம் கேட்டது. மாமா இவ்வளவு வேகமாக கதவு தட்டமாட்டார். அம்மாவுக்கு மேலும் பயம் அதிகமானது. பேய்யைப் பார்த்தது போல் அரண்டு போய் இருந்தார்.
" டேய் சந்திரு... கதவ திறக்காத... திருடனா இருக்க போறான்..." என்ற நடுங்கிய குரலில் அம்மா கூறினாள்.
" எம்மா நீ ஒண்ணு...! திருடன் கதவ தட்டி திருட வருவானா... சும்மா இரு...!!" என்று பேசியப்படி கதவை திறந்தேன். மாமாவின் நண்பர் மாணிக்கம் நின்றுக் கொண்டு இருந்தார். முகம் முழுக்க வேர்வை வழிய நின்று இருந்தார். மாணிக்கம் மாமாவும், ராமா மாமாவும் ரொம்ப நெருக்கமானவர்கள். மாமாவுக்கு உணவகம் வைப்பதற்கு அவர் தான் உதவி செய்தார்.
அவரை நான் மாணிக்கம் மாமா என்று அழைத்தாலும் 'புதிர் மாமா' என்று தான் என் மனதில் அழைப்பேன். எதையும் தெளிவாக சொல்ல மாட்டார். அவர் பேசினால் அதில் இருந்து கேள்வி கேட்காமல் இருக்காமல் இருக்க முடியாது. அவர் வந்து சென்றால், பல புதிர் கேள்விகள் நம் மனதில் தோன்றும். எதற்காக இந்த நேரத்தில் வந்தார் என்று புரியாமல் அம்மாவை அழைத்தேன்.
" அம்மா..! மாணிக்கம் மாமா வந்திருக்காரு. உள்ள வாங்க.....! அவரு எங்க...? உங்கள பார்க்க தானே வந்தாரு...."
எதுவும் பேசாமல் மூச்சு வாங்கி கொண்டு இருந்தார். அம்மா மெதுவாக நடந்து என் பக்கத்தில் வந்து நின்றார்.
" என்ன அண்ணே....! என்ன ஆச்சு....?" என்றார் அம்மா.
" உங்க அண்ணன... போலீஸ் புடிச்சிட்டு போச்சு....!" என்றார்.
எங்களுக்கு தூக்கி வாரிப்போட்டது. மாமா எந்த வம்பு தும்புக்கு போகாதவர். கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் யாராவது அதட்டி பேசினாலும், மிகவும் அமைதியாக பேச கூடியவர். சண்டை நடக்கும் இடத்தை பார்த்தால் ஒதுங்கி செல்பவர். அவரை எதற்காக கைது செய்ய வேண்டும். நான் நினைத்தது போல் அந்த மாதிரி இடத்துக்கு போய் இருப்பாறோ என்று தோன்றியது. நான் நினைத்து முடிப்பதற்குள் மாணிக்கம் மாமாவே பதில் கூறினார்.
" மொழி போராட்டத்துல ஈடுப்பட்டதா சொல்லி புடிச்சிருக்காங்க...." என்றார்.
எங்களால் நம்பவே முடியவில்லை. நாளிதழில் அரசியல் படிப்பாரே தவிர அரசியலில் ஈடுப்படுபவரில்லை. அரசியலை பற்றி பேசுவாரே தவிர, போராட்டங்களில் கலந்துக் கொள்பவரில்லை. அரசியலில் ஈடுப்படும் நண்பர்களும் இல்லை.
அம்மாவும், நானும் அவசர அவசர நடு ஜாமத்தில் காவல் நிலையத்திற்கு சென்றோம். அப்பா இறந்த போது அவர் உடலை ஒப்படைக்கும் போது ஒரு காவல் அதிகாரி அம்மாவிடம் கையெழுத்து வாங்கினார். அதன் பிறகு இப்போது தான் மீண்டும் காவல் அதிகாரியை அம்மா சந்திக்கிறார். மாணிக்கம் மாமாவும் எங்களும் துணைக்கு வந்திருந்தார்.
காவல் நிலையத்தில் மொழி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்திருந்தார்கள். அம்மா அருவருப்பாக கண்ணை முடியப்படி நடந்தார்.
மாணிக்கம் மாமா அங்கு இருந்த போலீஸ் அதிகாரியிடம்...."ஸார்...." என்றார்.
முறைத்தவாரு மாணிக்கத்தை பார்த்தார். மொழி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை அடித்த வெறியில் இருந்தார். எங்களுடன் அம்மா வந்திருப்பதை கவனித்த அந்த அதிகாரி " கொஞ்சம் இருங்க... " என்றார்.
தன் சகாக்களிடம் கைது செய்யப்பட்டவர்களை செல்லில் அடைக்க சொன்னார். அவரிடம் அடிப்படு, செல்லுக்கு அழைத்து சென்றவர்களில் ராமா மாமா இல்லை. நான் அவர்கள் அழைத்து சென்ற போராளிகளையே பார்த்துக் கொண்டு இருந்தேன்.
அந்த அதிகாரி பார்ப்பதற்கு கறுப்பாக இருந்தார். மொழி போராட்டக்காரர்களை அடித்த வெறியில் இருந்து மீளவில்லை என்று அவர் கண்ணில் தெரிந்தது. மூக்கால் காக்கி பேன்ட் போட்டு கொண்டு கோபமான விழிகளுடன் எங்களிடம் பேச வந்தார்.
" என்ன விஷயம் சொல்லுங்க...." என்று கட்டை குரலில் அதிகாரி பேசினார்.
" எங்க அண்ணன... மொழி போராட்டத்துல கைது செஞ்சதா சொன்னாங்க. அவர கூப்பிட்டு போலாம்னு..." என்று அம்மா சொல்லி முடிப்பதற்குள் அந்த அதிகாரி " இது என்ன உங்க சொந்தக்கார வீடு நினைச்சியா.." என்று அதட்டியப்படி பேசினார்.
" எங்க அண்ணன அந்த மாதிரி போராட்டத்துக்கு போர ஆளு இல்லைங்க.... நீங்க வேணும் அவர கூப்பிட்டு விசாரிங்க..." என்றார்.
ஒரு பெண் தான் என்ன செய்ய வேண்டும் சொல்வதை நினைத்து அவருக்கு கோபம் அதிகரித்தது. ஆனால், அம்மாவின் விதவை கோலம், அரும்பு மீசை நின்ற என்னையும் ஒரு முறை உற்று பார்த்தார். எங்கள் வீட்டு பெரியவர் என் மாமாவாக தான் இருக்க வேண்டும் என்று சொல்லாமலே புரிந்துக் கொண்டார்.
" பேரு என்ன....?" என்று கேட்டார்.
"ரகுராமன்.....!" என்றாள்.
ஒரு காவல் அதிகாரியிடம் சொல்லி எங்க மாமாவை அழைத்து வர சொன்னார். தலையில் இரத்த காயமும், காலில் அடிப்பட்டு நடக்க முடியாமல் நொண்டி நொண்டி நடந்து வந்தார்.
" யோவ்..! வீட்டுல நீ ஒருத்தன் தான் ஆம்பலையா... எதுக்கு இந்த மாதிரி போராட்டத்துல கலந்துக்கர....?" என்று அந்த அதிகாரி கேட்டார்.
" நான் போராட்டத்துல கலந்துக்கலைங்க. அவங்க பத்து பேருக்கு சாப்பாடு சொல்லியிருந்தாங்க. அத கொடுக்க போகும் போது நானும் போராட்ட ஆளு நினைச்சு கைது பண்ணிட்டாங்க...."
" என்னது போராட்டத்துல கலந்துக்கலையா..." என்று வியந்தார்.
தன் அதிகாரிகளை அழைத்து பேசினார். மாமாவை கைது செய்யும் போது அவர் கையில் சாப்பாடு இருந்தை கூறினர். அவ்வளவு பெரும் போராட்டத்திற்கு மத்தியில் பொது மக்கள், போராட்டக்காரர்கள் என்று தனியாக எப்படி பார்ப்பது. எங்கோ தவறு நடந்துவிட்டது.
"எங்க கடை வச்சிருக்க " என்று கம்பீர குரலில் அந்த போலீஸ் அதிகாரி கேட்டார். தவறு செய்து விட்டோம் என்ற எந்த குற்றவுணர்வும் அந்த குரலில் தெரியவில்லை.
" நா பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல தான் கட வச்சிருக்கேன் " என்று பேசமுடியாமல் மாமா பேசினார்.
" சரி...! எங்கோ தப்பு நடந்திருக்கு. இதுல கையெழுத்து போட்டுட்டு போ " என்றார். இது போல் நடக்கும் போராட்ட இடங்களில் பார்த்தால் மீண்டும் கைது செய்வதாக மாமாவை அவர் எச்சரித்தார்.
அவர்கள் அடித்த அடியால் மாமாவால் நடக்கமுடியவில்லை. இந்த காயங்கள் சரியாகி மாமா இயல்பாக மாறுவதற்கு மூன்று மாதங்கள் மேல் ஆகும். மாமாவை மாணிக்கம் மாமா சைக்கிலில் வைத்து மிதித்து வந்தார். நான் அம்மாவை அழைத்து சைக்கிலில் வந்தேன்.
வீட்டுக்கு வந்தவுடன் அம்மா மாமாவுக்கு வெண்ணீர் வைத்து ஒத்தடம் கொடுத்தார். மாமா வலியில் கத்தினார். அவரால் வலியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. மாணிக்கம் மாமா காலையில் வந்து பார்ப்பதாக சொல்லிவிட்டு சென்று விட்டார்.
மூன்று மாதம் கடைக்கு விடுமுறை விட்டால் வாடிக்கையாளர்கள் எல்லாம் வேறு இடம் பார்க்க சென்று விடுவார்கள் என்ற பயம் மாமாவுக்கு இருந்தது. அம்மாவால் தனியாக அந்த உணவகத்தை கவனிக்க முடியாது. நான் தான் அம்மாவுக்கு துணையாக இருக்க வேண்டும். பள்ளி, உணவகம் என்று இரண்டும் மாற்றி மாற்றி கவனிக்க வேண்டும் வேறு யாருமில்லை.
" கவலப்படாத மாமா... நான் அம்மாவுக்கு துணையா எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்..." என்றேன்.
" டேய் மருமகனே..! எப்படி என் மனசுல நினைச்சத அப்படியே சொல்லுற...." வாயை மெதுவாக திறந்தப்படி பேசினார்.
" உங்கள பத்தி எனக்கு தெரியாதா. கொஞ்சம் நாள் தானே. நானும், அம்மாவும் பார்த்துக்குறோம். நீங்க நல்ல ஓய்வு எடுத்துக்கொங்க. " என்று சொல்லி மீண்டும் எதோ பேச வாயெடுத்தேன்.
மாமா என்னை பார்த்தப்படி படுத்திருந்தார்.
"ஒரு விஷயம். போலீஸ் உங்கள் புடிச்சதும் சொன்னவுடனே உங்க மேல எனக்கு ஒரு சந்தேகம் இருந்திச்சு....." என்றேன்.
"என்ன...??". புரியாமல் என்னை பார்த்தார்.
" நீங்க அந்த மாதிரி இடத்து போய் தான் உங்கள போலீஸ் புடிச்சிடுச்சோ நினைச்சேன். நல்ல வேலை அப்படி எதுவுமில்ல..."
"அடி... சின்ன பையன் மாதிரியா பேசுற...." என்று அந்த வலியிலும் சிரித்தப்படி என்னை செல்லமாக அடிக்க வந்தார்.
" எனக்கும் பதினஞ்சு வயசு ஆகுது. சின்ன பையன் இல்ல மாமா..." என்று சொல்லிவிட்டு தூங்க சென்றேன்.
காலம் எவ்வளவு வேகமாக செல்கிறது. சிறுவயதில் என்னை வைத்து சைக்கிலில் சென்றவர், இன்று இன்று அவருடன் சரிக்கு சமமாக பேசுகிறேன். நான் சின்ன பையன் இல்லை. எனக்கும் நல்லது, கெட்டது தெரிய ஆரம்பித்திருக்கிறது என்று மாமா புரிந்துக் கொண்டார். என் மேல் இருந்த நம்பிக்கையில் நிம்மதியாக கண் மூடி தூங்கினார்.
இவ்வளவு பாசமான இருக்கும் மனிதரிடம் நான் சண்டை போடும் சந்தர்ப்பம் வர போகிறது என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.
No comments:
Post a Comment