வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, February 27, 2012

அந்த மூன்று பெண்கள் - 6

அறிமுக அத்தியாயம், அத்தியாயம் 1, அத்தியாயம் 2, அத்தியாயம் 3,அத்தியாயம் 4, அத்தியாயம் 5

அப்படி இப்படி என்று மூன்று மாதங்கள் கல்லூரி வாழ்க்கை ஓடிவிட்டது.

கல்லூரி முடித்து விட்டு வீட்டுக்கு போகாமல் உணவகத்திற்கு சென்றேன். அம்மா கல்லா பெட்டியில் அமர்ந்திருந்தாள்.

"அம்மா...! மாமா எங்கே...?" என்றேன்.

" உள்ள சமையல் அறையில மாணிக்கம் மாமா கிட்ட பேசிக்கிட்டு இருக்காரு..."

என் சைக்கிளை நிறுத்தி விட்டு சமையல் அறைக்கு சென்றேன். அங்கு மாணிக்கம் மாமா ராமா மாமாவும்விடம் எதோ சொல்லி கொண்டு இருந்தார்.

" இங்க பாரு... நல்ல இடம். பாரு சீக்கிரம் முடிச்சிடு. புரியுதா..." என்று மாணிக்கம் மாமா சொல்ல ராமா மாமா தலையை தலையை ஆட்டினார்.

எனக்கு மனதில் பயம் வந்தது. இப்போது தான் கல்லூரியில் சேர்த்தார்கள் அதற்குள் எனக்கு திருமண பேச்சா...!! ஐயோ மாமாவை எதிர்த்து என்னால் ஒண்ணும் செய்ய முடியாது. மேல் படிப்பு படிப்பு படிக்க முடியாது என்ற சொன்னதற்கு கண் கலங்கி நின்றார். படிக்கும் எனக்கு திருமணம் வேண்டாம் என்றால், " நாங்க எல்லாம் பத்து, பதினைஞ்சு வயசுல தான் கல்யாணம் பண்ணிகிட்டோம்னு" அம்மா சொல்லுவாள். மாணிக்கம் மாமா கூடவே இருக்கிறார். மாமாவை ஊக்கப்படுத்து பேசவைப்பார். யாராவது எனக்கு சாதகமாக ஒருவர் பேசினால் தானே என்னால் எனக்கு நடக்க போகும் திருமணத்தை நிருத்த முடியும்.

என்ன செய்வது..? எப்படி எனக்கு நடக்க இருக்கும் திருமணத்தை நிறுத்துவது ? என்று மனதில் சிந்தித்தப்படி சமையல் அறையை விட்டு வெளியே வந்தேன். நான் வந்து , சென்றதை மாணிக்கம் மாமாவும், ராமா மாமாவும் கவனிக்கவில்லை.

மாணிக்கம் மாமா வந்தாலே இப்படி தான். எதாவது என்னை யோசிக்க வைத்து விடுவார். ஆயிரம் கேள்விகளை மனதில் விதைத்து விட்டு சென்றுவிட்டார். நான் தான் சிந்தித்துக் கொண்டு குழம்புகிறேன்.

" என்னடா மாமாவ பார்த்தியா...?"

" இல்ல. மாணிக்கம் மாமா கிட்ட முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்காரு..." என்றேன்.

" எத பத்தி..?" என்று என்னிடமே அம்மா கேள்வி கேட்டாள்.

அம்மாவுக்கு தெரியாமல் மாமா எனக்கு சம்மந்தம் பார்க்கிறாரா...? நான் சிறுவன் என்று என்னிடம் கேட்காமல் இருக்கலாம். என் வாழ்க்கையை பற்றி அம்மாவிடம் பேசாமல் மாணிக்கம் மாமா நேராக ராமா மாமாவிடம் பேசிவிட்டாரா என்ன...? மாமா சம்மதித்து விட்டால் அம்மா சம்மதித்து விடுவார் என்று மாணிக்கம் மாமா நினைத்து விட்டாரோ என்னவோ...!!

எனக்கு என்னானது..? எனக்குள்ளே பல கேள்விகள் கேட்டு கொண்டு இருக்கிறேன். ஒரு கேள்வி கூட மாமாவிடம் கேட்க தைரியமில்லை.

ராமா மாமாவிடம் பேசிவிட்டு மாணிக்கம் மாமா வெளியே வந்தார். என்னை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து விட்டு, அம்மாவிடம் "வரேன் தங்கச்சி..!" என்று சொல்லி சென்றார்.

எனக்கு அவர் கோபமாக இருந்தது. இன்று இரவு மாமா என்னிடம் என்ன சொல்ல போகிறார், நான் எப்படி சமாளிக்க போகிறேன் என்று தெரியவில்லை.

மாணிக்கம் மாமா சைக்கிள் எடுக்கும் போது திரும்பி ராமா மாமாவிடம் " ராமா ! நான் சொன்னத நல்ல யோசிச்சு பாரு. நல்ல இடம் விட்டுடாதே ! நாளைக்கு பாக்கலாம் " என்று சொல்லி சென்றுவிட்டார்.

" என்ன அண்ணே ! என்ன விஷயமா அவரு வந்திட்டு போறாரு..." என்று மாமாவிடம் கேட்டாள்.

" எல்லாம் நல்ல விஷயம் தான். வீட்டுக்கு போய் பேசலாம் " என்று சிரித்தப்படி சொல்லிவிட்டு சமையல் அறைக்குள் நுழைந்தார்.

அம்மாவுக்கு வயதாகிவிட்டது. அவர்கள் பேசுவதை வைத்து என் திருமணத்தை பற்றி பேசுகிறார்கள் என்று கூட யூகிக்க முடியவில்லை. எனக்கு வீட்டுக்கு போகவே பிடிக்கவில்லை. எனக்கு திருமணம் நடக்க கூடாது. அதே சமயம் மாமாவை எதிர்த்து பேசவும் கூடாது. இந்த இரண்டில் ஒன்று தான் சாத்தியம்.

நான் வீட்டுக்கு போகாமல் உணவகத்திலேயே இருந்தேன். இரவு வேலை. உணவகம் முட போகும் நேரம்.

" சந்திரு ! நீ அம்மாவ கூட்டிட்டு வீட்டுக்கு போ. நான் எல்லாத்தையும் பூட்டிட்டு வரேன் " என்றார்.

நான் பதில் சொல்வதற்கு முன்பே அம்மா கல்லா பெட்டியில் இருந்து எழுந்து உணவகம் சாவியை மாமாவிடம் கொடுத்தார்.

அம்மா சைக்கிள் எடுக்க சொல்வது போல் சைகை காட்ட, நான் சைக்கிள் எடுத்துக் கொண்டு வீட்டு வந்து விட்டேன். எப்போதும் கால தாமதமாக வரும் மாமா இன்று பார்த்து கொஞ்சம் சீக்கிரமாக வந்து விட்டார். சிரித்த முகத்தோடு வீட்டுக்குள் நுழைந்தார்.

" இந்திரா ! உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசனும்.." என்றார்.

நான் அப்படியே மெதுவாக படுக்கை அறைக்குள் சென்றேன். உடனே, மாமா " என்னடா உள்ள போற. இன்னும் சின்ன பையனா நீ. உனக்கும் குடும்ப பொருப்பு வரனும்" என்றார்.

சந்தேகமேயில்லை. என் திருமணத்தை பற்றி தான் பேச போகிறார். நான் எதுவும் தவறாக பேசாமல் இருக்கனும்.

" சாய்ந்திரம் மாணிக்கம் வந்தான்ல... ஒரு பழைய ஹோட்டல் விலைக்கு வருதான். முப்பதாயிரம் சொன்னான். வாங்குறியா கேட்டான். நான் உன்ன கேட்டு சொல்லுறதா சொல்லிட்டேன். என்னம்மா சொல்லுற" என்றார்.

என்னது ஹோட்டலா...? சாய்ந்திரம் நீங்க ஹோட்டல் வாங்குற பத்தியா பேசிட்டு இருந்தீங்க. அப்பா கடவுளே ! நான் இவ்வளவு நேரம் என்னனமோ யோசித்து என் நேரத்த வீணாக்கிட்டேனே !

" அண்ணே ! அவ்வளவு பணம் நமகிட்ட இருக்கா...?" என்றார்.

" பத்து வருஷம் மேல இந்த தொழில் பண்ணுறோம். அதுல வந்த லாபம் கொஞ்சம் சேர்த்து வச்சு பணம் இருபதாயிரம் இருக்கும்" என்றார்.

மாமா கிட்ட இவ்வளவு பணம் இருந்திருக்கா. தெரிந்திருந்தால் மோட்டார் கார் வாங்க சொல்லியிருப்பேனே...!

"வீட்டு செலவுக்கு நீங்க கொடுத்த பணம் கொஞ்சம் சேர்த்து வச்சு, இரண்டாயிரம் இருக்கும்" என்றாள்.

இது வரை மாமா செலவுக்கு கொடுத்த பணத்தை எதுவும் நான் சேர்த்து வைக்கவில்லை. என்னால் நம்பிக்கையான வார்த்தைகள் மட்டுமே சொல்ல முடிந்தன.

" பரவாயில்ல இந்திரா ! மீதி எட்டாயிரம் கடன் வாங்கிக்கலாம். மாணிக்கம் கடன் வாங்கி தரதா சொன்னான். " என்றார்.

மாமா சொல்லி முடித்ததும் அவர் முகத்தில் சந்தோஷத்தை அளவிட முடியாது. நான் தான் எனக்கு திருமணம் பேசுகிறார்கள் என்று நினைத்து புலம்பி கொண்டு, இப்போது அசடு வழிய நின்றுக் கொண்டு இருந்தேன்.

" என்னடா ஒரு மாதிரிய நிக்குற..." என்று என்னை பார்த்து கேட்டார்.

" நான் என்ன நினைத்தேன் என்று சொன்னால், நானே வம்பில் சென்று மாட்டி கொள்வது போல் இருக்கும்" என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன்.

"ஒண்ணுமில்ல மாமா. வகுப்புல சொன்ன பாடத்த பத்தி நினைச்சிட்டு இருக்கேன்" என்று சொல்லி சமாளித்தேன்.

" ஹோட்டல் வாங்குற விஷயமா நான் அங்க இங்க அலைய வேண்டியது இருக்கு. சாய்ந்திரமான வியாபாரத்த கவனிச்சுக்க " என்று சொல்லிவிட்டு அவர் படுக்க சென்று விட்டார்.

நல்ல வேலை நான் நினைத்தது போல் எந்த பிரச்சனையும் நடக்கவில்லை. நானும் நிம்மதியாக படுக்க சென்றேன். எனக்குள் என்னையும் அறியாமல் கல்யாண ஆசை வந்துவிட்டதோ ? அதனால் தான் இப்படி எல்லாம் சிந்திக்கிறேனா ?

இரண்டு மாமாவும் ஹோட்டலை வாங்க அங்கும் இங்கும் அழைந்தார். ஆனால், அவர்களுக்கு சொன்ன இடத்தில் பணம் கிடைக்கவில்லை. அப்போது தான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது.

மாமாவிடம் சொன்னேன். " ஏன் மாமா ? நாம தான் ஹோட்டல் வாங்க போறோமே. பேசாம இப்ப இருக்குற கடைய வித்தா அதுல கொஞ்சம் பணம் வரும்ல.." என்றேன்.

இந்த யோசனை மாமாவுக்கு முன்பே வந்திருக்கிறது. முதல் முதல் தொடங்கிய தொழில். லாபத்தில் ஓடுவதை எதற்கு விக்க வேண்டும் என்று நினைத்தார். கேட்ட இடத்தில் பணம் கிடைக்காததால், வேறு வழியில்லாமல் உணவகத்தை வித்து ஹோட்டலை வாங்கினார்.

லாபத்தில் ஓடிய உணவகம் என்பதால் நல்ல விலைக்கு போனது. வந்த பணத்திலும், கையில் இருந்த பணத்திலும் ஹோட்டல் வாங்கிவிட்டோம். கையில் இருந்த கொஞ்ச பணத்தையும் வைத்து ஹோட்டலை புதுமை படுத்தினோம்.

ஹோட்டல் வேலை எல்லாம் நல்லப்படியாக முடிந்தது. என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்க வேண்டியதாக இருந்தது. 'ராமா உணவகம்' என்று நடத்தியதால் 'ஹோட்டல் ராமா ' என்று வைப்பது தான் சரியாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், மாமா இதற்கு சம்மதிக்கவில்லை.

" நிறைய செலவு பண்ணியிருக்கோம். எல்லாரையும் கவர மாதிரி பேரு வை" என்றார்.

அவர் சொன்னவுடம் என் மனதில் ஒரு தோன்றியது. கண்டிப்பா இந்த பெயரை சொன்னால் மாமா மறுக்க மாட்டார். அவரால் மறுக்கவும் முடியாது.

" இன்னொரு பேரு இருக்கு சொல்லவா..."

" சொல்லு..."

" ஹோட்டல் அண்ணா..!" என்றேன்.

மாமா முகத்தில் எந்த யோசனையுமில்லை. அந்த பேர் தான் மதராஸ் மாநிலத்தையே ஆட்டி வைத்துக் கொண்டு இருக்கிறது. என்னை கட்டியணாஇத்து 'ஹோட்டல் அண்ணா' என்று பெயர் பலகைய தயார் செய்ய சொன்னார்.

புது ஹோட்டல் பெயர் பலகைக்கு பூ போட்டு அலங்காரம் செய்திருந்தோம். சாப்பிடும் அறையில் வண்ண வண்ண துணிகளை தொங்க விட்டுயிருந்தோம். 'வறுமை' என்ற வார்த்தை எங்கள் குடும்பத்தில் இருந்து மறைய தொடங்கியது. கொஞ்ச நாளில் மாமா புல்லட் ஒன்றை வாங்கினார். நானும் ஓட்டி பார்த்தேன். எனக்கு பிடித்திருந்தது.

மாமாவை பார்த்தால் எனக்கு பெருமையாக இருந்தது. எங்களை காப்பாற்ற ஒரு உணவகம் தொடங்கினார். இப்போது ஒரு ஹோட்டலுக்கே உரிமையாளராகிவிட்டார். இன்று சிதம்பரத்தில் சொல்லி கொள்ளும் அளவில் 'ஹோட்டல் அண்ணா' இருக்கிறது.

கல்லூரி முடித்து விட்டு ஹோட்டலுக்கு வந்தேன். மாமா அங்கு சாப்பிட வந்தவர்களுக்கு எல்லோருக்கும் இனிப்பை இலவசாமாக வழங்கினார். மாமாவுக்கு அதிக சந்தோசம் வந்தால் இனிப்பு வாங்கி வந்து தான் பார்த்திருக்கிறேன். இப்போது கொஞ்சம் வசதி வந்து விட்டதால் எல்லோருக்கு கொடுக்கிறார் போலும்..!

மாமா என்னை பார்த்ததும், மாமா என் வாயில் இனிப்பை தினித்தார். என்னால் சாப்பிட முடியாமல் சாப்பிட்டேன்.

" என்ன மாமா விஷயம்...?"

" ஊரே கொண்டாடிட்டு இருக்கு. என்ன விஷயம் தெரியல்ல..."

இன்று தீபாவளியுமில்லை, பொங்கலுமில்லை. எதற்காக இவ்வளவு சந்தோஷப்படுகிறார் என்று தெரியாமல் விழித்தேன்.

" அண்ணாதுரை தேர்தல்ல ஜெய்ச்சிட்டார். இப்போ அவர் தான் முதலமைச்சர்" என்றார். அவரே முதல்வர் ஆனது போல் எல்லோரிடமும் தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்.

LinkWithin

Related Posts with Thumbnails