வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, February 15, 2012

அந்த மூன்று பெண்கள் - 4

அறிமுக அத்தியாயம், அத்தியாயம் 1, அத்தியாயம் 2, அத்தியாயம் 3

எங்கள் கடைக்கு வந்தவர்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டு இருந்தேன். மாமா உடல் சரியில்லாமல் இருக்கும் போது கடையை நான் பார்த்துக் கொண்ட அனுபவம் எனக்கு உதவியாக இருந்தது.நான் இந்த வேலை செய்வதில் என் மாமாவுக்கு இஷ்டமில்லை தான். ஆனால், சொந்தக்காலில் நிற்கிறோம் என்ற சந்தோஷம் மனம் முழுக்க இருந்தது. பள்ளி படிப்பை முடித்து விட்டேன். இனி படிப்பு என்ற பேச்சுக்கே என் வாழ்க்கையில் இடம் இருக்காது. எங்கள் குடும்ப பொருளாதாரமும் அப்படி தான் இருந்தது. அம்மா கண்டிப்பாக மாமாவுக்கு உதவியாக இருக்க தான் சொல்லுவார் என்று எனக்கு நன்றாக தெரியும். அதனால் தான், அம்மா சொல்லும் முன்பே நானே இந்த வேலையை செய்ய தொடங்கினேன். ஆனால், மாமா தான் என்னை திட்டிக் கொண்டே இருப்பார்.

" படிக்கிற பையன்.. எதுக்குடா இந்த மாதிரி வேலை எல்லாம் பார்க்குற..." என்று கேட்டார்.

" இந்த வேலைக்கு என்ன குறைச்சல். இந்த வேலைய தான் நம்பி தான் நாம் தினமும் சாப்பிடுறோம். இத எப்படி என்னால செய்யாம இருக்க முடியும்..." பதில் அளித்தேன்.

மாமா எதுவும் பேசவில்லை. எதோ தனக்குள் எதோ பேசிக் கொண்டு இருக்கிறார் என்று மட்டும் புரிந்தது. பள்ளி படிப்பு முடித்த பிறகும் என்னை இன்னும் "படிக்கிற பையன்" என்று தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார். இதற்கு மேல் படிக்க என்ன இருக்கிறது. அப்படியே இருந்தாலும் படித்து விட்டு என்ன செய்ய போகிறேன். கடையில் இருந்தாலாவது நாலு காசு கையில் கிடைக்கும்.

என் பள்ளி வாழ்க்கையில் சொல்லிக்கொள்ளுமளவில் நண்பர்கள் என்று யாருமில்லை. பள்ளியை விட்டது வீடு, உணவகம் என்று தான் இருந்தேன். உண்மையை சொல்லுவதென்றால்... மாமா செலவு செய்தார் என்பதற்காக தான் பள்ளியில் ஒழுங்காக படித்தேன். மாமா, அம்மா எல்லோருக்கு உதவியாக இருக்க வேண்டும். இனி, படிப்புக்கு ஒரு முழுக்கு போட வேண்டும். ஆனால், மாமா மனதில் வேறு ஒரு சிந்தனை ஓடிக்கொண்டு இருப்பதை மாணிக்கம் மாமா சொன்ன பிறகு தான் தெரிந்தது.

" ராமா இருக்கானாம்மா...." என்று அம்மாவிடம் கேட்டப்படி மாணிக்கம் மாமா உள்ளே வந்தார்.

" உக்காருங்க அண்ணே... உள்ளே தான் இருக்காரு... " என்று சொல்லி விட்டு மாமாவை அழைக்க அம்மா உள்ளே சென்றார்.

நான் கல்லா பெட்டியும், சப்பளையும் சேர்த்து பார்த்துக் கொண்டேன். பல்கலைக்கழக மாணவர்கள் அதிகம் சாப்பிட வருவதால் எங்கள் உணவகத்திற்கு நல்ல லாபம் கிடைக்க தொடங்கியது. அதனால், சப்ளைக்கு என்று ஒருவனை வேலைக்கு வைத்திருந்தோம். மதியம் முடிந்து விட்டதால் கூட்டம் அவ்வளவாக இல்லை. சப்ளையை புது பையனிடம் ஒப்படைத்து விட்டு நான் கல்லா பெட்டியில் உட்கார்ந்து மாணிக்கம் மாமாவிடம் பேசிக் கொண்டு இருந்தேன்.

நான் அவரிடம் பேசி இரண்டாவது நிமிடத்தில் மாமா உள்ளே இருந்து வெளியே வந்தார். என்னை ஒரு முறைத்து பார்த்து விட்டு " என்ன மாணிக்கம் போலாம்மா....?" என்றார்.

" எல்லா பேசியாச்சு... சீக்கிரம் வேலை முடிச்சிடும்..." என்றப்படி இருவரும் வெளியே சென்றனர்.

வழக்கம் போல் மாணிக்கம் மாமா பேசுவது 'எனக்கு தலையும் புரியாமல், வாலும் புரியாமல் இருந்தது'. பெரியவர் பேசுவதை என்ன கேட்கும் பழக்கம் எனக்கில்லை. அதே சமயம் தெரிந்துக் கொள்ளாமல் இருந்தது தலையே வெடித்து விடும் போல் இருந்தது. ஒரு வேலை மாமா புது வியாபாரம் தொடங்க போறாரா..? நிச்சயமாக இருக்காது. அவர் அதிகம் பேராசை பிடிப்பவர் அல்ல. உணவகம் மூலம் கிடைக்கும் வருமானமே அவருக்கு போதுமானதாக இருந்தது.

மாமாவும், மாணிக்க மாமாவும் சேர்ந்து வேளியே சென்று விட்டனர். அவர்கள் என் முன் பேசியதால் என்னால் என்னவென்று தெரிந்துக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை. மாணிக்கம் மாமா புதிர் போல் எதையும் பேசமாட்டார். நான் இருப்பதை உணர்ந்து ரொம்ப ஜாக்கிரதையாக பேசினார். உள்ளே சென்று அம்மாவிடம் கேட்டேன்.

" அம்மா...! மாமா என்ன விஷயமா வெளியே போய்யிருக்காரு..." என்று கேட்டேன்.

" இது வரைக்கும் எத்தன வாட்டி வெளியே போய்யிருக்காரு. இப்போ என்ன புதுசா கேக்குற..." என்று நான் கேட்ட கேள்விக்கு மறு கேள்வி கேட்டார்.

" மாணிக்கம் மாமா..! ரொம்ப முக்கியமான விஷயம் மாதிரி தெரிஞ்சது. அதான் கேட்டேன்." என்றேன். மாணிக்கம் மாமா என்றைக்கு தான் புதிரில்லாமல் பேசியிருக்கிறார் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

" வேலை முடிஞ்சதும். மாமாவே சொல்லுவாரு..." என்று அம்மா சொல்லிவிட்டு வேலையை கவனித்தார்.

"இது எனக்கு தெரியாதா.." மனதில் சொல்லிக் கொண்டு கல்லா பெட்டியில் உட்கார்ந்தேன். எதை முடித்து விட ராமா மாமாமும், மாணிக்க மாமாமும் சென்றார் என்று எனக்குள்ளே கேள்விக்கு பதில் தெரியவில்லை. மாமா வரும் நேரம். அவரிடமே கேட்டு விடலாம். எதற்காக நம் மூலையை சிரம்ப படுத்த வேண்டும்.

மாலை நேருங்கும் நேரத்தில் மாமா உணவகத்திற்கு வந்தார்.

" மருமகனே...! சந்தோஷமான விஷயம்...." என்று சிரித்தப்படி என்னை வாரிக்கட்டி பிடித்துக் கொண்டார்.

" என்ன மாமா. உங்க கல்யாணத்துக்கு பொண்ணு கிடைச்சிடுச்சா..." என்று கிண்டலாக கேட்டேன்.

" ஒத வாங்குவ. இந்த வயசுக்கு மேல எனக்கு கல்யாணமா...??" என்று நான் கிண்டல் செய்ததை உண்மையாக நினைத்து கோபப்பட்டார்.

" உங்களுக்கு என்ன மாமா குறைச்சல்..." என்று அவர் தலையில் பணிக்கடியை வைக்காதா குறை. நான் வைத்த பணிக்கட்டியை விட ஒரு பாராங்கல்லை என் தலையில் வைப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.

" இண்ணும் ஒரு மாசத்துல நீ காலேஜ் போணும். உன் பி.ஏ சீட் விஷயமா பார்த்து பேசிட்டு தான் வரேன்." என்றார்.

என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. அவர் பாட்டுக்கு முடிவு எடுத்து விட்டு அதற்கு நான் கட்டு படுவேன் என்ற முடிவை அவரே எடுத்து விட்டார். எவ்வளவு செலவு ஆனாலும் என்னை படிக்க வைப்பதில் ரொம்ப குறியாக இருந்தார்.

" என்ன மாமா... என்ன கேட்காம எதுக்கு முடிவு எடுத்தீங்க. எனக்கு படிக்க இஷ்டமில்ல...." என்றேன்.

மாமாவை மேலும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. அவருக்கு உதவியாக உணவகத்தை கவனிக்க வேண்டும் என்று நினைத்தேன். படிப்புக்காக நான் கல்லூரி சென்றால், என் படிப்பு முடியும் வரை அவர் மேலும் உழைக்க வேண்டியது இருக்கும்.

" அடிவாங்குவ. படிப்பு தான் ரொம்ப முக்கியம். நம்ப அண்ணாதுரைய பாரு. நல்ல படிச்சதுனால பெரிய ஆளா இருக்காரு. நீயும் படிச்சா அவர மாதிரி ஆகலாம்." என்றார்.

மாமாவுக்கு அரசியல் பிடிக்கவில்லை என்றாலும் தனிப்பட்ட முறையில் அண்ணாதுரை அவர்களை ரொம்ப பிடிக்கும். அதுவும் படிப்பு என்று சொல்லிவிட்டால் போதும். அவரோடு ஒப்பிடாமல் இருக்க மாட்டார். அவர் படித்தார் என்பதற்காக என்னையும் படி என்கிறார். என் முடிவில் இருந்து நான் மாறுவதாக இல்லை.

" நான் மேல படிக்க போறதில்ல. என் முடிவுல நான் தீர்மாணமா இருக்கேன். என் வாழ்க்கையில் நான் தான் முடிவு எடுப்பேன். மத்தவங்க யாரும் முடிவு எடுக்க கூடாது" என்று கோபத்தில் கத்தினேன்.

ஒரு கனத்தில் மாமா சிலையாக நின்றார். மாமா எதுவும் பேசமுடியாமல் வாய்யடைத்து போனார். அம்மாவுக்கு கோபம் வந்து என்னை ஓங்கி 'பலீர்' என்று அரைந்தார். அம்மாவின் கோபத்தை பார்த்த போது தான் எவ்வளவு பெரிய தவறான வார்த்தையை பேசிவிட்டேன் என்று உணர்ந்தேன்.

அப்பாவுக்கு அப்பாவாக இருந்த வளர்த்தவரை பார்த்து " என் வாழ்க்கையில் மத்தவங்க யாரும் முடிவு எடுக்க கூடாது" எப்படி சொன்னேன் என்று என்னக்கே தெரியவில்லை. கோபத்தில் வார்த்தை அளவு மட்டுமல்ல வார்த்தைகளின் சக்தியும் தெரிவதில்லை. நான் தப்பாக பேசியிருக்கிறேன் என்று எனக்கு நன்றாக புரிந்தது.

மாமா கண்கள் கலங்கிப்படி மௌனமாக சமையல் அறைக்கு சென்றார். மாலை முடிந்து இரவு நெங்ருகுவதால் உணவகத்தில் கூட்டம் வர தொடங்கினர். நான் அவர்களை கவனிக்காமல் மாமாவிடம் மன்னிப்பு கேட்க சென்றேன்.

" மாமா... என்னை மன்னிச்சிடு மாமா. தெரியாம பேசிட்டேன்..." என்றேன்.

" நீங்க சரியாதான் பேசுனீங்க. உங்க வாழ்க்கையில எனக்கு என்ன உரிமை இருக்கு. முடிவு எடுக்க. நீங்க என்ன நான் பெத்த பிள்ளையா....?" என்று கண்கள் கழங்கிய படி பேசினார்.

சமையல் அறை எண்ணெயின் நடுவில் மாமாவில் வார்த்தை சேர்ந்து என்னை சுட்டது. நான் பேசிய வார்த்தை எவ்வளவு காயம்ப்படுத்தியிருந்தால் இப்படி ஒரு வார்த்தை அவர் பேசுவார். எனக்கு நல்ல நண்பர் என்று சொன்னால் அது 'என் மாமா' தான். உறவு என்று சொன்னால் அதுவும் அவர் தான். அவரை காயப்படுத்தியது என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை.

" மாமா... வா... கூட்டம் அதிகமாயிடுச்சு... போவோம்..." என்று அவரை அழைத்தேன்.

" நீங்க போங்க... பெரிய மனுஷன் அயிட்டிங்க... போய் கவனிச்சிக்கோங்க... நான் இப்படியே ஒதுங்கி உக்காந்துக்கிறேன்.." என்றார்.

மாமாவுக்கு முதல் முறை 'ங்க' வார்த்தை என்று சொல்லும் போதே என் மீது கோபமாக இருப்பதை உணர முடிந்தது. மீண்டும், இரண்டாவது தடவையாக 'ங்க' என்று சொல்லும் போது எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. நான் தவறு செய்து விட்டேன் என்பதற்காக அவர் பாட்டுக்கு பேசிக் கொண்டே போனார். எனக்கும் கோபம் வரும்.

" உன் பையன் பேசியிருந்தா நீ இப்படி பேசியிருப்பியா..." என்று மாமாவை பார்த்து கேட்டேன். மாமா ஒரு மாதிரியாக என்னை பார்த்தார்.

" எதோ சின்ன பையன் தெரியாம பேசிட்டேன். மன்னிக்காம... அவன கஷ்டப்படுத்துற மாதிரி பேசுறியே...." என்று நான் பேசிக் கொண்டு இருக்கும் போதே என் கண்கள் கலங்கின.

நான் அழுதால் மாமாவால் தாங்கிக் கொள்ள முடியாது என்று எனக்கு நன்றாக தெரியும். நான் கலங்குவதை பார்த்து, " சரி..சரி...விடு ! எதோ ரெண்டு பேரும் தெரியாமா பேசிட்டோம்." என்று என்னை சமாதானப்படுத்தினார்.

அம்மா சமையல் அறைக்கு வந்து கூட்டம் அதிகமாகி விட்டதாக் கூறினார். என்னிடம் பேசாமல் முறைத்தவாரு அம்மா நின்றார்.

" இந்திரா... வந்தவங்கள கவனி. நா மருமக கிட்ட கொஞ்சம் பேசிட்டு வரேன்" என்று அம்மாவை வந்த வாடிக்கையாளர்களை கவனிக்க சொன்னார்.

அம்மா சென்றவுடன், "மருமகனே ! படிப்பு தான் உன்ன காப்பாத்தும். வியாபாரம் எல்லாம் எப்போ என்ன ஆகுமோ யாருக்கு தெரியும். எனக்காக படிடா...!" என்று மீண்டும் பழைய இடத்துக்கே வந்தார்.
இந்த முறை என்னால் அவரை எதிர்த்து பேச முடியவில்லை. அவருக்காக எதையும் செய்ய நான் தயாராக இருக்கும் போது, படிப்பது பெரிய கஷ்டமாக எனக்கு தெரியவில்லை.

" சரி மாமா ! உனக்காக நான் படிக்கிறேன்." என்றேன்.

மாமா முகத்தில் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. என்னை தூக்கி கொண்டு உணவகத்தின் சமையல் அறையை சுற்றினார்.

" மருமகனே...பி.ஏ என்ன படிக்க போற....?" என்றார்.

மாமாவுக்கு அண்ணாதுரை மிகவும் பிடிக்கும் என்ற காரணத்தால் யோசிக்காமல் பதிலளித்தேன், " தமிழ்" என்று !.

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

தேர்ந்தெடுத்த தமிழ் அழகு !

LinkWithin

Related Posts with Thumbnails