தேதி : 28.1.12
பேரன்பின் நல்வீர் !
வணக்கம். தமிழினியன் வெளியிட்ட பொங்கல் மலரில் யோசனை மட்டுமல்ல, அறிவுக் கூர்மையான எண்ணங்களை கூறியதை அறிந்து மகிழ்ந்தேன். ”புத்தகங்கள் கொண்டாடப்பட வேண்டியவை” என்ற தலைப்பில் எழுதியவைப் பாராட்டிற்குறியது. சீர்காழி வட்ட நூலகத்தின் வாசகர் வட்டத்தலைவர் என்ற முறையில் தாங்கள் கூறிய கருத்துகளையே யான் வலியுறுத்திப் பேசுவேன்.
தொலைக்காட்சி ஊடகங்களால் புத்தகங்களைப் படிப்போர் குறைந்து வருகின்றனர். நல்ல எழுத்தாளர் படைப்புகளை வரவேற்று வணங்கிப் படிக்க வேண்டும். “உற்றார், உறவினர்கள் கொடுக்காத நம்பிக்கை ஒரு சுயமுன்னேற்றத்திற்கும் நல்வழிக்கும் புத்தகமே அளிக்கும் என்பதும் கடவுள் தீர்த்து வைக்க முடியாதத் தீர்வுகளுக்குப் புத்தகங்கள் தீரு உண்டு என்பது உண்மையின் வெளிப்பாடு. வாழ்த்துக்கள் !!
நன்றி,
அன்புடன்,
ஜெ.சண்முகம்
தென்பாதி – 609111
சீர்காழி.
**
தேதி : 24.1.12
மதிப்பிற்குரிய கவிஞர் மற்றும் பதிப்பாளர் குகன் அவர்களுக்கு,
என் புத்தகம் ஒன்றினை அனுப்பி உங்களது கருத்துக்களை கேட்டு இருந்தேன். எவ்வித தயக்கமின்றி உண்மையான விமர்சனத்தை என் கவிதைக்கும், எனக்கும் தந்தீர்கள். அதற்காக ஓர் மிகப் பெரிய நன்றி ! நன்றி !!
அதன் பின்னர், கைப்பேசியில் உரையாடும் போது ஓர் எழுத்தாளன் எவ்வளவு தெளிவாக இருக்க வேண்டும். எவ்வாறு எழுத வேண்டும், எந்த புத்தகங்களை படிக்க வேண்டுமென கூறினீர்கள். அது மட்டுமின்றி, எனக்காக தனிப்பட்ட குறிப்புகளை தந்தீர்கள். ஒரு நல்ல கவிஞனாய், பதிப்பாளனாய் உங்களைப் போன்று ஒரு சிறந்த மனிதரை பார்ப்பது மிகவும் அரிது. எனினும், நீங்கள் கூறிய அறிவுரைகள், சில அனுபவங்கள் உங்களின் உண்மையான மனதை மிகவும் அழகாக வெளிகாட்டுகிறது.
இதுமட்டுமின்றி, எனது கவிதையில் ஒரு கவிதை மட்டும் பெண்ணை குறிப்பிடுவதாக கூறினீர்கள். அது என் தவறல்ல பதிப்பதித்தாரின் தவறு, ஒரேயொரு எழுத்து மட்டும் மாறிவிட்டது.
உங்களிடம் உங்களது பதிப்பக புத்தகம் இரண்டை கேட்டேன். கூடிய விரையில் M.O. அனுப்பி பெற்றுக் கொள்கிறேன்.
”நமது நட்பு எப்போதும் தொடரட்டும்
வாழையடி வாழையாய்”
தோழமையுடன்,
”தாய்” சுரேஷ்
கடத்தூர்.
****
எனக்கு வந்த இரண்டு வாசகர் கடிதங்களை இங்கு குறிப்பிட்டதற்கு இரண்டு காரணம் உள்ளது. கடைசி காரணம் சுய விளம்பரம். முதல் காரணம், மின்னஞ்சல், செல்பேசி வளர்ந்துவிட்ட விஞ்ஞான யுகத்தில் இன்னும் கடிதம் எழுதும் கலாச்சாரம் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது என்பது தான்.
அதுவும்”தாய்” சுரேஷ்யின் கடிதம் சொல்லியாக வேண்டும். என் விமர்சன பதிவுக்கு பிறகு தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு நன்றி தெரிவித்தார். அதன் பிறகு மூன்று முறை போனில் பேசியிருப்போம்.
ஏற்கனவே நன்றி சொல்லிய பிறகு எதற்கு கடிதத்தில் இன்னொரு நன்றி என்று கேட்ட போது, " நான் உங்களிடம் பேசிய எல்லா வார்த்தைகளும் உங்களுக்கு நினைவில் இருக்க போவதில்லை. ஆனால்,பல வருடம் கழித்து கடிதத்தை நீங்கள் பாதுகாத்து படித்தாலும் நான் உங்களிடம் புதிதாக பேசியது போல் இருக்கும்" என்றார்.
பட்டுக்கோட்டை பிரபாகர் தான் வாசகர் கடிதம் எழுத தொடங்கி எழுத்தாளனாக மாறியதை ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார். எழுத்துபவர்களுக்கு பயிற்சி அளிக்கும் படியாக இருந்த வாசகர் கடிதம் நாற்பது வயது தாண்டியவர்கள் மட்டுமே பயன்ப்படுத்தி வருகிறார்கள். வலைப்பதிவுகளில் மட்டுமே "எதிர்வினை", ”பின்னூட்டம்” என்ற பெயரில் இளைய வாசகர்களின் கவனம் திரும்பி இருக்கிறது.
எழுத்தாளனுக்கு பின்னூட்டம், எதிர்வினை மின்னஞ்சலை விட ”வாசகர் கடிதம்” வாசகனை நேரில் சந்துக்கும் பிம்பத்தை கொடுக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்த இரண்டு வாசகர் கடிதம் படித்த பிறகு, எனக்கு வந்த வாசகர் மின்னஞ்சலையும் பிரிண்ட் எடுத்து பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
No comments:
Post a Comment