அறிமுக அத்தியாயம்
அத்தியாயம் 1
அப்பாவை தூக்கியப்படி நான்கு பேர் நடக்க.... நான் மாமாவுடன் முன்னே சென்றுக் கொண்டு இருந்தேன். அப்பாவின் உடல் கட்டை, வரட்டி, கற்புறம் என்று ஒவ்வொன்றாக போட்டு மறைத்தனர். என் கையில் எரியும் கட்டையை கொடுத்து அப்பா உடல் மீது எறிக்க சொன்னார். நானும் அப்படியே செய்தேன். இனி சைக்கிள் முன் உட்கார வைத்து என்னை யார் ஓட்டி செல்ல போகிறார்....?? இரவில் எனக்கு யார் கதை சொல்ல போகிறார் என்ற கவலையுடன் சுடுக்காட்டில் இருந்து வீட்டுக்கு வந்தேன்.
அப்பா இறந்துமூன்று மாதங்கள் ஆகிவிட்டது...
நான் பிடிவாதம் பிடிப்பதை விட்டு விட்டேன். பிடிவாதம் பிடித்தாலும் எனக்கு வாங்கி தர அப்பா தான் இல்லையே !
" கவலப்படாதம்மா.... உனக்கு நான் இருக்கேன்..." என்று ஆறுதல் கூறியவர் அம்மாவின் அண்ணன் ரகுராமன். எல்லோரும் அவரை 'ராமா' என்று அழைப்பார்கள். நான் அவரை 'ராம மாமா' என்று அழைப்பேன்.
அம்மாவுக்கு அப்பா பிரிவை மறந்து என்னை பற்றின கவலை தான் அவர்களுக்கு அதிகமாக இருந்தது. அன்பும், பாசம் எத்தனை உண்ணதமானது என்று என் மாமா ராமாவை பார்த்த பிறகு தான் தெரிந்துக் கொண்டேன்.
அம்மாவுக்கு ஏழு வயது இருக்கும் போது என் பாட்டி இறந்துவிட்டார். அன்று முதல் அம்மா தான் அவர் அப்பாவுக்கும், மாமாவுக்கும் சமைத்து போடுவார். அம்மாவிடம் இருந்து மாமா சமையல் கற்றுக் கொண்டார். அம்மாவிடம் கற்றுக் கொண்ட சமையல் தான் மாமாவுக்கு உதவியது.
ஒரு முறை மாமாவின் சமையலை சுவைத்த வெள்ளைக்கார துரை மாமாவை தன் ஆஸ்தான சமையல்காரனாக வைத்துக் கொண்டார். மாமாவும் அவருடன் வேலைக்கு சேர்ந்தார். வெள்ளைக்கார துரை வெளியூர் செல்லும் போதெல்லாம் மாமாவும் அவருடன் செல்ல வேண்டியதாக இருந்தது. விடுமுறை கிடைக்கும் போது தான் வீட்டுக்கு வருவார். வெள்ளைக்கார துரை நல்ல சம்பளம் தந்ததால் அம்மாவுக்கு நல்லப்படியாக திருமணம் செய்து வைத்தார். அம்மாவிடம் கற்ற சமையல் தான் தனக்கு சோறு போடுகிறது என்று அம்மாவிடம் அடிக்கடி சொல்லுவார்.
அம்மாவின் நிலைமையை கேட்டவுடன் தன் வேலையை விட்டு தான் சிதம்பரத்திற்கு வந்தார் என்று எங்களுக்கு பிறகு தான் தெரிந்தது. அம்மாவிடம் கற்ற சமையல், அவள் மேல் வைத்திருக்கும் பாசம் என்று எங்களுக்காக திருமணமே வேண்டாம் என்று முடிவு எடுத்திருந்தார். பட்டினத்தில் இருந்து எங்களுடன் சிதம்பரத்தில் தங்கிவிட்டார்.
மாமா வாடி போயிருந்த அம்மாவிடம், " இந்திரா.... இன்னும் எத்தன நாளைக்கு தான் இப்படியே இருப்ப...." என்றார்.
"இல்லண்ணா... என் பயமே... எப்படி இவன படிக்கவச்சி வளர்க்க போறேனு தான்...?"
" கவலப்படதாம்மா... நான் உன் கூடவே இருக்கேன்ல...."
" என்னக்காக எவ்வளவு நாள் நீ கஷ்ட படுவேண்ணே... என் கல்யாணத்துக்காக கடன் வாங்கி இப்ப வேலை செஞ்சு அடைச்ச. நீயும், கல்யாணம் காச்சி பார்க்குற நேரம் பார்த்து இப்படி அயிடுச்சு. எனக்காக கல்யாணம் வேண்டாம் சொன்னா என்னால தாங்க முடியலைண்ணே..."
"விடும்மா... என் கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்....". அம்மாவிடம் மாமா கற்ற சமையல் பாசம், நன்றியுணர்ச்சியாக வெளிப்பட்டது.
" என்னண்ணே இப்படி.. சொல்லுற.. ? உனக்கு இப்பவே முப்பது வயசு மேல ஆகுது.... எப்ப நீ கல்யாணம் பண்ணி குழந்த குட்டி எல்லாம்...." என்று இந்திரா இழுத்து சொன்னாள்.
" இப்ப அது முக்கியமில்ல. நான் பட்டினத்துல வேலைய விட்டேன். இங்க வேலைக்கு ஏதாச்சு பண்ணனும்." என்று நிருத்தி விட்டு என்னையே பார்த்தார்.
"என்ன சொல்லவந்து பாதியில நிருத்திட்ட...."
"ம்ம்ம்... ஒண்ணுமில்ல. இந்த காலேஜ் பக்கம் சாப்பாடு கட வைக்கலாம் இருக்கேன். அது விஷயமா ஒருத்தர பார்த்திட்டு வரேன்."
" கேக்றேன் தப்ப நினைக்காத... சாப்பாடு கட வைக்கிற அளவுக்கு பணம் இருக்கா..?"
"பணத்துக்கு என்ன கஷ்டம். பட்டினத்துல எத்தன ச்நேகிதங்க இருக்காங்க தெரியுமா... கவல படதா. நான் இருக்கேன். மனச தைரியமா வச்சிக்கோ..." என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.
ராமா மாமா அம்மாவுக்கு கடவுள் போல் தெரிந்தார். அவர் இல்லை என்றால் அம்மா நிச்சயமாக தற்கொலை தான் செய்துக் கொண்டு இருப்பாள். அப்பாவை தவிர இந்த உலகம் தெரியாதவர். 'கடவுள் மனித உருவத்தில் வரும்' என்று அம்மாவிடம் அப்பா அடிக்கடி சொல்லுவார். அதை 'மாமா' உருவில் இன்று தான் பார்த்தேன்.
உணவகம் வைப்பதற்காக ஒரு மாதம் மேல் அலைந்தனர். அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவம், பொறியியல் வளாகத்தில் உணவகம் வைக்க அனுமதிக்கிடைக்கவில்லை. பெரிய பெரிய மனிதர்களிடம் சென்று அனுமதி, உத்தரவு வாங்க அங்கு இங்கும் சென்று பார்த்தார். கையில் இருந்த பணம் தான் கரைந்தது. பலனேதுமில்லை.
நீண்ட நாள் பொருத்திருந்தார். கடைசியில் அவர் நண்பர் மாணிக்கத்தின் ஆலோசனை படி சிதம்பரம் பஸ் நிலையத்தில் அருகே உணவகம் தொடங்கினார். வீட்டில் இருந்து உணவகம் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. சைக்கிள் மீதித்து செல்லும் தொலைவில் இருந்ததால் நாங்கள் கீழ வீதியிலே தங்கிவிட்டோம்.
என்னையும், அம்மாவையும் வைத்துக் கொண்டு சைக்கிள் மிதித்து ஓட்டுவார். என்னை பள்ளியில் விட்டு விட்டு அம்மாவை அழைத்துக் கொண்டு உணவகத்திற்கு செல்வார். இதுவரை வீட்டிலேயே இருந்த அம்மா, உணவகத்தில் சமைப்பதும், எச்சில் இலை எடுப்பதும் என்று மாமாவுக்கு உதவியாக இருந்தார். மாமா பல தடவை சொல்லியும் அம்மா கேட்கவில்லை.
"யாரோ இந்த வேலை செய்யுறதுக்கு நீ சம்பளம் தரத்துக்கு நா இந்த வேலைய செய்யுறேன்...." என்று அம்மா இந்த வேலை எல்லாம் செய்தார். இந்த வேலை செய்வதிலும் அம்மாவுக்கு ஒரு சந்தோஷம். அப்பா பிரிந்த சோகத்தை இயல்பாக திரும்பிக் கொண்டு இருந்தார்.
அப்பாவை எனக்கு ராமா மாமாவை மிகவும் பிடிக்க தொடங்கியது. அம்மாவிடம் கேட்பதை விட மாமாவிடம் கேட்டால் கேட்டதை வாங்கி தருவார். அவர் சந்தோஷத்தில் இருந்தாலும் சரி, என்னை கேலி செய்வதாக இருந்தாலும் சரி, என்னை வார்த்தைக்கு வார்த்தை "மருமகனே.... " என்று அழைப்பார். என் மீது கோபமோ வருத்தமோ இருந்தால் ' வாங்க... போங்க..." என்று மரியாதையாக பேசுவார். அவர் என்னை அழைப்பதை வைத்தே அவர் எந்த மனநிலையில் இருக்கிறார் என்று கணித்து விடுவேன்.
அவரிடம் பிடித்தது உடலை பராமரிப்பது. குண்டும் இல்லாமல், மிகவும் ஒல்லியாக இல்லாமல் தன் உடலை சரியாக வைத்துக் கொள்வார்.
எனக்கு அவரிடம் பிடிக்காதது அதிகம் வெத்தலை போடுவார். ஆனால், மற்றவர்கள் போல் கண்ட இடத்தில் துப்ப மாட்டார். அதற்கு என்று தனி பாத்திரம் கடையிலும், வீட்டிலும் இருக்கும். காய்கறி கடையில் பொருட்கள் வாங்கும் போது வெத்தலை போடமாட்டார்.
அப்பா இறந்த ஏழு வருடங்களில் மாமாவின் உலகம் உணவகம், காய்கறி கடை, சமையல், வீடு என்றே இயங்கிக் கொண்டு இருந்தது.
நாளிதழில் எதோ கட்டுரை படித்துக் கொண்டு இருந்தார்.
"என்ன படிக்குற மாமா...?"
"வாடா மருமகனே...! பள்ளிகூடம் முடிஞ்சிருசா...."
" முடிஞ்சதுனால தானே வீட்டுக்கு வந்தேன். என்ன படிக்குறேனு கேட்டேன். அதுக்கு பதில் சொல்லவே இல்ல..."
" சரிடா...பெரிய மனுஷா. அண்ணாதுரை எழுதின கட்டுரை ஒண்ணு படிச்சிட்டு இருக்கேன்..."
" எங்க கொடு... பார்ப்போம்..." என்று சொல்லி அந்த நாளிதழை வாங்கி படித்தேன்.
" இவரு கடவுள கிண்டல் பண்ணி எழுதியிருக்காரு. தப்பில்ல..." என்று வியப்புடன் கேட்டேன்.
"இவரு கடவுள் இல்லனு சொல்லுறவரு. அது தான் இவங்க பொழப்பு...".
" கடவுள் இல்லனும் சொல்லுறது பொழப்பு சொல்லுறீங்க. பாவம் அவங்க...! கடவுள் அவங்களுக்கு உதவலைனு தானே இல்லனு சொல்லுறாங்க. கடவுள் அவங்களுக்கு உதவி பண்ணா நம்ப போறாங்க..."
"வர... வர.. நீயும் அண்ணாதுரை மாதிரி பேசுற..."
" சும்மா சும்மா அவர் பேர சொல்லு றீங்க.. அவரு யாரு...??"
மாமா "ஏன்டா பேசினோம்? " என்று இருந்தார். அவர் சொல்லும் ஒவ்வொரு பதிலும் எனக்கு கேள்வியாக தான் பிறந்தது. ஒரு வேலை அண்ணாதுரை இப்படி தானோ...? மற்றவர் பதிலிருந்து கேள்வி கேட்பாரோ...? மாமா அண்ணாதுரை மாதிரி என்று சொன்னவுடன் அவரை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று தோண்றியது.
" பதில் பேசாம இருக்கீங்க...." என்று நச்சரித்தேன்.
" எனக்கு தெரிஞ்ச சொல்லுறேன். முன்னாடி பெரியார் கிட்ட இருந்தாரு. இப்போ தனியா தி.மு.கனு ஒரு கட்சி ஆரம்பிச்சிருக்காரு.ஏதோ அப்பபோ பத்திரிக்கையில இந்த மாதிரி எழுதுறாரு..." என்று ரத்தின சுருக்கமாக ஒரு சகாப்தம் படைக்க போவரைப் பற்றி சொன்னார்.
" என்ன மாமா...? இது கதையா...?" என்று இன்னொரு கேள்வியை கேட்டேன். மாமா முன் தலை கொஞ்சம் வழுக்கையாக இருக்கும். நான் கேட்கும் கேள்விகளில் முழு வழுக்கை வந்தாலும் ஆச்சரியப்படுவதிறக்கில்லை.
"இல்ல ! இது கட்டுரை. ஏன் கேக்குற....?" கேட்டார்.
" ஒண்ணுமில்ல... முன்னுரை, விளக்கம், முடிவரை தலைப்பு போடாம எழுதியிருக்காரு. கட்டுரை எப்படி எழுதனும் அவருக்கு தெரியாதா... எங்க பள்ளிக்கூடத்துல இப்படி தான் சொல்லிக் கொடுத்தாங்க... " என்றேன்.
"அம்மா இந்திரா...கொஞ்சம் இங்க வாம்மா. இவன் கிட்ட என்னால பேசமுடியல்ல..." என்று அம்மாவை அழைத்தார். அம்மாவுக்கு பயந்து நான் உள்ளே ஒடிப்போய் எஸ்.எஸ்.எல்.சி பாட புத்தகத்தை எடுத்துப்படிக்க தொடங்கினேன்.
அடுத்த நாள் அவருக்கு ஒரு பிரச்சனை காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை தெரியாமல் சிரித்தப்படி மீண்டும் நாளிதழ் படிக்க தொடங்கினார்.
(தொடரும்..)
No comments:
Post a Comment