அறிமுக அத்தியாயம், அத்தியாயம் 1, அத்தியாயம் 2, அத்தியாயம் 3,அத்தியாயம் 4
அண்ணாமலை பலகலைக்கழகத்தில் எனக்கு மாணவனாய் முதல் நாள் அனுபவம் சற்று வித்தியாசமாக இருந்தது. பள்ளிப்பருவத்தில் உடலில் காயம் பட்டாலும் மனதில் யாரையும் நான் வெறுத்துதில்லை. மாலை வரும் வரை எல்லோரும் மைதாணத்தில் விளையாடுவோம். மதம், ஜாதி என்னை தீண்டிப்பார்த்ததில்லை. இதற்கு முரண்பாடான அனுபவத்தை தான் பலகலைக்கழகத்தில் சந்தித்தேன்.
அண்ணாமலை கலைக்கல்லூரி எங்கள் பலகலைக்கழகத்தில் ஒரு பிரிவு. அங்கு இசை, வரலாறு, மொழி என்று பல பிரிவிகளுக்காக மாணவர்கள் படிக்க வசதியாக நூல்களும், ஆசிரியர்களும் இருக்கின்றனர். கல்லூரி வளாகத்தில் நுழைந்தவுடன் குடுமிப் போட்ட ஒருவனை பார்த்தேன். அவன் உருவத்தை பார்த்ததும் புரிந்துக் கொண்டேன் சிதம்பர தீட்சதர் குடும்பத்தை சேர்ந்தவன் என்று ! நடராஜர் கோயிலில் இவர்கள் வைத்தது தான் சட்டம். மூல கடவுளை பார்க்க சட்டையை கலட்டி கொண்டு செல்ல வேண்டும், பிரசாத்தை கொடுத்து விட்டு தட்சனை வாய் திறந்து அவர்களே கேட்பதும் இப்படி பல விஷயங்களை நான் பார்த்திருக்கிறேன். மாமா உணவகம் தொடங்கி இதுவரை குடுமி வைத்தவர்கள் யாரும் வந்து சாப்பிட்டதில்லை. இதற்கு எல்லாம அர்தம் இந்த கல்லூரியில் தான் எனக்கு புரிந்தது.
" முதல் பி.ஏ வரலாறு வகுப்பு எங்க தெரியுமோ...?" என்றான் அந்த குடுமி வைத்த மாணவன்.
" தெரியாது. நீங்க வரலாறு மாணவனா.." என்றேன்.
" அமா. நீங்க என்ன படிக்கிறேள் ? என்று கேட்டான்.
"பி.ஏ தமிழ்." என்றேன்.
என்னை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு சென்றான். 'தமிழ்' என்று தானே சொன்னேன். அதற்கு என்னை ஏன் இப்படி ஒரு முறைப்பு பார்த்தான் என்று புரியவில்லை.
கல்லூரி வளாகத்தை சுற்றி அங்காங்கே மரங்கள் இருந்ததால் நிழலில் நிற்க மிக சௌகர்யமாக இருந்தது. அப்போது ஒருவன் அவனே என்னிடம் வலிய வந்து பேசினான்.
" வணக்கம். என் பேரு பரூக்" என்றான்.
பெயரை வைத்து மதத்தை சொல்லும் நாட்டில் பிறந்து விட்டோம் என்று தோன்றியது. அவன் பெயர் என் மனதில் பதிவாகும் முன்பு அவன் மதம் என் மனதில் பதிவாகிவிட்டது. அவன் பெயர் சொன்ன பிறகு நானும் பதிலுக்கு என் பெயரை சொல்ல வேண்டும் என்று சற்று நேரம் கலிந்து தோன்றியது.
" என் பெரு சந்திரசேகர்." என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.
" நீங்க பி.ஏ தமிழா..." என்றான்.
"ஆமா... உங்களுக்கு எப்படி தெரியும் !" என்று கேட்டே.
" நீங்க அந்த தீட்சதர் பையன் கிட்ட பேசுனத கேட்டேன். நானும் பி.ஏ தமிழ் தான்." என்றான்.
" ஓ.! நம்ப க்ளாஸ் எங்க இருக்கும்னு தெரியுமா."
" ம்.. தெரியும். வாங்க போவாம். க்ளாஸ்க்கு நேரமாச்சு." என்று பரூக் பேசி முடித்தவுடன் இருவரும் வகுப்பு சென்றோம்.
வகுப்பில் நுழைந்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கல்லூரிக்கு நுழைந்த போது குடுமி வைத்த மாணவர்கள் பல பேர் இருந்தார்கள். ஆனால், எங்கள் வகுப்பில் மட்டும் ஏன் குடுமி வைத்த ஒரு மாணவன் கூட இல்லை. அவர்களில் ஒருவனுக்கு கூடவா தமிழ் பிடிக்காமல் போனது. நான் யோசித்துக் கொண்டு இருக்கும் போது பேராசிரியர் வகுப்புக்குள் நுழைந்தார்.
" வணக்கம் மாணவமணிகளே...! என் பெயர் பாலசுந்தரம். உங்களுக்கு தமிழ் இலக்கியம் எடுக்க போகும் பேராசிரியர்." என்றார்.
எல்லோரும் அவர் சொல்வதை பார்த்துக் கொண்டு இருந்தோம்.
" நான் இந்த கல்லூரியில் பத்து வருடங்களாக பணியாற்றுகிறேன். இப்போது என்னை பற்றி இது போதும். இப்போழுது நீங்கள் ஒவ்வொருவராக எழுந்து உங்களை அறிமுகம் செய்துக் கொள்ளுங்கள்." என்றார்.
ஒவ்வொருவரும் தங்களை அறிமுகம் செய்து, அவர்கள் பெற்றோர் பெயரையும் சொன்னார்கள். நான் பரூக் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். இப்போது பரூக் முறை.
" என் பேரு பரூக். அப்பா பேரு பாட்ஷா. அம்மா பேரு ஆயிஷா..." என்றான்.
அடுத்து நான்.
" என் பேரு சந்திரசேகர். அப்பா பேரு நாதன். அம்மா பேரு இந்திராணி. அப்பா உயிரோட இல்லை." என்று சொல்லி முடித்தேன். அப்பா உயிருடன் இல்லை என்று ஏன் சொன்னேன் என்று தெரியவில்லை. சொல்லவேண்டும் என்று தோன்றியது. மற்றப்படி பரிதாபத்தை தேடிக் கொள்ள சொல்லவில்லை. நான் சொன்னது ஒருவிதத்தில் நல்லது தான். யாரும் என்னிடம் வந்து 'அப்பா என்ன செய்கிறார்' என்று கேட்க மாட்டார்கள்.
பேராசிரியர் பாலசுந்தரம் என்னை பரிதாபமாக பார்க்கவில்லை. அது மட்டும் என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது.
முதல் நாள் கல்லூரி முடிந்து வீட்டுக்கு சென்றேன். முதல் நாள் கல்லூரிக்கு சென்றதால் அம்மா மாமாவுடன் செல்லவில்லை வீட்டிலேயே இருந்தார். என் வருகைக்காக காத்திருந்தார். நான் வந்ததும்.. ஆரத்தி தட்டுன் வந்தார்.
"என்ன அம்மா... நான் என்ன சண்டைக்கா போய்ட்டு வரேன்..." என்று கேலியாக கேட்டேன்.
" நம்ப குடும்பத்துல யாரும் பட்டப்படிப்பு படிப்போம்னு நினைச்சு கூட பார்த்ததில்ல. நீ தான் முதல் தடவையா படிக்கிற. அதான்.." என்றார்.
" அம்மா !! இன்னைக்கு தான் முதல் நாள். பட்டம் வரத்துக்கு இன்னும் மூனு வருஷம் ஆகும்." என்றேன்.
" பட்டம் வரம்போது வரட்டும். என் பையன் பட்டப்படிப்பு படிக்கிறான். எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா..." என்று என்னை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டாள்.
அப்பா அம்மாவை விட்டு சென்று இருக்க கூடாது. அவர் உயிருடன் இருந்திருந்தால் மாமா இவ்வளவு கஷ்டம் ஏற்ப்பட்டு இருக்காது. அப்பாவுக்கு எதற்கு அவசரமாக கடவுளிடம் சென்றார் என்று தெரியவில்லை. அம்மா சொன்னது போல் கடவுள் தான் மாமா உருவத்தில் வந்து எங்களை இன்று வரை வாழவைக்கிறார்.
அம்மா முகத்தில் இவ்வளவு சந்தோஷம், பூரிப்பு நான் பார்த்ததேயில்லை.
இரவில் வேலையெல்லாம் முடிந்து மாமா உணவகத்தை சாத்தி விட்டு வீட்டுக்கு வந்தார். கையில் வரும் போதே இனிப்பு பலகாரங்கள் எடுத்து வந்தார். அவர் இனிப்போடு வருவார் என்று எனக்கு முன்பே தெரியும். காலையிலேயே இனிப்பு கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். முதல் நாள் வகுப்பு பரபரப்பில் நான் சீக்கிரம் என்று விட்டேன்.
" என்ன மருமகனே ! முதல் நாள் வகுப்பு எப்படி இருந்திச்சு" என்று கேட்டப்படி வாயில் இனிப்பை தினித்தார்.
"நல்ல போச்சு மாமா..." என்று இனிப்பை சாப்பிட்டு கொ ண்டே பேசினேன்.
"ஸ்நேகிகங்க யாராவது கிடைச்சாங்களா...?" என்று கேட்டார்.
" ம்... பரூக்னு ஒரு பையன்..." என்றேன்.
பெயரை கேட்டது அம்மா, " ஏன்டா ! பாய் பசங்க கிட்ட பேசுற. அவங்க அசைவம் சாப்பிடுறவங்க..." என்றார்.
அவர்கள் அசைவம் சாப்பிடுவதும், நான் அவர்களிடம் பேசுவதும் என்ன சம்மந்தம் என்று புரியவில்லை. நான் பேசுவதற்குள் மாமா, " மனுஷங்க தான் முக்கியம். நம்ப கடைக்கு பாய்ங்க சாப்பிட வந்தா விரட்டியா அடிக்கிறோம்." என்று எனக்கு சாதகமாக பேசினார்.
என் கையில் சாவியை கொடுத்து, "மருமகனே ! இனிமே நீ காலேஜ்க்கு சைக்கிள்ல தான் போறே..." என்று கொடுத்தார். மாமா புது சைக்கிள் வீட்டுக்கு எடுத்து வந்ததை அப்போது தான் பார்த்தேன். புது சைக்கிளை பார்த்த கொஞ்ச நேரத்தில் மாணிக்கம் மாமா என் மாமாவின் சைக்கிலை எடுத்து வந்தார்.
அவர் வாங்கி தந்த புது சைக்கிளில் எங்கள் தெருவை சுற்றி வந்தேன். என்னுடன் பயணம் செய்ய புது நண்பன் கிடைத்த சந்தோஷத்தில் புது சைக்கிளுக்கு முத்தம் கொடுத்தேன்.
சந்தோஷமாக சைக்கிள் வாங்கிக் கொடுத்த மாமா... என் வாழ்க்கையை திசை திருப்ப போகும் முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.
No comments:
Post a Comment