அறிமுக அத்தியாயம், அத்தியாயம் 1, அத்தியாயம் 2, அத்தியாயம் 3,அத்தியாயம் 4, அத்தியாயம் 5 அத்தியாயம் 6
மாமா இன்று ஊரில் இல்லை. அவர் ஊரில் இல்லாத போது நான் அவருடைய புல்லட்டை பயன்படுத்தலாம். மாமா வண்டி எடுத்து பழகி கொள் என்று தான் சொல்வார். அம்மாவுக்கு தான் எப்போதும் பயம். நான் சைக்கிளில் சென்று வரும் வரை வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு இருப்பாள்.
முதல் தடவையாக புல்லட்டை கல்லூரிக்கு எடுத்து செல்வதால் நான் பரூக்கையும் என்னுடன் அழைத்து செல்ல நினைத்தேன். நேற்றே அவனிடம் நான் வந்து அழைத்து செல்ல போவதை சொல்லிவிட்டேன். எனக்காக அவன் காத்துக் கொண்டு இருப்பான். அம்மாவிடம் சொல்லிவிட்டு நான் புல்லட்டை எடுத்து கொண்டு பரூக் வீட்டுக்கு சென்றேன்.
பரூக் வாப்பா பாட்ஷா திண்ணையில் அமர்ந்து பேப்பர் படித்து கொண்டு இருந்தார். என்னை பார்த்து சிரித்து, உள்ளே ஒரு பார்வை பார்த்தார்.
" பரூக் ! சந்திரு பேட்டா வந்தாச்சு. சீக்கிரம் வா....." என்று அவனை அழைத்தான்.
" உள்ள வா சந்திரு..." என்று சொல்லி திண்ணையில் உட்கார சொன்னார். " படிப்பு எல்லாம் எப்படி இருக்கு. பரூக் நல்லா படிக்கிறானா..." என்று தன் மகனை பற்றி என்னிடம் கேட்டார்.
ஒவ்வொரு பெற்றோர்க்கும் தங்கள் பிள்ளைகள் பற்றின ஏதாவது ஒரு கவலை வைத்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் வளர்ந்த பிறகும் பெற்றோர்கள் வெவ்வேறு கவலைகளை மாறினாலும், 'கவலை' என்ற ஒரு விஷயத்தை மனதில் வைத்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதில் எந்த பெற்றோர்களும் விதி விளக்கல்ல.
" நல்லா படிக்கிறான்....!" என்றேன்.
" அவன பத்தின கவலை தான் எங்களுக்கு. அவனுக்கு ஒரு வழி பண்ணி வச்சிட்டா நான் சீக்கிரம் அல்லா கிட்ட போய்டுவேன். " என்று கவலை கலந்த குரலில் சொன்னார்.
" என்ன வாப்பா இப்படி பேசுறீங்க.. பரூக் நல்லா இருக்குறத பார்க்க தான் போறீங்க..." என்றேன்.
நாங்கள் பேசிக் கொண்டு இருக்கையில் பரூக் வெளியே வந்தான். 'போவோம்மா' என்றப்படி சைகை காட்டினான்.
" நாங்க கலம்புறோம் வாப்பா..." என்று இருவரும் சொல்லி விட்டு சென்றோம். பரூக்கின் அம்மா ஆயிஷா வெளியே வந்து " ஜாக்கிரதையா பார்த்து போங்கப்பா..." என்றார்.
நாங்கள் இருவரும் புல்லட்டில் சென்றோம். பரூக்கின் வாப்பா கடலூரில் அருகே மீன் வியாபாரம் செய்து கொண்டு இருந்தவர். வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்படவே சிதம்பரத்திற்கு வந்தார். பரம்பரை வீடும், அதில் வரும் வாடகையில் தான் அவர்கள் குடும்பமே ஒடுகிறது. வியாபாரத்தில் தோல்வியுற்று பரூக்கின் அப்பா நொடிந்து போனதை பற்றி பலமுறை பரூக் என்னிடம் சொல்லியிருக்கிறான்.
" என்னடா சும்மா வர.... வாப்பா ஏதாச்சி தப்பா பேசினாறா....??" பரூக் கேட்டான்.
" சச்சே... அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. பாவம் அவர் கஷ்டத்த யார் கிட்டையாவது சொல்லனும். என் கிட்ட சொன்னாரு அவ்வளவு தான். இதில என்ன தப்புயிருக்கு..." என்றேன்.
" அப்போ எதுக்கு எதுவும் பேசாம்ம வர..." என்றான்.
" சில சமயம் உன்ன பார்த்தா பொறாமையா இருக்கு...." என்று என் மனதில் இருப்பதை கூறினேன்.
நான் சொன்னதை கேட்டு கோபப்படுவான் என்று நினைத்தேன். ஆனால், அவன் தன்னை அறியாமல் சிரித்தான். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
" எதுக்குடா சிரிக்குற.." என்று கேட்டேன்.
" என்னை பார்த்து பொறாமை படுற முதல் ஆள் நீ தான். அதான் சிரிச்சேன்" என்றான்.
" உங்க வாப்பா கஷ்டப்பட்டாளும் உங்க கூட இருக்காரு. நாங்க இவ்வளவு வசதியா இருந்தாலும் சின்ன வயசுல அப்பா என் கண் முன்னாடி செத்தது என்னால மறக்க முடியல்ல..." என்று என் சோகத்தை சொன்னேன்.
" சாரிடா... உன்ன கஷ்டப்படுத்தனும் சொல்லல..." என்று குரல் தாழ்த்தி பரூக் பேசினான்.
என்னால் இதற்கு மேல் பேச முடியவில்லை. இருவரும் பேசிக் கொண்டே புல்லட்டில் கல்லூரிக்கு வந்து விட்டோம். நாங்கள் இருவரும் ஒன்றாக வருவதை பார்த்து நான் முதல் பார்த்த குடுமி வைத்த பையன் ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டு இருந்தான். நாங்கள் இருவரும் அவனை கண்டுக் கொள்ளாமல் வகுப்புக்கு சென்றோம்.
பேராசிரியர் பாலசுந்தர் வகுப்பு. என் கல்லூரியில் எனக்கு மிகவும் பிடித்த பேராசிரியர். அவர் வகுப்புக்கு தவறாமல் சென்று விடுவேன். அவரிடம் பாடத்தை தவிர மற்ற விஷயங்களை பேசுவது எனக்கு பிடிக்கும். அவ்வளவு தகவல்களையும் விரல் நுணியில் வைத்திருப்பார்.மொழிப் போரில் ஈடுப்பட்டவர் என்று ஒரு முறை பரூக் கூறியிருக்கிறான். அப்படி என்றால் இவர் தி.மு.கவை சேர்ந்தவராக தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
இன்று அவர் வகுப்பில் பாடத்தில் இல்லாத ஒன்றை பற்றி பேச போவதாக சொன்னார். அப்படி என்ன சொல்ல போகிறார் என்ற ஆர்வத்துடன் அமர்ந்திருந்தேன்.
" நீங்கள் எத்தனை பேர் சிதம்பரம் நடராஜன் கோயில் சென்று இருக்கிறீர்கள் ? " என்று கேட்டார்.
நான் சிதம்பரத்திலே பிறந்து வளர்ந்தவன். வாரத்துக்கு ஒரு முறையாவது நடராஜன் கோயில்லுக்கு போகாமல் இருந்ததே இல்லை. ஒவ்வொரு மாணவர்கள் ஒவ்வொரு எண்ணிகையை சொல்ல என்னால் மட்டும் சரியாக சொல்ல முடியவில்லை.
" இத்தனை முறை சென்ற நீங்கள். அங்கு திருப்பாவை வாசித்து பார்த்திருப்பீர்களா...?" என்று கேட்டார்.
இதுவரை அதை பற்றி யோசிக்காத நான் அவர் சொன்ன பிறகு யோசித்து பார்த்தேன். ஆம்... நடராஜன் கோயிலில் தமிழ் திருப்பாவை யாரும் பாடி நான் பார்த்ததில்லை. "ஏன் அப்படி ?" என்று நான் கேட்கும் முன் அவரே பதில் கூறினார்.
" தமிழுக்கு நாம் கொடுக்கும் மாரியாதை அவ்வளவு தான். தமிழை தாய் மொழியாக கொண்ட மாநிலத்தில் பிறந்த நாம், ஏன் கோயிலில் சமஸ்கிரத்தில் அர்ச்சனை செய்யப்படுகிறது ஒரு முறையாவது யோசித்து பார்த்திருப்பீர்களா...? " என்று இன்னொரு கேள்வி கேட்டார்.
நான் இதுவரை யோசிக்காததை எல்லாம் இவர் சொல்லிக் கொண்டு இருந்தார். நம் மாநிலத்தில் தாய்மொழி தமிழ் என்றால் மற்ற மொழி அந்நிய மொழி தானே?? ஏன் சமஸ்கிரத்தில் அரச்சனை செய்ய வேண்டும். "நம் கடவுளுக்கு தமிழ் தெரியுதா என்ன...?" என்று எனக்குள் கேட்டு கொண்டேன்.
" தமிழை பேசி விட்டு தமிழை எதிர்க்கும் ஒரே இனம் தான் பார்ப்பன இனம். அவர்களுக்கு தெய்வ பாஷையான சமஸ்கிரத்தில் அரச்சனை செய்தால் தான் கடவுளுக்கு காது கேட்கும். மற்ற பாஷையில் அர்ச்சனை செய்தால் கடவுளுக்கு காது கேட்காதாம்" என்று பூஜை முறையை கேலி செய்தார்.
அண்ணாதுரை தான் கடவுள் இல்லை என்று சொல்பவர் என்று மாமா சொல்லியிருக்கிறார். இவரும் அதே மாதிரி சொல்ல வருகிறார் போல் தெரிந்தது.
" மாணவர்களே ! தமிழை பாடமாக கொண்ட நீங்கள். சமுதாயத்தில் பார்ப்பனர்களிடம் இருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்கள் சொல்லும் கடவுளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் " என்று சொன்னார்.
அவர் பேச பேச எனக்கு கேட்க வேண்டும் போல் இருந்தது. அவர் பேசுவதை கேட்டு யாராவது தலைமை பேராசிரியரிடம் பாலசுந்தர ஆசிரியரை பற்றி சொல்லிவிட்டால் நிலைமை என்ன ஆகும் என்று கவலை இல்லாமல் இருந்தார்.
" கடவுள் 'இல்லை' என்று சொல்பவன் 'இல்லை' என்ற ஒற்றை வார்த்தையில் நிறுத்திவிடுகிறான். 'கடவுள் இருக்கிறான்' என்று சொல்பவன் ஏன் உழைக்க வேண்டும். கடவுளே மூன்று வேலை உணவு வைத்துவிடுவாரே ! உழைத்தால் தான் உணவு என்று தெரிந்தவர்களுக்கு, வணங்கி வராத கடவுளுக்காக ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும்" என்றார்.
இன்று ஒரு முடிவோடு தான் கல்லூரிக்கு வந்திருக்கிறார் என்று புரிக்கிறது. பார்ப்பனர்களையும், சமஸ்கிரத மொழியையும் இப்படி கடுமையாக சாடி பேசினார். அவர் சொன்ன பல விஷயங்கள் என்னை சிந்திக்க வைத்தது. ஒரு வேலை இதற்கு பேர் தான் 'பகுத்தறிவா' என்று நினைத்துக் கொண்டேன்.
" கடவுள் வணங்குபவன் கடவுள் எங்கே இருக்கிறார் என்று ஆன்மீக தேடலில் வாழ்க்கையை செலவு செய்கிறான். கடவுள் இல்லை என்று நினைப்பவன் 'இல்லை' என்று ஒரு சொல்லை சொல்லிவிட்டு தன் வாழ்க்கையில் இருக்கும் மற்ற வேலைகளை கவனிக்கிறான்." என்றார். தொடர்ந்து, " கடவுள் இல்லை என்று சொல்பவனை விட, கடவுள் இருக்கிறார் என்று சொல்பவன் தான் கடவுளை அதிகமாக அவமாணம் படுத்துகிறான்." என்று தன் பேச்சை தொடர்ந்து கொண்டே இருந்தார்.
ஒரு முறை 'கம்பராமாயணம்' பற்றி வகுப்பெடுக்கும் போது அதில் வரும் பாடலை எடுத்திருந்தார்.
'தாய் உரைகொண்டு தாதை உதவிய தரணிதன்னை,
தீவினை என்ன நீத்து, சிந்தனை, முகத்தில் தேக்கி,
போயினை என்றபோழ்து, புகழினோய்! தன்மை கண்டால்,
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, தெரியின் அம்மா.
ராமனின் சிறப்புகளை மற்ற எல்லா இடத்திலும் கூறி, ராமனின் பெருமையை மிக ஆணித்தரமாக நிலைநாட்டி விட்டு, வெகு சுலபமாக, ஆயிரம் ராமருக்கு ஈடாகா என்ற ஒரு சொல்லில் பரதனின் குணத்தை குறிப்பால் உணர்த்திய பாடல். கம்பனின் பாடலை அழகான நெஞ்சில் பதியவைக்கும் ஆற்றல் அவரிடம் இருந்தது. அதானாலே அவரை எனக்கு அவரை பிடிக்கும். இதுவரை பிடித்ததை விட இன்று தான் அவரை எனக்கு அதிகமா பிடித்தது. எவ்வளவு விஷயங்கள் பேச்சிலே சிந்திக்க வைத்திருக்கிறார்.
" பேராசிரியர் எப்படி புரட்சிக்கரமாக பேசுகிறார் என்று நினைக்கிறீர்களா. இன்று முதல் நான் வேலையில் இருந்து ஓய்வு பெருகிறேன். இது தான் என் கடைசி வகுப்பு. இன்று ஒரு நாள் என் மனசாட்சிக்கு தகுந்தாற்போல் பாடம் எடுத்த திருப்தி உள்ளது" என்று இன்பம் கலந்தத சோகத்தில் பாலசுந்தரம் பேராசிரியர் சொன்னார்.
எவ்வளவு பெரிய பேராசிரியர். மிக பெரிய விஷயத்தை சர்வசாதாரனமாக சொல்லியிருக்கிறார். அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மனதில் ஈட்டி போல் விழுந்தது. இதுவரை இப்படி "ஒரு வகுப்பை ஏன் எடுத்ததில்லை. இதற்கு முன் ஒரு முறை கூட பார்ப்பனர்களை பற்றி பேசியதில்லை..." என்று என் மனதில் நினைத்துக் கொண்டேன்.
" இது வரை பார்ப்பனர்களை பற்றி பேசாமல் அமைதியாக இருந்த நான், இப்போது இப்படி பேசுகிறேன் என்றால் எனக்கு கிடைக்க போகும் ஓய்வு தான். இனி எனக்கு வேலை விட்டு செல்ல வேண்டுமோ என்ற பயமில்லை." என்று சொல்லிவிட்டு வகுப்பை விட்டு சென்றார்.
இதுவரை பேராசிரியர் பாலசுந்தரத்துக்கு தன் வேலை ஒரு விலங்காக இருந்திருக்கிறது. அந்த விலங்கு உடைந்த சந்தோஷம் அவர் பேச்சி தெரிந்தது.
நான் அவரிடம் பேச வகுப்பை விட்டு வெளியே வந்தேன். தன் கொள்கை பரப்புவதில் மிக தீவிரமாக இருப்பதால், அவர் செல்லும் பாதையை பார்த்துக் கொண்டு இருந்தேன்.
பகுத்தறிவு பக்கம் என் மனம் செல்ல தொடங்கிய போது பெரிய இடி வந்து இறங்கியது. அது எனக்கு மட்டுமல்ல... தமிழ்நாட்டிற்கே இடி போல் அமையும் செய்தி !
No comments:
Post a Comment