வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, February 3, 2012

உலக சினிமா : Bad Education

உண்மையான கல்வி என்பது என்ன ? அறியாமையை போக்க வேண்டும், சிந்தனையை தூண்ட வேண்டும், அறிவை வளர்க்க வேண்டும், நல்லது கேட்டது தெரிந்துக் கொள்ள வேண்டும். முதல்வராகி மேடையில் அமர்ந்தாலும் படிப்பு சொல்லிக் கொடுத்த ஆசிரியர் வந்தால் தன்னை அறியாமல் எழுந்து நிற்கும் மரியாதை கொடுக்க தோன்றும். அந்த அளவிற்கு, வாழ்க்கையில் நம்முடனே பயனிக்கும் கல்வியை கற்று தரும் ஆசிரியர் மீது நாம் மரியாதை வைத்திருக்கிறோம்.

புனிதமான படிப்பை சொல்லி தரும் ஆசிரியர் கெட்டவராக அமைந்தால் அவனிடம் படிக்கும் மாணவர்களின் கதியை பற்றி சொல்லும் படம் தான் "Bad Education".

1980ல், என்ரிக் என்ற இளம் திரைப்பட இயக்குனர் தனது உதவியாளருடன் அடுத்த படத்திற்கான கதை விவாதித்துக் கொண்டு இருக்கிறார். அப்போது, ஒரு மேடை நடிகன் தன் கதையோடு என்ரிக்கை சந்திக்க வருகிறான். அந்த மேடை நடிகன், "உன்னுடன் படித்த பழைய நண்பன் இங்னசியோ" என்கிறான். என்ரிக் தன் பள்ளி நண்பனை பார்த்ததும் அடையாளம் கண்டுக் கொள்ள முடியவில்லை. காலம் இருவரின் உருவத்தை அப்படி மாற்றியிருக்கிறது. இங்னசியோ, தன்னை நாடக வட்டத்தில் "ஏன்ஜல்" என்று அழைப்பதாக கூறுகிறான். தன் கையில் இருக்கும் "தி விசிட்" என்ற கதையை கொடுத்து இதை அவனின் அடுத்த படத்துக்கு பயன்படுத்தி, தனக்கும் ஒரு பாத்திரம் தர வேண்டும் என்று வேண்டுக்கோள் விடுக்கிறான். அந்த கதை நம் பள்ளி நாட்களில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து எழுதப்பட்ட கதை என்கிறான். என்ரிக் படித்து விட்டு தன் கருத்தையும், முடிவையும் சொல்லுவதாக சொல்கிறான்.



'தி விசிட்' கதை 1977ல் தொடங்குகிறது. இங்னசியோ, கதையில் தன் பெயரை “சாரா” என்று மாற்றி, திருநங்கையாக மாறி மேடையில் நடித்து வாழ்பவளாக எழுதியுள்ளான். ஒரு நாள் ஹோட்டலில் குடித்து வரும் இளைஞனிடம் உடலுறவு கொண்டு அவனிடம் இருக்கும் பணத்தை திருட முயற்சிக்கிறாள் சாரா. ஆனால், அந்த இளைஞன் தன் பள்ளி நாட்களின் நண்பன் என்ரிக் என்று தெரிந்ததும் திருடிய பணத்தை அங்கையே வைத்துவிடுகிறாள். தன் வாழ்க்கையை கதையாக எழுதி சாரா தன் பள்ளி பாதரியார் மனோலோவை சந்திக்கிறாள். சாரா பாதரியார் மனோலோவிடம் தன்னை அறிமுகப்படுத்தியதும் கதை பின்னோக்கி செல்கிறது.

1964ல், இனிமையான குரலில் இங்னசியோ பாடுவதுப் போல் தொடங்குகிறது. பாதரியார் தனது காம பார்வையை இங்னசியோ மீது வைத்திருந்தார். இங்னசியோவின் முதல் காதலும், நண்பனும் என்ரிக் தான். ஒரு நாள் என்ரிக்கும்,இங்னசியோவும் ஒன்றாக இருப்பதை பார்த்த பாதரியார் மனோலோ என்ரிக்கை பள்ளியில் விட்டு விரட்டுவதாக மிரட்டுகிறார். என்ரிக்கை காப்பாற்ற, இங்னசியோ பாதரியார் ஆசைக்கு இணங்கிறான். இருந்தும், பாதரியார் பொறாமை குணத்தால் என்ரிக் பள்ளியை விட்டு விரட்டப்படுகிறான்.

'தி விசிட்' கதையை படித்து முடித்த என்ரிக், அதை படமாக்க முடிவெடுக்கிறான். ஆனால், இங்னசியோ என்கிற ஏன்ஜல் 'சாரா' பாத்திரத்தை தான் நடிக்க வேண்டும் என்று நிபந்தனை வைக்கிறான். என்ரிக் அதை மறுக்க, இங்னசியோ தன் கதையை தன்னுடன் எடுத்து செல்கிறான். என்ரிக் பள்ளிநாட்களில் தான் காதலித்த இங்னசியோவுக்கும், இப்போது இருக்கும் இங்னசியோவுக்கும் பல மாற்றங்கள் இருப்பதை உணர்கிறான். அவனைப் பற்றி விசாரிக்க கிராமத்தில் இருக்கும் இங்னசியோவின் அம்மாவை பார்க்க செல்கிறான். அங்கு தான் என்ரிக்கு மிக பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. உண்மையான இங்னசியோ இறந்து நான்கு வருடமாகிறது. அவன் பெயரை சொல்லிக் கொண்டு வந்தவன் அவனின் சகோதரன் ‘ஜூஅன்’.

மீண்டும் நகரத்துக்கு வந்த என்ரிக், ஜூஅன்னுக்கு தன் படத்தில் வாய்ப்பு அளிப்பதாக சொல்லுகிறான். அதுவும் அவன் விருப்பமான 'சாரா' என்ற முக்கிய பாத்திரம் தருவதாக உறுதி அளிக்கிறான். இருவரும் கட்டி தழுவி உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள். என்ரிக் ஜூஅன் கொண்டு வந்த கதையில் சில மாற்றங்கள் செய்கிறான். இறுதிக் காட்சியில், பாதரியார் மனோலோவை பணத்திற்காக மிரட்டும் சாராவை தன் உதவியாளர் துணையோடு கொலை செய்வது போல் காட்சி எடுக்கிறார். காட்சி படமாக்கிய பிறகு, "சாரா"வாக நடித்த ஜூஅன் தன்னையும் அறியாமல் அழுகிறான்.

தன் அறைக்கு வரும் என்ரிக், பெரெங்கர் என்ற மனிதரை தன் அறையில் பார்க்கிறான். அவன் தான் தன் கதையில் வரும் பாதரியார் மனோலோ பாத்திரத்தின் உண்மையான உருவம். என்ரிக்கிடம் உண்மையை சொல்ல வந்திருப்பதாக பாதரியார் பெரெங்கர் சொல்லுகிறான். அவன் எடுத்த காட்சிக்கும், நடந்த உண்மைக்கு பெரிய தூரம் இல்லை என்பதை கூறுகிறான்.

திருநங்கையான இங்னசியோ தன் "தி விசிட்" கதையை வைத்து பாதரியார் பெரெங்கரை மிரட்டியிருக்கிறாள். அதற்கு பத்து லட்சம் பணம் தரவில்லை என்றால், அந்த கதையை புத்தகமாக கொண்டு வரப்போவதாக கூறுகிறாள். அவளை பார்க்க வந்த பெரெங்கர் அவளின் தம்பி ஜூஅன் மீது ஆசைக் கொள்கிறான். இருவரும் உறவும் வைத்துக் கொள்கிறார்கள். இங்னசியோ கேட்ட பணம் பாதரியார் பெரெங்கரால் தர முடியவில்லை. ஜூஅன்னுக்கும் பணம் வேண்டும். அதனால், இங்னசியோ உட்கொள்ளும் போதை மருந்தில் மேலும் போதை தரக்குடிய பொருளை சேர்க்கிறான் ஜூஅன். அதிக போதை மருந்து உண்டதால் இங்னசியோ இறக்கிறாள். இங்னசியோ இறந்ததும், ஜூஅன் பாதரியார் பெரெங்கரை விட்டு விலகி செல்கிறான். தன்னை தொடர்ந்தால் கொலை செய்வதாக மிரட்டுகிறான்.

இங்னசியோவுக்காக அவன் தம்பி ஜூஅனுக்கு வாய்ப்பு கொடுத்த என்ரிக்கு இந்த உண்மை அதிர்ச்சியாக இருந்தது. தன் வீட்டில் தங்கி இருந்த ஜூஅன்னை விரட்டி அடிக்கிறார் என்ரிக். வெளியே செல்லும் போது, ஜூஅன் இங்னசியோ இறக்கும் போது எழுதிய கடிதத்தை என்ரிக்கிடம் கொடுக்கிறான். அதில், " அன்புள்ள என்ரிக், எல்லாம் நலமாக முடிகிறது..." கடிதம் முடிப்பதற்குள் இறந்திருக்கிறாள் இங்னசியோ. அந்த கிதம் பார்த்ததும் கண்ணில் நீர் தழும்ப நிற்கிறான் என்ரிக்.

"என்ரிக் எடுத்த படம் மிக பெரிய வெற்றிப்பெறுகிறது"

"ஜூஅன் சகோதரனை கொன்ற குற்றவுணர்ச்சி இல்லாமல் பெரிய நடிகனாகிறான். ஆனால், இப்போது ஜூஅன் சின்னத்திரையில் வேலை செய்துக் கொண்டு இருக்கிறான்"

"பாதரியார் பெரெங்கர் ஜூஅன் தன்னுடன் வாழ வேண்டும் என்று அவனை பின் தொடர்ந்தே வாழ்க்கை முடிந்து இறக்கிறார்"

போன்ற வாசகங்கள் திரையில் ஓட படம் முடிகிறது.

நீங்கள் கலாச்சார காவலர்கள் என்றால் இந்த படத்தை பார்க்காமல் இருப்பது நல்லது. இதில், ஆபாசமாக நடிக்கும் பெண்கள் இல்லை. இன்னும் சொல்லபோனால் இந்த படத்தில் பெண்களே இல்லை. ஆணுக்கும், ஆணுக்கும் இருக்கும் காதல், காமத்தை தான் அதிகம் விவரிக்கிறது. ஆணுக்கும், ஆணுக்கும் இருக்கும் உடலுறவு காட்சியைக் மேலோட்டமாக தான் எடுத்திருக்கிறார் படத்தின் இயக்குனர் பெட்ரோ அல்மோடோவர். கிறிஸ்த்து மடத்தில் நடக்கும் பல உண்மைகளை இந்த படம் தோலுரித்துள்ளார்.

57வது கேன்ஸ் திரைப்பட விழா பலரது பாராட்டுகள் பெற்றதோடு இல்லாமல், அமெரிக்காவில் ஸ்பெயின் மொழி படங்களில் அதிக வசூல் செய்த Bad Education படம் என்பது குறிப்பிடதக்கது.

எத்தனையோ மாணவர்கள் ஆசிரியர் செய்யும் பாலியல் கொடுமைகளை பெற்றோர்களிடம் சொல்லவும் முடியாமல், படிப்பை கவனம் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். ஓரின சேர்க்கையை எதிர்ப்பவர்கள் சிறுவர்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமையை ஏன் எதிர்த்து குரல் கொடுப்பதில்லை. கலாச்சாரத்தை காக்க நினைப்பவர்கள் அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டும் என்ற அக்கரை இல்லாத மிக வேதனையாக இருக்கிறது.

சிறுவர்/சிறுமிகள் மீது வன்கொடுமை செய்யும் ஆசிரியர்கள் தான் வன்முறை தூண்டிவிடும் ஆயுதங்களாக இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

2 comments:

Thava said...

என் வணக்கம்.
கதையை படிக்கவே மிகவும் வித்தியாசமாக இருக்கிறது..அதனை தங்களது எழுத்துக்களின் வழியே சுவாரஸ்யமாக எழுதியுள்ளீர்கள்..படம் பார்க்க வேண்டும்,ஆனால் எப்பொழுது என்றுதான் தெரியவில்லை.கண்டிப்பாக பார்ப்பேன்.
சிறந்த படத்தை தங்கள் பாணியிலேயே அறிமுகம் செய்துவத்ததற்கு என் நன்றிகள்.

ADMIN said...

எளிமையான எழுத்து நடையில், சுவராஷ்யமான பதிவு. படத்தைப் பற்றிய தங்களின் பார்வையில் எழுதியது வெகுவாக கவர்ந்தது. நன்றி குகன் அவர்களே..!!

LinkWithin

Related Posts with Thumbnails