உயிர்மை பதிப்பகத்தின் கவிதை தொகுப்பு நூல் என்பதால் பின் நவீனத்துவ கவிதைகளை அதிகம் எதிர்பார்த்தேன். ஆனால், இந்த நூல் உரைநடை வடிவில் எழுதப்பட்ட கவிதை.
திரைப்பட பாடலில் ஊன்றிவிட்டவர்களுக்கு தங்கள் கருத்து, ஏக்கம், ஆதங்கம் - இது போன்ற கவிதை புத்தகங்களில் தான் சொல்ல முடிகிறது. வரிகளை மாற்ற சொல்லவும், மற்றவர் சொல்லும் வார்த்தைகளை போடவும் இதில் யாரும் தலையிட முடியாது. இந்த கவிதை தொகுப்பில் நா.முத்துகுமார் தான் ஒரு சினிமா எழுத்தாளர் என்று பிம்பத்தில் இருந்து விடுபட்டு சராசரி மனிதன் மனதில் இருக்கும் நினைவுகளை, ஏக்கங்களை பிரதிபலித்து எழுதியிருக்கிறார்.
இந்த கவிதை நூலில் நான் ரசித்த ஒரு சில வரிகள்.
"தனலட்சு தட்டச்சுப் பயிலகம்" தலைப்பில்
காயத்ரிகளுக்கு வய்தானாலும்
காயத்ரி என்ற பெயருக்கு
வயதாவதேயில்லை
ஐந்தாம் வகுப்பு 'அ' பிரிவு தலைப்பில்
நாங்கள் படித்த அதே பள்ளியில்
ஆசிரியராக பணியாற்றுகிறான்
"நெனச்ச் வேலையே செய்யுறே
எப்படியிருக்க மாப்ளே ?" என்றேன்,
சாக்பீஸ் துகள் படிந்த விரல்களால்
என் கையைப் பிடித்து
"படிச்சி முடிச்சதும்
என்ன ஆகப்போறீங்க"ன்னு
என் மாணவர்களிடம்
நான் கேட்பதே இல்லை" என்றான்.
சபையறிதல் தலைப்பில்
கல்யாணத்தில்
கலந்துக் கொள்வதைக் கூட
நகைகள் தான் தீர்மானிக்கின்றன
தம்பியின் நாட்குறிப்பிலிருந்து ஒரு ஞாயிற்றுக்கிழமை தலைப்பில்
"தம்பியாய் இருப்பதன் கஷ்டம்
தம்பிக்கு தான் தெரியும்"
என்று தனக்குள் சொல்லியப்படி
வாலாட்டுகிறது நாய்
பல கவிதைகள் பாலியத்தின் பிரதிபலிப்பை உணர்த்துகிறது. வாழ்க்கையில் நாம் எவ்வளவு தூரம் சென்றாலும் பாலியம் ஒரு நிழல் தொடர்வதை இந்த புத்தகம் காட்டுகிறது.
இறுதியாக,'புத்த[க]யா' என்ற தலைப்பில் அவர் எழுதிய சில வரிகள்....
புத்தக வரிகளில்
கோடு போட்டுப் படிக்கிறார்கள்
எங்கேயோ இருக்கும் எழுத்தாளனுக்கு
இங்கிருந்தே கைகுலுக்கிறார்கள்
இந்த பதிவில் நான் சொன்ன நா.முத்துக்குமாரின் கவிதைகள் அனைத்தும் கோடு போட்டு இருந்த இடத்தில் அவருடன் கைகுலுக்கிய கவிதைகள்.
விலை.60, பக்கங்கள் : 96
உயிர்மை பதிப்பகம்
No comments:
Post a Comment