
அந்த பதிவர் சொன்னார் என்பதற்காக "ஜனகணமன" நூலை படித்தேன். காந்தி, நாதுரம் கோட்சே என்ற இருவர் மனநிலையில் நன்றாக எழுதியிருக்கிறார். குறிப்பாக கோட்சே காந்தியை கொல்ல துடிக்கும் மனநிலையில் பேசும் வசனங்கள் இன்றும் காந்திக்கு எதிராக இருந்துக் கொண்டு தான் இருக்கிறது. ஒரு பகுதி முடியும் வார்த்தையில், அடுத்த பகுதி தொடர்வது போல் எழுதியிருப்பது பாராட்டுக்குறியது. காந்தியை பற்றி மூன்று தலைமுறைகளின் வாதத்தை நன்றாக பதிவு செய்திருக்கிறார். ஆனால், அதற்கான பதில் தான் இல்லை.
ரமணன் ஒருவனை தவிர இந்த புத்தகத்தில் வரும் எல்லா பாத்திரங்கள் நிஜப்பாத்திரங்கள். உண்மையான சம்பவங்கள். 95% உண்மை. 5% மட்டுமே கற்பனை கலந்திருப்பதால் இதை 'நாவல்' என்று கொள்ள முடியுமா தெரியவில்லை. ஆனால், வரலாறு புத்தகமாக கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளலாம்.
கிழக்கு பதிப்பகத்தின் ஆரம்பகாலத்தின் புத்தக பதிப்பு. Crown size, ISBN இல்லை. ஆனால், அதே எளிமையான நடையில் இருக்க வேண்டும் என்பதில் கவனம் இன்று வரைக்கும் அவர்கள் பதிப்பிக்கும் புத்தகத்தில் இருக்கிறது. இப்போது இரண்டாம் பதிப்பு 'Demy Size'யில் கிடைக்கிறது.
கல்லூரி படிக்கும் காலத்தில் எனக்கு காந்தி பிடிக்கும். நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" கவிதை நூல் முதல் கவிதையே "மகாத்மாவுக்காக அழுகிறேன்" என்ற கவிதை தான். ஆனால், பல புத்தகங்கள் வாசிப்புக்கு பிறகு காந்தி மீது எனக்கிருந்த எண்ணம் மாறிவிட்டது. அவர் எனக்கு சுயநலவாதியாக தான் தெரிந்தார். கடவுள் இருக்கிறா ? இல்லையா ? என்ற வாதம் இருப்பது போல் காந்தி மகானா ? சுயநலவாதியா ? என்ற வாதம் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த புத்தகத்தை படிக்க சொன்ன பதிவரை பற்றி சொல்ல மறந்திட்டேனே...!! வேறு யார்.. நம்ப 'லக்கி' தான்.
No comments:
Post a Comment