ஒவ்வொரு புத்தக வாசிப்பும் வாசகனாகிய எனக்கு ஒரு அனுபவம். படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும், தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் கல்லூரி படிப்பு முடிந்தவுடனே மூட்டை கட்டி வைத்துவிட்டேன். இப்போது, புத்தகங்களில் என்னுடைய தேடல் சிந்தனையை தூண்டும் விஷ்யங்கள், தகவல்கள், எழுத்துக்களை வித்தியாசமாக கையாள வேண்டிய யூக்திகளை கற்பது தான்.
எப்படியும் மற்றவர்கள் பாராட்டும் படி நல்ல படைப்பு எழுத வேண்டும். நான் படிக்கும் ஒவ்வொரு நூலும் எனக்கு சொல்லி தரும் ஆசான். ஒரு நூலை படித்து முடித்து விட்ட பிறகு அதன் தாக்கத்தால் நான் எதுவும் எழுதவில்லை என்றால் அந்த நூல் படித்ததற்கு பயனில்லை என்று நினைப்பேன். இப்படி புத்தகம் படிக்கும் போது எனக்குளே சில நிபந்தனை வைத்து தான் படிப்பேன். அப்படி என்னுடைய தேடலுக்கும், உள் நிபந்தனைக்கும் சமிபத்தில் நான் படித்த புத்தகம் 'இரா.முருகன் கதைகள்'.
“சிறுகதை தொகுப்பு நூலை படிப்பதாக இருந்தால் எல்லா கதைகளும் ஒரே மூச்சில் படித்து விட கூடாது. கற்கண்டு மாதிரி இரண்டு, மூன்று கடித்து விட்டு, பிறகு தொடர வேண்டும். படித்து முடித்து விட்ட பிறகு அந்த கதையை பற்றி உணர வேண்டும்" என்று ஒரு மூத்த எழுத்தாளர் பேசியதை கேட்டுயிருக்கிறேன். காரணம், கதையில் வரும் பாத்திரம், சம்பவம் என்று எதுவும் நம் மனதில் தங்காமல் போய்விடும். இதை அனுபவ ரீதியாக 'இரா.முருகன் கதைகள்' படிக்கும் போது உணர்ந்தேன்.
பெரிய புத்தகம். 80 கதைகள். எவ்வளவு சீக்கிரம் படித்து முடிக்க வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்க வேண்டும் நினைத்ததில் பாதி கதைகள் மனதில் ஒட்டாமல் இருந்தது. சில கதையின் முடிவில் என்ன சொல்ல வருகிறார் என்று கூட புரியாமல், மீண்டும் இன்னொரு முறை படிக்க வேண்டியதாக இருந்தது. எந்த புத்தகத்தை படிக்க காட்டாத அவசரத்தை இந்த புத்தகத்தை படிக்க ஏன் காட்டினேன் என்று புரியவில்லை.
‘இடப்பெயர்ச்சி’ என்ற கதையில்.... சீங்கப்பூரில் வேலை செய்யும் இளைஞனான அமுதனுக்கு அம்மாவிடம் இருந்து கடிதம் வருகிறது. அவன், அவன் தங்கள் வாழ்ந்து வளர்ந்த வாடகை வீட்டை இடைக்க போவதாக வருத்தப்பட்டு கூறுகிறார். அமுதனும் இடிக்கப் போவதை நினைத்து கவலைப்படும் வேலையில் சீன பெண் மூலம் 'நினைவு சின்னங்கள் சாப்பாடு போடாது' என்பதை உணர்கிறான். 'அம்மாவிடம் வேறு வீடு பார்க்கலாம்' என்று பதில் கடிதம் எழுதுவது போல் கதை முடிகிறது.
சிறுகதை நூல் விமர்சனத்தில் ஒரு கதையை குறிப்பிட்டதோடு நிறுத்துவது தான் சரி என்று நினைக்கிறேன். கதைகளை பற்றி விளக்கிவிட்டால், வாங்கி படிப்பவர்களுக்கு ஸ்வாரஸ்யம் இருக்காது. அதிக விமர்சனம் நூலை வாங்க விடாமல் செய்துவிடும். அந்த தவறை நான் செய்யவிரும்பவில்லை.
இந்த நூலை எழுதிய இரா.முருகன் அவர்கள் பெருமைக்குரிய 'கதா' விருது பெற்றவர். இவரது 'அரசூர் வம்சம்' நாவல், திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் பரிசைப் பெற்றது. அவருடைய எழுத்து நடை, சொல் நடை பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை என்பது அவர் பெற்ற விருதகளே சான்று.
அவருடைய எழுத்து நடையும், சொல் நடையும் சொல்லுவதை விட ஒரு வாசகனாக குறிப்பிட்டு சில குறைகளை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
'அவரது உரைநடையில் 'ஜம்ப் கட்' உத்தி வெற்றிகரமாக கையாளப்பட்டுருகிறது. இது நனவோடை அல்ல. ஆனால், திட்டமிட்ட, எத்தகவலும், அநாவசியனாகப் பயன் படுத்தாத சேர்க்கை கொண்ட நடை' என்று முன்னுரையில் அசோகமித்திரன் இந்த சிறுகதை தொகுப்பை பற்றி குறிப்பிடுகிறார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சில இடங்களில் 'ஜம்ப் கட்' உத்தி வெற்றிகரமாக இல்லை என்பதை சொல்லியாக வேண்டும்.
‘இடப்பெயர்ச்சி’ கதையில்
"குழந்தையை கீழே போட்டுடாதேடா. ஏற்கனவே பொறந்ததும் அப்பாவை முழுங்கியாச்சுன்னு பேரு வாங்கியிருக்கா. கை, கால் சரியில்லாட்டா நாளைக்கு அவளுக்கு ஒரு கல்யாணம் ஆக வேண்டாமா ? குழந்தையை அப்படி தூக்காதேடா ! எறக்கிவிடு காவேரிய"
இந்த வசனம் வந்த அடுத்த வரியில்...
"காவேரிக்கு அடுத்த மாதம் வளைகாப்பு. அம்மாவின் கடிதம் வந்தது"
இப்படி ஒரே கதையில் சில இடங்களில் வாசகனின் சிந்தனைக்கு விடுவதால் அவர் சொல்ல வரும் விஷயத்தை வாசகன் மாற்றி சிந்திக்க வாய்ப்புண்டு.
இரா.முருகன் சீங்கப்பூரில் இருந்தவர் என்பதால் பெரும்பாலான கதைகள் சீங்கப்பூரில் நிகழ்வது போல் அமைகின்றன. அதேப் போல், கதையில் வரும் பெருபாலான பாத்திரங்கள் பிராமணர்களாக இருக்கிறார்கள். பிராமண குடும்பத்தை சுற்றி கதை நகர்கிறது. கதையில் வரும் கதாபாத்திரங்கள் பதிய வேண்டுமே தவிர , கதாபாத்திரத்தின் மதம் பதிய கூடாது.
பார்ப்பன எதிர்பாளர்களுக்கு கண்டிப்பாக இந்த சிறுகதைகள் பிடிக்காது. ஆனால், பார்ப்பன ஆதரவாளர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.
மற்றப்படி பெரிதாக குறை இந்த புத்தகத்தில் ஏதுமில்லை."இரா.முருகன் கதைகள்" நன்றாக கதை சொல்கிறது.
நூலை வாங்க…
முகவரி :
கிழக்கு பதிப்பகம்
(An imprint of New Horizon Media Pvt. Ltd.,)
33/15, எல்டாம்ஸ் ரோடு,
2 வது தளம், ஆழ்வார் பேட்டை,
சென்னை-600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701
2 comments:
மிகவும் அருமையானதும் தெளிவானதுமான விளக்கம்.
பதிவிற்கு நன்றி. இந்த புத்தகம் இரவல் கிடைக்குமா..?
Post a Comment