வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Sunday, March 1, 2009

என்னால தாங்க முடியலே சார்...!

"சீக்கிரம் வாம்மா பார்கவி.... ரெயில் கிளம்பப் போகுது..." - தன் மனைவியை அவரப்படுத்திக் கொண்டே விரைந்தான் சினிவாசன்.

"குழந்தைய வாங்கிக்கோங்க... என்னால வேகமா நடக்க முடியல..." - குழந்தையை நீட்டினாள் பார்கவி.

"வாடா செல்லம்... நாம போவோம்... இந்த அம்மா வேண்டாம்..." என்று கூறியபடி தன் குழந்தையை வாங்கினான்.

வெள்ளிக்கிழமை என்றால் எழும்பூர் ரெயில்வே நிலையத்தின் கூட்டத்தை பற்றி சொல்லவே வேண்டாம். இரண்டு நாள் விடுமுறை என்றாலே ட்ரெயின் டிக்கெட் கிடைக்காது. புத்தாண்டு விடுமுறை வேறு... எழும்பூர் நிலையம் முழுக்க வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வாங்கி பலர் காத்துக் கொண்டு இருந்தனர்.

நல்ல வேளை சீனிவாசனுக்கு கடைசி நிமிடத்தில் டிக்கேட் கன்ஃபார்ம் ஆனது. சேர்ந்து கிடைத்த இந்த நான்கு நாள் லீவை திருச்சியில் இருக்கும் தன் பெற்றோர்களுடன் கழிக்க தன் மனைவி, குழுந்தையுடன் செல்கிறான்.

ராக்போர்ட் ட்ரெயின் புறப்படும் நேரத்தில் சீனிவாசன், பார்கவி ரயிலை பிடித்தனர்.

"பார்கவி ! கோச் நம்பர் எஸ்-10 தானே...சீட் நம்பர் என்ன...?"

"கோச் நம்பர் எஸ்-10 தான் கொஞ்சம் இருங்க... டிக்கெட்டைப் பார்த்து சீட் நம்பரைப் சொல்றேன்..." என்றபடி தன் பையில் இருந்து டிக்கெட்டை எடுத்து, " 51, 52...ங்க " - என்றாள்.

கோச் நம்பர் எஸ்-10க்குள் ஏறி தங்கள் சீட்டை சரிபார்த்தபடி இருவரும் அமர்ந்தனர். குழந்தை அம்மாகிட்ட போக வேண்டும் என்பது போல் கையை அம்மாவை நோக்கிக் காண்பித்ததால் பார்கவியிடம் குழந்தையைக் கொடுத்தான்.

பின்பு தங்கள் சீட்டுக்கு அடியில் தாங்கள் கொண்டு வந்த பேக்குகளைப் பத்திரப்படுத்தினான்.

இவர்கள் இருந்த சீட்டிற்கு எதிர்புறத்தில் ஒரு முதியவரும் இருந்தார். அவருக்கு அனேகமாக அறுபது வயதிருக்கும்.

"சார், நீங்க எங்க இறங்குவீங்க....?" - என்றான் சினிவாசன்.

"நான் ஸ்ரீ ரங்கத்துல இறங்கனும் தம்பி... நீங்க...?" - என்றார் முதியவர்.

"நான் திருச்சி ஜங்ஷன்ல இறங்குவேன். நீங்க இறங்கும் போது நாங்க தூங்கிட்டு இருந்தா... எங்கள எழுப்புறீங்களா..."

"கண்டிப்பா எழுப்புறேன்... உங்க பெர் என்ன...?" - என்று கேட்டார் அந்தப் பெரியவர்.

"சீனிவாசன்... நீங்க..." -

"என் பெயர் நாராயணன். ரிட்டையர்டு BHEL எம்பிலாயி..." - பெருமையுடன் கூறினார் நாராயணன்.

இருவரும் பேசிக் கொண்டு இருக்கையில், பார்கவி தன் குழந்தையை தூங்க வைத்துக் கொண்டு இருந்தாள். அப்போது சினிவாசன் கையில் இருந்த நாளிதழை வாங்கி நாராயணன் படித்தார்.

"இன்னைக்கு எல்லா பேப்பர்லையும் ஒக்கேனக்கல் பிரச்சனை தான்... இந்த சினிமாக்காரங்க உண்ணாவிரதம் இருந்து நல்ல பப்ளிசிட்டி தேடிக்கிறாங்க.."

சீனிவாசன் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தான். ஆனால், நாராயணன் சும்மா இருக்கவில்லை.

"இந்த சினிமாக்காரங்க உண்ணாவிரதம் இருந்தா காவேரி, ஒக்கேனக்கல் பிரச்சனை தீர்ந்திடுமா... தண்ணி இல்லைன்னா தண்ணி இருக்குற ஊராகப் பார்த்து போக வேண்டியது தானே.... என்ன சார் நான் சொல்லுறது..." - என்று அவரது கருத்துக்கு சீனிவாசனிடம் ஆதரவு தேடினார்.

அந்தப் பெரியவரின் கருத்து தவறாகத் தோன்றவே சீனிவாசன் அமைதியாக இருக்க விரும்பவில்லை. நாராயணன் மீது கோபத்துடன் பேசினான்.

"சினிமாக்காரங்க உண்ணாவிரதம் இருக்குறது அவங்க எதிர்ப்பைக் காட்ட... பப்ளிசிட்டிகாக இல்ல. முதல்ல அத தெரிஞ்சிக்கோங்க. தமிழ் நாட்டுல இருந்துகிட்டு, தமிழ்நாட்டுச் சாப்பாடு சாப்பிட்டு தமிழன் அடிவாங்குறத பார்த்து நமக்குத்தான் ரோஷம் வரல. அவங்களாச்சும் தமிழ் உணர்வோட இருக்காங்களேன்னு... சந்தோஷப்படுங்க சார்"

"தம்பி நான் என்னோட அபிப்ராயத்த சொன்னேன்...அதுக்கு ஏன் இப்படிக் கோபப்படுறீங்க...?"

"எது அபிப்ராயம்...? தண்ணி இல்லைனா தண்ணி இருக்குற ஊரைப் பார்த்து போகறதா... இங்க தான் ! நாம பொறந்தோம்...இங்கதான் வாழ்ந்தோம்... இது நம்ம ஊருங்கிற உணர்வு வரனும்... அந்த உணர்வு இல்லாம உங்கள மாதிரி இருந்தா... கர்நாடகா, கேரளா, ஆந்திரா இப்படி எல்லாரும் தமிழனை மட்டம் தட்டுவாங்க... கன்னடக்காரனுக்கு மொழி வெறி இருக்கும் போது... நமக்கு தமிழ் உணர்வாவது இருக்க வேண்டாமா...?" மேலும் கோபத்துடன் பேசினான் சீனிவாசன்.

"பயங்கற தமிழ் வெறியனா இருப்பான் போல " என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு நாராயணன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

ரயில் விழுப்புரம் வந்து அடைந்திருந்தது. அந்த ரயில் நிலையத்தில் ஐந்து நிமிடங்களாவது நிற்கும் ஏதாவது சாப்பிடுவதற்கு வாங்கலாம் என்று நினைத்தான்

அப்போதுதான் அவனின் மொபைல் ஒலித்தது. தன் மோபைலை எடுத்துப் பேசினான்...

"ஹலோ... செப்பும்மா. இப்புடு விழுப்புரம்ல வுண்டா... இக்க ட்ரெயின் வொச்சேதானிக்கு இரண்டு கென்ட சேப்பு அவுனும்..." என்றான் சீனிவாசன்.

சீனிவாசன் சரியாக சிக்னல் கிடைக்காமல் மெதுவா அந்த இடத்தை விட்டு நகர்ந்து போயிருந்தாலும் சற்று உரக்க கத்தியதில் அவனுடைய பேச்சு நாராயணன் காதில் விழுந்தது. விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து மெதுவாக நகர்ந்த போதுதான் அவன் இருக்கைக்கு வந்து அமர்ந்தான்.

நாராயணன் சற்று தயக்கத்துடன் கேட்டார், " சார்... நீங்க தெலுங்கா...?"

"ஆமாம்... சீனிவாச ராவ்..." என்றான்.

"தெலுங்கா இருக்கீங்க.... தமிழனப் பத்தி தப்பாச் சொன்னா உங்களுக்கு அதிகமாக் கோபம் வருதே...?" - என்றார் மெதுவாக.

"நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே... இந்தத் தமிழ்நாட்டுலதான். தமிழ் நாட்டில சாப்பிட்ட சோறு என் உடம்புல இரத்தமா ஓடுது... அந்த நன்றி உணர்ச்சி பல தலைமுறையா இங்கேயே வாழ்ந்த தமிழனுக்கு இல்லாததுதான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்... இதுக்காக கன்னடமொழி பேசுறவங்களோ இல்லை வேறு மொழி பேசுறவங்களோ எனக்கு எதிரிகளில்லை... நாமெல்லோரும் இந்தியர்கள்தான். மொழி வழியில் பாகுபாடுகளிருக்கலாம். அதே சமயம் ஒரே நாட்டுக்குள்ள எந்தப் பாகுபாடுமில்லாமல் ஓடி வருகிற நதியை மொழியாலும், ஒரு சில அரசியல் லாபத்துக்காகவும் பிரித்தாளும் நிலையை என்னால தாங்க முடியலே சார்..." என்றான் சீனிவாசன்.

"யோசித்துப் பார்த்தால் நீங்க சொல்றது சரின்னுதான் படுது..."என்று சொன்னபடி நாராயணன் தூங்கிப் போனார்.

ஆனால் அதற்குப் பின்பு சீனிவாசனுக்குத் தூக்கம் வரவேயில்லை.

ரயில் ஸ்ரீ ரங்கம் வந்திருந்தது.

சீனிவாசன் நாராயணனை எழுப்பி, "சார் ஸ்ரீ ரங்கம் ஸ்டேசன் வந்துடுச்சு" என்றான்.

"சரியான சமயத்தில என்னை எழுப்பி விட்டுட்டீங்க...ரொம்ப நன்றி தம்பி..." என்றபடி ஸ்ரீ ரங்கம் ஸ்டேஷனில் இறங்கினார் அந்தப் பெரியவர் நாராயணன்.


நன்றி : முத்துகமலம்.காம்

4 comments:

சி தயாளன் said...

சீனிவாசன் மாதிரி ஆக்கள் நிச்சயம் இருந்தால்...இந்தப் பிரச்சினைகள் வந்திருக்காது..

RAMASUBRAMANIA SHARMA said...

இந்த சிறுகதைப்பதிவின் மூலம் "உங்களது நாட்டுப்பற்றையும், இந்திய தேச ஒருமைப்பாட்டையும்...அருமையாக உணர்த்தியிருக்கின்றீர்கள்...நன்று"...

குகன் said...

// ’டொன்’ லீ said...
சீனிவாசன் மாதிரி ஆக்கள் நிச்சயம் இருந்தால்...இந்தப் பிரச்சினைகள் வந்திருக்காது.. //

அப்படி இல்லை என்பதால் தான் பிரச்சனையே ! நன்றி ’டொன்’ லீ

குகன் said...

// RAMASUBRAMANIA SHARMA said...
இந்த சிறுகதைப்பதிவின் மூலம் "உங்களது நாட்டுப்பற்றையும், இந்திய தேச ஒருமைப்பாட்டையும்...அருமையாக உணர்த்தியிருக்கின்றீர்கள்...நன்று"...//

நன்றி RAMASUBRAMANIA SHARMA :)

LinkWithin

Related Posts with Thumbnails