வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, March 6, 2009

இட ஒதுக்கீடு

கவிதை நிகழ்ச்சி. ஒவ்வொரு மூன்றாவது ஞாயிறுக்கிழமை தோறும் கவிதைப் போட்டி நடக்கும் அரங்கம். பரிசு பெரிய தொகையில்லை தான். வெற்றி பெருபவருக்கு முதல் பரிசு ஐம்பது ரூபாய் தான். ஆனால், இதில் பணம் முக்கியமில்லை. அங்கிகாரம் தான் முக்கியம்.

அறுபது, எழுபது பேர் கூடியிருக்கும் இடத்தில் நமது கவிதைக்கு பரிசு கிடைப்பதே பெருமை. வெற்றி தொகைக்காக எந்த எழுத்தாளரும் கவலைப்பட மாட்டார்.

அது வரை பத்து பேர் கவிதை படித்து விட்டனர். தலைப்பு : 'காத்திருப்போம்'. பதினொன்றாவதாக சரண் கவிதை படிக்க சென்றான். அவனது புனைப்பெயர் தமிழ் பிரியன். புனைப்பெயரில் அவனை அழைப்பார்கள்.

தன் கவிதை காகிதத்தை எடுத்துக் கொண்டு கவிதை படிக்க மேடையில் எறினான் தமிழ் பிரியன்.

" எத்தனையோ மதங்களை
இங்கு இறக்குமதி செய்துவிட்டு
இங்கு பிறந்த புத்தனை
வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய பிறகு
மீண்டும் ஒரு புத்தன்
பிறக்க மாட்டாரா என்று காத்திருக்கிறோம் ! " - என்றான்.

எடுத்த எடுப்பிலே பல கைதட்டல்கள்...

அதன் பின்...

" ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வைத்து விட்டு
ஜாதி ஒழிய வேண்டும் என்று காத்திருக்கிறோம்.. ! "

- மீண்டும் கைதட்டல்கள் அரங்கம் நிரைந்தது. மிகுந்த மகிழ்ச்சியுடன் கவிதை படித்து மேடையில் இருந்து இறங்கினான் தமிழ் பிரியன்.

அவன் கவிதை படித்த பிறகு பல பேர் கவிதை படித்தனர். எல்லோரும் கவிதை படித்த பிறகு பரிசு கவிதை அறிவிக்கப் பட்டது. இந்த முறை தனது கவிதை பரிசு கவிதையாக தேர்வாகும் என்று எதிர்பார்த்தான். ஆனால், வேறு ஒருவரின் கவிதையை பரிசு கவிதையாக அறிவிக்கப்பட்டது. ஐம்பது பேர் கவிதை படிக்கும் பரிசு என்பது மிக பெரிய விஷயம். அவர்களின் கைதட்டல்கள் மிக பெரிய பரிசு என்று தன்னை தானே தேற்றிக் கொண்டான் தமிழ் பிரியன்.

அரங்கத்தை விட்டு தமிழ் பிரியன் வேளியெறும் போது ஒருவர் அவனிடம் பேச வந்தார்.

"தம்பி... என் பெரு எழிலவன் " என்றார்.

வயது ஐம்பது மேல் இருக்கும். தமிழ் பிரியன் இதற்கு முன் இந்த கவிதை நிகழ்ச்சியில் அவரை பார்த்ததில்லை. ஆனால், கவிதை நிகழ்ச்சியில் இது போன்ற அறிமுகங்கள் தமிழ் பிரியனுக்கு புதிதில்லை. அவனும் எழிலவனிடம் தன்னை அறிமுகம் செய்துக் கொண்டான்.

" என்ன பண்றீங்க...?" என்றார்.

" நான் சாப்ட்வேர் கம்பேனியில வேலை செய்றேன்..." - என்றான்.

" நல்லது... கவிதையில ரொம்ப ஈடுபாடு அதிகமா..." - எழிலவன்.

" ஆமா சார்... நம்மலுடைய எண்ணத்தையும், நினைவையும் கவிதை மாதிரி வேறு எதுலையும் பதிவு செய்ய முடியாது... கவிதை படிக்கிறது, எழுதுறது எனக்கு ரொம்ப பிடிக்கும் " - என்றான் தமிழ் பிரியன்.

" சந்தோஷம்... உங்க கவிதை முதல் கருத்து ரொம்ப பிரமாதம்.. ஆனா... இரண்டாவது கருத்து எனக்கு உடன்பாடுயில்ல..." - எழிலவன்.

" ஏன் சார்...?"

" தம்பி... ஜாதி அடிப்படையில இட ஒதுக்கீடு ஜாதி ஒழிக்க மருந்து... அது ஜாதிய வளர்க்குறதுயில்ல... எங்க வீட்டுல நான் தான் படிச்ச முதல் தலைமுறை... இன்னும், OBC, SC, ST இருக்குறவங்க படிக்காத தலைமுறைங்க கிராமத்துல இருங்காங்க... அவங்கல முன்னுக்கு கொண்டு வரதுக்கு தான் இந்த இட ஒதுக்கீடு புரிஞ்சுக்கோங்க..." - எழிலவன்.

" இதுனால எத்தனையோ திறமையான மாணவர்கள் பாதிக்க படுவாங்களே ! இத பத்தி யோசிச்சு பார்த்திங்களா...?" - தமிழ் பிரியன்

" வாய்ப்பு கொடுத்தா தான் திறமை வெளியவே தெரியும் !" - எழிலவன்

"இட ஒதுக்கீட்டால தாழ்த்தபட்டவங்க எல்லோரும் முன்னுக்கு கொண்டு வர முடியும் நினைக்கிறீங்களா...?" - தமிழ் பிரியன்

" இட ஒதுக்கீடு தாழ்த்தப்பட்டவங்கள முன்னுக்கு கொண்டு வர ஒரு வழி தான்... அதுவே முழு வழினு சொல்ல முடியாது... இன்னும் பல வழிகள் அரசாங்கள் முயற்சி பண்ணிகிட்டு தான் இருக்கு..." - எழிலவன்

" நீங்க என்ன தான் சொன்னாலும்.... அதிகம் மார்க் எடுக்குற மாணவன் பாதிக்க படுறானே..." - தமிழ் பிரியன்

" தம்பி... OC மாணவனுக்கு எவ்வளவு மார்க் எடுக்கனும்...சொல்லுங்க.." - எழிலவன்

" 95 இல்ல 96 இருக்கும்..." - தமிழ் பிரியன்

" சரி BC மாணவனுக்கு ?" - எழிலவன்

" 92 இருக்கும்..." - தமிழ் பிரியன்

" OBCக்கு...?" - எழிலவன்

" 88 இருக்கலாம்..." - தமிழ் பிரியன்

" நாலு தலைமுறையா படிச்ச OC மாணவன் 95 மார்க் எடுக்கனும், முதல் தலைமுறையில படிக்கிற OBC மாணவன் 88 மார்க் எடுக்கனும்னு நீயே சொல்லுற...! இந்த கேள்விக்கு பதில் சொல்லு... இந்த இரண்டு மாணவனுக்கும் 7 மார்க் தான் வித்தியாசம். OC மாணவன வழிகாட்ட நிறைய பேர் அவன் குடும்பத்துல இருப்பாங்க... சொல்லி கொடுக்க ஆளுங்க இருப்பாங்க. ஆனா OBC மாணவனுக்கு அப்படி குடும்பத்துல யாரும் இருக்க மாட்டாங்க..."

எழிலவன் கொடுக்கும் விளக்கத்தை திகைப்புடன் கேட்டான் தமிழ் பிரியன். அவர் விளத்தை மேலும் கேட்க வேண்டும் என்று தான் தமிழ் பிரியன் மனதில் இருந்தது.

" இப்படி OBC, SC, ST னு இட ஒதுக்கீடு மூலமா படிச்சா, நாலு தலைமுறை கழிச்சு அவங்களும் முன்னுக்கு வந்திருப்பாங்க... அவங்க தலைமுறை முன்னுக்கு வந்ததுக்கு அப்புறம் இந்த இட ஒதுக்கீடு தேவையில்ல... இவங்க எல்லாம் முன்னுக்கு வர நாம இன்னும் நிறைய தலைமுறை காத்துக்கிட்டு இருக்கனும்..."

“இட ஒதுக்கீட்டால திறமை பாதிக்கப்படுது சொல்லுறவங்க... போட்டியில்லாத வரலாறு, அறிவியல் ஏன் படிக்க மாட்டிங்குறாங்க...? திறமை இருக்குறவங்க எது படிச்சாலும் முன்னுக்கு வர முடியும். அந்த காலத்துல ஏமாந்து இழந்த உரிமைய இட ஒடுக்கீட்டு பெருல மறு பங்கீடு பண்றோம்... அவ்வளவு தான். ” என்றான் எழிலவன்

"நீங்க சொல்லுறது உண்மை இருக்கு சார்... எனக்கு நல்ல புரிய வச்சிங்க.." - தமிழ் பிரியன்

" தம்பி உங்களுக்கு சின்ன வயசு... படிக்க நேரம் நிறைய இருக்கும்... நிறையா படிங்க... அப்போ தான் உங்களுக்கு உண்மை புரியும்... தப்பா பிரச்சாரம் கேட்டு குழம்பாதிங்க…. நான் உங்களுக்கு சொன்னது பத்து சதவீதம் கூட இல்லை..." -எழிலவன்.

" ரொம்ப நன்றி சார்..." - தமிழ் பிரியன்.

"சரி தம்பி... அடுத்த கவிதை நிகழ்ச்சியில பார்ப்போம் " என்றார்.

"பார்ப்போம் சார்..." என்று சொல்லி அந்த இடத்தை விட்டு தமிழ் பிரியன் நகர்ந்தான்.

"யப்பா..சரியான மொக்கை. பேசி...பேசி... என் டைம் வேஸ்ட் பண்ணிட்டான்..." என்று தமிழ் பிரியன் தன் மனதில் சொல்லிக் கொண்டு வண்டியை எடுத்தான். ஒரு இளைஞனுக்கு இட ஒதுக்கீடு பற்றி விளக்கி புரிய வைத்த சந்தோஷத்தில் அந்த இடத்தை விட்டு எழிலவன் நகர்ந்தான்.

---

சோலை பதிப்பகத்தின் 'கதைசோலை' என்ற சிறுகதை தொகுப்பு நூலில் இடம் பெற்ற சிறுகதை.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails