வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, April 5, 2012

நான் மகளானேன் !

என் அம்மாவை கொன்று விட வேண்டும் போல் இருந்தது. அவளால் என் தோழிகள் எவ்வளவு அவமானம். எவ்வளவு கிண்டல். அவளால் என் கல்லூரியில் தலை நிமிர்ந்து நடக்கக் கூட முடியவில்லை. ஒரு சாயலில் நான் அம்மா மாதிரி இருப்பதால், என் தோழிகளுக்கு என்னை பார்த்ததும் அம்மா ஞாபகம் வந்து சிரித்துவிடுவார்கள். ரம்யாவை ஏன்டா வீட்டுக்கு அழைத்து சென்றோம் என்று நினைக்கும் அளவிற்கு என் அம்மாவைப் பற்றி பரப்பி விட்டாள். என் அம்மாவின் சைகையை பார்க்க என் தோழிகள் ஒரு முறை வீட்டுக்கு வந்தனர்.

"என்ன நதியா ! இவங்க தான் உன் பிரண்ட்ஸா உள்ள வாங்க..." என்று உள்ளே கையசைத்து அழைத்தாள்.

அப்போதே ஒருத்தி சிரித்து விட்டாள்.

"வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா ?" வார்த்தைக்கு ஏற்றவாரு கையசைத்து கேட்டார்.

இப்போது இன்னொருத்தி சிரித்தப்படி பதிலளித்தாள்.

"என்னம்மா சாப்பிடுறீங்க ?” விரல்களை சேர்த்து வாய்க்கு கொண்டு சென்று கேட்டார்.

"இப்போ எதுவும் வேண்டாம் ஆன்ட்டி ? என்றாள்.

"நீங்க பேசிட்டு இருங்க, நான் உள்ளே போய்ட்டு சாதம் வடிச்சிட்டு வரேன்” என்று சைகையில் சொன்னப்படி உள்ளே சென்றார்.

அம்மா உள்ளே சென்றதும், " உங்க அம்மா பரத நாட்டியம் டான்ஸரா ! சொல்லவயில்ல...!!" என்று கிண்டலாக ஒருத்தி கேட்டாள்.

சிறு குழந்தைப் போல் கையசைத்து பேச வேண்டாம் என்று பல முறை அம்மாவிடம் சொல்லியிருப்பேன். அம்மா சிறுவயதில் இருந்தே இது பழகிவிட்டது. மாற்ற முடியவில்லை என்பாள். அதைப் பற்றி இன்னும் பேசினால், அழுதுவிடுவார்.



அப்பாவுக்கு அம்மா சைகை காட்டி பேசுவது பிடிக்கும். சில சமயம் அப்பா அம்மாவை கேலி செய்தாலும், அம்மாவின் குழந்தைதனத்தை ரசிப்பார். ஆனால், மகளான எனக்கு அவமானமாக இருந்தது. அம்மாவால் என் கல்லூரியில் நான் கேலிப் பொருளாக இருப்பது வருத்தமாக இருந்தது.

அம்மாவை வைத்து கல்லூரியில் என்னை கேலி செய்வதை அப்பாவும், அம்மாவும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. யாராவது என்னை அம்மாவுடன் ஒப்பிட்டு பேசினாலே கோபம் வரும் அளவிற்கு அம்மா மீது வெருப்பு வந்தது.

நாளுக்கு நாள் அம்மா மீது கோபம் வளர்ந்ததே தவிற அன்போ, அனுதாபமோ வரவில்லை.

மாலை அலுவலகம் முடிந்தது அப்பா கொஞ்சம் பதட்டமாக வீட்டு வந்தார்.

"என்ன டென்ஷன வருறீங்க ?" என்று வழக்கமான தன் கையசைவில் அம்மா கேட்டார்.

"உங்க அம்மாவுக்கு சிரீயஸ். ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க..." என்றார்.

கண்ணில் நீருடன் என்னவானது கேட்டார். டாக்டர் ஒன்றும் செய்ய முடியாது என்று சொன்னதை அப்பா சொன்னார். ஊருக்கு செல்ல துணிகளை என்னை எடுத்து வைக்க சொன்னார்.

அம்மா அழுதப்படி உட்கார்ந்திருந்தார். அம்மாவை தேற்றவோ, ஆறுதல் சொன்னவோ எனக்கு தோன்றவில்லை. அப்பா சொன்னமாதிரிகளை துணிகளை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தேன்.

இரவு, பஸ்ஸில் எங்க சொந்த ஊரான ஆரணிக்கு சென்றோம். என் பாட்டியை ஐந்தாவது படிக்கும் போது பார்த்திருக்கிறேன். அவர் முகம்க் கூட எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. என் பாட்டிக்கு சரியாக காது கேட்காது, வாய் பேச்சு வராது என்று தெரியும். அப்பா டெல்லி, மும்பை, சென்னை என்று வேலை மாற்றமாகிக் கொண்டு இருந்ததால் அம்மாவின் சொந்த ஊருக்கே நான் செல்லவில்லை.

என் பாட்டி வீட்டு அடைந்ததும் சொந்தக்காரர்கள் வாசப்படி நின்றுக் கொண்டு இருந்தார்கள். அது வரை துக்கத்தை தொண்டையில் அடைத்து வைத்த அம்மா, வாய் விட்டு அழ ஆரம்பித்தார். மாமா, அத்தை என்று அம்மாவை சுழ்ந்துக் கொண்டு அழுதார்கள்.

அம்மா உள்ளே நுழைந்ததும் பெரியம்மாவை கட்டி பிடித்து அழத் தொடங்கினார். அவர்கள் இருவரும் தங்கள் அம்மாவைப் பற்றி சொல்லி அழும் போது தான் ஒன்று கவனித்தேன்.

பெரியாம்மாவும் அம்மா மாதிரி வார்த்தைக்கு செய்கை செய்து அழுதார். அவர்கள் அழுது தொண்டை அடைத்துக் கொண்டதால் பேசுவது சரியாக புரியவில்லை. ஆனால், சைகை செய்தது என்ன சொல்ல நினைத்து அழுகிறார்கள் புரிந்தது.

அப்போது மாமா அப்பாவிடம், " சின்ன வயசுல எங்க அம்மாவுக்கு இவங்க இரண்டு பேரை தான் ரொம்ப பிடிக்கும். நான் பேசுறதக் கூட இவங்க ரெண்டு பேரு தான் அம்மாவுக்கு சைகையில புரிய வைப்பாங்க. இப்போ எங்க அம்மா இல்ல. ஆனா, இவங்களால சைகையில பேசாம்ம இருக்க முடியல.." என்று அழுதுக் கொண்டு சொன்னார்.

சைகையில் அம்மா, பெரியம்மா பேசுவதற்கு காரணம் என் பாட்டி ஊமை, காது கேளாமல் இருந்தது காரணம் என்பதை புரிந்துக் கொண்டேன். தன் அம்மா மீது எவ்வளவு பாசம் இருந்திருந்தால் சைகை மொழி தங்கள் இரத்தத்தில் உரும் அளவிற்கு இருவரும் வளர்ந்திருப்பார்கள்.

பசிக்கும் போது உணவு கேட்க , தன்னை குளிப்பாட்ட, வெளியே அழைத்து செல்ல, தலை சீவிவிட என்று வாத்தைகள் அல்லாமல் சைகையால் பாட்டிக்கு புரிய வைத்திருப்பார். என் உணர்வை அம்மாவுக்கு புரிய வைக்க நான் பெரிய முயற்சி எடுக்கவில்லை. ஆனால், தன் வாழ்க்கையில் பாதி நாள் உடல் மொழி தன் அம்மாவுடன் அன்பு, பாசம், தேவையை பரிமாறியிருக்கிறார்.

என் அம்மா அவரின் அம்மா மீது வைத்த பாசம், நான் பாதிக்கூட வைக்க வில்லை என்பதை உணர்ந்தேன். ஒரு நிமிடம் என் மீது எனக்கே கோபமாக இருந்தது.

மரணம் தன் சர்பாக கண்ணீர், துயரம் என்று எதையாவது விட்டு செல்ல விரும்புகிறது. ஆனால், என் பாட்டியின் மரணம் என் அம்மா மீது பாசத்தை வளர வைக்க அடித்தளமாக இருந்தது.

2 comments:

அருணா செல்வம் said...

கதை அருமையாக இருந்தது.
வாழ்த்துக்கள் குகண்.

Vaishali Kumar said...

\\மரணம் தன் சர்பாக கண்ணீர், துயரம் என்று எதையாவது விட்டு செல்ல விரும்புகிறது. //

- உண்மையான வரிகள்...

கதை மிக அருமை... Congrats.. :)

LinkWithin

Related Posts with Thumbnails