வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, December 16, 2011

உலக சினிமா : Shadow of Time

மனிதன் வாழ்க்கையில் காதல் எந்த காலத்திலும் பிரிக்க முடியாது. பதின் வயதில் வரும் காதல் சந்தோஷத்தை கொடுக்கும். வாலிய வயதில் வரும் காதல் சுகத்தை தரும். நடுத்தர வயதில் வரும் காதல் ஆறுதலை தரும். முதுமையில் வரும் காதல் இறப்புக்கு முன் நிம்மதி தரும். ஒவ்வொரு காலத்திலும் மற்றவர் மீது வைத்திருக்கும் காதல் தான் நம் வாழ்க்கையில் நம்மை பயணிக்க வைக்கும். ஆனால், ஒவ்வொரு காலகட்டத்தில் இந்த காதல் ஒரு பெண்ணின்/ஆண்ணின் மீது மட்டும் இருக்கிறதா என்பது தான் சந்தேகம். ஆனால், வாழ்க்கையில் வரும் இந்த நான்கு காலகட்டத்திலும் காதலர்களுக்குள் பயணமாகும் அன்பை காட்டியிருக்கும் படம் தான் ‘Shadow of Time’.

1940 ல், கல்கத்தாவில் உள்ள குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்யும் நெசவு தொழிற்சாலையில் தந்தையால் ரூ.25க்கு விற்கப்படுகிறாள் சிறுமி மாஷா. அங்கு ரவி என்ற சிறுவனின் நட்பு அவளுக்கு கிடைக்கிறது. பிஞ்சு மலர்களை கசப்பதற்காக பிரத்தேயமாக தயாரிக்கப்பட்ட தொழிற்சாலை வேலை அவர்களை நசுக்கிறது. அந்த வேலை பலுவிலும் இருவருக்குள் இருக்கும் ஒரே சந்தோஷம் அவர்களுடைய நட்பு தான். தன் தந்தை பணம் சம்பாதித்து தன் தந்தை திருப்பி அழைத்து செல்வார் என்ற நம்பிக்கையில் இருக்கும் மாஷாவிடம், ரவி அவர் வரமாட்டார் என்று சொல்கிறான். இருவருக்குள் சண்டை வருகிறது. ஒரு கட்டத்தில் நெசவு தொழிற்சாலை மேலாளர் மாஷாவை ஒரு சீமானுக்கு விற்றுவிடுகிறார். அவளை காப்பாற்ற ரவி தன் கையில் இருக்கும் ரூ.35 யை கொடுக்கிறான். ஒரு நாளுக்கு 2 பைசா என்று தன் சம்பளத்தில் பிடித்து மாஷாவை மேலாளரிடம் விடுவிக்கிறான்.



மாஷா தன் தந்தையை தேடி நகரத்துக்கு செல்லும் போது, ஒவ்வொரு பௌர்நமி அன்றும் சிவன் கோயிலில் அவனுக்காக காத்திருப்பதாக சொல்கிறாள். பெரியவர்களானதும் நாம் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி தன் தந்தையை தேடி செல்கிறாள் மாஷா. சந்தர்ப்ப சூழ்நிலையில் அவள் விபச்சார விடுதியில் மாட்டிக் கொள்ள, அவள் அங்கு வளர்கிறாள்.

காலம் கடக்கிறது. மாஷா விபச்சார விடுதியில் நடனக்காரியாக இருக்கிறாள். வாலிப வயதில் இருக்கும் ரவி தான் சேர்த்து வைத்த சம்பள பணத்தை தன் மேலாளரிடம் கொடுத்து தன்னை தானே விடுவித்துக் கொள்கிறான். தன் சம்பளத்தை இரண்டு மடங்காக மாற்றுவதாக சொல்லியும், ரவி அங்கிருந்து வெளியே வருகிறான். சம்பளமில்லாமல் உணவுக்காகவும், தங்க இடத்திற்காகவும் பழைய கம்பளக் கடையில் வேலைக்கு சேர்கிறான். அந்த கடையின் உரிமையாளர் ஒரு முதியவர். அவர் பேத்தி தீபா ரவியை விரும்புகிறாள். ஆனால், ரவி இரவு நேரங்களில் மாஷாவை தேடி கல்கத்தா முழுக்க அழைகிறான். விபச்சார விடுதி பெண்களிடம், தரகர்களிடம் என்று மாஷாவைப் பற்றி விசாரிக்கிறான். ஒரு கட்டத்தில் மாஷா ரவியை அடையாளம் கண்டு அருகே வர நினைக்கும் போது, சிவன் கோயிலில் ரவி தீபாவிடம் பேசுவதை பார்க்கிறாள். ரவி திருமணமானதாக நினைத்துக் கொண்டு, மாஷா ஒதுங்கிக் கொள்கிறாள். கம்பளக்கடை உரிமையாளர் இறக்க, ரவி தீபாவை திருமணம் செய்துக் கொள்கிறான். ரவி கம்பளக்கடை பெரிய கம்பள நிறுவனமாக மாறுகிறது. வெளிநாடுகளுக்கு கம்பளங்களை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு தொழில் முன்னேறுகிறான்.

ஒரு சமயம், ரவியின் 200 கம்பளம் வெளிநாட்டுக்கு போகாமல் தடைப்பட சுங்க அதிகாரி அலுவலகத்துக்கு செல்கிறான். அங்கு தனது பழைய வாடிக்கையாளர் மிஷ்ரா சுங்க அதிகாரியாக இருப்பதை பார்க்கிறான். மிஷ்ரா ரவி உதவி செய்ததோடு இல்லாமல், இரவு விருந்துக்கு அழைக்கிறான். மிஷ்ரா ரவியிடம் அவர் மனைவியை அறிமுகம் செய்து வைக்க, அது தன் பாலிய காதலி மாஷா என்று புரிந்துக் கொள்கிறான். விருந்தில் தனியாக இருந்த ரவியிடம் மாஷா கோயிலில் அவனை மனைவியுடன் பார்த்ததை கூறி, தன்னை ஏமாற்றிவிட்டதாக கோபப்படுகிறாள். அடுத்த நாள், அவள் வீட்டுக்கு சென்று "அன்று மட்டும் அவள் தன்னிடம் பேசியிருந்தால் இந்த பிரிவு வந்திருக்காது" என்கிறான். மாஷா ரவியை தேடி அவன் நிறுவனத்திற்கு செல்கிறாள். மீண்டும் அவர்களுக்குள் பழைய காதல் துளிர்விடுகிறது. மாஷா தன் கணவனுக்கு தெரியாமல் ரவியுடன் உறவு வைத்துக் கொள்கிறாள்.

மிஷ்ரா கல்கத்தாவில் இருந்து கேரளாவுக்கு வேலை மாற்றல் கிடைத்ததால், தன் மனைவி மாஷாவை அழைத்து செல்லப்போவதாக கூறுகிறான். மாஷா ரவி இழக்க விரும்பவில்லை. ஆனால், ரவி தன் மனைவிக்கும், தன்னை நம்பும் மிஷ்ராவையும் ஏமாற்ற முடியாமல் தடுமாறுகிறான். மிஷ்ரா, மாஷா வை ரயிலில் ஏற்றி விடும்போது, மாஷா கர்ப்பமாக இருப்பதை மிஷ்ரா சொல்லி சந்தோஷப்படுகிறான். ரவி தான் தவறு செய்துவிட்டோமோ என்று நினைத்து முடிப்பதற்குள் ரயில் அங்கிருந்து செல்கிறது.

மீண்டும் காலம் பயணிக்கிறது. நடுத்தர வயதில் ரவி, தீபா இரண்டு குழந்தைகளோடு இருக்க அவனை பார்க்க மிஷ்ரா வருகிறான். மிஷ்ரா தனக்கு மகன் பிறந்தான் என்றும், ஆனால் அந்த தனக்கு பிறக்கவில்லை என்றும் கூறுகிறான். தன் மனைவி இன்னொருத்தருடன் தொடர்பு வைத்திருந்ததால் அவளை விரட்டிட்டதாக கூறுகிறான். இவ்வளவு வருடம் கலித்து, தன்னை சந்திக்க வந்து “ஏதற்காக இதை சொல்ல வேண்டும்?” என்று ரவி கேட்க, மிஷ்ரா “ தவறு செய்த நீ மட்டும் எப்படி நிம்மதியாக இருக்க முடியும் ?” என்கிறான். மிஷ்ராவுக்கு எல்லா உண்மையும் தெரிந்திருக்கிறது அந்த வார்த்தைகளிலே தெரிந்துக் கொள்கிறான் ரவி. மீண்டும் மாஷாவை தேடி சிவன் கோயில், விபச்சார பகுதிகளுக்கு செல்கிறான். ஒரு வீட்டில் மாஷா, தன் மகனுடன் இருப்பதை பார்க்கிறான் ரவி. மாஷா ரவியை திட்டி அனுப்புகிறாள். தன் கையில் இருக்கும் பணத்தை மாஷாவின் வீட்டு ஜன்னலில் வைத்துவிட்டு ரவி செல்கிறான். மாஷா ரவி தேடி வருவதற்குள், ரவி சென்று விடுகிறான்.

கதை தற்காலத்திற்கு வருகிறது. முதியவனான ரவி தான் சிறுவயதில் வேலை செய்த நெசவு தொழிற்சாலைக்கு வருகிறான். அங்கு ஒரு சிறுமியை பார்க்கிறான். அவள் சிறுவயதில் பார்த்த மாஷாப் போல் இருக்கிறாள். அந்த சிறுமி தன் பாட்டிக்கு தண்ணீர் தருவதை பார்த்து, அந்த பாட்டி மாஷா என்று அடையாளம் கண்டுக் கொள்கிறான். கண்ணிழந்த முதிய வயதில் தன் மகன் இறந்ததையும், இவ்வளவு நாட்கள் கஷ்டப்பட்ட கதைகளை ரவியிடம் சொல்கிறாள். “நான் தான் ரவி” என்று சொல்ல முடியாமல் குற்றவுணர்ச்சியில் ரவி அங்கு விட்டு செல்கிறான். சிறுமி தன் பாட்டி வந்தது யார் என்று கேட்க, “அவர் தான் ரவி” என்கிறாள். ரவி செல்வதை சிறுமி பார்த்த மாதிரி படம் முடிகிறது.

ஒவ்வொரு காலக்கட்டங்களும் ஒவ்வொரு பகுதியை சிறுகதைகளாகவும், அதற்கு ஒரு முடிவும் வைத்து படத்தை அழகாக காட்சி அமைத்திருக்கிறார்கள். படத்தின் பின்னனி கல்கத்தாவில் நிகழ்வதால், ஆறுபது வருடங்கள் நகரத்தில் நிகழும் மாற்றங்கள் காட்சிப்படுத்திருக்கிறார் இயக்குனர் ப்ளோரின் கல்லேன்பெர்கர்.

ஜெர்மன் நாட்டை சேர்ந்த இவர் ஒரு ஆய்வுக்காக 2001ல் இந்தியா வந்தார். ஒன்றரை வருடம் கல்கத்தாவில் தங்கியிருந்த ப்ளோரின் அதன் பின்னனியில் இந்த காதல் கதையை எழுதினார். மற்றவர்கள் போல் இந்த கதையை ஆங்கிலத்தில் அவர் எடுக்க விரும்பவில்லை. பெங்காளி மற்றும் ஜெர்மன் மொழியில் எடுத்தார்.

2004ல் வெளியான இப்படம் பல ஐரோப்பா திரைப்பட நிகழ்வுகளில் திரையிடப்பட்டது. ஜெர்மன் திரைப்பட விருதுதான பெவேரியன் விருது இப்படத்திற்கு கிடைத்துள்ளது.

2 comments:

Thava said...

அருமையான விமர்சனம்..இதுவரை இந்த படத்தை பற்றி கேள்விப்பட்டதில்லை..அறிமுகம் செய்து வைத்ததற்க்கு மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

உலக சினிமா ரசிகன் said...

இது வரை பார்த்திராத...கேட்டிராத...
உலகசினிமா இது.
உங்கள் பதிவை முதன்முதல் படிக்கிறேன்.
தொடர்ந்து இது போல் நல்ல படங்களை எழுதுங்கள்.வாழ்த்துக்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails